Tuesday, April 13, 2010

மறக்காமல் மறப்பது - (எதைப்) பற்றியும் பற்றாமலும்

அலுவலக நிமித்தம் வெளியில் செல்லும் போது நிச்சயமாக நான் ஏதாவது முக்கியமான விஷயத்தை மறந்து விடுவேன். மொபைல், பேனா, கைக்குட்டை, பர்ஸ் போன்ற மறதிக்கு என்றே உருவாக்கப்பட்ட வஸ்துக்கள். இவற்றையெல்லாம் விட பிரதானமாக விசிடிங் கார்ட். பார்த்த மனிதர்களையே மீண்டும் பார்க்கப் போகிறோம் என்றால் பரவாயில்லை. எப்போதும் குறைந்தது ஒரு புது முகமாவது 'யுவர் கார்டு ப்ளீஸ்' என்னும் போது நம்மிடம் கார்டு இல்லையென்றால் ....ஏற்கெனவே அசடு வழியும் முகத்தில் கூடுதலாக வழியும். நம்ம தலைமையில், சகாக்களோடு இந்த மாதிரி நேர்ந்தால் 'சாரி பாஸ்; இப்பத்தான் மூணு மீட்டிங் முடிச்சுட்டு நேர வரோம். கார்டு தீர்ந்திடுச்சு' என்று பந்தா பண்ணி தப்பித்து விடலாம். பாசோட போகும்போது இந்த மாதிரி அலம்பல் எல்லாம் பண்ண முடியாது.

போன வாரம் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கையில் (மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன் - ஆமா, ஆபிசில் தான்) பாஸ் திடீரென்று ஃபோனில் "உடனே கிளம்பி ஓபராய் ஹோட்டல் லாபி வந்துவிடு. கனடா நாட்டு மந்திரி மற்றும் கனடா ஹை கமிஷனர் இருவரையும் பார்க்கப் போகிறோம். அவங்களுக்கு இந்தியன் எகானமி பத்தி கொஞ்சம் பேசணுமாம்' என்றார். சரின்னு பத்து நிமிஷத்தில் அங்கே போய், அந்த இரு வெள்ளைக்காரர்களைப் பார்த்து மையமாகச் சிரித்தேன். அவர்கள் கைகுலுக்கி ஆளுக்கொரு கார்டு கொடுத்தார்கள். நான், பாக்கெட்டில் துழாவ...அடாடா, கார்டு மறந்து விட்டேன். நல்ல வேளையா பாசு போன்ல இருந்ததால் கவனிக்கவில்லை. ஆனால், இந்த இரு ஆட்களும், 'இதோ கார்டு வெளிய வரப்போகிறது' என்று ஆர்வமாக என் சட்டைப் பையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் ஏற்கெனவே அவர்களுக்கு தலா ஐந்து கார்டு கொடுத்த தோரணையில் ஓரமாக சென்று அமர்ந்து விட்டேன். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. என்னாலும்தான். அவர்கள் ஜி.டி.பி. க்ரோத் சதவீதம் பற்றிக் கேட்க நான் காட்ரீனா கைஃப் உயரத்தை மனதில் கொண்டு உத்தேசமாக 5.9 என்றேன். ஒரு வழியாக மீட்டிங் முடிந்து கை கொடுக்கும் தருவாயில், அந்த மினிஸ்டர் 'உங்கள் கார்டை நான் வாங்க மறந்து விட்டேன்; தர முடியுமா' என்று கேட்க, 'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன். அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்போர்ட் எழுதுவாரோ!

***************************

ஐ.பி.எல். கன ஜோராகப் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் பந்துகளுக்கு இடையிலும் வரும் விளம்பரங்கள் நிறைய எரிச்சலைத் தந்தாலும், தமிழ் வலையுலகின் எரிச்சலூட்டும் பதிவுகள் போலவே, இதுவும் பழகி விட்டது. என்னுடைய ஆதர்ச ராயல் சேலஞ்சர்ஸ் இது வரைக்கும் மூச்சைப் பிடித்துக்கொண்டு போட்டியில் இன்னமும் இருக்கிறார்கள். பார்க்கலாம். அடுத்த பிடித்த அணிகள் முறையே கே.கே.ஆர்., மும்பை மற்றும் டெல்லி. சென்னை? எனக்கு தோனி இருப்பதால் ...அறவே பிடிக்கவில்லை. சென்னையில் வசிக்காததின் பல சௌகர்யங்களில் இதுவும் ஒன்று. சென்னை அணியின் 'விசில் பாட்டு' இங்கு நிறைய பேருக்கு ஒரு மந்தகாசப் புன்னகையைத் தருகிறது.

***************************

கொஞ்சம் அரசியல் பேசலாமா? ஸ்டாலின் துணை முதல்வர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இப்ப திடீர்னு அழகிரி 'அதெல்லாம் கிடையாது; நானும் கோதாவில் இறங்குவேன்'னு சொல்றது தப்பாட்டம். இன்றைய தமிழக சூழலில் ஸ்டாலினை விட தகுதியான ஒருவர் தி.மு.க. மட்டுமில்லை; எந்தக் கட்சியிலும் இல்லை என்பது என் எண்ணம். (ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்?).

நம்ம பதிவர் சஞ்சய் காந்தி எழுதும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி பற்றிய இடுகைகளை இங்கு படிக்கவும். எனக்கு ராஹுலிடம் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. (பின்னாளில் நிச்சயம் வருத்தப் படுவேன் என்று பட்சி சொன்னாலும்).

***************************

இப்போதெல்லாம் வாசிப்பது முற்றிலும் நின்று விட்டது. ஆபிசில் வேலை அதிகம் (அட நிஜமாகவே). எனக்குத் தெரிந்து பிரமாதமான இடுகைகள் எதுவும் படிக்கவில்லை. (தினமும் நான் படிப்பது கார்க்கி, ஆதி, பரிசல் மற்றும் அனுஜன்யா). ஏதாவது மிஸ் பண்ணி இருந்தால் சொல்லுங்கள். அண்மையில் ராகவனின் தளத்தில் இருந்த கவிதைகள் படித்தேன். ரொம்ப நல்லா இருக்கு. இதோ அவர் வலைத்தளத்தின் சுட்டி.

மாதிரிக்கு ஒரு கவிதை

நரைத்த இரவுகள்

சுவர்களின் பக்கவாட்டைப்

பிடித்துக் கொண்டும்
இரண்டு படிகளை கடக்கிறேன்
வாசலில் கிடந்த
பால் பாக்கெட்டை
நடுங்கும் விரல்களில் எடுக்கிறேன்
பாக்கெட்டின் குளிர்ச்சியை
உணர முடியவில்லை
ரத்தம் சுண்டி ஸ்மரனை இன்றி
ஒரு இடுக்கியைப் போல
எடுக்கிறது விரல்கள்
அயர்ந்து உறங்குபவளின்
மூப்பு அறையெங்கும்
எடுக்காத நூலாம்படையாய்
கயிறு கட்டிய மூக்கு கண்ணாடி
மருந்து புட்டிகள், மஃப்ளர்
இடது பக்கம் அவளுக்கானது
வலது பக்கம் எனக்கானது
சுவரெங்கும் பிடித்து நகரும்
கைகளின் உராய்வில்
உதிர்ந்து தொங்கும் காரை
கண்ணாடி, பீங்கான் தவிர்த்து
வருஷங்கள் ஆகி விட்டது
பாலில் நிறைய தண்ணீர் விட்டு
செய்த தேனீரும்
இதமான சூட்டில் வெண்ணீரும் செய்து
அவளை எழுப்பினேன்
எழுந்தவள் முட்டி வலிக்குதுப்பா
என்றாள் ஹாட்பேக் குடுங்களேன்
என்றவளிடம்
அலையடிக்கும் தேனீர் குவளையை
நீட்டினேன், சப்திக்க வாங்கியவளின்
தேனீரின் மிச்சம்
கண்ணத்தில் பச்சை படர்த்தி
குளிர் நிழலை விரித்தது


குழந்தைகள் பெருகி வளர்கிறது

மரநிழலில்

வா.மணிகண்டன் சொல்வது போல் தமிழ் நாட்டில் கவிதை வாசிப்பவர்களை விட, கவிதை எழுதுபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். ராகவன் கவிதை நிறைய வாசித்து, நல்ல கவிதை எழுதுபவர்களின் தளங்களில் பின்னூட்டம் மூலமாக விமர்சிக்கிறார். இது வரை என் வலை பக்கம் வரவேயில்லை. வெரி ஸ்மார்ட் ஃபெல்லோ!
 
***************************

34 comments:

CS. Mohan Kumar said...

//அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்போர்ட் எழுதுவாரோ!//ஹா ஹா..

ஸ்டாலின் பற்றி எழுதியது சரி என்றே தோன்றுகிறது.

ஆபிசில் மேட்ச் பார்ப்பதாக எழுதிட்டு, பின்னே ஆபிசில் வேலை அதிகம் அப்படிங்கறீங்க. பின் நவீனத்துவம்??

Mahesh said...

நீங்க பரவால்லை... நான் பின்னூட்டம் போட மறந்துடுவேன்... சில மாசங்கள் பதிவெழுதவே மறந்துடறேன்... நானும் உங்களை மாதிரியே பிஸி ஆகிட்டேன் போல இருக்கு :(

Vidhoosh said...

சம்பிரதாயமாக வோட்டும் போட்டாச்சு.
ஜி.டி.பி பற்றி நாளையே ஒரு கவிதை எழுதுங்கோ, என்ற வேண்டுகோளுடன்,
எப்போதும் போலவே, விதூஷ்.

பா.ராஜாராம் said...

அருமை அனு. :-))

ராகவன்..மை டியர் ராகவன்,நன்றி பாஸ்!

Anonymous said...

//மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன் - ஆமா, ஆபிசில் தான்//

ஆபீஸ்னா இப்படித்தான் இருக்கணும் :)

தராசு said...

ஹலோ,

விசிட்டிங் கார்ட் கொண்டுபோகாம போறது மறதி இல்லீங்க தல, அத வேற என்னமோ சொல்லுவாங்களே, என்னது அது.... அது.... சரி, வேண்டாம் விடுங்க.

//கொஞ்சம் அரசியல் பேசலாமா? //

உங்கூருக்கு ஆட்டோ வராதுங்கற தைரியத்துல நீங்க பேசுவீங்க, ஆனா நாங்க, வேண்டாம் சாமி.

சங்கர் said...

//சென்னை? எனக்கு தோனி இருப்பதால் ...அறவே பிடிக்கவில்லை. //

கை குடுங்க, என் இனம் ஐயா நீர்

நேசமித்ரன் said...

நல்ல இடுகை தலைவரே

ராகவன் அறிமுகம் எதிர்பார்த்தேன் கமெண்ட் பார்த்ததும்.. சந்தோஷம் !

நான் எப்பவும் வாசிப்பவர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் :)

Unknown said...

//.. ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும் ..//

வெளிய எட்டிப் பாருங்க.. இப்போ வந்துருக்கும்..

மணிஜி said...

ராகவன் கவிதைகளை நான் பின்னூட்டி பாராட்டுவதில்லை.. டெம்ப்ளெட்டாகி விடுகிறது. அலைபேசும்போது சொல்லி விடுகிறேன்.கவிதை என்றில்லை. ராகவனின் பின்னூட்டமும் அருமையாய் இருக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

/'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன்//
 
:-)))
 

Cable சங்கர் said...

வழக்கம் போல அட்டகாசம்.

கார்க்கிபவா said...

:)))

கடைசியா வந்து இன்னொரு விஷயம் சொல்றேன்

Sanjai Gandhi said...

/(பின்னாளில் நிச்சயம் வருத்தப் படுவேன் என்று பட்சி சொன்னாலும்). //

ஹிஹி.. உங்கள் பட்சியின் வாக்கை நிச்சயம் பொய்யாக்குவார்..

சுட்டிக்கு நன்றி மாமா..

Prabhu said...

ரொம்ப நாள் ஆச்சோ நீங்க எழுதி?

Ronin said...

Anujanya,


Nice writeup about Canadian minister..I was really surprised and happy about the lack of usual english punch dialogue till the end..

Kadaisiyil "very smart fellow" and vaithirgal aapu! Can you not come out of this..it seems very trite and spoils the writing..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

iniyavan said...

//பிரமாதமான இடுகைகள் எதுவும் படிக்கவில்லை. (தினமும் நான் படிப்பது கார்க்கி, ஆதி, பரிசல் மற்றும் அனுஜன்யா). ஏதாவது மிஸ் பண்ணி இருந்தால் சொல்லுங்கள். //

நம்ம பெயரையும் இந்த லிஸ்டுல சேர்த்துடுங்க தலைவரே (பிடிக்கலைனாலும்!)

ராகவன் said...

அன்பு அனுஜன்யா,

நன்றிகள் பல... உங்களுடைய கவிதைகள் அநேகம் படித்திருக்குறேன் அனுஜன்யா... நவீன விருட்சம்... உயிரோசை... என்று... உங்களின் சில கவிதைகள் எனக்கு தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறது... என் பழங்கவிதைகளில் உங்களில் traces நீங்கள் பார்க்க முடியும் அனுஜன்யா... உங்களுக்கு பின்னூட்டம் போடுவதில்லை வாஸ்தவம்... உங்களை தொடர்கிறேன்... படிக்கிறேன்.. வியக்கிறேன்... தொடர்ந்து...
உங்கள் அன்புக்கு பதிலாய் என் அன்பும், நட்பும்... தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்... என்னை மூசு ஏற்றிக் கொள்ள அது உதவும்... என் பெயரை பின்னூட்டங்களில் சேர்த்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

அத்திரி said...

//ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்?).//


இன்னும் பழைய நினைப்பிலே இருக்கீங்க அண்ணாச்சி ..............நேரா பிளைட்லேயே வந்திடுவாங்க ஜாக்குரதை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன்//

ஒண்ணு மட்டும் புரியுது... உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்போர்ட் எழுதுவாரோ!//

ஆஹா... உங்கள பத்திதான் நேத்து அவர் Omni டிவில (இங்க கனடால ஒரு பிரபலமான TV சேனல்) ஒரு ஸ்கூப் நியூஸ் போயிட்டு இருந்ததா... நான் யாரோன்னு நெனச்சேன்... (ஹா ஹா ஹா)
நல்ல பதிவு. மறதி இல்லாட்டி மனுஷன் இல்ல. so நோ டென்ஷன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

thamizhparavai said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தலை...

Matangi Mawley said...

interesting blog!!

Thamira said...

ஆஹா, ஓஹோ.. பதிவு பிரமாதம், ஒண்ணாம் நம்பர் (பழைய விகடன் ஜோக்குகளில் பாராட்டுவதற்கு இப்படி வரும்). உங்கள மாதிரி சுவாரசியமா எழுத ஆருயிருக்கா.? கலக்கல். சூப்பர்.!!

(இப்ப ஏன் இவ்வளவு பாராட்டுங்கிறீங்களா? போங்க நீங்க..)

இரசிகை said...

nice.....!

//

(ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்.

//


:))

anujanya said...

@ மோகன் குமார்

ஆபிசில் வேலை நிறைய இருப்பதால் எப்பவாவது கொஞ்சம் ரிலாக்ஸ் (ஒரு நாற்பது ஓவர் மட்டும்) பண்ண டி.வி. பார்ப்பது எல்லாம் சகஜமப்பா.

நன்றி மோகன்.

@ மஹேஷ்

உன் அளவு எல்லாம் நான் பிசி இல்லப்பா. நீ உலகம் சுற்றும் வாலிபன் (ஜில்லுனு இருக்கா?)

நன்றி மஹேஷ்

@ விதூஷ்

நன்றி விதூஷ் - வோட்டுக்கும் சேர்த்து :)

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ சின்ன அம்மிணி

சரியா சொன்னீங்க. சரி, அங்க ஆசியில் எப்படி?

@ தராசு

கலக்கல் பாஸ். நன்றி.

@ சங்கர்

அட, நீயும் நம்ம .....யா? ஜூப்பர். நன்றி சங்கர்.

@ நேசமித்ரன்

ரொம்ப நன்றி நேசன்.

@ திருஞான சம்பத்

யோவ், ஆனாலும் இந்த கொலவெறி கூடாது :)

@ மணிஜி

சரியா சொன்னீங்க. அங்க ஒரே ரணகளமா இருக்கு போல! பயமா இருக்கு வரவே :)

@ உழவன்

நன்றி பாஸ்.

@ கேபிள்

தேங்க்ஸ் டைரக்டர்.

@ கார்க்கி

இவ்வளவு நாள் வெயிட் பண்ணி ஆச்சு. சோம்பேறி :)

@ அப்துல்லா

உனக்காகவே இந்த ஸ்மைலிய ஒழிக்கணும் :) - ஹி ஹி

@ சன்ஜய்

எதோ சொல்ற. பாப்பம்.

@ பப்பு

சரியான உள்குத்து இது. என்னங்க பண்ணுறது! இவ்வளவுதான் எழுத வருது.

@ ரானின்

அட, நீங்க எல்லாம் நம்ம பதிவு படிப்பதே இப்பதான் தெரியும் ரானின். உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த மாதிரி தீவிர விதயங்களைப் பேசாத இடுகைகளில் இயல்பா பேசும் தொனியில் எழுதுவது சரி என்று தோன்றியது. என்னுடைய இன்னொரு சிக்கல் - பேசும்போது ஆங்கில வார்த்தைகள் வந்துவிடுவது. தனிப்பட்ட முறையில் அது தவறு என்று எனக்குப் படவில்லை. தமிழ் மேல் எனக்கு அபார காதல் உண்டு. ஆனால், பிற மொழிகளை (தமிழுடன் அவ்வப்போது கலந்தாலும்) உபயோகப் படுத்துவது தவறு என்ற அளவுக்கு எல்லாம் எனக்கு 'தனித் தமிழ்' ஆசை அல்லது மொழிவெறி இல்லை.

ஒரு உதாரணத்திற்கு - 'பஸ் ரொம்ப நேரம் வராம போனதால், டாக்ஸி பிடித்து ஆபிஸ் போனேன்' என்றால் நண்பர்களிடம் பேசும் நெருக்கம் வரும். மாற்றாக 'பேருந்து நெடுநேரம் வராத காரணத்தால் வாடகை மகிழ்வுந்து பிடித்து, அலுவலகம் சென்றேன்' என்றால், ரொம்ப நாட்கள் முன் கிளாஸ் கட் செய்த தமிழ் பேராசிரியருடன் பேசியது போல இருக்கும்.

இவ்வளவு சொன்னாலும், நீங்கள் சொல்வதை மனதில் கொண்டு, இந்த மாதிரி (இதுக்கு பேரு பன்ச் டயலாகா???!!! எ.கொ.ச.) எழுதுவதைக் குறைத்துக் கொள்ள முயல்கிறேன்.

அனுஜன்யா

anujanya said...

@ www.bogy.in

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

@ உலகநாதன்

யோவ், நீ இன்னும் இவங்க அளவு மொக்கை போடுவதில்லை. இருந்தாலும் ஜீப்பில் ஏறியே தீருவது என்றால்.... அப்ளிகேஷன் பணம் ஒரு பத்தாயிரம் ரிங்கிட் அனுப்பவும்.

நன்றி உலக்ஸ் :)

@ ராகவன்

//என் பழங்கவிதைகளில் உங்களில் traces நீங்கள் பார்க்க முடியும் அனுஜன்யா... //

'இப்ப நல்லா திருந்தி விட்டேன்' என்று சொல்கிறீர்கள். இருக்கட்டும் :)

இன்னும் நிறைய வாசித்து, நிறைய எழுதுங்கள் ராகவன். வாழ்த்துகள்.

@ அத்திரி

நீ ஒரு மார்க்கமாவே தான் இருக்க அத்திரி. பேசி தீர்த்துக்குவோம்.

@ அப்பாவி தங்கமணி

என் கிட்டயா? இன்னுமா உலகம் நம்மள நம்புது!!!

நீங்க கனடாவிலா இருக்கீங்க? உங்களுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் (!) பதில் போடுவதே. ஏன்னா, நானும் இப்ப கனடாவில் தான் இருக்கேன். இந்த ஏப்ரல் 25 வரை. டொராண்டோவில் :)

புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும். நன்றி சிஸ்.

@ தமிழ்ப்பறவை

பரணி, உனக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

@ Matangi Mawley

நன்றி மாதங்கி - உங்கள் முதல் வருகை?

@ ஆதி

யோவ், என்ன இன்னிக்கி குசும்பு ரொம்ப அதிகமா இருக்கு? கிர்ர்ரர்ர்ர்

@ இரசிகை

நன்றி இரசிகை. உங்களுக்கும் இது முதல் வருகை?

@ தமிழிஷ் தளத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஸ்டாலின் பற்றி எழுதியது சரி

Ronin said...

Anujanya,

yes, I like reading your commentaries or pathis..I don't comprehend many poetry, as I am not a dedicated reader of poetry..

Below is my conceptual model of recent English-Tamil mixed writing and may or may not match common opinion.

My remark was not against English words like Bus or Taxi..but over abused English phrases(ex: born with a silver spoon)..It is very common to use English phrases while speaking. But while writing in Tamil, using common phrases spoils the writing for me..specifically in the age of renaissance due to internet and puritan writing..it may also be because magazines like Kumudam have commoditized those style of writing. Also it was a popular style in 1980s and early 1990s..And it was obviously made popular by your favorite writer, Sujatha.

It seemed refreshing at that time, but it appears forced and reduces the perception nowadays..

But I like it when a English word fits perfectly and I cant find a better replacement from my tamil vocabulary..for ex, words such as "conceptual model" or "commoditized"..If we said "vannikamayamakuthal", it represents all business including commodities and Non-commodity products..

Again this is my 2 cents..

anujanya said...

@ T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி டி.வி.ஆர்.

@ Ronin

Yeah, point taken - sort of. Yes, thats ur 2 cents :). Thx buddy.

அனுஜன்யா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

-

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நீங்க கனடாவிலா இருக்கீங்க? உங்களுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் (!) பதில் போடுவதே. ஏன்னா, நானும் இப்ப கனடாவில் தான் இருக்கேன். இந்த ஏப்ரல் 25 வரை. டொராண்டோவில் :)//

அடடா... மிஸ் பண்ணிட்டனே. நான் வொர்க் பண்றது டொரோண்டோல தான். Near Nathan Philips Square. இன்னைக்கி தான் மறுபடியும் உங்க ப்ளாக் வந்தேன், உங்க reply பாத்தேன். அடுத்த முறை வர்றப்ப கண்டிப்பா சந்திப்போம்... (சீக்ரம் அடுத்த போஸ்ட் போடுங்க )

மணிகண்டன் said...

New Post Please :)- என்னோட பையனுக்கு சாப்பாடு ஊட்ட உங்க போஸ்ட் தேவைப்படுது. சாப்பிட்டு முடிச்சா படிக்கறத நிறுத்திடுவோம்ன்னு சொன்னா வேகவேகமா சாப்பிடறான்.