Tuesday, February 14, 2012

ஒரு கொலை.. சில காரணங்கள்




என் பிரிய ஆகாஷ்,

  உனக்கு நான் கடிதம் எழுதுவது எனக்கே வித்தியாசமாக இருக்கிறது. முதலிலேயே சொல்லி விடுகிறேன்.  இதுவே உனக்கு என் முதலும் கடைசியுமான கடிதம். நீ பதற்றப்...நீ எப்போதுமே என்னைப் பற்றி பதற்றப்பட்டதில்லையே. நிதானம் உன் சுபாவம். எனக்குத்தான் படபடப்பு மற்றும் வேகம். மும்பை-பூனா வேக சாலையில் நூற்று அறுபதில்  உன் வயிற்றைக் கலக்கினேன். நகருக்குள் கூட அறுபதுக்குக்  குறைவாகச் செல்வதற்கு  பேசாமல்  தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்பது என் தீர்மானமான எண்ணம். இப்போது தான்  கவனிக்கிறேன்.  பேச்சுவாக்கில் 'தூக்கு மாட்டிக் கொள்வதைப்' பற்றி நிறைய முறை குறிப்பிடுகிறேன். சரி சரி முகம் சுளிக்காதே.
   நமக்குள் எவ்வளவோ ஒற்றுமைகள் இருந்தாலும் ... நாம் எவ்வளவு வித்தியாசமான ஜோடி  என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறாயா? இருவரும் மார்வாடிக் குடும்பம். கொல்கத்தா. பொறியியல். பிறகு எம்.பி.ஏ. இரண்டு குடும்பமும் பிஜினஜ் (அப்படித்தானே உன் அப்பாவும், என் அப்பாவும் சொல்வார்கள்?). கொல்கத்தாவின் கட்டுப்பெட்டி வாழ்வு தந்த இறுக்கத்தில் மும்பை வந்தேன். வாவ், என்ன நகரம் இது. நான் தேடிய சுவர்க்க நகரம்! விருப்பம் போல் உடை உடுத்தலாம். இரவு இரண்டு மணிக்கு தனியே வரலாம். ஒரு குட்டி இந்தியா மட்டுமில்லாது, ஒரு சிறிய உலகமே இங்கு இருக்கிறது. உனக்கு ஓவியத்தில் விருப்பமில்லை என்று தெரியும். காலா கோடா திருவிழாவும், ஜகாங்கீர் ஆர்ட் காலரியும் எப்படி உன்னால் ரசிக்க முடியாமல் இருக்கிறது ஆகாஷ்? நீ இன்னமும் ஷாந்தி நிகேதனை  விட்டு  ....  சரி அதை விடு.  என்ன சொல்லிக் கொண்டிருந்தேன். ஹ்ம்ம். மும்பை. இந்த ஆறு வருடங்களில் ஐந்து வித்தியாசமான வேலைகள். இரண்டு வங்கிகள், ஒரு மியூச்சுவல் ஃபண்டு, ஒரு நியூஸ் வயர் நிறுவனம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் என்று களை கட்டும் வாய்ப்புகள். வித்தியாசமான மனிதர்கள். பல்வேறு பெண்கள். அதைவிட பல்வேறு ஆண்கள். நான் ஆண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நீ வைத்துக் கொள்ளும் உம்மணா மூஞ்சியைப் பார்த்தால் முதலில் எரிச்சல் வந்தாலும், பிறகு சிரிப்பும் வரும்.


 நான் என்னுடைய இரண்டாவது வேலையிலிருந்து மூன்றாவதற்குத் தாவும் தருவாயில் என்  அப்பா அவசரமாக கொல்கத்தா வரும்படி கூப்பிட்ட போது சத்தியமாக உன்னைப் பார்க்கப்  போகிறேன் என்றோ, அடுத்த இரண்டு தினங்களில் நமக்குத் திருமணம் ஆகப் போகிறது  என்றோ கற்பனை பண்ணக்கூட முடியவில்லை. நான் உன்னிடம் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் நீ தலையாட்டிய போதே என் கனவு ராஜகுமாரன் ஒரு சேவகனாக மாறியிருந்ததைக் கண்டேன்.


 உன்னுடைய தோற்றத்திற்கு நான் கொஞ்சம் அதிகம் என்பது நம் இருவருக்குமே தெரியும். அதனாலென்ன! பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அழகாகவும், வசீகரமாகவும்  இருக்கும்  பொது விதியின் தனிப்பட்ட  உதாரணங்கள் நாம் என்று விட்டு விட்டேன்.  ஆனால் நீ அதை அப்படிப் பார்க்கவில்லை என்று இப்போது புரிகிறது. இதை ஒரு  மாபெரும்  பிரச்சனையாக நீ   பார்த்திருக்கிறாய்.  எப்போதிலிருந்து நீ என்னை சந்தேகிக்கத் துவங்கினாய் ஆகாஷ்?

 என் ஆபிஸ் பார்ட்டி முடிந்தவுடன் உன்னுடல் காரில் வராமல், விமலுடன்  பைக்கில் வந்தேனே அன்று இரவா?  பார்ட்டியில் வியர்க்க வியர்க்க ஆடிவிட்டு ஏ.சி. காரில் வருவதை  விட, இயற்கையான  வெளிக்காற்றில் எண்பது கி.மீ.யில் வருவதன் சுகம் உனக்குத் தெரியாது.

 பல முறை நீ தாமதமாக வரும்போது பக்கத்துக்கு வீட்டு குனால் (உனக்கு அவன் பெயர் இது வரை தெரியுமா?) எனக்கு டிவி பார்க்கவோ, இசை கேட்கவோ கம்பெனி கொடுத்ததை நீ  பார்த்த பார்வை நிச்சயம் அந்த கல்லூரி மாணவனை எரித்திருக்கும்.

 அசந்தர்ப்ப தருணங்களில் எத்தனை முறை என் அலுவலகம் வந்து நான் என்ன செய்கிறேன்  என்று பார்த்திருக்கிறாய்? நிச்சயம் பாஸ் என்று ஒருவர் இருப்பார். அவருக்கு  காபின் என்று ஒன்று இருக்கும்.  காபின் கண்ணாடிகளால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என்னும் உன் பதட்டம்  எனக்கு  சிரிப்பைத்தான் தரும். வயதான பாஸ்கள் இளைமையாகக் காட்டிக் கொள்ள முதுகில் தட்டுவதும், தலையைக் மெல்ல தொடுவதும் இப்போதெல்லாம் சாதாரணம் என்று உனக்குப் புரியவில்லை ஆகாஷ்.



 என் நண்பர்கள் அனைவருக்கும் நீ ஒரு சந்தேகப் பேர்வழி என்று தெரியும்.அவர்களின் பரிதாபம் என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது. சுய பச்சாதாபத்தில்  குடிக்க ஆரம்பித்தேன். வாவ், மது என்பது எவ்வளவு மிருதுவான, அருமையான விஷயம். திடப் பொருள்கள் ஆண்கள் என்றால், திரவங்கள் பெண்கள் என்பேன். ஸ்டைல், கிரேஸ், எலிகன்ஸ் எல்லாம் திரவத்திற்குத் தான். நான் இப்படிப் பேசுவது கூட குடியின் உளறல் என்று நீ ஒதுக்கி விட்டாய். உனக்குத் தெரியுமா? கவிதை எழுத மென்போதையை விட சிறந்த தருணம் இல்லை ஆகாஷ். நான் கவிதை எழுதுவதையோ  படிப்பதையோ  கொஞ்சமும்  சட்டை செய்யாமல், மழை இரவுகளில் சுடோக்கு, குறுக்கெழுத்து போடும்  உன்னை  அப்போதே சிரச்சேதம் செய்திருக்க வேண்டும்.  இப்போது பார், எனக்கு கொலை ஆர்வமும்  எங்கிருந்தோ ஊற்றிலிருந்து கசிகிறது.

 எஜமான விசுவாசம் என்னும் காலாவதியான கோட்பாட்டில் சிக்கியிருக்கும் உன்னால் என்னளவு வேகமாக உன் அலுவகத்தில் வளர முடியவில்லை. உனக்குப் பதவி உயர்வு கிடைத்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது என்று ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய பதவி  உயர்வுகளுக்கு நீயாகவே வேறு கற்பிதங்கள் இட்டுக்கொண்டது எனக்கு எவ்வளவு வருத்தம் என்று உனக்குத் தெரியுமா?


 இதெல்லாம் பரவாயில்லை ஆகாஷ். போன வெள்ளி இரவு நீயே எனக்கு வோட்கா கலக்கித்  தர  முயன்ற போது உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது. சரியாக மூழ்காத ஒரு வஸ்து,  அந்த வோட்காவின் (பகார்டி ப்ரீசர் கலந்த) பர்கண்டி நிறத்தை ஒரு அசட்டு  நிறத்திற்கு மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது. நான் கேட்ட கேள்விக்கு நீ என் கண்களைத் தவிர்த்து மழுப்பி பதில் சொன்ன போது சந்தேகம் ஊர்ஜிதமாகியது. வேறு வழியில்லாமல் நான் அந்தக் கண்ணாடி தம்ளரைத் தவற விட்டு, தப்பித்தேன்.





 பிறகு நீ அடுத்த நாள் அலுவலகம் சென்ற பிறகு ஒரு மூலிகைத்தனமான பொடியைப் பார்த்தேன். வாசனை, 'இது சரியில்லை' என்றது. நம் கணினியில் நீ திரிந்த இடங்களை மேய்ந்தேன். ஆகாஷ், பரவாயில்லை. நீ என்னை 'ராணி போலப் பார்த்துக் கொள்கிறேன்' என்று என் அம்மாவிடம் சொல்வது ஓரளவு உண்மைதான். C34H47NO11 என்றால் நினைவில்  இருக்கிறதா? அதன் மாலிகியூலின் படம் காப்சியூல்களாலான ஒரு ஆமை உருவம் போல  இருக்கும். ஆம், விஷங்களின் ராணி என்னும்  அகோநிடைன் என்னும் வேதியியல் வஸ்துவை  எனக்காகச் சேமித்து வைத்திருக்கிறாய்.

   நம்மை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பதை அறியும்போது முதல் கட்ட அதிர்ச்சி,  கோபம், சிறிது பயம் எல்லாம் தாண்டி சுயபரிசோதனையில் நம் மீதே ஒரு ஏமாற்றம் வரும்.  எனக்கு  இப்போது அப்படி இருக்கிறது ஆகாஷ். பிடிக்கவில்லை அல்லது ஆழ்ந்த வெறுப்பு என்றால் பேசலாம். முடியாவிட்டால் பிரிந்து விடலாமே. இன்னொரு உயிரை கொலை செய்வதென்பது ... திருப்ப முடியாத முடிவு என்று உனக்கு ஏன்  புரியவில்லை?

 கண்ணே ஆகாஷ், உனக்கு அவ்வளவு சிரமம் தந்து விட்டேனா? நான் பிற ஆடவர்களுடன் பழகுவது உனக்கு அவ்வளவு துன்பம் தருகிறதா? நான் உண்மையிலேயே அவர்களிடம் படுக்கையைப் பகிர்ந்துகொண்டேன் என்று நம்பத் துவங்கி விட்டாய் என்பது புரிகிறது. அப்படி எல்லாம் இல்லை என்பதை நிருபிக்கும் கருவிகளோ, சோர்வற்ற மனமோ  எனக்கும் இல்லை. ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றாலும், அது என் உயிரை எடுக்கும்  தார்மீக உரிமையை உனக்குத் தருகிறதா? மிகவும்  நைந்த மனதுடன் நேற்று மாலை அளவுக்கதிகமாகக் குடித்து விட்டேன். விமலுடன்  பேசிக்கொண்டிருந்த போது உன் சந்தேகத்தை உண்மையாக்கினால் என்ன என்ற வெறி  தோன்றியதை, விமல் மட்டுப் படுத்திவிட்டான்.

 புழுக்கமான இரவில், அதைவிட புழுக்கமான மனதுடன் வண்டியை வெறிச்சோடி இருந்த நள்ளிரவுச் சாலையில் வெறியாக ஓட்டினேன். ஒரு திருப்பத்தில் நடைபாதை ஓரம் படுத்திருந்த கணவன் மனைவியைத் தவிர்க்கும் பதட்டத்தில் ஒரு பெண் குழந்தையை இடித்து விட்டேன். இலேசாகத் தான். அவள் பின் தலையில் இரத்தம். சிறு முனகலுடன் விழுந்த குழந்தை இறந்து விட்டாள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. மிக மிக ஆதி உணர்வான தப்பித்தல் மட்டும் என்னை ஆக்கிரமிக்க வண்டியில் விரைவாக ஏறி, வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

   இப்போது கொலை செய்த குற்றவுணர்வு என்னை வியாபிக்கிறது. நுரையீரல் முழுதும் சுதந்திரம்  என்ற காற்றை வாழ்நாள் முழுதும் சுவாசிக்க நினைத்திருந்த எனக்கு  இப்போது மரணிப்பதன் அவசியம்  தெரிகிறது. அந்தக் குழந்தையைக் கொன்ற பாவத்தின் சம்பளம் நிச்சயம் என்னளவில் மரணம் தான்.  தவறான முடிவு என்று தோன்றுகிறதா? பரவாயில்லை...எங்கும் எதிலும் வேகமான எனக்கு, இந்த முடிவும் அப்படியே இருக்கட்டும்.

    இதை நான் எழுதுவது ஒரு நதிக்கரையில், என் மடிக்கணினியில். எந்த நதி? என்னைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளப் போகும் அன்னை நதி. இன்னும் சில நிமிடங்களில் நான் மிதப்பேன் ஆகாஷ். நிச்சயம் உன்னைப் பார்த்துக் கொண்டே. ஆம், ஆகாசத்தை வெறித்தபடி. உனக்கு நான் தரும் தண்டனை....மன்னிப்பு தான்.


   ஒரு குறிப்பு: இரண்டு நாட்கள் கழித்து நம்ரதாவை - அவள் உடலை நர்மதை நதியின் ஒரு திருப்பத்தில், ஒரு மரவோரத்தில் கண்டு பிடித்தனர். அப்போது அவள் கண்கள் பிரதிபலித்த ஆகாயத்தில் இருந்த மேகம் நகராமல் இருந்தது


(அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)