Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - சிந்தனைகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மும்பையில் இவ்வளவு விரைவில் ரிலீஸ் ஆனது ஒரு ஆச்சரியம். மிக விரைவில் திரையரங்குகளை விட்டு ஓடப் போவதில் அவ்வளவு ஆச்சரியம் எதுவுமில்லை. நேற்று இரவுக் காட்சி (இங்கு 7.50 மணிக்கே) சென்றேன். என் மனைவியையும் சேர்த்து, மொத்தம் பத்து பேர் மட்டுமே திரையரங்குக்குள் இருந்தோம். முதல் பாதி நன்றாக, ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட எந்தத் திரைப்படம் போலவும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாம் பாதி மொத்தப் படத்தை முற்றிலும் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. சோழர்கள் என்றாலே பொன்னியின் செல்வன் தாக்கத்திலும், தசாவதார முதல் காட்சிகளின் தாக்கத்திலும் உருவாக்கப்பட்ட பிம்பம் மிக யதார்த்தமாக தவிடு பொடியாகிறது. பாண்டியர்களிடமிருந்தும், மற்ற பகைவர்களிடமிருந்தும் நூற்றாண்டுகளாகப் பதுங்கி வாழும் ஒரு கூட்டம் எப்படி இருக்குமோ, அப்படியே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. காலத்துக்குள் உறைந்து போன மாந்தர்கள் போல் நிகழ் காலத்துக்குள் முற்றிலும் பொருத்தமற்றவர்களாக உலாவுகிறார்கள். ஒரு திரைப்படம் நிறைய சிந்தனைகளைத் தூண்டி விட்டால் அது என்னைப் பொறுத்த வரையில் நல்ல படம். அந்த விதத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு முக்கியமான, நல்ல, திரைப்படம் - தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

எனக்கு இந்தப் படம் சொல்லிய செய்திகள் இவை என்று கொள்ளலாம்:

சிறு வயதில் ஐய்ஸ் பாய் (அதனை Ice Boy என்றே புரிந்து கொண்டிருந்தேன் அப்போது) விளையாடும் போது, யாரும் சுலபத்தில் கண்டு பிடிக்க முடியாத மாய ஒளிவிடத்தில் மறைந்திருந்து, ஒரு இரண்டு மணிநேரம் கழித்து பசி வயிற்றைப் பிடுங்கியதால் வெளியே வந்து பார்த்தால், நண்பர்கள் எல்லோரும் விளையாடி முடித்து, வேறு விளையாட்டுக்குத் தாவி இருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கும் வரை ஆட்டம் அப்படியே இருக்கும் என்றெல்லாம் நினைத்த எனக்கு அவர்களோ, காலமோ என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றது முதலில் வருத்தமாக இருந்தாலும், அது வாழ்வின் முக்கியமான பாடமாக அமைந்தது. Time and Tide wait for none. சோழர்கள் இப்படித் தனிமையில், வெளியுலகுடன் தொடர்பில்லாமல் இருந்ததில் அவர்களுக்கு மட்டுமே நட்டம். இதனை இப்போதைய உலகமயமாக்கல் என்னும் சித்தாந்தத்திலும் பொருத்திப் பார்க்கலாம். குக்கிராமத்திலிருந்து கிராமங்களுக்கும், கிராமங்களிலிருந்து சிறு நகரங்களுக்கும், ‘சிறு’விலிருந்து பெருநகரங்களுக்கும் மக்கள் வருவது காலங்காலமாக அனைவரும் பெருமளவில் எதிர்க்காத, ஓரளவு ஒப்புக்கொண்ட நடைமுறை யதார்த்தம். உலகமயமாக்கல் என்னும் போது மட்டும் மொழி, இன இன்னபிற உணர்வுகள் உந்தப்பட்டு பெருமளவு எதிர்ப்பு வருவதையும் பார்க்கிறோம்.

இரண்டாவது செய்தி இவ்வளவு நூற்றாண்டுகளாக ஒரு ராஜ வம்சம்தில் வந்தவர்கள் வன்மத்தைத் தொடர்ந்து கடை பிடிக்க முடியுமென்பது. அவ்வளவாக நம்பகத் தன்மை இல்லை என்றாலும், நிறைய குடும்பங்களில் நூற்றாண்டுப் பகை நிலவுவதைப் பார்க்கையில் இது மாதிரி நடக்கவே முடியாது என்று சொல்ல முடியவில்லை. ஒருவர் மத்திய அரசு அமைச்சர். ஒருவர் ராணுவ உயர் அதிகாரி. இந்தப் பெண்ணும் நன்றாகப் படித்த, நாகரிக நாரிமணி. இத்தனை இருந்தும், அப்பன் பாட்டன் வழிவழியாகச் சொன்னார்கள் என்று இவ்வளவு கொலைவெறியுடன் துரத்துவார்கள் என்பது ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொண்டால்...இத்தனை நூற்றாண்டின் நாகரீகத்திற்கும், கல்விக்கும் என்ன பயன்? வரலாறு, அது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், இத்தனை வன்மத்தைக் கக்கும் என்பது கசப்பான உண்மை. இத்தகைய வரலாறுகள் தேவையற்றவை என்பது என் எண்ணம். நாட்டில் நடைபெறும் பெரும்பாலான சர்ச்சைகளும் இத்தகைய முழு உண்மை / அரை உண்மை / அப்பட்டமான பொய் வரலாறுகளால் தோன்றியவை. வராலாறு, தவறன பாடங்களைத் திருத்திக் கொள்ளவும், நல்லவற்றை தொடர்ந்து எடுத்துச் செல்லவும் மட்டும் அவசியமானவை. தொடர்ந்து அது வன்மம், காழ்ப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளைத் தூண்டி, மக்களைத் தொடர் அவலத்தில் ஆழ்த்துமெனில், எவ்வளவு உண்மையாக இருந்தாலும் அந்த வரலாறு அவசியமற்றது.

இன்னொரு செய்தி - அது பத்தாம் நூற்றாண்டில் உறைந்து விட்ட சோழர்களானாலும், நவீன யுகத்து பாண்டியர்களானாலும் ஆளும் வர்க்கம் எப்போதும் தன் நலனில் கவனமாகவே இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் சாதாரணர்கள் படும் துன்பங்களும், அவர்களின் அவல வாழ்வும் தொடர்கதைகள்.

இந்தப் படத்திற்கு கேபிள், கார்க்கி ஆகியோர் சற்று தீவிரமாக விமர்சனம் செய்தது எனக்கு முதலில் ஆச்சரியம். என் அனுமானத்தில், கேபிள் சினிமாவை முதலில் வியாபாரமாகப் பார்க்கிறார். அந்தச் சட்டகத்துள் முடிந்த வரை கலை இருக்க வேண்டும். மக்களைக் கவர வேண்டும். முதன்மையாக இந்தத் தொழில் நசியாமல் இருக்க வேண்டுமெனில் பெரிய நஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்னும் தாரக மந்திரம் அவருள் எப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன். கார்க்கியும் கிட்டத் தட்ட அதே அலை வரிசை. இல்லாவிடில், மூன்று வருட தாமதம், முப்பத்தி ஆறு கோடி முதலீடு பற்றி கவலைப் படவேண்டியது பணம் போட்டவர்களின் கவலை மட்டுமே. எல்லாத் துறைகளைப் போலவே, சினிமாவும் இப்போது பல்வேறு தளங்களில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு உதாரணத்திற்கு என்னுடைய Treasury Dealing Room இல் தினமும் இலாபமாகக் கொட்டினால் அந்த அதிகாரிக்கு மகிழ்ச்சி. அவரை மேற்பார்வையிடும் அதிகாரிக்கு அவர் இன்னும் எவ்வளவு செய்திருக்க முடியும் என்ற கணக்கு. இதை real-time கண்காணிக்கும் Risk Department லாபம் எல்லாம் சரி. அதை ஈட்ட எவ்வளவு ரிஸ்க் எடுத்தார்கள். அது அவசியம்தானா என்றெல்லாம் வெறுப்பேற்றும். இதற்கு நடுவில் ஆடிட்டர் 'யோவ், இங்கெல்லாம் உங்க கையெழுத்தே இல்ல' என்று கடுப்பேற்றுவார். இன்னொரு ரகசிய இலாகா, அந்த அதிகாரி தொடர்ந்து இலாபம் மட்டும் ஈட்டுகிறாரா அல்லது அவ்வப்போது நஷ்டமும் வருகிறதா என்று சரி பார்க்கும். தொடர்ந்து இலாபம் மட்டும் என்றால் அடிப்படையில் எதோ பெரிய கோளாறு என்று அர்த்தம். அவர் விடுமுறைகள் எல்லாம் ஒழுங்காக எடுக்கிறாரா என்றெல்லாம் கண்காணிக்கும்.

இந்த உதாரணம் போலவே, சினிமாவை பல்வேறு கோணங்களில் அணுக வேண்டியதும் அவசியமாகிறது. ஒரு end user என்ற அளவில் மட்டும் விமர்சனம் செய்வதற்கும், துறை பற்றிய பல்வேறு புரிதல்கள் இருப்பவர்கள் இதனை அணுகுவதற்கும் உள்ள இடைவெளியே நாம் இவர்கள் விமர்சனத்தில் பார்த்தவைகள்.

என்னுடைய சினிமா புரிதல்கள் சராசரிக்கும் மிக மிக கீழே. அந்த வகையில் இந்தப் படத்தை விமர்சனம் செய்தால் படு கேவலமாக இருக்கும். இருந்தாலும் உங்கள் விதி... கார்த்தி lovable பாட்டாளி. கலக்குகிறார். ஒருமாதிரி ஒரே வார்ப்புருவில் சிக்காமல் இருக்க வேண்டும். ரீமா நல்ல நடிகை என்று எனக்கு முன்பே பட்சி சொல்லியிருக்கிறது. அது நிரூபணம் ஆகிறது. ஆனாலும் 'ஆகச் சிறந்த' பட்டம் கொடுக்கும் அளவில் இல்லை. ஆண்ட்ரியா....என்ன சொல்ல என்ன சொல்ல...

பிரம்மாண்டத்தைப் பொறுத்த வரை இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல். (மயில் கல் அல்ல). ஆமாம், கடலில் ஏதோ ஒரு ஆரஞ்சு நிற வெளிச்ச வஸ்து இவர்களைத் துரத்திப் பிடித்து சின்னாபின்னம் செய்கிறதே! அது ஆக்டபஸா? (மன்னிக்கவும், வழக்கம் போலவே பாப்கார்னில் கவனம் செலுத்தினேன்). இவ்வளவு காட்டுக்குப் பின் உடனே இவ்வளவு பாலை நிலமா? ஓகே ஓகே நோ லாஜிக். எனக்கு அந்த நடராஜர் சிலை நிழலில் அவர்கள் போக வேண்டிய பாதை தெரிவது மிகப் பிடித்தது. அதன் அரசியல்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை. என்னைப் பொறுத்த வரை அது சோழர்களின் வான சாஸ்திர புலமைப் பற்றி சொல்வது போல் தோன்றியது. நிறைய மாய யதார்த்தக் காட்சிகள் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது. ஆனாலும், இடைவேளைக்குப் பின் அவ்வப்போது தோன்றியதை எடுத்து விட்டார்களோ அல்லது எடுத்த பலவற்றை வெட்டி விட்டார்களோ என்று படுகிறது. கோர்வையாகச் சொல்லாதது ஒரு குறை.

படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி. ஒன்று ஆயிரத்தில் ஒருவன். இன்னொன்று கோடி ... ம்ஹும் ... பல்லாயிரம் கோடியில் ஒருவன்.

இன்னொரு முக்கிய குறிப்பு: இந்தப் படம் பற்றிய விமர்சனங்களில் எனக்கு சரவணகுமாரின் பதிவு பிடித்தது. சுகுணாவின் விமர்சனம் மிக மிகப் பிடித்தது (அவர் அரசியல் நிலைகளுடன் ஒத்துப் போவது எனக்கு மிகுந்த சிரமம் தந்தாலும்).

Friday, January 15, 2010

மும்பை மாணவர்களின் தற்கொலைகள் - த்ரீ இடியட்ஸ் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்


அவன் பெயர் சுஷாந்த் பாடில். மும்பையின் ஷ்ரதாஷ்ரம் பள்ளியில் (சச்சின், காம்ப்ளி முதலியோர் படித்த பள்ளி என்று நினைக்கிறேன்) ஏழாம் வகுப்பு படிக்கும் பன்னிரண்டு வயது மாணவன். காலை வகுப்புக்கு வருகிறான். பையை வைக்கிறான். நண்பனிடம், 'குளியலறை வரை சென்று வருகிறேன். முகம் கழுவ வேண்டும்' என்று சொல்லிச் செல்கிறான். ஒரு ஸ்டூல் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு நேரே குளியலறைக்குள் செல்கிறான். கதவை உட்பக்கம் தாழ் போடுகிறான். மேலே ஷவர் இருக்கும் இரும்புக் கம்பியைப் பார்க்கிறான். ஸ்டூல் மீது ஏறிக்கொள்கிறான். தன் கால் சட்டைப்பைக்குள் துழாவி, ஆரஞ்சு நிற நைலான் கயிறைக் கையில் எடுக்கிறான். அதனை மேலே குறிப்பிட்ட இரும்புக் கம்பியில் தொங்க விட்டு, இறுகக் கட்டுகிறான். இன்னொரு முனையில் சுருக்குப் போட்டு, தன் தலையை நுழைத்துக் கொள்கிறான். மெல்ல கயிற்றைச் சுருக்குகிறான். கழுத்தை நன்றாக இறுக்கும் முன் கடைசியாக ஒரு முறை மூச்சை இழுத்து விடுகிறான். பிறகு அரை வினாடி யோசித்து தான் நின்று கொண்டிருக்கும் ஸ்டூலைத் தட்டி விட்டு, மிதக்கிறான்.ஒரு மொட்டு மலர்வதில் விருப்பமின்றி உதிர்கிறது. கடவுள் தீட்டத் துவங்கிய ஓவியமொன்று துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது. அல்லது ஒரு வாழ்வு அநியாயமாக, தனிமையில் முடிகிறது என்றும் சொல்லலாம். என்ன ஆயிற்று பாடிலுக்கு? ஏன் எப்படிச் செய்தான்? அவனுக்கு வாழ்வின் பிரம்மாண்டம் பற்றி என்ன தெரியும்? வாழ்வென்னும் நதியில் எத்தனை திருப்பங்கள் - வளைவுகள் - சுழிகள் வரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருந்ததா? அவன் நான்கு பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறி இருந்தான். கூடுதல் தகவல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தை இருமுறை பார்த்திருந்தான். இதற்கு இவ்வளவு பெரிய முடிவா? தான் எடுத்த முடிவின் கன, ஆழ பரிமாணங்களை அந்தப் பிஞ்சு அறிய முடியுமா? பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி என்பது சம்பிரதாய வாக்கியம் என்றாலும் இப்போது மொழியா முக்கியம்?


இது ஒரு அபூர்வ நிகழ்வு அல்ல. மேலே செல்வோமா? அவள் பெயர் நேஹா சாவந்த். ஆறாம் வகுப்பு மாணவி. நன்றாகப் படிப்பவள். நடனமும் ஆடுபவள். டோம்பிவில்லியில் வசிப்பவள்...வசித்தவள். பெற்றோர் வீட்டில் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட வேளையில் உத்தரத்தில் இருந்து தொங்கிய மின்விசிறியிலிருந்து இவளும் தொங்கினாள். காரணம்? இவளது பெற்றோர்கள் இவளை நடன வகுப்பிலிருந்து சமீபத்தில் நிறுத்தி இருந்தனர்.


அடுத்து வருவது பஜன் ப்ரீத்கௌர் புல்லார் என்னும் பதினெட்டு வயது,  பிசியோதெரப்பி (இதற்கு தமிழில் என்ன பெயர்?) பயிலும்.. ச்சே பயின்று வந்த மாணவன். அதே உத்தரம்; அதே மின்விசிறி; அதே தொங்கல்; காரணம் - மூன்று பாடங்களில் ஃபெயில்.


இன்னும் சில வித்தியாசமான தற்கொலைகளுக்குச் செல்வோமா? பெயர் வினீத். வயது பதினெட்டு. பன்னிரெண்டாம் வகுப்பு. நன்றாகப் படிக்கும், 80% மதிப்பெண்கள் வாங்கும் மாணவன்; அன்று இவன் பெற்றோர்களின் திருமண தினம். அதனைக் கொண்டாட அவர்களுடன், தன் சகோதரியையும் கூட அனுப்பி அவர்கள் திரும்புவதற்குள் ..மின்விசிறி மீண்டும். ஒரு துண்டுச் சீட்டில் அவன் சொல்லிச் சென்றது : "என் வாழ்வில் எதுவும் அசாதாரணமாக இல்லை. என் குழந்தைப் பருவம் மிகவும் தனிமையானது; சமூகத்தில் உலவுவது பற்றிய வினோத உணர்வுகள் எனக்கு வருகின்றன; அடுத்த பிறவிகளில் உங்களைப் போன்ற அருமையான பெற்றோர்களைக் காண்பேன் என்று நம்புகிறேன் ...';


இன்னொருத்தி மேரி நாடார் (ஆம், தமிழ்ப்பெண்). 16 வயது. செம்பூரில் வீடு. தந்தை இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அதிலிருந்து மீளாத, புலம்பும் தாயைப் பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளானவள் (என்று பின்னால் தெரிய வருகிறது). தன் தந்தையைக் காணும் ஆசையில் ... இப்போதெல்லாம் எனக்கு பயங்கர ஆயுதமாகக் காட்சியளிக்கும் மின்விசிறி மீண்டும்.


கோபமோ, ஆயாசமாகவோ இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் தினமும் செய்தித்தாளை வாசிக்கையில் இருக்கிறது. இப்போதெல்லாம் பயமாகவும். நான் சூர்யாவுடன் விளையாடும் போது 'டேய், Fan எங்க இருக்கு?' என்று கேட்கையில் அவன் அண்ணாந்து பார்த்து மேலே கையைக் காட்டும் தருணத்தில் அவன் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவது வழக்கம். இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது.


கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பதினான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பெரும்பான்மை மும்பையில். என்னதான் நடக்கிறது? பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா? ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா? பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா? நகரம் முழித்துக் கொண்டு இருக்கிறது - விடை தெரியாமல். தேர்வுகள், மதிப்பெண்கள் தரும் மன உளர்ச்சி பற்றி நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும், இந்த இளம் வயதினரை இந்த அளவு வாட்டும் என்று இப்போது புரிகிறது.


இதன் பின்புலத்தில் த்ரீ இடியட்ஸ் படம் மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது. போன முறை நான் குறிப்பிட்ட அந்த மூன்றாவது திரைப்படம் இது தான். படத்தைப் பற்றி விலாவாரியாக, நேர்த்தியாக கேபிள், பரிசல், வித்யா என்று பிரபல பதிவர்கள் அழகாக எழுதி விட்டதால் நீங்கள் அதிலிருந்து தப்பிக்கிறீர்கள். மற்றவர்களுக்காகப் படிக்காமல் உங்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு, அதை படியுங்கள். மதிப்பெண்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பக்க விளைவு என்றும் சொல்லலாம். பெற்ற அறிவு என்பதே சாஸ்வதம். நிரந்தரம். முக்கியம் என்றெல்லாம் சொல்கிறது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும். மாதவன், தான் இன்ஜினியரிங் வேலையில் சேராமல், வனத்தில் புகைப்படம் எடுப்பதில் இருக்கும் நாட்டம் பற்றிச் சொன்னதும் இடிந்து போய், உடைந்து நொறுங்கும் தந்தையிடம் மாதவன் சொல்லும் வசனம்: 'அப்பா, என்ன! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெரிய கார் மற்றும் பெரிய வீடு என்னால் வாங்க முடியாமல் போகலாம்; ஆனாலும் சிறிய காரும், சிறிய வீடும் முக்கியமாக எப்போதும் உங்களை கண்போல் பார்த்துக்கொள்வதும் என்று நான் இருப்பேன்'. அந்தத் தருணத்தில் அவர் தந்தை மனம் மாறுவார். இப்படி நல்ல விஷயங்கள் இருக்க, அந்தப் படத்தை இரு முறை பார்த்ததில், நான் துவக்கத்தில் குறிப்பிட்ட பாடில் தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்டான் என்று வரும் செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதைப் போலவே சில கல்லூரிகளில் ராகிங் நடந்ததற்கும் இந்தப் படத்தைக் குறை சொல்கிறார்கள்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை என்னுடைய ஒரே குறை மூலக் கதை எழுதிய சேத்தன் பகத் பெயரைக் கொஞ்சம் தாராள மனதுடன், பெரிய எழுத்துகளில், படம் பெயர் போடும்போதே போட்டிருக்கலாம். "எத்தனைப் பெரிய மனிதருக்கு...எத்தனை சிறிய மனமிருக்கு" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது...


இந்த இடுகை பொங்கல் அன்றே போட்டிருக்க வேண்டும். நல்ல நாளும் அதுவும் எதுக்கு தற்கொலை அது இதுன்னு சோகப் பதிவு போடுகிறீர்கள் என்ற அன்பான எச்சரிக்கை வந்ததால் ... இன்று வருகிறது. இங்கு தமிழர் திருநாளுக்கு ஒரு நாள் விடுமுறை கூட இல்லை. உழைக்கும் வர்க்கமான நான் மும்பையில் உழல்கையில், உட்கார்ந்து பொங்கலைச் சாப்பிட்டுக் கொண்டே நன்றாகக் கொண்டாடி இருப்பீர்கள் என்று தெரியும்.

Wednesday, January 6, 2010

வெவ்வேறு செடிகள்
பசுமைத் தண்டுகள் தாங்கிய 

வெள்ளைப் பூங்கொத்துகள் இரண்டை
வெம்மையான பின்னிரவில்
வாங்கிக் கொள்ளச் சொல்கிறாள்
கண்ணாடி இறக்கி
தரிசனம் தருபவன்
நீண்ட பேரத்திற்குப் பின்
ஒன்று போதுமென்கிறான்
மனைவியை மகிழ்விக்கப்போகும்
பூக்களுடன் சில்லென்ற
உலகுக்குள் மறைகிறான்
இரண்டையும் விற்கக் கூடிய
சாமர்த்தியமற்றவள்
சாலையோரத்தில் காத்திருக்கும்
கணவன் முன் தயங்குகிறாள்
அவன் கைவீச்சில் தெறிக்கும்
அவள் உதட்டு இரத்தம்
வெள்ளைப் பூங்கொத்தில்
செஞ்சாயம் பூசுகிறது
மனைவிகளை மகிழ்வூட்டவும்
இரத்தம் சிந்தவும் தூண்டும்
பூக்கள் வெவ்வேறு செடிகளில்
பூத்திருக்க வேண்டும்

(கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆனது)