Friday, October 30, 2009

முன்னார் - சில புகைப்படங்கள்

வெயிலான் நண்பர்களுடன் நீலகிரிக் காடுகளுக்குள் சென்ற நேரம். யார் அந்த நண்பர்கள்? செல்வா, சமவெளி மானாகிய அடர்கானகப் புலி மற்றும் உமா கதிர். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஜ்யோவ், வால்பையன், லதானந்த் இவர்களும் அதே மலைத்தொடர்களின் இன்னொரு பகுதியில் என்று இருந்த நேரம். எனக்கும் ஆபீஸில் off-site என்று சொல்லப்படும் அலுவலகமில்லாத இடத்தில் கலந்தாலோசனை என்று முடிவாக, ஆபிஸ் பெரிய தலைகளுடன் கொச்சி வழியாக முன்னார் சென்றேன்.


வெயிலான் போல அழகாக எழுத வரவில்லை. அதனால் பரிசல் எப்போதும் போல ஆரம்பித்து வைத்த ட்ரெண்டை, வழக்கம் போல ஆதி தொடர, நானும் என்னால் முடிந்ததை....


இந்தப் புகைப்படங்கள் எதுவும் நான் எடுக்கவில்லை. என்னிடம் மொபைல் காமிரா தவிர்த்து வேறு நல்ல காமிரா இல்லை. அன்பளிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் எப்போதும் போல்.

ஆதலால், புகைப்படங்கள் நன்றாக இருந்தால், அது எடுக்கப்பட்ட இடத்தின் பெருமையாக இருக்கலாமென்றும், நன்றாக இல்லையென்றால் காமிரா/எடுத்தவர் சரியில்லை என்றும் கொள்க.



கொச்சி



தேயிலைத் தோட்டம் - தூரத்து ஏரி மற்றும் மேகங்கள்



நீர்வீழ்ச்சி?

 
அருவி?

    

குளிக்க முடிந்தால் அருவி
பயமாக இருந்தால் நீர்வீழ்ச்சி



பச்சை நிறமே பச்சை நிறமே

   
என் ஜன்னலுக்கு வெளியே


மலைராணி முந்தானை


நீர்வீழ்ச்சி தீமூட்டுதே


இயற்கையென்னும் இளைய கன்னி


மீண்டும் மீண்டும்
 தண்ணீர் தண்ணீர்

 




அடர்கானகப் புலிகள் இருக்கலாம்



சமவெளி மான்களும் தென்படலாம்

Wednesday, October 28, 2009

யானை, புலி மற்றும் அலைபேசி

சஷி தரூர் - தற்போதைய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர். முன்னாள் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி - ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய வேலை பார்த்து, UN-Secretary General பதவிக்கு ஆசைப்பட்டு, நிறைவேறாமல் போனதைக் கடந்து வந்தவர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் –

the Elephant, the Tiger & the Cellphone என்ற தலைப்பில்

சென்ற வாரம் பரோடாவிலிருந்து வேலை மாறி சென்னை சென்ற என் nephew (மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?) விமானத்தில் எடை அதிகமாவதைப் பற்றி கவலைப்பட்ட போது, என்னாலான சிறிய உதவி என்று இந்தப் புத்தகத்தை அவனிடமிருந்து ...அதென்ன...லபக்கிவிட்டேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பற்றிய சிந்தனை என்று பொத்தாம் பொதுவாக இந்தப் புத்தகத்தைப் பற்றி (படிக்காமலேயே) சொல்லலாம் என்று நினைக்கிறேன். சஷி தரூரின் பல காலக் கட்டுரைகளால் நிரம்பிய இந்தப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது சிலவற்றை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இதில் நிறைய அனுகூலங்கள்: பதிவெழுத மேட்டர் கிடைக்கிறது; கற்பனை வறட்சி பற்றி கவலைப்பட வேண்டாம்; எதிர் வினைகள் வந்தால், 'அதானே, இது என் கருத்து இல்லை சார்/மேடம்' என்று சொல்லி நழுவலாம்; 'மொழியாக்கம்' ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டு போட்டுக்கொள்ளலாம்.

இனி Over to Mr.Sashi.

முன்னுரை: ஏன் இந்தியா முக்கியமாகிறது?

2007 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவுக்கு அறுபது வயதானது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வாய்ப்புகள் தரவிருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் ஏன் அவசியமாகிறது?

பிரித்தானிய வரலாற்றாளர் E.P.தாம்சன் அவர்களின் கூற்றுப்படி "இந்தியா, எதிர்கால உலகின் மிக முக்கியமான நாடாகும்". நான் இத்தகைய தீர்ப்பைச் சொல்ல முடியாவிடினும் பத்து வருடங்கள் முன்னர் எனது 'இந்தியா - நள்ளிரவிலிருந்து நூற்றாண்டு வரை' என்ற புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான விவாதங்களின் நாற்சந்திகளில் இந்தியர்கள் நிற்பதைக் கண்டேன்.


உணவா - விடுதலையா என்ற விவாதம்: ஜனநாயகம் ஏழ்மையைப் போக்கும் சாதனங்களைத் தர வல்லதா அல்லது அதன் கட்டுவிக்கப்பட்ட திறமையின்மைகள் வேகமான வளர்ச்சியைத் தடை செய்கிறதா? ஒரு வளரும் நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத, தற்காலிக கூட்டணியாட்சி முறை ஒத்து வருமா? இன்றைய தலைமுறை பொருளீட்டுவதில் மட்டும் நாட்டம் கொள்ளும் சூழலில், அரசியல் சுதந்திரம் ஒரு தேவையற்ற கவனச் சிதறல் எனலாமா?

மையக்கட்டுப்பாடா மாநில சுயாட்சியா விவாதம்: நாளைய இந்தியா ஒரு வலுவான மைய அரசால் - மொழி, சாதி, பிராந்திய விடயங்களால் துண்டாகும் போக்கினைக் கட்டுப்படுத்தும் ஆளுமையுடைய அரசால் - ஆளப்பட வேண்டுமா அல்லது மையக்கட்டுப்பாடு இல்லாத அரசே சிறந்ததா? ஆண்டிப்பட்டியையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் பாதிக்கும் ஒவ்வொரு முடிவும் டில்லியில் தான் எடுக்கப்பட வேண்டுமா?

பன்முகமா, அடிப்படைவாதமா என்னும் விவாதம்: பல இனக்குடிகள் இருக்கும் நாட்டில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட (மேற்கத்திய நாடுகளின் கவர்ச்சியில் ஏற்பட்டது என்று தாக்கப்படும்) மதற்சார்பின்மை இன்றியமையாததா அல்லது இந்தியா, மற்ற பல மூன்றாம் உலக நாடுகள் போல, ஏறக்குறைய நம் எல்லா அண்டைநாடுகள் போல, நம்முடைய பிரத்யேக மத அடையாளத்துடன் திகழ்வதில் நாட்டம் செலுத்த வேண்டுமா?

கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்: நாற்பது ஆண்டுகளாக தன்-நிறைவு என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்த இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு தன் கதவுகளை இன்னும் திறக்க வேண்டுமா அல்லது மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் அதன் ஊடே, அனுமதிக்கவே தகாத சீரழிவுகளை இந்திய சமுதாயத்தில் கொணருமா?
MTV யின் கேடுவிளைவிக்கும் மோகவலையில் இருந்து நம் இளைஞர்களைப் பாதுகாக்க, வேலிகளை உயர்த்த வேண்டுமா?

நான் என்னுடைய புத்தகத்தில் சொல்லாத ஐந்தாம் விவாதமும் இருக்கிறது. என்னுடைய அப்போதைய எஜமானர்களான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளித்து அதை எழுதவில்லை. துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம். பயங்கரவாதத்தின் புது அச்சுறுத்தல்களுடனும் புதுப்பிக்கப்படும் அணு ஆயுதப் போரின் சாத்தியங்களிலும் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தற்போது இராணுவப் பாதுகாப்பு (அயல் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது)அவசியம் என்பவர்களுக்கும் மனிதப் பாதுகாப்பே (பசிப்பிணியிலிருந்தும், வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்தும் விடுதலை) அத்தியாவசியம் என்னும் குழுவினருக்கும் கொள்கைப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது.

மேற்கூறிய அனைத்தும் வெறும் அறிவுஜீவித் தனமான விவாதங்களல்ல. இவை தேசிய, உலக அரங்குகளில் அரங்கேற்றப்படுபவை. நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இப்ப மீண்டும் நான். என்ன? மண்டை காயுதா? முன்னுரை கொஞ்சம் இறுக்கமான மொழியில் தான் இருக்கிறது. போகப் போக ..... நீங்கள் இந்த மொழிக்குப் பழகி விடுவீர்கள். எவ்வளவு பதிவுகள் நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்கள் படிக்கிறோம். கொஞ்சம் ஓய்வெடுக்க இந்த மாதிரியும் படிக்கலாமேன்னு.....

இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?

Saturday, October 24, 2009

பற்றியும் பற்றாமலும் - காங்கிரஸின் ஏறுமுகம்-சிவசேனையின் வீழ்ச்சி மற்றும் சில

ஒரு வழியாக மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. காங்கிரசுக்கு இப்போது சுக்கிர தசை. செல்லுமிடமெல்லாம் வெல்லுகிறது. பூவோடு நாராக பவாரின் கட்சியும் மணக்கிறது. சிவசேனைக்கு பெருத்த பின்னடைவு. பி.ஜெ.பி. கேட்கவே வேண்டாம். சிவசேனை/பி.ஜெ.பி. கூட்டணியின் வாய்ப்புகளை (சுமார் 44 தொகுதிகளில்) ராஜ் தாக்கரேயின் MNS கட்சி பாதித்து இருக்கிறது. முதல் முறை பங்கேற்ற இந்தத் தேர்தலில் 13 இடங்கள்; அதிலும் மும்பையில் ஆறு இடங்கள் என்று அமர்க்கள அறிமுகம் அந்தக் கட்சிக்கு. பொதுவாக வேறு மாநில மக்களுக்கும், குறிப்பாக உ.பி./பீகார் மக்களுக்கும் இது சற்று பீதி தரும் செய்தி. அறுபதுகளில் திராவிட இயக்கங்களின் தீவிரம் ராஜ் தாக்கரேவிடம் காணலாம். போலவே, பதவி சுகம் கிடைத்ததும் நீர்த்துப் போய்விடும் என்றும் நம்பலாம். ஆந்திராவிலிருந்து இருபது வருடங்கள் முன்பு வந்து மும்பையில் வாழ்க்கை அமைத்துக் கொண்ட மூர்த்தி என்னும் நண்பர் "இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி ஒரு குறுகலான சிந்தனையா" என்று ராஜ் தாக்கரே பற்றி கவலைப்பட்டார். நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingoism பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் அவர் இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறது.

“சார், எத்தனை தடவ சொல்லுறது - அரசியல் பேசாதீங்கன்னு” என்று டீக்கடைக்காரர் விரட்டுவதால்....

******************************************************

SAP என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தின் தலைவரான ரன்ஜன் தாஸ் என்னும் 42 வயது இளைஞர், உடற்பயிற்சி செய்து முடிந்ததும், பலமான மாரடைப்பால் உடனே மரணமடைந்த செய்தி, தினம் அலுவலகம்-வீடு-அலுவலகம் என்று சுழலும் பலரை கொஞ்ச நேரமாவது கவலைப்பட வைத்தது. குவஹாத்தியில் பிறந்து, அமெரிக்காவில் MIT/Horward என்று அமர்க்களம் செய்த அவருக்கு குடி/புகைப்பிடித்தல் போன்ற எந்தப் பழக்கங்களும் இல்லை என்பது ஆச்சரியத் தகவல். இந்திய மென்பொருள் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான Nasscom ன் தலைவராக இருந்த தேவாங் மேத்தா தன் 40 வயதுக்குச் சில மாதங்கள் முன் சிட்னி மருத்துவமனையில் இறந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். கொஞ்ச நாட்களாகவே 'இந்தியர்களுக்கு மற்ற இன மக்களைக் காட்டிலும் இதய நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று பல அறிக்கைகள் வருவது நினைவுக்கு வந்தது. இந்த பயங்களாலேயே நம்ம நண்பர் தேவன்மாயம் உடல் நலம்/நோய் அறிகுறிகள் பற்றி எழுதி வரும் பல இடுகைகளை படிக்காமலே நகர்ந்து விட்டேன். கொஞ்ச நாட்கள் முன்பு துவங்கியிருந்த காலை மென்-ஓட்டத்தை சோம்பல் நிமித்தம் நிறுத்தி இருந்தவனைக் கடிந்துகொண்ட (ச்சும்மா) மனைவியிடம் 'ரொம்ப எக்சசைஸ் செய்தாலும் ஆபத்து' என்று செய்தித்தாளைக் காண்பித்தேன். மொக்கை எழுதி பரஸ்பரம் சொறிந்துகொள்ளும் பிரபலங்களை ஈனமாகப் பார்க்கும் அறிவுஜீவி போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இது தேறாத கேஸ்' என்று நகர்ந்து விட்டாள்.

******************************************************

நீங்கள் எல்லாம் எப்படியோ தெரியாது. எனக்கு அறிவியல் என்றாலே .....உங்களுக்கு நான் எழுதும் கவிதை போல. கன்னா பின்னா அலர்ஜி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, இரண்டு வருட இயல்பியல் வகுப்பில் நான் ஊன்றி கவனித்த ஒரே விடயம் எங்கள் ஆசிரியைக்கு இருந்த இலேசான மீசை தான். அப்படிப் பட்ட ஆசாமிக்கு கணினி, அலைபேசி, அட சாதரண தொலைக்காட்சிப்பெட்டி போன்ற வஸ்துகள் தரும் தினசரி தொழில்நுட்பத் தொந்தரவுகள் சொல்லி மாளாது.

ஒரு முறை கார்க்கியிடம் 'டேய், என்னோட ப்ளாகை யாராவது ஹேக் பண்ணிவிட்டால், நீ தான் சரி செய்யணும்' என்றேன். அரை நிமிடம் மௌனம். பிறகு முழுதாக மூன்று நிமிடங்கள் வெடிச்சிரிப்பு சிரித்தான். 'தல...உங்க ப்ளாக...ஹேக் ....சரி சரி அப்படி ஒரு நல்லது நடந்தால், செய்தவருக்கு என் செலவில் பார்ட்டி தருவேன்' என்கிறான். எவ்வளவு பொறாமை பிடித்த மனிதர்கள்!

ரொம்ப நாட்களாகவே காயசண்டிகை வயிறு போல என் அலைபேசியின் பாட்டரி மின்சாரத்தை எந்நேரமும் உண்டபடி இருந்தது. ஆபீஸில் ஒரு geek, 'ஹலோ, ப்ளூ டூத் ஆன்லியே இருக்கு சார். யூஸ் செய்யாத போது ஆஃப் செய்துவிடுங்கள்; வைரஸ் வேறு தாக்கும்' என்றான். கேவலமாக உணர்ந்தாலும், அவனையே ஆஃப் செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களுக்கு மட்டுமில்லாது, கார்க்கி போன்ற 'up the curve' இளைஞர்களுக்கும் சுவாரஸ்யமான வலைப்பூ PKP அவர்களின் தளம். One of my most favourite bloggers and strongly recommended for all. சத்தமில்லாமல், சச்சரவுகள் இல்லாமல், அனாயாசமாக (450 Followers) சாதனை புரிந்துவரும் அவருக்கு என் வாழ்த்துகள்.


******************************************************
சமீப காலங்களில் என்னைக் கவர்ந்த பதிவர் வானவில் கார்த்திக். வசந்த் குமார் மூலம் இவர் பற்றி அறிந்தேன். கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவர் (தகவல் சரிதானே?) இவ்வளவு ஆர்வத்துடன், அதுவும் கச்சிதமாக, எழுதுவது மகிழ்ச்சியான ஆச்சரியம். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் ஸ்டைல். வெங்கிராஜா, கார்த்திக் போன்றவர்கள் இன்னும் ஐந்து வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. செய்வார்களா?

******************************************************

ஆத்மாநாமின் கவிதைகள் சில:

எழுதுங்கள்

எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்

உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை

வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்



திரும்புதல்

சரக்கென்று
உடல்விரித்துக்
காட்டும்
கற்றாழையின்
நுனியிலிருந்து
துவங்கிற்று வானம்

எங்கெங்கோ
அலைந்து திரிந்து
திரும்பிற்று மனம்

வழக்கம் போல்

கடல் மணல் புல்தரை
சாலை வாகனங்கள்
கோணல் மாணல் மனிதர்கள்
திரும்பிக்கொண்டு
எங்கிருந்து
கப்பல்கள் காத்திருக்கின்றன
திருபிச் செல்ல

நானும் திரும்ப வேண்டும்
தினசரியைப் போல
ஒவ்வொரு நொடியாக
அடுத்த நாள் காலைவரை


******************************************************

Tuesday, October 20, 2009

நம்பிக்கைத் துரோகம்



கற்பனை வறட்சி, சுய சிந்தனையின்மை போன்ற உபாதைகளில் அடிக்கடி நான் அவதிப்படுவதால், அவ்வப்போது ஆங்கிலத்தில் படித்தவற்றில் சிலவற்றை மொழியாக்கம் செய்யும் உத்தேசம் இப்போது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதை, கவிதை, கட்டுரை என்று. எப்படி இருந்தாலும் ரொம்ப பாவம்தான் நீங்கள்!

இந்த முறை ஒரு Topical கவிதை
நம்பிக்கைத் துரோகம்

எவ்வாறு நான் ஒருவரை நம்ப முடியும்
அவ்வொருவர் என் நம்பிக்கையைத் தகர்த்தபின்
என் இதயம் வெறுமையாக
பனிக்கட்டி போல் உறைந்து
உடையும் தறுவாயில்
நீர் கசிகிறது
அந்நீர் சொட்டி, வழிந்தோடுகிறது
அந்த நம்பிக்கை
அந்தத் தருணம்
அதற்குள் இருந்த எல்லாவற்றையும்
நீ உடைத்தெறிந்து விட்டாய்
உன்னையோ உன் நண்பர்களையோ
நம்புவதற்கில்லை
ஆனால் நாம் நண்பர்களில்லை என்றில்லை
வெறும் நட்பு - நம்பிக்கையற்ற நட்பு மட்டுமே
என் நம்பிக்கையை மீள்பெற நீ முயன்றிட வேண்டும்
உன்னை மீண்டும் எப்போதேனும் நம்புவதற்கான
காரணங்களை எனக்குப் புரியச் செய்
உடைந்த நம்பிக்கைகளை
சீரமைக்க வேண்டும்
நீ கடினமாக முயல வேண்டும்
அதற்காக நீ என்னை
வெறுக்கவேண்டும் என்றில்லை
உன்னை மீண்டும் நம்பலாமென
எனக்குக் காண்பியேன்

(Jennifer Rondeau என்னும் கவிதாயினியின் ஆங்கிலக் கவிதையிலிருந்து (முடிந்தவரை) மொழியாக்கம். )

என் பிரிய ஜ்யோவுக்காக :((

Wednesday, October 14, 2009

கொன்றை வேந்தன்


சொல்லி வைத்தாற்போல்
எல்லா மரங்களிலும்
மஞ்சள் தொப்பிகள்
ஊரிலிருந்து வந்த அவள்
சரக்கொன்னை பூக்கள் என்றாள்
உபரித் தகவலாக
சிவனுக்கு உகந்தது என்றாள்
மயான சாம்பலாலும்
கழுத்துப் பாம்புகளாலும்
அஞ்சியிருந்த நான்
இரண்டு எட்டெடுத்து
சரக்கொன்றைகளில் இரண்டையுருவி
சிவன் கழுத்திலும் போட்டேன்
கழுத்தின் நீலம்
மஞ்சளாக மாறிற்று
சூடப்படாத
மீதிக் கொன்றைகளில்
நீலம் பாய்ந்தது இரவில்

(உயிரோசை 29th June 2009 மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

Monday, October 5, 2009

பற்றியும் பற்றாமலும் - உன்னைப் போல் ஒருவனும் மற்றவர்களும்

பொதுப்புத்திகளால் பாராட்டப்பட்டு, கலகக்காரர்களால் கிழித்து தோரணம் கட்டப்பட்ட உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தேன். பிடித்திருந்தது. Nice, crisp movie. மோகன்லால் பாத்திரம் பிடித்திருந்தது. ரொம்ப நல்லாவும் செய்திருக்கார். லட்சுமியும் கொடுக்கப் பட்ட பாத்திரத்தில் நன்றாகச் செய்தார் என்று தோன்றியது. முதல்வருக்குக் கூழைக் கும்பிடு. மற்ற இடத்தில் திறமை காண்பிக்காத வெற்று அதிகாரம் என்று நன்றாகவே இருந்தது அவருடைய நடிப்பு. நிறைய எதிர்மறை விமர்சனங்கள் படித்திருந்ததால் நுட்பமாகப் பார்க்க முடிந்தது. அல்லது அப்படி நான் நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் தமிழ் வலையுலக இலக்கணப்படி வெட்கி நிற்க வேண்டிய விஷயம் என்றாலும் பாப்கார்ன், பெப்சி பற்றியும் ஒருபுறம் கவலை இருந்தது.

எதிர்பார்த்தபடியே 'மூன்றாவது பெண்டாட்டி' காட்சியில் சந்தான பாரதி வசனத்திற்கு மும்பையிலும் சிரிக்கிறார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. அதே போலவே கடைசியில் அந்த ஐ.ஐ.டி. அம்பியும், அடையாளம் சொல்லிய போலிசும் அந்தர் பல்டி அடிப்பதும். அதற்கும் நிறைய பேர் நெகிழ்ந்து போகிறார்கள். இவை எல்லாம் தவறான கண்ணோட்டம் என்று புரிந்த அளவில் எனக்கும் கொஞ்சம் பொதுப்புத்தி கழன்று, இலேசாக ஒளிவட்டம் தலையின் பின் சூழ்வதை உணர முடிந்தது.

மற்றபடி இவ்வளவு குடல் ஆபரேஷன் தேவை இல்லை படத்திற்கு என்பது என் எண்ணம். இவ்வளவு சச்சரவுகளில் ஊர் இரண்டு பட்டதில் என்னைப் போன்ற கூத்தாடிகளுக்கு பொழுது நல்லாப் போச்சு.

இந்த கலக விமர்சனங்களால் கவரப்பட்டு

சென்ற வாரம் டி.வி.யில் பார்த்த 'பம்மல் கே.சம்மந்தம்' படத்தில் ஒரு காட்சி. கமல், ஸ்ரீமன் இருவரையும் லாக்-அப்பில் போட்டுவிடுவார்கள். ஸ்ரீமன், கைகளை மடக்கி 'அய்யா, தயவு செய்து வெளிய விடுங்க' என்று கெஞ்சுவார். கமல் 'ச்சே, என்னடா பிச்சையா எடுக்குற! இது என்ன'னு சொல்லி மடங்கிய விரல்களை சரி செய்வார். "இது தொழு நோயாளிகளைப் பகடி செய்கிறதா? ஒட்டு மொத்தமாகப் பிச்சைக்காரர்களைப் பரிகசிக்கிறதா?" என்றெல்லாம் யோசித்தேன்.

இந்த மாதிரி நுண்ணரசியல்களுக்கு சுமார் ரக கவிதைகள் எழுதுவது எவ்வளவோ மேல் என்று புரிந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்ய side-show எத்தனை பேர் பூனைக்குட்டி வைத்திருக்கிறார்கள் என்றும், எத்தனை பேர் அவ்வாறு மற்றவர்களின் பூனைக்குட்டிகளைக் கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அவதானிப்பது. Every crisis brings in new (job) opportunities!

****************************************************************

சென்ற வாரம் திடீரென்று உடல் நடுங்கி டெம்பரேச்சர் நூற்று இரண்டைத் தொட்டது. கொதிக்கும் வெய்யிலில் ஸ்வெட்டர் அணிந்து, மனைவி இழுத்துச் சென்றதால் மருத்துவமனை சென்றேன். (எனக்கு டாக்டர், நர்ஸ், ஊசி, டெட்டால் வாசனை, வெளியில் காத்திருத்தல் இந்த காம்பினேஷன் என்றாலே தலை சுற்றி, மயக்கம் போட்டு விடுவேன்). இரத்த அழுத்தம், இரத்தப் பரிசோதனை என்று முதல் ஓவரிலேயே சிக்சர்கள். எதுக்கு இத்தனை பில்ட்-அப்? பேசாமல் மாத்திரைகள் கொடுங்கள். நான் ஓடிப் போய் விடுகிறேன் என்று சொல்ல நினைத்தேன். நா வறண்டிருந்ததால் நான் பேச முயலும் முன் டாக்டர் நகர்ந்து விட்டார். என் மனைவியிடம் 'மஞ்சள் காமாலை, மலேரியா இதெல்லாம் இல்லை என்று ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம்' என்று சொல்லவே, 'ம' வில் துவங்கும் வியாதிகள் வேறென்ன என்று ஒரு கவித்துவ சிந்தனையும் எழுந்தது. நர்சிங் ஹோம் சென்று ஆண்டுக் கணக்குகள் ஆனதால் கக்கத்தில் தெர்மா மீட்டர் வைப்பதும், கையில் போடாமல் பேண்டைத் தளர்த்தச் சொல்லி ஊசி போடுவதும்.....எல்லாம் எனக்கு புதுசு கண்ணா புதுசு. அப்போலோ மருத்துவமனை அனுபவங்கள் பற்றிய சுஜாதாவின் எழுத்துகள் ஞாபகம் வந்தது - "மருத்துவமனையில் நமக்கு நடந்தேறும் அவமானங்கள் ஒரு மந்திரி முன்னால் கூட நடக்காது :) ".

மருத்துவ மனையில் ஒரு எட்டு மணிநேரம் கிடத்தி இருந்தார்கள். சுர வேகத்தில் ஏதோ அனத்தினேன் என்று பின்னால் சொன்னார்கள். அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும் தப்பித்தீர்கள். அப்போது அய்யனார் போன் செய்தார். பெரிய அரசியல் தலைவர்கள் பாணியில், 'கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் வற்புறுத்தல். மீண்டும் கூடிய விரைவில் களப்பணிக்கு வருவேன் என்று கூறிக்கொள்ளும் இவ்வேளையில்' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே 'சரி அப்புறம் பேசலாம்'னு வைத்து விட்டார்.

****************************************************************

நேசமித்ரன் (எவ்வளவு அழகான பெயர்!) கவிதைகள் பற்றி வேலன் முன்னமே எழுதியிருந்தாலும், நானும் அவரைப் பற்றிச் சொல்ல விழைகிறேன். மொழி ஆளுமை, கருத்தாழம் இரண்டும் கூடி வருவது வெகு சிலருக்கே வாய்க்கிறது. நேசன் அத்தகையவர்களுள் ஒருவர். அவருடைய சில கவிதைகள் இங்கே. எல்லாவற்றையும் படிக்க அவர் தளத்திற்குச் செல்லுங்கள். என்னுடைய 'மிகப் பிடித்த' கவிஞர்களுள் இவரும் ஒருவர். Dont miss him.

தார் சாலை லாடங்களும்

ராணி தொலைந்து
மலர் வைத்தாடும் சதுரங்கத்தில்
உறைந்த பிறையின் நிழல்
ஓதமென

பாதி எரிகையில் பெய்த மழைக்கு
பிரேதம் எரிப்பவள் வைத்த பெயர்
புணர்கையில் புறம் முட்டிய பன்றி
நான்
கருணை

மட்கிக் கரையாத ஆணுறைகள் அடைத்த
கழிவுத்தொட்டியில் இறங்க மானிட்டருக்கு பிரதியாய்
நச்சினிக்க கஞ்சா

அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயம்

பிதுக்கி எடுத்த தோட்டா
நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது யுத்தத்தை


வெண் பாஸ்பரஸும் மல்பெரி இலைகளும்

இடது முலை மேல் அமர்ந்து
இடைவளைவில் எச்சமிட்டு மின்சாரமணியோசைக்கு
அதிர்ந்து பறக்கும் பறவை
மின்மயானத்தில் பசியாறுகிறது

யாருமற்ற வெளியின் குரல்கள்
கடல் மிச்சமிருக்கும் சங்கினை
சுற்றி வரும் குளவியை துரத்தியபடி

யானையின் எலும்புகூடாய்
சூழத் துவங்குகிறது தனிமை

மல்பெரி இலைகளை தின்று கொண்டிருக்கிறாள்
சிறகு முளைக்கும் கனவுகளுடன்


மழை - மூன்று குறிப்புகள்

1.
நகக்குறி நிலாப் பிறை
உள்வாங்கும் கடல்
களபலியாய் பற்றி எரியும் பனை
விடை பெறுகையில் மட்டும் பேசிப் போகும் காற்று

2.
மேக நிழல் கடக்கும் உயரத்தில்
பிரசவிக்கும் யானையின் பிளிறல்
அகவிப் பறக்கிறது மழைப் பார்க்க ஆயிரம் கண்
தோகையுள்ள பறவை

3.
புணர்ந்து மழை பெய்யும் நதியாடி
நிழல் பாயில் அமர்ந்து தலை
கோதிக் கொண்டிருக்கிறான் இன்னொரு நாளில்
சிறு தெய்வம் ஆகப் போகும் பெண்ணை

முன்பெல்லாம் கொஞ்சம் புரிகிற அறிகுறி இருந்தது இவர் கவிதைகளில். இப்போது மெல்ல எழும் விமானம் மேலே மேலே சென்று வானில் மறைவதுபோல ஒன்றும் புரியவில்லை, தெரியவில்லை - விமானம் வானத்தில் இருக்கிறது என்ற ஒன்றைத் தவிர. இவர் இருக்க வேண்டிய உயரம் மிக மிக அதிகம்.