பொதுப்புத்திகளால் பாராட்டப்பட்டு, கலகக்காரர்களால் கிழித்து தோரணம் கட்டப்பட்ட உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தேன். பிடித்திருந்தது. Nice, crisp movie. மோகன்லால் பாத்திரம் பிடித்திருந்தது. ரொம்ப நல்லாவும் செய்திருக்கார். லட்சுமியும் கொடுக்கப் பட்ட பாத்திரத்தில் நன்றாகச் செய்தார் என்று தோன்றியது. முதல்வருக்குக் கூழைக் கும்பிடு. மற்ற இடத்தில் திறமை காண்பிக்காத வெற்று அதிகாரம் என்று நன்றாகவே இருந்தது அவருடைய நடிப்பு. நிறைய எதிர்மறை விமர்சனங்கள் படித்திருந்ததால் நுட்பமாகப் பார்க்க முடிந்தது. அல்லது அப்படி நான் நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் தமிழ் வலையுலக இலக்கணப்படி வெட்கி நிற்க வேண்டிய விஷயம் என்றாலும் பாப்கார்ன், பெப்சி பற்றியும் ஒருபுறம் கவலை இருந்தது.
எதிர்பார்த்தபடியே 'மூன்றாவது பெண்டாட்டி' காட்சியில் சந்தான பாரதி வசனத்திற்கு மும்பையிலும் சிரிக்கிறார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. அதே போலவே கடைசியில் அந்த ஐ.ஐ.டி. அம்பியும், அடையாளம் சொல்லிய போலிசும் அந்தர் பல்டி அடிப்பதும். அதற்கும் நிறைய பேர் நெகிழ்ந்து போகிறார்கள். இவை எல்லாம் தவறான கண்ணோட்டம் என்று புரிந்த அளவில் எனக்கும் கொஞ்சம் பொதுப்புத்தி கழன்று, இலேசாக ஒளிவட்டம் தலையின் பின் சூழ்வதை உணர முடிந்தது.
மற்றபடி இவ்வளவு குடல் ஆபரேஷன் தேவை இல்லை படத்திற்கு என்பது என் எண்ணம். இவ்வளவு சச்சரவுகளில் ஊர் இரண்டு பட்டதில் என்னைப் போன்ற கூத்தாடிகளுக்கு பொழுது நல்லாப் போச்சு.
இந்த கலக விமர்சனங்களால் கவரப்பட்டு
சென்ற வாரம் டி.வி.யில் பார்த்த 'பம்மல் கே.சம்மந்தம்' படத்தில் ஒரு காட்சி. கமல், ஸ்ரீமன் இருவரையும் லாக்-அப்பில் போட்டுவிடுவார்கள். ஸ்ரீமன், கைகளை மடக்கி 'அய்யா, தயவு செய்து வெளிய விடுங்க' என்று கெஞ்சுவார். கமல் 'ச்சே, என்னடா பிச்சையா எடுக்குற! இது என்ன'னு சொல்லி மடங்கிய விரல்களை சரி செய்வார். "இது தொழு நோயாளிகளைப் பகடி செய்கிறதா? ஒட்டு மொத்தமாகப் பிச்சைக்காரர்களைப் பரிகசிக்கிறதா?" என்றெல்லாம் யோசித்தேன்.
இந்த மாதிரி நுண்ணரசியல்களுக்கு சுமார் ரக கவிதைகள் எழுதுவது எவ்வளவோ மேல் என்று புரிந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்ய side-show எத்தனை பேர் பூனைக்குட்டி வைத்திருக்கிறார்கள் என்றும், எத்தனை பேர் அவ்வாறு மற்றவர்களின் பூனைக்குட்டிகளைக் கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அவதானிப்பது. Every crisis brings in new (job) opportunities!
****************************************************************
சென்ற வாரம் திடீரென்று உடல் நடுங்கி டெம்பரேச்சர் நூற்று இரண்டைத் தொட்டது. கொதிக்கும் வெய்யிலில் ஸ்வெட்டர் அணிந்து, மனைவி இழுத்துச் சென்றதால் மருத்துவமனை சென்றேன். (எனக்கு டாக்டர், நர்ஸ், ஊசி, டெட்டால் வாசனை, வெளியில் காத்திருத்தல் இந்த காம்பினேஷன் என்றாலே தலை சுற்றி, மயக்கம் போட்டு விடுவேன்). இரத்த அழுத்தம், இரத்தப் பரிசோதனை என்று முதல் ஓவரிலேயே சிக்சர்கள். எதுக்கு இத்தனை பில்ட்-அப்? பேசாமல் மாத்திரைகள் கொடுங்கள். நான் ஓடிப் போய் விடுகிறேன் என்று சொல்ல நினைத்தேன். நா வறண்டிருந்ததால் நான் பேச முயலும் முன் டாக்டர் நகர்ந்து விட்டார். என் மனைவியிடம் 'மஞ்சள் காமாலை, மலேரியா இதெல்லாம் இல்லை என்று ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம்' என்று சொல்லவே, 'ம' வில் துவங்கும் வியாதிகள் வேறென்ன என்று ஒரு கவித்துவ சிந்தனையும் எழுந்தது. நர்சிங் ஹோம் சென்று ஆண்டுக் கணக்குகள் ஆனதால் கக்கத்தில் தெர்மா மீட்டர் வைப்பதும், கையில் போடாமல் பேண்டைத் தளர்த்தச் சொல்லி ஊசி போடுவதும்.....எல்லாம் எனக்கு புதுசு கண்ணா புதுசு. அப்போலோ மருத்துவமனை அனுபவங்கள் பற்றிய சுஜாதாவின் எழுத்துகள் ஞாபகம் வந்தது - "மருத்துவமனையில் நமக்கு நடந்தேறும் அவமானங்கள் ஒரு மந்திரி முன்னால் கூட நடக்காது :) ".
மருத்துவ மனையில் ஒரு எட்டு மணிநேரம் கிடத்தி இருந்தார்கள். சுர வேகத்தில் ஏதோ அனத்தினேன் என்று பின்னால் சொன்னார்கள். அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும் தப்பித்தீர்கள். அப்போது அய்யனார் போன் செய்தார். பெரிய அரசியல் தலைவர்கள் பாணியில், 'கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் வற்புறுத்தல். மீண்டும் கூடிய விரைவில் களப்பணிக்கு வருவேன் என்று கூறிக்கொள்ளும் இவ்வேளையில்' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே 'சரி அப்புறம் பேசலாம்'னு வைத்து விட்டார்.
****************************************************************
நேசமித்ரன் (எவ்வளவு அழகான பெயர்!) கவிதைகள் பற்றி வேலன் முன்னமே எழுதியிருந்தாலும், நானும் அவரைப் பற்றிச் சொல்ல விழைகிறேன். மொழி ஆளுமை, கருத்தாழம் இரண்டும் கூடி வருவது வெகு சிலருக்கே வாய்க்கிறது. நேசன் அத்தகையவர்களுள் ஒருவர். அவருடைய சில கவிதைகள் இங்கே. எல்லாவற்றையும் படிக்க அவர் தளத்திற்குச் செல்லுங்கள். என்னுடைய 'மிகப் பிடித்த' கவிஞர்களுள் இவரும் ஒருவர். Dont miss him.
தார் சாலை லாடங்களும்
ராணி தொலைந்து
மலர் வைத்தாடும் சதுரங்கத்தில்
உறைந்த பிறையின் நிழல்
ஓதமென
பாதி எரிகையில் பெய்த மழைக்கு
பிரேதம் எரிப்பவள் வைத்த பெயர்
புணர்கையில் புறம் முட்டிய பன்றி
நான்
கருணை
மட்கிக் கரையாத ஆணுறைகள் அடைத்த
கழிவுத்தொட்டியில் இறங்க மானிட்டருக்கு பிரதியாய்
நச்சினிக்க கஞ்சா
அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயம்
பிதுக்கி எடுத்த தோட்டா
நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது யுத்தத்தை
வெண் பாஸ்பரஸும் மல்பெரி இலைகளும்
இடது முலை மேல் அமர்ந்து
இடைவளைவில் எச்சமிட்டு மின்சாரமணியோசைக்கு
அதிர்ந்து பறக்கும் பறவை
மின்மயானத்தில் பசியாறுகிறது
யாருமற்ற வெளியின் குரல்கள்
கடல் மிச்சமிருக்கும் சங்கினை
சுற்றி வரும் குளவியை துரத்தியபடி
யானையின் எலும்புகூடாய்
சூழத் துவங்குகிறது தனிமை
மல்பெரி இலைகளை தின்று கொண்டிருக்கிறாள்
சிறகு முளைக்கும் கனவுகளுடன்
மழை - மூன்று குறிப்புகள்
1.
நகக்குறி நிலாப் பிறை
உள்வாங்கும் கடல்
களபலியாய் பற்றி எரியும் பனை
விடை பெறுகையில் மட்டும் பேசிப் போகும் காற்று
2.
மேக நிழல் கடக்கும் உயரத்தில்
பிரசவிக்கும் யானையின் பிளிறல்
அகவிப் பறக்கிறது மழைப் பார்க்க ஆயிரம் கண்
தோகையுள்ள பறவை
3.
புணர்ந்து மழை பெய்யும் நதியாடி
நிழல் பாயில் அமர்ந்து தலை
கோதிக் கொண்டிருக்கிறான் இன்னொரு நாளில்
சிறு தெய்வம் ஆகப் போகும் பெண்ணை
முன்பெல்லாம் கொஞ்சம் புரிகிற அறிகுறி இருந்தது இவர் கவிதைகளில். இப்போது மெல்ல எழும் விமானம் மேலே மேலே சென்று வானில் மறைவதுபோல ஒன்றும் புரியவில்லை, தெரியவில்லை - விமானம் வானத்தில் இருக்கிறது என்ற ஒன்றைத் தவிர. இவர் இருக்க வேண்டிய உயரம் மிக மிக அதிகம்.
45 comments:
// "இது தொழு நோயாளிகளைப் பகடி செய்கிறதா? ஒட்டு மொத்தமாகப் பிச்சைக்காரர்களைப் பரிகசிக்கிறதா?என்றெல்லாம் யோசித்தேன்.//
உண்மைதான். ஒரு ஆதிக்க அதிரடி கூட்டத்தின் (அதாங்க ஸ்டண்ட் பார்ட்டி) பிரதிபலிப்பாக கோரமுகம் வெளிப்பட்டிருக்கிறதை கககவிட்டீர்கள் போங்கள் :)
//, 'ம' வில் துவங்கும் வியாதிகள் வேறென்ன என்று ஒரு கவித்துவ சிந்தனையும் //
அவ்வ்வ்வ்வ் :(((
//கக்கத்தில் தெர்மா மீட்டர் வைப்பதும்//
நீங்க யூத்துன்னு நம்பறோம். அதுக்காக கக்கத்தில் தர்மாமீட்டர் வைக்கும் அளவிற்கு பொறந்த குழந்தையா நீங்க? ம்ம்ம்முடியல...
மெல்ல எழும் விமானம்
மேலே மேலே சென்று
வானில் மறைவதுபோல
ஒன்றும் புரியவில்லை, தெரியவில்லை
விமானம் வானத்தில் இருக்கிறது என்ற ஒன்றைத் தவிர
நல்ல கவிதைங்க. ஜூப்பரு :)
//சுர வேகத்தில் ஏதோ அனத்தினேன் என்று பின்னால் சொன்னார்கள். அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது.//
அப்ப கவிதை வரணும்னா முதல்ல காய்ச்சல் வரணுமா தல!
நாந்தான் உ.போ.ஒ பொதுபுத்தி விமர்சனம் கடைசின்னு நினைச்சேன்.
நமக்கு அடுத்தும் எழுதிட்டீங்க.
இதுவரை மொத்தம் 115 வலை விமர்சனம்.உண்மைத்தமிழன் தொகுத்து இருக்காரு.
நேசமித்ரன் கவிதைகள் அருமைங்க.
ஆனா ஹை கெப்பாசிட்டி processor
மண்டைல போட்டு படிக்கனும்.
அப்படியே சுஜாதா மாதிரியே எழுதியிருக்கிறீர்கள் ... நேசமித்ரன் கவிதைகள் எனக்கு மிக பிடித்தமானவை ...
அருமை அனுஜன்யா. சுவராசிய விஸ்தரிப்புகள்
நேசமித்ரன் கவிதைகள் எனக்கும் பிடிக்கும். கொஞ்சம் உள்வாங்க சிரமப்படுத்தும். இரண்டு முறையாவது திரும்ப படித்தால் மட்டுமே என்னால் உள்வாங்க முடியும்.
உங்களுக்கு உடம்பு சரியிலையென்று ஊகித்தேன் or வேலைபளு(யார் வேலைசெய்யறா)
//எனக்கு டாக்டர், நர்ஸ், ஊசி, டெட்டால் வாசனை,//
same blood... நானும் ஊசின்னா காத தூர ஓடற ஆளு...
take care anujanya
//உன்னைப் போல் ஒருவன்//
no comments(late but not least)
நீங்கள் ’யாத்ரா’ மற்றும் ’மண்குதிரை’ கவிதைகளை என்ன சொல்வீர்.
உற்சாகமான எழுத்து உடல்நலம் தேறிவிட்டதைக் காட்டுகிறது. தலைப்பும் நன்றாக இருக்கிறது!
நேசமித்ரன் கவிதைகள் சூப்பர். அறிமுகத்துக்கு நன்றி.
ஊர் தூங்கின பிறகு எழுப்பிவிடறீங்களே ! இது நியாயமா ?
கயிறு மேலே நல்லா நடக்கறீங்க :-)
உடல் நலம் தற்போது பரவாயில்லையா, பார்த்துக் கொள்ளவும். நேசமித்ரன் கவிதைகள் குறித்த பகிர்வு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த அனுபவங்களைத் தருபவை அவர் கவிதைகள்
Please Take Care!
ரொம்ப ஜாலியான எழுத்து அனு.அதிலும் அய்யனார் வர்ற சீன் விசில் காதை கிழிக்குது!இப்படி சீன்களை பார்க்க நீங்கள் காய்ச்சலாய் கிடந்தாலும் பரவால்லைன்னு தோனுது(என்னே மனசு!!) ,இப்படி எப்பவும் இளமையாய் இருக்க எந்த எழத்து குடிக்கணும் தல?நேசன் இடம் வரும்போது,மனசை விசாலமாக்குவது ரொம்ப நெகிழ்வு அனு.சுந்தர், உங்களின் சிலாகிப்பிற்கு பிறகே நானும் "ஓர் இரவில்"அறியபட்டேன் என இந்த இடத்தில் நினைவு கொள்வது சந்தோசமாய் இருக்கு(நேசன்,இந்த பகிர்வுக்கு முன்பாக நன்கு அறியப்பட்டிருக்கிறான்தான் என்றாலும்... இந்த மனசு உங்களை தடவி ஏற்க்க போதுமானதாக இருக்கிறது.),.புகை படத்தில் பார்த்தது போல,சிரித்து கொண்டே பேசுவது மாதிரி முகம் உணர வாய்த்தது,எழுத்திலும்!...great!..உடல் நலம் பத்ரம் மக்கா.
நல்ல பதிவு.. நேசமித்ரன் கவிதைகள் அருமை. :)
//இந்த மாதிரி நுண்ணரசியல்களுக்கு சுமார் ரக கவிதைகள் எழுதுவது எவ்வளவோ மேல் என்று புரிந்தது.//
சிரித்துக்கொண்டேன்.
நண்பரே உடல்நலம் ‘பற்றி’ அக்கறை கொள்ளுங்கள்.
வழக்கம் போல கலக்கல்
என்ன ஆளையே காணோமேன்னு பார்த்தேன்? உடம்பு சரியால்லையாம்மே?
TAKE CARE.
(உங்களோட பழைய கவிதைகளை நீங்களே படிச்சிடீங்களா?)
இந்தப் பதிவை படித்துவிட்டு வரேன்.
-வித்யா
///இலேசாக ஒளிவட்டம் தலையின் பின் சூழ்வதை உணர முடிந்தது.///
ஹா ஹா ஹா....மீண்டுமா!!
உ.போ.ஒ. இன்னும் ஒரு மாதம் கழித்துதான் பார்க்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
Every crisis brings in new (job) opportunities!
இலக்கணப் பிழை?..த்துப் போங்கள்...
====
//அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் //
நினைத்தேன்ன்..
====
நேசன்...மொழி வாசன்.. படித்துக் கொண்டே இருந்தால் புரியும் - என்றாவது ஓர் நாள். :)
====
அருமையா எழுதியிருக்கீங்க.
இப்போ உங்கள் நலம் எப்படி உள்ளது???
முதலில் உடல் நலத்துக்கு அதிக கவனம் கொடுங்கள்.
//இந்த மாதிரி நுண்ணரசியல்களுக்கு சுமார் ரக கவிதைகள் எழுதுவது எவ்வளவோ மேல் என்று புரிந்தது//
Mr.X : தல நீங்க சதா'ரண'மாக எழுதினாலே பின்னி பெடலெடுப்பீங்க (ஒருத்தருக்கும் புரியாது என்பது வேறு விசியம்). இதுல நுண்ணரசியல் வேற சேக்க போறீங்களா?
நாஞ்சில்: அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!
// 'ம' வில் துவங்கும் வியாதிகள் வேறென்ன என்று ஒரு கவித்துவ சிந்தனையும் எழுந்தது//
//அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது//
Mr.X : தல உங்களுக்கு எந்த வியாதியும் வரக்கூடாதுன்னு அந்த கவிதையாண்டவரை வேண்டிகிறேன். பின்ன உடம்பு சரியானதக்கப்புறம் எங்களுக்கு வியாதி (பீதி) வரவச்சுருவீங்க.
// 'மஞ்சள் காமாலை, மலேரியா இதெல்லாம் இல்லை என்று ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம்' //
நாஞ்சில்: உடம்ப பாத்துங்கோங்க. காச்சல் பல பரிணாமங்களில் விஸ்வரூபம் எடுத்து விளையாடுது.
//இப்போது மெல்ல எழும் விமானம் மேலே மேலே சென்று வானில் மறைவதுபோல ஒன்றும் புரியவில்லை, தெரியவில்லை //
Mr.X : என்னாது உங்களுக்கே புரியலியா? ஏற்கனவே படிச்சு தெறிச்சு ஓடியிருக்கோம். உங்களைவிட பெரிய ஆளா இருப்பாரோ? உசாரா இருக்கவேண்டியதுதான்.
நாஞ்சில்: அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!
பித்தனுக்கு கவிதைகள் புரியவில்லை......
உடம்பு சரியில்லையா தலைவரே?
அதான் என்ன நம்ம ஆளக்காணமேன்னு நினைச்சேன்.
ரொம்ப பிசியான ஆள் என்று நண்பர் முத்துவேல் சொல்வார். தொடர்பு கொள்ள முயன்றேன். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பத்தில் பிடிச்சிருக்கு.
நண்பர் நேசமித்ரன் கவிதைகளை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவ்ருடைய மொழியின் சுழற்சியில் தொலைந்து போவது பிடித்திருக்கிறது.
நன்றி.
// 'கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் வற்புறுத்தல். மீண்டும் கூடிய விரைவில் களப்பணிக்கு வருவேன் என்று கூறிக்கொள்ளும் இவ்வேளையில்//
உங்கள் கவிதைகளும் அரசியவியாதிகள் போல என்று ஒப்புக்கொண்டாலும்..
நேசமித்ரன்.. அழகு..
உங்க கவிதைகளும் எங்களுக்கு இப்படித்தான் தல.. நீங்க இருக்க வேண்டிய.. சரி விடுங்க..
உ.போ.ஒ.. இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்...இன்னும் ஐந்து வருடம் கழித்து 2009ல் கமல் படங்கள் அப்படின்னு முரளி கண்ணன் பதிவு போடுவார்.அப்ப எது சொன்னாலும் பெரிசா பிரச்சினை வராது. நல்ல எண்டெர்டெய்ன்மெண்ட் அவ்வளவுதான்.
உடல்நலம் சரியாயிடுச்சா..?(கொஞ்ச நாளைக்கு அய்யனார்,நேசமித்ரன் பக்கம்லாம் போகாதீங்க.உடம்பைப் பார்த்துக்கங்க.. :-)
நேசமித்ரன் பற்றிய தகவல் நன்று.எனக்குத்தான் அவர் எழுதுற கவிதைகள் புரியமாட்டேங்குது...
//நேசன்...மொழி வாசன்.. படித்துக் கொண்டே இருந்தால் புரியும் - என்றாவது ஓர் நாள். :)//
என்ற நம்பிக்கையில் கடக்கின்றன நாட்கள்...
இன்னொரு பூனை :)
மாமா நலமா? உடல் நலனை பார்த்துக்கொள்ளவும்..
இது என்ன'னு சொல்லி மடங்கிய விரல்களை சரி செய்வார். "இது தொழு நோயாளிகளைப் பகடி செய்கிறதா? ஒட்டு மொத்தமாகப் பிச்சைக்காரர்களைப் பரிகசிக்கிறதா?" என்றெல்லாம் யோசித்தேன். //
நீங்களுமா சார்.
//Nundhaa said...
அப்படியே சுஜாதா மாதிரியே எழுதியிருக்கிறீர்கள் ... நேசமித்ரன் கவிதைகள் எனக்கு மிக பிடித்தமானவை ...
//
அஃதே.
அற்புத நடை.
உனக்கான என் அன்பு
உணரப்படாமல்
மறைந்திருக்கிறது
பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல்//
சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும்
/கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்
பார்த்து முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்//
/மீண்டும் பெண்ணானவளின்
கன்னங்களின் சிவப்புக்கு//
//பெட்ரோல் டேங்க் மேலமர்ந்து
நிலாவுடன் பேசி வரும் மழலை//
சேற்றுப் பிரதேசத்தில்
வாலறுந்த
குதிகாலணியை/
/நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க"
//தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது//
அவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது
//கசக்கி வீசப்பட்ட
அலுமினியத் தாளை
தேடிப்பிடித்து உண்டன
இதுவரை இரை கிட்டாத
இரண்டு காகங்கள்//பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்//
கோலத்தைக் காவல்செய்த
பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்//ஒவ்வொரு உறைவாளுக்கும்
பலப்பல நிழல்கள். //
மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா//ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்//
என் உலைக்களத்தில்
நானே ஈ ஆனேன்//
வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்//
கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை//'போது' ஒரு
விதவை விவாகத்தில்
பிறந்தது //நீலப் பூக்கள்
கனவில் பூத்தன
அதே நிறத்திலும்
வேறு கதையுடனும்//
எத்தகைய படிமங்கள் , எவ்வளவு நுட்பமான குறியீடுகள் ,வாழ்வின் மீதான விசாரங்கள்..... கவிதை கவிதையிலிருந்து வெளியே எறிகிறது அனு!
உங்கள் கவிதைகள் நிகழ்த்தும் ரசவாதம் உங்கள் உரை நடையின் விஞ்ஞான கூறுகள் , சாயல் அற்ற வரிகள் ஒரு ரசிகனாக பதுமைகள் பேசும் சிம்மாசனத்தின் முன் நிற்கும் ஆட்டு இடையன் போல நிற்க வைத்து விடும் சொல்லாடல்கள் உங்களுடையவை
உங்களின் பதிவுகள் இடுகைகள் மாய யதார்த்த வாதம் குறித்த உங்கள் புரிதல்கள்
விளக்கங்கள் அற்புதமானவை
உங்களின் 'மிகப் பிடித்த' என்ற சொல்லில் இருக்கும் பிரியம் என்னை வாழ்த்தி இருக்கும் நேயம் ததும்பும் சொற்கள் அளப்பரிய உத்வேகத்தை உந்துதலை உற்சாகத்தை கவிதைகளுக்கு இருக்கும் பொறுப்பை உணர்த்துவதாக தருவதாக இருக்கிறது அனு .....
இந்த கவிதைகள் இன்னும் நேசத்திற்கு உரியனவாக உருப் பெறுகின்றன இவை ஈட்டித்தரும் சொந்தங்களுக்காக கொண்டு வரும் பிரியமிகு இதயங்களுக்காக .....
பெருகி நன்றியின் உணர்வில் சொற்கள் தீர்ந்த பிள்ளையின் சிணுங்கல் போல மாறத்துவங்குகின்றன இந்த வரிகள்
நேசத்தின் நித்தியத்தன்மை வளரட்டும் இந்த சொற்களின் வழி உடல் நலம் தேற என் பிரார்த்தனைகள்....
//சுர வேகத்தில் ஏதோ அனத்தினேன் என்று பின்னால் சொன்னார்கள். அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது.//
முடியல :))
தெம்பாக திரும்பும் யூத் க்கு வாழ்த்துக்கள்...
/
இந்த மாதிரி நுண்ணரசியல்களுக்கு சுமார் ரக கவிதைகள் எழுதுவது எவ்வளவோ மேல் என்று புரிந்தது.
/
ஐய்யோ ஆத்தா கவுஜையா :)))))))))))))
//சுர வேகத்தில் ஏதோ அனத்தினேன் என்று பின்னால் சொன்னார்கள். அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது.//
நலமா?
தற்போது உடல்நலம் எப்படி ?.
விமர்சனம் அருமை.
நேசமித்ரன் பகிர்வும் அழகு.
உங்களை மின்மடலில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.வலைப்பூ விபரத்தில் தங்கள் மின்முகவரி இல்லை.
எனது முகவரிக்கு தெரியப்படுத்தினால்(thubairaja@gmail.com) தொடர்பு கொள்வேன்.
நன்றி.வணக்கம்.
நீங்க ஒருத்தர் தான் இப்படி புரியாத மாதிரி கவிதை எழுதி கலக்குவீங்கன்னு நெனச்சேன்... நேசமித்ரன் அவர்களுமா??? நல்லா நடத்துங்க... Get Well Soon!
உ. போ. ஒ.
You too தலைவரே, போதும், இத்தோட நிறுத்திக்குவம், எல்லாதையும் நிறுத்திக்குவோம். ஏற்கெனவே எல்லாரும் துவைத்து பிழிந்து காயப் போட்ட துணி அது. நைந்து போச்சு.
மகாராஷ்டிர தேர்தல்ல புரட்சித்தலைவி அணி ரெண்டு இடத்துல போட்டியிடுது, தாக்கரேக்கள் ரௌத்ரம் பழகி, ஜீப்பில் ஏற முயற்சிக்கறாங்க, இதப் பத்தி எதாவது சொல்வீங்கன்னு பாத்தா, ஏற்கனவே மென்னு துப்பின சக்கைய சப்பிகிட்டு இருக்கீங்க.
அப்புறம் அந்தக் கவிதைகள்,
ஆள விடுங்கடா சாமி
@ அனுஜன்யா
நன்றி அனுஜன்யா
டிஸ்கி 1 - என்ன தான் ரொம்ப யோசித்து பின்னோட்டம் போட்டாலும் நீங்க இப்படி தான் பதில் சொல்விங்க. இப்போ இதற்க்கு என்ன மாதிரி பதில் சொல்ல போறீங்க???
டிஸ்கி 2 - உலக சரித்திரத்தில் முதல் முறையாக பின்னோடதிற்கு டிஸ்கி போடுவது நான் தான்.
(ரொம்ப யோசித்து குழம்பி போய் பின்னோட்டம் போடும் சங்கம்)
நேசமித்ரனின் கவிதைகளை நானும் படித்து இருக்கிறேன்.... பிடிக்கும் ஆனால் பின்னோட்டம் போடும் வழக்கம் இல்லை
(நேசமித்ரன் உடைய ATTENDANCE நல்ல போட்டு இருக்கிறாரு... அவருடைய நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு)
:-)
onnum vilangalainga'nna
Sol Alagan
சிறப்பா எழுதி இருக்கீங்க...
ஒரு படத்தை ஏன் சினிமா மொழி தவிர்த்து வேறு விதங்களில் பார்க்க வேண்டும்???
உ.போ.ஒ இருப்பதாக சொல்லப்படும் முரண் கருத்துகளை பொதுஜனங்களில் எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள்??
ஒரு படத்தினால் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதே என் எண்ணம்... சர்ச்சைகளுக்கு வேண்டுமானால் அவை பயன்படலாம்...
ஜீரம் எல்லாம் சரியாக போய்விட்டதா??
நலம் பெற வாழ்த்துக்கள்...
அடாடா, அத்தனையும் கவிதை வரிகள் என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது // ஹா.. ஹா
ரசித்து படித்தேன்.
@ ஸ்ரீதர்
கலக்கல் பின்னூட்டம். அப்படியே 'ஜூப்பர்' னு நம்ம கவிதைகளையும் ஒரு பகடி பண்ணுவதை கவனித்துக் கொண்டேன் :)
நன்றி ஸ்ரீதர்
@ வால்பையன்
காய்ச்சலோ, கண் செருகலோ - கற்பனை நல்லா வரணும் குரு.
நன்றி
@ ரவிசங்கர்
நன்றி ரவி :)
@ நந்தா
ஜ்யோவ் கிட்ட போட்டுக் கொடுக்குறீங்களா? :))
நேசன் - எஸ்.
நன்றி நந்தா
@ முரளிகண்ணன்
வாங்க முரளி. அடிக்கடி லீவ்ல போயிடறீங்க?
நன்றி முரளி.
@ விநாயகமுருகன்
ரொம்ப சரி.
நன்றி வி.மு.
@ அசோக்
சேம் ப்லட் தான் :)
யாத்ரா, மண்குதிரை - மெல்லிய மயிலிறகால் ஒத்தடம் செய்யும் கவிஞர்கள். அபாரமானவர்கள். மிக மென்மனது அவர்களுக்கு. மொத்தத்தில் எனக்கு ரொம்ப காம்ப்ளெக்ஸ் தருபவர்கள் :(
அசோக், ரொம்ப நாட்களாகச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். உங்கள் பின்னூட்டங்கள் பல தளங்களில் (குறிப்பாக பல கவிதை இடுகைகளில்) படித்தேன். பிரமாதமாக புரிதலும், இரசனையும் உங்களுக்கு இருக்கு பாஸ். நீங்க கவிதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் concentrate செய்யவேண்டும் என்பது என் விருப்பம்.
நன்றி அசோக்
@ ராமலக்ஷ்மி
நன்றி சகோ உங்க தொடர் உற்சாக ஊக்கத்திற்கு.
@ மணிகண்டன்
//ஊர் தூங்கின பிறகு எழுப்பிவிடறீங்களே ! இது நியாயமா ?//
படம் பாத்தப்புறம் தானே எழுத முடியும்? :))))
நன்றி மணி
@ யுவகிருஷ்ணா
பஃபூன்களுக்கும் சில திறமைகள் இருக்கு லக்கி :)
@ யாத்ரா
இப்போது back to normal.
நேசன் - என்ன சொல்ல.
நன்றி யாத்ரா
@ கணேஷ்
ரொம்ப நன்றி கணேஷ்
@ ராஜாராம்
வழமை போல் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் பின்னூட்டம் ராஜா. 'சினேகபூர்வம்' என்றால் அது நீங்க தான்.
நன்றி ராஜா
@ அக்கிலீஸ்
நன்றி அக்கிலீஸ்
@ மாதவராஜ்
நன்றி மாதவ். உங்கள் அயராத உழைப்பு ..... என்ன சொல்ல?
நன்றி உங்கள் அன்புக்கும்.
@ சங்கர்
நன்றி கேபிள்ஜி
@ விதூஷ்
//(உங்களோட பழைய கவிதைகளை நீங்களே படிச்சிடீங்களா?)//
கிர்ர்ர்ர்ர்ர்
//Every crisis brings in new (job) opportunities!
இலக்கணப் பிழை?..த்துப் போங்கள்...//
crisis may be singular; what it brings may be multiple (plural) things. Anything amiss?
நன்றி வித்யா
@ உலகநாதன்
நன்றி பாஸ் உங்கள் அக்கறைக்கும், பாராட்டுக்கும்.
@ நாஞ்சில் நாதம்
ஆஹா, வெறும் " :) " போட்டுக்கொண்டிருந்த ஆசாமியை உசுப்பி விட்டதில் இந்த மாதிரி அதகளம் பண்ணுகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு :)
நன்றி பாஸ்
@ பித்தன்
அதேதான் அதேதான். அப்ப நீங்களும் கவிதை எழுதலாம்னு அர்த்தம் :)
நன்றி பித்தன்
அனுஜன்யா
@ மண்குதிரை
நன்றி ம.கு. உங்கள் விசாரிப்புக்கு. என் சோம்பேறித்தனத்தை முத்துவேல் அவ்வளவு அழகா 'பிசியான ஆளு' னு சொல்லியிருக்கிறார்.
நன்றி பாஸ்.
@ கார்க்கி
சரி சரி விடுறா விடுறா
நன்றி கார்க்கி
@ தமிழ்ப்பறவை
கலக்கல் பின்னூட்டம் பரணி. ரசித்தேன்.
நன்றி உங்கள் அக்கறைக்கு.
@ சுந்தர்
மியாவ் :)
@ சஞ்சய்
சரி மாப்ள! ஒரு ஃபோனைக் காணோம். அக்கா உம்மேல கோவமா இருக்கா :)
நன்றி சஞ்சய்
@ அமித்து.அம்மா
//நீங்களுமா சார்.//
இல்லாட்டி 'பூனை' யிலிருந்து எப்படி கலகக்காரனாவது :)
@ நர்சிம்
நன்றி நர்சிம்
@ நேசமித்ரன்
நீங்க பின்னூட்டத்தில் போட்டதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்....ஹி ஹி
நம்ம இரண்டு பேர் தவிர எல்லாரும் "என்னமா பரஸ்பர முதுகு சொரிதல்பா?" என்று கேலி செய்யலாம். இருந்தாலும் தேங்க்ஸ் நேசன்.
//என்னை வாழ்த்தி இருக்கும் நேயம் ததும்பும் சொற்கள் அளப்பரிய உத்வேகத்தை உந்துதலை உற்சாகத்தை கவிதைகளுக்கு இருக்கும் பொறுப்பை உணர்த்துவதாக தருவதாக இருக்கிறது //
இதுதான் வேண்டும் நேசா. நீங்கள் இன்னும் அதிகம் அறியப்பட்டு, பல உயரங்களைத் தொட வேண்டும்.
@ ரௌத்ரன்
நன்றி கவிஞர்
@ சிவா
//ஐய்யோ ஆத்தா கவுஜையா//
உன்ன தனியா கவனிக்கணும் சிவா :)))
நன்றி
@ துபாய் ராஜா
வாங்க ராஜா. நன்றி. என் மின்மடல் முகவரி: anujanya@gmail.com
@ அன்புடன் மணிகண்டன்
//Get Well Soon!//
இது எதுக்கு? இனிமேலாவது புரியும்படி கவிதை எழுதுங்க என்ற அர்த்தமா? :))))
நன்றி மணி
@ தராசு
அதகளப் பின்னூட்டம். சிரித்துக் கொண்டே இருக்கேன்.
நன்றி தல.
@ மேவி
ஹா ஹா ஹா. எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம் மேவி.
நன்றி
@ மேவி
//(நேசமித்ரன் உடைய ATTENDANCE நல்ல போட்டு இருக்கிறாரு... அவருடைய நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு)//
உன்னோட புத்திகூர்மையும் எனக்குப் பிடிச்சு இருக்கு :)
@ சொல் அளகன்
ஒண்ணும் விளங்க வேண்டாம். உங்க அளகான தமிள்ல ரெண்டு வார்த்தை சொல்லுங்க போதும் :)
நன்றி பாஸ்
@ கனகு
வாங்க. உங்கள் முதல் வருகை?
உங்கள் கருத்துதான் பெரும்பாலோருக்கு. அதனால் தான் அது 'பொதுப்புத்தி' என்று அழைக்கப்படுகிறது :) உங்களிடம் கூட பூனை இருப்பது இலேசாகத் தெரிகிறது இப்போது :)
ஜுரம் சரியாகிவிட்டது. நன்றி பாஸ்.
@ செல்வா
தேங்க்ஸ் செல்வா.
அனுஜன்யா
@ மேவி
gtalk னா? ஜி மெயில் சேட்டா?
அனுஜன்யா
வழக்கம் போல கலக்கம்.. சே.. கலக்கல்.!
@ ஆதி
யோவ்... உன்ன ...
நன்றி ஆதி :)
அனுஜன்யா
Post a Comment