
இந்த யூத்தா இருப்பதின் சோகங்கள்தான் எத்தனை!
பாருங்க இந்தத் திங்கள் கிழமையிலிருந்தே வானம் இலேசாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தத் சனிக்கிழமை அருகில் வர வர, முழு உலகுமே கொஞ்சங்கொஞ்சமாய் ரோஜா நிறத்திற்குத் தாவிக்கொண்டிருந்தது. என்னது, ஒண்ணும் புரியவில்லையா? இதுக்குத்தான் உங்கள மாதிரி பெருசுங்களோடப் பேசக் கூடாதென்பது! இருந்தாலும், வந்துட்டீங்க, விளக்கமா சொல்றேன்.
அதாகப் பட்டது இன்று பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி. காதலர் தினம். காதலின் நிறம் தெரியுமா? ம்ம், கேட்டிருக்கக்கூடாது, அது பிங்க் என்று ஆங்கிலத்திலும், ரோஜா நிறம் என்று அழகு தமிழிலும் சொல்வோம்.
பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே ஆணும், பெண்ணும் நிறவாரியாகப் பிரிக்கப் படுகிறோம். பிங்க் ஸ்கேர்ட், பிங்க் கவுன், பிங்க் ரிப்பன்/ஹெட் பேண்ட், பிங்க் வாட்ச், வளையல், பிங்க் சைக்கிள், பிங்க் காலணிகள், பிங்க் இடுப்புக் கச்சை (அதாங்க பெல்ட்) என்று சகலமும் பிங்க் பெண் குழந்தைகளுக்கு.
நமக்கு மஞ்சள் டிரௌசருக்கு ஆரஞ்சு கலர் சட்டை. பச்சை வண்ணத்தில் பூட்ஸ், சிகப்பு நிறத்தில் தொப்பி என்று மாடர்ன் ஆர்ட் போடமுடியாத குறையினை நம் மூலம் தீர்த்துக்கொள்ளும் பெற்றோர். எனக்கு சிறுவயதில் பிங்க் நிறத்தில் ஷூ போட்டுக்கொள்ள ஆசையாக இருந்தது முறியடிக்கப்பட்டது இந்தக் காரணங்களால்.
காதலர் தினம் பிங்க் வண்ணத்தில் நிரம்பித் தளும்புவதின் நுண்ணரசியல் இப்போது புரிகிறதா? எப்போதுமே தோற்கும் ஆண்வர்க்கம், உச்சக்கட்டமாகக் காலில் சாஷ்டாங்கமாக விழும் நாளுக்கு 'காதலர் தினம்' என்று இப்போது பெயர் சூடப்பட்டிருக்கிறது.
நீங்கள் மணமானவரா? வருத்தங்கள். காதல் திருமணமில்லையே? தப்பித்தீர்கள். என்னது, ஆமா? ஐயோ பாவம், அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.
முன்னமே சொன்ன திங்கட் கிழமையிலிருந்து சமிக்ஞைகள் துவங்கின. முதலில் இந்த சானல்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். டேய், எப்பவுமே சனிக்கிழமை ஏதாவது ஒரு பாடாவதி காதல் படம் போடுவது வழக்கம்தானே. அது என்ன 'காதலர் தினத்தை முன்னிட்டு' என்று ஒரே ரோஜா நிற இதயங்கள் பின்னணியில் ஒரு அட்டகாச அறிவிப்பு! சும்மா இருக்கும் மனைவியை உசுப்பி விடும் அறிவிப்புகள்!
நான் கேட்கும் முன்னரே, "இந்த ரோஜாப்பு கொடுக்கும் காதலர்கள்/கணவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க" என்றாள். அப்பா, ஒரு வழியாக இந்தக் காதலர் தினம் நமக்கு ஒரு கவலையும் இல்லாமல் வந்து போகப் போகிறது என்ற எண்ணத்தில் மண். ‘ஒரு இன்வெஸ்ட்மென்டா கொஞ்சம் (!) தங்கமோ, வைரமோ வாங்கலாம். இப்பெல்லாம், அது கூட பாஷன் இல்ல. பிளாடினம் வாங்கலாம்’ என்ற கமெண்ட் அடுத்து வந்தது. இலேசாக வயிற்றைப் புரட்டியது. ஏற்கெனவே மாதாமாதம் பெஸ்டிவல் அட்வான்ஸ் (சிவராத்திரிக்கெல்லாம் பண்டிகை கொண்டாட பத்தாயிரம் வாங்கிய ஆள் நான் மட்டும்தான் இருப்பேன்) வாங்குபவன் என்ற அவப்பெயர்.
அலுவலக ஆடிட் மற்றும் அப்ரைசல் உபாதைகளுக்குக்கூட நான் இவ்வளவு பயந்ததில்லை. ஒரு பயப்பந்து வயிற்றில் மையம் கொண்டு, அவ்வப்போது ஆட்டம் காட்டியது. இப்படி அடுத்த மூன்று நாட்கள் ஊர்ந்து போக, மனைவி அவ்வப்போது மேலதிகாரியின் மிடுக்கில், பார்வையாலேயே 'என்ன மேன், இந்த வருடம் என்ன செய்யப் போற?' என்ற தொனியில் பார்த்து விட்டு நகர்ந்தாள்.
தள்ளிக்கொண்டே போன வேலை, கடைசியில் வேலை போகும் நிலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோமே, அதே மாதிரி வெள்ளிக்கிழமை மாலை எனக்கு இலேசாக ஜன்னி வந்துவிட்டது. நாளை கா.தினம். என்ன செய்வது?
திடீர்னு ஒரு போன். அவள் தான். 'ம்ம், எப்படி இருக்கீங்க' என்றாள், எதோ பத்து வருடம் முன் பிரிந்த காதலியைப் போல. 'ரொம்ப வேலை. ரொம்ப முக்கியம் உன்னோட குசல விசாரிப்பு இப்ப' என்று எண்ணிக்கொண்டே "என்னம்மா கண்ணு! என்ன அபூர்வமா இந்த நேரத்துல போன்" என்று வழிந்தேன். 'உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இருந்தாலும்... நாளைக்கு என்ன நாள் தெரியுமில்ல.. ' என்று நிறுத்தினாள். சரியான கிழமையில் தான் இந்த முறை வருகிறது. "தெரியாமலா.. ஞாபகம் இருக்கு" என்று பல்லைக் கடித்தேன்.
"நா உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கியிருக்கேன். சோ கியுட்" என்றாள். அவள் இப்படிச் சிலாகித்துச் சொன்னால் பெரும்பாலும் கிலுகிலுப்பை அல்லது கை தட்டிக்கொண்டே தலையாட்டும் (கொஞ்சம் யோசித்தால் நானும் அதுதான்) பொம்மை போன்றவைகளே இருக்கும். "அப்படியா" என்றேன். "ஹம். அப்புறம், நீங்க எனக்காக எதுவும் காஸ்ட்லியா வாங்காதீங்க" என்றாள். தீர்ந்தது. இதற்கு உண்மையான அர்த்தம் இதுவரை ஆதங்கத்துடன் படிக்கும் உங்களுக்கும் புரிந்திருக்கும்.
"நிஜமாத்தான் சொல்றேன். தங்கம், வைரம்னு சும்மா தண்ட செலவு (இதோடா!) பண்ண வேண்டாம்"
"அப்ப ப்ளுடோனியமா"
"என்னது?"
"சாரி, ப்ளாடினமா?"
"இல்ல இல்ல. பணத்தில என்ன இருக்கு. இந்த வருடம் ஏதாவது வித்தியாசமான முறையில், காதல் பரிசு கொடுக்க ட்ரை பண்ணுங்களேன்"
சந்தோஷத்துல மிதந்தாலும் காட்டிக்கொள்ளாமல், "நீ என்ன சொல்ல வர" என்றேன்.
"எங்க லேடிஸ் க்ளப்ல இந்த வருஷம் 'சிறந்த காதல் பரிசுக்கு' ஒரு பரிசு கொடுக்கப் போறாங்க. நாம்ப காதலிச்சது (காண்க: இறந்த காலம்) எல்லாருக்கும் தெரியும். அதுனால, உங்க மூளைய யோசிச்சு புது மாதிரி எனக்கு ஒரு பரிசு கொடுங்க பார்க்கலாம். உலகமே புதுசா தெரியணும். பார்க்கணும். அப்படி இருக்கணும்"
எவ்வளவோ யோசிச்சும் ஒண்ணும் தட்டுப் படவில்லை. இரவு பத்து ஆகிவிட்டதால் வீடு போய் சேர்ந்து, சோர்ந்து படுத்துத் தூங்கி விட்டேன். காலையில் முழித்ததுமே வித்தியாசமாய் உணர்ந்தேன். இது என்ன வானம், பூமி, மரம், அதன் இலைகள் எல்லாமே பிங்க் நிறம்! அவளும் (எப்போதுமே அப்படித்தான்!). என்னோட வெள்ளக் கலர் டி-ஷர்ட் கூட ரோஜா வண்ணத்தில். எப்படி என்கிறீர்களா.. அப்புறம் சொல்றேன்.
நான் எழுந்தேன். பல் தேய்த்து, நிதானமாக காபி (அது கூட இலேசாக பழுப்பு-பிங்கில்) குடித்தேன். யதேற்சையாகப் கைகளைப் பின்பக்கம் கட்டிக்கொண்டதில் ஆவலாக "பின்னாடி என்ன கிப்ட்" என்றாள்.
நான் கணினி ஆன் செய்து நம்ம ப்ளாக் சென்று "இப்ப பாரு" என்றேன்.
அது சொன்னது இதுதான்.
"அனு,
உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
கொஞ்சம் நானென
இன்னும் வாழ்கின்றன
காதலர் தினங்கள்..
உன் தொலைப்பேசி
முத்தங்களுக்கெல்லாம்
மௌனமே காக்கிறேன்
பரிசுகளாக திருப்பித்தர
காதலர் தினத்தை
எதிர்பார்த்து...
இப்படியெல்லாம் கவிதை எழுதி சொல்லலாம். நான் கேட்காமலேயே என் தங்கை இந்தக் கவிதைகள் நமக்காகவே எழுதி இருக்கா.
ஆனாலும், நான் உனக்காக மட்டும் எழுதும் வரிகள் இது தான்..
"உன்னை எப்படிக் காதலித்தேனோ,
அப்படியே இன்னும் காதலிக்கறேன்
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்
இன்னும் பன்மடங்கு அதிகமாவும்
வரும் தினங்களில் காதலிப்பேன்"
எனக்குத் தெரிஞ்ச பிங்க் கலர்ல இந்த பதிவு முழுதும் தீட்டி விட்டேன். சப்தமே இல்லை. அபாய கட்டத்தை நெருங்கி விட்டோமோ என்று அஞ்சியபடி திரும்பினால், கண்களில் நீர்த்திரை. அழுதுகொண்டே, "தேங்க் யூ டா" என்றாள்.
இதுக்குப் பேர்தான் ஜாக்பாட். அதுக்கு அப்புறம் என்ன? ஒரே ராஜ மரியாதை தான்.
கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும் கேட்டேன். "ஏய் கிறுக்கு, இது கவிதை கூட இல்லை. சராசரிக்கும் கீழான உரைநடை; இதுக்கு போயி இவ்வளோவ் பீலிங்க்ஸா"
"இது கவிதை இல்ல தான். ஆனா, உண்மை இருக்கு. அழகு ஆடைகள் போர்த்தாமல், நிர்வாணமா இருந்தாலும், இது தான் நிதர்சனம். இதுதான் உண்மையான காதல்' என்றாள். தல கிறுகிறுன்னு சுத்தி, அவள் மடியில் சாய்ந்தேன்.
அப்புறம், அவள் இல்லாத போது திரும்ப படிச்சா, அவள் சொன்னதும் உண்மைதான் என்று தோன்றியது. மாலையில் நாங்கள் இருவரும் பேசும்போது பரஸ்பர பரிசுகளைப் பற்றி பேசினோம்.
"ஆமா, உலகமே வியந்து பார்க்கணும்னு சொன்னேனே? நீங்க எழுதினது எனக்கு நல்லா இருக்கு. ஆனாலும்..."
"அசடு, இந்தப் பதிவை உலகத்தில இருக்குற நிறைய தமிழர்கள் படிக்கிறாங்க. சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க"
"உங்களுக்கு எப்படித் தெரியும் அவங்க வந்து புகழுவாங்கன்னு"
இப்படி ஆரம்பித்தது அவளுக்கு பதிவுலகம், பின்னூட்டம், பரஸ்பர புகழ், கும்மி போன்றவற்றின் பால பாடம். பதிவுலக அரசியல்... நமக்கே இன்னும் புரியல; ஆள வுடுங்க பாஸ்.
அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி. ஆம், பிங்க் கலரில். அவளிடம் கேட்டேன் 'ஏய் என்ன இது"
"நல்லா இருக்குல்ல.. எம்.ஜி.ஆர். போடுவார்.. அதே மாதிரி"
"எம்.ஜி.ஆரா? - எந்தப் படத்துல? "
"இதயக்கனி"
சரியான பரிசுதான்.
டிஸ்கி: இந்தப் பதிவில் வந்த அழகிய கவிதையும், பொருத்தமான புகைப்படமும் பிரியமான தங்கை ஸ்ரீமதி பதிவிலிருந்து, அவர் (!) அனுமதி இல்லாமல் பதிவிட்டது. வந்து கோபித்துக் கொண்டால் "இலவசமாக விளம்பரம் கொடுத்தால் தவறா?" என்று சமாளிக்க உத்தேசம். நன்றி ஸ்ரீ.



