Saturday, March 20, 2010

அந்தமான் தீவுகளில் ஒரு off-site


இந்த வருடத்தின் off-site எனப்படும் அலுவலகத்தில் இல்லாத அலுவல் எங்கு வைப்பது என்று பலபேரைக் கலந்தாலோசித்து முடிவில் அந்தமான் தீவுகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏற்கெனவே நான் மட்டும் முன்னார் சென்ற கடுப்பில் இருந்த வீட்டு பாஸ் 'ஹும், அந்தமான் எல்லாம் கிரிமினல்ஸ் தான் போவாங்க' என்று கடுப்பேற்றினாள். நான் 'சுதந்திரப் போராட்ட வீரர்கள் சென்ற இடம் அது - எனக்குப் பொருத்தமா தான் இருக்கு' என்றதும் கப் சிப்.

மும்பையிலிருந்து அகால வேளையில் (காலை நான்கு மணி) கிளம்பி, சென்னை அடைந்து, பிறகு அங்கிருந்து இன்னொரு விமானத்தில் போர்ட் ப்ளைர் சென்றடைந்தோம். போர்ட் ப்ளைர் ஒரு மினி கோவா போல் இருக்கிறது. மேடு, பள்ளங்கள், ஆங்காங்கே நீலக்கடல், தென்னை மரங்கள், வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் என்று. அவசரமாகச் சாப்பிட்டு, உடனே Havelock என்னும் தீவை நோக்கிப் பயணம் செய்தோம் - ஒரு குட்டிக் கப்பலில் - சரி சரி ஒரு பெரிய படகில்.கொஞ்ச நேரம் வெளியில் வெய்யிலில் நின்று நீலக்கடல், தூரத்து தீவுகள், அருகாமை நங்கைகள் என்று சம்பிரதாயமாகப் பார்த்து விட்டு, இதற்கு மேல் நின்றால் நம் சிவந்த மேனியின் எழிலுக்குப் பாதகம் வந்துவிடும் என்று குளிர் சாதன அறைக்குள் தஞ்சம் புகுந்தோம். கிட்டத் தட்ட மூன்று மணி நேரப் பிரயாணம். ஹேவ்லாக் தீவைச் சென்றடைகையில் மாலை நாலரை மணி. எல்லா ரவுடிகளும் ஜீப்பில் ஏறி, நாங்கள் தங்க வேண்டிய விடுதிக்குச் செல்ல இன்னும் ஒரு அரைமணி நேரம் ஆகியது. கடற்கரைக்கு மிக அருகில், அடர் வனத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் விடுதி. 'நித்யானந்தரும் சாரு நிவேதிதாவும்' என்று சொல்லி முடிப்பதற்குள் இருட்டி விட்டது. மாலை மயங்கி இருளில் விழும் நேரம், கடற்கரையும், அருகாமை அடர் வனமும் மிக ரம்மியமாக இருந்தது. இது வரை நான் கடற்கரைக்கு இவ்வளவு அருகில் அடர்ந்த வனம் பார்த்ததில்லை.


Barefoot என்னும் நிறுவனம் நடத்தும் விடுதி அது. இரண்டு பேருக்கு ஒரு குடில். நிறைய மூங்கில். மேலே கூரை. இரவு சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று நினைத்தால் சீட்டாடக் கூப்பிட்டார்கள். சரி என்று நண்பர்களின் குடிலுக்குச் சென்றால், அவர்கள் செம்ம டென்ஷனில் இருந்தனர். வராண்டாவில் ஏதோ பழுப்பு நிறக் குச்சி என்று எடுக்கப் போனால், அது ஒரு பாம்பு. நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்து, பிறகு சிறிய சலுகையாக இரண்டு மூங்கில் கொம்புகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டு வாலை மட்டும் ஆட்டியது. (என்பதாக அதை அருகில் சென்று பார்க்கும் துணிவு இருந்தவர்கள் சொன்னார்கள்). என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் விளையாட்டாக எடுத்துக் கொண்டது இன்னும் பீதியைக் கிளப்பியது. நண்பர் ஒருவர் 'யோவ், பயப்படாத. அது தண்ணிப் பாம்பு. விஷம் கிடையாது' என்றார். தண்ணிப் பாம்புக்கு தரையில் என்ன வேலை என்ற கேள்வி கேட்ட லாஜிக்கை அந்தப் பாம்பு உட்பட யாரும் செவி மடுக்கவில்லை.இரண்டு நண்பர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டே, பாம்பை நினைத்தபடி சீட்டாடி விட்டு குடிலுக்கு வந்து சேர்ந்தோம். உறக்கம் கொஞ்சம் தாமதமாக வந்தது. வனத்திற்கு நடுவில் இருப்பதால் அதன் இரவு மௌனம் ஒரே ரகளையாக இருக்கிறது. பகல் நேர ஆசாமிகள் வெளியேறி நைட் டுட்டி பார்க்கும் ஆசாமிகள் தொழிற்சாலையில் ஒரு விதமான ஆர்ப்பாட்டத்துடன் நடப்பார்களே - 'எவன்டா என்னைக் கேள்வி கேட்பது' என்னும் தொனியில். அந்த மாதிரி இருந்தது இரவு வனம். வேறுவித பட்சிகளின் ஒலி. பூச்சிகளின் சிறு சிணுங்கல்கள். இரவு மிருகங்களின் சருகுகள் மீதான நடையின் வித்தியாசமான சப்தம்.இரவுக் கனவில் நான் அருகில் சென்று பார்க்க அஞ்சிய தண்ணிப் பாம்பு, ஐந்து தலைகளுடன் பூதாகாரமாக கடலில் படுத்துக் கொண்டு 'வாருங்கள் விஷ்ணு தேவரே' என்று அழைத்தது. மகாவிஷ்ணுவாக ஆசை இருந்தாலும், காலைப் பிடித்துவிடும் மகாலட்சுமி மும்பையில் இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.விடுதியில் நல்ல சாப்பாடு, டிபன், இத்யாதிகள் கிடைக்கிறது. off-site என்றால் கொஞ்சமாவது அலுவலக விஷயங்கள் பேசியே ஆக வேண்டும் என்று சில அசடுகள் ஒற்றைக் காலில் நின்றதால், ஒரு இருபது நிமிடங்கள் வனத்துக்குள் மேலும் நடந்து, ஒரு அருமையான மரங்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் அலுவலக சமாசாரங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். விடுதிக்காரர்கள் ஏற்பாட்டில் நாற்காலிகள், ஒரு white board என்று நிசமாலுமே ஒரு இரண்டு மணிநேரம் பேசினோம். அதாவது மற்றவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். நல்ல ஹெவி டிபனுக்குப் பிறகு, கடற்கரை அருகாமை; வெய்யில் தெரியாத உயர் மரங்களின் தென்றல். என்னைப் போன்ற பிறவிக் கவிஞனுக்கு மனம் எப்படி அதில் இலயிக்கும்?


நிறைய உயர் மரங்களின் உச்சாணிக் கொம்புகளிலிருந்து ஏராளமான இலைகள் சுழன்று, நேராக, குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு, மிதந்து கொண்டு, பறந்து கொண்டு என்று பல்வேறு விதங்களில் பூமியை நோக்கி வந்து கொண்டே இருந்தது என்னால் மறக்க முடியாத காட்சி. மற்றவர்கள் அதைச் சற்றும் சட்டை செய்யாமல் அடுத்த வருடம் இன்னும் எவ்வளவு இலாபம் என்று கடன் வாங்கிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது பெருந்தேவியின் மகத்தான கவிதை ஞாபகம் வந்தது. இதோ அது உங்களுக்காக:

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றை மரத்தின் ஒரே இலை விழுகிறது
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை

விழுந்து கொண்டிருக்கிறது

யாத்ரா சொல்வது போல், இந்தக் கவிதையின் கனம் தாங்க இயலாததாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் படித்தால் இதன் தாக்கம் உங்களுக்குப் பிடிபடும்.

ஒரு முறை வளர்மதி 'leaf, treeless' என்று துவங்கும் கவிதையை 'ஒரு இலை, மரமற்று' என்று தட்டையாக மொழி பெயர்க்காமல் - 'காற்றில் அலையும் இலையொன்று' என்று மொழி பெயர்த்ததை ஜ்யோவ் சிலாகித்ததும் நினைவுக்கு வந்தது.கவிதை பிறக்கும் கணங்கள் சிலிர்ப்பானவை. உன்னதமானவை. எனக்குத் தோன்றியவற்றை எழுத முயன்று கீழ்க் காணும் வரிகளில் எழுதி வைத்தேன். அதை மகத்தான கவிதையாக செதுக்கும் உத்தேசத்தைக் கைவிட்டு விட்டேன். சில புகைப்படங்கள் தொழில் நுட்பத்தில் சொதப்பினாலும், பொன் தருணங்களைப் பூட்டி வைத்திருக்குமே - அது போல.

அடர் வனத்தின்
உயர் மரங்களின்
உச்சியிலிருந்து
தாமாகப் பிரிந்த இலைகள்
பறக்கத் துவங்கின
கைவிடப்பட்ட இலைகள்
மிதந்து கொண்டிருந்தன
விலகக் கோரப்பட்டவை
வேகமாக வீழ்ந்தன
பட்ட மரமொன்றில்
துளிர்த்திருந்த ஒற்றை இலை
முதியோருக்குப் பிறந்த
தாமதக் குழந்தையை
நினைவு படுத்த
அனிச்சையாகப் பிடுங்கிவிட்ட
வேறொரு செடியின் இலையை
கொலை செய்துவிட்டதாகப்
பக்கவாட்டுப் பார்வையில்
குற்றம் சொன்னது
முற்பிறவியில் முன்னோராக
இருந்திருக்கக் கூடிய காகம்
மேலும் சில கற்பிதங்களுடன்
கானகமும் காகமும்
மௌனமாகக் காத்திருக்க
கண்ணாடியும் இரும்பும்
நிறைந்திருக்கும் காட்டுக்கு
விரைந்து திரும்பினேன்


பெருமரங்களுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடியதும், அதிகாலை கடற்கரை நடையும், நீல மற்றும் பச்சை வண்ண கடலும், துகள்கள் என்றும் சொல்ல முடியாத பொடிப்பொடியான மணலும், அபூர்வமாகத் தென்பட்ட பழங்குடிகளும் (அவர்கள் இனம் 55,000 வருடங்கள் முன் தோன்றியது என்று சொல்கிறார்கள். நாம் மூன்றாயிரம் வருடங்களுக்கே இவ்வளவு பெருமைப் படுகிறோம்) என்று கலவையான நினைவுகள் இன்னும் பலநாட்கள் என்னுடன் இருக்கும்.


நிச்சயம் அனைவரும் போய்ப் பார்க்கவேண்டிய இடங்களில் அந்தமான் தீவுகளும் ஒன்று.


இவ்வளவு அழகான (!) இடுகைக்கு முடிவில் ஒரு திருஷ்டிப் பொட்டு போல் ஒரு புகைப்படம். இனிமேல் இதுதான் profile படம்.

45 comments:

நேசமித்ரன் said...

கவிதையில் இருப்பதை விட மிக்சி பிளேடு இலைகளின் சப்தம் உரைந.. இல்லை, பறத்தலில் இருக்கிறது

வலை உலகின் சிறந்த பத்து விமர்சகர்கள் பட்டியலில் இடம் பெறும் இருவரைப் பற்றி 3 வது ஆள் பேசக் கேட்பது சந்தோஷமாய் இருக்கிறது

மோனி said...

..//இவ்வளவு அழகான (!) இடுகைக்கு முடிவில் ஒரு திருஷ்டிப் பொட்டு போல் ஒரு புகைப்படம்//..

உண்மைய சொன்னா
ஒத்துக்குறோம்...

Ashok D said...

எல்லா நல்லாதானே போய்டுயிருந்தது.. கடைசியில என்ன ஆச்சு?

படித்தவொடனே தோன்றிய கவுஜ(?)

’நெற்றியிலிருந்து வீழும்
இலையொன்று
கணம் குறைத்து மிதக்கவிடுகிறது
என்னையுமாய்

யாரும் இசைக்கா குழலோசை
நழுவிச் சென்றது காற்றில்
சாத்தியங்களின் தேரேறி பறக்கிறேன்
இலக்கில்லா பயனமாய்’

கபீஷ் said...

காதுல புகை, ஸ்டமக் பர்னிங்க்.
ம்ஹும் செமயா எழுதியிருக்கீங்க.
விஷ்ணு மேல அப்படி என்ன கோபம்.

திருஷ்டின்னு explicit ஆ சொல்லலன்னா தான் என்ன:):)

Ashok D said...

முகம் மஞ்சளா தெரியறதுக்கு காரணம் லைட்டீங் என்கிற உண்மையை வெளியே சொல்லமாட்டேன் ஜி...

ச.முத்துவேல் said...

ஆ(ல்க)ஹா(ல்) கலக்கல்!

Anonymous said...

ம்ம்ம்ம். பொறாமை எல்லாம் இல்லை :))

பா.ராஜாராம் said...

//ஏற்கெனவே நான் மட்டும் முன்னார் சென்ற கடுப்பில் இருந்த வீட்டு பாஸ் 'ஹும், அந்தமான் எல்லாம் கிரிமினல்ஸ் தான் போவாங்க' என்று கடுப்பேற்றினாள். நான் 'சுதந்திரப் போராட்ட வீரர்கள் சென்ற இடம் அது - எனக்குப் பொருத்தமா தான் இருக்கு' என்றதும் கப் சிப்.//


//வராண்டாவில் ஏதோ பழுப்பு நிறக் குச்சி என்று எடுக்கப் போனால், அது ஒரு பாம்பு. நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்து, பிறகு சிறிய சலுகையாக இரண்டு மூங்கில் கொம்புகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டு வாலை மட்டும் ஆட்டியது. (என்பதாக அதை அருகில் சென்று பார்க்கும் துணிவு இருந்தவர்கள் சொன்னார்கள்). என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் விளையாட்டாக எடுத்துக் கொண்டது இன்னும் பீதியைக் கிளப்பியது. நண்பர் ஒருவர் 'யோவ், பயப்படாத. அது தண்ணிப் பாம்பு. விஷம் கிடையாது' என்றார். தண்ணிப் பாம்புக்கு தரையில் என்ன வேலை என்ற கேள்வி கேட்ட லாஜிக்கை அந்தப் பாம்பு உட்பட யாரும் செவி மடுக்கவில்லை.//

// இரவுக் கனவில் நான் அருகில் சென்று பார்க்க அஞ்சிய தண்ணிப் பாம்பு, ஐந்து தலைகளுடன் பூதாகாரமாக கடலில் படுத்துக் கொண்டு 'வாருங்கள் விஷ்ணு தேவரே' என்று அழைத்தது. மகாவிஷ்ணுவாக ஆசை இருந்தாலும், காலைப் பிடித்துவிடும் மகாலட்சுமி மும்பையில் இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.//

:-)))

"நல்லவரே",

கூடுதலாக ஸ்மைலி மட்டும்தான் போட்டிருக்கிறேன்.பிறகு நீங்கள் வாய்க்கால் தகராறுக்கு வரக் கூடாது.

மத்ததெல்லாம் கூலிங்க்ளாஸ் காரர் எழுதுனது.

தண்ணிப் பாம்புக்கே உங்களுக்கு அம்புட்டு பயம்னா,எனக்கு நல்ல பாம்புக்கு பயம் இருக்காதா அனு? :-)

Ashok D said...

அன்புடன் அருணா said...

அருமையான OFFSITEம் கவிதையும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த ரிசஷன்பீரியட் க்கு முன்ன ஃபேமிலிடே கொண்டாட அலுவலகம் தேர்ந்தெடுத்த ஊரு.. இப்ப எல்லாரும் அதை வசதியா மறந்திருப்பாங்க.. :(

நீங்க பாத்துட்டு வந்ததை நாங்களும் பாத்தமாதிரி எழுதி இருக்கீங்க.. அந்த காட்டு சத்தத்தைப்பற்றி சொன்ன விதம்..கவிதை எல்லாமே அருமை..

கார்க்கிபவா said...

வேகமா ஸ்க்ரால் செஞ்சிட்டே வந்தேன் பதிவு எம்மாம் பெருச்சுன்னு பார்க்க. க்டைசி ஸ்டில்ல மயக்கமே வந்துடுச்சு..

ஓ இதுதான் அழகுல மயங்கி விழறதா?

அப்படியே சைடு பார்ல இருக்கிற புத்தக விளம்பரத்த தூக்குங்க. காந்தி செத்துட்டாரு

பதிவ படிச்சிட்டு நெக்ஸ் பின்னூட்டம்

எம்.எம்.அப்துல்லா said...

படித்துவிட்டு எப்போதும் போல பின்னூட்டமிடாமல் செல்ல முயற்சித்து முடியவில்லை. எப்போதும் போல இப்போதும் என் மனதிற்கு நெருக்கமாகவே உணர்கின்றேன் உங்களை.

ரௌத்ரன் said...

ஏன் சாமி இந்த கொலவெறி உங்களுக்கு...என்ன போல பச்ச புள்ளைங்கள இப்டியா பயமுறுத்தறது...

இனி போட்டோ போடறதா இருந்தா முன்னடியே டிஸ்கி போட்டுட்டு போடுங்க..எப்பா இருங்க வரேன் தண்ணி குடிச்சுட்டு :))

கலக்கல் டூர்...கலக்கல் கவுஜைஸ்...அடிச்சு ஆடுங்க நீங்க :))

Anonymous said...

ஹூம். எல். ஐ. சி வேலைலயே இருந்திருந்தா நானும் இன்னேரம் அந்தமான் போயிட்டு வந்திருப்பேன்.

நர்சிம் said...

எவ்வளவு அற்புதமான எழுத்து இது..

படித்து முடித்தவுடன் ஏனோ உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

(அதனால் தான் கடைசியில் அந்த ஃபோட்டோவா?)

அந்தப் பிறவிக் கவிஞன் மேட்டர் டாப்ண்ணா.

Saminathan said...

Havelock கண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறையேனும் போக வேண்டிய இடம்..
http://www.orkut.co.in/Main#Album?uid=12680111847935643007&aid=1256554344

எறும்பு said...

அலுக்கவே அலுக்காத விசயங்களில் காடும் ஒன்று.. காட்டில் ஒன்றி, சொல்லிய விதம் அருமை...

எறும்பு said...

அப்புறம் அந்த கடைசி படம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களம்

;))

Anonymous said...

Dear Anu,

I liked the Photo. When did you join D'Company?

Will comment later on the post.

Mahesh said...

ஆஃப்சைட்டுக்கு அந்தமான்... இதெல்லாம் ரெம்ப ஓவர்.. ஆமா...

//பிறவிக்கலைஞன்//
இதெல்லாம் எனக்கும் உங்களுக்கும்தான் புரியும் :))))))

கிளியனூர் இஸ்மத் said...

அந்த மானை நன்றாக வர்ணித்துள்ளீர்கள்....இன்னொருமுறை நானும் போகனும்

தராசு said...

கொஞ்ச நேரம் கூட அந்தக் கானகத்தின் தனிமையை அனுபவிக்கவில்லையா தலைவா....

கவுஜ..... அய்யய்யோ, புரியுதே...

iniyavan said...

//நண்பர் ஒருவர் 'யோவ், பயப்படாத. அது தண்ணிப் பாம்பு. விஷம் கிடையாது' என்றார். தண்ணிப் பாம்புக்கு தரையில் என்ன வேலை என்ற கேள்வி கேட்ட லாஜிக்கை அந்தப் பாம்பு உட்பட யாரும் செவி மடுக்கவில்லை. //

சூப்பர் சார். அருமையான எழுத்து. மேலே குறிப்பிட்டது போல நிறைய இடங்களில் உங்கள் டச். அந்தமானுக்கு உங்களுடன் சென்று வந்தது போல் உள்ளது.

கண்ணகி said...

த்ரில்லிங்... அழகான படங்கள்.. கவிதை...பொறாமைப்பட வைக்குது..

Anonymous said...

interesting post with postcard photos.

Anonymous said...

:-D Superb

"உழவன்" "Uzhavan" said...

அடடா.. அத்தனையும் அழகு :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அந்தமான நேர்ல பாத்தாப்ல இருக்கு வர்ணனை. சூப்பர். இப்படி என்ஜாய் பண்ணினேன்னு சொன்னப்புறம் உங்க வீடு பாஸ் reaction எப்படி இருந்ததுன்னு ஒரு பதிவ போடுங்க பாஸ் (ஹா ஹா ஹா..."அந்தமானை பாருங்கள் அழகு"னு நீங்க பாடினாலும் தப்பிக்க முடியாது)

chandru / RVC said...

பயணக்கட்டுரையும், கவிதையும் அருமையா இருக்கு கவிஞரே..! havelock போயிட்டு டைவ் பண்ணாம வந்தா எப்படி? scuba - pleasure dive னு டூரிஸ்டுகளுக்கு தனியா ஒரு பேக்கேஜ் இருக்கு. என்கிட்ட சொல்லிருந்தா ஏற்பாடு பண்ணிருப்பேனே? அந்தமானுக்கு போய்ட்டு பவளப்பாறைகள் பத்தி எதுவும் எழுதாம காடு காடுனு எழுதிருக்கீங்களே? நியாயமா?

Karthik said...

எப்பவும் போலத்தான். மெலிசா சிரிச்சிக்கிட்டே படிச்சிட்டு வந்தேன். கடைசிலதான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. :)) (நான் கவிதைய சொன்னேன். :P)

மாதேவி said...

அந்தமான், கவிதை இரண்டுமே அழகு.

Perundevi said...

நன்றி அனுஜன்யா.

அகத்தின் முல்லையும் நெய்தலும் புறத்தின் அலுவலகமாக மாறிய சூழலிலும் கடலையும் காட்டையும் ரசிக்க முடிந்திருக்கிறதே!

Anonymous said...

என் செல்லமே 23 -ம் புலிகேசி , நீ மனம் திரிந்தி ஸ்மைலி யுடன் நிறுத்திக் கொண்டது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடா ! ஆனால் அரியணையில் உட்கார்ந்ததும் நீ செய்கிற அலும்பு தானடா தாங்க முடியவில்லை !!

என் குலக் கொழுந்தே புலிக்கேசி !!! நீ பாராட்ட ஆரம்பித்து விட்டால், "வல்லவராயானை புறமுதுகிட்டு ஓட வைத்த வெள்ளைக் கொடி வேந்தே என்ற ரீதியல்" மடை திறந்த வெள்ளமென பொங்கிவிடுகிறாயே அதை தானே தவறு என்றேன்.

ஆமா நேற்று அரியாசனத்தில் உட்கார்ந்ததும் தூங்கி விட்டாயாமே ?? இது தகுமா ???

Anonymous said...

அந்தமானைப் பாருங்கள் அழகு !! என்று சும்மாவா பாடினார்கள். உங்கள் பின்னால் அந்தமானுக்குள் நடப்பது போலவே இருந்தது.

செல்லுலார் ஜெயிலுக்கு போக நேரமில்லையா ?? புகைப் படங்களும் அழகு.

கடைசியில் உண்மையில் திருஷ்டி பரிகாரமாக அந்த கவிதைகள், எனக்கு எபோதும் போல கவிதை அலர்ஜி இப்போதும்.

மற்றபடி கடைசி போட்டோ பிரமாதம் !!! இத்தனை நாட்களாக சாப்பிட அடம் செய்த என் செல்ல மகள் , உங்கள் படத்தை பார்த்தது முதல் சமர்த்தாக சாப்பிடுகிறாள் !!!

தினம் மூன்று முறை உங்கள் தளத்துக்கு எங்கள் வருகை நிச்சயம் :-)

(புலிகேசி பின்னூட்டத்தில் பெயரிட மறந்துவிட்டேன்)

நல்ல அனானி

anujanya said...

@ நேசமித்ரன்

மிக்சி பிளேடு? அவ்வளவு அறுவையா?

மூன்றாவது ஆளா இல்லை மூன்றாம் தரமா?

நன்றி நேசன் :)

@ மோனி

அவ்வ்வ்வவ். நன்றி மோனி :)

@ கபீஷ்

விஷ்ணு மேல கோவமில்ல. ஒன்லி பொறாமை :)

//திருஷ்டின்னு explicit ஆ சொல்லலன்னா தான் என்ன:):) //
என்ன ஒரு வில்லித்தனம்!

நன்றி கபீஷ்

@ அசோக்

கவிதை நல்லா இருக்கு அசோக். கோபம்/வருத்தம் குறைந்ததா இப்போ?
மஞ்சள் முகம் - :)
'ண' - அப்படீன்னா?

@ முத்துவேல்

ஆல்கஹால்? - ஆ ஆ

@ மயில்

அப்பாடா. நன்றி விஜி

@ ராஜாராம்

நானும் ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுக்குறேன் ராஜா - :)))

@ அருணா

நன்றி ப்ரின்சி.

@ முத்துலெட்சுமி

கூடிய சீக்கிரம் போயிட்டு வாங்க. நன்றி சகோ.

@ கார்க்கி

இந்த லொள்ளுக்கொண்ணும் குறைச்சலில்லை. சைடு-பார் - தூக்கியாச்சு :)

@ அப்துல்

//படித்துவிட்டு எப்போதும் போல பின்னூட்டமிடாமல் செல்ல முயற்சித்து முடியவில்லை.// என்ன ஒரு கயமைத்தனம்!

//எப்போதும் போல இப்போதும் என் மனதிற்கு நெருக்கமாகவே உணர்கின்றேன் உங்களை.// இது தான் ஜென்டில்மேனுக்கு அடையாளம். அப்துல் வால்க.

நன்றி அப்துல்.

@ ரௌத்ரன்

யோவ்...உன் கதையைப் பத்தி எழுதணும்..
நன்றி ரௌத்ரன்

@ சின்ன அம்மிணி

விடுங்க. ஆசியில் நீங்க பார்க்காததா? Great barrier reef எல்லாம் பார்த்திருப்பீங்களே!

அனுஜன்யா

anujanya said...

@ நர்சிம்

//படித்து முடித்தவுடன் ஏனோ உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.// ஆட்டோ சத்தம் கேட்டது. பதுங்கி விட்டேன்.

நன்றி பாஸ்.

@ பூந்தளிர்

சுட்டி கொடுத்ததற்கு நன்றி. பார்க்கிறேன். உங்கள் முதல் வருகைக்கும் நன்றி.

@ எறும்பு

//ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களம்//
யோவ், நீ இந்த கம்மெண்டு போட்டாலும் போட்ட. என் வீட்டில் எல்லோரும் இன்னமும் சிரிச்சுகிட்டே இருக்காங்க - அவ்வ்வ்வவ்வ்வ் :(((

@ வேலன்

//When did you join D'Company?// Why this murder rage?

@ மஹேஷ்

ஆமாம், இவரு ஜெனிவா, அமெரிக்கா எல்லாம் போவாரு. சிங்கையிலேயே வசிப்பாரு. நாங்க சும்மா இந்தியாவுக்குள்ள போனா 'ரெம்ப ஓவர்' ?

நன்றி மஹேஷ்

@ இஸ்மத்

உங்கள் முதல் வருகை? அந்தமான் முன்பே போயிருக்கீங்களா? நன்றி பாஸ்.

@ தராசு

தனிமையை அனுபவிக்க தண்ணிப்பாம்பு விடவில்லையே !

நன்றி பாஸ்

@ உலகநாதன்

நன்றி உலக்ஸ்

@ கண்ணகி

நன்றி சகோ

@ ஜோ அமலன்

நன்றி ஜோ அமலன்.

@ புனிதா

நன்றி தங்கச்சி.

@ உழவன்

நீங்களும் போய் பாருங்க பாசு. அவ்வளவு அழகு.

@ அப்பாவி தங்கமணி

நன்றி பாஸ். ஆனா ஒரு வில்லத்தனமும் இருக்கு உங்ககிட்ட :)

@ RVC

நண்பர்கள் போயிட்டு வந்தாங்க சந்திரா. நான் காட்டுலே ஐக்கியமாகிவிட்டேன் :)
Scuba-diving அவ்வளவு நல்லா இல்லைன்னு சொன்னாங்க. Pattayaavil நான் SD செய்திருக்கேன். அட்டகாசம்.

@ கார்த்திக்

//கடைசிலதான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. :)) (நான் கவிதைய சொன்னேன். :P)//

டேய், எல்லாம் ஒரு குருப்பாத்தான் வரீங்க. கார்க்கியோட சகவாசமெல்லாம் வேண்டாம் :)

@ மாதேவி

நன்றி சகோ

@ பெருந்தேவி

வாவ், ஆதர்ச கவிதாயினியின் முதல் வருகை. நன்றி பெருந்தேவி.

அனுஜன்யா

anujanya said...

@ நல்ல அனானி

நீங்கள் என் கவிதை பற்றி தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் .. எனக்கும், வேறு சிலருக்காவது பிடித்திருப்பதால், அவ்வப்போது கவிதை வரும் :)

எனக்கு ராஜாராம் நெருங்கிய நண்பர். தயவு செய்து இனிமேல் அவரைப் புண்படுத்தும் பின்னூட்டங்களைத் தவிர்த்து விடுங்கள். அப்படி தொடர்ந்து நீங்கள் பின்னூட்டமிட்டால்..... ரிஜெக்ட் செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை பாஸ். ப்ளீஸ்.

அனுஜன்யா

anujanya said...

தமிழிஷ் தளத்தில் வாக்களித்த பத்தொன்பது பேருக்கும் நிறைய....வேறென்ன நன்றிதான் :)

அனுஜன்யா

Anonymous said...

எனக்கு இரண்டு பேருமே நல்ல நண்பர்கள் தான், என் நிலைமையப் பாத்தீங்களா !!
தமிழ் கூறும் நல்லுலகம் ஆஹா !! சூப்பர் , கலக்கிட்ட என்ற வகை பாராட்டுகளை தான் ஏற்றுக் கொள்கிறது. சொந்தப் பெயரில் "நறுக்" விமர்சனம் செய்தா பேச்சுவார்த்தையே நின்னு போய்டுமே !!!

கவிதை மற்றும் அர்த்தமில்லா பாராட்டுகளை கண்டிப்பதை நிறுத்திக் கொள்கிறேன். இனி சொந்த பெயரில் மட்டும் பின்னூட்டம் !!.

கடைசியா, நான் கவிதைகளை ரசிப்பவன் ஆனால் நீங்கள் , பா.ரா எழுதுவதெல்லாம் கவிதை என அங்கீகரிக்க மறுப்பவன்.

(நல்ல)x(நல்ல) அனானி

பா.ராஜாராம் said...

நன்றி அனு! :-)

நண்பருக்கும் நன்றி! :-)

Thamira said...

வயித்தெரிச்சல் போஸ்ட். எங்க ஆபீஸ்லயும்தான் இருக்கானுங்களே.. எந்த நேரமும் ரூமுக்குள்ளயே மீட்டிங் நடத்திக்கினு.. சை.!

(ஜாரி ஃபார் தி லேட்டு)

anujanya said...

@ (நல்ல) அனானி

//தமிழ் கூறும் நல்லுலகம் ஆஹா !! சூப்பர் , கலக்கிட்ட என்ற வகை பாராட்டுகளை தான் ஏற்றுக் கொள்கிறது. சொந்தப் பெயரில் "நறுக்" விமர்சனம் செய்தா பேச்சுவார்த்தையே நின்னு போய்டுமே !!!//

தாராளமாக கவிதை/கட்டுரை/கதைகள் இத்யாதிகளை விமர்சனம் செய்யுங்கள். வளர், ஜ்யோவ், கிருத்திகா, ஆதி என்று பலபேர் என் கவிதைகளை விமர்சனம் செய்திருக்கிறார்கள். அய்யனார், வா.மணிகண்டன், வாசகன், பைத்தியக்காரன் போன்ற நான் மிகவும் மதிக்கும் பதிவர்கள் மெளனமாக இருப்பதையும் ஒரு விமர்சனமாகவே நான் எடுத்துக் கொள்வேன். ஏனினில் அவர்களைக் கவர்ந்தால், அவர்கள் பாராட்டுவார்கள் என்ற புரிதல் எனக்குண்டு. ஆதலினால், தைரியமாக சொந்தப் பெயரில் என்னுடைய கவிதைகள் மற்றும் அனைத்தையும் விமர்சனம் செய்யுங்கள். Absolutely no probs. Really.

By the way, உங்களைக் கவர்ந்த சில கவிதைகள் பற்றிச் சொல்லுங்களேன். உங்கள் ரசனை பற்றி எனக்கும் கொஞ்சம் புரிய வரும் :).

@ ராஜாராம்

:)

@ ஆதி

ஆபிஸ்ல கொஞ்சமாவது வேலை செய்யணும் ஆதி. பதிவு, குறும்படம், தங்கமணி அப்படீன்னு யோசனை பண்ணிக்கிட்டே இருந்தா இப்படி தான் ரூம்ல அடச்சு வெப்பாங்க :)

அனுஜன்யா

யாத்ரா said...

பயணங்கள் கிளர்த்தும் உணர்வுகள் மனோநிலைகள் அலாதியானவை. நமக்கே நமக்கு மட்டுமென பிரத்யேகமாய் கிடைக்கப்பெறும அனுபவங்கள் நிறைய இருக்கும் இம்மாதிரி பயணங்களில்.

படங்கள் எல்லாம் அருமை. பிறகு உங்களை நேரில் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காவிட்டாலும் இப்படி நிழற்படங்களில் பார்த்துக் கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெருந்தேவி அவர்களின் அந்தக் கவிதை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது, எப்போது வாசித்தாலும் வேறு வேறு தளங்களில் அர்த்த விரிவை ஏற்படுத்திக் கொண்டே செல்லும் கவிதை, இந்த படிமம் தரும் அவஸ்தை சொல்லில் அடங்காதது.

உங்கள் கவிதையும் ரொம்பப் பிடித்திருக்கிறது

Anonymous said...

என்னை யாரென ஏறத்தாழ யூகித்து விட்டீர்கள்.
நன்றி !!!