Tuesday, November 25, 2008

படிக்காதவன்


முதலில் 'வாசிப்பு' பற்றி என்னையும் மதித்து எழுத அழைத்த லேகாவுக்கு மிக்க நன்றி. பெரிய ‘தலை’ங்க பட்டியலில் நானும் சேர்க்கப்பட்டேன். சரி விஷயத்துக்கு வருவோம்.

வீட்டில் ஆங்கிலத்துக்கு மிக முக்கியத்துவம் தருவார்கள். ஆதலால் ஹிந்து நாளிதழ், சூடான பில்டர் காபியுடன் பிரதி தினம் துவங்கும். அப்பா விளையாட்டுப் பிரியர். கடைசிப் பக்கத்திற்கு முந்தைய (அப்போதெல்லாம்) பக்கம் அவருக்குத்தான் போகும். அக்கா பெரிய மனுஷி போல் முதல் பக்கம் தலைப்புச் செய்திகள் படிப்பாள். எனக்கு மீதமாவது, 'Murugan run over by lorry' போன்ற பரபரப்புச் செய்திகளும், வெள்ளிக்கிழமைகளில் வரும் 'Grand Gala opening at Satyam/Alankar/Abirami' போன்ற சினிமா செய்திப்பக்கங்களும்தான். ஆங்கிலப் புலமையைக் காட்டுவதற்காகவும், உச்சரிப்பு நளினங்களுக்காகவும், மாடிப்படிகளில் அமர்ந்து சற்று உரக்கவே படிப்பேன். அப்பா ஒரு வசீகரமான பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, புன்னகையுடன் நகர்ந்த நாட்களவை. ஆயினும், வீட்டில் தமிழுக்கும் சமமான இடம் உண்டு. என் தந்தை தனது கல்லூரி தினங்களில், சுலப மதிப்பெண்கள் பெற வாய்ப்புடைய பிரெஞ்சு மற்றும் ஸமஸ்க்ரிதம் தவிர்த்து 'செந்தமிழ்' படித்துத் தேறியவர்.

நான் தமிழில் படித்த முதல் நாவலே தமிழின் மிகப்பெரிய சரித்திர நாவலாகிய 'பொன்னியின் செல்வன்' தான். என் அக்காவும் அப்பாவும் 'பழுவேட்டரையர், மதுராந்தகன், அருள்மொழி' என்று மணிக்கணக்கில் சுவாரஸ்யம் குறையாமல் விவாதம் செய்வது பொறுக்காமல் 'இதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்' என்ற வீம்பில் படிக்கத் துவங்கி, என்னை மறந்தேன். அப்போது சென்னையில் மீதமாயிருந்த வெகு சில ஏரிகளில் வேளச்சேரி ஏரியும் ஒன்று. என் நண்பன் வீட்டுக்கு சைக்கிளில் ஏரிக்கரை மேட்டில் இலாகவமாகப் போகையில், அதை வீரநாராயண ஏரியாகவும், சைக்கிளை குதிரையாகவும், என்னை வந்தியத்தேவனாகவும் பாவித்து சென்ற அற்புத நாட்கள். அந்தத் தாக்கத்தில் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு கதைகளையும் படித்து முடித்தாலும், பொ.செ. ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை. அலைஓசை பின்பு படித்தாலும் ஒ.கே. என்ற நினைவு மட்டுமே.

இதற்குள் என் அக்காவின் provocation என்னை சுஜாதாவை நோக்கித் திரும்ப வைத்தது. முதலில் படித்தது 'நிர்வாண நகரம்'. அடுத்தடுத்து, 'நைலான் கயிறு, கொலையுதிர்காலம், பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நடுப்பகல் மரணம், ஏறக்குறைய சொர்க்கம், சொர்கத்தீவு, காகிதச் சங்கிலிகள்' என்று கட்டம் கட்டி, துரத்தி துரத்திப் படித்தேன். அவருடைய அறிவியல் புனைவுகள் என்னை முற்றிலும் வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. பிறகு கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவ்வப்போது கணையாழியிலேயே படிக்கத் தொடங்கினேன். இன்றளவும் என்னை பெரும் ஆளுமை செய்வது அவரது எழுத்துக்கள்தான். ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு அவர் தந்தது நம்ப முடியாத தன்னம்பிக்கை. ஏதோ ஒரு சிறுகதையில் வரும் 'சில்லறை அமெரிக்கத் தனங்கள்' என்று passing lines எழுதியது, IIT / Pilani படித்து அமெரிக்கா சென்ற என் பெரியம்மா பையன்களின் சேட்டைகளை எளிதில் ஒதுக்க உதவியது. அவரது crisp நடை தமிழுக்கு அவர் அளித்த மிகப்பெரும் கொடை. அவரது துரித கதி நடையில், இலக்கியம் படைப்பது சிரமம்தான். அதனால் அவருக்கு கிடைக்கவேண்டிய இலக்கிய அந்தஸ்து சர்ச்சைக்குரியதாகவே இன்றும் உள்ளது ஒரு துரதிர்ஷ்டம். சிவாஜி கணேசனை ஒதுக்கித் தள்ளி M.G.R. போன்ற நடிகர்களுக்கு 'சிறந்த நடிகர்' கொடுத்த தேசம் அல்லவா நமது தேசம். ஆயினும் சுஜாதாவின் மிகப் பெரும் ஆற்றல் அவரது சிறுகதைகளே. அவரே ஒப்புக்கொண்டபடி, நாவல்கள் எழுத முக்கிய காரணிகளான கள அனுபவமோ, வலியோ, அதற்கான திட்டமிடலோ, நேரமோ அவரிடம் ஏதுமில்லை. எஞ்சியவை தொடர்கதைகளே. ஆனால், தமிழைப் படிப்பது ஒன்றும் கௌரவரக் குறைச்சல் இல்லை என்ற சித்தாந்தத்தை இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு அவர் அடிக்கோடிட்டு உணர்த்தியதை மறுக்க முடியாது.

அட போறும்பா சுஜாதா புராணம்; மேலே செல்லவும் என்றால்... நம்புங்கள் ஒன்றுமே இல்லை. அவர் மரணம் அடைந்த பின், என்னதான் நடக்கிறது என்று பார்க்கவே, கண்ணைக் கட்டிக்கொண்டு இந்தப் பதிவுலகில் நுழைந்தேன். அப்படி என்றால் வேறு எதுவுமே படிக்கவில்லையா என்றால், எப்போதோ ஜானகி ராமன் (மரப்பசு, மோகமுள்) படித்தேன். லா.ச.ரா, கி.ரா., ஜெயகாந்தன், வண்ணதாசன், பிரபஞ்சன் இவர்களின் சிறுகதைகளை அவ்வப்போது வெகு ஜனப் பதிரிகைகைகளில் படித்து அவர்களின் வீச்சைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதில் பிரபஞ்சன் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். எஸ்ராவின் தொடர்களை ஆனந்த விகடனில் படித்து அவருக்குப் பெரிய விசிறியானேன். ஒரு அடிப்படை நேர்மை, உண்மை அவர் எழுத்தக்களில் தென்படுவதாக உணருகிறேன்.

கடந்த ஆறு மாதங்களில் தமிழ் இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நாட்கள் அறியாத பல விடயங்கள் தெரிய வந்தன. தமிழின் மிகச் சிறந்த நாவல் 'புயலிலே ஒரு தோணி' என்றும், ஏறக்குறைய இரண்டாம் இடம் 'நாளை மற்றொரு நாளே' என்றும் தெரியவந்தது. இது தவிர, அய்யனார், ஜ்யோவ்ராம், லேகா, எஸ்ரா எழுத்துக்களிலிருந்து வண்ணநிலவனின் 'கடல் புரத்தில்', 'எஸ்தர்' 'ரைநீஸ் ஐயர் தெரு', நகுலனின் கதைகள்/கவிதைகள்/டயரி, தி.ஜா.ராவின் 'அம்மா வந்தாள்', பாமாவின் 'கருக்கு', கோபிகிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', சம்பத்தின் 'இடைவெளி', ஜெமோவின் 'ரப்பர்', 'விஷ்ணுபுரம்', ஏழாம் உலகம்', 'காடு', எஸ்ராவின் 'நெடுங்குருதி, யாமம், உறுபசி, உபபாண்டவம்' சாருவின் 'சீரோ டிகிரி', கி.ராவின் 'கோபல்ல கிராமம்', ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', நாஞ்சில் நாடனின் 'எட்டுத் திக்கும் மத யானை' என்று பெரும் பட்டியல் என் முன்னே விழுந்தது.

முன்பே எஸ்ராவின் உறுபசி, விழித்திருப்பவனின் இரவுகள் படித்தாயிற்று. அண்மையில் தீபாவளி நிமித்தம் சென்னை வந்தபோது, ஜ்யோவை பாடாய்ப்படுத்தி, தி.நகரில் உள்ள New Lands Bookshop சென்று நிறைய புத்தகங்கள் வாங்கினேன். அவர் பொறுமைக்கும், புத்தகங்கள் பரிந்துரை செய்ததற்கும் நன்றி சொல்ல இந்தத் தருணம் உதவுகிறது. மேல் கூறிய புத்தகங்களில் சில ; கூறாத சில கிடைத்தன. ஒரு பெரிய பார்சலுடன் ஊர் வந்து சேர்ந்து, புதுப் புத்தகங்களை, பள்ளிச் சிறுவனின் ஆர்வத்துடன் தடவிப் பார்த்துக்கொண்டு, படிக்காமல் இருக்கிறேன். இது வரை படித்தது: கடல் புரத்தில், என்பிலதனை வெய்யில் காயும் (நாஞ்சில் நாடன்). படித்துக் கொண்டிருப்பது யாமம். அண்மையில் படித்ததில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை ஜெமோவின் 'ஊமைச் செந்நாய்'.

இதற்கு முன்பே எஸ்ராவின் பரிந்துரையில் தேவதச்சன் படிக்க ஆரம்பித்தேன். 'கடைசி டினோசர்', மற்றும் 'யாருமற்ற நிழல்'. மிக மிக வசீகரமாகவும், மாயமாகவும், அடர்கானகத்து யுகலிப்டஸ் கமழும் காற்றை சுவாசிப்பது போன்றும் இவர் கவிதைகள் எனக்கு போதை தருவது உண்மை. அலுவலகம் அடைய பத்து நிமிடங்கள் முன்பு மற்றவர் Economic Times மனப்பாடம் செய்கையில், ஏதோ ஒரு பக்கம் பிரித்து ஒரே ஒரு கவிதையைப் படித்தால், மற்றவரின் நெற்றிச் சுருக்கங்களுக்கு நடுவே, நமது பெரிய புன்னகை மிகப் பிரகாசமாக இருக்கும் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

இன்று படித்தது:

நாற்பது வினாடிகள்

நாற்பது வினாடிகள் நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் பின்னால் நின்றோ
முன்னால் நின்றபடியோ அல்ல
இடது பக்கத்திலிருந்து.
நடுமதியத்தில்
அவள் ஒரு இரண்டு சக்கர வாகனத்தை
அனாயாசமாய் ஓட்டியபடி மறைந்தாள்.
அந்த நாற்பது வினாடிகள் நாற்பது வினாடிகளுக்கும்
அதிகமாக இருந்தன.
ஏழு வயதுச் சிறுவன் அப்பாவின் சட்டையைப்
போட்டுக்கொண்டிருப்பது போல்
அந்த நாற்பது விநாடிகளை அணிந்தபடி
நின்றிருந்தேன்
என் கால் விரல்கள்
அப்போது எனக்குத் தெரியவில்லை
இப்போதும் எனக்குத் தெரியவில்லை


இப்படியாக வாழ்வும், வாசிப்பும் செல்கிறது. நீண்ட பதிவை தயவு செய்து பொறுத்தருளுங்கள். பதிவர்களின் எழுத்துக்கள் பற்றியும் படித்த ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றியும் பிறிதொரு தருணத்தில் எழுதும் யோசனையும் (எச்சரிக்கை!) உள்ளது.

மீண்டும் நன்றிகள் லேகா மற்றும் நரசிம், பரிசல், தாமிரா இவர்களுக்கு (இவர்களின் தொடர்பதிவுகள் மட்டுமே படித்தேன்). அடுத்தது யார் என்கிறீர்களா? பிரமிக்கவைக்கும் வாசிப்பு உள்ள வேலன் அண்ணாச்சிதான். அவருடன் ஒரு மாலை, இரவைக் கழிக்கும் அரிய வாய்ப்பு நேற்று கிடைத்தது. சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. அவர் மட்டுமே பேச வேண்டும்; நான் கேட்பதுடன் நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது என்று.

ஓவர் டு வேலன்.

27 comments:

ராமலக்ஷ்மி said...

படிக்காதவன் படித்தவற்றையெல்லாம் அறிகையில் படித்தவன் படிக்காது போனவற்றைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவான். நல்ல பதிவு!

நட்புடன் ஜமால் said...

\\நான் கேட்பதுடன் நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது என்று.\\

இந்த நிலை அடைவது அவ்வளவு எளிதல்ல...

வாழ்த்துக்கள்

Krishnan said...

I have been visting your blog for sometime and commenting for the first time. It was nice to know about your reading habits. When you said you turned to reading Tamil works very recently, I felt I was in the same boat. Through Lekha's wonderful posts, I learned a lot about Vannadasan and started reading him. Thanks a lot for sharing your interests.

Bee'morgan said...

அண்ணா, இப்படி ஒரு பட்டியலே உள்ளே குடுத்துட்டு படிக்காதவன்னு தலைப்ப போட்டு ஊரை ஏமாத்த பாக்கறீங்களா..? ;)
நாம் நம்பிட்டேன்பா.. எல்லாரும் நம்பிட்டீங்கள்ல??? :) :)

40 வினாடி கவிதையும் அழகு..

லேகா said...

நல்ல பதிவு அனுஜன்யா.வாசிப்பு குறித்த அனுபவங்கள் பகிர்தலுக்கு மட்டும் அன்றி கேட்பதற்கும்,வாசிப்பதற்கும் சுகமே.உங்கள் பதிவில் நீங்க குறிபிட்டுள்ள சில புத்தகங்களை நான் படித்ததில்லை,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.

பகிர்தலுக்கு மீண்டும் நன்றி.

புதுகை.அப்துல்லா said...

அண்மையில் தீபாவளி நிமித்தம் சென்னை வந்தபோது,
//

அண்ணே ஊர்லயா இருக்கீங்க??? என்னைய எப்ப பார்க்கப் போறீங்க

pudukkottaiabdulla@gmail.com

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்க ஹிந்து பத்திரிகை பத்தி எழுதியிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு 50 வயது இருக்குமா?? :))

நல்ல பத்தி எழுத்து நடையும் உங்களுக்கு இருக்கு. அவ்வப்போது இதையும் தொடருங்கள்.

பரிசல்காரன் said...

ஆரம்ப பத்தி அசத்தல். சுஜாதாவைப்பற்றிய உங்கள் வரிகளுக்கு கன்னாபின்னாவென்று கண்ணை மூடிக்கொண்டு வழிமொழிகிறேன்.

பதிவில் ஓரிடத்தில் என் பெயரும் வந்திருப்பது, மிகுந்த மகிழ்வையும் பொறுப்புணர்வையும் தருவதாயுள்ளது.

வேலன் அண்ணாச்சி குறித்த உங்கள் கருத்துக்கு நானும் ரிப்பீட்டிக்கறேன்.

அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

தமிழ் said...

/இப்படியாக வாழ்வும், வாசிப்பும் செல்கிறது. நீண்ட பதிவை தயவு செய்து பொறுத்தருளுங்கள்./

இனியத்தமிழ் எழுதும்பொழுது நீண்ட பதிவை பற்றி எல்லாம் பயம் இல்லை

வாழ்த்துகள்

Anonymous said...

அனுஜன்யா,

நல்ல வாசகனுக்கு வாசிப்பதென்பது சுவசிப்பதைப் போன்றது. எப்படி சுவாசிப்பது என்பதை யாரும் கற்றுத்தரவில்லை என்றாலும், வாசிப்பதற்கு நல்லதொரு வழிகாட்டி, எதை வாசிப்பதென்பதைத் தேர்ந்தெடுக்க கிடைப்பதில்லை பெரும்பாலோருக்கு. கிடைத்தவர்கள் பாக்யவான்கள்.

சுந்தர் சொல்லி நீங்கள் வாங்கியிருக்கும் புத்தகங்கள் அத்தனையும் சிறந்த புத்தகங்கள். படிப்பதை விட படித்ததை மற்றவர்களுடன் விவாதிக்கும்போது வீச்சு இன்னும் அதிகமாகும். உங்கள் வாழ்க்கைத்துணையும் நல்ல எழுத்துக்ககளை படிப்பவராக இருப்பது உங்களுக்குக் கூடுதல் சுகம்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. ஏற்கனவே ஒருவர் அழைத்திருந்தார். எழுதும் மனநிலை வாய்க்கவில்லை. ஆனாலும் எழுதுவேன் விரைவில்.

வெறும் புத்தகத்தலைப்புகளாக இல்லமால் அது சார்ந்த அனுபவங்களைத்தான் எழுதவேண்டும் என்றிருக்கிறேன்.

Anonymous said...

பெருநகரத்தில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பா? வேலன் அண்ணாச்சி சொல்லவேயில்லையே?

வெண்பூ said...

ஆஹா.. குழந்தைகளுக்கான புத்தகங்களை ஃபோட்டோல போட்டுட்டு, நீங்க குடுத்திருக்குற லிஸ்ட் அதுக்கு எதிரா இருக்கு.. ஆனால் உங்கள் வாசிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். வீண் போகவில்லை. நல்ல பதிவு..

நாணல் said...

யப்பா ஒரு பெரிய பட்டியல்... உங்கள் பட்டியலை பகிர்ந்துகொண்டதிற்கு நன்றி...

anujanya said...

@ ராமலக்ஷ்மி

நன்றி ராமலக்ஷ்மி. தலைப்பு 'போலி அவையடக்கம்' இல்லை என்பது பதிவை படித்தவுடன் புரிந்திருக்கும். நம் அனைவருக்கும் 'இன்னும் நிறைய படிக்கவேண்டும்' என்ற உணர்வு எப்போதும் இருப்பதைக் குறிக்கவே அந்தத் தலைப்பு.

@ அதிரை ஜமால்

நன்றி ஜமால். உண்மைதான்.

@ கிருஷ்ணன்

நன்றி. லேகாவின் பதிவுகள் மிகப் பயனுள்ளவை. நீங்களும் எப்போது தமிழில் எழுதப் போகிறீர்கள்? There has to be a start man :)

@ Bee'morgan

நன்றி பாலா. பதிவை ஒழுங்காகப் படித்தாய் தானே. நான் சொல்லிய புத்தகங்களை வாங்க மட்டுமே செய்தேன். இன்னும் படிக்கவில்லை. :)))

@ லேகா

நன்றி லேகா. உங்கள் தூண்டுதலில் படிக்கும் ஆர்வமும், இந்த மாதிரி நீண்ட பதிவு எழுதும் அனுபவமும் அமைந்தது.

@ அப்துல்லா

வந்தது ஜஸ்ட் இரண்டு நாட்கள். நேரச் சிக்கல். அடுத்த முறை கண்டிப்பாகச் சந்திப்போம் அப்துல்லா.

@ ஜ்யோவ்

பள்ளியில் எனக்கு 4 வருடம் சீனியர் நீங்க. இதுல இவ்வளவு லொள்ளா? சுரேஷ் கண்ணன் கிட்ட சொல்லி இன்னொரு பதிவுல கலாய்க்க சொல்லட்டுமா:)))

விஷயம் இருந்தா பத்தி எழுத்துக்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் போல இருக்கு. முயற்சி செய்கிறேன். நன்றி சுந்தர்.

@ பரிசல்

நன்றி கே.கே. எனக்குத் தெரியும் உங்களுக்கு சுஜாதா எவ்வளவு பிடிக்கும் என்று. சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையும் அவரிடம் இருந்துதான் கற்றீர்கள் என்று சொல்லலாம் :))

@ திகழ்மிளிர்

வாங்க திகழ்மிளிர். உங்க பெயர் மட்டும் முழுதும் சொல்வதில் ஒரு அலாதி மகிழ்ச்சி. இரண்டு வினைச் சொற்கள் சேர்ந்த ஒரு அழகிய பெயர்ச் சொல்.

@ வேலன்

நன்றி வேலன், அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு. உங்களிடம் நிச்சயம் தரமான பதிவை எதிர்ப்பார்க்கலாம்.

@ வெயிலான்

ஆமாம் வெயிலான். எங்களுக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது. அவருக்கு எப்படியோ! தனியாகக் கேளுங்கள்.

@ வெண்பூ

நீ தாம்பா சரியா கவனிக்கற! ஆனா லிஸ்ட் எல்லாம் வாங்கிய, (படிக்காத) புத்தகங்கள். :))

@ நாணல்

நன்றி நாணல்.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

படிக்காதவன்,ஒன்னும் குறைவாப் படிச்சதாத் தெரியலை,என்னோட ஒப்பிட்டா.
ரொம்ப சுவாரசியமா இருக்குது உங்க வாசிப்பு அனுபவமும்,அதை சொன்ன விதமும்.


(இவ்வளவு படிச்சதுக்கே இந்த வளர்ச்சியான்னு யோசிக்கத் தோணுது.)

ச.முத்துவேல் said...

LEKHA SAID
//நல்ல பதிவு அனுஜன்யா.வாசிப்பு குறித்த அனுபவங்கள் பகிர்தலுக்கு மட்டும் அன்றி கேட்பதற்கும்,வாசிப்பதற்கும் சுகமே.//
REPEAT.

Unknown said...

இது பத்தாது அண்ணா... இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படிச்சு... எனக்கு காக்கா, குருவி, கொக்கு, மான், ஆமை, குள்ளநரிக் கதை எல்லாம் சொல்லணும்... சரியா??

anujanya said...

@ முத்துவேல்

நன்றி முத்துவேல். நீங்களும் உங்கள் அனுபவங்கள் எழுதலாமே.

@ ஸ்ரீ

உன் பதிவுகள பார்த்தால், நீ அந்த காக்கா, குருவி நிலைகளைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்டாய் என்று புரியும். :))

அனுஜன்யா

Anonymous said...

நீங்க படிச்ச books எல்லாம் நல்ல selection. ஆனா "படிக்காதவன்" title ரொம்பவே polite-ஆ இருக்குங்க.

நாற்பது வினாடிகள் கவிதையும் நல்லா இருந்தது.

TKB.காந்தி

MSK / Saravana said...

யப்பா.. இவ்ளோ படிக்கிறீங்களா..!!!

உங்கள் எழுத்துக்களிலேயே தெரிகிறது..

MSK / Saravana said...

கவிதை செம நச்..

முரளிகண்ணன் said...

வாசிக்க படு சுவராசியமாக இருந்தது தங்கள் அனுபவம்

anujanya said...

@ Gandhi

நன்றி காந்தி. கவிதை எழுதும் எல்லோருக்கும் அந்தக் கவிதை நிச்சயம் பிடிக்கும்.

@ சரா

நன்றி சரா. நீயும் நிறையப் படிக்கத் துவங்கிவிட்டாய் என்று தெரியும். உன் வாசிப்பையும் ஒரு பதிவாகப் போடலாமே.

@ முரளிகண்ணன்

What a pleasant surprise! பெரிய தல வருகை! நன்றி முரளி. முடிந்தபோது வந்து நாலு வரி எழுதிவிட்டு போங்கள்.

தாமதமான 'நன்றி'க்கு மன்னிக்கவும். காரணம் அறிய, அடுத்த பதிவு படித்தால் புரியும்.

அனுஜன்யா

இனியாள் said...

Ponniyin selvan eththanaiyo perukku vaasippai thodangi vaiththa arputha puthinam, enakkum kooda appadi thaan. Ungal pathivai padithathum enakkul pala enna alaigal, Maha swetha deviyin padaipugal padithirukireergala.
Avar magsaysay viruthu vangiyavar. Kidaithal vaasiththu paarungal.

anujanya said...

நன்றி இந்துமதி. ஸ்வேதா தேவி நான் வாசித்ததில்லை. படிக்கிறேன்.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

செம லிஸ்ட்..நல்ல பதிவு!

anujanya said...

நன்றி சந்தனமுல்லை. நீங்களும் உங்கள் அனுபவங்கள் எழுதுங்களேன்.

அனுஜன்யா