சென்ற வாரம் திடீரென்று ஆபீஸில் சிங்கப்பூர் சென்று (ஒழுங்காக வேலையை முடித்தால் மட்டும் திரும்பி) வா என்றார்கள். முன்பே சில முறை சென்றிருக்கிறேன் என்றாலும் எனக்கு அயல் நாட்டுப் பயணம் என்றாலே அடிவயிறு ஆட்டம் காணும். அதுவும் தனியாகப் போகணும்னா...ஆள விடுங்க பாஸ் என்று கெஞ்சுவேன். நம்ம இஷ்டப் படியா எல்லாம் நடக்கும். அதுவும் ஆபீஸில்? கிங் ஃபிஷர் விமானத்தில் இரவுப் பயணம். சீட் பெல்ட் எல்லாம் இறுகக் கட்டிக்கொண்டு, ரன்வேயில் ஓஓஓடி விமானம் வானம் ஏறி 'சீட் பெல்ட் சைன் ஃஆப்' வரும்வரை வயிற்றில் இருந்த பயப்பந்து மதபேதம் பாராமல் எல்லாக் கடவுள்களையும் உதட்டில் வரவழைத்தது. பெரியார் பேரைக்கூட சொன்னேன் என்றால் பாருங்களேன். என்னது? இல்லை இல்லை நித்யானந்தரைக் கூப்பிடவில்லை.
உடனே திரையில் விஜய் மல்யா தோன்றி 'உணவு என் ஆசை; குடி என் தொழில்; என்ஜாய் மாடி' என்று மந்தகாசப் புன்னகையுடன் சொன்னார். சிவப்பு ஆடையில் மிதந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகள் வெல்கம் ட்ரின்க் என்று ஒரு ட்ராலியில் மிக அழகான சீசாக்களில் பல்வேறு வண்ணங்களில், அடர்த்தியில் திரவங்களைக் கொண்டு வந்தார்கள். நான் வெறும் ஆரஞ்சுப் பழச்சாறு மட்டுமே கேட்டு வாங்கிப் பருகினேன் என்று எழுதுவதற்கு மூன்று காரணங்கள்:
1.விமானம் இறங்கி இரண்டு மணிநேரத்தில் ஒரு பவர் பாயிண்ட் சமாசாரம் செய்ய வேண்டிய கட்டாயம்.
2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள்
3. சில நேரங்களில் நான் அப்பட்டமான உண்மையும் பேசுவேன். (கொஞ்சம் யோசித்தால் நீங்கள் 'உண்மையும்' என்பதற்குப் பதிலாக 'பொய்யும்' என்றும் மாற்றிக்கொள்ளலாம்.)
உணவு உண்டபடி திரையில் டில்லி 6 பார்த்தேன். எனக்கு அபிஷேக் பச்சன் பிடிக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ளாத பேர்வழி. இரண்டு ஐகான்களை சமாளிக்கும் மனுஷன். அனில் கபூரின் பெண் சோனல் கபூர் (இப்போது புரிகிறது சுரேஷ் கண்ணன்) டிவைன். படம் ஓகே. மசக்கலி பாட்டை மட்டும் மூன்று-நான்கு முறை ஓட விட்டேன். அப்புறம் தூங்கி விட்டேன்.
இம்மிக்ரேஷனில் சாக்லேட் கொடுத்தாலும் அழகான சீனக் கண்களில் நிறைய சந்தேகம் இருக்கிறது. நாம என்னதான் அஜித் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டாலும் தானாகவே இயல்பு நிலையில் வையாபுரி போல மாறிவிடுகிறது. ஏர்போர்ட் லாபி அவ்வளவு நேர்த்தி. சுத்தம். வெளியே டாக்ஸி (ஆஹா, இங்க ஹோண்டா அக்கார்ட் எல்லாம் டாக்சியா !) ஏறி போகவேண்டிய ஹோட்டல் (Ascott) பெயர் சொன்னேன். அப்படி ஒரு இடமே இல்லை என்றார். பிறகு முன்பதிவு பேப்பரை காண்பித்தேன். "ஓ, இதுவா!" என்று சொல்லி ஒரு சிறிய பாடலைப் பாடினார். பிறகு புரிந்தது - அவர் ஹோட்டல் பெயரைச் சொன்னார் என்று. டிராபிக் இன்று அதிகம் என்று காலியாக இருந்த சாலையைப் பார்த்து அலுத்துக் கொண்டார். இதே எட்டரை மணிக்கு இவரை இப்படியே தூக்கிக்கொண்டு போய் மும்பை அந்தேரி-சாண்டாக்ருஸ் ஹைவேயில் இறக்கி விட்டால் என்ன செய்வார் என்று யோசித்தேன்.
ஹோட்டல் இருக்கும் இடம் Central Business District என்று சொல்லப்படும் வணிக வளாகங்கள் இருக்கும் பகுதி என்று நினைக்கிறேன். Raffles Place. கேள்வி கேட்காமல் ஐம்பது-அறுபது மாடி கட்டிவிடுகிறார்கள். நான் தங்கிய ஹோட்டல் பாவம் குடிசை. வெறும் பத்து மாடி என்று நினைக்கிறேன். அந்தக் காலத்து ஹோட்டல். உள்ளே எல்லாம் சௌகரியமாக இருக்கிறது. தூக்கம் தூக்கமாக வந்தது. நிசமாலுமே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் மணி பத்து. பத்தரைக்கு பவர் பாயிண்ட். இப்போது அவ்வை ஷண்முகி கமலை கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு வரவும். அத்தனை வேகத்தில், சரியாக இருபத்தைந்து நிமிடங்களில் ஹோட்டல் லாபியில் வந்து என் ஆபிஸ் இருக்குமிடத்தைச் சொல்லி, எப்படிப் போகவேண்டுமென்று கேட்டால், சற்று குனிந்து, கண்ணாடி வழியே எதிர்ப்பக்கம் காண்பித்தாள்.
அட, இதுதானா என்று பார்த்தால், கழுத்து வலித்தது. உள்ளே செல்ல ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகள். லிப்ட் ஒரு டீக்கடை அளவு இருக்கிறது. நிறைய சீன, கொஞ்சம் ஆங்கில ஆசாமிகளுடன் நானும் சென்றேன். ஆபீஸில் முதல் நாள் என்பதால், சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு மட்டும் இட்டுவிட்டு மாலை போடுவது எல்லாம் நாளை என்றார்கள். நாளை மறுநாள் அறுவா வரும் என்று புரிந்தது. எல்லோரும் படு ரிலக்ஸ்டா இருக்கிறார்கள். மறக்காமல் பன்னிரண்டரை மணிக்குப் பசியுடன் கீழே பாய்கிறார்கள். சிங்கப்பூர் வானம் மதியம் பசி எடுக்கும் போது மூச்சா போகிறது. மழைப் பருவம் என்றெல்லாம் கிடையாதாம். தினமும் மழை பெய்யக்கூடும் சாத்தியக்கூறுகள் (ஏதோ கவிதையின் முதல் வரி மாதிரி இல்ல?) 365 நாட்களும் உண்டு என்று பெருமையுடன் சலித்துக் கொள்கிறார்கள். நிறைய கட்டடங்கள் எழுகின்றன. துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்குவது கண்ணாடி வழியே தெரிந்தது. ஒரு மூன்று கோபுர கட்டிடத்தின் கீழ் தளத்தில் பெரிய காசினோ வருவதாகச் சொன்னார்கள். சிங்கை பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைவது தெரிகிறது.
ஆறு மணிக்கு ஆபிஸ் அமானுஷ்யம். என் வரவை முன்னிட்டு ஒரு ஏழெட்டு பேர் சாலை ஓர pub இல் பியர் அருந்தினார்கள்/அருந்தினோம். அட விடுங்கப்பா. பியர் அருந்தப்பட்டது. வெகு சிலரைத் தவிர, நிறைய பேர் MRT என்னும் மெட்ரோ ரயிலில் பெரிய வீடோ சின்ன வீடோ போய்ச் சேருகிறார்கள். காலையில் ஒன்றும் சாப்பிடாமல், மதியம் சாண்ட்விச் சாப்பிட்டு ஒப்பேத்தி விட்டாலும், வயிறு 'செல்லாது. செல்லாது. இட்லி, தோசை அல்லது ஒரு ரவுண்டு கட்டி சாப்பாடு தேவை' என்றது. நல்ல வேளையாக மும்பையிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆபிஸ் நண்பர் அருகில் தான் சாராவானா பாவான் (அப்படித்தான் சொன்னார்) இருக்கிறது என்று வழி காண்பித்து எஸ்கேப் ஆனார். மடிக்கணினியை ஹோட்டல் பெட்டில் தூர வீசி, டி-ஷர்ட் போட்டு யூத்தாகி, சா.பா. நோக்கிப் படையெடுத்தேன்.
சரவண பவனைக் கண்டுபிடிக்கச் சிரமப்படவில்லை. எல்லாம் இருந்தது. வட இந்திய உணவும். நம்ம ஊர் ஃபுல் மீல்ஸ் ஒரு பிடி பிடித்ததும் தான் மீண்டும் தமிழனான உணர்வு வந்தது. மென்பொருள் ஆண்களும், அவர்களை ஆட்டுவிக்கும் பெண்களுமாய் களையாக இருந்தது. வெளியே வந்தவுடன் மழை. கொஞ்ச நேரம் ஜாலியாக நனைந்தேன். இதற்கு முன் வேண்டுமென்றே மழையில் எப்போது நனைந்தேன் என்று யோசித்தேன். பழைய காதலிகளும் சென்னை, பெங்களூர்த் தெருக்களும் நினைவில் வந்தார்கள். மழை எல்லா ஊரையும் அழகாக மாற்றி விடுகிறது. சிங்கையும், பெங்களூரும் (தொண்ணூறுகளில்) அது இல்லாமலும் அழகு என்றாலும். பசித்துப் புசித்தபின், மெல்லிய மழையில் மொபைல் போனில் 'ஹசிலி ஃபிஸிலி ரசமணி' கேட்டுக்கொண்டே நனைந்தது புத்துணர்வூட்டிய அனுபவம்.
சிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பழச்சாறுகள் என்று சகட்டு மேனிக்கு வாங்கித் தள்ளுகிறார்கள். துரியன் ரொம்ப ஃபேமஸ் என்றாலும் யாரும் வாங்கவில்லை. கொரியா நாட்டுப் பழ வகைகள் வித்தியாசமாக, வசீகரமாக இருந்தாலும் வாங்கும் தைரியம் வரவில்லை. டிராகன் பழம் என்று ஒன்று சிகப்புக் கலரில் மிரட்டியது. பப்பாளிப் பழம் ஒரு ப்ளேட் (வெட்டி வைக்கப்பட்டது) சிங்கை டாலர் மூன்று என்றார்கள். நம்ம சிக்கன புத்தி வேகமாக இந்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் என்று கணக்குப்போட்டு, கடையை விட்டு ஓட்டம் விட்டேன்.
மூன்றாம் நாள் அரைநாளில் "பரவாயில்லை. இந்த முறை தப்பித்து விட்டாய். என்ஜாய்" என்று அனுப்பி விட்டார்கள். சிங்கையில் வேலை பார்க்கும் என்னுடைய கசின், எதேச்சையாக பிசினஸ் நிமித்தம் சிங்கை வந்த என் சகோதரி கணவர் என்று ஒன்று கூடி கசின் வீட்டுக்குச் சென்றோம். அருகில் இருந்த மாலில் மாலையைச் செலவழித்தேன். சிங்கையின் சுத்தம், நேர்த்தி, சிரித்த முக மக்கள் எல்லாம் நம்பமுடியாமல், ஏறக்குறைய அலுக்கும் அளவு இருக்கிறது. ‘மணமான அன்று இரவே ஹோட்டல் உயரத்தில் இருந்து குதித்து மாண்ட கணவன்’, பக்கத்துக்கு இந்தோனேஷியாவில் நடந்த ‘கணவனைக் கொன்ற கள்ளக்காதலனுக்கு எதிராக சாட்சி சொன்ன மனைவி/காதலி’ என்ற தலைப்புச் செய்திகள் மட்டும் இந்தியாவை நினைவுறுத்தின.
அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) திரும்ப கிங் ஃபிஷர் பிடித்து மும்பை.
கிளம்பியதில் இருந்து திரும்ப வரும்வரை உறுத்திய விஷயங்கள்:
கோவி கண்ணன், மஹேஷ், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, குழலி, அகரம் அமுதா, இராம்/Raam போன்ற நண்பர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டும், சற்றும் ஒத்து வராத பயண/அலுவல் சூழ்நிலை.
வார இறுதியாக இருந்தால் இவர்களுடன் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்தித்து இருக்கலாம். செந்தில்நாதனை இவர்களுடன் சென்று பார்க்கவேண்டும் என்று கூட கூடுதல் ஆசை இருந்தது. (எனக்குத் தெரிந்த பதிவர்கள் பெயர்கள் இவை. இன்னும் பலர் இருக்கலாம்.)
மாதங்கி என்னும் கவிதாயினி (என் ஆரம்ப கவிதைகளைப் படித்து ஊக்கமூட்டியவர்) கூட சிங்கை என்றுதான் நினைக்கிறேன். அட் லீஸ்ட் தொலைபேசியில் பேசியிருக்கலாம்.
நண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், வெளியில் என்னை மன்னித்து விடுங்கள்.