Sunday, January 1, 2017

புத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்
இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்டையாகப் புரிந்து கொள்ளாது உட்கிடையாக (sub textக்கு இந்த சொல்லை எனக்கருளிய பிரிய அண்ணன் ரா.சு. வுக்கு வணக்கம்) சென்ற வருடத்தின் மறக்க வேண்டியவை என்று பொருள் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

வழக்கம் போல அல்லாமல் இன்னும் நிறைய பேர் வீட்டெதிரில் இருக்கும் பூங்காவில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான பெருசுகள் பூங்காவின் மத்தியில் பலகுரலிசை முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். தத்தம் வீட்டுக்குள் அனுமதிக்கப்படாத சப்தங்களை எழுப்பி ரகளை செய்கிறார்கள். இவர்களைப் பற்றியும் பற்றாமலும் பிறிதொரு தருணத்தில் எழுத வேண்டும்.

என்னுடைய பேச்சுத்தமிழுக்குத் தாவுகிறேன். மனம் எப்படியெல்லாம் செல்கிறது என்று சொல்ல நினைக்கிறேன். 

நடக்க ஆரம்பிக்கிறேன். புத்தம்புது நைகி (வாங்கிக் கொடுத்த தம்பியின் மனைவிக்கு நன்றி) மயில்கழுத்து நீலத்தில் "நான் மேலும் நடக்கிறேனே டாடி" என்கிறது. ப்ளேலிஸ்டில் கர்னாடிக் தேர்ந்தெடுத்து ஷ்ஃபில் செய்தால் மதுரை மணி!   கா....பா....லி என்று அட்டகாசத் துவக்கம். இருபது நிமிடம் பறக்கிறது. ஸ்வரங்களைப் பாடுவதில் there is Mani. Then there are others. Simply mind blowing. இரண்டு கிமீ நடந்திருக்கிறேன் என்கிறது  StepApp. மீண்டும் ஒருமுறை காபாலி ஓடியதில் புதுவருட இசை கல்யாணியில் துவங்கியது. 

4 கிமீ இப்போது.

இப்ப ஆண் பெருசுகளுடன் பெண்களில் முதியோர் அணியும் சங்கமம். வெள்ளை மீசை நேபாளித்தொப்பியுடன் ஒரு பெரியவர் ஐந்து நிமிசம் உரையாற்றிய பின் எல்லோர் கையிலும் ஒரு snack box மற்றும் சின்ன ப்ளாஸ்டிக் கப் தேனீர். பெரும்பாலான பாட்டிகள் கையில் தம் பேரக்குழந்தைகளுக்காக கேக்,டோக்ளா,மிக்ஸர் பொட்டலங்களைச் சுமந்திருக்கிறார்கள். 

எப்பவுமே நாலு கிமீக்குப் பின் நடைவேகம் கொஞ்சம் ஜகா வாங்கும். அப்ப இந்த ததரின்ன்ன்னோம்னு ராக ஆலாபனை கேட்டால் பார்க் பெஞ்சின் சுகமான காற்றில் தூங்கும் நப்பாசை பேராசையாக உருமாறும். பட்டியலை MJவுக்கு மாற்றினேன். பைசா வசூல். நடையில் துள்ளல் இப்ப. 

நிறைய பெண்கள் எப்ப வலம்,இடம் சாய்வார்கள்னு அவங்களுக்கே தெரியாது. ஒவர்டேக் பண்ணணும்னா நாமளே மானசீக ஐந்து மீட்டர் கற்பு வளையம் போட்டு அதற்கப்பால் செல்லுதல் சிறந்தது.

பெஞ்சிலமர்ந்து மொபைலில் கடலைபோடும் யுவதிகளைத் தாண்டுகையில் பெரும்பாலான ஆண்கள் அனிச்சையாக வயிற்றை உள்ளே இழுக்கிறார்கள். இவ்வளவு காலையிலும் சில ஆசாமிகள் பெர்ஃபூயூம்களுடன் களைத்தார்கள். ஜோஷ்வா ஶ்ரீதரின் "தொட்டு தொட்டு உன்னை" செம்ம பெப்பி மற்றும் ஃபீல் குட் பாட்டு. இப்ப அவர் என்ன செய்கிறார்? 

அடுத்த குலுக்கலில் Eminem தற்போது.  ஹாரிஸ் "அசிலி பிசிலி" போடுகையில் "The way I am" கேட்டிருக்கக்கூடும். "Since birth I have been cursed with this curse to curse". ராப்பின் ஊடே அவ்வப்போது வரும் சர்ச் பெல்லின் துல்லிய ஒலி!

ஏழு கிமீ.

சிலர் விட்டமின், பலர் பக்தி நிமித்தம் மேலெழும் சிவப்பு சூரியனை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஏராள தொப்பையுடன் பூங்காவிலிருக்கும் ஜிம் சாதனங்கள் ஒவ்வொன்றிலும் வெறித்தனமாக எக்சர்சைஸ் செய்து ஒரே நாளில் ஸிக்ஸ் பாக் சல்மானாகும் கனவுகளுடன் சில ஆர்வக்கோளாறுகள்!

அடுக்குமாடி கண்ணாடி ஜன்னல்கள் சூரியனுக்கு ஹாய் சொல்கின்றன.

நடை பயிலும் (இந்த வயதில்) ஒரு பாட்டி பெஞ்சில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டிலை முகர்ந்து பார்த்து பின் விஷமமாக பின்காலைத் தூக்கி அருகில் பீச்சியடிக்கும் பூங்கா நாய். பாட்டி திரும்ப வந்து யாரோ பாட்டிலில் தண்ணியருந்தி வெளியே சிந்திவிட்டார்கள் என்று எண்ணலாம். இந்த குறும்பு நாயின் செயலை "நாய்ப்புத்தி" என்று நினைக்கும் போதே Hitch Hiker's guide to galaxyல் வரும் எலியின் ஞாபகம் வருகிறது. லேபரட்டரியில் நீங்கள் எங்களை ஆராய்சி செய்ததாக நினைத்தீர்கள். ஆனால் நாங்கள் எலி வடிவில் உங்களைக் கண்காணித்தோம் என்று அதிரடி கொடுக்கும் எலி.

ABBA பாடல்களுக்கிடையில் App 12 என்கிறது. வாவ்! புத்தாண்டில் நல்ல துவக்கம். 

பார்ப்போம் - இந்த ஆண்டிலாவது தொடர்ந்து எழுத முடிகிறதாவென்று. 

அனைவருக்கும் எங்களின் புத்தாண்டு வாழ்த்துகள்!

3 comments:

Rangs said...

ஹசிலி ஃபிஸிலி சிங்கப்பூர் ட்ரிப்ல இருந்து கேட்டுட்டே இருக்கீங்க.. சலிக்கவேல்ல?!

நாமக்கல் சிபி said...

இந்த ஆண்டில் நிறைய எழுதுங்கள்

Chellappa Yagyaswamy said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து.