Monday, December 14, 2009

நர்சிம்மின் 'அய்யனார் கம்மா' - நூல் விமர்சனம்


நூல் விமர்சனம் எல்லாம் செய்யுமளவுக்கு பெரிய ஆளாக வரணும்னு ஆசை இன்னமும் இருக்கு. ஆனால், எதையுமே விமர்சனம்னு செய்ய அரை மனசு தான் வருது. புகழ்வது சுலபம். ஆக்கபூர்வமாக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் செய்வது என்னால் இதுவரை இயலவில்லை. என்னுடைய பின்னூட்டங்கள் கூட பெரும்பாலும் மெல்லிய புகழ்ச்சி அல்லது நெருங்கியவர்கள் என்றால் கலாய்ப்பு என்ற தொனியிலேயே இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். நாங்கள் சிறுவயதில் கிரிக்கெட் ஆடுகையில் முதல் இரண்டு பந்துகள் 'டிரையல்' போட்டுவிட்டு பிறகே 'ஆல் ரியல்ஸ்' என்று துவங்குவோம். அது போல, என்னுடைய முதல் புத்தக விமர்சனம் (ஆக்கபூர்வ எதிர்மறை விமர்சனங்களுடன்) துவங்க எழுத்தாள நண்பன் நர்சிம்மை விடவோ, பதிப்பிக்கும் நண்பன் வாசுவை விடவோ 'டிரையல்' இடம் கிடைக்காது. பீடிகை போதும். Here we go.


'அய்யனார் கம்மா' - அருமையான பெயர். புத்தகத்தின் தலைப்புக்கு முதலில் ஒரு சபாஷ்.


முகப்பு புகைப்படம். அட்டகாசம். மிக அழகாக இருக்கிறது. பின் அட்டை புகைப்பட அழகு பற்றி எழுத்தாளரின் துணைவியாரிடம் கருத்து கேட்பது உசிதம். உண்மையான விமர்சனம் வெளிவரக்கூடும்.


இதில் உள்ள பெரும்பாலான கதைகளை வாசித்து இருக்கிறேன். அதனால், புத்தகத்தை சற்று அசுவாரஸ்யமாகவே பிரித்தேன். அய்யனார் கம்மா கதையும் படித்த கதை. ஆனால், நம்புவது உங்கள் இஷ்டம். புத்தக வடிவில், அச்சு வடிவில், இந்தக் கதை வேறு மாதிரி இருந்தது. சுண்டி உள்ளே இழுத்துக் கொண்டே சென்றது கதை. இலாடம் அடிப்பது பற்றி, இந்த 'ஹசிலி பிசிலி' யுகத்தில் இவ்வளவு துல்லிய விவரணைகளுடன் சொல்வது, சொல்வதை இத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு நிறைய திறமை வேண்டும். மாட்டைப் படுக்க வைப்பது; முகத்தைப் பார்க்கவே கூடாது என்னும் எச்சரிக்கை செய்வது; துள்ளி எழுந்து நின்றாலும், நடக்கத் தயங்கும் என்னும் அவதானிப்பு; சரியான தகவல்கள் இருந்தாலே பாதி கதை தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்று புரிய வைக்கிறார்.


கதையின் முடிவு எதிர்பார்க்கவே முடியாததாக இல்லை என்றாலும் கச்சிதம். வர்ணனைகள் இவரின் மிகப்பெரிய பலம். தெற்குப் பகுதியின் வட்டார மொழியும் இவருக்கு இலகுவில் வருவதால் மாறுபட்ட களங்களில் இவரால் எழுத முடிகிறது; முடியும்.


அடுத்து தந்தையுமானவன். உலுக்கி விடும் கதை. நிறைய உணர்வுகளை உந்தும் வாய்ப்பு கிடைத்தும், அடக்கி வாசித்து முடிவில் நம்மை கனமாக அனுப்பும் உத்தியை கையாண்டிருக்கிறார்.


திகட்டத் திகட்டக் காதல் - எனக்குப் பிடித்தது. சரளமான, அதே சமயம் மிகத் துள்ளலுடன் செல்லாத கதை. நெடுஞ்சாலையில் ஸ்டெடியாக நூறு கி.மீ. வேகத்தில் செல்கையில் ஒரு cool confidence வருமே. அந்த உணர்வு இதில் வருகிறது. இந்தக் கதையிலும் மதுரை வட்டார, பதிண்ம பருவத்தினரின் கேலி, கிண்டல், ரவுசு எல்லாம் ரவுண்டு கட்டி வருகிறது.


இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'செம்பட்டைக் கிழவி'. பிரமாதமான வர்ணனைகள். கிராம மக்களின் எளிய வாழ்க்கை பற்றி 'இருபது இருபத்தைந்து கிலோமீட்டர் சுற்றளவில் பெரு வாழ்க்கை வாழ்ந்து விடும் கிராம மக்கள்' என்கிறார். கிணற்றுக் குளியலின் சூட்சுமங்களை விவரிக்கிறார். வளர்ப்பு மாட்டுடன் பேசும் கருத்தபாண்டி நமக்கும் நெருக்கமாகிறான். மந்தை பற்றிய வர்ணனை, இளந்தாரிக் கல் (முதல் மரியாதை ஞாபகம் வருகிறதா?) பற்றிய விவரம் என்று அதகளம். இந்தக் கதை பிடித்திருப்பதற்கு காரணம், நேரிடையாக பெரிதாகச் சொல்லாமல், நாம் சொல்ல முடியாத உணர்வுகளைத் தூண்டி விடுவதே. ஒரு பாட்டிக்கும், பேரனுக்கும் இருக்கும் உறவை, நட்பை இதற்கு முன் நாஞ்சில் நாடனின் 'என்பிலதனை வெய்யில் காயும்' புத்தகத்தில் படித்த நினைவு.


'ஞாபகமாய் ஒரு உதவி' - 'நச்' போட்டிக்குச் செல்ல வேண்டிய கதை. வெகுஜனக் கதையின் எல்லா சாமுத்ரீகா இலட்சணங்களுடன் பகீர் முடிவுடனான கதை.


மரணம் - மெல்லச் சாகும் ஒருவனின், அவன் நண்பனின் சூழலை மெல்லிய வலியுடன் சொல்லும் கதை. எதிர் பாராத திருப்பங்கள் என்று எதுவும் முயலாமல் யதார்த்தம் காட்டிய நல்ல கதை. ஒரு குறுநாவலுக்குண்டான விஷயம் சிறுகதைக்குள் அடைக்கையில் உள்ள சிக்கல் இதிலும் இருக்கிறது.


சந்தர்ப்ப வதம் கதையை 'நச்' ரகத்தில் மட்டும் தள்ளி விட முடியாது. Hypocracy மட்டுமில்லாது ஆணாதிக்கம் பற்றி மெல்லச் சொல்கிறது. ஆயினும் கச்சித வெகுஜனக் கதை.


தலைவர்கள் கதை பதிவில் படித்து மறந்து விட்டதால், இது அரசியல் நிலையைச் சாடும் ஒரு கதை என்று எண்ணி படித்தேன். பள்ளிப் பருவத்தில் நடந்த நகைச் சுவையை அங்கதமாகச் சொல்லியிருக்கும் கதை. இது கதையா என்று கேட்கலாம். அல்லது நகைச்சுவைப் பிரியர்கள் என்றால் கேள்வி கேட்காமல் ரசித்து விட்டும் போகலாம்.


மனக்குரங்கு, தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப் பெட்டி போன்ற பல கதைகளை சலிக்கும் வரை ஆ.வி., குமுதம், கல்கியில் படித்து முடித்தாயிற்று. அத்துடன், சிறுகதை என்பது இலக்கியத்திற்கு நல்ல வடிவம். கூடிய வரை வார்த்தை விளையாட்டுகளைத் தவிர்ப்பது (நான் செய்வேனா என்று கேட்கக் கூடாது) நலம். குறிப்பாகத் தலைப்புகளில். ம'ரணம்', சந்தர்ப்ப 'வதம்', மா'நரகம்' என்றெல்லாம் தலைப்பு வைத்து வாசகர்களின் புரிதலைக் குறைத்து அளவிட வேண்டாம். மாநகரம் என்று வைத்திருந்தால் நீங்கள் சொல்ல வந்த கோபம் இன்னும் காட்டமாக இருந்திருக்கும்.


'அன்பின்' ஒரு ஆச்சரியம். எழுதும் முன் ஆசிரியர் வண்ண நிலவன் படித்திருப்பார் என்று ஐயப்படும் நடை. தவிர்த்து பிரமாதமாக இல்லை.


மொத்தத்தில் கடைசி ஆறு-ஏழு கதைகள், முதல் ஆறு கதைகளின் தளத்தில் இல்லை என்பது தெளிவு. போலவே, வர்ணனைகள் ஆசிரியரின் ஆகப்பெரும் பலம் என்றாலும், கதையின் போக்கிற்கு அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இல்லாவிடில் ஆசிரியர் தன மேதமையைக் காட்டிக்கொள்ள முயலும் தோற்றம் கிடைக்கும்.


சிறுகதை என்பது குறைந்தது ஐந்து/ஆறு பக்கங்களாவது இருந்தால் தான் தேவைப்பட்ட ஆழத்தைத் தொட முடியும். சிறு ஓடைகளில் கப்பல்கள் மிதப்பதோ, பேருந்து நிறுத்தங்களில் விமானங்களோ வந்திறங்க முடியாதல்லவா.


ஆயினும், முதல் தொகுப்பு என்னும் கோணத்தில் சிறந்த துவக்கம் என்றே சொல்ல வேண்டும். நிறைய பேரைச் சென்றடையாத எழுத்து, அது நல்ல இலக்கியமாகவே இருந்தாலும், அதிக பயனில்லை. அதே சமயம், வெகுஜனம் என்ற போர்வையில் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது பெரிய குற்றம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடம் எல்லோருக்கும் இலகுவில் வராது. அதைப் பிடிக்க முயலுங்கள் நர்சிம். அதுதான் உங்கள் இடம். ஆனால் அது அத்தனை எளிதல்ல. கருப்பொருள், கதை சொல்லும் திறன், நடை இவற்றுடன் வடிவத்தில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். செய்வீர்களா?


பதிவுலகிலிருந்து வெளியுலகிற்கு செல்லும் உங்களைக் கறாராக விமர்சிப்பது உங்கள் நன்மைக்கு தான்.

நூல் :அய்யனார் கம்மா (சிறுகதைகள்)


ஆசிரியர் : நர்சிம்

பக்கங்கள் : 72


விலை : ரூ.40


வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010

38 comments:

KaveriGanesh said...

அன்பின் அனுஜன்யா,

நர்சிம் உங்கள் நெருக்கத்தில் இருந்த பதிவராக இருந்தாலும் உங்கள் நேர்மையான விமர்சனம் பாராட்டதக்கது.

KaveriGanesh said...

சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீட்டின் தொகுப்பும் , புகைப்படங்களூம்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

யாத்ரா said...

தங்கள் பார்வைகளை மென்மையாக அழகாக ஆக்கபூர்வமாக பதிவு செய்திருக்கிறீர்கள், அருமையான விமர்சனம், தந்தையுமானவன் அருமையான கதை. நண்பர் நர்சிம் மேலும் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள்.

கே.ரவிஷங்கர் said...

விமர்சனம் balancedஆ இருக்கு அனுஜன்யா.நான் படித்தது மூன்று அல்லது நான்கு சிறுகதைகள்தான் இருக்கும்.

மண்குதிரை said...

ஆக்கபூர்வமான விமர்சனம். நண்பர் நர்சிம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

பரட்ட...

அ.மு.செய்யது said...

ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்தது..ஆனா ஃபினிஷிங் அடிச்சி துவைச்சி அலசி காயப் போட்ருக்கீங்க..!!!

ஆமா அனுஜன்யா கவிதை தொகுப்பை நையாண்டி நைனா வெளியிடுவதாக தகவலறிந்தேன்.உண்மையா ??

D.R.Ashok said...

புத்தகவிமர்சனம் கூட இவ்வளவு சுவையாக சொல்லமுடியுமா.. ஒரு நல்ல ஆசானை போல.

நர்சிமிடம் அட்டைபடம் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டதால், வாழத்துக்களை சொல்லி அமர்கிறேன்.

மிக நேர்மையான விமர்சனம். வழிக்காட்டுதலும் கூட.

RVC said...

நல்ல விமர்சனம் அனு. நர்சிம்முக்கும், அகநாழிகைக்கும் வாழ்த்துகள்.

நர்சிம் said...

மிக அற்புதமான அட்வைஸ் அனுஜன்யா.. மிக ரசித்து படித்தேன். குறித்தும் கொண்டேன்.

மிக்க நன்றி

கார்க்கி said...

தலைப்ப பார்த்தவுடனே படிக்கிறத நிறுத்திட்டு ஒரு பதிவு யோசிச்சேன்

கலர் சரியா இருக்கு. திக்காவும் இருக்கு. சீப்பாவும் இருக்கு. ஆகவே பட்டம் விட சரியான மாஞ்சா செய்ய இந்த நூல் நல்ல தேர்வுன்னு மனசுக்குள்ள பதிவு ஓடிட்டே இருக்கு

Dr.Rudhran said...

have to wait till jan 1st when it should be available in book fair chennai.

முரளிகண்ணன் said...

முழுமையான விமர்சனம்

T.V.Radhakrishnan said...

நல்ல விமர்சனம்

நேசமித்ரன் said...

பிரம்மாதமான விமர்சனம்ன்னு
சொல்ல முடியாவிட்டாலும் நேர்மையான நேர்த்தியான விமர்சனம்
தலைவரே

Sangkavi said...

அழகான விமர்ச்சனம்.........

ஆதிமூலகிருஷ்ணன் said...

அட்டகாசமான விமர்சனப்பதிவு. மொத்தமாக ரிப்பீட்டு போட்டுக்கொண்டு நான் தனியாக விமர்சனம் எழுதவேண்டிய அவசியமில்லாத நிலைக்குச் செல்கிறேன். நன்றி. ஹிஹிஹி.

கார்க்கி said...

@ஆதி,

விடுங்க சகா.விமர்சனம் எழுதற எல்லோரும் நீங்க எடுத்த ஃபோட்டோவைத்தானே போடறாங்க. (என்னைத் தவிர) :)))

Deepa said...

நேர்மையான,அக்கறையான விமர்சனம்.

" உழவன் " " Uzhavan " said...

படித்துக்கொண்டே இருக்கிறேன்....

ஜெஸ்வந்தி said...

ஆக்க பூர்வமான விமர்சனம். உங்கள் முதல் முயற்சி என்பதால் பாராட்டு
//சிறு ஓடைகளில் கப்பல்கள் மிதப்பதோ, பேருந்து நிறுத்தங்களில் விமானங்களோ வந்திறங்க முடியாதல்லவா. //
ரசித்த வரிகள்.

Karthik said...

தந்தையுமானவன் இன்னும் மனதில் இருக்கிறது. ரொம்பவும் பாதித்த கதை. மற்ற கதைகளை படிக்கலைனு நினைக்கிறேன். படிச்சிருவோம். :)

Karthik said...

//நாங்கள் சிறுவயதில் கிரிக்கெட் ஆடுகையில் முதல் இரண்டு பந்துகள் 'டிரையல்' போட்டுவிட்டு பிறகே 'ஆல் ரியல்ஸ்' என்று துவங்குவோம்.

நாங்களும் அப்படிதான் விளையாடினோம். ஆனா ஒரு பால்தான். :)

நர்சிம் அண்ணா கிரிக்கெட் பத்தி கூட ஒரு நல்ல கதை எழுதியிருந்தார்னு நினைக்கிறேன். தொகுப்பில் இருக்கிறதா?

பரிசல்காரன் said...

சபாஷ் - விமர்சனத்திற்கு.

சபாஷ் - நர்சிம்முக்கு.

சபாஷ் - எனக்கு! (ரொம்ப நாள் கழிச்சு இரண்டரை மணி நேரம் நெட்ல உட்கார்ந்ததுக்கு!)

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//பின் அட்டை புகைப்பட அழகு பற்றி எழுத்தாளரின் துணைவியாரிடம் கருத்து கேட்பது உசிதம். உண்மையான விமர்சனம் வெளிவரக்கூடும். //

அழகாக விமர்சனம்! ரசிக்கத்தக்க குசும்பு!!!!

கமலேஷ் said...

முதல் புத்தக விமர்சனம் மாதிரி தெரியவே இல்லை..
மிக நுணுக்கமாக பதிவு செய்து இருக்கிறீர்கள்..
கண்டிப்புடனும்,நேர்மைடனும் அதே நேரம் விமர்சனத்திற்கே உரிய கண்ணியத்துடனும் இருக்கிறது...
உங்கள் எழுத்துக்களின் உலகம் விரிந்து கொண்டே இருக்கிறது அனுஜென்யா ...
வாழ்த்துக்கள்...

கார்க்கி said...

//சபாஷ் - எனக்கு! (ரொம்ப நாள் கழிச்சு இரண்டரை மணி நேரம் நெட்ல உட்கார்ந்ததுக்கு!//

ஏங்க? சீட்ல உட்கார வேண்டியதுதானே?

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் நர்சிம்,அனுஜன்யா :)

Chitra said...

புகழ்வது சுலபம். ஆக்கபூர்வமாக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் செய்வது என்னால் இதுவரை இயலவில்லை.....அசத்திட்டீங்க போங்க - அருமை.

கும்க்கி said...

உங்களைக் கறாராக விமர்சிப்பது உங்கள் நன்மைக்கு தான்...

கறார்” அப்படீங்கறீங்க...

நல்லது.

அனுஜன்யா said...

@ காவேரிகணேஷ்

நன்றி கணேஷ். நன்றி புகைப்படங்களுக்கும். அழகாக, வேகமாக பதிவில் போட்டு இருக்கிறீர்கள்.

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ ரவிசங்கர்

வசிஷ்டர் வாயால ... நன்றி ரவி

@ மண்குதிரை

நன்றி நண்பா.

@ நர்சிம்

கண்ணா, இது ஒரு ட்ரயல் தான்...ஹா ஹா ஹா.

@ செய்யது

//ஆனா ஃபினிஷிங் அடிச்சி துவைச்சி அலசி காயப் போட்ருக்கீங்க..!!!//

அப்படியா தோணுது செய்யது?

"நையாண்டி நைனா" - ஏனிந்த கொலவெறி?

நன்றி செய்யது

@ அசோக்

நன்றி அசோக்

@ RVC

நன்றி சந்திரா

@ நர்சிம் (மீண்டும்)

நன்றி நர்சிம்.

@ கார்க்கி

டேய், அவனவன் இலக்கிய சேவை இன்னும் எப்படி செய்யலாம்னு யோசிக்கும் போது...சரி சரி. ஆனாலும் உனக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.

நன்றி கார்க்கி

@ Dr.Rudhran

Thanks for your first visit. Am sure you will like the book. Narsim, why dont you arrange for a copy to be delivered to Doctor?

@ முரளிகண்ணன்

நன்றி முரளி

@ T V Radhakrishnan

நன்றி TVR ; புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் நிறைய புகைப்படங்களில் இருக்கீங்க :)

@ நேசமித்திரன்

நேர்மையான விமர்சனத்திற்கு நேர்மையான பின்னூட்டம் :)

நன்றி நேசா.

@ சங்கவி

நன்றி பாஸ்

@ ஆதி

பிள்ளையாரு எப்படி மாம்பழம் பறித்துக் கொண்டாருன்னு இப்ப புரியுது :)
நன்றி ஆதி

@ கார்க்கி

சொல்ல மறந்து விட்டேன். போட்டோ ஆதி எடுத்தது தான். நன்றி ஆதி. சோசியல் சர்வீஸ் கார்க்கி அவர்களுக்கும் நன்றி :)

@ தீபா

நன்றி தீபா.

@ உழவன்

படிங்க. படிங்க. படிச்சுக்கிட்டே இருங்க :)

நன்றி தல

அனுஜன்யா

அனுஜன்யா said...

@ ஜெஸ்வந்தி

நன்றி ஜெஸ்வந்தி. எல்லாவற்றுக்கும்.

@ கார்த்திக்

சீக்கிரம் படிச்சு ஒரு விமர்சனம் எழுதுறது! தொகுப்பில் கிரிக்கெட் கதை எதுவும் இல்லை கார்த்திக். நன்றி.

@ பரிசல்

எல்லா சபாஷுக்கும் நன்றிங்க்னா. இப்படி உங்க கிட்ட சபாஷ் வாங்கினதுக்கு இன்னொரு சபாஷ் நான் எனக்கே சோல்லிகிறேன்பா :)

@ நெல்லை சரவணகுமார்

நன்றி நண்பரே. உங்கள் முதல் வருகை?

@ கமலேஷ்

வாங்க கவிஞர். ரொம்ப நன்றி கமலேஷ்.

@ கார்க்கி (மீண்டும்)

ஹையோ கடி கடி.

@ பட்டாம்பூச்சி

வாங்க மே'ம் :). உங்கள் முதல் வருகை? ஜூலைக்குப் பின் எழுதவே இல்லை?
நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.

@ சித்ரா

உங்களுக்கு கூட இது முதல் வருகை இல்ல? நன்றி உங்கள் வருகை மற்றும் பாராட்டுக்கு.

@ கும்க்கி

'கறார்' - இதுக்கு மேல என்ன பண்ணனும்கறீங்க பாஸ்? :)))

அனுஜன்யா

கும்க்கி said...

சொல்ல வந்து விடுபட்டது பாஸ்:
பொதுவா நர்சிம் பதிவுகளுக்கான எல்லா பின்னூட்டங்களுமே ஒன்று போலத்தான் தெரியும்.
அது தவறு சரி என சொல்ல வரவில்லை..
ஆனாலும் அச்சு எழுத்துக்கான நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் கறாராக இருப்பதாகத்தான் தோன்றுகிறது..
நல்லது...என சொல்ல வந்தேன்..

ஸ்ரீமதி said...

நானும் இந்த பதிவ படிச்சிட்டேன்.. (லேட்டா வந்துட்டு வேற என்னத்த சொல்றது? எல்லாரும் விமர்சனம் நல்லா இருக்குன்னு தான் சொல்லிட்டாங்களே? :(( )

அன்புடன்-மணிகண்டன் said...

விமர்சனம் அருமை..
வெளியீட்டு விழாவுக்கு நீங்க வருவீங்க உங்களையும் சந்திக்கலாம்'ன்னு நெனச்சேன் அனுஜன்யா...

பா.ராஜாராம் said...

மிக நேர்மையான விமர்சனம் அனு!

உங்களிடமிருந்து கற்று கொள்ள நிறைய இருக்கு பாஸ்,முதலாளி,அண்ணாத்தே,அப்புறம் நம் அனுவும்.

இந்த,கருவேலநிழல்,கருவேலநிழல்-ன்னு ஒரு தொகுப்பு வந்திருக்கு.அதையும் கொஞ்சம் பிரிச்சு மேஞ்சு தாங்களேன்.நானும் நர்சிம் மாதிரி குறிச்சு வச்சுக்கிறேவேன்ல...(ஹி..ஹி..தலை சொரிந்து கொண்டே..)

பாஸ்,முதலாளி,அண்ணாத்தே,போடும்போதே தெரியும் என முனங்குவது கேட்க்குது.மெதுவா..மெதுவா..

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் நர்சிம்!

அனுஜன்யா said...

@ கும்க்கி

ஓகே ஓகே. ஏன்னா நீங்க ஏதாவது சொன்னால் நிச்சயம் அதில் விஷயம் இருக்கும் பாஸ். தப்பிச்சிட்டேன் :)

நன்றி கும்க்கி

@ ஸ்ரீமதி

லேட்டா வந்துட்டு பேச்சை பாரு...:)))

நன்றி ஸ்ரீ

@ அன்புடன் மணி

நன்றி மணி. நான் ஊற விட்டுக் கிளம்பினா தான் விழாவே என்று நரசிம் சொன்னதாகத் தகவல்கள் :)

அடுத்த முறை கண்டிப்பா சந்திக்கலாம்.

@ ராஜாராம்

வாங்க பெருங்கவிஞரே! இன்னும் உங்கள் புத்தகம் கைக்கு வரவில்லை. அப்புறம் இருக்கு மண்டகப் படி :)

உங்க ரசிகர் பட்டாளம் என்னை சும்மா விடுவாங்களான்னு பயமாவும் இருக்கு பாஸ்.

நன்றி ராஜா

அனுஜன்யா