Wednesday, July 30, 2008

வானிலை அறிக்கை மற்றும் வாழ்வு கலை கொண்டாட்டம் (அ-கவிதை)

இணைப்பு தளர்ந்த
எல்சீடி திரையென
பொதுவாய் கறுத்தும்
அவ்வப்போது
ஒளிக் கீற்றுடனும்
உபாதையில் வானம்;
வெளிவந்ததைக் கொட்டியபின்
துடைத்த மேகங்களையும்
துரத்தியபின்
எல்லாம் சரியான வானத்தில்
புதிதாய் தரவிறக்கம் செய்யப்பட்ட
(பின்னால் வைரஸ் தாக்கக்கூடும்)
ஒளிரும் கர்சராய் சூரியன்;
தகிக்கிறது சாலை ;
நவீன ஓவியம் முறைக்க
உள்ளே நுழைந்தோம்;
பொழுது கழியும் ஆனந்தமாக;
ரசிப்போம் மூடிய கண்களுடன்
ஏசியின் உறுமலுடன்
தவழ்ந்து வரும் மெல்லிசையை;
இளமஞ்சள் திரவத்தைப் பருகுவோம்
வெளியுலுள்ளவர்களைக் கவனியாமல்;
செயற்கை ஒளி லேசாகக் கவிந்த
இந்த ஞாயிறு நன்றாக நினைவிருக்கும் -
உன்னை வெகு நாட்களுக்குப்பின் சந்திப்பதால்.

பின்குறிப்பு:

ஒரே நாளில் 'வளரின்' மொழிபெயர்ப்பு, சுந்தர் கவிதை மற்றும் அய்யனார் படித்த ஜெ.கே.யின் 'reverse' உத்தி எல்லாம் படித்து ‘வானிலை மாற்றம்’ எழுத முற்பட்டதால் வந்த விளைவு. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களாக.

Friday, July 25, 2008

இன்னும் சில ஹைகூக்கள்


சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்

வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்

விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்

Saturday, July 19, 2008

பாமரோமேனியன்

உன்னதமாய் வாழ்ந்து
அகாலமாய் வீழ்ந்தவன் நான்
துரோகத்தின் வலி இன்னமும் மீதமுள்ளது
எனக்குப்பின் பிறந்தவன் தேவனாகி விட்டான்
முன்பைவிட வேகமான கால்களும்
நீண்ட நாவும் வலுவான பற்களும்
கூர்மையான நாசியும் என்னிடம் இப்போது
முதுகைப் பற்றி ....பிறகு சொல்கிறேன்
இப்போதெல்லாம்
சில வருடங்களிலேயே இறந்து விடுகிறேன்
உடனே பக்கத்துத் தெருவிலோ ஊரிலோ
பிறந்தும் விடுகிறேன்
கொலைகாரர்களையும் கத்தியையும்
கண்டால் உன்மத்தம் ஏறுகிறது
அவர்களை எளிதில்
என்னால் அடைய முடியும்
ஆயினும் சிலர் முதுகில் தடவும்போது
பயமாகத்தான் உள்ளது
என் வரலாறு அப்படி;
பெயர் சொல்லவே
அஞ்சுவர் முன்பெல்லாம்;
இப்போது கூப்பிடுவது என் புது எஜமானன்
நான் தாவியோடிச் சென்றடைய
பூரிப்புடன் சொல்கிறான்
'சீசர் ரொம்ப சூட்டிகை'
வாலை மெல்ல ஆட்டத் துவங்கினேன்

Monday, July 14, 2008

நாமொழிகள்

நாமொழி-1
இருபுறமும் இரைச்சலுடன்
விரையும் வாகனங்கள்
இன்று ஏனோ அறவே இல்லை;
எந்தத் தலைவர் மறைவோ ?
சாலை மறியல் போராட்டமோ ?
என்ன ஜாதி மதக் கலவரமோ ?
கிட்டிய அரிய வாய்ப்பில்
பேசிக்கொண்டே இருந்தன
நாள்முழுதும் ஆயிரம் நாவுகளில்
எதிரெதிரே இருந்த
இருபத்தியிரண்டும்
அறுபத்திநாலும்

நாமொழி-2
நெடுஞ்சாலையில்
விரைந்த நான்;
சரசரவென்று முந்தி
சாலை தாண்டிய நாகம்;
சற்று தூரம் விரைந்து
வெறித்து நோக்கியது;
படமெடுக்க மறந்த
உறைந்த கணங்கள்;
துருத்திய அதன் நாவிலிருந்து
தற்காலிகமாகப் பெற்ற
பார்செல் நாவிலறிந்தது
எம் பாதை குறுக்கிடுவது
இது முதலுமன்று
கடையுமன்று

Thursday, July 10, 2008

மேலும் சில ஹைகூக்கள்

கருவாட்டுச் சந்தையிலே
உயிருள்ள இரு மீன்கள் !
அசைவம் பழகியது
அன்று முதல்தான்.


தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்


கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.


காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி

Friday, July 4, 2008

முன் அமைதி
ஆறாம் தளத்து வீட்டில்
முப்புறமும் ஜன்னல்கள்
வேறு கோணங்களில்
ஒரே காட்சியுடன்;
அலைகளற்ற கடலும்
மேகமற்ற வானும்.
கண்கள் விரிந்த என்னிடம்
கடலிலிருந்து
கைப்பற்றிய நிலமென்றான்.
கனிமநீர் தித்தித்தாலும்
உணவு சற்றே கரித்தது
என் ரத்தக் கொதிப்புடன்
அமிலங்களின் சங்கமத்தை
வயிற்றில் எதோ எரிச்சல்
என்று எண்ணியிருக்கக் கூடும்.
இறங்கி வருகையில் அவன் மகள்
சுனாமியில் முதலெழுத்து
ஓசையற்றது என்றாள்