Tuesday, January 27, 2009

மண் மகள்


சேற்றுப் பிரதேசத்தில்
வாலறுந்த
குதிகாலணியை
வீசி எறிந்தாள்
என்னிடம் மீதிச்
சில்லறை வாங்காமல்
சென்றவளின் வாயிலிருந்து
தேசத்தின் சுகாதாரம்
தூற்றப்பட்டது.
அவள் வசிக்கும் தூரதேசம்
போற்றப்பட்டது
பிறிதொரு நாளில்
கீரைக்குப் பேரம் பேசுகையில்
உதட்டின்மேல் இரு விரலிட்டு
சேற்றில் சங்கமித்த
உமிழ்நீரைப் பீய்ச்சியவள்
வெளிநாட்டில் வேலையிழந்த
அவளாகத்தான் இருக்க வேண்டும்
(கீற்று இதழில் பிரசுரமானது)

Friday, January 16, 2009

போனஸ்கிருஷ்ணாவின் முறை வந்தது.

கண்ணாடிக்கு அந்தப் பக்கம் 'எப்படி வேண்டும்' என்றாள்.

'ஐநூறாவே கொடும்மா'

புத்தம் புதுசாகவும் இல்லாமல், கசங்கியும் இல்லாமல் மிதமான ஐந்நூறு கட்டு ஒன்று அவன் கைகளில் இப்போது. பதட்டத்துடன் பேன்ட் பேக்கட்டில் வைத்துக்கொண்டு, அதன் மேல் கைகுட்டையால் போர்த்தி விட்டான்.

கொஞ்ச நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போனஸ் இன்று தரப்படும் என்று அரச புரசலாகத் தெரிந்தது. கிருஷ்ணா இருபது அல்லது இருபத்தைந்து வருமென்று நினைத்திருந்தான். ஐம்பது ஆச்சரியம். கொஞ்சம் அதிர்ச்சியும் கூட.

வேக வண்டியைப் பிடிக்காமல், ஸ்லோ லோக்கல் பிடித்து, ஜன்னலோரம் உட்கார்ந்தான். ஜன்னல் பக்க பாக்கெட்டில் பணம் இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டான் ஏழாவது முறையாக.

மல்லிகா என்னவெல்லாம் பேசுவாள் என கற்பனை செய்யலாம் என்று தோன்றியது.

"எப்பிடீங்க! ஒண்ணுமே இந்த வருஷம் கெடைக்காதுனீங்க"

"அப்ப LCD டிவி வாங்கிடலாங்க"

"பழனி கிட்ட அர கிரௌண்டு வாங்கிப் போடலாங்க"

"அப்படியே அஞ்சு பவுன் வளையல் வாங்கிடலாம்"

மத்திய தரத்தின் எம்பும் எத்தனங்களைப் பற்றி இந்த மாதிரி தருணங்களில் எட்ட நின்று அவதானிப்பதும் சுவாரஸ்யம்தான்.

மனம் கொண்டாட்டமில்லாது, மிக அமைதியாக இருந்தது. ஜெமோ சொன்ன 'பெரிய வேட்டையின் பின் வரும் ஏமாற்றம்' நினைவுக்கு வந்தது.

வண்டி பரேல் தாண்டி இருந்தது. மல்லிகா காப்பித்தூள் வாங்கி வரச் சொன்னது ஞாபகம் வந்தது. மாதுங்காவில் இறங்கினால் மைசூர் கன்சென் சென்று வாங்கலாம். கூட்டத்தில் கவனமாக இறங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டான்.

மாதுங்கா ரயில் நிலையத்திற்கு வெளியே மந்த ஒளி கசிந்து கொண்டிருந்த மின் கம்பங்கள். அவற்றின் கீழே ஒரு மூன்று வயது குழந்தை. ஆண். ஒரு அழுகிய வாழைப்பழத்தை குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்த அவனுடைய அக்காவுக்கு ஐந்து இருக்கலாம். குழந்தை உடம்பில் ஒன்றுமில்லை. அக்கா மேல்சட்டை போடாமல் இருந்தாள். அடுத்த கம்பத்தருகில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெரிய சட்டியில் இருந்த சாதத்தைப் பொதுவாக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். குழம்பு சற்று ஊசிப் போன வாசனை வந்தது. அவ்வப்போது கையிலிருந்த வெங்காயத்தைக் கடித்துக் கொண்டனர்.

தார்பாலின் தயவில் ஒரு கூரை. கூரைக்கடியில் ஒரு பக்கம் பாத்திரங்கள். ஒரு டிரங்குப் பெட்டி. அதன் மேல் இரண்டு சிறு பெட்டிகள். புடவை, லுங்கி, பாவாடை, துண்டு என்று கதம்பமாக ஒரு நைலான் கயிற்றில் தொங்கிய மொத்த சம்சாரம்.

நகரின் பாதாள சாக்கடை நீர் பக்கத்தில் கசிந்து கொண்டிருந்தது. குழந்தைகள் சட்டை செய்யாமல், அந்தத் தண்ணீரில் குதித்து விளையாடினர். ஒரு கிழவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணா மனம் மிகவும் சஞ்சலமானது. முகம் சுளித்துக் கொண்டே மார்க்கெட் சென்று, காப்பித்தூள், மல்லிகைப் பூ, இனிப்பு, ஆனந்த விகடன், “சேவல்” என்று பை முழுதும் 'நான் தமிழன்' என்ற அடையாளங்களைத் திணித்துக் கொண்டிருந்தான். காப்பித்தூள் கடையில் முதலாளி, "சார், காலங் கெட்டுக்கெடக்கு. ரூவாய ரெண்டா பிரிச்சு தனித் தனியா வெய்யுங்க" என்றதில் பயந்து இரண்டு பாக்கெட்டிலும் பணத்தை வைத்துக் கொண்டு மிரண்டு போயிருந்தான்.

முற்றிலும் மறந்து போயிருந்த அவர்களை திரும்பி வருகையில் மீண்டும் பார்த்தான். விளையாடிய குழந்தைகள் உறங்கி விட்டிருந்தன. பெண்கள் தார்பாலின் அடியில் தஞ்சமடைந்து, கால்களை மடக்கிப் படுத்திருந்தனர். கிழவன் இருமத் துவங்கியிருந்தான். அந்த ஆண் மட்டும், மூன்று வயதை தோளில் சாய்த்து, ஐந்து வயதுப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

மனதை என்னவோ செய்தது. மனம் தர்க்கம் செய்யுமுன் இடது பாக்கெட்டில் இருந்த பணத்தை இலேசாகத் தவறவிட்டான். யாரும் பார்க்கவில்லை. திரும்பிப் பார்க்காமல் நடந்தான். பத்து அடி எடுத்து விட்டு, திரும்பிப் பார்த்தான். அந்தச் சிறுமி அப்பாவிடம் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணா பார்ப்பதைக் கவனித்துவிட்ட அவன், மும்பைக்காரர்களுக்கே உரித்தான சங்கேத மொழியில் இவனை அழைத்தான். வேறு வழி இல்லாமல், கிருஷ்ணா அருகில் சென்றான்.

"இந்தப் பணம் உங்களுடையதா"

எங்கிருந்து துணிச்சல் மற்றும் சொல்ல முடியாத உணர்வு வந்தது என்று தெரியவில்லை. "இல்லையே. நிறைய பணமா?"

சில வினாடிகள் உற்றுப் பார்த்தபின் 'ஒன்றும் இல்லை. நீங்கள் போகலாம்' என்று அவன் வேறு திசையில் நடக்க ஆரம்பித்தான்.

கிருஷ்ணாவுக்கு மூச்சு நின்று, சீராக சில நிமிடங்கள் ஆயின. மாதுங்காவில் வண்டி ஏறி, அந்தேரி செல்லும் வரை அவன் செய்தது சரியா என்று யோசித்தான். அதன் பின், மல்லிகாவுக்குப் பதிலாக, பின்மாலையில் கண்ட இந்த குடும்பத்துக்குள் இந்த நேரத்திலும், இன்னும் சில நாட்களுக்கும் நடக்கப்போகும் உரையாடல்கள் பற்றி கற்பனை செய்ய ஆரம்பித்தான். மாலையின் பதட்டம் விலகி, ஒரு மந்தகாசம் தோன்றியது.

மல்லிகா "இருபத்தைந்துக்கே இவ்வளவு சிரிப்பா" என்றாள்.(உயிரோசை 29.12.2008 இதழில் பிரசுரம் ஆனது)

Friday, January 9, 2009

பூவாகி, காயாகி


பூக்கவேயில்லை என்றும்
காய்க்க வாய்ப்புமில்லை என்றும்
பெருமர நிழலில்
காற்று வாங்கியபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்
பார்த்து முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்.