ஒரு வழியாக மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. காங்கிரசுக்கு இப்போது சுக்கிர தசை. செல்லுமிடமெல்லாம் வெல்லுகிறது. பூவோடு நாராக பவாரின் கட்சியும் மணக்கிறது. சிவசேனைக்கு பெருத்த பின்னடைவு. பி.ஜெ.பி. கேட்கவே வேண்டாம். சிவசேனை/பி.ஜெ.பி. கூட்டணியின் வாய்ப்புகளை (சுமார் 44 தொகுதிகளில்) ராஜ் தாக்கரேயின் MNS கட்சி பாதித்து இருக்கிறது. முதல் முறை பங்கேற்ற இந்தத் தேர்தலில் 13 இடங்கள்; அதிலும் மும்பையில் ஆறு இடங்கள் என்று அமர்க்கள அறிமுகம் அந்தக் கட்சிக்கு. பொதுவாக வேறு மாநில மக்களுக்கும், குறிப்பாக உ.பி./பீகார் மக்களுக்கும் இது சற்று பீதி தரும் செய்தி. அறுபதுகளில் திராவிட இயக்கங்களின் தீவிரம் ராஜ் தாக்கரேவிடம் காணலாம். போலவே, பதவி சுகம் கிடைத்ததும் நீர்த்துப் போய்விடும் என்றும் நம்பலாம். ஆந்திராவிலிருந்து இருபது வருடங்கள் முன்பு வந்து மும்பையில் வாழ்க்கை அமைத்துக் கொண்ட மூர்த்தி என்னும் நண்பர் "இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி ஒரு குறுகலான சிந்தனையா" என்று ராஜ் தாக்கரே பற்றி கவலைப்பட்டார். நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingoism பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் அவர் இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறது.
“சார், எத்தனை தடவ சொல்லுறது - அரசியல் பேசாதீங்கன்னு” என்று டீக்கடைக்காரர் விரட்டுவதால்....
******************************************************
SAP என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தின் தலைவரான ரன்ஜன் தாஸ் என்னும் 42 வயது இளைஞர், உடற்பயிற்சி செய்து முடிந்ததும், பலமான மாரடைப்பால் உடனே மரணமடைந்த செய்தி, தினம் அலுவலகம்-வீடு-அலுவலகம் என்று சுழலும் பலரை கொஞ்ச நேரமாவது கவலைப்பட வைத்தது. குவஹாத்தியில் பிறந்து, அமெரிக்காவில் MIT/Horward என்று அமர்க்களம் செய்த அவருக்கு குடி/புகைப்பிடித்தல் போன்ற எந்தப் பழக்கங்களும் இல்லை என்பது ஆச்சரியத் தகவல். இந்திய மென்பொருள் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான Nasscom ன் தலைவராக இருந்த தேவாங் மேத்தா தன் 40 வயதுக்குச் சில மாதங்கள் முன் சிட்னி மருத்துவமனையில் இறந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். கொஞ்ச நாட்களாகவே 'இந்தியர்களுக்கு மற்ற இன மக்களைக் காட்டிலும் இதய நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று பல அறிக்கைகள் வருவது நினைவுக்கு வந்தது. இந்த பயங்களாலேயே நம்ம நண்பர் தேவன்மாயம் உடல் நலம்/நோய் அறிகுறிகள் பற்றி எழுதி வரும் பல இடுகைகளை படிக்காமலே நகர்ந்து விட்டேன். கொஞ்ச நாட்கள் முன்பு துவங்கியிருந்த காலை மென்-ஓட்டத்தை சோம்பல் நிமித்தம் நிறுத்தி இருந்தவனைக் கடிந்துகொண்ட (ச்சும்மா) மனைவியிடம் 'ரொம்ப எக்சசைஸ் செய்தாலும் ஆபத்து' என்று செய்தித்தாளைக் காண்பித்தேன். மொக்கை எழுதி பரஸ்பரம் சொறிந்துகொள்ளும் பிரபலங்களை ஈனமாகப் பார்க்கும் அறிவுஜீவி போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இது தேறாத கேஸ்' என்று நகர்ந்து விட்டாள்.******************************************************
நீங்கள் எல்லாம் எப்படியோ தெரியாது. எனக்கு அறிவியல் என்றாலே .....உங்களுக்கு நான் எழுதும் கவிதை போல. கன்னா பின்னா அலர்ஜி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, இரண்டு வருட இயல்பியல் வகுப்பில் நான் ஊன்றி கவனித்த ஒரே விடயம் எங்கள் ஆசிரியைக்கு இருந்த இலேசான மீசை தான். அப்படிப் பட்ட ஆசாமிக்கு கணினி, அலைபேசி, அட சாதரண தொலைக்காட்சிப்பெட்டி போன்ற வஸ்துகள் தரும் தினசரி தொழில்நுட்பத் தொந்தரவுகள் சொல்லி மாளாது.
ஒரு முறை கார்க்கியிடம் 'டேய், என்னோட ப்ளாகை யாராவது ஹேக் பண்ணிவிட்டால், நீ தான் சரி செய்யணும்' என்றேன். அரை நிமிடம் மௌனம். பிறகு முழுதாக மூன்று நிமிடங்கள் வெடிச்சிரிப்பு சிரித்தான். 'தல...உங்க ப்ளாக...ஹேக் ....சரி சரி அப்படி ஒரு நல்லது நடந்தால், செய்தவருக்கு என் செலவில் பார்ட்டி தருவேன்' என்கிறான். எவ்வளவு பொறாமை பிடித்த மனிதர்கள்!
ரொம்ப நாட்களாகவே காயசண்டிகை வயிறு போல என் அலைபேசியின் பாட்டரி மின்சாரத்தை எந்நேரமும் உண்டபடி இருந்தது. ஆபீஸில் ஒரு geek, 'ஹலோ, ப்ளூ டூத் ஆன்லியே இருக்கு சார். யூஸ் செய்யாத போது ஆஃப் செய்துவிடுங்கள்; வைரஸ் வேறு தாக்கும்' என்றான். கேவலமாக உணர்ந்தாலும், அவனையே ஆஃப் செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களுக்கு மட்டுமில்லாது, கார்க்கி போன்ற 'up the curve' இளைஞர்களுக்கும் சுவாரஸ்யமான வலைப்பூ PKP அவர்களின் தளம். One of my most favourite bloggers and strongly recommended for all. சத்தமில்லாமல், சச்சரவுகள் இல்லாமல், அனாயாசமாக (450 Followers) சாதனை புரிந்துவரும் அவருக்கு என் வாழ்த்துகள்.******************************************************
சமீப காலங்களில் என்னைக் கவர்ந்த பதிவர் வானவில் கார்த்திக். வசந்த் குமார் மூலம் இவர் பற்றி அறிந்தேன். கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவர் (தகவல் சரிதானே?) இவ்வளவு ஆர்வத்துடன், அதுவும் கச்சிதமாக, எழுதுவது மகிழ்ச்சியான ஆச்சரியம். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் ஸ்டைல். வெங்கிராஜா, கார்த்திக் போன்றவர்கள் இன்னும் ஐந்து வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. செய்வார்களா?******************************************************
ஆத்மாநாமின் கவிதைகள் சில:
எழுதுங்கள்
எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை
உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்
உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை
வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும் திரும்புதல் சரக்கென்று
உடல்விரித்துக்
காட்டும்
கற்றாழையின்
நுனியிலிருந்து
துவங்கிற்று வானம்
எங்கெங்கோ
அலைந்து திரிந்து
திரும்பிற்று மனம்
வழக்கம் போல்
கடல் மணல் புல்தரை
சாலை வாகனங்கள்
கோணல் மாணல் மனிதர்கள்
திரும்பிக்கொண்டு
எங்கிருந்து
கப்பல்கள் காத்திருக்கின்றன
திருபிச் செல்ல
நானும் திரும்ப வேண்டும்
தினசரியைப் போல
ஒவ்வொரு நொடியாக
அடுத்த நாள் காலைவரை******************************************************