Tuesday, June 16, 2009

சிறி லங்காவில் என்னதான் நடக்கிறது? - காணாமல் போகும் தமிழ் சிறார்கள்



ஈழத்தில் தடுப்பு முகாம்களின் நிலை குறித்து சுனிலா அபயசெகராவின் நேர்காணல்.

நேர்காணல் செய்தவர் டோரோண்டோவில் இருந்து வரும் ரியல் நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிக்கையாளர்.

சுனிலா நன்கறியப்பட்ட மனித உரிமை களப்பணியாளர். Information Monitor (INFORM) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர். இனப்போரில் பிளந்துபட்டு நிற்கும் சிங்கள மற்றும் தமிழ் என்று இவ்விரு இன மக்களின் மதிப்பைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் சில உச்ச விருதுகளை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் பெற்றவர்.

ஆங்கில நேர்காணலின் காணொளியை வளர்மதியின் தளத்தில் காணலாம்.

இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:

ஷார்மினி: எங்களுடன் இன்று பகிர வந்ததற்கு நன்றி

சுனிலா : இங்கு வந்ததில் மகிழ்ச்சி

ஷார்மினி : சுனிலா, ம், மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள் - ஏறக்குறைய சிறைச் சாலை முகாம்கள் என்று பலராலும் வர்ணிக்கப்படும் இடங்களில்; நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்கிருக்கும் நிலைமை என்ன?

சுனிலா : இதில் பெரிய விடயம் இம்மக்கள் பல மாதங்களாக பல அடிப்படை வசதி, உரிமைகள் மறுக்கப்பட்டு இந்த முகாம்களுக்குக் கொணரப் பட்டவர்கள் என்பதே கவனிக்கப் படவில்லை. பசியில் உணவின்றி, தாகத்திற்கு நீரின்றித் தவித்து, உடலில் திரவச்சத்து இழந்து, சீழ் பிடித்த காயங்களுடன் பலமாதங்களாக அல்லலுற்றவர்கள். அதனாலேயே அவர்களை உடனடியாகக் கவனிப்பது மிக அவசியமாகிறது. தற்போது நாம் கேள்விப்படுவது என்னவெனில் பெரும்பாலான மனித நேய நிறுவனங்களுக்கு இம்மக்களை அடைவதற்கு கட்டுப்பாடற்ற தொடர்பு அனுமதிக்கப் படாததால், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிட்டாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் 27 ஆம் திகதி வவுன்னியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி அன்றைய தினம் 14 முதியோர்கள் பசியால் இறந்ததை பதிவு செய்து, அரசை முதியோர்களைக் கவனிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஷார்மினி : பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு உட்சென்று உதவி செய்வதை அரசாங்கத்தை எது தடுக்கிறது?

சுனிலா : இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம். நாமும், இது உண்மையாக இருக்கக் கூடுமென்று ஒப்புக் கொள்கிறோம். எங்களின் எதிர்ப்பு எல்லாம் அரசு முன்வைக்கும் திட்டத்திற்கு தான்: "மக்களை முதலில் சல்லடையில் சலித்து பிறகு அவர்களை பிறர் தொடர்பு கொள்ள அனுமதிப்பது"; நாங்கள் சொல்வதெல்லாம், "அவ்வாறு மக்களை பரிசோதிக்கும் போதே அவர்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று". "அத்தகைய சோதனை, சார்பில்லாத பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்"
நாங்கள் அறிவது என்னவெனில் இந்த முகாம்கள் உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக உள்ளன. ஏனெனில் இவற்றைக் கண்காணிப்பது இராணுவம்; மக்கள் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் படுகிறது; பல வேலிகளைத் தாண்டினால் ஒழிய அங்கிருந்து விலக முடியாது; அவர்களை யாரும் வந்து பார்க்கவும் கூடாது; உப ராணுவம் எனப்படும் 'முன்னர் புலிகளுடன் இருந்து பின் பிரிந்து சென்ற' குழுக்கள், முகமூடி போர்த்திய 'தகவல் சொல்பவர்'களுடன் இந்த முகாம்களுக்குள் உட்புகுந்து, சிலரை அடையாளம் காட்டி, இந்த முகாம்களிலிருந்து வெளியே கொண்டு செல்லப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறார்கள் மணிக்வா முகாமிலிருந்து நிருங்குளம் தொழிற்கல்வி கல்லூரி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஒரு பட்டியலும் இல்லை. பெற்றோர்கள் பதட்ட நிலையில் காணப்படுகிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல் மட்டுமே. இந்த மூன்று இலட்சம் மாந்தரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்க வேண்டும்; அப்போதுதான் இது போல யாராவது ஒருவர் இந்த முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு மாற்றப்பட்டால், அதற்கு யாரேனும் பொறுப்பேற்க முடியும். தற்போது இந்தகைய பட்டியல் பதிவில் இல்லை; ஆதலால் இது போல மக்கள் திடிரென்று காணாமல் போகும் நிகழ்வுகள் நடக்கின்றன; அது எங்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது.

ஷார்மினி :பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் இதனுட்சென்று உதவி செய்யத் தயாராக உள்ளனவா?

சுனிலா : ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகமும் (UNHCR) மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) இத்தகைய மேற்பார்வையிடுதல், பதிவு செய்தல் போன்ற பணிகளில் திறமை படைத்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் ஈடுபட அனுமதி இல்லை.

ஷார்மினி : காணாமல் போய்விடுவோர் பற்றி - உறுதியான தகவல்கள் ஏதாவது கேள்விப் படுகிறீர்களா?

சுனிலா : இந்த முகாம்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு - காணாமல் போனவர்கள் - எங்களால் அதனைக் கனானிக்க இயலாத சூழல் - சிறி லங்கா அரசு புலிகள் என்று சொல்லப்படும் 10,000 பேர்கள் சரணடைந்து, தங்கள் தடுப்பு முகாம்களில் இருப்பதாக ஒப்புக் கொள்கிறது. அவர்கள் யாரென்று தெரியவில்லை; அவர்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் இல்லை. உங்களுக்கே தெரியும் எத்தனை பேர் இறுதி தினங்களில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள் என்று; புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் துணைவியரும், குடும்பத்தினர்களும். ஒரு உதாரணத்திற்கு சூசை அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் சிறி லங்க கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இப்போது தெரியாது. ஆதலால், இது போன்ற குறிப்பிட்ட விடயங்களிலாவது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் அறிய முயல்கிறோம். ஆயினும், அது முடியாத காரியமாகவே உள்ளது.

ஷார்மினி : இந்தத் தடுப்பு முகாம்களில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி - அபு கரிப் (ஈராக்) சிறையில் நடந்தேறியது போல - செய்திகள் வருகின்றன. நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்?

சுனிலா : உங்களுக்கே தெரியும் - சிறி லங்கா உளவுத்துறையின் சித்திரவதை சிறப்புகள் பற்றி - ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குனர் மால்ஃபாய் டோவக் அவர்களின் 2007 இல் நடந்த சிறிலங்க விஜயத்தின் போது அளித்த அறிக்கை அப்போதிருந்த நிலைமை பற்றி மோசமாக விமர்சித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசர நிலை சட்டம் - இவற்றின் அடியில் பிடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல - சாதாரண சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கூட - அவதிப் பட்டார்கள். சித்ரவதையை விடுங்கள் - கும்பலாக அடைத்தல், மருத்துவ வசதி தராமல் இருத்தல் மற்றும் அடித்து, பானைத் தண்ணீர் சித்ரவதை - இப்படி நிறைய கேள்விப்பட்டோம். இத்தகைய சித்ரவதைக்குள்ளான ஏராளமானோர், கனடா, யு.எஸ். மற்றும் யு.கே. ஆகிய நாடுகளில் தஞ்சம் புகும்போது அளித்த ஆவணங்களில் இது பற்றி சொல்லியிருக்கிறார்கள். இந்த தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகள் பற்றி போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றே சொல்வேன்.

ஷார்மினி : தற்போது சிறிலங்கா அரசின் மீது எத்தகைய அழுத்தம் கொடுக்க இயலும்? யாரால் தர இயலும்?

சுனிலா : தற்போதைய நிலையில் உலக நாடுகள் செய்யக்கூடியதெல்லாம் சிறி லங்கா அரசை இந்த தடுப்பு முகாம்களை அணுகுவதற்கு உள்ள தடைகளை நீக்கவும், முகாம்களில் அடைபட்டிருப்பவர்கள் விவரங்கள், முகாம்களில் இடம் பெயர்க்கப்படப் போகிறவர்களைப் பற்றிய விவரங்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துப் பதிவது - இவைகளைக் கோருவது தான்; இவைகள் மிக அடிப்படையான தேவைகள் மட்டுமே - புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவேயில்லை என்று நாங்கள் சொல்லவில்லை; அவர்களைப் போக விடுங்கள் என்று சொல்லவில்லை; நாங்கள் சொல்வதெல்லாம், ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அதனை எல்லோரும் அறியச் செய்யுங்கள்.
இறந்த ஒவ்வொருவருக்கும் - சமீபத்தில் நடந்தேறிய ராணுவத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது - சுமார் 20,000 பேர் என்று செய்திகள் வந்தாலும், அரசு இதனை மறுக்கவே செய்கிறது - இறந்த ஒவ்வொருவருக்கும் கனடா, யு.கே., ஜெர்மனி, பிரான்ஸ் இந்த நாடுகளில் உறவினர் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பாட்டி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன் என்று உறவு முறைகள் காணாமல் போய்விட்ட, இறந்து விட்ட நிகழ்வுகள் உள்ளன. இந்த புலம் பெயர்ந்த தமிழின மக்களுக்காகவேனும் சிறிலங்கா அரசின் மனிதாபிமானமற்ற செயலான உண்மை நிலையை மறுத்தல் என்பது மாற வேண்டும் - இவர்கள் முகாம்களிலோ, வைத்திய சாலைகளிலோ, சிறைகளில் அடைக்கப்பட்டோ இருக்கிறார்கள் - இந்த மூன்றிலும் இல்லை என்றால் அவர்கள் இறந்தவர்கள் - என்று தெரிய வேண்டும். நமக்குத் தெரிய வேண்டும்; மக்களுக்குத் தெரிய வேண்டும்; இதுவே சிறிலங்கா தமிழர்களுக்காக பன்னாட்டு அரசுகள் செய்யக்கூடிய செயலாகும்.

ஷார்மினி : யாரந்த பன்னாட்டு சமூகம்? சிறி லங்கா அரசின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நிறுவனங்கள் அல்லது நாடுகள் எவை?

சுனிலா : சீனா, ஜப்பான், பிரேசில், தென் ஆப்பிரிக்கா. இந்த நான்கு நாடுகள் குரல் கொடுத்தால் - மனிதாபிமான கொள்கைகளுக்காக, முகாம்களுக்குத் தடையற்ற அணுகுமுறை, முகாம்களில் உள்ளோரின் மொத்தப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்கள்.

ஷார்மினி : ஏன் இந்த நாடுகள்?

சுனிலா : சிறி லங்கா அரசுடனான இவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்காக - அமெரிக்க, கனடா, ஐரோப்பா இந்த இடங்களிலிருந்து வரும் அழுத்தங்களை சிறி லங்கா அரசு எதிர்க்கிறது - ஏகாதிபத்திய அரசுகளின் காலனிய சதி என்ற ரீதியில் - ஆனால் - இந்த நான்கு நாடுகள் தென்பிராந்திய சக பயணிகள். நீங்கள் அறிவீர்கள் - சீனா சிறிலங்காவில் கணிசமான முதலீடு செய்திருக்கிறது; சிறிலங்கா அரசுக்கு ஏராளமான கடன் வசதிகளும், நிதியுதவி உறுதிமொழிகளும் சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. பிரேசில் நாட்டவர்களுக்கும் தென்பிராந்திய, அணி-சேரா நாடுகளிடையே மதிப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சிறி லங்கா - தென் பிராந்திய ஜனநாயகங்களின் ஒரு பிரதிநிதியாகவே நோக்குகிறது. ஆகையால், இந்த நாடுகளுக்கு இத்தகைய ஆளுமைகள் உள்ளன. இருப்பினும் அவர்கள் இந்த நிலையை இவ்வாறு புரிந்து கொள்ளாதது சோகமே. இவற்றைச் செய்வதால் இந்த நாடுகளுக்கு ஒன்றும் நட்டமில்லை.

பின் குறிப்பு: சில பெயர்கள்/இடங்கள் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமையால் தவறாக இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. சுட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

15 comments:

Unknown said...

என்ன கொடும இது....!!! இத்தன கொடும நடந்திருக்கு...... !! ஆன்னா பக்கத்துல இருக்குற நம்பநாள ஒன்னும் பண்ணமுடியலையே...!!!!


இதுக்கு ஹிட்லர் எவ்வளவோ தேவல போல.....!!!!! இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா....??????

அ.மு.செய்யது said...

இனப்படுகொலைகள் நடக்கும் எந்த நாட்டிலும்,முதலில் மனித உரிமை கழக கண்களைத் தான் கட்டுவார்கள்.

முன்பு இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள்,இப்போது இலங்கையில் தமிழர்கள்.

ஆண்மையற்ற ஐ.நா.இருந்து என்ன பயன் ??

ராமலக்ஷ்மி said...

இதுவ்ரை அறிந்திராத வேதனையான விஷயங்கள். இவர்கள் குரல் தந்தால்.. என எதிர்பார்க்கப் படும் நான்கு நாடுகளும் நல்லது செய்யட்டும். மொழியாக்கத்துக்கு நன்றி அனுஜன்யா!

கார்க்கிபவா said...

:((((

தராசு said...

முதலில் இந்த தகவலை தமிழாக்கம் செய்து வெளியிட்ட அனுஜன்யா அண்ணனுக்கு நன்றிகள்.

விலங்குகள் துன்புறுத்தப்பட்டாலே அதற்கென வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் பிரபலங்கள் எங்கே?

இங்கு அழுவதும் அழிவதும் என் உறவுக்காரன் என்று பார்க்க வேண்டாம், அட குறைந்த பட்சம் சக மனிதன் என்றாவது பாருங்களேன்.என் தமிழின காவலர்களே, இவனது இழி நிலை கண்டும் வாய் திறவாத மர்மம் என்ன?

உலக நாடுகளே! சரித்திரம் திரும்ப அதிக சமயமெடுக்காது. இன்று இலங்கையில் நடைபெறும் இதே கூத்து நாளை உங்கள் நாட்டிலும் நிகழலாம். ஆனால் உங்களுக்கென குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

வளர்மதி said...

அனுஜன்யா மொழியாக்கம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

எனது இயலாமையும் சோம்பலும் நினைத்து வெட்கப்படுகிறேன்.

அடுத்த பகுதியும் மொழியாக்கம் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்
வளர் ...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மிக முக்கியமான இந்த நேர்காணலை மொழிபெயர்ப்பு செய்த உங்களுக்கு நன்றி.

நர்சிம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை அனுஜன்யா.. மொழிபெயர்ப்பிற்கு நன்றி

ராம்.CM said...

இதுக்கு ஹிட்லர் எவ்வளவோ தேவல போல.....!!!!! இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா....??????///////.........

Mahesh said...

செம்மையான மொழிபெயர்ப்பு !!! மூலத்தை விட மொழிபெயர்ப்பு வாசிக்க சுகமாக இருக்கிறது.

உள்ளடக்கம்.... என்ன சொல்ல? ஜீவகாருண்ய சங்கம், நீலச்சிலுவை, மேனகா காந்தி எல்லாரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அல்லது இலங்கைத் தமிழர்கள் நாயினும் கேவலமானவர்கள் என்று தலை முதல் கால் வரை அனவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

முன்பு போராளிகளிடம் தரகு பேச வந்த நோர்வே காந்தியின் குரங்குகள் போல அனைத்தையும் மூடிக் கொண்டிருந்தது ஏனோ? நம்மவர்கள்தான் தந்தி தபாலுக்கு மேலே ஒன்றும் செய்ய முடியாத / தெரியாத கையாலாகாதவர்களாகி விட்டனர். :((((((((((

நேசமித்ரன் said...

சக கைதியை வன்புணர்ந்து
தீர்க்கும் காமம் எரிய வேண்டும்
உங்கள் புலன்களில்

இகழ்ந்து பெற்ற களிப்பில்
திரள வேண்டும்
பச்சை உதிரம் ருசித்துப் பழகிய விலங்கின்
கூரிய பல் பழுப்பு நிறம்

தேர்ந்த மருத்துவனின்
பிரேதம் திறக்கும் கருவிகள்
பெரிதும் உதவுகின்றன
வதைத்துச் சுகிக்கும் ரகசிய விளையாட்டில்

கருவை கலைக்கும் வேளைகளில்
உங்கள் சீருடை கறைபடாமல் பார்த்துக் கொள்வதும்
ஒரு நீண்ட இறைஞ்சுதலுக்கு
பின் புகைத்தபடி காட்டும் கருணையில்
சடலத்தின் முகம் சிதையாதிருத்தலும் அவசியம்

இப்போது நீங்கள் தயார்

இனி முன்னறிவிக்கபட்ட
உங்கள் முகாம்களுக்குச் செல்லலாம்

Thamira said...

நன்றி அனுஜன்யா..

ச.முத்துவேல் said...

/இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம/

குழந்தைகளாகவும், தள்ளாத முதியோர்களாகவுமாகவா?

தமிழில் தந்தமைக்கு நன்றி அனுஜன்யா.

நந்தாகுமாரன் said...

பகிர்தலுக்கு நன்றி

anujanya said...

@ மேடி

என்ன செய்ய மேடி :(

@ செய்யது

சரியான பேச்சு செய்யது.

@ ராமலக்ஷ்மி

நம்பிக்கை....நன்றி சகோ.

@ கார்க்கி

ஆம் :((((((

@ தராசு

நன்றி தராசு. தனக்கு வரும் வரையில் ....

@ வளர்

அதெல்லாம் ஒண்ணுமில்ல வளர். அடுத்த பகுதி செய்வதில் தான் இந்தப் பின்னூட்டம் இட இவ்வளவு தாமதம். வாய்ப்புக்கு நன்றி வளர்.

@ ஜ்யோவ்

உங்கள் போன்றவர்கள் ஊக்கம் மிக முக்கியம் ஜ்யோவ். நன்றி.

@ நர்சிம்

நன்றி தல.

@ ராம்

என்ன செய்ய ராம்

@ மஹேஷ்

நன்றி மஹேஷ்; மற்றபடி எல்லாமே :((((

@ நேசமித்ரன்

அப்பாஆஆஅ :((((((( நன்றி நேசமித்ரன்.

@ ஆதி

தேங்க்ஸ் ஆதி.

@ முத்துவேல்

சரியான கேள்வி. என்ன சொல்ல ! நன்றி முது.

@ நந்தா

தேங்க்ஸ் நந்தா


சற்று தாமதமான நன்றி நவிலல். நீங்கள் யாரும் இதை ஒன்றும் பெரிய விஷயமாக எண்ண மாட்டீர்கள் என்றாலும் .... சொல்வது என் கடமை.

அனுஜன்யா