Thursday, September 25, 2008

'ஈத் முபாரக்'


ஒரே பிறையைத்தான்
இருவரும் பார்க்கிறோம்
களங்கம் அதிலில்லை தோழா
காணும் நம் கண்களில்;

செடிகளின் பசுமை
உனக்குப் பிடிக்கிறது;
நான் உடுத்திக்கொண்டால்
தீண்டா நிறம் உனக்கு

வெடி வெடித்தவன்
தலையில் குல்லாவும்
தாடையில் தாடியும் இருந்தால்
நாங்கள் அனைவரும்
மொட்டை போட்டு
முகத்தில் முழுச்சவரம்
செய்ய வேண்டுமா?

பிடித்த நடிகன் முதல்
விளையாட்டு வீரன் வரை
'கான்' களின் காலெண்டர்
உன் வரவேற்பறையில்;
என்னை வரவேற்க மட்டும்
என் கடவுளோ உன் கடவுளோ
குறுக்கே நிற்கிறார்

எதிர் வீட்டில் என்னாரை (NRI)
அண்டை வீட்டில் அமெரிக்கன்
என்று பெருமைப் படுகிறாய்
அருகில் என்னை மட்டும்
அண்டவிடாமல் செய்கிறாய்

எங்கள் இல்லங்களில்
வெடிகுண்டு தயாரிப்பது
குடிசைத் தொழிலென்று
எண்ணுகின்றாய் போலும்
குண்டுகளுக்கு மதமில்லை
அவைகள் எல்லா
உடல்களையும் சிதறடிக்கும்
என்றுனக்குத் தெரியாதா?

நீயொன்றும் மதவெறியனன்று;
நீ ‘ஹாப்பி கிறிஸ்மஸ்’
பாடுவதைப் பார்த்திருக்கிறேன்
நானும் தான் நண்பா
'கணபதி பப்பா மோரியா' என்றேன்
நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும்
'ஈத் முபாரக்' என்று.


கீற்று.காம் மின்னிதழில் பிரசுரம் ஆன கவிதை.
பின்னணி தெரிய வேண்டுமென்றால் புதிய மாதவியின் கட்டுரைக்குச் செல்லவும். அதைப் படித்து, அது உண்மைதான் என்று உறுத்தியதால் 'கீற்று'க்கு ஒரு பின்னூட்டமாக எழுதிப்போட்டேன். அவருக்கும், கீற்று.காம் இதழுக்கும் நன்றி.

33 comments:

கோவி.கண்ணன் said...

கவிதை நன்றாக இருக்கு, சில கட்டுரைகள் சொல்வதை ஒரு சில வரிகளால் கவிதைகள் சொல்லிவிடும் என்பது உண்மை. இந்த கவிதையும் அப்படித்தான் இருக்கிறது.

புதுகை.அப்துல்லா said...

நான் எழுதியதாக உணர்கிறேன்

புதுகை.அப்துல்லா said...

உங்க மெயில் ஐடி என்ன அன்ணே?

ராமலக்ஷ்மி said...

//பின்னணி தெரிய வேண்டுமென்றால் புதிய மாதவியின் கட்டுரைக்குச் செல்லவும். அதைப் படித்து, அது உண்மைதான் என்று உறுத்தியதால் 'கீற்று'க்கு ஒரு பின்னூட்டமாக எழுதிப்போட்டேன்.//

கீற்றில் கண்டேன்.
உறுத்திய உண்மையை உரக்க.. உறைக்க.. சொல்லியிருக்கிறீர்கள்.

anujanya said...

@ கோவி

வாங்க கோவி அண்ணே. வாக்கு கொடுத்த மாதிரியே வந்ததற்கு நன்றி. நல்ல வேளை ஒரு பொதுப் பிரச்சினை பற்றிய கவிதை. அதனால் உங்கள் பாராட்டும் கிடைத்தது. அடிக்கடி வாருங்கள்.

@ அப்துல்லா

சரியாக சிந்திக்கும் நம் எல்லோர் உள்ளங்களிலும் இருப்பதை, உருத்துவதைத் தான் சொன்னேன்.

@ ராமலக்ஷ்மி

நன்றி. எப்படி உடனே வந்துவிடுகிறீர்கள். உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் மீ த ஆல்வேஸ் லாஸ்டு.

அனுஜன்யா

anujanya said...

Abdulla, my email id is: anujanya@gmail.com

Anonymous said...

//குண்டுகளுக்கு மதமில்லை
அவைகள் எல்லா
உடல்களையும் சிதறடிக்கும்//

சத்தியமான வார்த்தைகள் அனுஜன்யா. அவர்கள் மேல் விழுந்த கருமைக் குறி அகற்றப் படவேண்டும் விரைவில்.

anujanya said...

@ வேலன்

ஆமாம். ஆனால் அது எங்கே, எப்படி என்று புரியவில்லை. ஒதுக்க ஒதுக்க தீவிரம் மிகத்தான் செய்யும். நிறைய பேர் எண்ணக்கூடும். இந்த மாதிரி 'நெம்புகோல்' கவிதைகள் சுயதிருப்தி மற்றும் பதிவில் இன்னொரு எண்ணிக்கை என்பதைத்தவிர வேறு பயன்கள் இல்லாதவை என்று. நானும் அப்படிதான் எண்ணினேன். இன்னமும் எண்ணுகிறேன். இந்த வரிகள் கவிதை என்பதைவிட, ஒளிந்து, கரைந்து கொண்டிருக்கும் நம் மனசாட்சியை சிறிது உசுப்பும் முயற்சி. குறைந்தபட்சம், இந்துக்கள் வாழும் ஒரு அடுக்குமாடியில் குடிபுக ஒரு இஸ்லாமியர் முயற்சி செய்தால், முட்டுக்கட்டை போடாமலாவது இருப்போம்.

அனுஜன்யா

ஜியா said...

//புதுகை.அப்துல்லா said...

நான் எழுதியதாக உணர்கிறேன்//

நானும் சொல்லிக்கிறேன் :))

வழக்கம்போல அருமையா எழுதிருக்கீங்க அனு...

Unknown said...

நல்லாருக்கு அண்ணா...!! :)))))

anujanya said...

@ ஜி

நன்றி. அமெரிக்காவில் இந்தப் பாகுபாடெல்லாம் கிடையாதா?

அனுஜன்யா

நாணல் said...

உண்மை தான் அனுஜன்யா..
ஏனோ நம் மக்கள் கண்ணுக்கு தெரியும் மனிதனை விட கண்ணுக்கு தெரியா மதத்தை தான் நேசிக்கின்றனர்.. :(
இந்த நிலை என்று மாறுமோ.. ?

anujanya said...

@ ஸ்ரீ

வாம்மா, பின்.பெண்.புலி. நன்றி.

@ நாணல்

//ஏனோ நம் மக்கள் கண்ணுக்கு தெரியும் மனிதனை விட கண்ணுக்கு தெரியா மதத்தை தான் நேசிக்கின்றனர்.. :( //

நான்கு பக்கக் கட்டுரையும், நாற்பது வரி கவிதையும் சொல்லவந்ததை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டீர்கள். நன்றி நாணல்.

ச.முத்துவேல் said...

கீற்று விலிருந்து எங்கள் பார்வைக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. நல்ல கவிதைகளை பரிந்துரைத்தல் , நல்ல காரியம்.

anujanya said...

@ முத்துவேல்

கீற்றில் முதலில் கட்டுரை வந்தது. பிறகு நான் பின்னூட்டமாக எழுதிய கவிதையையும் பிரசுரம் செய்தார்கள். வருகைக்கு நன்றி.

அனுஜன்யா

சென்ஷி said...

அருமையான கருத்து நண்பரே...

கோவி.க. அருமையாக சொல்லியிருக்கிறார். :)

ஜியா said...

//நன்றி. அமெரிக்காவில் இந்தப் பாகுபாடெல்லாம் கிடையாதா? //

அமெரிக்காவிலும் இந்த பாகுபாடெல்லாம் இருக்குது... முக்கியமா விமான நிலையம்... நான்லாம் போனா சிறப்பு பாதுகாப்புச் சோதனை நடக்கும் :)))

இன வேறுபாடுப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட, கறுப்பினத்தவர்களிடம் அதிகமாக பாகுபாடு பார்க்கப்படுகிறதா அல்லது முஸ்லிம்களிடமா என்றொரு விவாதம் நடைப்பெற்றது. அதில் கூட நீங்க சொன்ன அதே அடையாளத்தப் பார்த்த உடனே தீவிரவாதியா பாக்குற மாதிரிதான் பேசுனாங்க...

ஜியா said...

//குறைந்தபட்சம், இந்துக்கள் வாழும் ஒரு அடுக்குமாடியில் குடிபுக ஒரு இஸ்லாமியர் முயற்சி செய்தால், முட்டுக்கட்டை போடாமலாவது இருப்போம். //

மாமிசமென்ற காரணங்காட்டி வீடு மறுக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது... அது அவர்களது விருப்பமென்று எந்தவொரு வருத்தமும் கவலையுமின்றி வேறு வீடு பார்க்க ஆரம்பித்து விட்டோம்... இதுப் பற்றி விரிவான ஒரு பதிவும் விரைவில் எழுதனும் :))

பரிசல்காரன் said...

//செடிகளின் பசுமை
உனக்குப் பிடிக்கிறது;
நான் உடுத்திக்கொண்டால்
தீண்டா நிறம் உனக்கு//

அபாரம் அனுஜன்யா!

சில சமயம் உங்க கவிதைகளைப் படிக்க பயமா இருக்கு. சும்மா புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. படித்துவிட்டு கொஞ்ச நேரத்துக்கு வேறெதுவும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டுவிடுகிறது உங்கள் எழுத்து!

anujanya said...

@ சென்ஷீ

நன்றி சென்ஷீ. கோவி.கிட்ட பாராட்டு வாங்குவது பெருமை. சமூக அக்கறை மிகுந்த முக்கியமான பதிவர் அவர். அவரிடம் பிடித்தது மாற்றுக்கருத்தை ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் மதிப்பவர். Agrees to disagree.

//புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே!//
என்று முகப்பில் போட்டிருப்பார்.

அப்புறம், ஐய்ஸ் பதிவுல உங்களைக் கொஞ்சம் கலாய்த்திருக்கிறேன்.

அனுஜன்யா

anujanya said...

@ ஜி

அமெரிக்கர்களுக்கு 9/11 பிறகு வெறுப்பை விட பயம் மிகுந்திருக்கிறது. மொத்தத்தில் அரசியல் தலைவர்களுக்குத் தொலை நோக்கு போதவில்லை, உலகம் முழுவதும். பதிவு எழுது ஜி. ரொம்ப நாளாச்சு.

அனுஜன்யா

anujanya said...

@ பரிசல்

கே.கே. என்ன ஆச்சரியம். உனக்குத் தனி மடல்தான் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். நிறைய இருக்கு பரிமாற. மிகைப் புகழ்ச்சி என்றாலும் பிடித்திருக்கிறது; நன்றி.

அனுஜன்யா

narsim said...

ஆழமான வரிகள்.. அழகான கவிதை!

நர்சிம்

anujanya said...

நர்சிம்,

நன்றி. வெள்ளிக்கிழமை இஸ்லாமியருக்கு முக்கிய நாள். இன்று சனிக்கிழமை. 'மாறவர்மன்' நேரம். வருகிறேன்.

அனுஜன்யா

MSK / Saravana said...

நல்லாருக்குங்ன்னா.. :))

Anonymous said...

ரொம்ப சூப்பர்ங்க அனுஜன்யா. உங்க எல்லா கவிதைல இருக்கற touch இதுலையும் :). அருமையா எழுதிருக்கீங்க அனுஜன்யா

- Gandhi

வெண்பூ said...

சூப்பர் அனுஜன்யா.. அற்புதமான கருத்துக்களை முகத்தில் அடித்தமாதிரி சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

வெண்பூ said...

//ஜி said...
மாமிசமென்ற காரணங்காட்டி வீடு மறுக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது... அது அவர்களது விருப்பமென்று எந்தவொரு வருத்தமும் கவலையுமின்றி வேறு வீடு பார்க்க ஆரம்பித்து விட்டோம்... இதுப் பற்றி விரிவான ஒரு பதிவும் விரைவில் எழுதனும் :))
//

நீங்க வேற தல.. இதுக்கு மதமெல்லாம் இல்லை. நான் ஹிந்துதான். ஆனா என்னாலயே மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டையில் வீடு எடுக்க முடியவில்லை. காரணம் மாமிசம் சாப்பிடுபவனாம் :(

அமெரிக்காவில் இதற்கு பெயர் ரேசிசம். ஒருவரது நிறம், மதம், அவரது நாடு, பழக்க வழக்கம் வைத்து வீடு தரமாட்டேன் என்று எவனாவது சொன்னால் உடனடியாக போலிஸில் சொல்லலாம். கம்பி எண்ண வேண்டியதுதான். ஆனால் இங்கே ஃப்ரீ ஆட் பேப்பரில் பார்த்தால் "வீடு வாடகைக்கு கிடைக்கும், பிராமணர்களுக்கு மட்டும்" என்று கூட தெளிவாக இருக்கிறது. கடுப்பாகுதுங்க :(

Bee'morgan said...

நல்லா இருக்கு அண்ணா.. ஒரு வட்டத்துக்குள் உங்களை சிறைபடுத்திக்கொள்ளாத உங்களின் பாடுபொருள் தேர்வே மிகச் சிறப்பாக இருக்கிறது. :)
கீற்றுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.. :)

ச.முத்துவேல் said...

அப்படியா? இணையத்தில் அதிக நேரம்
செலவிட முடியாதவன் நான். நுனிப்புல் மேய்வதால்,சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.வாழ்த்துகள்.

anujanya said...

@ சரவணகுமார்

நன்றி சரா.

@ tbkg

நன்றி காந்தி.

@ வெண்பூ

நன்றி வெண்பூ. கேட்க வருத்தமாக இருக்கிறது. ஜாதிப்பற்று என்று போகும் என்று தெரியவில்லை. மாமிசம்...அந்த உணவின் சுவை/வாசனை அறியாமல், பிடிக்காமல் இருப்பவர்கள் சற்று ஒதுங்கி இருக்க எண்ணுவது உண்மையிலேயே தவறுதானா?

@ bee'morgan

பாலா, நன்றி. 'வழிபாடு'க்குப்பின் எழுதவில்லையா?

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்.

Unknown said...

அனுஜன்யா,
கீற்றில் தங்களின் கவிதை க்கான ‘ஆதவன் தீட்சன்யாவின்’ கவித்துவ்ம் நிறைந்த மறுமொழியை மீள்பதிவிட்டிருக்கிறேன்...

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் துயரத்தின் சாயலை உள்பொதித்துக் கொண்டு சகமனிதரின் மனசாட்சியோடு ஒரு உரையாடலைத் தொடங்கும் இக்கவிதை எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ளும் திராணியை இச்சமூகம் எப்போதோ இழந்துவிட்டது. எதிரியையும் நண்பரையும் முன்முடிவான அடையாளங்களின் கீழ் தேடுகிற பொதுப்புத்தியை சிதறடிக்கும் நுண்ணரசியல் ஒரு கவிதையாக மாறியுள்ளது. இந்த புதுக்குரல் இடியைப் போலவோ காய்ச்சிய ஈயம் போலவோ எல்லாச் செவிகளிலும் இறங்கட்டும்.
-ஆதவன் தீட்சண்யா

வாழ்த்துக்கள்..

anujanya said...

@ அல்லா பிச்சை

நன்றி. ஆதவன் தீட்சண்யா மகிழ்கிறார் என்பது உண்மையில் மகிழ்ச்சி.

அனுஜன்யா