Wednesday, August 26, 2009

பிள்ளையார் 'பிடிக்கப்' போயி ..


என் கசின் என் வீட்டிற்கு ஊரிலிருந்து வந்திருந்தான். "என்னடா இயந்திர வாழ்கை! எப்படி சமாளிக்கிற" என்றான் நிஜமான வருத்தத்துடன். நாமாகவே புலம்புவதோ அல்லது அலுத்துக்கொள்வதோ செய்யலாமே ஒழிய மத்தவங்க பரிதாபமா சொன்னா உடனே மறுப்பதுதானே வீரம்?

"அதெல்லாம் இல்லடா. எல்லாம் நம்ம மனோபாவம். பாரு நான் ப்ளாக் எல்லாம் எழுதுறேன். நல்லா பொழுது போகும். நிறைய பேரு எழுதுறாங்க. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்" னு அடுக்கிக் கொண்டே போனேன். முதல்ல என்னோட ப்ளாக் காமிச்சேன். 'புனரபி' படிச்சான். 'ப்ச்' என்ற சப்தம் வந்தது.

"நீ இப்பிடியெல்லாம் எழுதுவியா"

"எனக்கே தெரியாது; தானா வருது"

கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்து, "உன்னப் புகழ்ந்தேன்னு நெனச்சிட்டியா" என்றான்.

எங்கோ ஒரு எச்சரிக்கை மணி அடித்த சத்தம் கேட்டது. அவனாவே எதையோ க்ளிக் செய்தான். இந்த தருணத்தில் ஒரு முக்கிய செய்தி சொல்லியாக வேண்டும். அவன் விஜயம் செய்தது 'விடுமுறை தினத்தை முன்னிட்டு' என்று கலைஞர் டிவி ‘சிறப்பு நிகழ்ச்சிகளை’ இருபத்தியாறு ஸ்பான்சர்கள் தயவில் ஒளிபரப்பிய 'விநாயகர் சதுர்த்தி' தினம்.

அவன் க்ளிக் செய்து, தற்போது பார்த்த திரை "சிதைவுகள் ..." என்று மேல் வரியிலும், "சிதைந்து கொண்டு இருப்பவனின் துண்டுகள் ..." என்று அதற்குக் கீழேயும் இருந்தது. அதற்குக் கீழே நாமெல்லாம் இடுகை என்று அறியும் ஒரு வஸ்து "பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?" என்ற கேள்வியுடன் துவங்கியது. எனக்குள் ஒரு பல்பு எரிந்தது இப்போது.

இப்போது இன்னொரு முக்கிய தகவல். இந்த கசின் இருக்கானே, அவன் ஒரு தீவிர பிள்ளையார் பக்தன். எவ்வளவுன்னா, எப்பவும் அவன் டவுசர் பாக்கெட்டில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் இருக்கும். மன்த்லி டெஸ்ட் முதல், இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு, கிரிக்கெட் விளையாடும் போது, டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் போது, ஸ்டெபி கிராப் விம்பிள்டன் விளையாடுகையில், ரஜினி வில்லன் அடியாட்களுடன் தீ வளையத்துக்குள் இருக்கும்போது என்று சர்வரோக நிவாரணி அவனுக்கு அந்த பிள்ளையார் விக்கிரகம்தான். எனக்கு பயமா இருந்தது. இதப் படிச்சு 'மெர்ஸில்' ஆகி (நன்றி: கார்க்கி) கணினி திரைக் கிழிக்கப் படுமோ என்று பதட்டமா இருந்தது. அவன் படு உற்சாகத்துடன் படிக்கத் துவங்கினான். நான், லேட்டஸ்ட் ஹாரிஸ் பாட்டு கேக்குறியா என்று கார்க்கி தளத்துக்கு தாவ முயன்றேன்.

அவன் "டேய், பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு இந்த மாதிரி தல புராணம் மாதிரி யாரோ புண்ணியவான் எழுதியிருக்காரு. இப்ப என்ன சினிமா பாட்டு" என்று கடிந்துகொண்டு படிக்கத் துவங்கினான். முதலில் மெய்மறந்து இருந்தவன், போகப்போக முகம் சிவந்தான். நரம்புகள் புடைக்கத் துவங்கின.

"டேய், என்னடா இது? பிள்ளையார்னா யாருன்னு நினைச்சாரு இவரு? ஏதோ யுவான் சுவாங், வாஸ்கோட காமா ரேஞ்சுக்கு நம்ம சாமிய இறக்கிட்டாரு! ப்ளாக் இருந்தா என்ன வேணா எழுதலாமா"

"அப்படியில்ல. வரலாறு.... "

"புடலங்கா. இந்த வரலாற்ற எப்படி வேணாலும் மாத்தலாம். அப்பப்போ யாருக்கு பலம் அதிகமோ அவங்க இஷ்டப்படி அத மாத்திடலாம்"

கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்.

"என்ன சொல்ல வராரு இவரு? அது என்னடா தமிழ்க் கடவுள்? பிள்ளையார் என்ன மாநில ஆளுநரா? ஆந்திராவில் இருந்தாரு. அப்புறம் தமிழ்நாட்டுக்கு போஸ்டிங் ஆச்சு அப்பிடீன்னு. அவர் எல்லாம் கடவுள். எப்பவும், எங்கயும் இருப்பார். ஏண்டா இப்படி எல்லாம் எழுதுறாங்க. இதை எல்லாம் கேள்வியே கேக்க மாட்டாங்களா?"

"என்ன அப்படி சொல்லிட்ட! இங்க க்ளிக் பண்ணு" என்று சொல்லி பின்னூட்டம் என்று இன்னொரு சுனாமியைத் திறந்து விட்டேன்.

எதிர் பார்த்த மாதிரியே, ஸ்ரீதர், நர்சிம் என்று பெயர்களை வாஞ்சையாகச் சொல்லிக்கொண்டான். பற்களை நற நறவென்று கடித்ததால் 'ஜ்யோவ்' என்று சொல்ல சிரமப்பட்டான்.

"ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற? இது சிலபேரோட கருத்து. அதுக்கு எதிர் கருத்தும் வருது. அதையும் ஆரோக்கியமா விவாதிக்கிறாங்க. உன்னோட வாதம் கொஞ்சம் பிற்போக்கு" என்றவுடன் கிட்டத் தட்ட சுரேஷ் கண்ணன் ரேஞ்சுக்கு முற்போக்குவாதிகளைத் திட்ட ஆரம்பித்தான்.

சரி இது சரிப்படாதுன்னு அவனுக்கு பாவ்லா காட்டி, வல்லிசிம்ஹன் அம்மா, துளசி டீச்சர் என்று அவசரமாக தமிழ்மணத்தில் தேடினேன். நல்ல வேளை! இரண்டு பெரும் பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டிருந்தார்கள். கோவில் தர்மகர்த்தா பக்தர்களிடம் கேட்பது போல அவனிடம் "பாத்தியா? இப்ப திருப்தியா?" என்று கேட்டேன். சந்தம் வந்திருந்தவன் கொஞ்சம் சாந்தம் ஆகி இருந்தான்.

படிச்சு முடிச்சுட்டு வெளிய வந்தா மீண்டும் தமிழ்மணம். அவன் கண்களுக்கு என்று 'பிள்ளையாரை உடைப்பது பிரசாரமேயாகும்" என்று தமிழ் ஓவியா இடுகை தென்பட்டது. எனக்கு பேஸ்மென்ட் நடுங்கத் துவங்கியது. நல்ல வேளையா அதே சமயம் இசையருவியில் "அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே" என்று அவனுக்குப் பிடித்த ரஜினி பாடத் துவங்கினார். முதல் வேளையா கணினியை ஆப் செய்தேன். இன்டெர் நெட் இணைப்பையும் தற்காலிகமாக எடுத்து விட்டேன்.


கொழுக்கட்டையைச் சாப்பிடும் போது யதேற்சையாகப் பார்த்தால் பிள்ளையார் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

Thursday, August 13, 2009

புனரபி


உள்ளே இருந்தேன்
அதாவது வெளியே
அரங்குக்கு மிக சமீபத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
ஒலிச்சித்திரம் கேட்ட
சில நாட்களுக்குப் பின்
திரையரங்கு என்னை
வாரிச்சுரிட்டி உள்ளிழுத்தது
கண்டிராத பலர்
நடித்துக்கொண்டே இருந்தனர்
இயக்குனர் இருப்பதாகச்
சொல்லப்பட்டாலும்
தங்களுக்கான வசனங்கள்
தாமாகவே பேசினர்
முதலில் காட்சிகளைக்
காணப் பழகியவன்
பிறகு நடிக்கவும் துவங்கினேன்
பல வேடங்களுக்குப்பின்
சிலரின் வெளியேற்றமும்
வேறு சிலரின் புது வருகையும்
உண்டாக்கிய அச்ச தினங்களில்
ஒரு நாள் திரையரங்கு
என்னையும் வாரிச்சுருட்டி
வெளியே துப்பியது
அரங்கத்துள் சிலர் என்
நடிப்பை விமர்சித்தனர்
இலேசாக உணர்ந்தாலும்
சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்
என்றெண்ணியபடி
வெளியே மிதந்தேன்
அதாவது உள்ளே

Thursday, August 6, 2009

வாடா WADA வாடா (எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (7th August '09)





அது 1988 ஆம் வருடம். செப்டம்பர் 24 ஆம் திகதி. தென் கொரியாவின் தலை நகர் சியோலில் ஒலிம்பிக்ஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த விளையாட்டுப் பிரியர்களின் பார்வை முழுதும் அன்று நடக்கபோகும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் மீது. உலகத்தின் அதி வேக மனிதன் யார்? கார்ல் லூவிஸ்? அல்லது பென் ஜான்சன்? அவர்களிடம் முன்னமேயே போட்டியும், பொறாமையும் நிறைந்திருந்தது. உலகையே ஸ்தம்பிக்க வைத்து 9.79 வினாடிகளில் பென் ஜான்சன் ஒலிம்பிக் முதல் பரிசை வென்றார். லுவிஸ் இரண்டாம் இடம்.

மூன்று நாட்கள் கழித்து, அவருக்கு வழங்கப்பட்ட விருது அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. காரணம்? போட்டிக்குப் பின் நடந்த சோதனையில் அவர் ஸ்டானோசோலோல் என்னும் ஊக்க மருந்தை உபயோகித்து வென்றது தெரிய வந்தது. அவரால் மூன்று தினங்கள் பூரிப்பில் திளைத்த கெனடா தேசமே அவமானத்தில் குன்றியது. இரண்டாவது வந்த லுவிஸ் முதலிடம் வென்றதாக அறிவிக்கப் பட்டார். ஆயினும் அது போட்டி நடக்கும் அன்று வெல்வதற்கு ஈடாகுமா?

பின்னாட்களில் லுவிஸ், இரண்டாம் இடம் கிடைத்த கிறிஸ்டி ஆகியோரும் இது போன்ற ஊக்க மருந்து சர்ச்சைகளில் சிக்கினார்கள் என்பது கூடுதல் தகவல். இப்போதும் கூட மொத்த ஓட்டப்பந்தய வீரர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் இத்தகைய தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துவதாக பல்வேறு அறிக்கைகள் சொல்கின்றன.



அடுத்து நாம் பார்க்கப்போவது எல்லோரும் செல்லமாக 'ஸ்விஸ் மிஸ்' என்று அழைத்த மார்டினா ஹிங்கிஸ். டென்னிஸ் விளையாட்டில் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் போட்டிகளை வென்ற அழகிய வீராங்கனை. கெண்டைக்கால்களில் ('கெண்டைக்கால்கள்' என்றதும் சமீபத்தில் படித்த 'நீலப் பூக்கள்' என்னும் பிரமாதமான கவிதை நினைவுக்கு வருகிறது - இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம்) தொடர்ந்து வந்த பிரச்சனைகளால் ஆட்டத்திலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்தார். பிறகு சிகிற்சை முடிந்து, திரும்ப ஆட வந்து, நன்றாக விளையாடத் துவங்குகையில் .... திடீரென்று தாம் டென்னிஸ் விளையாட்டிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார். காரணம்? 2007 விம்பிள்டன் போட்டிகளில் போது 'கொக்கைன்' என்னும் போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக தெரிய வந்தது. அவர் அதை 'நான் தெரிந்து அதை செய்யவில்லை' என்றாலும், முற்றிலும் மறுக்கவில்லை. சச்சரவு இல்லாத, சுத்தமான ஆட்டம் என்று அறியப்பட்ட டென்னிஸ் உலகம் ஆட்டம் கண்டது.

சரி, இதெல்லாம் இப்போ எதுக்குய்யா சொல்ற என்கிறீர்களா? ஒரு விஷயம் சொல்வதற்கு முன் தகுந்த முஸ்தீபுகளுடன் சொன்னால் தான் சுவாரஸ்யம் என்பது ...ம்ம், சான்றோர் வாக்கு.

நாளை தினசரிகளில் 'இந்திய வீரர்களில் ஐந்து பேர் போதை மருந்து பயன் படுத்தியதாக ஒப்புக் கொண்டனர். இந்தியா வென்ற ட்வென்டி 20 உலகக் கோப்பை செல்லுபடியாகாது என்று அறிவிக்கப் படுகிறது' என்ற ரீதியில் தலைப்புச் செய்திகள் வந்தால் நம் அனைவருக்கும் எப்படி இருக்கும்?

கிரிக்கெட் விளையாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக performance enhancing drugs எனப்படும் ஊக்க மருந்து உபயோகம் நாம் கேள்விப்பட்டாலும், சர்வதேச தடகள விளையாட்டு அளவு நிலைமை மோசமில்லை என்பது சிறிய ஆறுதல். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், பாகிஸ்தானின் முஹம்மத் இஸ்மாயில் போன்ற பெயர்கள் முன்னமேயே களங்கப் பட்டுவிட்டன. இந்தத் தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), WADA (World Anti-Doping Agency) எனப்படும் உலக போதை மருந்துத் தடை நிறுவனத்தின் மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாட்டையும் கொண்டு வர முனைப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க செயல்.

ஆனால், அதற்கு நம் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் தயக்கம் காட்டுவதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (BCCI) வழக்கம் போல ICC யுடன் மோதல் செய்யும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரிகிறது. நம் உள்ளூர் சானியா மிர்சா, மகேஷ் பூபதியிலிருந்து அயல்நாட்டு அயன் சாப்பல், இன்னபிற பெருசுகள் வரையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சர்வதேச நட்சத்திரங்களான ரோஜர் பெடரர், நடால் இவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லாத போது சுண்டைக்காய் சச்சின், டிராவிட், தோனி, யுவராஜ் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்னும் தொனியில் எள்ளலும் வருகிறது.

சரி நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு என்னதான் பிரச்சனை? 'முடியாது; நாங்க இந்த மாதிரி ஏதாவது ஊக்க மருந்து பயன் படுத்துவோம்'னு இவங்க சொல்றாங்களா? இல்லை. WADA வின் சட்ட திட்டங்களுள் ஒரு நிபந்தனை: 'Whereabouts' எனப்படும் 'எங்குள்ளார்கள்' என்னும் தகவல் பற்றியது. அதாவது, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஒவ்வொரு நாளிலும் ஒரு மணி நேரம் (வாரத்தில் ஐந்து தினங்கள்) முன் அறிவிப்பில்லாத போதை மருந்து உபயோக பரிசோதனைக்குத் தயாராக இருக்கவேண்டும் என்பது. எந்த நாள் வேண்டுமானாலும் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்தில் சோதனைக்கு உட்பட அவர் தயாராக இருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டிலிருந்து அமலுக்கு வந்த நிபந்தனை, தற்போது வாரத்தின் ஏழு நாட்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் தயக்கம் மற்றும் எரிச்சலை உண்டு பண்ணி இருக்கிறது.

நமது கிரிக்கெட் வீரர்கள் மட்டுந்தான் என்றில்லை. பெல்ஜியம் நாட்டின் விளையாட்டு மையம் இந்த சட்டம் "ஐரோப்பிய யூனியனின் மனித உரிமை சட்டங்களை" மீறுவதாக ஒரு நிலை எடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போலவே, கால்பந்தாட்ட வீரர்களின் சங்கமும் சில சட்டங்களின் அடிப்படையில், WADA வின் இந்த சச்சரவுக்குள்ளான விதியை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் FIFA (சர்வதேச கால்பந்தாட்ட கழகம்) இரண்டுமே வீரர்களின் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த 'whereabouts' விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் விசிறிகள், ஊடகங்களின் இடைவிடா துரத்தல்கள் போன்றவை எந்த முதன்மை சர்வதேச வீரருக்கும் இருக்கும் அதே அளவிலோ, அல்லது அதைவிட மிகுதியாகவோ தான் இருக்கிறது. அவர்களுடைய privacy (தனிவெளி?) நிச்சயம் மிக மிக அவசியம். சச்சின் போன்ற மெகா ஸ்டார்களுக்கு உயிர் ஆபத்தும் அதிகம். அதனால் 'whereabouts' என்ற பெயரில் கொடுக்கப்படும் பயண, தங்கும் விவரங்கள் வெளியே கசிந்தால் அதன் விளைவுகள் பயங்கரமாகிவிடும் என்ற அச்சம் உள்ளது. ஆனால், அதே சமயம் WADA என்பது பல ஆண்டுகளாக மிகப் பொறுப்புடன் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. இது வரை அவர்களிடம் தரப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்ததாக செய்தி இல்லை. மேலும், போதை மருந்து தடை என்பது விளையாட்டுத் துறையில் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

அதனால், முதலில் தயக்கமும், பயமும் இருந்தாலும், விளையாட்டின் நன்மையைக் கருதி, தங்கள் மீது அனாவசிய சந்தேகத்தின் நிழல் விழுவதை தடுக்க, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த விதிக்கு ஒப்புக்கொள்வதே நல்லது.

அப்பாடா, ஒரு அதி முக்கிய விடயத்தில், என்னுடைய மேலான கருத்தைச் சொல்லிய திருப்தியில் அடுத்த மேட்டருக்குத் தாவலாம்.
**************************************************************
உரையாடல் அமைப்பு நடத்திய 'கதை போட்டி' முடிவுகள் இந்த வார இறுதியில் வரும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. இவ்வளவு பேர் உற்சாகமாகப் பங்கேற்றதே மிகப் பெரிய விஷயம். பள்ளி மாணவர்களைப் போல் முடிவுக்கு ஆர்வம் கலந்த பயத்துடன் காத்திருக்கும் பதிவர்களைப் பார்த்தால் நம் ஒவ்வொருவருள்ளும் இருந்த சிறுவன்/சிறுமி இன்னும் உயிர்ப்புடன் ஒரு மூலையில் இருப்பது தெரிகிறது. அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.

வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள். ஜஸ்டு மிஸ் ஆகப் போகும் ஏனைய அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள். பங்கு பெறுதல் வெற்றி பெறுவதைவிட முக்கியம் இல்லையா? பல சிரமங்களுக்கு இடையில் உரையாடல் அமைப்பினர் (எனக்குத் தெரிந்து பை.காரன், ஜ்யோவ்) இந்த மாதிரி ஒரு போட்டி நடத்தி பரிசு வழங்குவது பெரிய விஷயம். என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும் - அவர்களுக்கும் மற்றும் திரைக்குப் பின்னால் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும்.
**************************************************************
ஒரு சிறிய புதிர். கொஞ்சம் மூளையைக் கசக்கினால் எளிதில் விடை கிடைக்கும்.

நாங்கள் நான்கு பேர். நாங்கள் என்றால் யூத் ஆகிய நான், அதே போல யூத் ஆன கார்க்கி, யூத் என்றாலும், சற்று நிதானமும் இருக்கும் நர்சிம், யூத் இல்லாததால் வெறும் நிதானம் மட்டும் இருக்கும் ஜ்யோவ்.

நாங்கள் நால்வரும் ஒரு நள்ளிரவில் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டும். தொங்கும் பாலம். ஒரே சமயத்தில் இருவருக்கு மேல் அதில் நிற்க முடியாது. கைவசம் டார்ச் அவசியம் வேண்டும் அந்தப் பாலத்தைக் கடக்க. ஒரே சமயத்தில் இருவர் செல்கையில், அந்த இருவரில் மெதுவாகச் செல்பவரின் வேகத்தில் தான் உடன் செல்லும் நபரும் போக முடியும்.

இப்போது பாலத்தைக் கடக்க நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் நேரம் :

அனுஜன்யா - 1 நிமிடம்
கார்க்கி - 2 நிமிடம்
நர்சிம் - 5 நிமிடம்
ஜ்யோவ் - 10 நிமிடம்

எவ்வளவு குறைந்த நிமிடங்களில் எங்களால் அந்தப் பாலத்தைக் கடக்க இயலும்?

சரி சரி, ரொம்ப ஈசியாக இருந்தால் தெரியப் படுத்துங்கள். அடுத்த முறை....இன்னும் ஈசியாகத் தருகிறேன்.

Tuesday, August 4, 2009

நீலப்பூக்கள்


கதவில் பொருத்தியிருந்த
கண்ணாடிப் பட்டைக்கப்பால்
யாரோ ஒருத்தியின்
கெண்டைக் கால்களை
நீலப்பூக்கள் வளைந்து சென்ற
சூடிதார் போர்த்தியிருந்தது
யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறாள்
சற்று மடங்கியும்
நிமிர்ந்தும்
தரை பாவாமலும்
பிறகு வருடியும்
சிறிது காதலும்
நிறைய வெட்கமும்
காண்பித்த கால்கள்
நாணத்தில் பூக்கள்
நிறம் மாறாவிட்டாலும்
வடிவங்கள் மாறியபடி;
வெளியில் சென்று
பார்க்கவில்லை என்றாலும்
நீலப் பூக்கள்
கனவில் பூத்தன
அதே நிறத்திலும்
வேறு கதையுடனும்


(உயிரோசை 29th June 2009 மின்னிதழில் பிரசுரம் ஆகியது)