என்னடா, சுரேஷ் கண்ணன் தளத்திற்கு வந்துட்டோமா என்று
பயந்து ஓடி விடாதீர்கள். நானே ரொம்ப நாள்கள் கழித்து எழுத
வந்திருக்கேன். உயிர்மைத் தனமாகத் தலைப்பு வைத்தால்
என்னையும் சேர்த்து பத்து பேராவது
வருவார்கள் என்ற
நப்பாசை தான் ப்ரோ.
மும்பையில் உத்தம வில்லன் படம் வெளிவரவில்லை; புரிந்து
கொள்ள வேண்டியதே; மாஸ் படம் வந்து பார்த்தவர்கள்
வெளியே வருகையில் வசையுடன் கழிவறையில் துப்பிக்
கொண்டிருந்தார்கள் என்று அறிந்தேன்.
லிங்கா சமயத்தில்
வாந்தியே எடுத்ததை நேரில் கண்டேன். இந்த பின்புலத்தில்
புறாக்கள் நிறைந்த மும்பையில் காக்கா எப்படி முட்டை
போடும் என்று எண்ணியிருந்தேன். புக் மை ஷோ என்னும்
App ஐ அழுத்தி அண்டாகாகசம் சொன்னதில் அலிபாபா குகை
திறந்து 'எப்ப பார்க்கணும் காக்கா முட்டையை?" என்று
கேட்டது.
புதன் மாலைக் காட்சிக்கு ஓரளவு கூட்டம் இருந்தது.
கிளம்பும்
சமயத்தில் எங்கிருந்து தான் பாஸ் முதல்
பாஸ்கரன்
வரை மூக்கில் வியர்க்குமோ! அவ்வளவு வேலை! யாரு கிட்ட!
அதோ பாரு காக்கா என்று கையை
காட்டி அவர்கள்
திரும்புகையில் நான் அலுவலகத்தை விட்டு
தப்பித்திருந்தேன்.
இன்ஆர்பிட் மால் வழக்கம் போல கலகலவென்று இருந்தது. உயிர்
வாழ அவசியமான பாப் காரன், பெப்சியுடன்
தேசிய கீதத்திற்கு நின்று
பிறகு புகையிலை மது வகையறாக்களின் தீமைகளை பயத்துடன்
அமர்ந்து பார்த்து
ஒரு வழியாக படம் துவங்கியது.
நகர ஏழைச் சிறுவர்களின் கனவான பிட்சாவை அடைய அவர்கள்
முயல்வது; தடைகளை எதிர்கொள்வது என்று ஒரு வரியில்
சொல்லலாம்தான். திரைப்படம் என்பது ஒரு வரி
மட்டும் அல்லவே.
பல்வேறு காட்சிகள், காமிராகோணங்கள், நுட்பங்கள் மற்றும்
குறியீடுகள் (அதான பார்த்தேன்!) மூலம் நல்ல திரைக்கதையுடன்
அந்த ஒற்றை வரியைச் சொல்ல திறமை, கச்சிதம் இவற்றுடன்
மையக்கருத்தில் உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.
மணிகண்டனுக்கு இருக்கிறது. அதனால் வென்றிருக்கிறார்.
சேரியைப்பற்றி சில படங்கள் வந்திருந்தாலும் இது நம்
எல்லோரையும் காக்கா முட்டை என்று அறியப்படும்
சிறுவர்களுடன் அவர்கள் வீட்டில் சில தினங்கள் தங்க வைக்கிறது.
அவர்களின், பிற சேரிவாழ் மக்களின் ஏழ்மையை காட்டுகிறது.
நம்மை உறுத்துகிறதும் கூட. அதனை முகத்தில் அறையாமல்
செய்திருக்கிறார்கள்.நவீன தமிழர்கள், நேராக பிரசாரம் செய்யாமல்
நுட்பமாகச் சொல்வதை புரிந்து
கொண்டு ஆதரிக்கும் ரசனை
உள்ளவர்கள் என்பதை அறிந்து அவர்களை மதித்து எடுத்த படம் இது.
நானும் என் சகோதரனும் ஒன்றாக அலுவலகம் செல்கையில்
தாராவி வழியே தினமும் செல்வோம். நீங்கள்
நினைத்துப் பார்க்க
முடியாத வாழ்க்கை நிலையில் பல்லாயிரம் குடும்பங்கள் வாழும்
இடம். அவர்களை
நாங்கள் கடக்கையில் பெரும்பாலும் சிரித்த
முகங்கள். அல்லது சாந்தம் தவழும் முகங்கள். இவ்வளவு
துன்பங்களுக்கு இடையில் எப்படி இவர்கள் சிரிக்க முடிகிறது
என்பேன்.
தம்பி சொல்வான்
- "மகிழ்ச்சி என்பது
மனதின் நிலை என்பதை
கார்பொரேட் சாமியார் சொன்னால் ஆயிரம் ரூபாய் காணிக்கை
செலுத்தி அறிந்து
கொள்கிறோம். இவர்கள் தினமும் அதனை
அலட்டல் இல்லாமல் பின்பற்றுகிறார்கள். ஆனால் இவர்கள்
சிரிப்பதை நிறுத்தி வேறு மாதிரி சிந்தித்தால் உன் கார் சவாரிதான்
முதல் பலி" என்பான். யோசித்துப் பார்த்தால்
இந்தப் படத்தில் பல
காட்சிகளில் அந்த சிறுவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.
அந்த ஆயாவும் கூட; அம்மா முகத்தில் நிலவும் சோகம் கணவனை
மீட்பது பற்றி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்தப் பெண்
எவ்வளவு அழகு! நான் முக லட்சணங்களை மட்டும்
வைத்துச் சொல்லவில்லை. அன்பு, பாசம், கரிசனம், காதல்,கண்டிப்பு,
கறார் தன்மை, உழைப்பு என்று எல்லா உணர்சிகளும் கச்சிதமான
விகிதத்தில் வெளிப்படுத்துகிறார்.அவரின் குணாதிசியத்தை சொல்ல
வேண்டுமென்றால் Resilience என்று உடனே தோன்றுகிறது.தமிழில்....
நாணல் போல் வளைந்து கொடுத்து மீளும் தன்மை எனலாம்.
ஏழ்மை என்றாலே 24 மணி நேரமும் சோகந்தான் என்று ஒரு
தவறான சூத்திரத்தைப் பயன்படுத்தாமல்
யதார்த்தம் வென்ற கதை
இந்த காக்கா முட்டை.
நிறைய காட்சிகள் சுவாரஸ்யமும் நுட்பமும் பின்னிக்கொண்டு
செல்கின்றன. படம் பார்க்கும் ரசிகன் ஓரளவாவது
தர்க்கம்
எதிர்பார்ப்பான் என்ற மரியாதை வேண்டும். பிட்சா கடைக்குள்
நுழைவதற்கே பணமிருந்தாலும் உடையும் தோற்றமும் அவசியம்
என்பதை உணர்த்திய பின் எப்படி இந்த பசங்க சிடி சென்டர்
மாலுக்குள் சென்று வாங்கப் போகிறார்கள் என்று யோசித்துக்
கொண்டிருந்தேன். ஓரளவு நம்பகத் தன்மையுடன் அதன் தீர்வு
இருந்தது. பசங்களை விட பார்க்கும் நமக்கு எத்தனை கும்மாளம்.
சூர்யா கோடை விடுமுறையில் சென்னையில் இருக்கையில்
ஒரு நாள் இதே சிடி சென்டர் மாலில்அலைபேசியைத்
தொலைத்திருந்தான். அவனை விட சற்று பெரிய சிறுவன் சூர்யாவின்
கண்ணைப் பொத்தி அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டானாம்.
இவன் கேட்டதற்கு சும்மாதான் செஞ்சேன். போயி பிட்சா சாப்பிட்ட
உன் கையை கழுவி விட்டு வா, தரேன் என்று சொன்னதை நம்பி
இவன் செல்ல அந்தப் பையன் எஸ்கேப். பாவம், இதனை துக்கம்
விசாரித்த நூறு பேருக்கு விவரித்து சூர்யா நொந்து போயிருந்தான்.
சூர்யாவுக்கு முதலில் இந்த படம் அறவே பிடிக்கவில்லை. அவன்
இந்த அளவு ஏழ்மையை நேரில் கண்டிருக்கவில்லை. வீட்டுக்குப்
போகலாம் என்றுநச்சரிக்கத் துவங்கியிருந்தான். உள்ளூர அவனுக்கு
அந்த சிறுவர்கள் மேல் ஒரு வாஞ்சை ஏற்பட்டிருந்தது.
அவர்கள் ஏதாவது செய்து மாட்டிக்கொள்ளப் போகிறார்கள் என்ற
பயம் அவனுக்குள்அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனை
மறைக்க இரு முறை டாய்லெட் சென்று வந்தான். அவ்வப்போது
என்னிடம் "சண்டை இருக்காதே? அவங்களை போலிஸ்
புடிச்சுக்குமா?" என்றெல்லாம் கேட்க
நான் மணிகண்டன் என்ற நினைப்பில் "அதெல்லாம்
ஒண்ணுமில்ல; ஜாலியா பாரு" என்று சொல்லி அவனை
ஆசுவாசப்படுத்தினேன். சில இடங்களில் (ஆயா இறப்பது, பெரிய
கா.முட்டை அடி வாங்குவது) அழுது விட்டான்.அவர்கள் வீடு,
சேரியின் வாழ்வு
நிலை இதெல்லாம் இவனுக்கு முற்றிலும் அறியா
உலகம். எப்போது இவங்க நல்லா இருப்பாங்க என்று விசித்துக்
கொண்டே கேட்டான். நல்லா படிச்சு இவங்க நல்ல வேலை கிடைச்சு
என்று நான் சொல்கையிலே இடை மறித்து ஆதங்கத்துடன் "Where
is
the chance?
Where is the opportunity?" என்று
கேட்டவனை ஆரத்
தழுவுவதை விட எனக்கு அந்த இடத்தில் வேறு ஒன்றும் செய்யத்
தோன்றவில்லை.
திரும்ப
வருகையில் அந்தப் பையன் செல்போன் எடுத்துட்டுப்
போனது சரிதான்" என்றான். திருடுறது தப்பு
என்றதற்கு "நாம்பஅவ்வளவு புவர் இல்ல. அப்படி இருந்தா தான்
தெரியும்" என்றான். பெருமையாக இருந்தாலும் இரு
சிந்தனைகள் பயமுறுத்தின. ஒன்று இப்படி அப்பழுக்கற்ற
குழந்தைகள் பின்னாட்களில் சுயநலமிக்க மத்திய,மேல்தட்டு
வர்க்கத்தில் ஐக்கியமாகி
விடுதல் பற்றி;
மற்றொன்று இவன் இப்படியே தொடர்ந்தால் வீட்டுக்குள்ளேயே
ஒரு புரட்சியாளன் இருப்பானே என்ற பேரச்சம்.
கடவுள் இருக்கான் கொமாரு.