Tuesday, September 18, 2012

மாற்றுத் திறன்


இருவருக்கு எதிரில்

தலை குனிந்து
அமர்ந்திருக்கிறான்

மனைவி கோவிலில்
மெய்மறந்திருந்தாள்

அவனுக்குப் பேசும் திறமை
குறைவாக இருக்கிறது

பூங்காவில் மகள்
ஊஞ்சலாடுகிறாள்

வாடிக்கையாளர்களிடம்
தன் நிறுவனத்தின்
அருமை பெருமைகளைப்
பேசக் கூசுகிறான்

சதுரங்கக் காய்களுடன்
காத்திருக்கிறான் நண்பன்

நிறைவேற்றும் சாத்தியங்களற்ற
பொய்களைச் சொல்ல இயலுவதில்லை

இவன் காதலை நிராகரித்தவள்
மீண்டும் வந்திருக்கிறாள்
மகப்பேறுக்காக

வெளியூர் மேலதிகாரியின்
காதல் தோல்விகளை
சாயங்கால வேளைகளில்
அவருடன் குடித்துக் கொண்டே
கேட்டிருக்கலாம்.

வேலைக்காரச் சிறுமியை வருடும்
பணக்கார விரல்களை
அடுத்த முறை கண்டால்
வெட்டிவிட வேண்டும்

கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதிலும்
நேர்மை தவறாத நிர்வாகம்
வெளியேறும் நேர்முகத்தில்
உற்பத்தித் திறன் குறைவு
என்று மட்டும் குறிப்பிட்டது
இடப்பற்றாக் குறையால்?

இப்படிப்பட்ட இரவில்
பூங்காவில் மணியடித்து
கோயிலில் ஊஞ்சலாடி
மகப்பேறுக் காதலியுடன்
சதுரங்கம் விளையாடியதில்
உற்பத்தித் திறன் உயர்ந்ததாக
அந்தச் சிறுமி சொல்லிய போது
தனது பிரத்யேக வனத்துள்
மெல்ல மெல்ல பிரவேசித்தான்


[நவீன விருட்சத்தில் பிரசுரமாகியது]

Thursday, August 9, 2012

காக்கைச் சிறகு


திடீர்னு உள்ள வரச் சொல்லி கைல கடிதம் கொடுத்தார். தார் என்ன? தான். இவனுக்கு எல்லாம் மனசாட்சியே கெடயாதா? பதிமூணு பேர்ல நான் மட்டுந்தான் மாட்னேன். இந்த வருசமும் நோ போனஸ். நோ இன்க்ரிமென்ட். என்னங்கடா? அட்வைஸ் மழை வேற. என்னவோ PIP னு ஒரு ப்ரோக்ராம்ல போடட்டுமான்னு கேக்குறான். துப்பணும் போல வந்தது. சீட்டுக்கு வந்தா எல்லாரும் கருணையா பாக்குறாங்க. கொஞ்சம் அழுகையா வருது. போனஸ்/சம்பள உயர்வு இதெல்லாம் என்னப் பொருத்தவரைக்கும் பண விஷயம் இல்லை. தரமாட்டேன்னு சொல்வதில் ஒரு புறந்தள்ளல் இருக்கு. இன்னிக்கு இது போறும்னு கடைய மூடினேன். யார் கிட்டயும் 'பை' சொல்லாம வெளிய வந்தேன். ஒரு சிகரெட் பிடிக்கலாம்னு தோணிச்சு. இப்பெல்லாம் எங்க சுதந்திரமா சிகரட் பிடிக்க முடியுது? ஆபிஸ் நோ ஸ்மோகிங் ஆபிஸ். இப்ப நோ போனஸ் ஆபிஸ். நோ இன்க்ரிமென்ட் ஆபிஸ். ஐயோ வேணாமே இந்த ஆபிஸ் எழவு!


பாந்த்ராவில் எங்கேயோ போற டபுள் டக்கரில் ஏறி, மாடி ஜன்னலில் அமர்ந்தேன். என்னது? டபுள் டக்கர் இல்லையா? டெக்கரா? அது சரி. நொந்து போயிருக்கும் போது இதையெல்லாம் கவனமா சொல்ல முடியுமா? கலா நகர் சிக்னலில் நின்றது. பக்கத்தில்தான் பால் தாக்ரே வீடு. உடம்பு சரியில்லைன்னு லீலாவதில இருக்காராம். "இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" னு சிரிக்கணும் போல இருக்கு. கண்டக்டர் 'புடே ஜா' னு எல்லாரையும் மராட்டியில் முன்னே விரட்டிக் கொண்டிருந்தான். முன்னேறி என்னடா செய்யப்போறோம்? இலேசா தூரத் தொடங்கியது. மொபைல் வெளிய எடுத்து பாட்டு கேக்க ஆரம்பிச்சேன். "மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே". வாவ். அஸ்வினி நினைவுக்கு வந்தாள். என்ன மாதிரி முகம்! உடனே ஜானுவும். ஜானு.....இப்ப எப்படி இருப்பா? என்ன விட இரண்டு வயசு தானே கம்மி அவளுக்கு? முடி நரைத்திருக்கும். அந்த சுருள்? நிச்சயமா இன்னும் அதே ஒல்லியாதான் இருப்பா. இந்தப் பாட்டு 'கல்யாணி' தெரியுமா? அவதான் சொன்னா. அதுல வீணை நாதம் வரும்போது கண்ணை மூடிக்கொள்வா. அன்னிக்கு ஜெயாவோ விஜய்யோ.. ராஜா ட்ரூப்ல ஒரு பெண் வீணை வாசிக்கும் போஸ் நல்லா இருந்தது. கால தொங்கப் போட்டுக்கொண்டு வாசித்தாள். சரஸ்வதி இப்படித்தான் அமர்ந்து வாசிப்பாளோ! அவள் அமர்ந்திருந்த பலகை ஊஞ்சலாக மாறி ஆடினால் எப்படி இருக்கும்? வீணை வாசிச்சுக்கிட்டே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டே...

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?

இப்படி ஒரு ஒட்டுதலின்மையும் ஏகாந்தமும் வாய்க்கப் பெற வேண்டும். அதையும் தாண்டி பற்றற்ற நிலை வருமா? வரத்தான் வேண்டுமா? ஆமாம், ஜானு நீ ஏன் என்னைக் காதலிக்கவில்லை? அல்லது அப்படி சொல்லவாவது இல்லை? பாரு இப்படி ஆபிசில் நாறடிக்கும் போது, உன் மடியில் படுத்து அழணும் போல இருக்கு. முடியுமா? இல்ல முடியுமான்னேன்! உன் கணவன் கோவிச்சுப்பான். இல்ல கொலவெறில துரத்துவான். என்ன சிஸ்டம் இது? மனைவிக்குன்னு சில பழைய சிநேகிதர்கள் அட ஒரே ஒரு சிநேகிதனாவது இருக்கக் கூடாதா? எனக்கு மட்டும் கல்யாணம் ஆகியிருந்தா நிச்சயமா அலவ் பண்ணுவேன். பாரேன் இந்த ரோட்ல நிறைய குழிகள். அதில் நிறையும் குமிழிகள். இந்த மாதிரி என் மூஞ்சியின் குழிகள் எப்ப நிறையும் ஜானு? இந்த அம்மை முகமே நிறைய பேருக்கு அருவருப்போ எரிச்சலோ தருதோ! அதனால தான் போனஸ் தராமலும், காதலைச் சொல்லாமலும் புறக்கணிக்கிறாங்களோ !

ஆமா, ஏன் இந்த உலகம் காசு பணத்துக்கு இப்படி அலையணும்? ஜானு கைய்ய புடிச்சிகிட்டு 'தொடத் தொட மலர்ந்ததென்ன' கேட்பதை விட என்ன சுகம் இருக்க முடியும்! 'இடைவெளி தாண்டாதே; என் வசம் நானில்லை' னு கேக்கும் போதே சிலீர்னு இருக்குல்ல! பஸ் இப்ப பவாய் கிட்ட போயிட்டிருக்கு. அருமையான ஏரி. பெய்யும் மழையில் கண்ணாடித் தரை போல விரிந்து பரந்திருக்கு. ஏரிக்கு அந்தப் பக்கம் எத்தனை மரங்கள்! ஏரியில் முதலைகள் இருக்கு. அந்தப் பக்கம் நிறைய சிறுத்தைகள் கூட. பாம்புகள் கேக்கவே வேண்டாம். இதுங்களப் பார்த்து பயப்படும் மனுசப்பயலா பிறந்தேனே! இந்த மரமாவோ, இந்த நிலமாவோ இருந்தா, ஊர்ந்து செல்லும் பாம்பையும், தாவிச் சீறும் சிறுத்தையையும் சிரித்துக்கொண்டே மடியில் கொஞ்சுவேனே! ஒரு நாளு மண்ணோட மண்ணா ஆகிடுவேன். அப்பவாச்சும் குண்டும் குழியுமா இல்லாம சமவெளியா இருக்கணும். அப்பத்தான் மான்களுக்கும் என்னைப் பிடிக்கும்.

"ஒரு மரத்தடியில்
கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும்
வேர்கள் மேல் கிடக்கிறது ஒரு
மெல்லிய காக்கைச் சிறகு
அது சிறிய உடைவாளைப் போல் இருக்கிறது
அதைச் சில வினாடிகள் என் விலாப்புறத்தில் வைத்து
நானும் பறப்பதை, பகற்கனவு கண்டுகொள்கிறேன்
சட்டைப் பையில் வைத்தால் வெளியே தெரிந்து
விடும்போல் இருக்கிறது
கால் சராயில் வைத்தால் ஒடிந்துவிடுகிறது
இருப்பினும் என் பனியனில் போட்டுக்கொண்டு
திரும்புகிறேன்"

எங்கியோ சுத்தி ரூமுக்கு வந்து சேந்த போது பன்னண்டு மணி. டிவில ஒலிம்பிக்ஸ். குட்டி குட்டி பெண்கள் டென்ஷனா ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணி, தோத்தாலும், வென்றாலும் அழுதாங்க. திட காத்திர ஆண்கள் நான் ஒரு க்ளாஸ் தண்ணி குடிப்பதற்குள் நூறு மீட்டர் ஓடி, கோடீஸ்வரர்கள் ஆகியிருந்தார்கள். அப்படியே தூங்கி விட்டேன். கனவில் குண்டு குண்டு பெண்கள் வலது கழுத்தில் பொடியைப் பூசிக்கொண்டு உலக்கைக் கைகளால் இரும்பு குண்டை தூர எறிந்து கொண்டே இருந்தார்கள். புல்வெளியெங்கும் குழிகள். கடைசியாக எறிந்தவளை இப்படி அழகான புல்வெளியை குழி குழியாக செய்வது நியாயமா என்றேன். குழிகள் ஆனாலும் புல்வெளி அழகுதான் என்று சொல்லிக்கொண்டே புல்வெளியில் புரண்டாள். ஜானு தான் இப்படி கனவில் குண்டுப்பெண்ணாக வந்திருப்பதைப் புரிந்து கொண்டே தூங்கி விட்டேன்.


ஆசுபத்திரியில் தாதி என் ஆடைகளை நீக்கி
பரிசோதனை செய்தபோது - மீண்டும் உதிர்ந்தது
எனது
உடைவாள் சிறகு
மேலும் கீழும் பறந்து
அங்கும் இங்கும் அலைந்து ...
நேற்று இன்றின் இரண்டு பக்கங்களிலும்# நன்றி பெருந்தேவி மற்றும் தேவதச்சன்

Sunday, July 8, 2012

அனுமானங்கள்

அனுமானங்கள் 

ஜன சந்தடி மிகுந்த
தெரு முனையில்
பேசிக்கொண்டிருந்தனர்
புதுக் காதலர்களா?
குறுகுறுப்பைக் காணவில்லை
மணமானவர்களா?
சலிப்பும் தென்படவில்லை
அல்லது...
இல்லை ஒரு வேளை...
பிரிந்து செல்லத் துவங்கி
தயங்கி அவன் பார்த்தபோது
திரும்பவில்லை
அவள்
திரும்பியபோது
பார்க்கவில்லை அவன்
ஹ்ம்ம்.
‘அல்லது’க்கு ஒரு கதையும்
‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும்
தானாகவே சேர்கிறது இப்போது

[நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

Monday, April 9, 2012

மோட்சப் பிரசாதம்
மோட்சப் பிரசாதம்

காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.  
ஒரு குழந்தை பிறந்ததினால் 
மதியம் கரைந்த சாக்லேட்கள் 
மேசைக்கடியில் குவிந்திருந்த 
இனிப்புத் துகள்கள்  
மாலையில் வசீகரமான 
மஞ்சள் உருண்டைகளுடன் 
வளையம் வந்த ஊழியனிடம் 
எனக்கு இரண்டு கேட்டேன் 
ஒன்றும் பேசாமல் 
மேசைக்கடியில் உருண்டைகளைப்  
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில் 
புதிதாக இறந்திருந்த 
கரப்பானின் மென் மீசை 
என் நாசியை உரசியபடி அலைந்தது    

[அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

Monday, March 26, 2012

(எதைப்) பற்றியும் பற்றாமலும் - கல்யாணப் பரிசு - ஒரு அனுபவம்கல்யாணப் பரிசு திரைப்படம் இரண்டு நாள்கள் முன் பார்த்தேன். விளம்பரத் தொந்தரவுகள் இல்லாத நள்ளிரவில் படத்தை ஊன்றிப் பார்க்க முடிந்தது. பொதுவாக சோகப் படங்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் பார்த்து விடுவேன்; சோகக் காட்சிகளை மட்டும் தவிர்த்து விடலாம் என்னும் யோசனையில். மன்னார் & கம்பெனி புகழ் தங்கவேலு, அவர் மனைவி வரும் காட்சிகளை ரசிக்கலாம்னு பார்க்கத் துவங்கி, படம் முழுவதும் பார்த்தேன். இன்றைய அறங்களின் படி நிறைய நெருடல்கள். பெண்ணியம், மனைவியை உதைப்பது, குழந்தையை பெட்ரோல் டேங் மேல் அபாயகரமாக உட்கார வைத்து இரவு முழுதும் நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக மோட்டார் பைக் ஓட்டுவது என்று நிறைய விமர்சிக்கலாம்.  படம் வந்தத் தருணத்தில் அமலில் இருந்த அறங்களுக்கு ஏற்ப படம் இருந்திருக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் படம் முழுமையுடன் இருந்ததது. ஸ்ரீதருக்கே உண்டான நேர்த்தியுடன், புத்திசாலித்தனம் கூடிய நளினத்துடன் பட நாயகி இருந்தார். சரோஜா தேவியின் முக்கியப் படங்களுள் இதனைச் சொல்ல வேண்டும். தியாகம், அந்த முடிவுக்குக் கடைசி வரையில் நேர்மையாக இருப்பது போன்ற விசயங்களில் தெளிவு இருந்தது. தற்போதைய தமிழ் படங்களில் பெண்களுக்குத் தரப்படாத முக்கியத்துவம் தமிழ்ப் படங்களின் அபத்தத் தன்மைக்கு முக்கிய காரணம் என்றும் தோன்றுகிறது

இவ்வாறாக சிந்தனை ஓடுகையில் ஒழுங்காக ஒரு சராசரி ஆசாமியாக இருந்தவனை இந்தத் தமிழ் இணையம் எந்த அளவுக்குக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது என்ற ஆயாசமும் வந்தது. 

ஒரு ஆடவனை இரு பெண்கள் விரும்பும் (ஆண் மைய்யப் புனைவு!) படங்களை கல்யாண பரிசிலிருந்து காதல் பரிசு தாண்டி கலாபக் காதலன் வரை வந்திருக்கும் காலங்களை நினைத்துப் பார்த்தேன்.   எனக்கு இந்த மாதிரி அனுபவம் வாய்த்ததா? வாய்த்த வாய்ப்பைத் தவற விட்டேனா? என்றெல்லாம் யோசித்தேன். பள்ளியில் ஒரு அக்கா ஒரு தங்கை இருந்தார்கள். தங்கை என் வகுப்பு. அவள் பெயரும் வசந்தி (கல்யாண பரிசில் கன்னடத்துப் பைங்கிளியின் பெயரும் அஃதே என்பதை நினைவில் கொள்க). அவள் அக்கா பானுமதி ஒரு வயது மூத்தவள். வசந்தி தான் இருவரில் அதிக அழகாய் இருப்பாள். வசந்தியைக் காதலித்த பொதுக் குழுவில் நானும் ஒரு ரகசிய அங்கத்தினராக இருந்ததை நானே பல ஆண்டுகளுக்குப் பின் அறிந்து கொண்டேன். பெரும்பாலான சமயங்களில் பானுமதி, வசந்தி இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒரு முறை ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு வசந்தியை சைட் அடிப்பதை அவள் பார்த்து விட்டாள். இலேசாக புன்னகையும் செய்தாள். அவள் என்பது நீங்கள் நினைப்பது போல் வசந்தி அல்ல. நான் பயந்தது போல் பானுமதி.    பள்ளியின் கிரிக்கெட் போட்டிகளில் என் சாகசங்களைப் பார்வையிட்டு கை தட்டிய கூட்டத்தில் வசந்தியும் இருந்தாலும் பானுமதியும் கூடவே கை தட்டியது வயிற்றில் புளியைக் கரைத்தது. வசந்தியை மட்டும் தனியே பார்த்து, பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்றெல்லாம் யோசிக்கும் சாமர்த்தியம் அற்றவனாக இருந்தேன். 

இப்படிப்பட்ட காலகட்டத்தில் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ, வியருக்கு 'இன்பச் சுற்றுலா' என்று எங்கள் பெற்றோர் பட்ஜெட்டிற்கு இணங்க "செஞ்சி, சாத்தனூர், திருவண்ணாமலை" செல்ல முடிவு செய்து வசந்தி வருவதை உறுதி செய்த கொண்ட பின் கிட்டத்தட்ட ஒரு நாற்பது மாணவர்களும் பதிவு செய்து கொண்டோம். பெரும்பாலும் இருவர் கைகோர்த்துக் கொண்டு செல்ல வேண்டிய பள்ளி விதிகளின் படி நிறைய மாணவர்கள் சக தோழர்களுடனும்,  மாணவிகள் தத்தம் தொழியருடனும் இணை சேர்ந்திருந்த பின் வசந்தி தனித்திருந்தாள். மாணவர்களில் பலர் தங்கள் ஜோடிப் பையன்களை உதறித்தள்ளி, சிதறி, தனித்தனி ஆளாக நின்று கொண்டு வசந்தியின் கைப்பிடிக்கும் விண்ணப்பம் போடத் துவங்கினார்கள். கிட்டத் தட்ட பள்ளி மைதானத்தில் அந்தப் பேருந்தின் சமீபத்தில் ஒரு சுயம்வர சூழல் இருந்தது. என்னுடைய குல முன்னோர்கள் பலருக்கு திருமணம், அன்னதானம் என்று எல்லாம் செய்து வைத்த மாதிரி எதுவும் நான் கேள்விப் பட்டதில்லை என்றாலும் அவற்றின் சாத்தியக் கூறுகளை நம்பத் துவங்கினேன். ஆம், வசந்தி என்னருகில் வந்து சுவாதீனமாக என் கையைப் பிடித்து 'எனக்கு ஜன்னல் சீட் தருவ இல்ல' என்றாள். அந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலை தாறுமாறாக ஏறத் துவங்கியது. ஒரு ஐம்பது தொடர் பெருமூச்சுகளின் உஷ்ணம், ஏதோ தீய்ந்து போகும் நெடி, பிற பெண்களின் அக்கினிப் பார்வை என்றெல்லாம் சூட்டைக் கிளப்பினாலும் நெஞ்சுக்குள் அடர் வனத்தின் மென்தால் குளிர் ஆதரவளித்தது. 

வசதியும், வசதியின்மையும் புலப்படாத வயதில் அவள் மேனியிலிருந்து கமழ்ந்த மணம் உண்மையிலேயே இயற்கையானது என்று திருவிளையாடல் முத்துராமன் போல நம்பினேன். அதிகாலையின் இளங்காற்றில் அவள் கூந்தலின் சில இழைகள் என் மனம் போலவே படபடத்துக் கொண்டு, அவளிடம் விலகி, நெருங்கி என்று விளையாடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினாள். ராகம் எதுவும் புலப்படாவிட்டாலும் இரம்மியமாக இருந்தது. கிஷோர் பிடிக்குமா என்றாள். பெயர் தெரிந்தாலும் முகம் தெரியாத வில்லன் மீது கோபம் பெருகுகையில் நீ இந்தி பாட்டெல்லாம் கேக்க மாட்டியா என்றாள். சமாதானமான மனதுடன்  'தில் க்யா கரே' என்று பாடினேன். மலர்ந்து சிரித்து 'நீ லம்போதர' மட்டும் தான் பாடுவேன்னு நினெச்சேன்' என்றாள். எனக்குத் தெரிந்த நாடுகள், தலை நகரங்கள், ஆறுகள் என்று மேதாவிலாசம் எல்லாம் பூந்தமல்லி  வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்து இறங்கிய போதெல்லாம் மறக்காமல் என் கையைப் பிடித்துக் கொண்டாள். செஞ்சியில் கொளுத்தும் வெய்யிலில் வரலாறு ஆசிரியை தேசிங்கு ராஜா, குதிரை என்று பேசும் போது, 'கொஞ்சம் அலக்சாண்டர் மாதிரி கதை இல்ல' என்ற வசந்தியிடம் உடனே 'ஆமாம்' என்று சொன்னாலும் பி.டி. மாஸ்டர் அலக்சாண்டருக்கும் தேசிங்கு ராஜாவுக்கும் உள்ள தொடர்பு என்ன இருக்கும் என்று மண்டையைக் குடைந்து கொண்டேன். 

சாத்தனூர் அணையில் ஏதோ ஒரு தெலுங்குப் படம் ஷூட்டிங். 'பால ராஜ பொம்மக்கடி; படலக் கடுதி' என்று ஒரே வரியை பலமுறை நாயகனும் நாயகியும் ஸ்டெப்லு ஸ்டெப்லு வாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  சரிந்த புல்வெளியில் மாணவர்கள் சாகசக் குட்டிக்கரணம் அடித்தும், மாணவிகள் எழிலுடன் அமர்ந்து சறுக்கியும் பொழுதைப் போக்குகையில் வசந்தியைப் பார்ப்பதிலேயே என் பொழுது கழிந்தது. சாத்தனூரிலிருந்து திருவண்ணாமலை வரை அவள் பஸ்ஸில் வேறு தோழியுடன் அமர்ந்து கொண்டாள். அவள் எங்கே மனம் மாறி விடுவாளோ என்ற அச்சத்தில் ஒரு தடியன் என்னருகில் அமர்ந்து கொண்டான். காரணம் புரியாமலே எனக்கும் வசந்திக்கும் ஒரு ஊடல் (இதப் பாருடா!) நடந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் எல்லாரும் சென்று வந்த பின்னும், எனக்கு அங்கிருந்து வெளியே வர மனம் வரவில்லை. அந்தக் கோயிலுக்குள் ஏதோ இருக்கணும். ஜ்யோவ் ஸ்டைலில் சொல்லனும்னா 'இதைப் பற்றி பிறகு விரிவாக எழுதணும்'. முழு வாழ்வு வாழ்ந்த ஒரு வெற்றிடம் என் மனதை ஆக்கிரமித்தது. இரவு உணவு சாப்பிட நண்பர்கள், ஆசிரியர்கள் அழைத்த போதும் கோயிலை விட்டு நான் வரவில்லை. கடைசியில் வசந்தி என்னருகில் வந்து அமர்ந்து 'எனக்கு வளையல் வாங்கித் தருவியா' என்று கேட்டபோது மோனத்தவம் கலைந்து முனிபுங்குவர் மேனகையைப் பார்த்த மாதிரி வசந்தியின் கையைப் பிடித்து வளையல் கடைப் பக்கம் சென்று கையில் இருந்த பாக்கெட் மனியில் என் இரு சகோதரிகள் மற்றும் வசந்திக்கு என்று வளையல்கள் வாங்கினேன். பிளாஸ்டிக், ரப்பர் வளைகள். கரும்பச்சை நிறத்தில், ஒளியின் ஒரு கோணத்தில் மின்னும் வளையல்கள்.  அவள் அவற்றை உடனே அணிந்து கொள்ளவில்லை. 

ஞாயிறு முடிந்து திங்கள் காலையில் வசந்தியுடன் பானுமதியைப் பார்த்தேன். கண்கள் சிரிக்க, பானுமதி என் கையைப் பிடித்து 'இந்த வளையல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு' என்றாள். அவள் கைகளில் அந்தக் கரும்பச்சை வளையல்கள் அசந்தர்ப்பமாக மின்னின. அருகில் வசந்தி காவிய மௌனத்தில் விவரிக்க முடியா உணர்ச்சியுடன் இருந்தாள். என்ன சொல்லிவிட்டு விலகினேன் என்று நினைவில்லை. என்ன சொன்னேன்? விலகினேன் என்றேன் இல்ல. ஆமாம். அதற்குப் பின் அவர்கள் இருவரையும் விட்டு விலகி விட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை வசந்தி என்னை விட வேகமாக உயர ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். 

அடுத்த வருடம் பானுமதி பள்ளி இறுதியில் இருந்தாள். பொதுத் தேர்வு முடிந்ததும் அவளுடைய புத்தகத்தில் 'கோல்டன் ஷிப், சில்வர் ஷிப், ஃபிரெண்ட் ஷிப் என்று அப்போதே கவிதை பாணியில் கிறுக்கி விட்டு எங்கே அவள் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் ஓடி விட்டேன். 

வெகு வருடங்கள் பிறகு பானுமதியை ஒரு அங்காடியில் பார்த்தேன். அவளுக்கு என் மீசை முகத்தில் என்னை அடையாளம் தெரிந்திருக்க நியாயமில்லை. மிக வசீகரமாக இருந்தாள். பக்கத்தில் ஒரு ஆடவனும் இருந்தான். மணமாகி இருந்தது. அவர்கள் கார் ஏறுகையில் இன்னொரு தடிமனான பெண் சேர்ந்து கொண்டாள். கூர்ந்து பார்த்ததில் வசந்தி. அவளுக்கும் திருமணம் ஆகி இருந்தது. நிறைய்ய்யய்ய எடை கூடியிருந்தாள்.  கொஞ்சம் சோகமாகவும் நிறைய நிம்மதியாகவும் உணர்ந்தேன். 

இப்படியாக கல்யாணம் என்பது பலருக்குப் பரிசாக விளங்குகிறது. அதாவது சிலரைக் கல்யாணம் செய்து கொள்வதில் வெகு சிலருக்குப் பரிசு. பலரைக் கல்யாணம் செய்து கொள்ளாததில் மிகப் பலருக்குப் பரிசு என்று கொள்க. 

Tuesday, February 14, 2012

ஒரு கொலை.. சில காரணங்கள்
என் பிரிய ஆகாஷ்,

  உனக்கு நான் கடிதம் எழுதுவது எனக்கே வித்தியாசமாக இருக்கிறது. முதலிலேயே சொல்லி விடுகிறேன்.  இதுவே உனக்கு என் முதலும் கடைசியுமான கடிதம். நீ பதற்றப்...நீ எப்போதுமே என்னைப் பற்றி பதற்றப்பட்டதில்லையே. நிதானம் உன் சுபாவம். எனக்குத்தான் படபடப்பு மற்றும் வேகம். மும்பை-பூனா வேக சாலையில் நூற்று அறுபதில்  உன் வயிற்றைக் கலக்கினேன். நகருக்குள் கூட அறுபதுக்குக்  குறைவாகச் செல்வதற்கு  பேசாமல்  தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்பது என் தீர்மானமான எண்ணம். இப்போது தான்  கவனிக்கிறேன்.  பேச்சுவாக்கில் 'தூக்கு மாட்டிக் கொள்வதைப்' பற்றி நிறைய முறை குறிப்பிடுகிறேன். சரி சரி முகம் சுளிக்காதே.
   நமக்குள் எவ்வளவோ ஒற்றுமைகள் இருந்தாலும் ... நாம் எவ்வளவு வித்தியாசமான ஜோடி  என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறாயா? இருவரும் மார்வாடிக் குடும்பம். கொல்கத்தா. பொறியியல். பிறகு எம்.பி.ஏ. இரண்டு குடும்பமும் பிஜினஜ் (அப்படித்தானே உன் அப்பாவும், என் அப்பாவும் சொல்வார்கள்?). கொல்கத்தாவின் கட்டுப்பெட்டி வாழ்வு தந்த இறுக்கத்தில் மும்பை வந்தேன். வாவ், என்ன நகரம் இது. நான் தேடிய சுவர்க்க நகரம்! விருப்பம் போல் உடை உடுத்தலாம். இரவு இரண்டு மணிக்கு தனியே வரலாம். ஒரு குட்டி இந்தியா மட்டுமில்லாது, ஒரு சிறிய உலகமே இங்கு இருக்கிறது. உனக்கு ஓவியத்தில் விருப்பமில்லை என்று தெரியும். காலா கோடா திருவிழாவும், ஜகாங்கீர் ஆர்ட் காலரியும் எப்படி உன்னால் ரசிக்க முடியாமல் இருக்கிறது ஆகாஷ்? நீ இன்னமும் ஷாந்தி நிகேதனை  விட்டு  ....  சரி அதை விடு.  என்ன சொல்லிக் கொண்டிருந்தேன். ஹ்ம்ம். மும்பை. இந்த ஆறு வருடங்களில் ஐந்து வித்தியாசமான வேலைகள். இரண்டு வங்கிகள், ஒரு மியூச்சுவல் ஃபண்டு, ஒரு நியூஸ் வயர் நிறுவனம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் என்று களை கட்டும் வாய்ப்புகள். வித்தியாசமான மனிதர்கள். பல்வேறு பெண்கள். அதைவிட பல்வேறு ஆண்கள். நான் ஆண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நீ வைத்துக் கொள்ளும் உம்மணா மூஞ்சியைப் பார்த்தால் முதலில் எரிச்சல் வந்தாலும், பிறகு சிரிப்பும் வரும்.


 நான் என்னுடைய இரண்டாவது வேலையிலிருந்து மூன்றாவதற்குத் தாவும் தருவாயில் என்  அப்பா அவசரமாக கொல்கத்தா வரும்படி கூப்பிட்ட போது சத்தியமாக உன்னைப் பார்க்கப்  போகிறேன் என்றோ, அடுத்த இரண்டு தினங்களில் நமக்குத் திருமணம் ஆகப் போகிறது  என்றோ கற்பனை பண்ணக்கூட முடியவில்லை. நான் உன்னிடம் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் நீ தலையாட்டிய போதே என் கனவு ராஜகுமாரன் ஒரு சேவகனாக மாறியிருந்ததைக் கண்டேன்.


 உன்னுடைய தோற்றத்திற்கு நான் கொஞ்சம் அதிகம் என்பது நம் இருவருக்குமே தெரியும். அதனாலென்ன! பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அழகாகவும், வசீகரமாகவும்  இருக்கும்  பொது விதியின் தனிப்பட்ட  உதாரணங்கள் நாம் என்று விட்டு விட்டேன்.  ஆனால் நீ அதை அப்படிப் பார்க்கவில்லை என்று இப்போது புரிகிறது. இதை ஒரு  மாபெரும்  பிரச்சனையாக நீ   பார்த்திருக்கிறாய்.  எப்போதிலிருந்து நீ என்னை சந்தேகிக்கத் துவங்கினாய் ஆகாஷ்?

 என் ஆபிஸ் பார்ட்டி முடிந்தவுடன் உன்னுடல் காரில் வராமல், விமலுடன்  பைக்கில் வந்தேனே அன்று இரவா?  பார்ட்டியில் வியர்க்க வியர்க்க ஆடிவிட்டு ஏ.சி. காரில் வருவதை  விட, இயற்கையான  வெளிக்காற்றில் எண்பது கி.மீ.யில் வருவதன் சுகம் உனக்குத் தெரியாது.

 பல முறை நீ தாமதமாக வரும்போது பக்கத்துக்கு வீட்டு குனால் (உனக்கு அவன் பெயர் இது வரை தெரியுமா?) எனக்கு டிவி பார்க்கவோ, இசை கேட்கவோ கம்பெனி கொடுத்ததை நீ  பார்த்த பார்வை நிச்சயம் அந்த கல்லூரி மாணவனை எரித்திருக்கும்.

 அசந்தர்ப்ப தருணங்களில் எத்தனை முறை என் அலுவலகம் வந்து நான் என்ன செய்கிறேன்  என்று பார்த்திருக்கிறாய்? நிச்சயம் பாஸ் என்று ஒருவர் இருப்பார். அவருக்கு  காபின் என்று ஒன்று இருக்கும்.  காபின் கண்ணாடிகளால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என்னும் உன் பதட்டம்  எனக்கு  சிரிப்பைத்தான் தரும். வயதான பாஸ்கள் இளைமையாகக் காட்டிக் கொள்ள முதுகில் தட்டுவதும், தலையைக் மெல்ல தொடுவதும் இப்போதெல்லாம் சாதாரணம் என்று உனக்குப் புரியவில்லை ஆகாஷ். என் நண்பர்கள் அனைவருக்கும் நீ ஒரு சந்தேகப் பேர்வழி என்று தெரியும்.அவர்களின் பரிதாபம் என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது. சுய பச்சாதாபத்தில்  குடிக்க ஆரம்பித்தேன். வாவ், மது என்பது எவ்வளவு மிருதுவான, அருமையான விஷயம். திடப் பொருள்கள் ஆண்கள் என்றால், திரவங்கள் பெண்கள் என்பேன். ஸ்டைல், கிரேஸ், எலிகன்ஸ் எல்லாம் திரவத்திற்குத் தான். நான் இப்படிப் பேசுவது கூட குடியின் உளறல் என்று நீ ஒதுக்கி விட்டாய். உனக்குத் தெரியுமா? கவிதை எழுத மென்போதையை விட சிறந்த தருணம் இல்லை ஆகாஷ். நான் கவிதை எழுதுவதையோ  படிப்பதையோ  கொஞ்சமும்  சட்டை செய்யாமல், மழை இரவுகளில் சுடோக்கு, குறுக்கெழுத்து போடும்  உன்னை  அப்போதே சிரச்சேதம் செய்திருக்க வேண்டும்.  இப்போது பார், எனக்கு கொலை ஆர்வமும்  எங்கிருந்தோ ஊற்றிலிருந்து கசிகிறது.

 எஜமான விசுவாசம் என்னும் காலாவதியான கோட்பாட்டில் சிக்கியிருக்கும் உன்னால் என்னளவு வேகமாக உன் அலுவகத்தில் வளர முடியவில்லை. உனக்குப் பதவி உயர்வு கிடைத்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது என்று ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய பதவி  உயர்வுகளுக்கு நீயாகவே வேறு கற்பிதங்கள் இட்டுக்கொண்டது எனக்கு எவ்வளவு வருத்தம் என்று உனக்குத் தெரியுமா?


 இதெல்லாம் பரவாயில்லை ஆகாஷ். போன வெள்ளி இரவு நீயே எனக்கு வோட்கா கலக்கித்  தர  முயன்ற போது உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது. சரியாக மூழ்காத ஒரு வஸ்து,  அந்த வோட்காவின் (பகார்டி ப்ரீசர் கலந்த) பர்கண்டி நிறத்தை ஒரு அசட்டு  நிறத்திற்கு மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது. நான் கேட்ட கேள்விக்கு நீ என் கண்களைத் தவிர்த்து மழுப்பி பதில் சொன்ன போது சந்தேகம் ஊர்ஜிதமாகியது. வேறு வழியில்லாமல் நான் அந்தக் கண்ணாடி தம்ளரைத் தவற விட்டு, தப்பித்தேன்.

 பிறகு நீ அடுத்த நாள் அலுவலகம் சென்ற பிறகு ஒரு மூலிகைத்தனமான பொடியைப் பார்த்தேன். வாசனை, 'இது சரியில்லை' என்றது. நம் கணினியில் நீ திரிந்த இடங்களை மேய்ந்தேன். ஆகாஷ், பரவாயில்லை. நீ என்னை 'ராணி போலப் பார்த்துக் கொள்கிறேன்' என்று என் அம்மாவிடம் சொல்வது ஓரளவு உண்மைதான். C34H47NO11 என்றால் நினைவில்  இருக்கிறதா? அதன் மாலிகியூலின் படம் காப்சியூல்களாலான ஒரு ஆமை உருவம் போல  இருக்கும். ஆம், விஷங்களின் ராணி என்னும்  அகோநிடைன் என்னும் வேதியியல் வஸ்துவை  எனக்காகச் சேமித்து வைத்திருக்கிறாய்.

   நம்மை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பதை அறியும்போது முதல் கட்ட அதிர்ச்சி,  கோபம், சிறிது பயம் எல்லாம் தாண்டி சுயபரிசோதனையில் நம் மீதே ஒரு ஏமாற்றம் வரும்.  எனக்கு  இப்போது அப்படி இருக்கிறது ஆகாஷ். பிடிக்கவில்லை அல்லது ஆழ்ந்த வெறுப்பு என்றால் பேசலாம். முடியாவிட்டால் பிரிந்து விடலாமே. இன்னொரு உயிரை கொலை செய்வதென்பது ... திருப்ப முடியாத முடிவு என்று உனக்கு ஏன்  புரியவில்லை?

 கண்ணே ஆகாஷ், உனக்கு அவ்வளவு சிரமம் தந்து விட்டேனா? நான் பிற ஆடவர்களுடன் பழகுவது உனக்கு அவ்வளவு துன்பம் தருகிறதா? நான் உண்மையிலேயே அவர்களிடம் படுக்கையைப் பகிர்ந்துகொண்டேன் என்று நம்பத் துவங்கி விட்டாய் என்பது புரிகிறது. அப்படி எல்லாம் இல்லை என்பதை நிருபிக்கும் கருவிகளோ, சோர்வற்ற மனமோ  எனக்கும் இல்லை. ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றாலும், அது என் உயிரை எடுக்கும்  தார்மீக உரிமையை உனக்குத் தருகிறதா? மிகவும்  நைந்த மனதுடன் நேற்று மாலை அளவுக்கதிகமாகக் குடித்து விட்டேன். விமலுடன்  பேசிக்கொண்டிருந்த போது உன் சந்தேகத்தை உண்மையாக்கினால் என்ன என்ற வெறி  தோன்றியதை, விமல் மட்டுப் படுத்திவிட்டான்.

 புழுக்கமான இரவில், அதைவிட புழுக்கமான மனதுடன் வண்டியை வெறிச்சோடி இருந்த நள்ளிரவுச் சாலையில் வெறியாக ஓட்டினேன். ஒரு திருப்பத்தில் நடைபாதை ஓரம் படுத்திருந்த கணவன் மனைவியைத் தவிர்க்கும் பதட்டத்தில் ஒரு பெண் குழந்தையை இடித்து விட்டேன். இலேசாகத் தான். அவள் பின் தலையில் இரத்தம். சிறு முனகலுடன் விழுந்த குழந்தை இறந்து விட்டாள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. மிக மிக ஆதி உணர்வான தப்பித்தல் மட்டும் என்னை ஆக்கிரமிக்க வண்டியில் விரைவாக ஏறி, வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

   இப்போது கொலை செய்த குற்றவுணர்வு என்னை வியாபிக்கிறது. நுரையீரல் முழுதும் சுதந்திரம்  என்ற காற்றை வாழ்நாள் முழுதும் சுவாசிக்க நினைத்திருந்த எனக்கு  இப்போது மரணிப்பதன் அவசியம்  தெரிகிறது. அந்தக் குழந்தையைக் கொன்ற பாவத்தின் சம்பளம் நிச்சயம் என்னளவில் மரணம் தான்.  தவறான முடிவு என்று தோன்றுகிறதா? பரவாயில்லை...எங்கும் எதிலும் வேகமான எனக்கு, இந்த முடிவும் அப்படியே இருக்கட்டும்.

    இதை நான் எழுதுவது ஒரு நதிக்கரையில், என் மடிக்கணினியில். எந்த நதி? என்னைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளப் போகும் அன்னை நதி. இன்னும் சில நிமிடங்களில் நான் மிதப்பேன் ஆகாஷ். நிச்சயம் உன்னைப் பார்த்துக் கொண்டே. ஆம், ஆகாசத்தை வெறித்தபடி. உனக்கு நான் தரும் தண்டனை....மன்னிப்பு தான்.


   ஒரு குறிப்பு: இரண்டு நாட்கள் கழித்து நம்ரதாவை - அவள் உடலை நர்மதை நதியின் ஒரு திருப்பத்தில், ஒரு மரவோரத்தில் கண்டு பிடித்தனர். அப்போது அவள் கண்கள் பிரதிபலித்த ஆகாயத்தில் இருந்த மேகம் நகராமல் இருந்தது


(அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது) 

Tuesday, January 10, 2012

அந்த நாள்சூல் கொண்ட மேகங்களால்

தொலைந்து போன வானம்
மெல்ல விசும்புகிறது
வீசும் காற்றில்
தூரத்து மரங்கள்
கூச்சம் கொள்வதைக்
கண்ணாடிச் சுவர்கள்
விவரிக்கையிலேயே
வியர்க்கத் துவங்குகின்றன
நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்
நீந்தியோடும் ஆயிரம் திவலைகளுக்கு
நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
தோற்கும் திவலைகள் போலவே
அன்று வெல்லாதவைகள்
முதுகில் சுமந்தது
பெருக்கல் குறியா
அல்லது என்னைப்போல
பிரியும் சாலையா

[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]Monday, January 2, 2012

தரிசனம்

பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின்
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள்
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில்
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்

(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)