அப்போ நான் எட்டாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். கோ-எஜுகேஷன் பள்ளி. பெண்கள் ஸ்கர்ட்டிலிருந்து ஒவ்வொருவராகத் தாவணிக்கு தத்தம் திடீர் தினங்களில் மாறிக்கொண்டிருக்க பசங்க தொடை தெரியும் அரை நிஜாரிலிருந்து பேண்ட்டுக்கு மாற பெற்றோர்களிடம் விண்ணப்பம் போட்டிருந்த பருவம். லைலா, நசீமா, உஷா, ஆஷா, ரோசலின்ட் என்ற மாடர்ன் பெயர்களுடன், எங்களை வசீகரிக்கவும் தவறாத அழகுப் பெண்கள். ராஜேஸ்வரி, வேதரத்தினம், புஷ்பலதா, தனகாந்திமதி போன்ற கொஞ்சம் புராதனப் பெயர்களுடன் எல்லா விதத்திலும் சுமாராக விளங்கும் நல்ல பெண்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் இல்லாத, எங்களுக்கு இலேசாக பயம் தந்த tomboy பெண்கள் சிலர். அவர்களில் ஒரு உற்சாகப் பந்துதான் வாசுகி.
நீங்கள் புராணங்களில் தேர்ந்தவர் என்றால், பாற்கடல் கடைவதற்கு மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பு கயிறாகவும் பயன்பட்டது என்று நினைவுக்கு வரும். தமிழ் ஆர்வலர்களுக்கு வாசுகி என்றவுடன் அய்யனின் துணைவியார் என்பது ஞாபகம் வரும். எனக்கு, வாசுகி என்றால் என் பள்ளித் தோழி வாசுகிதான். மொதோ பெஞ்சில்தான் அமர்வாள். இல்ல இல்ல, அப்படி ஒண்ணும் படிப்பில் ஓஹோ எல்லாம் இல்லை. ஒரு மாதிரி 'ஜஸ்டு பாசு' கேசு. ஆனால், அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவே மாட்டாள். நம்ம கபில் தேவ் மாதிரி பல் சற்று தூக்கல். அதனால் எப்போதுமே சிரிக்கத் தயாரானது போல தோற்றம் அவளுக்கு. இலகுவில் புன்னகைத்தும் விடுவாள்.
விளையாட்டு வகுப்புகளில் பையன்கள் சற்று தூரத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கும், பெண்கள் பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் சிறு மைதானத்திற்கும் சென்று விடுவோம். இது தவிர, பள்ளி கிருத்துவப் பள்ளி என்பதால் MI / RI என்று சுருக்கமாகச் சொல்லப்பட்ட நீதிபோதனை / மத போதனை என்னும் வகையில் வகுப்பு பிரிக்கப்படும். முதலில் நீதிபோதனை வகுப்பில் சென்று உறங்கும் வழக்கம் இருந்த என்னை, 'அங்க கதை எல்லாம் சொல்றாங்க. கிளாஸ் முடியும் போது பிஸ்கட்/கேக்/டீ எல்லாந் தராங்க; நீயும் வாயேன்' என்று சொல்லி RI வகுப்புக்குக் கூட்டிச் சென்றவள் வாசுகி தான்.
விவிலியத்தின் நிறைய பக்கங்கள் வாசுகிக்கு அத்துப்படி. மத்தியானம் நாங்க எல்லாம் கலர் கலர் டிபன் பாக்ஸ்ல இட்லி,தோசை, தக்காளி சாதம்னு சாப்பிடும் போது, வாசுகியும், அவள் அண்ணன் சம்பந்தமும் ஆளுக்கொரு தட்டுடன் மிட்-டே மீல்ஸ் சாப்புடுவாங்க. சில சமயம் அங்க வர சூடான சாம்பார் வாசனை தூக்கலா இருக்கும்.
இது ஏதாவது ஏழ்மையின் அவலம் அல்லது வாசுகிக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று பயத்துடன் விலக நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தைரியமா மேலே படியுங்கள்.
நான் அப்பவே எங்க பள்ளியின் கிரிக்கெட் அணியில் இருந்தேன். எப்பவாவது பதினொன்றுக்குள் எடுப்பார்கள். ஆனால், ஜூனியர் அணியின் உப தலைவன் நான். அதனால எங்க வகுப்புக்குள் கொஞ்சம் மிதப்பா தான் இருப்பேன். அப்பா டெஸ்ட் மேட்ச் கனவுகளுடன் வாங்கித் தந்த கான்வாஸ் ஷூ போட்டுக்கொண்டு மைதானத்தை வலம் வந்து நண்பர்கள் முன் பிலிம் காட்டுவது என் வாடிக்கை.
ஒரு நாள் அப்படி தனியே ஓடிக்கொண்டிருந்தேன். மாலை சுமார் 5.30 மணி. திடீர்னு என்னைத் தாண்டி ஒரு உருவம் ஓடியது. யார்ரா அதுன்னு கொஞ்சம் வேகம் எடுத்துப் பார்த்தால் ...வாசுகி. நான் அவளைப் பிடிக்கப் போக (அட, டச்சிங் எல்லாம் கிடையாது), அவள் இன்னும் கொஞ்சம் வேகம் எடுத்தாள்.
இது எனக்குள் எதையோ உசுப்பி விட்டது. அவளைக் கூப்பிட்டு நிறுத்தினேன்.
"ஏய், இங்க வா"
"நீ தான் இங்க வாயேன்"
அப்போதே பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது. அவள் அருகில் சென்றேன்.
"எதுக்கு கூப்பிட்ட" என்றாள்.
"நீ எதுக்கு ஓடுற? அதுவும் பாய்ஸ் கிரவுண்டுல உனக்கு என்ன வேல"
"அடுத்த வாரம் ஸ்போர்ட்ஸ் டே இருக்குல்ல?"
"ஆமாம், அதுக்கென்ன - உனக்கு என்ன அதுல?"
"நான் அத்லெட் - நூறு, இருநூறு மீட்டர் ரேசுல ஓடுகிறேன்"
"என்னது? நீயா? சரி சரி 'ஓடுறேன்'ன்னு வேணா சொல்லு. 'அத்லெட்' எல்லாம் பெரிய வார்த்தை" என்றேன் நக்கலாக.
"என்கூட ரேஸ் வரியா" என்றாள்.
"அடச் சீ! போயும் போயும் உன்கூடவா?"
"தோத்துடுவோம்னு பயமாடா?"
"வாடி பாத்துடுவோம்"
மைதானத்தில் அப்போதே நூறு, இருநூறு மற்றும் நானூறு மீட்டர்களுக்கான அடையாளங்கள் இருந்தன.
"சொல்லுடா, நூறா, இருநூறா?"
மீண்டும் என் தன்மானம் தூண்டப்பட்டது.
"இருநூறு மீட்டர்"
என் தோள் அளவு உயரமே இருந்தவளை கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று நன்றாக மூச்சு இழுத்து விட்டுக்கொண்டேன். அவள் எப்போதும் நாற்பது மதிப்பெண் வாங்கப்போகும் கணிதத் தேர்வில் வைத்துக் கொள்ளும் அதே முகபாவத்துடன் அமைதியாக இருந்தாள்.
அவளே தான் சொன்னாள் - ஒன், டூ, த்ரீ.
சடுதியில் ஓடினேன். சுமார் ஐம்பது மீட்டர்களில் முன்னணியில் இருந்தேன். நூறிலும் நான்தான். நூறு தாண்டியதும் வளைவு வந்தது. அனாயாசமாக என்னை முந்தினாள். நான் வேகம் எடுத்தேன். அவளும். ஏய், என்ன இது. பதறி ஓட ஆரம்பித்தேன். அவள் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. இன்னும் இன்னும் வேகமெடுத்தாள். அவள் இருநூறைத் தொட்டபோது நான் சுமார் 180 மீட்டர்கள்தான் முடித்திருந்தேன்.
கடைசி இருபது மீட்டர்கள் ஓடப் பிடிக்காமல் நடந்து வந்தேன். அந்த முன்பற்களுடன் அவள் சிரித்து 'பரவாயில்ல, நா நினைச்சத விட வேகமாத்தான் ஓடுற" என்றாள்.
"என்ன, நக்கலா? இப்ப வரியா?"
"நா ரெடி" என்றவளிடம் இந்த முறை நூறு மீட்டர் என்றேன் எச்சரிக்கையாக.
இந்த முறை நான் 'ஒன் டூ த்ரீ' சொன்னேன் (லக்கு மாறுதானு பார்க்கலாம்)
அடிப்பாவி.. ஐம்பது மீட்டருக்குள் அவள் எனக்கு ஐந்து-ஆறு மீட்டர்கள் முன்னால பறந்து கொண்டிருந்தாள். அவளைக் கடந்ததைக் கவனித்தேன். அவள் எப்போ கீழே மடங்கி உட்கார்ந்தாள் என்று கவனிக்கவில்லை. சம்பிராதயமாக நூறு மீட்டர் கல்லை வெற்றிப் பெருமிதத்துடன் தொட்டு விட்டுப் பார்த்தால், அவள் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். இருட்டி விட்டிருந்தது. கையை நீட்டினேன். பிடித்து மெல்ல எழுந்து கொண்டாள்.
அவள் வீடு அருகில்தான். மெல்ல நடந்து போய்விடுவாள் என்பதால், நான் சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வேதரத்தினம் அவளுக்கு காச்சல் என்றாள்.
ஒரு வாரம் கழத்து வாசுகி, தாவணி உடையில் அடக்கமாக வந்து உட்கார்ந்தாள். அடக்கம் எல்லாம் ஒரு வாரந்தான். அப்புறம் அதே சவுடால். அதே சிரிப்பு. நான் அவளிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்றதை யாரிடமும் சொல்லாமலிருக்க அவளுக்கு அவ்வப்போது லஞ்சம் அழுதேன். பென்சில், காம்பஸ் பெட்டி, கடல உருண்டை என்று.
பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து, பெங்களூரில் வேலை கிடைத்து, வார இறுதிகளில் வெறியாகக் கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்தது. HMT கிரவுண்டில் மேட்ச். நான் ஒன் டவுன் செல்வேன். முதல் விக்கெட் விழுந்ததும் படு ஸ்டைலாக சென்று, இரண்டு ஓவர் விளையாடினேன். ஒரு ஷார்ப் சிங்கிள் எடுக்கையில், படுபாவி பீல்டர் டைரக்ட் ஹிட் அடிக்க, ஆட்டமிழந்தேன்.
அடுத்த ஆட்டக்காரர்கள் மட்டைப் பயிற்சி எடுத்துக்கொண்டு மெல்லத் தட்டிக் கொண்டிருந்தார்கள். அருகில் சிறிது தண்ணீர் தேங்கி இருந்தது. ஒருவன் சற்று வேகமாக அடித்துவிட, 'போச்சு, பந்து தண்ணீரில் நனையப் போகிறது' என்று நொந்து போகையில், ஒரு சூடிதார் பெண், கடைசி நிமிடத்தில் குனிந்து அந்தப் பந்தைத் தடுத்து, அனாயசமாகப் பந்தை எங்களிடம் வீசி எறிந்தாள். சரி நன்றி சொல்லலாம்னு அருகில் சென்றால், தெரிந்த முகம்.
"நீ வாசுகி தானே"
"ஞாபகம் இருக்கா? மறந்துட்டியோன்னு நினெச்சேன்"
"நீ எங்க இங்க?"
பக்கத்திலிருந்த இளைஞனைக் கூப்பிட்டு "ஜான், இவன் என்கூடப் படிச்சவன்; இது என் ஹஸ்பண்டு ஜான்; இந்த கிரவுண்டு மெயின்டெயின் பண்ணுறது இவர்தான்" என்று அறிமுகப்படுத்தினாள்.
"என்ன முன்னாடியே பாத்திட்டியா?"
“ம்ம், பார்த்தேன்.”
“எப்போ?”
“நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், அதே வசீகரமான முன்பல் சிரிப்புடன்.
Tuesday, July 28, 2009
வாசுகி
Thursday, July 23, 2009
பொதுவான போது
'போது' என்பதை 'பொது'
என்று அடித்து விட்டான்
சிக்கனச் சிங்காரமென்பதால்
புதிதாக ஒரு 'போ' மட்டும்
தயாரித்துக் கொண்டான்
இப்போது இந்த 'போ'வை
'பொ' வுக்கும் 'து' வுக்கும்
இடையில் நுழைத்தால்
அது குடும்பத்தில்
குழப்பமுண்டாக்கி
விவாக ரத்தில் முடியுமென்றான்
தயாராக இருக்கும் 'போ' வை
ஏற்கெனவே இருக்கும்
'பொது' வுக்கு முன்னால்
வைத்து, மெல்ல
நடுவில் உள்ள 'பொ' வை
ஒரு விபத்தில்
அழித்து விடலாம்
இறுதியாகக் கிடைக்கும்
'போது' ஒரு
விதவை விவாகத்தில்
பிறந்தது என்றும்
சொல்லிக்கொள்ளலாம் என்றான்
கம்பிகளுக்கு அப்பால்
Sunday, July 19, 2009
சுவாரஸ்யமான பதிவர்கள்
செந்தழல் ரவி துவங்கி வைத்திருக்கும் 'சுவாரஸ்யமான பதிவர்கள்' தொடர்களில் எனக்கு விருது ஆச்சரியமாக சீக்கிரமே கிடைத்து விட்டது - நண்பர் செய்யது மூலம்.
செய்யது விருது கொடுத்த பதிவர்கள் பாலா (Beemorgan), ஆடுமாடு, லேகா, அகநாழிகை, தாமிரா மற்றும் நான். இவர்களுடன் சேர்ந்து கொண்டதில் எனக்குப் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி.
இப்போது நானும் எனக்கு சுவாரஸ்யமான வலைப்பதிவர்களை அடையாளம் காட்டி விருது கொடுக்க வேண்டும். நாம் சுவாரஸ்யம் என்று சொல்லும்போது, மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் readability என்பது முன்னே நிற்கிறது.
என்னுடை விருது பட்டியல் இதோ:
1. இரா.வசந்தகுமார்: மிக மிக சுவாரஸ்ய எழுத்துகள் இவருடையவை. நிறைய விஷயங்கள் எழுதுகிறார். என்னைப் போலவே சுஜாதாவின் மிகப் பெரும் விசிறி. சுஜாதாவின் சாயல்கள் இவர் எழுத்துகளில் தெரியும். மரபுக் கவிதைகளில் அதிக நாட்டம் உள்ளவர். நவீன கவிதைகளையும் ரசிப்பவர். சுஜாதா சாயல் சற்றுமில்லாத, இலேசான வண்ண நிலவன் வாசனையுடன் இவர் எழுதிய 'ஆகாயக் கொன்றை' குறுநாவலில் வர்ணனைகள் அழகு. முக்கியமான விஷயம், இவர் சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்.
சிறுகதை, குறுநாவல், நாடகம், அறிவியல் புனைவு, பயணக் கட்டுரை, உலகத் திரைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் என்று ஒரு ஆதர்ச பதிவருக்குண்டான எல்லா அம்சங்களும் இவருக்கு உள்ளது. ஹிட்ஸ், பின்தொடர்பவர்கள், பின்னூட்டங்கள் என்ற இன்றைய அளவுகோல்களில் இவர் அவ்வளவு பிரபலமாகாதது எனக்கு சற்று ஆச்சரியமும் வருத்தமும்.
2. ஸ்ரீதர் நாராயணன்: இவர் எல்லோருக்கும் தெரிந்த பதிவர். அவரே சொல்லிக்கொள்வது போல் ஒரு Techno Geek. வசந்த் போலவே எல்லாவற்றைப் பற்றியும் எழுதும் திறமை இவருக்கு இருக்கு. மிக சுவாரஸ்யமான நடை. இவரும் சில சமயம் வாத்தியாரை நினைவு படுத்துவார்.
திரைப்படங்கள், சிறுகதைகள், அறிவியல் புனைவு, குறும்படக் கதை, பொருளாதாரம், ஸ்டீபன் ஹாகிங் முதல் கவுண்டமணி வரை என்று அனைத்தையும் பார்க்கும் திறன் அனாயாசமாக வருகிறது இவருக்கு. கவிதை என்றால் மட்டும் ஏனோ ஈனோ சாப்பிட வேண்டும் என்பார். இருக்கட்டும். எங்க ஓடப் போகிறார்! இவரும் வசந்த் போலவே அறிவியல் புனைவுப் போட்டியில் பரிசு வென்றவர்.
Another must read blogger
3. ஹரன் பிரசன்னா: கவிஞர்/ எழுத்தாளர்/ சீனியர் பதிவர். நான் பதிவு எழுத வந்த புதிதில் ஹரன், அய்யனார், ஜ்யோவ், வா.மணிகண்டன் இவர்கள் தளங்களைப் படிப்பது எனக்கு தினப் பழக்கம். ஹரனின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். இலகுவில் பிடிபடாது. அதுதான் அவற்றின் வசீகரம். இவரின் ஹைக்கூ அல்லது குறுங்கவிதைகளும் அழகாக இருக்கும். என்னால் எப்போதும் மறக்க முடியாத சில:
தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்
பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்
மேலோட்டமாகப் பார்த்தால் Robert Frost இன் The Road Less Travelled கவிதையை நினைவு படுத்தும் ஒரு அருமையான, வசீகரமான கவிதை 'மாயக்கண்ணாடி'. என்னுடைய பார்வையில் இந்தக் கவிதை முற்றிலும் வேறு தளத்திலும், வேறு விஷயங்களையும் சொல்வது போலத் தெரிகிறது.
லாயத்திலிருந்த சிவப்புக் குதிரை
என்னை வலப்பக்கம் செல்லச் சொன்னது
அங்கிருந்த ஆற்றில் கண்விழித்து நின்றபோது
குளித்துக்கொண்டிருந்த மீனொன்று
நீரில் மூழ்கச் சொன்னது
பாதாள உலகத்தில் படுத்துக்கிடந்த பாம்பு
மாயக் கதவொன்றைத் திறக்க
இரட்டைச் சாலைகள் விரிந்தன
சுமைதாங்கிக் கல்லில்
காத்துக்கொண்டிருந்த
அதி யௌவனப் பெண்ணொருத்தி
என் ரேகையைப் பார்த்து
தென்மேற்குத் திசை போகச் சொன்னாள்
அங்கே நான் தெய்வமென்றறியும்
சிலை ஒன்று காத்துக் கிடப்பதாக
வழியெங்கும் நமத்துக் கிடந்த கோரைப் புற்கள்
என் வழி தவறென்றன
மாயக் கண்ணாடியைக் கோபம் கொண்டு உடைத்தேன்
சிதறி விழுந்த கண்ணாடிகள்
ஆளுக்கொரு திசை சொல்லி நின்றன.
இதே போல, நிறைய சிறுகதைகளும் (அறிவியல் புனைவு உட்பட) எழுதியிருக்கிறார். 'வசியம்' எனக்குப் பிடித்த கதை.
நான் எல்லாம் கூப்பிட்டால் எழுதுவாரா என்று தெரியவில்லை. அவருக்குச் சுவாரஸ்யமான எழுத்துக்கள் யாருடையவை என்று அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற அளவில் இது ஒரு request.
4. பா.ராஜாராம்: ஜ்யோவ் மீள் கண்டெடுத்த முத்து இது. இவர் கவிதைகள் காயம் பட்டிருக்கும் மனங்களை மெல்ல வருடிக் கொடுக்கும். சில சமயம் ஆறி விட்டது என்று எண்ணும் வடுக்களைச் செல்லமாகக் கீறிப் பார்க்கும். இவர் தளம் கவிதை ரசிக்கும் எங்கள் பட்டாளத்திற்கு ஒரு புதையல். இந்த பதிவு எழுத விவரங்கள் தேட இங்கு வந்தால், ஒரு அருமையான சிறுகதை இருக்கு. மனச உலுக்கும் கதை. வண்ண நிலவனின் உடனடி சிநேகபூர்வம் இவரிடம் இருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய வலைத்தளம் இவருடையது.
5. ரௌத்ரன்: பெயர் தான் அப்படியே தவிர, தங்கமான மனுஷன். உனக்கெப்பிடி தெரியும்னு கேட்காதீர்கள். இப்ப, என்னைப் பார்க்காமலே 'இவரு ரொம்ப நல்லவரு'னு நீங்கள் எல்லோரும் எண்ணவில்லையா? அது போலத் தான்.
அடிப்படையில் கவிஞர். நிறைய பிரமாதமான கவிதைகள். என்ன! மிகக் குறைவாகவே எழுதுகிறார். தன் வலைப்பூவிற்கே ஒரு visiting professor போல வருகை தருகிறார். திரைப்படங்கள், சிறுகதைகள் என்று மற்ற தளங்களிலும் இவருக்கு ஈடுபாடு இருக்கிறது. சென்னையில் இருக்கிறார் என்று எண்ணினேன். இப்போது பார்த்தால் ஜெட்டா. ராஜாராம் சார், கொஞ்சம் நம்ம பையனைக் கவனிங்க. அய்யனாரின் பெரிய விசிறி வேறு.
"எனினும் புலரும் பொழுது" என்னும் இவரின் கவிதை இங்கே:
நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...
பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...
கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...
இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...
ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...
யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...
இனிமேல் இவ்வளவு நீண்ட இடைவெளி இல்லாமல் எழுதுங்கள் ரௌத்ரன்.
6. மணிகண்டன்: இவர் கவிஞர் வா.மணிகண்டன் இல்லை. அவருக்கு சென்ஷி விருது கொடுத்து விட்டார். இவர் பதிவர்கள் எல்லோருக்கும் வா! மணிகண்டன். மோதலில் தான் காதல் துவங்கும் என்பதுபோல், இவருடன் சர்ச்சை, வாதம் செய்யாதவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். ஜ்யோவ், புருனோ, அனுஜன்யா (நான்தான்), செந்தழல், நர்சிம் இன்னும் எவ்வளவு பேரோ. மனதில் பட்டதைச் சொல்லிவிடும் நேர்மையான மனிதர். சரி இப்ப இவர் பதிவுகள் பற்றி.
மென்பொருள் துறை என்று நினைக்கிறேன். வெளிநாட்டுப் பயணங்கள் நிறைய போகிறார். பயண, வெளிநாட்டு அனுபவங்களை அழகாக எழுதுகிறார். இவருடைய ரெகுலர் பதிவு 'கிச்சடி'. இப்போதைய டிரென்ட் படி எல்லாவற்றையும் எழுதுகிறார். திரைப்படம், அரசியல், சிகப்பு விளக்குப் பெண்கள் (ஆம்), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், துறை சார்ந்தவை என்று எல்லாவற்றிலும் தன் கருத்துகளை அலங்கார வார்த்தைகள் இன்றி வைக்கிறார். விளையாட்டில் (என்னைப் போலவே) ஆர்வம் மிக்கவர்.
இவரிடம் மிகப் பிடித்தது இவர் பதிவுகள் படிக்கும் போது, இலக்கியப் பாசாங்குகள் இல்லாமல், ஒரு நண்பனுடன் பேசிய உணர்வைத் தரும். என்னுடைய குறை எல்லாம், இவர் இன்னும் கொஞ்சம் சீரியஸாக எழுதலாம்.
You may or may not like Mani. But you cant ignore him
மீண்டும் ஒருமுறை விருது கொடுத்த செய்யதுக்கும், காரணகர்த்தா ரவிக்கும் என் நன்றி மற்றும் வேறென்ன அன்புதான் :) இத்துடன் இந்த இனிய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
ஒரு பெரிய 'பின் குறிப்பு':
தற்போதைய 'குழும மனப்பான்மை', 'பிரபலம்', 'முதுகு சொரிதல்' போன்ற சர்ச்சைகள், மனம் குமையும் அனானிகளின் வெறுப்பு இவற்றால், ஏற்கெனவே தொடை நடுங்கியான நான், இவர்களுக்கு விருது கொடுக்கும் எண்ணத்தை அறவே ஒழித்து விட்டேன். இருந்தாலும், மனசாட்சியின் படி, இவர்கள் பதிவுகளை, அவற்றின் சுவாரஸ்யத்திற்காக நான் எப்போதும் படிப்பதை ஒப்புக்கொள்வதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
லக்கி, நர்சிம், பரிசல், ஆதி, கார்க்கி, அதிஷா, குசும்பன், கேபிள் சங்கர், முரளிகண்ணன், வால்பையன் , வடகரை வேலன், செல்வேந்திரன் போன்ற நிறைய வாசகர்கள் உள்ள பதிவர்கள். வெண்பூ, மஹேஷ், அப்துல்லா, ராமலக்ஷ்மி, ஸ்ரீமதி போன்ற நண்பர்கள்.
இவர்களைத் தவிர்த்து, எனக்கு மிகுந்த வாசிப்பின்பம் தரும் மற்ற பதிவர்களில் உடன் நினைவுக்கு வருபவர்களில் சிலர்:
அய்யனார், ஜ்யோவ்ராம், பெருந்தேவி, அழகியசிங்கர், பைத்தியக்காரன், வா.மணிகண்டன், கென், மாதவராஜ், காமராஜ், முகுந்த் நாகராஜன், தமிழ்நதி, லேகா, R V சந்திரசேகர், கிருத்திகா, சரவணகுமார், காந்தி, முத்துவேல், லாவண்யா, மண்குதிரை, யாத்ரா, நந்தா, அகநாழிகை, மதன், சேரல், பிராவின்ஸ்கா, நேசமித்ரன், முத்துராமலிங்கம், விநாயக முருகன், நரன் என்று நீண்டு கொண்டே போகிறது.
விடுபட்ட பெயர்களுக்குச் சொந்தக்காரர்களின் கவனத்திற்கு: உங்களை கிட்டத்தட்ட சுஜாதா, எஸ்ரா, ஜெமோ, சாரு போன்ற உயர்ந்த எழுத்தாளர்களின் இடத்தில் நான் வைத்திருப்பதாக பாவித்துக்கொண்டு, மன்னித்து விடுங்கள்.
Saturday, July 11, 2009
நிற வெறி, M.J. மற்றும் புதிய பாலம் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (13th July '09)
மும்பையில் பல வருடங்கள் கட்டப்பட்டு, வெகுநாட்களாக காத்திருந்த பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு (Bandra-Worli Sea Link - BWSL) ஒரு வழியாக கடந்த மாதம் முப்பதாம் திகதி அன்னை சோனியாவால் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. பாலத்திற்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்கும்படி சரத் பவார் கடைசி நிமிடத்தில் கேட்டுக்கொள்ள, அவ்வாறே நாமகரணம் நடந்தேறியது. அவர் பாவம், தேர்தல் சரிவைச் சரிக்கட்ட காங்கிரசுடன் புதுப்பாலம் கட்டுவதை புரிந்து கொள்ளாத சிவசேனை புலிகள் மண்ணின் மைந்தன் பெயர்தான் வைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தபடியே எதிர்த்தார்கள். சிவசேனையினர் எப்போதும்போல 'சிவாஜி' பெயர் வைக்கக் கோருவார்கள் என்று நினைத்தேன். ஒரு மாறுதலுக்கு 'வீர் சாவர்கர்' பெயர்தான் வேண்டும் என்றார்கள். ஆனால், இந்த விடயத்தில் தமிழ் நாட்டில் கழகங்கள் போலவே, முழு இந்தியாவிலும் காங்கிரஸ்காரர்களை மிஞ்ச முடியாது. ராஜீவ் மும்பையில் பிறந்தவர். அதனால் அவரும் 'மண்ணின் மைந்தர்' என்று ஒரு தடாலடி கொடுத்தனர். வேண்டுமென்றால், காங்கிரஸின் முதல் தலைவியான அன்னி பெசன்டின் அத்தை பெண் மும்பையில் வேலை செய்தார் என்று கண்டுபிடித்து, அவர் பெயரை வைக்கும் சாமர்த்தியமும் அவர்களுக்கு உண்டு. இவ்வளவு பேசிவிட்டு, 'நமக்கு எதுக்கு சார் அரசியல்' என்று ஒதுங்கும் சாமார்த்தியம் நமக்கும் உண்டு என்பதால் இப்போதைக்கு இதிலிருந்து விலகுவோம்.
இப்போது பாலத்தின் பெருமைகளைப் பற்றி:
மொத்த நீளம் - 5.6 கி.மீ. (கடல் மேல் மட்டும் பார்த்தால் 4.8 கி.மீ.)
Cable Stayed Bridge எனப்படும் தூண்களிலிருந்து கம்பிகள் தாங்கிப் பிடிக்கும் பாலம் இந்தியாவில் முதல் முறை.
செலவு - 1650 கோடி ரூபாய்கள்.
தினமும் பிரயாண நேரம் அரை மணி நேரம் குறையும்; மற்றும் வருடத்துக்கு சுமார் நூறு கோடி ரூபாய் எரிபொருள் சேமிப்பிலும் கிடைக்கும்.
First day First show ரசிகனின் அதே கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் நானும் சென்றேன். அநியாய நெரிசல். முதல் ஐந்து நாட்களுக்கு இலவச சவாரி. இந்தத் தடத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத, நவி மும்பை, தாணே, மாடுங்கா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான மக்கள், தத்தம் வாகனங்களில் குடும்பத்துடன் வந்துவிட்டதால், வரலாறு காணாத கூட்டம். வெறும் எட்டு நிமிடங்களில் ஆக வேண்டிய பயணம், எண்பது நிமிடங்கள் (நிஜமாவே) ஆனது.
பயணக்கட்டணம் ஐம்பது ரூபாய் ஒரு முறைக்கு. சீசன் டிக்கெட் ஒரு மாதத்திற்கு 2500 ரூபாய். Smart card (சாதூர்ய அட்டை?) 2250 ரூபாய் - ஐம்பது சவாரிகளுக்கு. இப்போது கூட்டம் இல்லாமல், I-Pod இல் ஒரு பாட்டு முடிவதற்குள் பயணம் முடிந்து விடுகிறது.
பொது சேவையான BEST பேருந்துகளுக்கும் சலுகை இல்லாத கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிகள் இருப்பதால், BEST நிறுவனம் தற்போதைக்கு இந்த 'புதுப் பெண்டாட்டி' பக்கம் போகாமலிருப்பதில் மத்திய தர, பேருந்து பயணிகளுக்கு நிரம்பவே வருத்தம். நியாயமான கோவமும்கூட. வெறும் பணக்காரர்களுக்காக ஒரு பாலமா என்று கேள்வி கேட்கத் துவங்கி இருக்கிறார்கள். ஆபிஸ் தயவில் தினமும் இதில் செல்லும் பாக்கியம் உள்ள எனக்கும் கொஞ்சம் பணக்காரத் தோரணை வந்துவிட்டது, என் மனைவியின் எள்ளல் சிரிப்புக்கு நடுவிலும்.
**************** *************** *************
மைக்கேல் ஜாக்சன் மரணம் உண்மையில் எதிர்பாராத, சோக நிகழ்வு. Immensely gifted and a very intriguing personality. அதி-திறமை உள்ள மேதைகள் மற்ற விடயங்களில் கிட்டத்தட்ட பிறழ்வு நிலையைத் தொடுகின்றனர். அவருக்கு தன் இசையைக் காட்டிலும், தன் நடனத்தை விடவும், தன் தோற்றத்தில் ஒரு மாபெரும் ஈடுபாடு. தன் உடலை அந்த அளவுக்குச் சிதிலப்படுத்திக்கொண்டார். புகழ், பணம் இவற்றைச் சரிவரக் கையாள முடியாத பல பிரபலங்களில் இவரும் பிரதானம்.
உடனே நினைவுக்கு வரும் மற்றொருவர் மைக் டைசன். அண்மைக் காலங்களில் சம்பாதித்ததைக் கோட்டைவிட்ட பிரபலங்களில் டென்னிஸ் வீரர்கள் போர்க் மற்றும் பெக்கெர் இருக்கிறார்கள்.
Back to MJ. எத்தனைப் பாடல்கள்! எத்தனை ஆல்பங்கள்! Toe-tapping என்று சொல்லப்படும், நமக்கும் ஆடியே தீரவேண்டும் என்று தோன்றும் தாளகதியில் அமைந்த பாடல்கள். Beat it, Its Black-Its White போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள்; Thriller, Dangerous போன்ற வரலாற்றுச் சாதனை படைத்த ஆல்பங்கள். Moon Walk போன்ற அபார புதிய கற்பனைகள். எல்விஸ், பீட்டில்ஸ் போலவே எம்ஜெவும் ஒரு சகாப்தம். Long Live MJ.
MJ பற்றி ஒரு அருமையான பதிவு கார்க்கி எழுதி இருக்கிறார். Dont miss it.
**************** *************** *************
என் நண்பர்களுடனான குழும மின்னஞ்சலில் ரங்ஸ் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் ரங்கராஜன் என்ற நண்பர் அனுப்பிய ஆங்கில மின்னஞ்சலின் சாராம்சம்:
தென் ஆப்பிரிக்காவிலிருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்றில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு அடுத்த இருக்கையில் ஒரு கருப்பு நிறத்தவர் அமர்ந்திருந்தார். அதில் கோபமும், அருவருப்பும் அடைந்த அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணிடம் முறையிட்டார். அந்தப் பணிப்பெண்ணும் உள்ளே சென்று, தலைமை விமானியிடம் உரையாடிவிட்டு, மீண்டும் இந்த இருவர் அருகில் வந்து "வேறு இருக்கை எகானமி வகுப்பில் இல்லை. பிசினஸ் வகுப்பிலும் இல்லை; பொதுவாக நாங்கள் எகானமி வகுப்பில் உள்ளவர்களை 'முதல் வகுப்பில்' அமர்த்துவதில்லை. ஆனால் தற்போது விதிகளைத் தளர்த்தி உங்களை அங்கு அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று .....அந்த கருப்பு நிறத்தவரைக் கேட்டுக் கொண்டனர். இது ஒரு உண்மைச் சம்பவம் என்றும் அந்த மின்னஞ்சல் சொல்லியது. அந்த வெள்ளை நிறப் பெண் அன்று முதலாவது மனம் மாறியிருக்க வேண்டும்.
ஜெமோவின் தளத்தில் 'நிறம், இனம், கடிதங்கள்' என்ற தலைப்பில் இருந்த இடுகையில் ஜெமோ இவ்வாறு குறிப்பிடுகிறார்:
பேதங்களை உருவாக்க நிறமும் இனமும் எளிமையான வழிகள். ஏனென்றால் அடையாளம் வெளிப்படையாக திட்டவட்டமாக இருக்கிறது. அதற்குமேல் நிறம் ஒரு பிரச்சினையே அல்ல. தங்கள் மனவிரிவின் மூலம், நாகரீகம் மூலம், பேதங்களை உருவாக்கும் அடிப்படைவாத மனநிலையை மனிதர்கள் தாண்டமுடியும் என்றால் நிறம் அவர்களை ஒருபோதும் பிரிக்கமுடியாது.
**************** *************** *************
இந்த முறை சேரல் என்னும் நல்ல கவிஞனின் சில கவிதைகள்.
நினைவோடு அலை
அலையாடிய குழந்தைகளை
கரையில்
மணல்வீடு கட்ட அனுப்பிவிட்டு
கை கோர்த்துக்
கடலாடுகின்றனர் இரு தாய்மார்
அவர்கள்
முகத்தலடித்துத் தெறித்து
வழிந்தோடுகிறது,
அவர்களின்
பிள்ளைப்பிராயத்து
அலையொன்று
தவம்
முன்னொருநாள்
பௌத்த பிட்சுகள்
தவமிருந்த நதிக்கரையில்
தவமிருந்தேன்
தூரத்தில்
ஒற்றைக்காலில்
நிலை கொண்டிருந்தது
நெடுங்காலமாய்
இந்த நதியையே
நனைத்துக் கொண்டிருக்கும்
கொக்குகளின் வழி வந்த
ஒரு கொக்கு
பிட்சுகள் பார்த்த கொக்குகளை
நான் பார்க்கவில்லை
எத்தனையோ கொக்குகள்
பார்த்த தவத்தை
இந்தக் கொக்கு
பார்க்கவில்லை
சில குறுங்கவிதைகள்
மேய்ச்சல் முடிந்து திரும்பும்
ஆடுகள் - கடைவாய் உமிழ்நீரில்
பசுங்காடு
சுத்தம் செய்பவன்
எல்லாக் கறைகளையும்
கழுவித் துடைக்கிறது
தண்ணீர்
தண்ணீர்
செய்யும் கறையை
எது கொண்டு
கழுவுவேன்?
தன்னிரக்கம்
வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்
மேலே உள்ள 'தன்னிரக்கம்' என்ற கவிதையின் வீச்சு எனக்குக் கொஞ்சம் ஆத்மநாமை நினைவு படுத்தியது. உடன் ஞாபகத்தில் வந்த ஆத்மநாம் கவிதை இது:
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்
இருபத்தைந்தே வயதாகும் இந்த இளைஞரிடம் நிறைய எதிர்பார்க்கலாம்.
Wednesday, July 8, 2009
இரு அழகிகள்
இரண்டு அழகிகள்
உயரமான சின்னவள்
சுட்டித் தனமாக என்மீது
சிறு கொம்பை வீசியபோதுதான்
அவர்களைப் பார்த்தேன்
பெரியவளின் அமைதி
பேரழகாக இருக்கும்
சில நாட்கள் கைகளை
ஆட்டி ஆட்டி பேசுவாள்
பல நாட்கள் ஒன்றும் பேசாது
ஓவிய மௌனம் காப்பாள்
சிறுகச் சிறுக எங்களுக்குப்
பரிமாற நிறைய விஷயங்கள்
ஊரை, உலகைச் சுற்றும் நான்
தினமும் அவளுக்குச்
செய்தி சொல்லுவேன்
எப்போதும் நிற்குமவள்
இருபது நான்கு
மணிகளில் நடந்ததை
என்னிடம் சொல்லிடுவாள்
சிலவற்றை நான்
திரித்துச் சொல்லுகையில்
இலேசாகத் தலையாட்டி
சில வார்த்தைகளை உதிர்ப்பாள்
பிறகு தெரிந்தது
பூமிக்குக் கீழிருந்தும்
வானத்தின் உயரத்திலிருந்தும்
அலை வரிசைகளிலிருந்தும்
அவளுக்குச் செய்திகள்
வந்தவண்ணம் இருப்பதென்று
மரங்களோடு பேசுகிறதாகவும்
மனப் பிறழ்வு வந்ததென்றும்
அம்மா கூறுவது கேட்கிறது
இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்
(உயிரோசை 20.04.09 மின்னிதழில் பிரசுரமானது)