பெங்களூர் அருகில் 'மேகே தாட்டு' என்று ஒரு இடம். தமிழில் சுமாராக 'ஆடு தாண்டும்' இடம் என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம். நாங்க பெங்களூரில் இருந்தபோது இந்த இடத்துக்கு எங்க காலனியில் இருந்த சுமார் முப்பது குடும்பங்களுடன் பிக்னிக் போனோம். இரண்டு பக்கமும் கூர்மையான பாறைகள். நடுவில், கீழே ஆறு. காவிரி தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், இரண்டு பக்க பாறைகளும் 'ஹலோ' சொல்லி அருகில் வரும் தூரம். அந்த இடத்தை நம்மால் தாண்ட முடியாது என்றாலும் ஆடு தாண்டிச் செல்லும் என்பது தல வரலாறு.
அதுக்கென்ன இப்போ என்று அவசரப் படாதீர்கள். அந்த இடத்துக்கு கொஞ்சம் முன்னாடி போனா, இரு சிறு ஓடைகள் சங்கமிக்கும் இடம் வரும். இதுவா காவேரி என்று நம்ப முடியாமல் இருக்கும். முழங்கால் அளவு தண்ணி. இடுப்பு நனைய படுத்துக் கொள்ள வேண்டும். அங்க எல்லாரும் ..வேற என்ன .. நல்லா சாப்பிட்டு, கொஞ்ச நேரம் மர நிழலில் சீட்டாடி, அழகான பெண்களைக் கண்களால் துரத்தி என்று … சம்பிரதாயமான சுற்றுலா.
அப்போ சின்ன குழந்தைகள் தண்ணில பந்து விளையாடிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ஒரு பையன் பந்தை கொஞ்சம் பலமா வீசி எறிந்ததில் பந்து ஓடை நடுவில் இருந்த பாறைக்கு அந்த பக்கம் விழுந்து விட்டது. ரொம்ப சின்ன பையன் என்பதால், 'அங்கிள், (என்னதான் யூத் என்றாலும், சின்ன பையனுக்கு அங்கிள் தான்) அந்தப் பந்தை எடுத்துக் கொடுங்க' என்று கெஞ்சினான். ஒரு மூன்று நான்கு ஜோடிக் கண்கள் நம்மளப் பார்ப்பதாகப் பட்சி சொன்னதால், மற்ற போட்டியாளர்கள் விரையும் முன், நான் ஓடினேன். குதிகால் தண்ணீரில் கால் நனைத்து, இலாவகமாகப் பாறையில் ஏறி, ரொம்பவே ஸ்டைலாக மறு பக்கம் குதித்தேன்.
பந்தை எடுத்து மறுபக்கம் வீசி விட்டேன். அப்புறம், ஏதோ வித்தியாசமா இருந்தது. தரையே தட்டுப் படவில்லை. பார்த்தால், கீழே கீழே போய்க் கொண்டு இருக்கேன். என்னோட நினைவுல ஒரு இருபது-முப்பது அடி கீழே போயிட்டேன். தரை இன்னும் வரல. முதன் முறையாக பயம். அதுவும் மரண பயம். நல்ல வேளையா நீரின் வேகம் அவ்வளவு இல்ல. ஒரு தருணத்தில் கீழே போவது நின்றது. கொஞ்சம் சிறு நீச்சல் முயற்சியில் தண்ணீர் என்னை மேலே எழுப்பியது. தண்ணீருக்குள் வியர்த்திருந்தேனா என்று ஞாபகம் இல்ல. ஒரு வழியா அந்தப் பாறையின் விளிம்பு தென்பட்டது. அதப் புடிச்சுக் கிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் தொங்கிக் கொண்டிருந்தேன். அதிர்ச்சியிலிருந்து மீள அவ்வளவு நேரம் ஆச்சு. நண்பர்கள் எல்லாம், 'போறுண்டா சீனு காமிச்சது. எழுந்து வாடா' என்றார்கள். ஒரு வழியா பாறை மீது ஏறி, இந்தப் பக்கம் மெதுவா கால் பதிக்...உடனே தரை. என்னடா ஒரு கொடுமை. இந்தப் பக்கம் ஆழாக்கு ஆழம். அந்தப் பக்கம் உண்மையிலேயே மடு. இப்ப நினைச்சாலும் இலேசா ஒரு பயப்பந்து வயத்துக்குள்ள சுருட்டிக் கொள்வது உணர முடியும்.
மரண நினைவு வந்தது உண்மை. ஆனால் கட்டுக்கடங்காத பயம் இல்லை. 'இதோ பாரு, உனக்குக் கொஞ்சம் நீச்சல் தெரியும்; ஒரு முறையாவது தண்ணீர் உன்ன மேல கொண்டு வரும். அப்போ எதையாவது பிடித்துக்கொண்டு சமாளிக்கலாம்' என்ற தொனியில் தலையிலிருந்து (மூளை என்றால் கோபிப்பீர்கள்) ஒரு ஆறுதல் அறிவுரை கிடைத்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.
நான் நீச்சல் கற்றுக் கொண்டது ரொம்பவே லேட். கல்லூரி முடித்து, வேலைக்குப் போக ஆரம்பித்த பின், சும்மா குளிக்கப் போகலாம்னு நண்பர்களுடன் ஒரு ஏரிக்குப் போகத் துவங்கி, யாரும் கற்றுக் கொடுக்காமல் நானாகவே தட்டுத் தடுமாறி நீந்தத் துவங்கினேன். இப்பவும் அதே நிலைதான். என்ன, ஒண்ணுமே தெரியாதவங்க உடனே மூழ்கினால், எனக்கு ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்துக்குப் பின் அது நடக்கலாம் :).
நங்கநல்லூர்-மடிப்பாக்கம் ஏரிகள் எல்லாவற்றிலும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கேன். அவைகள் அனைத்தும் இப்போ அடுக்கு மாடிக் குடியிருப்புகள். சில பிரசித்தி பெற்று பெரிய கோவில்களாகிவிட்டன. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் மைதானத்தில் நான் மொத்தம் நூற்றுப் பதினைந்து விக்கெட்கள் எடுத்திருப்பேன் என்பது வெண்ணை, வடையுடன் காட்சி தரும் அவருக்கு நிச்சயம் தெரியும்.
நான் நீச்சல் பயின்ற ஏரி - மேடவாக்கம் சாலையில் பிரிந்து வலப்பக்கம் செல்லும் குறுகிய சாலை, ஒற்றையடிப் பாதையாக ஒரு மர்மதேசத்தில் முடிந்து, ஒரு மேடு ஏறினால் ... ஒரு அழகிய ஏரி. யாருக்கும் அவ்வளவாகத் தெரியாத ஒரு ஏரி. மொத்தப் பிரதேசமே ரம்மியமா இருக்கும். சில எருமைகள், தாமரைப் பூக்கள், பனை மரங்கள், வயல்வெளி, அதைத் தாண்டி மலைகள் என்று உண்மையிலேயே அழகாக இருக்கும். இப்போ எப்படியோ! யாராவது பெருந்தனக்காரர் முதலில் பார்ம் ஹௌஸ், பின்பு வீட்டு மனைகள் என்று பணம் பண்ணியிருக்கலாம்.
சிறு வயதில் பெரியப்பாவின் ஊருக்குச் சென்ற ஞாபகங்களும் இருக்கு. பட்டுக்கோட்டை-பேராவூரணி சாலையில் ஏதோ ஒரு இடத்தில் பிரிந்து உள்செல்ல வேண்டிய ஒரு குக்கிராமம். நகர்ப்புறங்களில் ஏரி என்று சொல்வதை அங்கு கம்மாய் (கண்மாய்) என்பார்கள். என் அண்ணன் சுப்புரமணி இலாவகமாக எருமை முதுகில் ஏறி, நீச்சல் அடிப்பதைப் பார்ப்பதும், கொண்டு சென்றிருந்த சொம்பில் நீர் முகந்து குளிப்பதும் என் வேலை. இப்போ அண்ணன் (பெரியப்பா மகன்) ஆடிட்டராக மதுரையோ, சென்னையோ, நியூ ஜெர்சியோ எங்கேயோ அட்டகாசமாக இருப்பதாகக் கேள்வி. காலம் எப்படி எல்லோரையும் புரட்டிப் போட்டுக்கொண்டே போகிறது. கடவுள் ஒரு சான்ஸ் கொடுத்தால், நிச்சயம் நானும் சுப்பிரமணி அண்ணனும் சொக்காய் போடாத, வெறும் கால்சராயுடன், கம்மாயிலும், மாந்தோப்பிலும் சுற்றியலைந்த நாட்களுக்குக் கேள்வி கேட்காமல் போய் விடுவோம். எல்லோருமே அப்படிதான் என்று நினைக்கிறேன்.
சரி வேற மேட்டர் இல்லையா, ஒரே ஆறு, ஏரி என்று சுற்றிக்கொண்டே இருக்கிறாய் என்பவர்களுக்கு : இல்ல, நிஜமாவே வேற மேட்டர் இல்ல. மேலும், நண்பர் வாசு (அகநாழிகை) ஒரு பதிவில் 'எதுக்கு இவ்வலோவ் மேட்டர்' என்று கேட்டிருந்தார். அத்துடன், பதிவு ஏரிகள் பற்றியது என்பதால், மதுராந்தகத்தாருக்கு மரியாதை அளிப்பது தானே முறை?
படித்த, பிடித்த கவிதை:
விலை நிலம்
பக்கத்து நிலமும்
ஒருகாலத்தில் என்னைபோலவே
வனமாகத்தானிருந்தது
பொறுப்புள்ள ஒருவனின்
உடைமையானதும்
கொஞ்ச நாள் நெல்
விளைவிக்கிறது.
கொஞ்சநாள் நிலக்கடலை
விளைவிக்கிறது.
கொஞ்சநாள் சூரியகாந்திப்பூக்களை
விளைவிக்கிறது.
கொஞ்சநாள்
ஓய்வாக இருக்கிறது
தண்டவாளம் சுமந்துகிடக்கும்
என்மீது எப்போதும்
மூச்சிரைத்தபடியும்
இளைப்பாறியபடியும்
தடதடத்து ஊர்கின்றன ...
விதவிதமாய் ரயில்கள்
கழிவுகளைத் துப்பியபடி
எழுதியது என் இனிய நண்பன், வேலன் அண்ணாச்சியின் ஆதர்ச கவிஞன் முத்துவேல். இந்தக் கவிதையின் முழுப் பரிமாணம் புரிய அவர் தளத்துக்குச் சென்று, இந்தக் கவிதையைத் தேடிப் பிடித்து, கூட இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் விளங்கும்.
லிங்க் எங்கே என்கிறீர்களா? கொடுப்பதாக இல்லை. மூன்று காரணங்கள்.
1. நல்ல கவிதை படிக்க சற்று மெனக்கெடலாம். தப்பு இல்லை.
2. நிச்சயம் பின்னூட்டத்தில் வேலன் கொடுத்து விடுவார். (பின்னூட்டத்தில் லிங்க் எப்படிக் கொடுப்பது என்பது இன்னும் எனக்குப் பிடிபடவில்லை)
3. லிங்க் கொடுத்தால், உடனே கிளிக் செய்வீர்கள். அவர் கவிதையில் மூழ்குவீர்கள். அப்புறம் பின்னூட்டம் யார் போடுவார்கள்?
41 comments:
//அந்தப் பக்கம் உண்மையிலேயே மடு. இப்ப நினைச்சாலும் இலேசா ஒரு பயப்பந்து வயத்துக்குள்ள சுருட்டிக் கொள்வது உணர முடியும்//
:)
நானும் இங்கே சிங்கையில் மணல் திட்டு என்று நினைத்து கடற்கரை நீரில் சிறுது தொலைவு நடக்க...சிறுது தொலைவில் கால்கள் சேற்றில் வசமாக சிக்கிக் கொண்டன, ஒரு காலை இழுக்க மறுகாலை அழுத்தினால் அது இன்னும் ஆழமாகச் செல்ல, இப்படி முயற்சித்து இடுப்பு வரை புதைமணலில் சிக்கி, சிக்கிக் கொண்டோம் என்று உணர்ந்து ஸ்டார்ட் கவுண்ட் டவுன் என்று இதயம் அடித்துக் கொள்ள, நல்லவேளை கரையில் இருந்த நண்பரின் உதவியால் அன்று மேலே இழுத்துப் போடப்பட்டேன். ஒற்றையாளாக சிக்கி இருந்தால் கண்டிப்பாக தப்பி இருக்க முடியாது, அடுத்த பதினைந்தே நிமிடங்களில் கடல் மட்டம் உயர நான் சிக்கி இருந்த பகுதியில் இடுப்பளவு தண்ணீர் உயர்ந்துவிட்டது. இப்ப நினைத்தாலும் திக் திக்
சரியான திரில் அனுபவம் அனுஜன்யா..
நன்றி அனுஜன்யா. முத்துவேல் கவிதைகள் சிற்றிதழ்களில் பிரசுரமாகும்போது நான் மிக மகிழ்ச்சி கொள்கிறேன் ஏதோ என் கவிதைகளே வந்ததைப் போல். அதே மன நிலைதான் சக பதிவர்களின் பதிவுகள் அச்சேறும்போது.
இவரைப் போன்ற இளஞர்களின் ஆரம்ப காலங்கள் மிக முக்கியமான ஒன்று. அப்பொழுது விழும் பூச்செண்டுகள் அவர்களை அதிக உயரங்களை அடைய உரமேற்றும்.
இந்தக் கவிதைத் தலைப்பிலேயே ஒரு உள்குத்து இருக்கும் பாருங்க.
விளை நிலமா அல்லது விலை நிலமா அல்ல இரண்டுமேவா?
முத்துவேலின் கவிதை
எப்போது நினைத்தாலும் திடுக்கிட வைக்கும் இது போன்ற சம்பவங்கள்.
யூத், பார்த்து எழுதவும்... நங்கநல்லூர் - மடிப்பாக்கம் ஏரியா ஏரிகள் பற்றிய வரிகள் உங்கள் உண்மை வயதைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன :)
Thirller movie paarththa maathri irundhadhu.. :))
ஏரிகள் பற்றிய தங்களின் அனுபவங்கள் சிலிர்ப்பாயிருந்தது, முத்துவேல் அவர்களின் கவிதையை மறுபடியும் இங்கு வாசித்தது மகிழ்ச்சியளித்தது.
படு த்ரில்லர் ரைட்டிங் சாரே!
அதுவும் அவ்ளோ சீரியஸா படிச்சுட்டு வர்றப்போ ப்ராக்கெட் கமெண்ட்ஸ் கலக்கல்ஸ்!
லிங்க் குடுக்காததற்கான காரணங்கள் சூப்பர்.
(பற்றியும் பற்றாமலும் தலைப்பு மிகப் பொருந்துகிறது இந்த பதிவுக்கு. பாறையின் விளிம்பை பற்றியும் பற்றாமலும் நீங்கள் தவித்தமைக்காக)
/தண்ணீருக்குள் வியர்த்திருந்தேனா என்று ஞாபகம் இல்ல/
என்னாமா திகிலை சொல்றீங்க.
மண் மீதான உங்களின் ஏக்கம், நல்ல பதிவு. நிறைய தொலைவில் இருக்கும்போது (தமிழ்)மண் ஏக்கம் இன்னும் கூடுதலாகிவிடுகிறது.அப்புறம் இம்முறை ஒரு நல்ல கவிதையை அனுபவிக்கலான்னுப் பாத்தா,ஏமாத்திட்டீங்க.
/என் இனிய நண்பன், வேலன் அண்ணாச்சியின் ஆதர்ச கவிஞன் முத்துவேல்./
பின்னூட்டத்துல வேற அண்ணாச்சி கலங்கடிச்சுட்டாரு.உங்க ரெண்டுபேருக்கும் நான் என்ன சொல்வது..! வெயிலானையும் நினைச்சுப்பாத்துக்கறேன்.
நன்றின்னுல்லாம் அபத்தமா எதுவும் சொல்லிடாம ஒரு பெரிய.............(சொல்லிய வார்த்தைகளைவிட சொல்லாத மௌனத்திற்கு அடர்த்தி அதிகம்தானே. )
அருமையா எழுதி இருக்கீங்க நண்பா..
//என்னதான் யூத் என்றாலும், சின்ன பையனுக்கு அங்கிள் தான்) //
//மூளை என்றால் கோபிப்பீர்கள்) //
நடு நடுவில உங்க குறும்புத்தனங்கள் பளிச்சிடுது..
ஒவ்வொருவருக்கும் இந்த மாதிரியான மரண அனுபவம் வாய்த்திருக்கும்.எனக்கு ஹிமாலயாவில் கங்கை உற்பத்தியாகும் கோமுக் போகும் வழியில் போஜ்நிவாஸ் என்று ஒரு இடம்.அதனை நினைத்தால் இப்போதும் உடல் நடுங்குகின்றது.
இனி ஏரிகள் குளங்கள் பற்றி மலரும் நினைவுகளில்தான் பரவலாக பார்க்க முடியும் போலிருக்கிறது.ஒரு பழைய கணக்கெடுப்பின்படி சென்னையை சுற்றி 74 ஏரிகள் இருந்ததாக படித்திருக்கிறேன்.எல்லாம் வீட்டு மனைகளாகவும்,தொழிற்கூடங்களாகவும் மாறிவிட்டன் இப்போது.
தமிழ்நாடு முழுவதுமே ஆறுகள் மற்றும் ஏரி,குளங்கள் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு இங்கே யாருக்கும் இல்லை.சொல்லப்போனால் அரசு அதிகாரிகளே, புதிய பஸ் நிலையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அதிக இடம் தேவைப்படும் திட்டங்களுக்கெல்லாம் ஏரியை முழுங்கிவிட்டு, மழைக்காலங்களில் நீரை தேக்க வழியின்றி பின்னர் நீரின்றி மக்கள் பஞ்சத்தில் அலைபாய்வதும் பரவலாக நடந்துகொண்டுதானிருக்கிறது.
வரும் தலைமுறையினருக்கு ஆறுகளையாவது விட்டு வைத்திருப்போமா தெரியாது.கிட்டத்தட்ட எல்லா ஆறுகளும் கூவமாகிக்கொண்டே வருகின்றன.அண்டை மாநிலங்கள் தண்ணீரை விட்டாலொழிய நமக்கு கண்ணீர்தான் மிச்சம்.நமது தலைமுறையிலேயே, முப்போகம் விளைந்த தமிழகம் வானம் பார்த்த பூமியாகிவிடுமோவென பயமாகத்தானிருக்கிறது.
புலம்பித்தள்ளுவதை தவிர எதுவும் செய்ய முடியாத ஏக்கத்தில் மனது வலிக்கிறது...என்ன செய்ய?
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
யூத், பார்த்து எழுதவும்... நங்கநல்லூர் - மடிப்பாக்கம் ஏரியா ஏரிகள் பற்றிய வரிகள் உங்கள் உண்மை வயதைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன :)
யூத் என்ற பதத்தினை பயன் படுத்த தயங்கினாலும் துணை தேடுகிறார் பாருங்கள் ஜ்யோ.
சிறு பத்திரிகைகளில் எழுதியவரா சா.முத்துவேல் என ஒரு சந்தேகம்.விடை தெரிந்தவர் பகிரலாம்.
பச்சை நிற எழுத்துக்கள் படிப்பதற்க்கு சிரமமாயிருக்கின்றன.அல்லாமல் நீலம் பரவாயில்லை.வேறு உகந்த நிறத்திர்க்கு மாறினாலும் நல்லது.ஆவன செய்க.
லிங்க் கொடுக்காமைக்கான காரணம் அருமை.இதே நமது நண்பரானால் ஒரு ட்விஸ்ட் வைத்து அடுத்த பதிவில்தான் பதில் சொல்லியிருப்பார்..அவரேதான் சாரே.
நல்ல அனுபவம் அனுஜன்யா :)
நாங்கலாம் மூணாப்பு படிக்கும்போதே மீனுக்கு சவால் விடுவோம் :))
முத்துவேல் : ஊர்க்கார மக்கன்னா சும்மாவா :)
அருமையா எழுதி இருக்கீங்க...
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் மைதானத்தில் நான் மொத்தம் நூற்றுப் பதினைந்து விக்கெட்கள் எடுத்திருப்பேன் என்பது வெண்ணை, வடையுடன் காட்சி தரும் அவருக்கு நிச்சயம் தெரியும்.//
அண்ணே நீங்க யூத்துதான்.! (அதுக்குள்ள சுந்தர்ஜி முந்திக்கிட்டாரு.. அதுக்காக நான் நினைச்சத எழுதாம இருக்கமுடியாது.)
செமையான பதிவு.. செம்மையான கவிதை.! (ச.முத்துவேல் அண்ணாச்சிக்கு ஃபிரென்டுன்னா எனக்கும் ஃபிரென்டுதான்)
அனுயன்யாவுக்கு,
இந்த நடை என்னை மிகவும் கவர்கிறது நண்பரே. காட்சிகள் மிக நெருக்கமாக இருக்கிறது.
நண்பர் முத்துவேலின் கவிதையும் அருமை.
உங்களுடைய உயிரோசைகவிதையை இப்போதுதான் வாசித்தேன். என்ன வார்த்தையில் சொல்ல? நல்ல இருக்கு தலைவரே.
நல்ல பய(ண)க் கட்டுரை...!
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
யூத், பார்த்து எழுதவும்... நங்கநல்லூர் - மடிப்பாக்கம் ஏரியா ஏரிகள் பற்றிய வரிகள் உங்கள் உண்மை வயதைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன :)
:) இதுக்குப் பேருதான் உள்குத்தா? நண்பர்கள் விளக்கவும்
மிக அற்புதமான காட்சிப் படைப்பு.. ஆம்.. இவை எல்லாம் அனுபவத்துப் படிக்க வேண்டும் அல்லது அனுபவித்து இருக்க வேண்டும் இப்பொழுது படிக்க வேண்டும்..
டிஸ்கில 1 & 3வது மேட்டர்.. நச்
//
விலை நிலம்//
double meaning.........?
@ கோவி.கண்ணன்
வாங்க கோவியார். ரொம்ப நாட்களுக்குப் பின் உங்க வருகை. உங்க அனுபவம் இன்னும் திகிலா இருக்கே. ஒரு பதிவாகப் போடலாம் :) நன்றி கோவிஜி.
@ கேபிள் சங்கர்
நன்றி சங்கர்.
@ வேலன்
நன்றி வேலன். உங்கள் 'லிங்க்' பணிக்கும், முத்துவேலைப் பாராட்டியமைக்கும்.
@ ராமலக்ஷ்மி
ஆம். நீங்க அங்க போயிருக்கீங்களா? நன்றி சகோ.
@ ஜ்யோவ்ராம்
இத சாயிசில் விட்டு விடுகிறேன் :)
@ ஸ்ரீமதி
நன்றி ஸ்ரீ. (தமிழ் அஃபான்ட் வேலை செய்யவில்லையா?)
@ யாத்ரா
நன்றி யாத்ரா.
@ பரிசல்
ப்ராகெட் கமெண்ட்ஸ் எல்லாம் நீங்க தான் குரு. நன்றி கே.கே.
@ முத்துவேல்
வாங்க ஹீரோ. இன்னும் நிறைய எழுதி எங்க எல்லாரையும் மகிழ்வியுங்கள்.
@ கார்த்திகைப் பாண்டியன்
வித்தியாசமான பெயர். உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றி நண்பா.
@ கும்க்கி
போஜ் நிவாஸ் அனுபவங்களை எழுதலாமே நீங்க. ஆறு, ஏரி, குளங்கள் ..நீங்க சொல்றது வாஸ்தவம்தான் :((
நீங்களாவது ஜ்யோவ் பற்றி சரியாகப் புரிந்து கொண்டீர்களே! தேங்க்ஸ் பா.
சா.முத்துவேல் நம்ம முத்துவேல் தான். வார்த்தை, உயிர்மை, நவீன விருட்சம் மற்றும் சில சிற்றிதழ்கள் என்று எழுதும் கவிஞர் இவர்தான்.
பச்சை நிறம் சரியில்லையா? தவிர்க்க முயல்கிறேன்.
எக்கச்சக்க பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி கும்க்கி :)))
@ அய்யனார்
ஆஹா, கண்ண கட்டுதே. இது அய்ஸ் தானா! நாங்களும் மூணாப்பு படிக்கும் போதே மீன்களுக்குச் சவால் விட்டவர்கள் தான். மீன்கள் தாம் வேறு :)
//முத்துவேல் : ஊர்க்கார மக்கன்னா சும்மாவா :)//
அதானா விஷயம். என்னடா இந்தப் பக்கம் காற்று வீசி சில்லென்றானதே என்று பாத்தேன் :)
நன்றி அய்ஸ்
@ ச்சின்னப் பையன்
வாங்க தல. நன்றி.
@ ஆ.மூ.கி.
ஒருத்தன் யூத்து னா, எவ்வளவு பேருக்கு ..... சரி விடுங்க பாஸ் :))
நன்றி பாராட்டுகளுக்கு.
@ மண்குதிரை
வாங்க தல. நன்றி. உயிரோசையில் உங்க கவிதை கலக்கல்.
@ RVC
சந்திரா, வேற விஷயமே கிடைக்கவில்லையா :) நன்றி.
@ நர்சிம்
//இவை எல்லாம் அனுபவத்துப் படிக்க வேண்டும் அல்லது அனுபவித்து இருக்க வேண்டும் இப்பொழுது படிக்க வேண்டும்..//
அது அது. நன்றி தல.
@ சுரேஷ்
நன்றி சுரேஷ். வந்து படிக்கிறேன் சுரேஷ் :)
@ SUREஷ்
உங்கள் முதல் வருகை? நன்றி. உங்கள் கேள்விக்கு - ஆம் :)
அனுஜன்யா
அருமை.
'இதோ பாரு, உனக்குக் கொஞ்சம் நீச்சல் தெரியும்" தெரிந்ததால் தப்பினீர்கள்.
நல்ல விவரிப்பு. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.
திருநெல்வேலி, தூத்துகுடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என்று பசுமையான சுற்று பயணம் செய்து சென்னைக்கு திரும்பி வந்து ஏக்கப்படும் பொழுது - உங்களின் ஏறி பற்றிய (பற்றாத) பிரஸ்தாபம்.
பி.கு : விக்கெட் எடுத்த பிறகு அந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குள் சென்றதில்லை என நினைக்கிறேன் - No Butter in this temple. Only பட்டர்கள்.
அன்புடன்
மாசற்ற கொடி
@ மாதேவி
உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றி. அப்பாவின் கண்ணாடி பற்றி நீங்கள் எழுதியது புன்னகை வரவழைத்தது :)
@ மாசற்ற கொடி
பசுமைப் பயணம் பற்றி (பற்றாமலும்) பதிவு (ஒரே 'ப' சீரியஸ்) போடலாமே.
//No Butter in this temple. Only பட்டர்கள்// ஹா ஹா ஹா. Really good one.
அனுஜன்யா
நிறைய ஏரில ஏறி, ஏறி அப்புறம் மடுவுல இறங்கி இருக்கீங்க.
ஏரிகளைப் பற்றிய பற்றும் பற்றாமலும் சூப்பர்.
வாழ்த்துக்கள் அண்ணே.
// ஒரு மூன்று நான்கு ஜோடிக் கண்கள் நம்மளப் பார்ப்பதாகப் பட்சி சொன்னதால் //
அருமையான டச் ....... சூப்பர் தலைவரே.....!!!!!!!
//நண்பர்கள் எல்லாம், 'போறுண்டா சீனு காமிச்சது. எழுந்து வாடா' என்றார்கள். //
அட இது அதவிட சூப்பரா இருக்குதே...... கலக்கல்.......
அருமையான பதிவு தோழரே.....
வாழ்த்துக்கள்.......
//
(என்னதான் யூத் என்றாலும், சின்ன பையனுக்கு அங்கிள் தான்)
//
ஒரு அட்டன்டன்ஸ் போட்டுக்கிறேன் அங்கிள்...
:)
அனுஜன்யா, அருமையான விவரிப்பு ! நல்லவேளையா பசங்க போகாம நீங்க போனீங்க !
குறும்பட வசனமும் டாப் !
@ தராசு
நன்றி தல.
@ லவ்டேல் மேடி
நன்றி தோழா
@ வெண்பூ
ஸோ, நீ ச்சின்னப் பையன்? நா சொன்னது உன் பையன் மாதிரி ச்சின்னப் பையனை.
@ மணிகண்டன்
லொள்ளு? சரி லூஸ்ல விடுவோம் :)
அனுஜன்யா
"லிங்க் கொடுத்தால், உடனே கிளிக் செய்வீர்கள். அவர் கவிதையில் மூழ்குவீர்கள். அப்புறம் பின்னூட்டம் யார் போடுவார்கள்?"
சொன்னதுக்காக...:)
:-))
present sir
/தண்ணீருக்குள் வியர்த்திருந்தேனா என்று ஞாபகம் இல்ல./
சூப்பர்ப்!
@ கிருத்திகா
நன்றி கிருத்திகா :)
@ MayVee
நன்றி வந்ததற்கும் சிரிப்பானுக்கும் :)
@ நிஜமா நல்லவன்
நன்றி மாப்ள.
அனுஜன்யா
நல்லாயிருக்கு…
எனக்கு தான் நீச்சல் தெரியாது :-(
முத்து கவிதை முத்து :-)
@ அசோக்
நன்றி அசோக். நீச்சல் எப்ப வேணாலும் கத்துக்கலாம். குறைந்த பட்சம் தண்ணீர் பற்றிய பயம் நிறைய குறையும்.
அதனால தான் 'முத்து நம்ப சொத்து'
அனுஜன்யா
பதிவு நல்லா இருக்கு.. மூன்று காரணங்களும் அருமை.. ;)
@ சரவணன்
நன்றி சரா.
அனுஜன்யா
Post a Comment