Thursday, February 4, 2010
J.D.Salinger - சில நினைவுகள் - பற்றியும் பற்றாமலும்
சென்ற வாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜே.டி.சாலிஞ்சர் இயற்கை எய்தினார் என்ற செய்தி படித்து சொல்ல முடியாத உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. சுஜாதா இறந்த போது நம்மில் பல பேருக்கு வந்த உணர்வுகள் மாதிரி என்று சொல்லலாம். என்னுடைய பதின்ம பருவம் முடிந்த தருவாயில் The Catcher in the Rye படித்தேன். ஒரு புத்தகம் நம்மை சுழற்றி அடித்துச் செல்லும் என்ற நிதர்சனம் என்னைத் தாக்கியது அப்போதுதான். இன்று வரையில் அதன் தாக்கம் என்னுள் இருக்கிறது என்று சொல்வேன். என் தம்பியிடம் நேற்று இது பற்றி பேசிய போது, சமீபத்தில் இதை மீண்டும் படித்தபோதும் பழைய வசீகரம் மாறாமல் இருப்பதைப் பற்றி நினைவு கூர்ந்தான். எங்கள் இருவருக்கும் இது ஒரு cult புத்தகம். அப்படியென்ன ஸ்பெஷல் என்று இதைப் படிக்காதவர்கள் கேட்கலாம். இப்போது முதன்முறையாகப் படிப்பவர்களுக்கு ஏமாற்றமும் தரலாம். எதையுமே முதன் முதல் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது முக்கியம் இல்லையா. இசை, காதல், காமம், காட்சி போலவே வாசிப்பும். எத்தகைய மனநிலை என்பது முக்கியம். இந்த ஐ.ஐ.டி./ஐ.ஐ.எம். நுழையத் தெரிந்த (அ)பாக்கியவான்களை சில நிமிடங்கள் ஒதுக்கி வைத்துவிடலாம். காற்றில் வீசப்பட்ட உணவுத் துண்டுகளை இலாகவமாகக் கவ்விப் பிடிக்கும் சூட்சுமக் காக்கைகள் போலவே மதிப்பெண்களை கவ்வத் தெரிந்த முன்னிருக்கை மாணவர்கள் அவர்கள். பாவம்.. அவர்களை விட்டு விடுவோம்.
மற்றவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நமது பதின்ம பருவங்களில் தொடர்ந்து பீடிக்கப் படுகிறோம். அது பள்ளிக்கூட பாடமாக இருக்கலாம். பிகு செய்து கொள்ளும் அழகான சக மாணவியாக இருக்கலாம். மெனோபாசில் அல்லலுறும் கணக்கு டீச்சராக இருக்கலாம். கடன் தொல்லையில் மாட்டிக்கொண்ட லேப் அசிஸ்டன்டாக இருக்கலாம். மூல பவுத்ரவ இன்னல்களில் சிக்கியிருக்கும் என்.சி.சி. மாஸ்டராக இருக்கலாம். வயலின் வகுப்பைத் தொடர்ந்து கட் செய்ததை வீட்டில் போட்டுக் கொடுக்கும் அக்காவாக இருக்கலாம். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் என்னும் மாதாந்திர திருகுவலி, கொத்து பரோட்டா, செட் தோசைக்கு அப்பா சட்டைக்குள் துழாவும் அவலம், கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து சொதப்புவது, அசந்தர்ப்பமாக முளைக்கும் ரோமங்கள், உடலில் திடீரென ஏற்படும் மாற்றங்கள், முகப்பரு, குச்சிக் கை கால்கள், தொள தொளா சட்டை என்று பல்வேறு தளங்களில் நமக்கு தினசரிப் பிரச்சனைகள் இருந்த பருவம் அது.
அந்தப் பருவம் மிக மிக முக்கியமான பருவம். நாம் யாராக, எப்படியாக உருவாகிறோம் என்பதை நிச்சயிக்கும் பருவம் அது. Rebellion என்பதை எளிதாக எதிர்ப்பு என்று இந்த இடத்தில் சொல்வது எனக்கு தட்டையான மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது. எப்போதும் ஒரு எதிர்மறை உணர்வு சூழ்ந்து, ஆக்கிரமிக்கும் தினங்கள் அவை. பெரியவர் அறிவுரை, வெளி உலகம் நம்மிடம் அணுகும் முறை, மற்றவர்களின் குணாதிசயங்கள் என்று சகட்டு மேனிக்கு நமக்கு மூக்கு நுனியில் கோபம் கொப்பளிக்கும் தருணங்கள் ஏராளம். ஒரு கட்டத்தில் அவைகள் எல்லாவற்றையும் ஏளனமாகப் பார்க்கத் துவங்குவோம். நிறைய பரிகாச உணர்வும் வரும். இப்படியாகப் பட்டவர்களின் வேதாகமம் The Catcher in the Rye.
1951ல் வெளிவந்த இந்தப் புத்தகம் இன்று வரை ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டரை இலட்சம் பிரதிகள் விற்பது, இதுவரை சுமார் ஆறரை கோடி பிரதிகள் மொத்தமாக விற்பனை ஆகியிருப்பது இந்தப் புத்தகத்தின் உலகளாவிய தாக்கத்தைப் பற்றி ஓரளவு புரிய வைக்கும். கதையின் வில்லத்தனமாக நாயகன் ஹோல்டன் கால்ஃபீல்ட் பதின்ம பருவத்து எதிர்ப்புணர்வுகளுக்கு ஒரு குறியீடாகத் திகழும் அளவுக்கு பிரபலம்.
பென்சி என்னும் கற்பனைப் பள்ளியிலிருந்து சரியாகப் படிக்காத காரணத்தால் நள்ளிரவில் வெளியேற்றப் படுவதிலிருந்து துவங்குகிறது கதை. நியூ யார்க் நகருக்கு ரயிலில் வந்திறங்கி, தன் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு பாழடைந்த ஹோட்டலுக்குச் செல்கிறான். சுற்றுலா வந்த மூன்று பெண்களுடன் நடனமாடி ஒரு மாலையைக் கழித்து, இரவில் ஒரு 'அந்தப்' பெண்ணைச் சந்தித்து, 'சும்மா பேசவே கூப்பிட்டேன்' என்று அவளை கடுப்பாக்கி, அவள் பேசிய தொகைக்கு மேல் கேட்டதால் சண்டை போட்டு, அவள் 'மாமா'விடம் அடி வாங்கி என்று.....
ஹோல்டன் அந்த நகரில் மூன்று தினங்கள் தங்குகிறான் - பெரும்பாலும் குடிபோதையிலும், தனிமையிலும். ஒரு தருணத்தில் ஒரு மியூசியத்தில் எஸ்கிமோக்கள் சிலைகளுடன் தன் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்து அதன் முரணை யோசிக்கிறான். அவனுக்கு நினைவு தெரிந்த வரையில் அந்தச் சிற்பங்கள் மாறாமலே இருக்கின்றன. இந்த எண்ணங்கள் ஒருவேளை அவனுக்கு இறந்து போன தன் அண்ணன் நினைவால் வந்திருக்கலாம்.
அவனை ஓரளவு புரிந்து கொண்டவள் அவன் தங்கை ஃபோபே. ஹோல்டனுக்கு எப்போதும் தோன்றும் ஒரு கற்பனைக் காட்சியை அவளிடம் பகிர்கிறான். ஒரு மலை உச்சியருகில் உள்ள பெரிய ‘ரை’ (தானியம்) வயலில் நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவன் வேலை அந்தக் குழந்தைகள் மலையுச்சி அருகில் செல்லும் போது அவர்கள் பாதாளத்தில் விழுந்து விடாமல் 'பிடித்துக் கொள்வது' (catcher). அவனைப் பொறுத்த அளவில் அவன் ஒரு கடவுளைப் போல - அந்தப் பைத்தியக்கார மலையுச்சியிலிருந்து பெரியவர்கள் உலகமான பாதாளத்தில் அந்தக் குழந்தைகள் விழுந்து விடாமல் காப்பாற்றுபவன். அவன் திடீரென்று தன் ஆங்கில வாத்தியார் வீட்டுக்குச் செல்கிறான். அவர் இவன் மாயையைக் கலைக்க முற்படுகிறார். அவர் வருடல்களை இவன் வேறு மாதிரியாகப் புரிந்து கொள்கிறான். மறுநாள் நகரில் அலைகையில் அவரைப் பற்றிய தன் கணிப்பு சரியா என்றும் யோசிக்கிறான்.
பலவாறு அலைந்து திரிந்து புத்தகத்தின் இறுதிப் பகுதியில் நோய்வாய்ப் படுவதையும், மனநல மருத்துவ மனையில் வசிப்பது பற்றியும் குறிப்பிடுவதுடன் சில மாதங்களில் வேறு ஒரு பள்ளிக்குச் செல்ல இருப்பதையும், தன் பழைய பள்ளி நண்பர்கள் இருவரை மிஸ் பண்ணுவதையும் சொல்வதுடன் முடியும்.
இந்தப் புத்தகம் தன்னிலை வடிவத்தில், ஹோல்டன் கண்ணோட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் நிறைய விவாதங்களை உண்டு பண்ணியதாகவும் தெரிகிறது. அவன் கடைசி வரை முதிர்ச்சி பெறாமல் இருப்பதாகவும், பிறழ்வு நிலையில் உள்ளதாகவும் சிலர் சொல்ல, மற்றவர்கள் 'பதின்ம பருவத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாகவும், தனிமை என்பது ஒரு 'கடந்து போகும்' ஒரு காலம் என்பதைச் சொல்வதாகவும்' கருதுகிறார்கள்.
கதையின் மொழி நிறைய கெட்ட வார்த்தைகளில் இருக்கும். ஆனாலும், கதை துவங்கிய சில பக்கங்களில் உங்களுக்கு அது பழகி விடுவதுடன், அவனைப் பிடிக்கவும் செய்து விடும்.
இவருடைய மற்ற புத்தகங்களில் நான் வாசித்தது Franny and Zooey என்னும் குறுங்கதை. Catcher அளவுக்கு இல்லாமல் சுமார் ரகம். பிரபலத்தின் வெளிச்சத்தை தவிர்த்த சாலிஞ்சர் பெரும்பாலும் தனிமையில் வாழ்ந்தார். ஒரு புத்தகம் எழுதினாலும் இந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதும் வாய்ப்பு சிலருக்கே அமையும். என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய Mr.Salinger ! Good Bye.
கோகுல் எழுதிய இந்த இடுகையும் சாலிஞ்சர் பற்றித் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
வாவ் வாட் எ கோஇன்சிடென்ஸ்! இன்னிக்குதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். :)
https://twitter.com/karthiknarayan_/status/8624988527
ஸ்பாய்லர்ஸ் இருந்ததால் சில பத்திகளை தாண்டிக் குதித்தேன். :))
Nice!
needs a re-read now, since 1985.
uIITIIM?
இந்தக்கதையைப்படிச்சதில்லை. படிக்கிறேன். :)
உங்களின் இந்த பதிவை படித்த பிறகு .... அவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
அவர் தான் இறந்தாரே தவிர ....அவரின் எழுத்துக்கள் இறக்கவில்லை .....
உங்க காலம் வரையிலும் உங்க நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்
நல்லா இருக்கு அனு. குறிப்பாக இளம்பிராயம் பற்றியும் அதைக் கடக்க எடுத்துக் கொள்ளும் பிரயாசம் பற்றியும்.
பத்தி, எதைபற்றியும் அல்லது எதையும் பற்றாமலே நன்றாக எழுதும் உத்தி எனக்குப் பிடித்திருக்கிறது.
நல்ல பகிரல். கொஞ்சம் சிக்கலான கதையை எளிமையாக எழுதி இருக்கீங்க. இப்படித்தான் எழுதனுமோ புத்தக ரெவ்யூ :)
என்ன ரொம்ப நாளா காணோம்?
//மற்றவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நமது பதின்ம பருவங்களில் தொடர்ந்து பீடிக்கப் படுகிறோம்//
இப்பதான் புரியுது நாம்ம எப்படி sink ஆகுறம்ன்னு :)
புத்தகத்தைவிட முன்குறிப்புகள் அருமை.
உங்கள் ஆதர்ஸத்துக்கான அஞ்சலி.
//காற்றில் வீசப்பட்ட உணவுத் துண்டுகளை இலாகவமாகக் கவ்விப் பிடிக்கும் சூட்சுமக் காக்கைகள் போலவே மதிப்பெண்களை கவ்வத் தெரிந்த முன்னிருக்கை மாணவர்கள் அவர்கள்//
இந்த வர்ணனைகள் கலக்கல்.
அப்புறம் அந்த பதின்ம வயதை வர்ணிச்சீங்களே,
தொப்பிய கழட்டிக்கறோம் தல.
//காற்றில் வீசப்பட்ட உணவுத் துண்டுகளை இலாகவமாகக் கவ்விப் பிடிக்கும் சூட்சுமக் காக்கைகள் போலவே மதிப்பெண்களை கவ்வத் தெரிந்த முன்னிருக்கை மாணவர்கள் அவர்கள். பாவம்.. அவர்களை விட்டு விடுவோம்.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))
அற்புதப் பகிர்வுண்ணா.. மிக்க நன்றி
அருமையான பகிர்வு.. :)
@ கார்த்திக்
சரியான வயதுதான் :). படிச்ச அப்புறம், ரெவியு எழுதவும்.
@ விஜயஷங்கர்
ஆமாம், திரும்பப் படியுங்கள்.
இன்னுமா உலகம் நம்ம நம்புது :)
நன்றி விஜய்
@ சின்ன அம்மிணி
அவசியம் படியுங்கள். நன்றி C.A.
@ மேவீ
அவசியம் படிக்கவும். You will enjoy it. நன்றி மேவீ.
@ வேலன்
ரொம்ப நன்றி வேலன்.
@ விதூஷ்
நன்றி வித்யா. ஆபிஸ் தொல்லை :)))
@ அசோக்
நீங்க புத்தகத்தைப் படியுங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். நன்றி அசோக்.
@ ஆதி
ரொம்ப நன்றி ஆதி. டைம் கிடைத்தால் படியுங்கள்.
@ தராசு
பாசு, எல்லாமே அனுபவம் தானே! நன்றி.
@ ஸ்ரீமதி
ஏதோ, எங்களுக்கு சான்ஸ் கிடைக்கும் போது கொஞ்சம் கலாய்க்கக் கூடாதா? கம்மி மார்க் வாங்கும்போது எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
நன்றி ஸ்ரீ
@ நர்சிம்
நன்றி நர்சிம்
@ Bee'morgan
ரொம்ப நன்றி பாலா.
@ தமிழிஷ் தளத்தில் வாக்களித்த 12 பேருக்கும் நன்றி.
அனுஜன்யா
Post a Comment