Thursday, December 10, 2009
சென்னை - சில தினங்கள் சில குறிப்புகள் – Part 2
கிண்டி வந்தபோது குதிரை பந்தயத்தில் மூழ்கிக் களித்து, சிறிது வென்று, பெரிதாகத் தோற்று, மொத்த வாழ்வையும் அதில் செலவிட்ட சிலர் நினைவுக்கு வந்தார்கள். அடையாற்றில் மழைத் தண்ணீர் வடிந்து, பழையபடி சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. சைதாப்பேட்டை கோவில் கோபுரம் தற்போது உயரம், அகலம் எல்லாமே குறைந்து குறுகிவிட்டது போல் தோன்றியது. மற்றபடி பெரிய மாற்றமில்லாத கடைகள். ஏகப்பட்ட சப்-வேக்கள். எல்லா சுவர்களிலும் முன்பு பிரதானமாக இருந்த 'படை, சொறி, சிரங்குக்கு ...ஜாலிம் லோஷன் ஜாலிம் லோஷன்' என்று வாக்கியங்களைக் காணோம். போத்திஸ் மற்றும் ஜெயச்சந்திரன்கள் எல்லாச் சுவற்றையும் ஆக்கிரமித்து இருந்ததில் இந்தியா (ஓரளவாவது) மிளிர்கிறது என்று புரிந்தது.
முன்பெல்லாம் பெரிதாகத் தெரிந்த மேம்பாலங்கள் சிறிதாகி விட்டன. பூங்காவில் இறங்கினேன். பூங்கா என்றதும் பிக்னிக் ஸ்பாட் என்று எண்ண வேண்டாம். பூங்கா ரயில் நிலையம். எதேற்சையாகக் கண்ணில் வி.எல்.ஆர். கான்டீன் தென்பட்டது. நிச்சயமாக ஹைஜீனிக் இல்லை என்று தெரிந்தாலும், யாருக்குத் தான் பழைய நினைவுகளுக்குள் செல்ல ஆசை இருக்காது? ஒரு கிச்சடி, ஒரு தோசை என்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் போட்டு கொடுத்தார்கள். முன்பு அலுமினியத் தட்டின் மீது மந்தார இலையில் வரும். இன்னமும் மாறாத அலுமினிய டோக்கன். காலேஜ் தினங்களில் பழைய பேப்பர் போட்டு, காய்கறி/மளிகை சாமான்கள் வாங்கி, என்று சகல விதங்களிலும் கமிஷன் அடித்த பணம் இந்த அலுமினிய டோக்கன் தரும் கிச்சடி, போண்டா, பஜ்ஜி வகையறாக்களில் செலவழிந்த அற்புத நாட்கள் ஞாபகம் வந்தன.
திரும்பி வருகையில், இரவு பத்து மணிக்கு மேல் நண்பனுடன் மோட்டார் பைக்கில் சவாரி. எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை என்று மெல்லிய காற்றில் வளைய வந்த சவாரியில், நண்பனுக்கு பதில் நண்பி இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்னும் துர் எண்ணமும் வந்தது.
சகோதரி வீட்டருகில் புது கட்டிடம் ஒன்று கட்டப்படுகிறது. அங்கு ஒரு சைக்கிள். வாடகை சைக்கிள். 'மாலதி மிதிவண்டி நிலையம்' என்று செயின் பாக்ஸ் மேல் எழுதியிருந்தது. பின்புறம் மூன்று என்று நம்பர் பெரிதாகத் தெரிந்தது. யாரோ ஒரு உப மேஸ்திரியின் வண்டியாக இருக்க வேண்டும். இப்போதைய ரேஸ் பாசாங்குகள் இல்லாமல் சமர்த்தாக, ஒரு அமைதியான குதிரை போல நின்று கொண்டிருந்தது. முன், பின் பக்க சக்கரங்களில் பல வண்ண குஞ்சலங்கள். மணியில் விரல் அழுத்தும் இடத்திற்கு பிளாஸ்டிக் உறை. கேட்டிருந்தால் ஒரு ரவுண்டு சவாரி அனுமதித்திருப்பார்கள். என்னவோ ஒன்று தயக்கம் காட்டி, ஸ்டாண்ட் போட்ட வாகிலேயே பெடலைச் சுற்றினேன். அதிலேயே தெரிந்தது ஐம்பது கி.மீ. ஓட்டலாம் - பள்ளித் தேர்வின் நிச்சய ஃபெயிலை ஜஸ்டு பாசாகவாவது மாற்றும் சக்தி வாய்ந்த திருவேற்காடு அம்மனை அப்படி எத்தனை முறை தரிசனம் செஞ்சிருக்கேன்.
அடுத்த மால் நாளை ச்சே இப்பவே குழறுகிறது இல்ல. அடுத்த நாள் மாலை அசோக் நகர் செல்ல வேண்டியிருந்தது. இந்த 'ஏன்? எதற்கு?' எல்லாம் சுஜாதாவிடம் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். 'எப்படி?' என்று வேண்டுமானால் கேட்கலாம். இந்த முறை, பேருந்தில் பயணம். அது என்னவோ தெரியவில்லை. இந்த முறை சென்னையில் என் மூளை விபரீதக் கோட்பாடுகளில் இயங்கிக் கொண்டிருந்தது. முதலில் நங்கநல்லூர் மார்க்கெட் சென்று பேருந்தில் ஏறினேன். நிற்க இடம் கிடைத்தது. ஒரு நெருக்கமான திருப்பத்தில் திடீரென்று வந்த ஸ்கூட்டி பேருந்தின் பின் சக்கரத்தில் உராய்ந்து விழுந்தாலும், அந்தப் பெண் இலாவகமாக குதித்து விட்டாள். பேருந்து ஓட்டுனரின் சடன் ப்ரேக் பெரிதும் காப்பாற்றியது. ஒருவர் சீட்டை காலி செய்தால், மூவர் பாய்ந்து வந்து இடம் பிடிக்கும் வழக்கம் இன்னும் மாறவில்லை என்பது திருப்தி அளித்தது. ஆஷர்கானா (என்ன பெயர் இது? தலப் புராணம் யாருக்குத் தெரியும்?) நிறுத்தத்தில் (கூகிளில் டைப் செய்யும்போது எத்தனை ththth டைப் செய்ய வேண்டியிருக்கிறது!) இறங்கி அசோக் நகர் நோக்கி செல்லும் பேருந்துக்குக் காத்திருந்தேன்.
கொஞ்சம் குழப்பமாக இருந்ததால், பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன். அவர் 'நான் ஏறும் பஸ்ஸில் ஏறுங்க. கவலை வேண்டாம்' என்றார். கூட்டமாக வந்த பேருந்தில் முண்டியடித்து ஏறினோம். முன்பக்கம் ஏறி விட்டதால், நடத்துனர் தூரத்தில் பின்பக்கம் இருப்பது இலேசாகக் கூட தெரியவில்லை. அவர் வருவார். டிக்கெட் வாங்கலாம் என்று நானும் சும்மா இருந்தேன். கொஞ்ச நேரம் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு, பக்கத்தில் இருந்தவர், 'சார், கண்டக்டர் இங்க வரமாட்டாரு. பணத்த கொடுத்து விடுங்க. டிக்கெட் வந்து சேரும்' என்று அறிவுரை தர, நான் பக்கத்து பையன் கிட்ட கொடுத்து, அது ஆளாளுக்கு கை மாறிச் சென்று, மீண்டும் மூன்று நிமிடங்களில் பயணப்பட்டு என் கைகளில் டிக்கட்டாக மாறியிருந்தது. நல்ல சிஸ்டம். மீண்டும் அந்தக் காலத்தில் பெண்கள் மூலம் டிக்கெட் வாங்கியது, வாங்கிக் கட்டிக் கொண்டது, பிறகு கட்டிக்கொண்டு வாங்கியது என்று சகலமும் flash back ஆகியது.
ஒரு வழியாக அசோக் பில்லரில் இறங்கி, நண்பருடன் செலவழித்த மூன்று மணி நேரங்கள் அருமை. அவர் ஒரு எழுத்தாளர். ஏறக்குறைய என்னளவு பர்சனாலிடி கூட. அவர் புது புத்தகம் ஒன்று வெளி வருவதாகச் சொன்னார். மகிழ்ச்சி. ரொம்ப நாட்களாக நாலு தட்டு தட்ட வேண்டும் என்று குறி வைத்திருந்த பட்சியைக் கூப்பிட்டேன். அது 'சாரி சகா' என்று இலாவகமாக பறந்து விட்டது. திரும்ப வருகையில் ராயல் சவாரி. ஏ.சி. குளுமையில், ஜேசுதாஸ் குரலில், ஹோண்டா சிட்டி முன் இருக்கையில் சுகமான பிரயாணம். அந்த நேரத்தில் யாராவது கம்ப இராமாயணம் பற்றிப் பேசினால் கொட்டாவி வந்தால் தப்பா பாஸ்?
****************************************************************************
டெயில் பீஸ்:
நர்சிம்முடன் பேசிக் கொண்டிருக்கையில் ஆட்டோ விஷயத்தில் இரண்டு சுவாரஸ்யமான நிகிழ்வுகளைப் பற்றி கூறினார்.
நர்சிம் சென்ட்ரல் ரயில் நிலையம் வாயிலில்: 'ஆட்டோ, எக்மோர் போகணும்'
ஆட்டோ ஓட்டுனர் : 'ஆங், போவலாம்; அறுவது ரூவா ஆகும்'
நர்சிம்: 'அறுவதா? ரொம்ப அதிகமா இருக்கே. மீட்டர் போடுவியா?'
ஆ.ஓ: 'மீட்டரா? சரி போடுறேன்'
எக்மோர் வருகிறது. மீட்டர் இருபது என்கிறது. நர்சிம் இருபது ரூபாயை நீட்டுகிறார்.
ஆ.ஓ: 'இன்னாதிது?'
நர்சிம் : 'ஆட்டோ சார்ஜ் பா'
ஆ.ஓ: 'ஹலோ,நீ மீட்டர் போட சொன்ன. நீ பாத்ததில்லங்காட்டியும்னு நா போட்டேன்ல. நா அறுவது சொன்னேன். அப்ப நீயும் அதக் கேளு. மருவாதையா..அறுவது எடு'
இன்னொரு தருணம்.
நர்சிம் : 'ஆட்டோ, உத்தமர் காந்தி ரோடு போகணும்'
ஆ.ஓ. : 'காந்தி உத்தமர்னு உனிக்கி எப்பிடி தெர்யும்? சவாரி வராதுபா.'
அடுத்த ஆட்டோ.
நர்சிம் : 'ஹலோ, காந்தி ரோடு போகணும்'
ஆ.ஓ. : 'ஏன்யா, படிச்சா ஆளுதான. வெறும காந்தினா? உத்தமர் காந்தி ரோடா, மகாத்மா காந்தி ரோடானு கிலியரா சொல்தேவல?'
****************************************************************************
மகிழ்ச்சியான செய்தி: இதுக்கு மேல 'சென்னை தினங்கள்' பற்றி ஒன்றும் இல்லை. ரிலாக்ஸ்.
Tuesday, December 8, 2009
சென்னை - சில தினங்கள் சில குறிப்புகள் – Part I
பதிவர் சந்திப்பு விவாதங்களின் சாராம்சம் பற்றி நர்சிம் மற்றும் ஆதி, மோகன் குமார் அனைவரும் சுறுசுறுப்பாக எழுதி விட்டார்கள். அதனால் நான் ஒன்றும் எழுதப்போவதில்லை. (ம்ம், பெருமூச்சு சப்தம் கேட்கிறது). மணிகண்டன் மிக இளமையாக இருக்கிறார். நரன் ரொம்ப சீரியசாக இருந்தார். கவிதை என்றாலே எப்போதும் தவழும் நமட்டுச் சிரிப்பு லக்கியிடம். மற்ற எல்லோரிடமும், குடியரசு தின மிட்டாய்க்காக காத்திருக்கும் குழந்தைகளின் களைப்பு தெரிந்தது. புருனோ சிரித்துப் பேசிவிட்டு சீக்கிரம் கிளம்பினார். லேட்டா வந்த அப்துல்லா அதைச் சரிக்கட்டுவதற்காக உடனே எஸ்கேப் ஆகிவிட்டார். முதன் முறையாகப் பார்த்த நபர்கள் காவேரி கணேஷ், அதியமான், கணேஷ் (நம்ம சிஷ்யப்புள்ள), ஜெட்லி இரட்டையர், மோகன் குமார், கனகு, அசோக் மற்றும் ஒரு வாசகர். தாமதமாக வந்த கேபிள் மீசை மழித்ததில் வயது 15 முதல் 45 வரை சொல்லக் கூடிய தோற்றம். முரளி கண்ணன் 'தமிழ் சினிமாவில் இது வரை இடம் பெற்ற ஜப்பானிய ஹை கூக்கள் ' மேட்டருக்கு மணிகண்டன்/நரன் சொல்வதிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். லேகா சற்று தாமதமாக வந்தவர் எனக்கு அருகாமையில் அமர்ந்தார். இந்தப் பக்கம் வா.ம.; அந்தப் பக்கம் லேகா. என்னடா இது இலக்கிய இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று பயந்திருந்தேன். நல்ல வேளை, நர்சிம் சொன்ன மாதிரியே யாரும் பொருட்படுத்தவில்லை. ஜ்யோவ் மற்றும் பைத்தியக்காரன் எங்கே நான் உரையாடல் கவிதைப் போட்டி பற்றி பேசி விடுவேனோ என்ற பயத்தில் என்னைத் தவிர்த்து விட்டனர்.
அடுத்த நாள் கிண்டி செல்வதற்கு ஒரு ஆட்டோ (ரொம்பத் தான் தைரியம்) பிடித்தேன். மீட்டரெல்லாம் கிடையாது. நூறு ரூபாயில் துவங்கிய பேரம் எண்பதில் படிந்தது. ஆதம்பாக்கத்தில் உள்ள அத்தனை குறுக்கு சந்துகள் வழியே மடுவாங்கரை அடைந்தது ஆட்டோ. பிறகு, அங்கு ஆட்டோவின் முன்-சக்கரம் மட்டும் செல்லும் அளவில் ஒற்றையடிப் பாதை. முதலில் சற்று சினேக பூர்வமாகச் சிரித்ததில் துணிவு பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வசனங்களில் சில:
மேடு பள்ளங்களில் குலுங்கியபோது - "இதேன் காட்டி மெயின் ரோட்ல போன இப்பிடி குலுங்குமா? பாரு, எத்தினி மனுசங்க!
மய வரும்னாங்க. ஒன்னியும் காணோம். மய நல்லா பென்ஜாதான் தன்னி கஸ்டம் போவும். அதுவும் ஒரு அம்பது சனங்க செத்தாதான் சரி வரும்.
நான் 'மழைல செத்துப் போவது ஏழை-பாழைங்க தானே. ரொம்ப பாவமில்லையா' என்றேன்.
'அதுக்கு என்னா பண்ருது. மீதி அஞ்சு லட்சம் பேரு சந்தோசமா இருப்பாங்கல்ல?'
'கலீஞரு போன வாரந்தான் தற்காலிகமா வீடு சான்சன் பண்ணியிருக்காரு. இன்னும் ஆறு மாசத்துல நல்லா தலம் போட்ட வீடு கொடுப்பாரு. ஏன் சொல்லு ஆறு மாசம்? '
நான் 'தெர்லபா' என்றேன்.
'இன்னாபா, அப்பத்தான் ஏலேஷன் வரும். சனங்க மனசிலியும் நிக்கும்'
இடையில், ஒரு சிகப்பு சுழல் விளக்கு சுழன்று கொண்டிருந்த காரில் மந்திரியோ, எம்.எல்.ஏ. வோ எதிர் சாரி போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு நின்றது. நம்ம ஆட்டோ காரர், அவர் கார் கதவைத் தட்டி, அந்த டிரைவர் கிட்ட 'ஏம்பா, இது என்ன மெயின் ரோடா? இங்க எல்லாரும் ஒண்ணுதான். நீ வெளக்கு போட்டுகினே வந்தா காட்டியும், எல்லாரும் வயி விடுவாங்களா? எங்கப்பா எடம் இருக்குது' என்று கெக்கலித்தார்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் இறக்கி விட்டார். நூறு ரூபாய் கொடுத்தேன். இருபதை கொஞ்சம் தயக்கத்துடன் திருப்பிக் கொடுத்தார். ஓஹோ, இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறார் என்று தோன்ற, 'என்னப்பா, சரிதானே, இல்ல இன்னும் வேணுமா?' என்றேன். உடனே அவசரமாக, ' சார், எப்பவும் எலுவது தான் வாங்குவேன். இதுவே ஜாஸ்தி சார்' என்று திகைக்க வைத்தார். இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.
ஒரு எச்சரிக்கை: இதன் அடுத்த பகுதி ஒரு வேளை சீக்கிரத்தில் வெளிவரலாம். இல்லை வராமலே போகலாம். என்ன? வானிலை அறிக்கை மாதிரி இருக்கிறதா?
**********************************************************************
Thursday, February 26, 2009
பதிவு கடத்தப்பட்டது - ரகசிய சந்திப்பு விவரங்கள்
இப்போ எல்லாம் வலைபூக்கள் நிறைய கடத்தப் படுவது பற்றி நல்ல பதிவுகள் எழுதும் பலர் நடுக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. நமக்கு இந்த மாதிரி கவலைகள் ஏதும் இல்லை. ஏதாவது ஒரு பதிவையாவது கடத்த முடியுமா என்று ஆராய்ந்தேன். ஒரு முக்கியப் பதிவர், ஒரு ரகசியப் பதிவை எழுதி இன்னும் பதிவேற்றாமல் இருப்பது தெரிய வந்தது.
அவர் பதிவேற்றும் முன், நாம செய்துடலாம்னு பதிவேற்றிவிட்டேன். ஆனா பாருங்க, எனக்கு இதுல ஒண்ணும் புரியல. எல்லாமே சங்கேத வார்த்தைகளா இருக்கு. உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.
நகரின் பிரதான இடத்தில் அதிகம் அலட்டிக்கொள்ளாத வெளிச் சுவர். உள்ளே வந்தால், பரபரப்பு நகரம் தொலைந்து விட்டிருந்தது. ஆட்டோவில் வந்தவரை செக்யூரிட்டி நிறுத்தி விசாரிக்க, அவர் யாரைப் பார்க்க வந்தாரோ அவரை அவசரமாக அலைபேசியில் அழைத்து 'ஹல்லோ, நான் இப்ப இங்க' என்று தடுமாறினார்.
"ஹல்லோ, சார், நீங்கதான் ஆட்டோவில வந்ததா? இறங்கிடுங்க. இதோ நாங்க மரத்தடியில்தான் இருக்கோம்"
"ம்ம், ஜீன்ஸ், டி-ஷர்ட் எல்லாம் யூத்தா தான் இருக்கு. பாப்பம்"
"நாம வேற மாதிரி இருப்பாருன்னு நெனச்சோம்ல"
"ஹை கைய்ஸ் - எப்பிடி இருக்கீங்க"
"நல்லா இருக்கோம் சார். நீங்க?"
ஐயாம் பைன். ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? மத்தவங்க இன்னும் வரலியா?
மரத்தடி இருவரில் ஒருவர் நல்ல உயரம். இளைஞர். எப்போதும் சிரிப்பு.
இன்னொருத்தர் செம யூத். ஊருக்குப் போகும் பையை படையப்பா ஸ்டைலில் பினனால் போட்டுக் கொண்டிருந்தார். இந்தப் பூனையும் ...என்பது போல் உட்கார்ந்தாலும், ஆழ்ந்த அவதானிப்பு நடந்துகொண்டே இருந்தது. ஆட்டோவில் வந்த யூத்துக்கு இந்த யூத்திடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.
உயர இளைஞருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. "எங்க? வேளச்சேரி கேட் தானே? அங்கியே இருங்க. வேணாம், நடக்க வேண்டாம். நானே பைக்குல வந்து பிக் அப் பண்ணுறேன்
இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் அவருக்கே ஒரு குறுஞ்செய்தி. "அவரோட மொபைல் ஏதோ தகராறு. பேட்டரி ப்ராபளம் போல" என்றார். அப்புறம், "சார் நீங்க என்னோட வாங்க - நீ இங்கியே இரு சகா. மத்தவங்க வந்தா, கஜேந்திரா சர்கிளுக்குக் கூட்டிக்கிட்டு வந்திடு. நான் இவர இந்த மொபைல் தகராறு ஆசாமி கிட்ட ஏறக்கிவுட்டு, வேளச்சேரி பார்ட்டிய பிக் அப் பண்ணிக்கிட்டு வரேன். பெருங்குடி மைனர் பைக்குல வந்திடுவார். தல கொஞ்சம் லேட்டாகும்னாறு. கிளம்பிட்டாரு" என்று சொல்லிக்கொண்டே பைக்கை உதைத்தார்.
பினனால் தொற்றிக்கொண்டு ஆட்டோ யூத் போக, அப்சல்யூட் யூத் இங்கி பிங்கி போட்டுப் பார்த்து, புதிய காதலியை அலைபேசியில் கலாய்க்கத் துவங்கினார்.
கஜேந்திரா சர்க்கிளில் இறக்கிவிடப்பட்ட யூத் அங்கு செல்லமாக ஒரு தொப்பையுடன் நின்றுகொண்டிருந்த ஐ.டி. நண்பனைக் கண்டார். அவரும் இவரைக்கண்டு புளகாங்கிதம் அடைந்தார். யூத் "ஆபீஸில் ஆணி அதிகமா? ரொம்ப நாளா பதிவே வரல"
"இல்லையே. லாஸ்டு இரண்டு வாரத்தில் மூணு பதிவு போட்டு, மூணுமே மெகா ஹிட்டு"
"இருந்தாலும் உன்னோட அறிவியல் கதைகள் போல வராது. அது மாதிரி நிறைய எழுது" என்று ஐஸ் வைத்தார் யூத். ஐ.டி. அதைக் கண்டுகொள்ளாமல், 'என்ன ஆனாலும் உங்க கவித புரியவே மாட்டேங்குது' என்று புலம்பத் துவங்கினார். யூத் இலேசாக நடுங்கத் தொடங்கினார். இன்னிக்கு மீடிங்குல ரவுண்டு கட்டி கவிதைக்குப் பொழிப்புரை கேப்பாங்களோ என்று பயத்தில் வியர்க்கத் தொடங்கினார்.
"உங்களுக்கு எது சொந்த ஊர்?" ஐ.டி.
'எந்த ஊர் என்றவனே..இருந்த ஊரைச் சொல்லவா' என்று பாடினால் வயதைக் கூட்டிவிடும் அபாயம் இருந்ததால், நம்ம யூத் 'சிங்காரச் சென்னை' என்று நிறுத்திக் கொண்டார்.
'சென்னையா? அதுக்கு முன்னாடி?'
'நா பொறக்கவே இல்ல'
ஐ.டி.யின் கொலைவெறி அதிகமாகும் முன், ஒரு கருநீல மாருதி சத்தமே இல்லாமல் வந்து நின்றது. விடுவித்துக்கொண்டு இறங்கியவர் முகத்தில் எப்போதும் தவழும் புன்முறுவல். திரைப்படத்துறை என்பதால் கண்களால் காட்சிப்பொருளைச் சில நொடிகளில் அளந்து விடும் திறமை. நாம கேட்காமலே 'நான் கடவுள் வசூல் ரீதியில் ஆப்பு' என்றார். அதே மூச்சில் 'படம் நல்ல படம' என்றும் சொன்னார். அவரிடம் உள்ள வசீகரமே அந்த மந்தகாசமும், திரைப்பட உலகு பற்றிய prejudice இல்லாத கண்ணோட்டமும்தான். பெண்களைப் பற்றி ஆர்வத்துடனும், சுவாரஸ்யமாகவும் பேசினார் அந்த இயக்குனர். பெரிய காதல் மன்னனாக இருப்பார் போல என்று யூத் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
அதே சமயம் வேளச்சேரி கேட் அன்பரும், அப்சல்யூட் யூத்தும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் மெல்ல மெல்ல அரட்டை உருவம் பெற்றது. உயரமான, விருந்தோம்பல் இளைஞரும் வந்து சேர்ந்து, எல்லோரையும் டிபானி உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். யூத் நடுசென்டரில் உட்கார வைக்கப்பட்டார்.
எல்லோருக்கும் ஒரு பொதுக் குறை இந்த யூத் ஒரு பெண் என்று எல்லோரும் முதலில் எண்ணியது. இந்தப் பெயரை எப்படி, ஏன் வெச்சுக்கிட்டீங்க என்று நதிமூலம் தேடினார்கள். யூத் உண்மையைச் சொல்லி ஓரளவு தப்பித்துக்கொண்டார். ஆனாலும், விவாதம் களைகட்டாமல் இருந்தது. இவுங்க நிச்சயமா நம்ம கவிதைய அக்கு வேற ஆணி வேறயா அலசி கிழிக்கப் போறாங்களோ என்ற பயத்தில் யூத்தும், எங்கே ஏதாவது கேள்வி கேட்டால் கவிதை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் மற்றவர்களும் நெளிந்துகொண்டு இருந்தார்கள்.
அப்சல்யூட் மட்டும் பதிவுலகத்தை அசால்டாக அலசினார். தமிலிஷ் உரிமையாளர் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. நம்ம யூத்துக்கு இது எல்லாம் கண்ணக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்க வேண்டும். 'நீங்க தான் தமிலிஷ் ஓனர்' என்றாலும் ஏறக்குறைய ஒப்புக்கொண்டிருப்பார். எல்லோரும் இனிப்பு, பூரி, காப்பி என்று பிசியானார்கள். திடிரென்று ஒரு சலசலப்பு. பெருங்குடி மைனர் வந்துகொண்டிருந்தார். வந்தேவிட்டார். புகைப்படத்தின் வசீகர மேக்கப் (கறுப்புக் கண்ணாடி, க்ளீன் ஷேவ் இத்யாதி) இல்லாவிட்டாலும், நேரில் இன்னும் இளமையாக இருந்ததை நம்ம யூத் சொல்லியேவிட்டார்.
வந்தவுடன் அவரும் skc யில் பிசியாகி, உடனே தனது பிரத்தியேகத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். காமிரா (இது அவர் பேரோட ரைம் ஆகுதுல்ல!) கையில் வைத்துக்கொண்டு கோணங்கள் பார்க்க ஆரம்பித்தார். யூத்தும் முகத்தில் எப்பாடுபட்டாவது இளமையைக் கொண்டுவந்துவிட முயற்சி செய்தார். யூத் எதிர்பாராத நேரங்களில், கோணங்களில் படபடவென்று சுட்டுத் தள்ளினார் பெருங்குடி.
உயர இளைஞர் மீண்டும் பரபரப்புடன் யூத்திடம் "உங்களுக்காகவே 'அண்ணே' அவர்கள் சேலத்திலிருந்து நேராக வருகிறார்" என்றார். இப்படிப் போய்க்கொண்டிருந்த அந்தச் சந்திப்பு திடீரென்று பரபரப்பானது. ஒரு முன்னணி நடிகர், அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் விறுவிறுவென்று ஸ்டைலாக வந்தார். யூத்துக்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்த அந்த ஸ்டாருக்கு ஏனோ திருப்தியில்லை. அதனால் எதிர் வரிசையில் அமர்ந்து யூத்தை உற்று கவனிக்கத் தொடங்கினார். படு இயல்பாகப் பேச ஆரம்பித்தார் அந்த கார்பரேட் கம்பர். யூத்துக்கும் மகிழ்ச்சி. கடைசியில் நம்ம ரேஞ்சுக்கு ஒத்தரு வந்தார் என்று.
அப்சல்யூட் யூத் ஹைதை செல்கையில் சக பயணியை (இளம்பெண்தான்) கலாய்த்த கதையை graphic details உடன் விவரிக்க ஹால் திடிரென்று பெருமூச்சுகளால் உஷ்ணம் ஏறியது. 'இதெல்லாம் என்ன ஜுஜுபி' என்ற மந்தகாசப் புன்னகையில் இயக்குனர் மட்டும் கண்ணாடியினூடே தெரிந்தார். ஏற்கனேவே ஸ்டார் வந்ததில் 'லைட்ஸ் ஆன்' ஆக, இப்போது காமிராவும் ஆன் செய்யப்பட்டது. அப்புறமென்ன ஆக்சன்தான். பலவித கோணங்களில் தன்னைப் புகைப்படம் பிடிக்குமாறு ஸ்டார் ஆணையிட்டார். காமிராவும் அவ்வாறே செய்ய, மற்றவர்கள் ஷூட்டிங் பார்த்தார்கள்.
இலங்கை, இந்திய, மலேசிய (ச்சே, கோபால் பல்பொடி போல இருக்கு) விஷயங்கள் பேசப்பட்டன.
அப்சல்யூட் யூத் திடீரென்று 'நீங்க இந்தக் கவிதைகளை எப்போ எழுதினீங்க' என்றார்.
யூத் 'ஒரு மூணு நாலு மாசம் முன்னால'
'நான் எப்போ பதிவு போட்டீங்கன்னு கேக்கல; எப்போ எழுதுனீங்க?'
'நான் உண்மையாவே இப்போதான், சமீபத்தில் தான் எழுதினேன்'
'சமீபம்' என்ற வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டது.
இப்போ கம்பர் 'இதோ பாருங்க. அவன் என்ன கேக்குரான்னா.. அதாகப்பட்டது எந்த ஒரு மனுஷனுக்கும் ஒரு இருபது முதல் இருபத்தஞ்சு வயசுல காதல் வரும். வரணும். வந்தே தீரணும் (இப்போது நம்ம யூத் உடல் நடுக்கம் கண்டது). அது சில பேருக்கு துரதிர்ஷ்ட வசமாக கைகூடி கலியாணத்தில் முடியும். அதிர்ஷ்டசாலி பலபேர் கவிதை எழுதுவார்கள். நீங்க எப்படி?"
"நான் அந்த து.அதிர்ஷ்டசாலி வகை"
"அப்படியா. அப்போ இப்பதான் கவித எழுதத் துவங்கினேன்னு சொல்றீங்க. கவிதை படித்தால் தெரியுது" என்றதும், அவையில் எல்லோரும் தலையாட்டி ஆமோதித்தனர். யூத் ஒரு உபரி தகவலாக தனக்கு ஹிந்தி சிறிதும் தெரியாது என்றதும் அதனை மொழிப்பற்றின் உச்ச உணர்ச்சியாக எல்லோரும் பாவித்து, அடுத்த பல பதிவுகளுக்கு தலா ஐந்து பின்னூட்டம் தமிழிலேயே போடுவதாக யூத்திடம் சொன்னார்கள்.
காமிரா ஆசாமி மட்டும் பழக்கப்பட்ட மூன்றாம் கண் மூலம் யூத்தை அளந்து கொண்டிருந்தார். உதடுகள் 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று முணுமுணுப்பது தெரிந்தது.
அப்போது ஜீன்ஸ், பளீர் வெள்ளை சட்டையில் ஒரு கனவான் வர, எல்லோரும் 'அண்ணே' என்றனர். யூத்தும் அண்ணேவும் ஆரத் தழுவினர். பின்ன சும்மாவா? ஒன்றாகப் பதிவுலகில் காலடி வைத்தவர்கள். ஒரே குருப்பாகச் செயல்படுபவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டவர்கள். அண்ணே களைப்புடன் காணப்பட்டார். சேலம்-சென்னை நான்-ஸ்டாப் பயணம். உங்களைப் பாக்கத்தான் இவ்வளவு அவசரமா வந்தேன் என்று அண்ணே சொன்னதும் யூத் நெகிழ்ந்தார்.
இதற்கு இடையில் மருத்துவரும் வந்திருந்தார். செம்ம ஸ்மார்ட். அவரும் அண்ணேவும் அளவளாவினர். நம்ம host இளைஞர், யூத்திடம் 'கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா பதிவர் சந்திப்பே வெச்சுருக்கலாம்' என்றார். யூத் நல்லவேளை தப்பித்தேன் என்று எண்ணியபடி 'அடுத்த முறை முன்னாடியே சொல்றேன்' என்றார்.
அப்சொல்யூட் ஹைதைக்கு ஏற்கனேவே யூத் நிமித்தம் ட்ரைன் டிக்கெட் கான்செல் செய்து பேருந்தில் செல்ல புக் செய்திருந்தார். 8.45 க்கு பஸ் கிளம்பிவிடும். கோயம்பேடு செல்ல வேண்டும். கம்பரிடம் எதோ பேசி, தாஜா செய்து, அவரை ட்ராப் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் கிளம்பிப் போக, கூட்டம் ஒருவாறு கலைந்து கீழே வந்தது.
அப்போது இன்னொரு அலைபேசி நம்ம உயர இளைஞருக்கு. "இருக்கோம் தல. வாங்க" என்று சொல்லிவிட்டு, யூத்தைப் பார்த்து, "இன்னிக்கு நீங்க நரி முகத்திலேதான் முழிச்சிருக்கீங்க. அதிர்ஷ்டமும், அவர் சகாவான இப்போ அடல்ஸ் ஒன்லி எழுதும் அதிரடிப் பதிவரும் வராங்க" என்றார். யூத் நம்பவே இல்லை. இரண்டு நிமிடங்களில், பரபரப்பாக பதிவுலகை கலக்கும் அந்த இருவர் வந்தனர். மீண்டும் மேலே ஏறி சென்று காபி கடை ஆரம்பித்தது.
கூட்டம் மூன்று குழுவாக அமர்ந்தது. முதல் குழுவில் பதிவுலக சூப்பர் ஸ்டார், அண்ணே, மருத்துவர் மற்றும் ஐ.டி.நண்பர் பேசினார்கள். அதாவது, சூப்பர் ஸ்டார் சொல்வதை ஆர்வமாகக் கேட்டார்கள்.
யூத்துக்குப் பக்கத்தில் அமர்ந்த அதகள பதிவர் 'நீங்க மொதல்ல ஒரு பெண் என்று நினைத்து... ஒரு மெயில் கூட அனுப்பலாம்னு இருந்தேன்' என்றார். தான் பெண்ணாகப் பிறக்காததின் பெருமையை யூத் உணரத் துவங்கினார். பிறகு "உங்கள வேறமாதிரி கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். இப்படி இருக்கீங்களே' என்றார். யூத் 'ஞே'.
உயர இளைஞர் கொஞ்சம் உதவிக்கு வந்தார். திரைப்பட இயக்குனரும் சேர்ந்துகொண்டார். பலகோணங்களில் யூத்தை அலச ஆரம்பித்தனர். இயக்குனரின் படத்தில் யூத்துக்கு 'அப்பா' வேடம் தரலாம் என்று சொல்லப்பட்டது. ஏமாற்றம் அடைந்த யூத்தை இளைஞர் தேற்றி 'அண்ணன் வேடம் - பணக்கார அண்ணன் வேடம் தரலாம்' என்றார். இயக்குனரும் தன் பங்குக்குத் தந்தை வேடத்தின் சலுகைகளை விலாவாரியாக விளக்கத் தொடங்க, அதை பிரசுரித்தால் இந்தப் பதிவுக்கு 'U' certificate கிட்டாமல் போகும் அபாயம் உள்ளதால் எடிட் செய்துவிடலாம்.
அதிரடிப் பதிவர், அவ்வளவு இளமை என்றாலும், பிரமிக்கத்தக்க புரிதல்கள் பல விடயங்களில். நிச்சயம் ஹாலிவுட் தர இயக்குனர் ஆகிவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆபீஸில் மடிக்கணினி தராததுடன், பதிவுகளைப் பார்வையிடும் சலுகைகளும் தருவதில்லை என்று நொந்து கொண்டார். என்ன அநியாயம்! அதிலும் திருப்பூர்காரருக்கு ஒரு மடிக்கணினி யோகம். இவருக்கு இந்த மாதிரி டார்ச்சர். யூத்தும் அதியும் ரொம்ப நேரம் தனியாகப் பேசினார்கள். பெரும்பாலும் அதி எடுக்கும் படத்தில் சில பாடல்கள் யூத்துக்குக் கிடைக்கும் என்று தோன்றுகிறது. யூதத்தின் வாசிப்பு இன்னும் விரிவடைந்தால், வசனம் கூட கிடைக்கலாம். இதற்கு இடையே இயக்குனர், அதியை துணை இயக்குனராக தன்னிடம் பணிபுரியும்படி வற்புறுத்தினார்.
யூத் நடுநடுவே சூப்பர் ஸ்டார் பேசுவதை அவதானித்துக்கொண்டு இருந்தார். அரசியலை இவ்வளவு கூலாக பேசி யூத் பார்த்ததில்லை. அவ்வளவு தூய தமிழில், மேடைப்பேச்சுத் தமிழில் சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டிருந்தார். மற்ற மூவரும், கேட்டுக்கொண்டு இருந்தனர்.
மீணடும், சினிமா பற்றி ஆராய்ச்சி செய்யும் அந்த உயர இளைஞர், தனது இன்னொரு பரிமாணத்தை காட்டினார். அதாவது கிரிக்கெட். அப்போது, அதி தான் ஒரு வேகப் பந்து வீச்சாளர் என்றும் தற்போது காலில் அடிப்பட்டு இருப்பதால் ஓய்வு எடுப்பதற்கு அலுவலகம் ஒழுங்காகச் செல்வதாகவும் குறிப்பிட்டார். சினிமா ஆர்வலர் தான் கிரிக்கெட் விளையாட்டிலும் மிகுந்த ஆராய்ச்சி செய்து, ஐ.பி.எல். வருவதற்கு சுமார் இருபது வருடங்கள் முன்பே உலகின் சிறந்த வீரர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து மேய்ந்ததை (தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில்) விவரித்தார். லலித் மோடி உங்கள் வேலையில் சற்று உஷாராக இருங்கள். உண்மையிலேயே படு சுவாரஸ்யம். கார்ப்.கம்பர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர் எனவும் மாவட்ட அளவில் விளையாடி இருப்பதாகவும் யூத் அறிந்தார். தானும் (யாரு விசாரிக்கப் போகிறார்கள்) தனது அலுவலகம், லீக் மேட்ச், தெரு, வீடு, புக் கிரிக்கெட் என்று பெரிய பிளேயர் என்று பறைசாற்றிக்கொண்டார்.
வேளச்சேரி இளைஞர், கடைசி வரை ஒன்றுமே பேசாமல், திருவிழா பார்க்கும் சிறுவனின் ஆர்வத்துடன் வலம் வந்தார். 'அத்தி' பூ போல் எப்போதாவது சில வார்த்தைகள் பேசினார். மணி இரவு ஒன்பதை நெருங்க, பிரியும் நேரம் வந்தது. யூத் பார்த்த அனைவரையும் (IIT விடுதி மாணவியையும் விட்டுவைக்கவில்லை) மும்பை வரும்படி கேட்டுக்கொண்டார்.
அண்ணே போலவே காமிரா பதிவரும் யூத் காதருகில் வந்து 'ரொம்ப முக்கியமான வேலைய பாதில விட்டு விட்டு உங்களுக்காக வந்தேன்' என்றதும் உண்மையிலேயே யூத் கொஞ்சம் ஆடிப் போயிட்டார்.
அவரவர் கிடைத்த வண்டியில் தொற்றிக்கொள்ள, யூத், இயக்குனர் மற்றும் மருத்துவருடன் மாருதியில் பயணித்து வீடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு இடத்தில் சூப்பர் ஸ்டார் மற்றும் அதி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த இயக்குனர், வண்டியை நிறுத்தினார். அங்கு இருந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். சூடான விவாதங்கள். மருத்துவர் செம்ம பார்ம்ல இருந்தார். கிட்டத் தட்ட ஒன்றரை மணிநேரம். அதைப் பற்றி பேசினால் இன்னொரு பதிவே போட வேண்டும்.
இன்னொரு விஷயம். அந்த இரு டாப் பதிவர்களும் நம்ப முடியா எளிமை. உண்மையிலேயே அந்தக் கடையில் அவரை அடையாளம் கண்டுகொண்ட படு இளம் பதிவர்கள் மூவர் (வயது ஒரு இருபது இருக்கலாம்) 'பதிவர் சந்திப்பா' என்று அருகில் வந்து ஆட்டோகிராப் கேட்கும் வரை வந்துவிட்டனர். யூத்தும் குஷியில், கையெழுத்துப் போட பேனா வெளியில் எடுத்தார். பையன்களில் ஒருவன் "உங்களுக்கு ஆட்டோகிராப் கிடைச்சுதா அங்கிள்' என்று கேட்டதும் ஒரு பலூன் சுருங்கி, வீடு போய் சேர்ந்தது.
இது அந்தப் பதிவருடைய 50 வது பதிவு. ஆதலால் கொஞ்சம் பாத்து ஆதரவு கொடுங்கள்.
