மோட்சப் பிரசாதம்
காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.
ஒரு குழந்தை பிறந்ததினால்
மதியம் கரைந்த சாக்லேட்கள்
மேசைக்கடியில் குவிந்திருந்த
இனிப்புத் துகள்கள்
மாலையில் வசீகரமான
மஞ்சள் உருண்டைகளுடன்
வளையம் வந்த ஊழியனிடம்
எனக்கு இரண்டு கேட்டேன்
ஒன்றும் பேசாமல்
மேசைக்கடியில் உருண்டைகளைப்
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில்
புதிதாக இறந்திருந்த
கரப்பானின் மென் மீசை
என்
நாசியை உரசியபடி அலைந்தது
[அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]
4 comments:
ம்ம்ம்.... நல்லா இருக்கிற மாதிரி இருக்கு.....
இனிப்பு சமாச்சாரம்ன உடனே ஹெல்த் ப்ளஸ் ஐடில வந்து கமெண்ட் போட்டிருக்கார் பாருங்க நம்ம சிவக்குமரன். :))))))))))
இந்தக் கவிதைக்கு நண்பன் வளர்மதி எழுதிய பின்னூட்டம்:
அனுஜன்யாவின் இக்கவிதையில் படிமங்கள் இல்லை, அடுக்குமொழி இல்லை. வலிந்து கூறலும் எதுவும் இல்லை. ஆழ்த்ததொரு கருத்தைச் சொல்லும் பாவனை ஏதும் இல்லை. மிக எளிமையான மொழியில் அர்த்தமற்ற ஒரு நாள் பொழுது உருமாறிச் செல்வதை நிதர்சனமாக விவரித்துச் செல்வது.
காலை - கடவுள் பிரசாதம் (திருப்பதி லட்டாகவும் இருக்கலாம் - அதற்குள் போக அவசியமில்லை)
மதியம் - ஒரு குழந்தை பிறந்ததை முன்னிட்டு பகிரப்படும் சாக்லேட்டுகள்.
காலை தின்ற லட்டில் இருந்து சிதறிய இனிப்புத் துகள்கள் மேசைக்கடியில் இருப்பதை மதியம் காண நேர்கிறது (சாக்லேட் கவர்களை கீழே போடுகையில் கவனித்திருக்கலாம்).
மாலை - அலுவலகக் கடைநிலை ஊழியர் கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் போரிக் ஆசிட் உருண்டைகளை எங்கெங்கு இனிப்பு சிதறியிருக்கிறது என்று பார்த்து போடுவதற்காக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவர் தன் மேசைக்கடியில் போட இரண்டு கேட்கிறார்.
ஊழியரோ இவரது மேசைக்கடியில் இரண்டைப் போட்டுவிட்டு இவரைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக நகர்கிறார். அலட்சியமாக நகர்ந்தான் என்பதைத் தான் கவிஞர் அகர்ந்த்தான் என்று புது இணைவுச் சொல்லாகப் புனைகிறார் போலும்.
அந்த உருண்டைகளைத் தின்று ஒரு கரப்பான் பூச்சியாவது இறந்திருக்கும் என்ற நினைவு கனவாக லட்டு தின்றவருக்கு வருகிறது.
அம்புட்டுத்தேன்.
ஒரு நாளின் நிகழ்வு.
திருப்பதி லட்டாக - கடவுளின் ஆசியோடு - காலை தொடங்கி, ஒரு குழந்தை பிறந்த மகிழ்ச்சியாகத் தொடர்ந்து, ஒரு பூச்சியைக் கொல்வதாக - கனவில் அலையும் ஆழ்மனச் சிறு பதிவாக - முடிகிறது.
இறைவனின் ஆசி -> பிறப்பு -> மரணம்.
இது மிகச்சாதாரண உருமாற்ற நிகழ்வு - metamorphosis.
வாழ்வின் எளிய நிதர்சன உண்மையை, ஒரு நாள் தோன்றி மறைவதன் நிகழ்வோடு (இதுவும் ஒரு உருமாற்றம்) இணைத்துச் செல்லும் எளிமையான கவிதை. ”உணர்ச்சிகளற்ற” மனநிலையில் ஒரு witness ஆக இருந்து நோக்குவது. Witness ஆக மட்டும் நிற்கவில்லை. Participant ஆக அதனுள் ஆழ்ந்தும் இருப்பதால் கனவிலும் அலைவது.
இதில் வசீகரமான உருவகங்கள் (metaphor) காணக்கிடைக்காததன் பொருட்டு பலர் அசட்டையாக நகர்ந்துவிடவும் கூடும்.
வார்த்தை மாய்மாலமே கவிதை என்று நினைத்திருப்போரை ஏதும் செய்ய இயலாது. இதிலே ”அகர்ந்தான்” என்ற சொல்லின் சிறப்பு மொத்த கவிதைக்குமான குறியீடாக (marker) இருப்பதுதான்.
அது உருவகமாக இருக்கவில்லை ஆகுபெயராக (சினையாகுபெயர்?)வந்திருக்கிறது.
தமிழில் அ - வின் சேர்க்கை எப்போதும் negative ஐக் குறிப்பது.
இங்கேயும் அ - கர்ந்தான் அலட்சியமாக நகர்ந்தான் என்று பொருள் கொள்ள இடமுண்டு.
மொத்தக் கவிதையின் தொனியைச் - வாழ்க்கை எதையும் பொருட்படுத்தாது அது பாட்டுக்கு வாழ்வில் இருந்து இறப்பிற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறது - சுட்டுவதாகவும் இருப்பது சிறப்பு.
மிக்க நன்றி வளர்.
நன்றி வேலன் மற்றும் ஹெல்த் ப்ளஸ் நண்பர் சிவகுமாரன்.
Post a Comment