குலத்தொழில்
தள்ளாடித் துவளும்
சிறுவனின் கால்கள்
பதினாறு தெருக்களைச்
சுற்றியிருக்க வேண்டும்
கையை உயர்த்திப்
பிச்சை கேட்கும் தாயின்
இடுப்பில் சாய்ந்து,
பிச்சையிடும், மறுக்கும்,
துரத்தும், இச்சிக்கும்,
காறியுமிழும் நூறு
முகங்களைக் காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
சிறுவயதில் அல்லலுறும் இவன்
பின்னாட்களில் திருடலாம்
கொள்ளையடிக்கலாம்
பயங்கரவாதியாகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
பிச்சைக்காரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது
(கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆனது)
59 comments:
இக்கவிதையை முன்னரே கீற்றினில் வாசித்து அரண்டு போயிருக்கிறேன். பிச்சைக்காரர்களாக இருப்பது எத்தனை கொடியது என்பதை இதை விட யாராலும் சொல்ல முடியாது.
நானும் இதுகுறித்து திண்ணையில் எழுதிய கவிதை ஒன்றை சீக்கிரம் பதிவேன்.
அருமையான கவிதை அனு!
அருமையா இருக்கு அண்ணா
இந்த கவிதை வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் போனா நல்லா இருக்கும்
அடப் போ சாமி... :(
குடித்தொழில்
--------------------
தள்ளாடித் துவளும்
குடிமகனின் கால்கள்
பதினாறு கடைகளைச்
சுற்றியிருக்க வேண்டும்
காலை மடக்கி
படுத்து கிடக்கும் மாட்டின்
இடுப்பில் சாய்ந்து,
ரம், பிராந்தி,
சாராய்ம், கஞ்சா,
போததரும் நூறு
சரக்குகளை காலையிலிருந்து
கொண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
சிறுவயதில் போதயுறும் இவன்
பின்னாட்களில்
சரக்குவிக்கலாம்
அரசியல்வாதியாகி
நாட்டை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
குடிகாரனாவோ
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது...
(இவனே குடிச்சா அப்புறம் நமக்கு எங்கே சரக்கு கிடைக்கும்-- ஏதொ சும்மா டமாஸூ)
nice sir,
கொடிது கொடிது
எனக்கும் பிச்சையெடுக்கும் சிறுவர்களை காணும்போதெல்லாம்
இப்படித் தோணும்.
இயல்பாய் ஆனால் நெஞ்சை வருத்தும் கவிதை
அருமை தல
நெஞ்சை வருத்தும் கவிதை
கவிதை வாசிக்கும் போது நெஞ்சை வருந்துது (அலுவலக பொட்டியில ஏசி குளிருல உக்காந்து வாசிக்க நல்லாயிருக்கு).
தினம் தினம்
பிச்சைக்கராங்களை
பாக்கும் போது
ஜஸ்ட் லைக் தட் ன்னு
கடந்து போகிறேன்.
//பின்னாட்களில் திருடலாம்
கொள்ளையடிக்கலாம்
பயங்கரவாதியாகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை//
உங்க கரிசனம் புரியுது அனு. கடைசி வரி பதட்டத்தை உண்டு பண்ணுது. நல்லா இருக்கு.
//கொள்ளையடிக்கலாம்
பயங்கரவாதியாகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
பிச்சைக்காரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது//
இதில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்...உரிய நேரத்தில் உரிய இடத்தில் அவனின் பிச்சைத்தாகம் தீராதபட்சத்தில்...
காரணமாய் யாரைச் சொல்வது பெற்றவர்களையா? பிறப்பித்தவர்களையா?
அதே தெருவில் அவன் காரிலும் போகலாம் ஒரு 25 ஆண்டுக்கு பின்னர் ;)
Anything possible.
எதிர்கவுஜ நாளை ரீலிஸ் தலைவரே!
நேரடியான கவிதை. ரொம்பப் பிடிச்சிருக்கு அனுஜன்யா!
மொத தடவையா புரிஞ்சுச்சு..!.
நன்றி
//.. பிச்சைக்காரனாகவே
தொடர்ந்து விடுவானோ ..//
:-(
பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html
இதுவரைக்கும் உங்ககிட்ட படிச்சதுலயே ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதை அனுஜன்யா. க்ளாஸ்.
ஹ்ம்ம் :((
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க..!!! வெகுநாட்களுக்கு பிறகு வலையில் ஒரு நல்ல கவிதை !!
பிச்சைக்காரனாக மாறலாம்..ஆனால் பயங்கரவாதியாவதற்கு இன்னும் அழுத்தமான காரணங்கள்,பாதிப்புகள்
அவசியப்படுகின்றன.
நெஞ்சை வலிக்கும் கவிதை.
பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது
ஜெய மோகனின்"ஏழாம் உலகம்" நினைவில் வந்து போகும்.
அருமையான கவிதை
Very good one Anujanya.
In the same subject, one of my poem
உறுத்தல்...!
இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.
வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்
அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்
அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.
இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்
இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.
ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்
பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்
குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த
இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.
o
:(
எங்களுக்கும் காலம் வரும்....அப்பிடின்னு விரைவில் வளமான எதிர்காலம் அவர்கள் பெற வேண்டும்
இப்படி புரியுற மாதிரியே கவிதைகள் எழுதினால் எவ்ளோ நல்லாயிருக்கு...
வெறித்துப் பார்க்கும் கவி மனதின் நெற்றிச்சுருக்கங்களாய் கவிதை வரிகள் தென்படுகின்றன.
இது மாதிரியான உணர்வைத் தொடும் கவிதைகளில் நேரடியான படங்கள் தவிர்க்கப்பட்டால் நல்லது...படிப்பவனின்
எண்ணங்களை எல்லைக்குள் வைக்கிறது..இல்லையா?!
பிச்சை எடுப்பது தவறே. ஆனால்
//பின்னாட்களில் திருடலாம்
கொள்ளையடிக்கலாம்
பயங்கரவாதியாகி
நகரை அச்சுறுத்தலாம்.//
இதனிலும் பிச்சை தவறென்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
"செல்வராஜ் ஜெகதீசன் said...
Very good one Anujanya.
In the same subject, one of my poem
உறுத்தல்...!
இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.
வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்
அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்
அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.
இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்
இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.
ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்
பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்
குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த
இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ."
selvaraj jegadesan sir,
enakku romba pitichchirukku. nice sir.
கவித.. கவித... அட!
அவன் பிச்சைக்காரனா ஆயிடகூடாதுன்னு நீ நினைக்கிற..
நா அவன் திருடனா ஆயிடுவானோன்னு பயப்படறேன்..
(பசங்க பட வசனம்)
நல்லாயிருக்கு கவிதை....
ரொம்ப நல்ல கவிதைங்ணா!
(ஹை, எனக்கும் புரிஞ்சது.)
அருமை
nalla irukku anna..
ஜென்யாஜி..,
நெஞ்சில் ஒரு மாதிரியான அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய இம்மாதியான கவிதைகளை ஏன் நீங்கள் அதிகமும் எழுதுவதில்லை....?
கவிதை வாசிப்பென்பது வாசித்து முடித்த பின்னரும் மனதில் ஒரு சிறிய ஏதேனுமொரு உணர்வினை உருவாக்கவல்லதாக இருக்க வேண்டுமல்லவா...அது இது போலத்தான்...நாட்கள் கடந்தேனும் எதிர்படும் ஒவ்வொரு அல்லது ஒரேயொரு பிச்சைக்காரனை அல்லது அவர்தம் குழந்தையை பார்க்கும்போதும் நிச்சயமாக உங்களின் வரிகள் வரிசை மாறியோ அல்லாமலோ நினைவில் வந்து உறுத்துப்போகும்.
நன்றி ஜி.
velji said...
இது மாதிரியான உணர்வைத் தொடும் கவிதைகளில் நேரடியான படங்கள் தவிர்க்கப்பட்டால் நல்லது...படிப்பவனின்
எண்ணங்களை எல்லைக்குள் வைக்கிறது..இல்லையா?!
நுண்ணிய அவதானிப்பு...இது கவனிக்கத்தக்கது.
ஆஆவ்வ்வ்வ்வ்வ்...!! நெம்ப டச் பண்ணி போட்டுச்சு கவுஜ .... !!
தென் பாண்டி சீமையில ...
கார் ஓடும் வீதியில... அட ச்ச...!! தேரோடும் வீதியில...
யாரு அடுச்சாரோ ..... யாரு அடுச்சாரோ ......
அதிர வைத்த கவிதை அனுஜன்யா சார்...
அருமை.
அதிர்ச்சி+பதற்றம்.
அருமை நண்பரே....
கனத்த நெஞ்சுடன்,
-ரவிச்சந்திரன்.
good one anu..!
நல்லாயிருக்கு அண்ணா..
மனதை என்னவோ செய்யும் உறுத்தல்.
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்..
nalla irukku thala
உயிரோடை, கவிதையின் தலைப்பைப் பாருங்கள், அதுதான் முக்கிய விஷயமென்று நினைக்கிறேன்.
தாய் / தந்தை திருடனாக இருந்திருந்தால், பிச்சைக்காரனாகவோ அல்லது வேறு ஏதாவதாகவோ ஆகிவிட்டுப் போகட்டும், திருடனாக ஆகிவிடக் கூடாதே என்று வருத்தப்பட்டிருப்பார்.
அனுஜன்யா , எதேச்சையாக உங்கள் கவிதையை படிக்க நேர்ந்தது. நெஞ்சை தொட்டாலும் ; பிச்சை எடுப்பது பயங்கரவாதம்,திருட்டு மற்றும் கொள்ளையைவிட மிகவும் கொடுமையானது என்பதை நீங்கள் வலியுறுத்துவது தெரிகிறது. இதை எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை!
பின் குறிப்பு : இந்த பிரச்சனை உலக அளவில் முக்கியமானதாய் இருந்தாலும் ஒரு இந்திய பிச்சை எடுக்கும் தாய் படத்தை உபயோக படுத்தி இருக்கலாம்...நீங்கள் ஒரிஜினல் 'THAI' படத்தை கொடுத்து இருக்கிறிர்கள்...இந்த படம் எப்படி பொருந்துகிறது ??? க்ளிக்கி பாருங்கள்...http://cdn2.wn.com/o25/ar/i/9b/acfc0de852946a.jpg
என்ன அனுஜன்யா...என்னோட கருத்து ஒவ்வவில்லையோ ??
நான் இந்த விளையாட்டுக்கு புதுசு..நீங்கள் என்னுடைய Comment ஐ பதிவதற்கு என்ன செய்ய வேண்டும் ??
Thanks அனுஜன்யா! நான் பரிந்துரைத்த படத்தின் Link சரியாக பதியவில்லை. எனவே, மறுபடியும் தருகிறேன். இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்...http://cdn2.wn.com/o25/ar/i/9b/acfc0de852946a.jpg - பார்த்துவிட்டு சொல்லுங்கள்....
@ ராமலக்ஷ்மி
நன்றி சகோ. விடுமுறை நாட்கள் எப்படி இருந்தது?
@ ராஜாராம்
நன்றி ராஜா.
@ ஜோதி
அவங்க போடணுமே :)
நன்றி ஜோதி
@ மஹேஷ்
ஹ்ம்ம். ஆம் மஹேஷ்.
@ சூரியன்
வால்பையன், லவ்டேல் மேடி வரிசையில் நீங்களுமா? நல்லா இருக்கு. எதிர்க் கவிதை என்றால் கட்டாயம் குடி வர வேண்டுமா? :)))
நன்றி பாஸ்.
@ மண்குதிரை
என்ன இது சார் மோர் எல்லாம்?
@ அமித்து.அம்மா
ஆம். நன்றி AA
@ கார்க்கி
தேங்க்ஸ்டா
@ சிவா
ஆமாம் சிவா.
@ நாஞ்சில் நாதம்
எல்லோரும் அப்படிதான் பாஸ் :(
நன்றி
@ வேலன்
நன்றி வேலன்.
@ பாலாஜி
ஒரு காரணம் இல்லை. பல.
நன்றி பாலாஜி
@ அசோக்
இது positive approach. எல்லாக் கதைகளும் 'சுபம்' இல்லைதானே?
நன்றி அசோக்.
@ வால்பையன்
செய்யுங்க குரு
@ ஜ்யோவ்ராம்
நன்றி ஜ்யோவ்
@ ராஜு
:)). நன்றி
@ பட்டிக்காட்டான்
கஷ்டம் தான். விடுங்க பாஸ்.
@ சாமுண்டி
:))
@ மணிகண்டன்
தேங்க்ஸ் மணி. நேரடியாக இருப்பதாலும், நாம் எல்லோரும் பார்ப்பதாலும் இருக்கலாம்.
@ ஸ்ரீமதி
நன்றி ஸ்ரீ
@ செய்யது
ஆம் செய்யது. நன்றி
@ மாதேவி
வாங்க சிஸ். ரொம்ப நாட்களுக்குப் பின் வருகை.
நன்றி
@ T.V.Radhakrishnan
நன்றி சார்.
@ செல்வராஜ் ஜெகதீசன்
வாவ், வாங்க தல. உங்கள் முதல் வருகை.
உங்க கவிதையை முன்பே படித்திருக்கிறேன். நல்ல கவிதை.
நன்றி செல்வா.
அனுஜன்யா
@ வசந்த்
அசோக் மாதிரியே உங்களுக்கும் பாசிடிவ் அப்ரோச். நன்றி வசந்த்.
@ மாதவராஜ்
நன்றி மாதவ்
@ நிஜமா நல்லவன்
நன்றி பாஸ்
@ Velji
உண்மைதான். யோசிக்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
@ உயிரோடை
இது தவறு என்று சொல்லவில்லை. ஆதங்கம். உங்களுக்கு சுந்தர் பதிலும் சொல்லி இருக்கிறார். அது என் கருத்தும் கூட.
இன்னொரு கண்ணோட்டத்தில் பிச்சைக்காரனை சமூகம் கேவலப்படுத்துகிறது. நான் சொன்ன மற்றவர்களை சமூகம் மதிக்கா விட்டாலும், சமயங்களில் பயப்படுகிறது. அவர்களைப் பொறுத்த வரையில் பின்னதே தேவலாம். இது தான் சரி என்று சொல்லவில்லை. இப்படியும் பார்க்கலாம் என்கிறேன்.
நன்றி லாவண்யா.
@ மண்குதிரை
ஆம், செல்வாவின் கவிதை அருமை.
@ மாயவரத்தான்
நீங்க எங்க நம்ம கடைக்கு....ஓஹோ, எல்லாம் வால்பையன் வேலை. ஓகே ஓகே
@ தண்டோரா
வாங்க கவிஞர். அதுவும் சரிதான். நன்றி மணிஜி.
@ அமுதா கிருஷ்ணா
நன்றி சகோதரி. உங்கள் பதிவுகள் படு சுவாரஸ்யம். நிதானமாகப் படிக்க வேண்டும்.
@ கார்த்திக்
நன்றி கார்த்திக்
@ உழவன்
நன்றி பாஸ்
@ நந்தா
தேங்க்ஸ் நந்தா
@ அன்பு
வாங்க அன்பு. உங்கள் 'கரையும் உருவங்கள்' படிச்சேன். நல்லா இருக்கு. இன்னும் நிறைய வாசியுங்கள். எழுதுங்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி அன்பு.
@ கும்க்கி
ரொம்ப நன்றி தல. ஆனால், கவிதை ரொம்ப திட்டமிட்டு எழுதுவதில்லை. எழுதவும் கூடாது அல்லவா? சமயங்களில் இந்த மாதிரி கவிதை வாய்த்தால் நிறைய பேருக்குத் தாக்கம் ஏற்படுகிறது. நுட்பமான பார்வை கொண்டவர் நீங்கள். அதனால் நீங்க சொல்வதை மனதில் கொள்கிறேன். வேல்ஜி சொல்வதும் கவனிக்கப் பட வேண்டியதுதான்.
நன்றி பாஸ்.
@ மேடி
டேய், போதும் :)))
நன்றி மேடி
@ தமிழ்ப்பறவை
நன்றி பரணி. 'சார்' வேணாமே :)
@ விக்னேஷ்வரி
நன்றி சகோ.
அனுஜன்யா
@ ரவிச்சந்திரன்
வாங்க ரவி. உங்கள் முதல் வருகை. வைரமுத்துவின் ஆதர்ச ரசிகர் நம்ம கவிதையைப் படித்து பாராட்டுவது எல்லாம்... ரொம்ப நன்றி.
நல்லா எழுதுகிறீர்கள். நிறையவும் எழுதினால் என்ன :)))
@ RVC
சந்திரா, நன்றி. எப்ப full-swing ஆட்டம்?
@ Bee'morgan
நன்றி பாலா. அங்க வர இன்னும் வைக்கவில்லை. கோவிக்காத :))
@ சரா
நன்றி
@ மேவி
நன்றி மேவி.
@ ஜ்யோவ்ராம்
பொதுவாக என்னை நாராகக் கிழித்தாலும், அவ்வப்போது இப்படி உதவிக்கு வருவதற்கு நன்றி ஜ்யோவ் :)
@ உலகக் கடவுள்
வாங்க தல. பெயரே அட்டகாசம். வணங்குவதைத் தவிர வேறு வழியில்லை :)
நீங்கள் கேட்கும் கேள்வி கொஞ்சம் மேலே பார்த்தீர்கள் என்றால், உயிரோடையும் கேட்டிருக்கிறார்கள். ஜ்யோவ்ராம் சுந்தர் அதற்கு (என்னைவிட அழகாக) பதிலும் சொல்லி இருக்கிறார்.
நீங்க சொன்ன லிங்க் சென்று பாத்தேன். மனதை இன்னும் உலுக்குவதாக இருக்கிறது. நான் போட்டிருக்கும் படம் 'கீற்று' அமைப்பினர் அவர்கள் தளத்தில் என் கவிதையை பிரசுரித்த போது போட்டது. நான் அதையே பயன்படுத்திக் கொண்டேன்.
நன்றி உங்கள் முதல் (இரண்டாம், மூன்றாம் கூட) வருகைக்கு.
@ எல்லோருக்கும்
கொஞ்சம் உடல்நலக் குறைவு. கொஞ்சம் பணி நிமித்த பயணம்; நிறைய வழக்கம் போல சோம்பல். அதனால் இத்த்த்தனை தாமதம். கண்டுக்காதீங்க ப்ளீஸ்.
அனுஜன்யா
ஆஹா...!
சின்னஞ் சிறுவர்கள் தம் பிஞ்சுக் கரங்களை அரைவயிற்றை நிரப்ப நீட்டும் போது துயரம் ஏற்படும். இக்கவிதையை வாசிக்கும் போது அதே உணர்வு ஏற்பட்டது, சுடுகின்ற உண்மை அனுஜன்யா...மின்சார ரயிலில் ஒரு குட்டிப் பையன் அவன் அக்காவுடன் தினம் வந்து பிச்சையெடுப்பான். ஒரு வார்த்தை கூட பேசமாட்டான். தம்ளர் நீட்டப்படும்போது காசு விழுந்தால் சிறு புன்னகை அவன் முகத்தில் தோன்றும், ஒரு நாள் என் பையில் போர்பான் பிஸ்கெட் இருந்தது. அவன் சில்லறைக்காக கையை நீட்டயபோது நான் பிஸ்கெட்டை தந்ததும் அதை கிட்டத்தட்ட என் கைகளிலிருந்து பிடிங்கிக் கொண்டான். ஏழ்மை பசி என எவ்வளவு காரணங்கள்....அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் பணக்காரர்களும் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? first class compartment ல கூட நிம்மதியா வர முடியலை...பிச்சைகாரங்க தொந்தரவு,ச்சே கம்பெயிண்ட் பண்ணனும் ஒருவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்தது. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் போலும்!!!
சிந்திக்க வைக்கும் கவிதை... Nice One!
"பிச்சைக்காரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது"
ஏன்னு தெரியலை சாமி இப்பெல்லாம் பொருளில் முரண்படும் கவிதைகள் அதிகம் எழுத ஆரம்பித்து விட்டீர்கள், கலகக்காரர் ஆயீட்டீங்களோ...:)
@ செல்வா
நன்றி செல்வா.
@ உமாஷக்தி
வாவ், உமாஷக்தியின் முதல் வருகை. நீண்ட பகிர்தலுக்கு நன்றி உமா. உங்கள் அனுபவம் போலவே நம்மில் பலருக்கும் பல தருணங்கள் ஏற்படுகிறது.
மிக்க நன்றி உமா
@ அன்புடன் மணிகண்டன்
நன்றி அ.ம. :)
@ கிருத்திகா
எனக்கும் பயமா இருக்கு கிருத்திகா - நீங்க சொல்றது உண்மையா இருக்குமோன்னு :)
உயிரோடை கூட பின்னூட்டம் போட்டிருந்தார்கள். சுந்தர் அதற்கு பதிலும் போட்டார். நானும் 'இதுதான் என் கருத்தும்'னு எழுதிவிட்டேன். இதையும் தாண்டி உங்களுக்கு வேற ஏதாவது பொருள்-முரண் தென்படுகிறதா?
இப்ப எல்லாம் நீங்க வந்தாலே பதற்றம் வருகிறது :) (ஜ்யோவ், அய்ஸ், வளர் எல்லாம் வரும்போது இந்த பதற்றம் வரும்). ச்சும்மா சொல்கிறேன். உங்கள் கருத்துகள் எனக்கு மிக முக்கியம் கிருத்திகா.
நன்றி கிருத்திகா.
மன்னிக்கவும் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை இந்த கவிதையில் ... அவன் பீட்சைக்காரன் ஆகக்கூட போய்விடலாம் அதனால் எவருக்கும் அவனால் திங்கில்லை.
:(((
Post a Comment