Tuesday, September 22, 2009
குலத்தொழில்
தள்ளாடித் துவளும்
சிறுவனின் கால்கள்
பதினாறு தெருக்களைச்
சுற்றியிருக்க வேண்டும்
கையை உயர்த்திப்
பிச்சை கேட்கும் தாயின்
இடுப்பில் சாய்ந்து,
பிச்சையிடும், மறுக்கும்,
துரத்தும், இச்சிக்கும்,
காறியுமிழும் நூறு
முகங்களைக் காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
சிறுவயதில் அல்லலுறும் இவன்
பின்னாட்களில் திருடலாம்
கொள்ளையடிக்கலாம்
பயங்கரவாதியாகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
பிச்சைக்காரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது
(கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆனது)
Wednesday, September 16, 2009
நர்சிம் ஜ்யோவ்ராம் சுந்தரைக் கேட்கும் கேள்விகள்
என்னுடைய கதை, ஜ்யோவின் விமர்சனம், அதற்குப் பின்னூட்டம் என்று எல்லாம் வந்திருக்கிறது. இப்போது நர்சிம் ஜ்யோவுக்கு பதில் சொல்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார். ஜீப்பில் ஏறிவிட்ட இன்னொரு 'ரவுடி'யின் நீண்ட பின்னூட்டத்தை புகைப்படத்துடன் இன்னொரு இடுகையாகப் போடுவது தானே நியாயம்? Here we go:
*******
சரி..விசயத்திற்கு வருவோம்..அல்லது இதைத் தனிப்பதிவாக பேஸ்ட் பண்ணி போடுங்க அனுஜன்யா...
*******
திரு சுந்தர்ஜிக்கு.
குரு வந்தனங்கள்.
ஒரு படத்தையோ அல்லது கதையையோ விமர்சனம் செய்வது என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.அதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
ஆனால்...
உங்கள் கருத்து என்று ஒன்றை முதலிலேயே முடிவு செய்து கொண்டு,படைப்பை பார்க்கும் பொழுது அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது..அல்லது ஆரம்பப் புள்ளி அதுதான்.
விமர்சகர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் விமர்சனம் செய்வார்கள் அல்லது செய்ய வேண்டும் எனபது என் கருத்து.
அடிப்படையான இரு விசயங்கள் அல்லது விடயங்கள்(இந்த விடயம்,வழமை போன்ற வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குமெனக்கு)
1.நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளி
2.வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் கடவுளைக் கூட ஒத்துக்கொள்வீர்கள்.ஆனால் சுஜாதாவை ஒத்துக்கொள்ளாத ஆசாமி.
இந்த இரண்டு பாயிண்ட்டுகளும் மிக முக்கியமானவை..இந்த விமர்சனத்தைப் பொறுத்தவரை.
ஏனெனில் உங்கள் விமர்சனத்தின் மொத்த குத்தும் இந்த இரண்டில் தான் என்பது தெளிவாக இருக்கிறது.
நீங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதனாலேயே சரிபாதி ஈஸ்வரன் மேட்டரை பெண்களுக்கு கொடுத்தால் முழுதும் பிடுங்கிவிடுவார்கள் கபர்தார் என்ற தளத்திற்கு மாற்றிவிட்டீர்கள்.தவறாகப் படுகிறது.
அகோரி இந்து மத அல்லது நான் கடவுள் படம் பார்த்தபின் ஒரு இந்து தெரிந்து கொண்ட விசயம்.அதை தன்னளவில் இங்கே மொழிப் படுத்தி இருக்கிறார் படைப்பாளி.
அதுபோலவே சுஜாதா. அவரைப் பிடிக்காமல் போக உங்களுக்கு எப்படி ஆயிரம் காரணம் இருக்கிறதோ அதைவிட பல்லாயிரம் காரணம் படைப்பாளிக்கு அவரைப் பிடிப்பதற்கும் இருக்கலாம்.
ஆதாரத் தவறு என்று முடிவு செய்து கொண்டு நீங்கள் விமர்சித்தது தெளிவாகத் தெரிகிறது.
நுண்ணியப்பார்வை எல்லாம் ஓக்கே.ஆனால் உங்களின் அடிப்படைக் கருத்துகளுக்கு அது ஒத்துப்போகவில்லை என்பதனால் “ஆபத்தானது”போன்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.
நல்ல கதை என்பதை விட சொன்ன விதமும் கையாளப்பட்ட நடையும் நிச்சயமாய் புதிதுதான்(சுஜாதாவைப் பிடிக்காததால் லேசான எரிச்சலின் ஊடே நீங்கள் படித்துக் கொண்டே வந்ததின் விளைவாகவே உங்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்).
கடவுளர் சார்ந்த கதைகளும் சுஜாதாவின் சுட்டு விரலை லேசாகப் பிடித்துக்கொண்டு நடந்ததும் மட்டுமே தவறாக தோன்றுகிறது உங்களுக்கு.
ஏனெனில்,நீங்கள் கொண்டாடும் கட்டுடைப்பு கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதையை நீங்கள் விமர்சித்த முகாந்திரம் நான் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.
அது உங்கள் கருத்து எனும் பட்சத்தில்,உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை அல்லது கரு பிடிக்கவில்லை என்ற அளவே அன்றி ஒதுக்கப்படவேண்டியது எல்லாம் கொஞ்சம் ஓவர் ஸார்.
Saturday, September 12, 2009
ஜ்யோவ்ராம் சுந்தரின் சீற்றம்: 'அனுஜன்யாவின் கதை ஒதுக்கப்படவேண்டியது'
கதை படித்தவர்கள் நேராக இதன் கீழ் இருக்கும் விமர்சனத்திற்குச் செல்லலாம். படிக்காதவர்கள், மேலே கொடுத்த சுட்டியின் ஊடே கதைக்குச் சென்று, கோபமோ, மகழ்ச்சியோ எய்தி, விமர்சனத்திற்கு வரலாம்.
ஆரோக்கியமான கருத்துக்கள் எப்போதும் போலவே நல்வரவு. தனிநபர் தாக்குதல்கள் தவிர்த்து விடலாம். முதலில் சுந்தரை அவர் வலைப்பூவில் போடுமாறு கேட்டுக்கொண்டேன் (வேற என்ன, இன்னும் நிறைய பேர் படிப்பார்களே). அவர், 'ஜ்யோவுக்கும், அனுஜன்யாவுக்கும் பலத்த (கொடுக்கல்-வாங்கல்) சண்டை' என்று தவறாகப் புரிந்துக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இருப்பதால், உங்க வலைப்பூவில் பதிவேற்றம் செய்து விடுவது நலம் என்றார். பலி கடாவைக் குளிப்பாட்டி, சாந்து, சந்தனப் பொட்டுகள் வைத்து, மாலை போட்டதோடு விடாமல், அதனிடமே "ம், கழுத்த வெட்டிக்கோ' என்கிற மாதிரி இருக்கு. ஏதோ மக்கா, பார்த்து செய்யுங்க. ஏன்னா, நான் இன்னமும் 'ரொம்ப நல்லவன்ன்ன்னு' ஊரே நம்புது :)
இனி சுந்தர்:
அனுஜன்யாவின் சிறுகதை (http://anujanya.blogspot.com/2009/06/blog-post_12.html) ஹரி, அ.ரி அ....ரி கதையை வாசித்ததும் முதலில் அதிர்ச்சியாகவே இருந்தது.
என்ன சிக்கல் கதையில்? முதலில் கதையைத் தொகுத்துக் கொள்வோம்.
கணவன் மனைவி விமானத்தில் சர்வ ஜாக்கிரதையாக சைவ உணவு கேட்டு வாங்கிச் சாப்பிடுபவர்கள். விமானம் இமயமலையில் விபத்துக்குள்ளாகிறது. இவர்களும் இன்னும் இருவரும் உயிர் பிழைக்கிறார்கள். அடுத்த நாள் ஓடி வரும் பனிப்பாறை இவர்கள் நால்வரையும் தாக்குகிறது. மற்ற இருவர் என்னவானார்கள் எனத் தெரியாத நிலையில் ஹரியால் உமாவைக் கண்டுபிடிக்க முடிகிறது. உமா இறந்திருக்கிறாள். இறந்த அவள் உதடுகளில் முத்தம் கொடுக்கிறான். பிறகு, அவளைப் புதைக்கிறான். சில மாதங்கள் கழித்து தொலைக்காட்சி சேனலில் விலாவரியாகத் தான் தப்பித்த கதையைச் சொல்கிறான். இவனது வலது கையில் இரு விரல்கள் இல்லாதிருப்பது குறித்து பிரஸ்தாபிக்கப்படுகிறது. இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் நடப்பதாகக் கதையில் வரும் வரிகள் :
இன்று என்ன?""முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்
எனச் சென்று தேவதச்சனின் கவிதையொன்றோடு கதை முடிகிறது. உரையாடல் சிறுகதைப் போட்டிக்கான கதை என்ற குறிப்பும் இருக்கிறது.
தான் புத்திசாலி என்பதை எழுத்தாளன் காட்டிக் கொண்டேயிருக்கும் கதைகள் எனக்கு உவப்பாயிருப்பதில்லை. கதையின் முதலில் வரும் சைவ உணவுப் பழக்கம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. முட்டைகூடச் சாப்பிடாதவன் பிறகு உடலையே தின்கிறான் என்பதற்காக உருவாக்கிய காண்டிராஸ்டாம்!
கதையின் தலைப்பாக ஹரி அரி அரி என வைத்திருப்பதன்மூலம் அவன் சிவனாகிவிடுவதாகக் கதையை வாசிக்கமுடியும். அரியை அகோரியாகவும் பார்க்கலாம் (நான் கடவுள்?). இந்தக் கதையில் தேவையில்லாமல் உயிர் தப்பும் இரண்டு வெளிநாட்டவர்கள் (பெயர்கள் இங்கு முக்கியமாகிறது. நம்மவர்களுக்குக் கடவுளர்களான உமா ஹரி எனப் பெயர் இருக்க அவர்களுக்கு டானி, ஜிங்!) பிறகு தேவையில்லாமலேயே காணாமல் போகிறார்கள் (மரணம்?). இந்த இடத்தில் கதையின் வருபவன் சிவனா அல்லது கதை எழுதுபவரே சிவனா எனச் சந்தேகம் வருகிறது. கடவுளாக மாறிவிட்டவனின் கையில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதில் யார் உயிருடன் இருப்பது, யார் மரணமடைய வேண்டுமென்பது முக்கியமானது இல்லையா.
சிவன் தன் இடப்பக்கத்தை உமாவுக்குக் (பார்வதி) கொடுத்திருப்பதாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. சிவனோடு தொடர்புடைய இடம் கைலாயம். இக்கதையை சிவனோடு தொடர்புடைய கைலாயத்தில் உமையைப் புசித்து உயிர் பிழைத்த ஹரி பிறகு அரியாகிறான் என்றும் வாசிக்க இயலும்.
முதலில், இறந்தவளின் உடலோடு காதலாக முத்தம் கொடுத்தவன் (அதை உடலுறவு கொண்டதாகவும் வாசிக்கலாம்), பிறகு பசிக்காக மட்டுமே அவளைப் புசித்திருக்க முடியுமே தவிர பிணங்களைத் தொடர்ந்து உண்டு வாழும் அகோரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. தனிப்பட்ட முறையில் உணவுக்காக இறந்த உடலின் பிரேதத்தைப் புசிப்பதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் அதை புராணீகக் கதைகளோடும் இந்து மதக் குறியீடாக மாற்றுவதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்.
உமாவை அவன் உண்டதால் பிழைத்திருக்கிறான். பிறகு அர்த்தநாரியாகி அவளுக்குத் தன் இடப்பாகத்தைத் தருகிறான். ஆனாலும் பாருங்கள் அவனது வலது கை விரல்களை அவள் சாப்பிடுவிடுகிறாள் (ஆறு மாதங்களில் இரண்டே இரண்டு விரல்கள்தான்!). ரொம்ப slow eater போலிருக்கிறது!
இந்தக் கதையின் முக்கியக் குறியீடாகச் சிலவற்றைக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவை : விபத்து, அகோரி, சிவன், அர்த்தநாரி, இடப்பாகம், உமையள், மெதுவான மரணம்.
இது உரையாடல் போட்டிக்கான கதை. சிவனுக்கும் பார்வதிக்குமான போட்டியில் என்ன நடந்தது என்பது புராணக் கதைகளின் மூலமாக நமக்கு ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பார்வதி எரிந்து சாம்பலாக்கப்பட சிவன் வென்றாக வேண்டும்!
பெண்களுக்கு இடமளிக்காதே என்ற ஒரு சொலவடை உண்டு. அப்படிக் கொடுத்தால், அவர்கள் உன்னையே காலி செய்துவிடுவார்கள் கபர்தார்! என்று கட்டுப்பெட்டித்தனமான ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டுவரும் குப்பையையே இவர் நவீன எழுத்து என்ற பெயரில் முன்வைத்திருக்கிறார். அந்த வகையிலேயே இந்தக் கதை ஆபத்தானதாக மாறுகிறது. அதற்காகவே இந்தக் கதையை நான் நிராகரிக்கிறேன்.
மற்றபடி, கதை என்று பார்த்தாலும் பல ஓட்டைகள் இருக்கின்றன. முக்கியமாக,
சுஜாதா பாணி கதை விவரணையும் (பிளாஸ்டிக் புன்னகை, உயரன் போன்ற வார்த்தைகள் இந்த எழுத்தாளரின் சுஜாதா மோகத்தைப் பறைசாற்றுகின்றன) மற்றும் கையாண்டிருக்கும் மொழிநடையும் கதையின் ஆதாரமான மிஸ்டிக் தன்மைக்கு கொஞ்சம்கூடச் சரியாக ஒத்துவரவில்லை என்பதை இந்தக் கதையை வாசிக்கும் பலர் உணர்ந்திருக்கக்கூடும்!
என்னளவில் இது தோல்விக் கதையே.
(இதை நான் தனிப்பட்ட முறையில் - அதாவது உரையாடல் போட்டிக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் எனத் தெரியுமுன்பு எழுதினேன் - போட்டி என்பதால், முடிவு தெரிந்த பின்பு வெளியிடலாம் என நினைத்திருந்தேன் - இந்த விமர்சனம் பற்றி நண்பர் அனுஜன்யாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
வலைப்பதிவில் பின்னூட்டங்கள் என்பவை முக்கியமானவை. ஆனால் பல சமயங்களில் அவை வெற்று பாராட்டுகளாகவும் முன் தீர்மானிக்கப்பட்ட template வாசகங்களாகவும் இருக்கின்றன. அதை மாற்ற, கதை கவிதைகளைப் பற்றிய இம்மாதிரியான விரிவான விமர்சனங்கள் தேவை என நினைத்தேன். அனுஜன்யாவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பவர் என்பதால், இப்பதிவு).
Wednesday, September 9, 2009
(எதைப்) பற்றியும் பற்றாமலும் ..... YSR, எஸ்ரா மற்றும் சில இடுகைகள்
ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்., கூட இருந்து, இறந்த மற்ற நால்வருக்கும் அஞ்சலிகள். இறந்த செய்தி வந்த நாளுக்கு அடுத்த நாள் ஹைதை, கோவை, பெங்களூரு, டில்லி என்று பல இடங்களிலிருந்து வந்த எங்கள் அலுவலக மேலதிகாரிகளின் கூட்டம் மும்பையில் இருந்தது. அப்போது தமிழ் நாடு மற்றும் கர்நாடகா (இதை ஏன் கருநாடகம் என்கிறார்கள்? காவிரி தண்ணீர் தர தொடர்ந்து மறுத்தால், இது மறுவி 'கருநாகம்' ஆக்கிவிடலாம் என்று ஒரு யோசனையோ!) அரசுகள் விடுமுறை அளித்தது பற்றி பேச்சு வந்தது. யாரோ ஒருவர் 'பீகாரில் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை' என்றார் (தகவல் சரிதானா என்று தெரியாது). நான் 'இது என்ன துக்கமா அல்லது கொண்டாட்டமா?' என்றேன். உடனே ஹைதராபாத் பாபு 'என்ன விளையாடுறியா? ஒய்.எஸ்.ஆர். யாரு? ஆல் இண்டியா லீடரு' என்று அந்த 'ரூ'வில் அழுத்தம் கொடுத்தார். டில்லி வாலா 'வோ கோன் ஹை? ரெண்டு நாளுக்கு முன்னால் அவர் யாரென்று எனக்குத் தெரியாது' என்றார் வழமைத் திமிரில். எப்போதும் போல உண்மை இந்த இரண்டுக்கு நடுவில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
வாரிசு உடனே முதல்வராக வேண்டும் என்று அடம் பிடித்த ஆந்திர எம்.எல்.ஏக்கள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கூழைக் கும்பிடு போட பழக்கமான இடத்திற்குச் செல்லவே எல்லோரும் விரும்புவார்கள். மேலும், காங்கிரஸ் மேலிடம் துவங்கி வைத்த அவலத்தை, மற்ற எல்லாக் கட்சிகளும் (தி.மு.க, பா.ம.க உட்பட) செய்வதையும் நாம் பார்க்கிறோம். பா.ஜ.க. எப்போதுமே விரைவாகக் கற்றுக்கொள்வதில் சமர்த்தர்கள் இல்லை. அத்துடன் அவர்கள் தற்போது உட்கட்சி ஜனநாயகத்தின் 'உச்சத்தின் அருகில்' இருக்கிறார்கள். முடிந்தவுடன், கட்சி இன்னமும் இருந்தால், அவர்களும் வாரிசு உள்ள தலைவரைத் தேர்ந்தெடுத்து, 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ' வாழ்த்துவோம். தோழர்களில் தான் இந்த மனப்பாங்கு இல்லை. உங்களுக்குத் தோழர்களிடத்தில் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் ஊழல், மற்றும் துதிபாடல் போன்ற விஷயங்களில் பெரிய குறைபாடுகளை அவர்களிடத்தில் காண முடியாது என்பது என் எண்ணம்.
இதற்கு மேல் அரசியல் பேச வேண்டாம் என்று ஏதோ ஒன்று எச்சரிப்பதால்...
எஸ்ராவின் 'இணைய எழுத்து' கட்டுரை படித்தேன். பொதுவாக இணையத்தின் போக்குகளை அவதானித்து எழுதியவர் இதையும் சொல்கிறார்:
"அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது."
வருத்தமாக இருந்தாலும், மறுக்க முடியாமல் இருக்கு. அதே சமயம், நல்ல முயற்சிகளை இப்படி பாராட்டவும் செய்கிறார்: "சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி."
அவர் சொன்ன பலவற்றில், எனக்குப் குறிப்பாகக் கவர்ந்த அம்சம் : "வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை"
பெரும்பாலான பதிவர்கள் தங்கள் வலைப்பூவை ஒரு அச்சு ஊடகத்தின் நவீன மாற்றாக வைத்திருக்கிறோமே தவிர கணினியின் பிரதான வசதிகளான ஒலி, ஒளி அம்சங்களைப் பெரிதும் பயன்படுத்துவதில்லை. எனக்குத் தெரிந்து ஆசிப் அண்ணாச்சி ஓரளவு ஒலி அமைப்பைப் பயன்படுத்தி இருக்கிறார். புனித ரமலான் மாதப் பாடலை அவர் குரலில் இங்கு கேளுங்கள். போலவே, ஆதியும் குறும்படம் என்று (நாம எவ்வளவுதான் கலாய்த்தாலும்) இரு முயற்சிகளை மேற்கொண்டார். குசும்பனும் கார்ட்டூன் வடிவங்களில் நகைச்சுவை தருவதைக் குறிப்பிட வேண்டும். தமிழ்ப்பறவை என்னும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் நண்பர் பரணி, தன் கவிதைகளுக்கு தானே அழகாக ஓவியம் வரைந்து பதிவேற்றம் செய்கிறார். என் கவிதைகளுக்கும் ..என்று கேட்டேன். முதலில் கவிதை எழுதுங்கள். அப்புறம் பார்க்கலாம்னு பதில் வந்தது.
இங்கு நான் சொல்ல வருவது original work. ஜ்யோவ் உங்கள் முன்னால் தன் கவிதைகளை கம்பீரமாக காமிராவைப் பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்? அதற்காக அதீதன் செய்வதை எல்லாம் காணொளியில் தர வேண்டும் என்றெல்லாம் கேட்பது சாரி ரொம்ப ஓவர் :)
நிறைய பேர் ஒலி, மற்றும் காணொளிக் காட்சிகளின் சுட்டி கொடுத்தோ, தரவிறக்கம் செய்தோ இடுகையை சுவாரஸ்யமாக்குவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட காணொளிகள் (உண்மையில் காணிருள்கள்) சில உலுக்கி விட்டன. சுட்டி மட்டும் தருகிறேன். பார்த்து விட்டு என்னைத் திட்டாதீர்கள். இந்த மாதிரி மனதை உலுக்கிவிடும் காணொளிகள் பதிவேற்றம் செய்வது, மற்றும் சுட்டி தருவது எல்லாம் தார்மீக முறையில் சரியானதா என்றும் தெரியவில்லை.
ஒன்று 'யானையின் கோபம்'
இன்னொன்று 'ரயிலின் மேல் மின்கம்பியின் கீழ்'
போலவே பாட் காஸ்ட் என்னும் இணையத்தில் (அச்சு ஊடகங்களில் கைகூடாத) உள்ள வசதி. சமீபத்தில் Dispassionated DJ அவர்களின் தளத்தில் சுட்டி கொடுத்திருந்த லிவிங் ஸ்மைல் வித்யாவின் (ஆஹா எப்ஃ. எம்.) நேர்காணல் கேட்க முடிந்தது. வித்யாவின் குரலில் அவர் வாழ்வு பற்றி அறிய முடிந்தது புதிய, அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம். கிழக்குப் பதிப்பகம் செய்யும் பல நவீன முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். பாராட்டப்படவேண்டிய விஷயம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் புதிதாக சிறு பத்திரிகைகள் வரவிருப்பது. மாலன் ஆசிரியர் பொறுப்பில் ‘புதிய தலைமுறை’, பொன்.வாசுதேவன் முனைப்பில் 'அகநாழிகை'. இர.முருகன் கூட 'மய்யம்' இதழை மீண்டும் தொடங்குவது பற்றி சொல்லியிருக்கிறார். வாசு போன ஞாயிறு அலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி 'கவிதை அனுப்புங்க; எதுக்கும் மூணு கவிதை அனுப்புங்க; ஒன்று பிரசுரிக்க முயல்கிறேன்' என்றார். வடிவேலு சொல்ற மாதிரி அவரோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு.
நான் படித்த, ரசித்த இடுகைகளின் சுட்டி தருகிறேன். நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
திரு.செழியன் எழுதிய "தோற்றோடிப்போன குதிரை வீரன்" (தளவாய் சுந்தரம் வலைப்பூவில்). ஒரு சாமான்ய ஈழத் தமிழன் இலங்கை இராணுவத்தை நிதம் எதிர்கொள்ளும் நிலை பற்றி அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
பைத்தியக்காரன் சென்னை பற்றி எழுதிய இடுகை. நிறைய பேர் படித்திருப்பீர்கள். ..காதவர்கள் இங்கு படிக்கலாம். சில அபாரமான வரிகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
"சேவல் பண்ணைகளின் கழிவறைகளிலும், குளியலறைகளிலும், சாக்கடைகளிலும் பலகோடி உயிர்கள் தினமும் மரணிக்கின்றன."
"இடப்பெயர்ச்சி மூலம் ஆண் குறிகள் கண்களை அடைந்துவிட்டதால், 24 மணி நேரமும் எதிர்படும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்"
எவ்வளவு அனாயாசமாக நகரின் காம வறட்சியை சொல்கிறார்!
"அலறும் செல்ஃபோன்களில் கடன் வாங்கச் சொல்லி கிளிகள் கொஞ்சுவது போலவே கடனட்டைக்கு பணம் கட்டச் சொல்லி காண்டாமிருகங்கள் உறுமவும் செய்கின்றன." என்றும்
"திக்குத் தெரியாத காட்டில் வட்டமென தெரியாமல் மனிதர்கள் ஓடிக்க்க்க்க்கொண்டே இருக்கிறார்கள்" என்றும் அதகளம் செய்யும் சிவாவை என்ன செய்யலாம்! அவர் மொழியில் சொல்வதென்றால் 'முத்தம்' கொடுத்து விடலாம்.
சரி, இப்போதைக்கு இவ்வளவு போதும். என்னதான் எஸ்ரா சொன்னாலும், 'பதிவு ரொம்ப சூப்பர்' என்ற ரீதியில் அனைவரும் பின்னூட்டத்தில் மொய் எழுதி விட்டுச் செல்லவும்.
Tuesday, September 1, 2009
உச்சத்தின் அருகில்
முன்னூறு கண்கள்
உற்றுப் பார்த்தாலும்
சட்டை செய்யாத இயந்திரம்
பத்தாயிரம் அடி உயரத்தில்
மிதக்கிறது முன்னும் பின்னும்
அலட்சியப் புன்னகையுடன்;
குதிகாலில் குறுக்கிட்ட
குழந்தையின் பார்பியால்
தடுமாறி விழுபவளைத்
தாங்கிப் பிடிப்பவன்
கண்களிலிருந்தும்
அதரங்களிளிருந்தும்
சில பூக்கள் அவளைச்
சூழ்ந்த நேரத்தில்
மீண்டும் பெண்ணானவளின்
கன்னங்களின் சிவப்புக்கு
அவள் செலவழித்த நேரங்கள்
பலருக்குப் புரிகிறது இப்போது;
வேறு தளத்திற்கு நகர்ந்திருந்த
கவிதை ஒருவனுக்கு;
கேட்கும் ராகத்தின்
புது இழைகள் ஒருத்திக்கு;
எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது.)