Tuesday, June 30, 2009

போர்ஹெயின் புலிகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (30th June '09)



நாகார்ஜுன் வலைத் தளத்தில் புலிகள் பற்றி ஜோர்ஜ் லூயி போர்ஹெ எழுதியிருந்ததைப் படித்தேன். உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. எனக்குப் புலிகளைப் போல மனதை ஆக்கிரமிக்கும் விலங்கு வேறெதுவும் இல்லை. யானையும் மிகப் பிடிக்கும். ஆயினும், இந்தப் பதிவு யானைகளைப் பற்றி இல்லாததால், இனி புலிகள் மட்டுமே.

புலியின் நடையில் இருக்கும் கம்பீரம் வேறெந்த விலங்கிடமும் இல்லை. மிகப் பெரிய உருவம். ஊடுருவும் கண்கள். வசியம் செய்யும் உடல் வரிகள். பிரத்யேகமான மஞ்சளாரஞ்சு/ கருப்பு நிற உடல். திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் பாதுகாப்பான தூரத்தில், திறந்த வெளியில் ஐந்தாறு புலிகளைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அப்போது பறவைகளைக் கவனிப்பதில் நாட்டம் மிகுந்திருந்த பருவம் என்பதால், அந்தப் புலிகள் அவ்வளவு வசீகரிக்கவில்லை. பிறகு என் பெங்களூர் தினங்களில் வந்து போகும் நண்பர்/உறவினர்களைக் கூட்டிச் செல்லும் தலங்களில் பன்னர்கட்டா தேசியப் பூங்கா பிரதான இடம் வகித்தது. அதனால், புலிகளை அவற்றின் இருப்பிடத்தில், சௌகரியமான வண்டிகளுக்குள் அமர்ந்து கொண்டு அருகில் பார்க்க முடிந்தது. மிக அரிதாக ஒரு முறை ஒரு புலி என்னைக் குறிவைத்து முறைத்தது. நிஜமாகவே அதன் கண்கள் என்னவெல்லாமோ சொல்லிய உணர்வு. அதற்காகவே மீண்டும் செல்லும் உத்தேசமும் இருந்தது.

ஒரு முறை ஒரு பெரியவர் தனது பேத்தியுடன் இந்த பன்னர்கட்டா பூங்காவில் புலி safari சென்றார். அந்தப் பெண் குழந்தைக்கு நான்கோ ஐந்தோ வயது. இவர் விளையாட்டாக அந்தக் குழந்தையைத் தூக்கிப் பிடித்து புலியின் திசையில் காண்பிக்க, அந்தப் புலி எப்போது, எப்படிப் பாய்ந்து, அந்தக் குழந்தையைக் கவ்விச் சென்றது என்பது யாருக்கும் முற்றிலும் புரியாத மர்மம். அந்தப் பெரியவர் வண்டியிலிருந்து வெளியே வர முயன்றதை மற்றவர்கள் தடுத்து விட்டனர். மாண்ட சிறுமி, கொன்ற புலி இவற்றின் முகங்கள் மறந்து போனாலும், வாழ்வின் அனைத்தையும் சில வினாடிகளில் தொலைத்து விட்ட பெரியவரின் முகம் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

போர்ஹெயைப் பற்றியும், குறிப்பாக அவருடைய புலிகள் பற்றியும் எனக்கு எஸ்ராவின் 'விழித்திருப்பவனின் இரவு' புத்தகக் கட்டுரை மூலம் தெரிய வந்தது. அதில் வரும் சில வரிகள்:



புலியைப் பற்றிய போர்ஹெயின் வெவ்வேறு குறிப்புகளைத் தனியாகத் தொகுத்து வாசிக்கும்போது புலி அவரது கதா வாக்கியங்களின் குறுக்காக எப்போதும் உலவிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. மேலும் அவருக்குப் பெரிதும் விருப்பமாயிருப்பது புலி என்ற மிருகமல்ல, அந்தச் சொல்தான் என்றே தோன்றுகிறது. காரணம் புலியை வன்மம் நிரம்பியதாக அவர் ஒருபோதும் சித்தரிக்கவில்லை. மாறாக புலியை மனிதன் எதிர்கொள்ளும் விதமே அவருக்கு விசித்திரமான ஈர்ப்பை உருவாக்குகிறது. அவரது பிரசித்தி பெற்ற 'இன்னொரு புலி' என்ற கவிதையிலும் அதையே வெளிப்படுத்துகிறார். கவிதையில் தான் உருவாக்கும் புலி வெறும் படிமம்; குறியீடு. அது நிஜப் புலியை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் நிஜமான கங்கை நதிக்கரைப் புலி இப்போதும் தனியாக, மூர்க்கமாக மானின் வாசனையை முகர்ந்தபடி அலைந்துகொண்டு இருக்கிறது. தான் உருவாகிய கவிதைப் புலி வெறும் சொற்கூட்டம். அது ஒரு கனவு. தான் நிஜமான மற்றும் கவிதையில் உருவான புலி இரண்டையும் தவிர்த்து இன்னொரு புலியைத் தேடிக்கொண்டிருப்பதாக முடியும் இக்கவிதை போர்ஹெக்குள்ளிருந்த புலியின் அகத்தேடுதலை நுண்மையாக வெளிப்படுத்தியுள்ளது.




போலவே இரண்டு புலிகளைப் பற்றிய ஒரு படம் என்னை மிகக் கவர்ந்த படங்களுள் ஒன்று. பெயர் தெரியவில்லை. சுரேஷ் கண்ணன்/அய்யனார் போன்றோர் அறிந்திருக்கலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு புலிக்குட்டிகள், பிறகு பிரிக்கப் பட்டு, ஒன்று காட்டிலும், மற்றது மன்னனிடத்திலும் என்று இருக்கும். முடிவில் அவை ஒன்று சேர்வது, தீ பிடித்து எரியும் மரங்களைத் தாண்டிச் செல்ல காட்டுப் புலி, நாட்டுப் புலிக்கு உதவுவது என்று மசாலாவாக இருந்தாலும், எனக்கு ஆனந்தக் கண்ணீர்தான் - எம்.ஜி.ஆர்.ருக்குப் பதில் புலிகள் நடித்த 'நீரும் நெருப்பும்' என்று என் தம்பி என்னை கேலி செய்தாலும்.

ஏற்கனவே என் தளத்தில் சில ஈழச் சார்புப் பதிவுகள். இப்போது புலிகள் பிடிக்கும் என்று வேறு சொல்கிறேன். இந்த வார நட்சத்திரம் வேலன் "எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர்; எழுதியவன் இறந்துவிட்டான் - பிரதி மட்டுமே பேசுகிறது என்று பி.ந.ஜல்லி அடிக்க முடியாது;" என்று பீதி ஏற்றுகிறார். ஆதலால், இப்போதைக்கு புலிகளுக்கு ஓய்வு கொடுப்போம், அவை மீண்டும் வரும்வரை (ஆஹா என்ன ஒரு குறியீடு!).

அடுத்தது கவிதைகள். ஹலோ, ஓடாதீர்கள். உங்களுக்கே தெரியும், நான் ரொம்ப நாட்களாக கவிதைகள் 'பற்றியும்-பற்றாமலும்' இல் எழுதவில்லை. மேலதிகமாக, என் கவிதை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

சுந்தர் ஏற்கெனவே எழுதிவிட்டார். இருப்பினும், சொல்ல விழைவது நந்தா என்னை மிகவும் கவருகிறார். கவிஞர்கள் என்றாலே உங்களுக்குள் தோன்றும் 'மூன்று நாள் தாடி; மென் சோகம்; சமயங்களில் சிறுபத்திரிகைகள் தூங்கும் ஜோல்னாப்பை; தனிமை மற்றும் வானம் பற்றி நிறைய எழுதும் ஜீவன்கள்' என்ற பிம்பத்தை சற்று விலக்கி, ஒரு modern, uptodate, மென்பொருள் யுவனுடன் பேசும் உணர்வைத் தரும் இவர் கவிதைகள். சுட்டி கொடுத்தால் பக்தியுடன் உடனே செல்லும் ஜாதி நீங்கள் யாரும் இல்லை என்பதால், சில கவிதைகளை இங்கேயே கொடுக்கிறேன். (என் தளத்தில் நல்ல கவிதைகளே வருவதில்லை என்ற புகாரும் யாரும் சொல்ல முடியாது)



என் தலைக்குள் ரோஜா


என் மூளை ஒரு ரோஜாப் பூவாகிப் பூத்த வேளை
நான் கடவுள் இருக்கிறாரா என யோசித்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் என்னை அழிக்க வரும் போதும்
நான் எதிர்க்கவில்லையென்றால்
என் கை ரோஜாப்பூ பறித்துக் கொண்டிருக்கும்
நான் முட்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை
அவை என்னைக் குத்திக் கிழித்தால்
என் ரோஜாப்பூ இன்னும் சிவந்துவிடுமே

கவிதை புரியவில்லை என்ற டெம்ப்ளேட் பின்னூட்டத்துடன் கொலைவெறியுடன் அலைபவர்களுக்கும், அவர்களைத் திருப்திப்படுத்தவென்றே உலகில் உய்வித்த காதல் கவிதை கவிஞர்களையும் வலிக்காமல் பகடி செய்யும் கவிதை இது:





அந்தச் சிரிப்பு என்னும் சிவப்புக் கம்பள விரிப்பு தானே
என்னை உன் இதய தேசத்திற்கு வரவேற்றது


உயர்ந்தவள் நீ
ஒப்பீடுகளால் இன்னும் உயர்ந்தாய்
உவமைகளைத் தேட வைக்கும் அழகு உன்னுடையது
உவமைகளே கூற முடியாது அழகு உன்னுடையது
நீ வந்து தட்டும் போதெல்லாம்
என் கதவுகள் பூ பூப்பதும்
நீ வார்த்தைகளைக் கொட்டும் போதெல்லாம்
அவை என்னுள் கவிதைகளாகவே விழுவதும்
நீ எனை விட்டுப் போகும் போதெல்லாம்
அக்கவிதைகள் சொல் உதிர்ப்பதும்
வேடிக்கையான இந்நிகழ்வுகள் என் வாழ்வில்
வாடிக்கையாகிவிட்டன

கவிதையின் தலைப்பு என்ன தெரியுமா? - "ஒரு User Friendly கவிதை"

ஒரு அறிவியல் புனைவு கவிதை:


கனவு பூமியும் Neuron Networkக்கும்


செவ்வாய் கிரகத்தில்
என் புதுமனை புகுவிழா நாளின் இரவில்
பல்லியின் சப்தம்

பழுதுபட்ட கால எந்திரத்தில்
என் கால்களுக்கு இடையே
ஓடும் கரப்பான்பூச்சி

அரை மணியில் தயாராகிவிட்டது
என் புற்று நோய்க்கான டிசைனர் ட்ரக்
அந்த எழவெடுத்த மருத்துவரின்
ப்ரிஸ்க்ரிப்ஷன் கையெழுத்து தான் புரியவில்லை

பூங்கா மூடும் நேரம்
என் க்ளோனிங் காதலியை சந்திக்கும்
என் க்ளோனிங் நான்
கவனிக்கும் நான்

ஒரு ஒளி வருடத்திற்குப் பிறகு கிடைத்த
என் காலி டைரி

யாத்ராவுடன், நந்தாவும் மிக வலுவுடன் சிபாரிசு செய்யப்படுகிறார்.

Thursday, June 25, 2009

கல்வளையம்


கழுத்தைச் சுற்றிய கல்வளையம்
பிறர் கண்களுக்குத் தென்படாமலும்
எனக்கும் புலப்படாமலும்
தொடர் பாரமாய்த் தொங்கியபடி ..
பால்ய நண்பர்களிடம்
பதட்டமாய் விசாரித்தேன்
மௌனத்துடன் நகர்ந்தவர்கள்
தூர தேசக் கடலில்
திரவியம் தேடுவதாகவும்
கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் பிழைப்பதற்கு
வித்தைகளைக் கைவிட்டு
விவசாயம் செய்தேன்
வியர்த்தேன் முதன்முதலாய்
பயிராக்கிய கரும்பிற்கு
தேடி வந்த எறும்புகள்
தேய்த்து விடக்கூடும்
கல்வளையத்தை
எறும்புகள் ஊறுகையில்
சமயோசித காகங்களின்
இடைத்தரகு எச்சங்கள்
சிகிற்சை நடக்கையில்
பக்கவிளைவுகள் இயல்பு தானே
காற்றின் திசைகள் மாறினால்
காகங்களுக்குத் தெரியும்
எச்சமிடும் புதுவிடம் எதுவென்று
கரும்புச் சாகுபடியில்
விளைந்த வியர்வைகள்
நெற்றிப் பட்டையுடன்
கழுத்துக் கல்லையும்
கரைத்துக் கொண்டிருந்தன

(கீற்று இதழில் பிரசுரம் ஆனது)

Sunday, June 21, 2009

சிங்கள அரசு பிணக்குவியலின் மேல் ஈட்டிய வெற்றி (?)



ஈழத்தில் சிங்கள அரசு கையாண்ட போர்முறைகள், தமிழின மக்கள் பிணக்குவியலாக மாறுவதை இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்பே உணர்ந்த சிங்கள அரசு, குரல்வளை நெரிக்கப்பட்ட சிறிலங்காவின் ஊடகங்கள் என்று மிகக் கவலைக்கிடமான விடயங்களைப் பகிர்ந்துகொண்ட சுனிலா அபயசெகராவின் ஆங்கில நேர்காணலின் இன்னொரு பகுதி. இதன் காணொளி வளர்மதியின் பதிவில் காணலாம். நேர்காணல் செய்தவர் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிகையாளர்.

இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:

ஷார்மினி: சுனிலா, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் - எல்லோருக்கும்; விடுதலைக்குப் போராடிய பலர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் - சிங்கள இராணுவத்திடம் தோற்றுவிட்ட விடுதலைப் புலிகளை எண்ணி - உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது தற்போது?

சுனிலா: ம்ம், எம்மைப் போன்ற மனித உரிமைப் போராளிகளும், சிறி லங்கப் போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண முயன்றவர்களுக்கும் - மிக மனவழுத்தம் தரும் தருணம் இது. ஏனெனில் - இந்த போர் நிகழ்ந்த முறையும், பன்னாட்டு அரசுகள் இதை எதிர்கொண்ட விதமும் - தற்போது நடப்பவையும் - ஒரு விதமான அமானுஷ்ய அமைதி நிலவும் சூழல் - உள்நாட்டிலும், வெளியிலும்; இவற்றைத் தாங்கவே முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், நான் என் வாழ்நாளில் முப்பது வருடங்களை சிறிலங்காவில் மனித உரிமை போராட்டங்களில் செலவழித்தவள். சில தருணங்கள் கையறு நிலையை உணர்ந்திருக்கிறோம் - இதற்கு முன்பே இவ்விதம் ஒருமுறை உணர்ந்ததை நான் சொல்ல வேண்டும் - எண்பதுகளில் ஏராளமானோர் சிறிலங்காவில் காணாமல் மறைந்த போழ்தில் - இம்மாதிரியான தருணங்களில் நாம் என்ன செய்தாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை என்று உணர்ந்தது - இப்போது அப்படித்தான் உணர்கிறேன்.

ஷார்மினி: இது ஒரு நீண்ட யுத்தம். சிறிலங்கா இராணுவத்தின் புலிகளைத் தோற்கடிக்கும் திட்டம் வெகு நாட்கள் கிடப்பில் இருந்த ஒன்றுதான். 2006 ஆம் ஆண்டில் நீங்கள் இது புலிகளை வெல்வதற்கான ஒரு பாய்ச்சலின் ஆரம்பம் என்று கூறியிருந்தீர்கள். இது எவ்வாறு துவங்கியது? ஏன் துவங்கியது என்று விளக்க முடியுமா?

சுனிலா: இந்த சிறிலங்க அரசு, முந்தைய எல்லா அரசுகளைக் காட்டிலும் புலிகளை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து வெளியேற்ற இராணுவத் திட்டத்தைத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை முதலில் 2006 இலும், பிறகு தற்போது முடிவடைந்திருக்கும் வன்னியிலும்.
முதலிலிருந்தே - 2006 ஆம் ஆண்டின் நடுவில் என்று எண்ணுகிறேன் - இந்த இராணுவத் தாக்குதல் குடிமக்களுக்கு நேரக்கூடிய பின்விளைவுகளையோ, குடிமக்கள் மரிப்பதைப் பற்றியோ சற்றும் பொருட்படுத்தாமல் முன்னேறப் போவதின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. வாஹரில் நடந்தேறிய 'வான் குண்டு மழை' ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் அரசு அதனை மறுத்தது. எப்போதும் போலவே. அரசு, நாட்டின் கிழக்குப் பகுதி ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் விடுவிக்கப் பட்டதாகவே எப்போதும் சொல்லி வந்தது. ஆனால், குறைந்தது நூறு பேர்கள் அந்த 'வான் குண்டு மழையில்' உயிரிழந்ததை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். இவற்றைச் சரியாகக் கணிக்காமல் விட்டதும், இம்மாதிரி நிகழ்வுகள் ஒரு விதிவிலக்குகள் என்று எண்ணி வாளாயிருந்ததும் முக்கிய விடயங்களாகத் தோன்றுகிறது.

ஷார்மினி: எதனை கணிக்கத் தவறவிட்டீர்கள்?

சுனிலா: இந்த முறை அரசின் வேறுபட்ட அணுகுமுறையை. குடிமக்கள் மாள்வது போரில் முன்னேற ஒரு தடையாக இருக்காது என்ற முடிவுடன் இந்த அரசு இருந்ததாக எண்ணுகிறேன். முந்தைய அரசுகள் ஒவ்வொரு முறையும் இனிமேல் நடவடிக்கை எடுத்தால் அது குடிமக்களை வெகுவாக பாதிக்கும் என்ற நிலையை எதிர்கொண்டபோது, இராணுவம் ஒரு அளவுக்கு மேல் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தனது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டது - குடி மக்கள் மரிக்கத்தான் செய்வார்கள். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தெளிவான திட்டத்துடன்.

ஷார்மினி: இந்த அரசுக்கு இது ஒரு புதிய துணிச்சலா? பன்னாட்டு அரசுகளின் அங்கிகாரத்துடன் அவர்கள் எண்ணுவதைச் சாதிக்கலாம் என்னும் முனைப்பு.

சுனிலா: இந்த வருடம் மார்ச் மாதம் நியூ யார்க் நகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் இருக்கையில் இலங்கையில் குடிமக்களுக்கு நேரப்போகும் நட்டம் பெருமளவு இருக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது. பல்வேறு பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளிடத்தும் நான் பேசுகையில், அவர்கள் எல்லோருமே இந்த போர் இப்படித் தான் செல்லும்; மேலும் தற்போது ஒரு சாராரே வென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். இந்த ஒரு காரணம் காட்டி, பல்வேறு உலக நாடுகளும் நம் எல்லோரையும் - தமிழர், சிங்களர், சிறிலங்காவில் அமைதியை விரும்பிய ஒவ்வொரு குடிமகன் என்று எல்லோரையும் - கைவிட்டு விட்டன.

ஷார்மினி: இத்தகைய அணுகுமுறையின் விலை மிக அதிகம் ..

சுனிலா: இந்தப் போரில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானது ஜனநாயகம் தான் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் கடந்த 3 - 4 ஆண்டுகளில் தொடர்ந்து நடந்தேறிய இராணுவத் திட்டங்களுடன் - கூடவே நடைவேறிய அரசியல் திட்டமும் - எல்லா முடிவுகளையும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு அப்பால் வைப்பதே அந்த அரசியல் திட்டம் - இன்று நம்மிடம் உள்ள பாராளுமன்றமும், அமைச்சரவையும் நாட்டில் நடப்பது பற்றி துளியும் அறிந்திராத ஒரு நிலை. அனைத்து இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்கள் ஜனாதிபதியிடம் நேரிடையாக வேலை பார்க்கும் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் பாரளுமன்ற முறைகளுக்கு அப்பாலேயே செயல்படுகின்றனர். ஆகையினால் நிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்பது, ஜனநாயக மரபுகள் போன்ற விடயங்களே இந்தப் போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு.

ஷார்மினி: இத்தகைய ஜனநாயக மரபுகள் எவை என்று சொல்ல முடியுமா?

சுனிலா: ம்ம், ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைக் கூறலாம் - கடந்த மூன்றரை வருடங்களாக இராணுவ நடவடிக்கைகள் எப்போதுமே ஜனாதிபதியின் அலுவலகத்துள் உள்ள ஒரு சிறிய சிறப்புக் குழுமத்தால் எடுக்கப்பட்டன. இந்தக் குழுமத்தை வழி நடத்துவது ஜனாதிபதியின் சகோதரரும் இராணுவ அமைச்சகத்தின் செயலாளரும் ஆக இருப்பவர். பல தருணங்களில் நாங்கள் பல அமைச்சர்களிடம் - இராணுவம் இவ்வாறு செயல் படப் போகிறது; அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தறுவாயில் உள்ளது; நீங்கள் தலையிட்டு இவற்றை நிறுத்த முடியுமா - என்றெல்லாம் சொல்கையில், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி ஒன்றும் தெரிந்து இருக்கவில்லை. அரசின் வாதம் எப்போதுமே "விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளுடன் போரிடுகையில் இந்த அணுகுறை அவசியமே' என்னும் ரீதியில் இருக்கிறது. ஆனால், என் எண்ணத்தில் இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் - எதற்கும் பதில் சொல்ல அவசியமில்லாத நிலை போன்ற பின்விளைவுகள். இதன் விளைவாக, ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ள பொது மக்கள் படுகொலைகளுக்கு இராணுவம் பொறுப்பு ஏற்காத நிலை என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. உங்களுக்குத் தெரியும் - பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளால் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று - ஆயினும், அதற்குப் பொறுப்பேற்க ஒருவரும் இல்லை. மறுப்பு ஒன்றே நாம் காண்பது. ஏனெனில் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்புக்குள் இவை நடக்கவில்லை - எங்களால் எமது கேள்விகளை எங்கே, எவ்வாறு முன்வைப்பது என்று புரியாத நிலை - பாதுகாப்பு அமைச்சகம் சென்றால் அது முழுதும் மறைக்கப் பட்டு, பூசி மெழுகப் படுகிறது.

ஷார்மினி: ஜனநாயகம் பாதிப்புக்குள்ளாவது மற்றும் ஊடகத்துறையின் பங்கு இவைகளைப் பற்றிப் பேசுகையில் ஊடகத் துறையினரும் உங்கள் போன்ற களப்போராளிகளும் வெகு காலமாக அச்சுறுத்தப் பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இத்தகைய நீண்ட வரலாற்றை அவதானித்த உங்களைப் போன்றவர்களுக்கும், மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் என்ன நடக்கிறது இங்கு?

சுனிலா: சிறிலங்க அரசு தனது இராணுவத் தாக்குதல்களுடன் கூடவே மிக வலிமையான பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளது - தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைகாட்சி, வானொலி நிலையங்கள், நாட்டு மக்களைச் சென்றடையாத நிலை - மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்தம் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இவற்றை மாசுபடுத்தி, ஊழல், பணக் கையாடல், முறைகேடுகள் என்று பலவகைகளில் இவர்களை தனிப்பட்ட முறையில் தவறாகச் சித்தரித்தல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை இவற்றை அச்சுறுத்துவதுடன் நில்லாது எந்த ஒரு அமைப்புமே சுதந்திரமாகச் செயல் பட முடியாத நிலை - பல்வேறு பொதுமக்கள் நல நிறுவனங்கள் பாராளுமன்ற உப-குழுக்கள் முன்பு தருவிக்கப் பட்டு, பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, நிதியுதவி மறுக்கப்பட்டு, பன்னாட்டு மனித நேய நிறுவங்களின் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை செய்யும் அனுமதி நிராகரிக்கப்பட்டு அல்லது தாமதப் படுத்தப்பட்டு - என்று பலவித இன்னல்கள். ஒரு திட்டமிட்ட முறையில் சமுதாயத்தின் குரலை, உரிமையை மறுப்பது என்பது நடந்திருக்கிறது. குறிவைக்கப்பட்ட தனிப்பட்டவர்களை அச்சுறுத்தல்களுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்குதல் - சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தைப் பார்த்தால் இவை நன்றாக விளங்கும் - ஏனெனில் அத்தளத்தில் பல்வேறு தனிப்பட்ட, குறிவைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி எப்போதும் கட்டுரைகள், செய்திகள் தவறான முறையில் வெளிவரும். நாங்கள் எல்லோரும் அத்தகைய தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் தாம்.

ஷார்மினி: நீங்களும் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லையா?


சுனிலா: இல்லை. நான் கடந்த வருடம் வெளியேறினேன். நான் சிறிலங்காவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் சற்றும் பாதுகாப்புணர்வுடன் இல்லை. சிறிலங்கா மாதிரியான நாட்டில் உள்ள சிரமம் என்னவெனில் எனக்கு அபாயமென்றால், அது மற்றவர்க்கும் அவ்வாறே ஆவதுதான். ஆகையால், நான் வெளியேறுகிறேன் என்று அறிவித்த போது என் அலுவலகத்திலும், என் வீட்டிலும் ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அது எவ்வளவு சோகம் - என் அன்னை இரவில் நன்றாகத் துயில வேண்டுமென்றால் நான் விலக வேண்டும் என்னும் நிலை.

Tuesday, June 16, 2009

சிறி லங்காவில் என்னதான் நடக்கிறது? - காணாமல் போகும் தமிழ் சிறார்கள்



ஈழத்தில் தடுப்பு முகாம்களின் நிலை குறித்து சுனிலா அபயசெகராவின் நேர்காணல்.

நேர்காணல் செய்தவர் டோரோண்டோவில் இருந்து வரும் ரியல் நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிக்கையாளர்.

சுனிலா நன்கறியப்பட்ட மனித உரிமை களப்பணியாளர். Information Monitor (INFORM) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர். இனப்போரில் பிளந்துபட்டு நிற்கும் சிங்கள மற்றும் தமிழ் என்று இவ்விரு இன மக்களின் மதிப்பைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் சில உச்ச விருதுகளை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் பெற்றவர்.

ஆங்கில நேர்காணலின் காணொளியை வளர்மதியின் தளத்தில் காணலாம்.

இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:

ஷார்மினி: எங்களுடன் இன்று பகிர வந்ததற்கு நன்றி

சுனிலா : இங்கு வந்ததில் மகிழ்ச்சி

ஷார்மினி : சுனிலா, ம், மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள் - ஏறக்குறைய சிறைச் சாலை முகாம்கள் என்று பலராலும் வர்ணிக்கப்படும் இடங்களில்; நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்கிருக்கும் நிலைமை என்ன?

சுனிலா : இதில் பெரிய விடயம் இம்மக்கள் பல மாதங்களாக பல அடிப்படை வசதி, உரிமைகள் மறுக்கப்பட்டு இந்த முகாம்களுக்குக் கொணரப் பட்டவர்கள் என்பதே கவனிக்கப் படவில்லை. பசியில் உணவின்றி, தாகத்திற்கு நீரின்றித் தவித்து, உடலில் திரவச்சத்து இழந்து, சீழ் பிடித்த காயங்களுடன் பலமாதங்களாக அல்லலுற்றவர்கள். அதனாலேயே அவர்களை உடனடியாகக் கவனிப்பது மிக அவசியமாகிறது. தற்போது நாம் கேள்விப்படுவது என்னவெனில் பெரும்பாலான மனித நேய நிறுவனங்களுக்கு இம்மக்களை அடைவதற்கு கட்டுப்பாடற்ற தொடர்பு அனுமதிக்கப் படாததால், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிட்டாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் 27 ஆம் திகதி வவுன்னியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி அன்றைய தினம் 14 முதியோர்கள் பசியால் இறந்ததை பதிவு செய்து, அரசை முதியோர்களைக் கவனிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஷார்மினி : பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு உட்சென்று உதவி செய்வதை அரசாங்கத்தை எது தடுக்கிறது?

சுனிலா : இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம். நாமும், இது உண்மையாக இருக்கக் கூடுமென்று ஒப்புக் கொள்கிறோம். எங்களின் எதிர்ப்பு எல்லாம் அரசு முன்வைக்கும் திட்டத்திற்கு தான்: "மக்களை முதலில் சல்லடையில் சலித்து பிறகு அவர்களை பிறர் தொடர்பு கொள்ள அனுமதிப்பது"; நாங்கள் சொல்வதெல்லாம், "அவ்வாறு மக்களை பரிசோதிக்கும் போதே அவர்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று". "அத்தகைய சோதனை, சார்பில்லாத பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்"
நாங்கள் அறிவது என்னவெனில் இந்த முகாம்கள் உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக உள்ளன. ஏனெனில் இவற்றைக் கண்காணிப்பது இராணுவம்; மக்கள் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் படுகிறது; பல வேலிகளைத் தாண்டினால் ஒழிய அங்கிருந்து விலக முடியாது; அவர்களை யாரும் வந்து பார்க்கவும் கூடாது; உப ராணுவம் எனப்படும் 'முன்னர் புலிகளுடன் இருந்து பின் பிரிந்து சென்ற' குழுக்கள், முகமூடி போர்த்திய 'தகவல் சொல்பவர்'களுடன் இந்த முகாம்களுக்குள் உட்புகுந்து, சிலரை அடையாளம் காட்டி, இந்த முகாம்களிலிருந்து வெளியே கொண்டு செல்லப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறார்கள் மணிக்வா முகாமிலிருந்து நிருங்குளம் தொழிற்கல்வி கல்லூரி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஒரு பட்டியலும் இல்லை. பெற்றோர்கள் பதட்ட நிலையில் காணப்படுகிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல் மட்டுமே. இந்த மூன்று இலட்சம் மாந்தரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்க வேண்டும்; அப்போதுதான் இது போல யாராவது ஒருவர் இந்த முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு மாற்றப்பட்டால், அதற்கு யாரேனும் பொறுப்பேற்க முடியும். தற்போது இந்தகைய பட்டியல் பதிவில் இல்லை; ஆதலால் இது போல மக்கள் திடிரென்று காணாமல் போகும் நிகழ்வுகள் நடக்கின்றன; அது எங்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது.

ஷார்மினி :பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் இதனுட்சென்று உதவி செய்யத் தயாராக உள்ளனவா?

சுனிலா : ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகமும் (UNHCR) மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) இத்தகைய மேற்பார்வையிடுதல், பதிவு செய்தல் போன்ற பணிகளில் திறமை படைத்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் ஈடுபட அனுமதி இல்லை.

ஷார்மினி : காணாமல் போய்விடுவோர் பற்றி - உறுதியான தகவல்கள் ஏதாவது கேள்விப் படுகிறீர்களா?

சுனிலா : இந்த முகாம்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு - காணாமல் போனவர்கள் - எங்களால் அதனைக் கனானிக்க இயலாத சூழல் - சிறி லங்கா அரசு புலிகள் என்று சொல்லப்படும் 10,000 பேர்கள் சரணடைந்து, தங்கள் தடுப்பு முகாம்களில் இருப்பதாக ஒப்புக் கொள்கிறது. அவர்கள் யாரென்று தெரியவில்லை; அவர்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் இல்லை. உங்களுக்கே தெரியும் எத்தனை பேர் இறுதி தினங்களில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள் என்று; புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் துணைவியரும், குடும்பத்தினர்களும். ஒரு உதாரணத்திற்கு சூசை அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் சிறி லங்க கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இப்போது தெரியாது. ஆதலால், இது போன்ற குறிப்பிட்ட விடயங்களிலாவது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் அறிய முயல்கிறோம். ஆயினும், அது முடியாத காரியமாகவே உள்ளது.

ஷார்மினி : இந்தத் தடுப்பு முகாம்களில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி - அபு கரிப் (ஈராக்) சிறையில் நடந்தேறியது போல - செய்திகள் வருகின்றன. நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்?

சுனிலா : உங்களுக்கே தெரியும் - சிறி லங்கா உளவுத்துறையின் சித்திரவதை சிறப்புகள் பற்றி - ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குனர் மால்ஃபாய் டோவக் அவர்களின் 2007 இல் நடந்த சிறிலங்க விஜயத்தின் போது அளித்த அறிக்கை அப்போதிருந்த நிலைமை பற்றி மோசமாக விமர்சித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசர நிலை சட்டம் - இவற்றின் அடியில் பிடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல - சாதாரண சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கூட - அவதிப் பட்டார்கள். சித்ரவதையை விடுங்கள் - கும்பலாக அடைத்தல், மருத்துவ வசதி தராமல் இருத்தல் மற்றும் அடித்து, பானைத் தண்ணீர் சித்ரவதை - இப்படி நிறைய கேள்விப்பட்டோம். இத்தகைய சித்ரவதைக்குள்ளான ஏராளமானோர், கனடா, யு.எஸ். மற்றும் யு.கே. ஆகிய நாடுகளில் தஞ்சம் புகும்போது அளித்த ஆவணங்களில் இது பற்றி சொல்லியிருக்கிறார்கள். இந்த தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகள் பற்றி போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றே சொல்வேன்.

ஷார்மினி : தற்போது சிறிலங்கா அரசின் மீது எத்தகைய அழுத்தம் கொடுக்க இயலும்? யாரால் தர இயலும்?

சுனிலா : தற்போதைய நிலையில் உலக நாடுகள் செய்யக்கூடியதெல்லாம் சிறி லங்கா அரசை இந்த தடுப்பு முகாம்களை அணுகுவதற்கு உள்ள தடைகளை நீக்கவும், முகாம்களில் அடைபட்டிருப்பவர்கள் விவரங்கள், முகாம்களில் இடம் பெயர்க்கப்படப் போகிறவர்களைப் பற்றிய விவரங்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துப் பதிவது - இவைகளைக் கோருவது தான்; இவைகள் மிக அடிப்படையான தேவைகள் மட்டுமே - புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவேயில்லை என்று நாங்கள் சொல்லவில்லை; அவர்களைப் போக விடுங்கள் என்று சொல்லவில்லை; நாங்கள் சொல்வதெல்லாம், ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அதனை எல்லோரும் அறியச் செய்யுங்கள்.
இறந்த ஒவ்வொருவருக்கும் - சமீபத்தில் நடந்தேறிய ராணுவத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது - சுமார் 20,000 பேர் என்று செய்திகள் வந்தாலும், அரசு இதனை மறுக்கவே செய்கிறது - இறந்த ஒவ்வொருவருக்கும் கனடா, யு.கே., ஜெர்மனி, பிரான்ஸ் இந்த நாடுகளில் உறவினர் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பாட்டி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன் என்று உறவு முறைகள் காணாமல் போய்விட்ட, இறந்து விட்ட நிகழ்வுகள் உள்ளன. இந்த புலம் பெயர்ந்த தமிழின மக்களுக்காகவேனும் சிறிலங்கா அரசின் மனிதாபிமானமற்ற செயலான உண்மை நிலையை மறுத்தல் என்பது மாற வேண்டும் - இவர்கள் முகாம்களிலோ, வைத்திய சாலைகளிலோ, சிறைகளில் அடைக்கப்பட்டோ இருக்கிறார்கள் - இந்த மூன்றிலும் இல்லை என்றால் அவர்கள் இறந்தவர்கள் - என்று தெரிய வேண்டும். நமக்குத் தெரிய வேண்டும்; மக்களுக்குத் தெரிய வேண்டும்; இதுவே சிறிலங்கா தமிழர்களுக்காக பன்னாட்டு அரசுகள் செய்யக்கூடிய செயலாகும்.

ஷார்மினி : யாரந்த பன்னாட்டு சமூகம்? சிறி லங்கா அரசின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நிறுவனங்கள் அல்லது நாடுகள் எவை?

சுனிலா : சீனா, ஜப்பான், பிரேசில், தென் ஆப்பிரிக்கா. இந்த நான்கு நாடுகள் குரல் கொடுத்தால் - மனிதாபிமான கொள்கைகளுக்காக, முகாம்களுக்குத் தடையற்ற அணுகுமுறை, முகாம்களில் உள்ளோரின் மொத்தப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்கள்.

ஷார்மினி : ஏன் இந்த நாடுகள்?

சுனிலா : சிறி லங்கா அரசுடனான இவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்காக - அமெரிக்க, கனடா, ஐரோப்பா இந்த இடங்களிலிருந்து வரும் அழுத்தங்களை சிறி லங்கா அரசு எதிர்க்கிறது - ஏகாதிபத்திய அரசுகளின் காலனிய சதி என்ற ரீதியில் - ஆனால் - இந்த நான்கு நாடுகள் தென்பிராந்திய சக பயணிகள். நீங்கள் அறிவீர்கள் - சீனா சிறிலங்காவில் கணிசமான முதலீடு செய்திருக்கிறது; சிறிலங்கா அரசுக்கு ஏராளமான கடன் வசதிகளும், நிதியுதவி உறுதிமொழிகளும் சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. பிரேசில் நாட்டவர்களுக்கும் தென்பிராந்திய, அணி-சேரா நாடுகளிடையே மதிப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சிறி லங்கா - தென் பிராந்திய ஜனநாயகங்களின் ஒரு பிரதிநிதியாகவே நோக்குகிறது. ஆகையால், இந்த நாடுகளுக்கு இத்தகைய ஆளுமைகள் உள்ளன. இருப்பினும் அவர்கள் இந்த நிலையை இவ்வாறு புரிந்து கொள்ளாதது சோகமே. இவற்றைச் செய்வதால் இந்த நாடுகளுக்கு ஒன்றும் நட்டமில்லை.

பின் குறிப்பு: சில பெயர்கள்/இடங்கள் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமையால் தவறாக இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. சுட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

Friday, June 12, 2009

ஹரி அ . ரி அ. . . . ரி

டிராலியில் தள்ளியவாறே தாய்லாந்து அழகி 'உங்கள் உணவு. மகிழ்வுடன் சாப்பிடுங்கள்' என்றாள்.

"ஹாய், இது அசைவம் போலத் தெரிகிறது - நாங்க வெஜிடேரியன்ஸ்' - ஹரி.

"ஓ, வெரி சாரி. வெஜிடேரியன் தருகிறேன்" என்றவள் திரும்ப அதே பிளாஸ்டிக் புன்னைகையுடன் இரண்டு தட்டுகளை நீட்டினாள்.

இப்போது உமா 'மேம், இதுவும் அசைவம்தான். ஆயிஸ்டர், நண்டு மற்ற கடல் உணவுகள் எல்லாம் எங்களுக்கு வெஜிடேரியன் இல்லை' என்று பதட்டமானாள்.

அப்புறம் அந்த அழகி உம்மென்று வைத்த காபேஜ் இலைகளையும், பெயர் தெரியாத தழைகளையும் மென்று, அதை மறக்க ப்ளாக் காபி குடித்து கண்ணயர்ந்தனர்.

தூங்கும் அவர்களைப் பற்றி:
ஹரி - உயரன். மாநிறன். பொறியியல் படிப்பு. நீங்கள் இப்போது யூகிக்கக் கூடிய கணினி மென்பொருள் துறைதான். இந்தியாவின் ஏழாவது பெரிய நிறுவனத்தின் பல சாமர்த்திய இளைஞர்களுள் ஒருவனாக, நிறைய சம்பளம், நிறைய பயணம், நிறைய எல்லாவுடன் இருந்தவன்…ப்பவன்... க்கப் போகிறவன்?

உமா : அழகி. படிப்பில், செல்வத்தில் ஹரியைவிட கொஞ்சம் அதிகம். பொறியியலுக்குப்பின், மேலாண்மை படித்து, ஐரோப்பிய நிறுவனமொன்றின் இந்திய கிளையில் முக்கிய வேலை.

இவனுள் ஒளிந்திருந்த வடக்கும், அவளில் மறைந்திருந்த தெற்கும் ஈர்க்கப்பட்டு, பிரிக்க முடியாத காந்தமாகி, காதலாகி, கசிந்து...சரி கல்யாணமும் ஆகி விட்டது - அறுபது நாட்களுக்கு முன். சம்பிரதாய தேன்நிலவு, குலதெய்வ சமாசாரங்களை முடித்துக் கொண்டு ஒரு வழியாக ஆபிஸ் போவதே நிம்மதி என்று தோன்றத் துவங்கியது. அமெரிக்கா, யு.கே. என்று ஜொலித்துக் கொண்டிருந்தவனை ரிசஷன் புயல் கிழக்கு ஆசியாவுக்குத் தள்ளி, பள்ளி புவியியல் பாடங்களில் கூட படித்த ஞாபகம் இல்லாத தேசங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். பத்து நாட்கள் மணிலா, ஒரு வாரம் ஜாகர்த்தா, இரண்டு வாரம் பூசன் (கொரியா), ஒரு வாரம் பாங்காக் என்று தென்கிழக்கு ஆசியாவில் மையம் கொண்டான். மாத இறுதிகளில் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொரு வார இறுதியையும் கொண்டாடினார்கள் - ஒன்றாக.

இவர்கள் உரையாடல், சுமார் பன்னிரெண்டாயிரம் அடி உயரத்தில், பாங்காக்கிலிருந்து காத்மாண்டு செல்லும் விமானத்துள் நடந்தது. ஒரு வாரம் காத்மாண்டு மற்றும் டெல்லி பார்ப்பதாகத் திட்டம். விமானம் டேக்-ஆப் ஆகி ஐம்பது நிமிடங்கள் ஆகி இருந்தது. பிசினஸ் கிளாஸ். போன வாரம் வரை உறுத்திய வள்ளியூரின் குப்பைத் தெருக்கள், மும்பையின் தாராவிச் சிறுமிகள், தேர்தல் அரசியல், பிரபாகரன் எல்லாவற்றையும் மறந்து, உயரே, உயரே...வேறு ஒரு பதப்படுத்தப்பட்ட உலகுள்.. அவனுக்குள் உமா மற்றும் உமா மட்டுமே.

திடீரென்று விமானத்தில் ஏதோ இடித்த சத்தம் மற்றும் அதிர்வு. சில நொடிகளில் விமானம் வலது பக்கமாகவும், பின்நோக்கியும் பாய்ந்து விழத் துவங்கியது. பயணிகளின் பயக்கூச்சலில் விமான ஓட்டி அறிவித்த குழப்ப ஆங்கிலம் யாருக்கும் கேட்கவில்லை. உமா, ஹரியின் கழுத்து, கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். ஹரியும் பீதியில் கண்ணை மூடி மூடித் திறந்தான். எத்தனை வினாடிகள்? நிமிடங்கள்? மணிகளா? பல கொடூர யுகங்களுக்குப் பின் விமானம் பெரும் பாறையில் மோதி மூன்றாக உடைந்து சிதறியது. நிசப்தம் நிசப்தம்.

மீண்டும் பல யுகங்களுக்குப்பின் உமா கண் திறந்தாள். இருட்டாக இருந்தது. ஒரு குழாய் போல, அதன் முடிவில் வெளிச்சம் கசிந்தது. முழங்காலும், வலது தோளும் நகர்த்த முடியாமல் வலித்தது. கருவெளிச்சம் பழகிய பின் பார்வையால் துழாய்ந்தாள். தான் விமானத்தின் உடைந்து சிதிலமாகிவிட்ட நடுப்பகுதிக்குள் இருப்பதைக் கண்டாள். சில அடிகள் தள்ளி ஒரு கையும், மடங்கிய உடலும் தெரிந்தது. மெல்ல ஊர்ந்து அருகில் சென்று பார்த்தால்...ஹரி. கண் மூடி இருந்தது.

மூழ்கிக்கொண்டே அவளும் நினைவிழந்தாள். யாரோ உலுக்கிவிட்டபோது மெல்லக் கண் திறந்தாள். ஹரியும், இன்னும் இருவரும் அவளைத் தூக்கிக்கொண்டு, வெளிச்சம் நோக்கி நகர்ந்ததை அவளால் முற்றிலும் உணர முடியவில்லை.

'உயிரோடு இருக்கிறேனா - இல்லை இறந்து விட்டேனா? என் இவ்வளவு அமைதி? ஆனால் வலி இருக்கே? - இல்லை இது ஏதோ கொடுங்கனவு. எப்போ தூங்கினேன். விமானம் லேண்ட் ஆகிவிட்டதா' என்று கால் வினாடியில் நூறு கேள்வி-பதில்கள் தோன்றி மறைந்தன.

அவர்கள் விமானம் நொறுங்கியிருந்தது இமாலய பனிச்சிகரங்களில் ஒன்றில். நொறுங்கியது அதிகாலைப் பொழுது. இப்போது எங்கும் கண்ணைக்கூசும் ஒளி, மெல்லப் பரவாமல், திடீரென்று அடித்தது. இந்த நால்வரும் மிக அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பிழைத்திருந்ததை உணர்ந்தார்கள். அதீதக் குளிராக இருந்தது. விமானத்தின் நடுப்பாகம் இன்னும் முற்றிலும் உடையாமல், ஒரு பெரிய குழாய் வடிவில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது.

அந்த மங்கோலியர்கள் பெயர் டானி மற்றும் ஜிங் என்று ஓரளவு புரிந்து கொண்டார்கள். இப்போது பெயரா முக்கியம். டானிக்கு கணுக்காலில் உதிரம் சிந்தியது. ஜிங் முகம், மற்றும் இடுப்புப் பகுதியில் ஒரே இரத்தம். ஹரியின் தாடை, பின்னங்கால்கள், கழுத்து என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் இரத்தம் மற்றும் வலி. டானியும் ஜிங்கும் இயல்பு நிலைக்கு வந்து, விமானத்துக்குள் இருந்தவற்றைத் துழாவ ஆரம்பித்தார்கள். உமாவால் தானாக நகர முடியவே இல்லை. அவளைத் தன் மடியில் கிடத்திய போதுதான் ஹரி அவள் பின்தலையில் இரத்தம் கசிந்து பிசுபிசுப்பதைக் கவனித்தான். சிதில பாகத்துக்குள் நசுங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள், போர்வைகள் இருந்தன. சீட்டுகளைக் கிழித்து அரைகுறையாகப் பனிச்சப்பாத்து (ஷூஸ்) செய்தார்கள். தாகம் இருந்ததால் பனிக்கட்டியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் வரத் துவங்கியது.

ஜிங்கின் கைக்கடிகாரம் மட்டும் அதிசயமாக ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலை 10 மணி என்றது. அதிர்ச்சி போய், 'அடுத்து என்ன' என்ற கேள்வி உமா தவிர மற்ற மூவருக்கும் தோன்ற ஆரம்பித்திருந்தது. உமா இலேசாக முனகியபடி இருந்தாள். ஹரி அவள் பின்மண்டையில் கைவைத்து, இன்னமும் இரத்தம் கசிவதில் திகில் ஆனான். டானி ரோந்து பார்க்கும் விமானம் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்து, கூட்டிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மதியம் அடித்த வெயிலில் பாட்டில்களில் போட்டிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஓரளவு அவர்கள் தண்ணீர் குடித்தார்கள். சாப்பிட வேறு எதுவும் இல்லை. இப்போது உமா முற்றிலும் சுயநினைவில்லாமல், மயங்கி, ஹரியின் மடியில் படுத்திருந்தாள்.

இரவு வந்தது. விமான சிதிலத்துக்குள், போர்வைக்குள் தஞ்சமானார்கள். டானியும், ஜிங்கும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹரி.

"ஒரே பசி. நாளை என்ன செய்வது"

"நீராகாரம்தான்"

"எத்தனை நாள்"

"சாகும்வரை"

"........."

ஹரி அயர்ச்சியில் தூங்கி விட்டான்.

மறுநாள் மதியம், சுற்றுப்புற வானம், மற்றும் பனிச்சிகரங்களில் என்னமோ சொல்லமுடியாத மாற்றம் சடுதியில் ஏற்பட்டு, இவர்களை நோக்கி ஒரு பெரிய பனிமலை அலைபோல பாய்ந்து வந்து கொண்டிருந்தது. இவர்கள் சுதாரிக்கும் முன்பே நால்வரையும் அடித்துச் சென்று எங்கெங்கோ தூக்கிப் போட்டது. அவ்வளவு சருக்கலிலும் தன் மடியிலிருந்த உமாவை வெகுநேரம் உடும்புப் பிடியாக ஹரி பிடித்திருந்தாலும், கடைசியில் இருவரும் பிரிந்து விழுந்து கிடந்தார்கள். டானி, ஜிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

வானம், மலை எல்லாம் இருட்டி விட்டிருந்தது. பின்னிரவில் ஹரி முழித்துக்கொண்டான். விலா எலும்புகள் ஒடிந்திருக்க வேண்டும். உமாவை நினைத்தான். அழுகை வந்தாலும், கண்ணீர் வரவில்லை. மிகுந்த தேக, மன வலியுடன் உறங்கி விட்டான். காலை மீண்டும் பனிமலைகள் நேற்றைய கோரத்திற்கு தாங்கள் பொறுப்பில்லை என்பதுபோல் மெளனமாக இருந்தன. எப்படி விழித்தான், எழுந்து நின்றான், நடக்கத் துவங்கினான் என்று தெரியாது. கிட்டத்தட்ட மாலைவரை மெல்ல மெல்ல நடந்து அவ்வப்போது பனிக்குள் துழாவி, மனைவியைத் தேடினான். விடாமுயற்சி வினையாக்கியது. அவளுடைய பச்சை நிற ஸ்வெட்டர் காற்றில் அசைந்ததில் கண்டுபிடித்தான். ஒரு கால் மடங்கி, மற்றொரு கால் வினோத கோணத்தில் படுத்திருந்தாள். தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று அமர்ந்தான். முகத்தின் பொலிவு அவனை பயமுறுத்தியது

மிகுந்த சிரமத்துடன் வெகு நேரம் அவள் நாசியில் கையையும், இதயத்தில் தன் வலது காதையும் வைத்து அவள் உயிரைக் கூப்பிட்டான். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவளின் வலியற்ற, சோபையான வதனம் அவள் அவனை விட்டுப் போய் விட்டதைச் சொன்னதைப் புரிந்துகொண்டான். ஏனோ அழவில்லை. திடீரென்று மிகவும் பசியும், தாகமுமாக உணர்ந்தான்..

இப்போது அவளைப் பக்கத்தில் கிடத்தி தன் உலர்ந்த உதடுகளால் அவளின் காய்ந்த அதரங்களை முத்தமிட்டான். பின்பு பக்கத்தில் படுத்துக்கொண்டான். சிறு உறக்கத்துக்குப் பிறகு மெல்ல பனித்துகள்களை அப்புறப்படுத்தி பள்ளம் தோண்டினான். உமாவுக்கு நோகாமல் மெல்ல, மிக மெல்ல, ரத்தம் உறைந்திருந்த அவள் பின்தலை படாதவாறு இலேசாக அவளைப் பள்ளத்தில் கிடத்தினான். பள்ளத்தை மூடி, நடக்கலானான். சில நூறு அடிகளில் பெரும் பாதாளம் தெரிந்தது. மற்றொரு பக்கம் செங்குத்தாக, ஒரு பெருஞ்சுவர் போல மலை எழும்பி இருந்தது. உடல், மனது எல்லாம் குறுகி, சுருங்கி, ஒரு புள்ளியாகி, மீண்டும் உமா இருந்த இடத்திற்கு வந்து, மயங்கி விழுந்தான்.

**********

ஆறு மாதம் கழித்து வீட்டுக் கதவைத் தட்டிய நேஷனல் ஜியாகிரபி ஆட்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து அவர்கள் அவன் தப்பித்து வந்த சாகசக் கதையை அவனே சொல்வதைப் படம் பிடித்தார்கள். அவர்களின் வழக்கமான, 'ஏன், எதற்கு, எப்படி' எல்லாவற்றுக்கும் ஞாபகத்திலிருந்து பதில் கொடுத்தான். காமெரா அவனை எண்களாக்கியது.

"உங்கள் வலது கையின் சுண்டு விரலும், மோதிர விரலும் ....."

"ஹ்ம்ம்.. வேண்டாம் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை"

தொகுப்பாளினி "பனிக்கடியில் இரு விரல்கள் இழந்த கை” என்றபோது, காமெரா zoom ஆனது.

இரண்டு வாரம் கழித்து ஒரு சனி இரவில் மூடிய அவன் அறையில் இந்த உரையாடல்:

"இன்று என்ன?"

"முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"

சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....

மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்.

கைலாசத்தில் புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Tuesday, June 9, 2009

ஒரு உரையாடலும் பதிவுலகும் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (9th June '09)

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் மின்னஞ்சலில் ஒரு உரையாடல்:

நான் : என்னப்பா, லக்கி 25-30 நிச்சயம் என்கிறார். இட்லி வடையும் அதேதான் சொல்றாரு. ஆனா, அம்மாவுக்கு அவ்வளவு கிடைக்கும் என்கிறார்.

அவர் : சான்சே இல்ல. தி.மு.க.கூட்டணி குறைஞ்சது 25.

நான் : நீங்க என்ன தி.மு.க.வா? இதுவரை நடுநிலை ஆசாமிகள் யாரும் தி.மு.க.வுக்கு இவ்வளவு கிடைக்கும்னு சொல்லவே இல்ல?

அவர் : உண்மைய சொன்னா உங்களுக்கு அப்படித் தெரியுது. ரிசல்டு வரட்டும்.

நான் : அப்படியில்ல. பலமான கூட்டணி. ஈழ அதரவு. அதனால எனெக்கென்னவோ இது ஒரு 20-20 மேட்ச் தான்னு தோணுது.

அவர் : பாப்போம்.

தேர்தல் முடிவு தினம்; காலை எட்டு மணி.

என் அலைபேசி ஒளிர்கிறது. அவரேதான்.

"ஹலோ, பாத்தீங்களா ரிசல்ட்ட?"

"இன்னும் சரியா தெரியலியே"

"தி.மு.க. அமோக வெற்றி. வை.கோ., பா.ம.க., இளங்கோவன், தங்கபாலு எல்லாரும் தோல்வி முகம்."

"வாவ். சூப்பர். நா அப்பவே சொன்னேன்ல. நா நினைத்த மாதிரியே, லக்கி சொன்ன மாதிரியே இவ்வளவு ஸ்ட்ராங் ஃ பெர்பார்மன்ஸ்.

அந்தப் பக்கம் பல் கடிக்கப்படும் சப்தம் கேட்டது. லைன் கட்..

இதற்கு மேல் அந்தப் பதிவரை மரியாதையுடன் விளிக்க முடியவில்லை. கொலை வெறியில் எனக்கு ஃபோன் பண்ணி உசுப்பேற்றிய புண்ணியவான் நம் எல்லோருக்கும் சகா தான்.

இப்போது வெற்றி நடை போடும் 32 கேள்விகள் குசும்பன் மூலம் என்னையும் தீண்டினாலும், நான் பங்கேற்க விருப்பமில்லாததை அவரிடன் சொன்னவுடன், பெரிது படுத்தாமல் 'லூஸ்ல விடுங்க' என்ற பெருந்தன்மைக்கு ஒரு நன்றி. எனக்குப் பொதுவாகவே இந்த me-me களில் அலர்ஜி. அதாவது 'நான் தனி' என்ற அகந்தையினால் இருக்கலாம்; அல்லது 'இதுவரை சொன்னதை விட நாம என்ன புதுசா சொல்லப் போறோம்' என்ற அடக்கமும் இருக்கலாம். இரண்டும் சந்திக்கும் ஒற்றைப்புள்ளியில் (ஆஹா, என்ன ஒரு பி.ந.நடை) இது வந்ததால், மறுத்து விட்டேன்.

அத்திரி நான் அறிந்தவரை ஒரு innocent kid. அவருக்குக் கோபம்/வருத்தம் என்றால், அதனை வெறும் சாமர்த்திய வார்த்தைகளால் மட்டும் எதிர்கொள்ளாமல் ஏன் அந்தக் கருத்து நிலவுகிறது என்று எல்லா பிரபலங்களும் எண்ணிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால், அத்திரி வலையுலகில் நிறைய பதிவர்களின் வருத்தத்தை ஒரு பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது போல எனக்குப் படுகிறது. ஆதியோ, கேபிளோ தவறு செய்ததாக எனக்குத் தோன்றாவிட்டாலும், ஒரு சுய சோதனை எல்லாருக்கும் நலம் பயக்கும். அதே சமயம், எல்லோரும் பொதுவாக சுட்டிக்காட்டும் 'குரூப்' மனப்பான்மை உண்மை என்றாலும் அதில் என்ன தவறு என்று புரியவில்லை. நான் கவனித்து வந்ததில், தண்ணீர் தனது நிலையை நாடுவது போல, ஒவ்வொரு பதிவரும் தனக்கு ஒத்திசையில் உள்ள சக பதிவர்களுடன் நட்பை நாடுவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. அலைவரிசைகள் வேறானால் சற்று சிக்கல் ஏற்படுகிறது.

சுவாரஸ்ய ஆட்கள் மற்ற சுவாரஸ்ய ஆசாமிகளுடனும், இலக்கியவாதிகள் சக ஹிருதயர்களுடனும், பெண் பதிவர்கள் ஏனைய பெண் பதிவர்களுடனும், கவிஞர்கள் பிற கவிஞர்களுடனும், மிக முக்கியமாக மொக்கைவாதிகள் எல்லா மொக்கைவாதிகளுடனும் ஒரு குழுமமாக செயல் படுவதை ஒரு ஒப்புக்கொள்ளக் கூடிய இயல்பாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

ரொம்ப சீரியசாகப் போகிறதா? சமயம் கிடைக்கும் போதெல்லாம் வண்ணதாசன் படிப்பதில் கொஞ்சமாவது உங்களுக்கு கொடுக்க வேண்டாமா? அய்யனாருக்கு (நம்ம அய்ஸ் இல்ல) எழுதும் கடிதத்தின் நடுவே இப்படி சில வரிகள்:

"சுஜாதாவை நான் பார்த்ததில்லை என்று சத்தியம் பண்ணினால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். சிரிப்பது சௌகரியமான பதிலாக இருக்கிறது. சுஜாதா பற்றி ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டிய அளவுக்கு தற்காலத் தமிழ் உரைநடையில் அவருக்கு தாக்கம் இருக்கிறது. மிகச்சிறிய ஆயுதங்களுக்கு மிக நுட்பமான சாணை பிடிக்கிற காரியத்தை அவர் செய்திருக்கிறார். தோட்டக் கத்திரியால் மீசை வெட்டிக்கொண்டிருந்த உரைநடையின் பெருவிரலிலும், சுட்டு விரலிலும் சின்னஞ்சிறிய கத்திரியைக் கொடுத்து டிரிம் பண்ணினார். தமிழ் மீசைகள் ஒத்துக்கொள்ளாது போனாலும், கன்னம் இழைக்கிற தமிழ் மீசையின் இளங்காதலிகள் இதை ஒத்துக் கொள்வார்கள், அந்தரங்கமாகவேனும்.”

வண்ணதாசனுக்கு நன்றி. அவர் சொல்வது சரியா என்று பார்ப்போம் - இப்போது சுஜாதா:

உரைநடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச் சிக்கலாக எழுதுகிறார்கள்.அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்துப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது. என்னைச் சராசரிக்குச் சற்று மேற்பட்ட வாசகனாகக் கொள்ளலாம். எனக்குப் புரியவில்லை என்றால், புரிவது கஷ்டமாக இருக்கிறது என்றால் இது யார் தவறு?

உதாரணம் சொல்கிறேன்: "இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்து இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள எல்லைகளிலிருந்து பிய்த்து எடுக்கப் பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணத்திலிருந்து அது இலக்கியத்தைச் சார்ந்த எல்லையாகி விடுகிறது."

இந்த வாக்கியம் ஒரு தீவிரமான பத்திரிகையில் சமீபத்தில் வெளியானது. அதை எழுதியவர் தீவிரமான ஒன்றைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் விஷயம் பஞ்சு படிந்து வாக்கியச் சிக்கலில் தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு இருக்கிறது. நத்தை போல் தொட்டால் உள்ளே போய்விடுகிறது. இந்தத் தீவிர எழுத்தாளர்களைவிட, "அடேய், பக்கெட் சாம்பார்" என்று நேர்முகமாகத் தாக்கும் 'சவுக்கடி' போன்ற பத்திரிகைகளின் வசன நடை மேல் என்று தோன்றுகிறது.

இன்னொரு தருணத்தில் இப்படி: ‘புதுக் கவிதை இப்போது இயக்க ரூபத்துக்கு வந்து விட்டது. 'கணையாழி' ஆசிரியர் ஒரு வருசத்துக்கு கவிதை சேர்ந்து விட்டது என்னும்போது சற்று பயமாகக் கூட இருக்கிறது. அதற்கு ஒரு காரணம் தபால் கார்டு .... சட்டென்று பத்து பைசா கொடுத்து வாங்கி ...
"தமிழக அரசு
ரூட் நம்பர் 21 இல்
அவளைப் பார்த்தபோது
அவள் உதட்டின் மேல்
மெலிதான மீசை"

என்று அந்த பஸ்சிலேயே எழுதிவிட்டு அருகில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்துவிடும் சௌகரியம் அதில் இருக்கிறது..’

சமீபங்களுக்குச் செல்வோமா?

படைப்புகள் ஆ.வி.யில் வரும் புண்ணியம் செய்தவர்கள்: வெண்பூ, கேபிள் சங்கர், ஆதி, ஜ்யோவ்ராம் மற்றும் வழக்கம் போல் நர்சிம். அனைவருக்கும் பாராட்டுகள்.

உயிரோசை, வார்த்தை, நவீன விருட்சம் போன்ற இலக்கியப் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவரும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்கள் நமக்கு பரிச்சயமான அக நாழிகை, யாத்ரா, லாவண்யா, முத்துவேல், நந்தா, மண்குதிரை, சேரல், பிராவின்ஸ்கா , ஆதவா, முத்துராமலிங்கம். இவர்கள் எல்லோருமே அவ்வளவு நன்றாக எழுதுகிறார்கள்.

பிரபல கவிதைகள்: யாத்ராவின் 'திருவினையாகாத முயற்சி' மற்றும் ஜ்யோவின் 'காற்றில் படபடக்கும் பக்கங்கள்'. யாத்ரா கவிதைக்கு அக நாழிகையின் பின்னூட்டம் சிறப்பு. ஜ்யோவ் கவிதை, அதைச் சிலாகித்த பை.காரன் பதிவு, அதைப் பகடி செய்த வளர் பதிவு, இவை அனைத்திலும் வந்த பின்னூட்டங்கள் அட்டகாசம்.

பரபரப்பு: 'உரையாடல்' அமைப்பு நிகழ்த்தும் சிறுகதைப் போட்டி. சாட்டிலும், மின்னஞ்சல்களிலும் கதை/கருத்துப் பரிமாறல்கள். இதுவரை கருத்து கேட்டு என்னிடம் பதினேழு கதைகள் வந்திருக்கு. ஒவ்வொரு கதையின் ஒரு பத்தியை வெட்டி, ஒட்டி ஒரு புது கதை நானே தயாரித்து வைத்திருக்கிறேன். மிகப் பிரமாதமான பின் நவீனக் கதையாக உருவாகியிருக்கிறது. உண்மையிலேயே பன்முகம் தெரிகிறது. மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அதை அனுப்பப் போவதில்லை.

பெரிய ஆச்சரியம்: பிரபாகரன் பற்றிய என் பதிவுக்கு ஒரே நாளில் சுமார் 900 ஹிட்ஸ் வந்தது. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் ஹிட்ஸ் நிறைய இருந்தன. இப்போது ஜுரம் முற்றிலும் வடிந்து, சகஜ நிலை திரும்பி, ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே இது வரை வந்த பதினான்கு பேருக்கு வணக்கம் சொல்லுகிறேன்.

ஏமாற்றம் : ஒரு வருடத்தில் ஒரு முறைகூட சூடான இடுகை இன்ன பிற என்று தமிழ்மணத்தின் இடது பக்க சமாச்சாரங்களில் என் பெயர் வராமல் இருந்த பெருமை, பிரபாகரனால் பாழாகிவிட்டது. வாசகர் பரிந்துரை/சூ.இடுகை எல்லாம் ஏதோ கெட்டவர்கள் பிரபலத்துகாகவோ அல்லது பிரபலங்கள் கெட்டதற்காகவோ செய்யும் காரியங்கள் என்று பொறாமையில் இருந்தேன். வெறும் நான்கு தினங்கள் நல்லவனாகி, மீண்டும் இப்போது பொறாமை வந்து விட்டது.

படபடப்பும் நிம்மதியும்: நண்பனின் உறவினர் குழந்தைக்கு உடல் நலம் பாதித்து, கொஞ்சம் சிக்கல் என்று முதலில் சொல்லப்பட்டதும், சரியான சிகிற்சை, நிறைய பேரின் பிரார்த்தனைகள் மூலமும் அது எல்லாம் சரியாகி இப்போது குழந்தை போகோ சேனல் பார்ப்பதும்.

Monday, June 1, 2009

வேகமுள்


கடைசியில் உட்கார்ந்தவள்
ஐந்தாண்டுத் திட்டம் தீட்டி
வீடு கட்டிக் கொண்டிருந்தாள்
முன்னாலமர்ந்து ஒட்டியவன்
பிரிந்த காதலியை எண்ணிப்
பின்னால் சென்று கொண்டிருந்தான்
நேற்றைய வீட்டுப்பாடத்திற்கும்
நாளைய மாதத் தேர்வுக்கும்
இடையில் அமர்ந்து
சிக்கிக்கொண்டிருந்த மகள்;
பெட்ரோல் டேங்க் மேலமர்ந்து
நிலாவுடன் பேசி வரும் மழலை;
இவர்களின் கால, தூர பரிமாணங்களைத்
துல்லியமாய்க் கணிக்கவியலா
வேகம் காட்டும் முள்
பௌதீக சராசரியாக
'அறுபது' என்றது.


('மனிதம்' ஏப்ரல் 2009 மின்னிதழில் பிரசுரம் ஆனது)