Monday, March 26, 2012

(எதைப்) பற்றியும் பற்றாமலும் - கல்யாணப் பரிசு - ஒரு அனுபவம்கல்யாணப் பரிசு திரைப்படம் இரண்டு நாள்கள் முன் பார்த்தேன். விளம்பரத் தொந்தரவுகள் இல்லாத நள்ளிரவில் படத்தை ஊன்றிப் பார்க்க முடிந்தது. பொதுவாக சோகப் படங்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் பார்த்து விடுவேன்; சோகக் காட்சிகளை மட்டும் தவிர்த்து விடலாம் என்னும் யோசனையில். மன்னார் & கம்பெனி புகழ் தங்கவேலு, அவர் மனைவி வரும் காட்சிகளை ரசிக்கலாம்னு பார்க்கத் துவங்கி, படம் முழுவதும் பார்த்தேன். இன்றைய அறங்களின் படி நிறைய நெருடல்கள். பெண்ணியம், மனைவியை உதைப்பது, குழந்தையை பெட்ரோல் டேங் மேல் அபாயகரமாக உட்கார வைத்து இரவு முழுதும் நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக மோட்டார் பைக் ஓட்டுவது என்று நிறைய விமர்சிக்கலாம்.  படம் வந்தத் தருணத்தில் அமலில் இருந்த அறங்களுக்கு ஏற்ப படம் இருந்திருக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் படம் முழுமையுடன் இருந்ததது. ஸ்ரீதருக்கே உண்டான நேர்த்தியுடன், புத்திசாலித்தனம் கூடிய நளினத்துடன் பட நாயகி இருந்தார். சரோஜா தேவியின் முக்கியப் படங்களுள் இதனைச் சொல்ல வேண்டும். தியாகம், அந்த முடிவுக்குக் கடைசி வரையில் நேர்மையாக இருப்பது போன்ற விசயங்களில் தெளிவு இருந்தது. தற்போதைய தமிழ் படங்களில் பெண்களுக்குத் தரப்படாத முக்கியத்துவம் தமிழ்ப் படங்களின் அபத்தத் தன்மைக்கு முக்கிய காரணம் என்றும் தோன்றுகிறது

இவ்வாறாக சிந்தனை ஓடுகையில் ஒழுங்காக ஒரு சராசரி ஆசாமியாக இருந்தவனை இந்தத் தமிழ் இணையம் எந்த அளவுக்குக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது என்ற ஆயாசமும் வந்தது. 

ஒரு ஆடவனை இரு பெண்கள் விரும்பும் (ஆண் மைய்யப் புனைவு!) படங்களை கல்யாண பரிசிலிருந்து காதல் பரிசு தாண்டி கலாபக் காதலன் வரை வந்திருக்கும் காலங்களை நினைத்துப் பார்த்தேன்.   எனக்கு இந்த மாதிரி அனுபவம் வாய்த்ததா? வாய்த்த வாய்ப்பைத் தவற விட்டேனா? என்றெல்லாம் யோசித்தேன். பள்ளியில் ஒரு அக்கா ஒரு தங்கை இருந்தார்கள். தங்கை என் வகுப்பு. அவள் பெயரும் வசந்தி (கல்யாண பரிசில் கன்னடத்துப் பைங்கிளியின் பெயரும் அஃதே என்பதை நினைவில் கொள்க). அவள் அக்கா பானுமதி ஒரு வயது மூத்தவள். வசந்தி தான் இருவரில் அதிக அழகாய் இருப்பாள். வசந்தியைக் காதலித்த பொதுக் குழுவில் நானும் ஒரு ரகசிய அங்கத்தினராக இருந்ததை நானே பல ஆண்டுகளுக்குப் பின் அறிந்து கொண்டேன். பெரும்பாலான சமயங்களில் பானுமதி, வசந்தி இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒரு முறை ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு வசந்தியை சைட் அடிப்பதை அவள் பார்த்து விட்டாள். இலேசாக புன்னகையும் செய்தாள். அவள் என்பது நீங்கள் நினைப்பது போல் வசந்தி அல்ல. நான் பயந்தது போல் பானுமதி.    பள்ளியின் கிரிக்கெட் போட்டிகளில் என் சாகசங்களைப் பார்வையிட்டு கை தட்டிய கூட்டத்தில் வசந்தியும் இருந்தாலும் பானுமதியும் கூடவே கை தட்டியது வயிற்றில் புளியைக் கரைத்தது. வசந்தியை மட்டும் தனியே பார்த்து, பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்றெல்லாம் யோசிக்கும் சாமர்த்தியம் அற்றவனாக இருந்தேன். 

இப்படிப்பட்ட காலகட்டத்தில் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ, வியருக்கு 'இன்பச் சுற்றுலா' என்று எங்கள் பெற்றோர் பட்ஜெட்டிற்கு இணங்க "செஞ்சி, சாத்தனூர், திருவண்ணாமலை" செல்ல முடிவு செய்து வசந்தி வருவதை உறுதி செய்த கொண்ட பின் கிட்டத்தட்ட ஒரு நாற்பது மாணவர்களும் பதிவு செய்து கொண்டோம். பெரும்பாலும் இருவர் கைகோர்த்துக் கொண்டு செல்ல வேண்டிய பள்ளி விதிகளின் படி நிறைய மாணவர்கள் சக தோழர்களுடனும்,  மாணவிகள் தத்தம் தொழியருடனும் இணை சேர்ந்திருந்த பின் வசந்தி தனித்திருந்தாள். மாணவர்களில் பலர் தங்கள் ஜோடிப் பையன்களை உதறித்தள்ளி, சிதறி, தனித்தனி ஆளாக நின்று கொண்டு வசந்தியின் கைப்பிடிக்கும் விண்ணப்பம் போடத் துவங்கினார்கள். கிட்டத் தட்ட பள்ளி மைதானத்தில் அந்தப் பேருந்தின் சமீபத்தில் ஒரு சுயம்வர சூழல் இருந்தது. என்னுடைய குல முன்னோர்கள் பலருக்கு திருமணம், அன்னதானம் என்று எல்லாம் செய்து வைத்த மாதிரி எதுவும் நான் கேள்விப் பட்டதில்லை என்றாலும் அவற்றின் சாத்தியக் கூறுகளை நம்பத் துவங்கினேன். ஆம், வசந்தி என்னருகில் வந்து சுவாதீனமாக என் கையைப் பிடித்து 'எனக்கு ஜன்னல் சீட் தருவ இல்ல' என்றாள். அந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலை தாறுமாறாக ஏறத் துவங்கியது. ஒரு ஐம்பது தொடர் பெருமூச்சுகளின் உஷ்ணம், ஏதோ தீய்ந்து போகும் நெடி, பிற பெண்களின் அக்கினிப் பார்வை என்றெல்லாம் சூட்டைக் கிளப்பினாலும் நெஞ்சுக்குள் அடர் வனத்தின் மென்தால் குளிர் ஆதரவளித்தது. 

வசதியும், வசதியின்மையும் புலப்படாத வயதில் அவள் மேனியிலிருந்து கமழ்ந்த மணம் உண்மையிலேயே இயற்கையானது என்று திருவிளையாடல் முத்துராமன் போல நம்பினேன். அதிகாலையின் இளங்காற்றில் அவள் கூந்தலின் சில இழைகள் என் மனம் போலவே படபடத்துக் கொண்டு, அவளிடம் விலகி, நெருங்கி என்று விளையாடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினாள். ராகம் எதுவும் புலப்படாவிட்டாலும் இரம்மியமாக இருந்தது. கிஷோர் பிடிக்குமா என்றாள். பெயர் தெரிந்தாலும் முகம் தெரியாத வில்லன் மீது கோபம் பெருகுகையில் நீ இந்தி பாட்டெல்லாம் கேக்க மாட்டியா என்றாள். சமாதானமான மனதுடன்  'தில் க்யா கரே' என்று பாடினேன். மலர்ந்து சிரித்து 'நீ லம்போதர' மட்டும் தான் பாடுவேன்னு நினெச்சேன்' என்றாள். எனக்குத் தெரிந்த நாடுகள், தலை நகரங்கள், ஆறுகள் என்று மேதாவிலாசம் எல்லாம் பூந்தமல்லி  வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்து இறங்கிய போதெல்லாம் மறக்காமல் என் கையைப் பிடித்துக் கொண்டாள். செஞ்சியில் கொளுத்தும் வெய்யிலில் வரலாறு ஆசிரியை தேசிங்கு ராஜா, குதிரை என்று பேசும் போது, 'கொஞ்சம் அலக்சாண்டர் மாதிரி கதை இல்ல' என்ற வசந்தியிடம் உடனே 'ஆமாம்' என்று சொன்னாலும் பி.டி. மாஸ்டர் அலக்சாண்டருக்கும் தேசிங்கு ராஜாவுக்கும் உள்ள தொடர்பு என்ன இருக்கும் என்று மண்டையைக் குடைந்து கொண்டேன். 

சாத்தனூர் அணையில் ஏதோ ஒரு தெலுங்குப் படம் ஷூட்டிங். 'பால ராஜ பொம்மக்கடி; படலக் கடுதி' என்று ஒரே வரியை பலமுறை நாயகனும் நாயகியும் ஸ்டெப்லு ஸ்டெப்லு வாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  சரிந்த புல்வெளியில் மாணவர்கள் சாகசக் குட்டிக்கரணம் அடித்தும், மாணவிகள் எழிலுடன் அமர்ந்து சறுக்கியும் பொழுதைப் போக்குகையில் வசந்தியைப் பார்ப்பதிலேயே என் பொழுது கழிந்தது. சாத்தனூரிலிருந்து திருவண்ணாமலை வரை அவள் பஸ்ஸில் வேறு தோழியுடன் அமர்ந்து கொண்டாள். அவள் எங்கே மனம் மாறி விடுவாளோ என்ற அச்சத்தில் ஒரு தடியன் என்னருகில் அமர்ந்து கொண்டான். காரணம் புரியாமலே எனக்கும் வசந்திக்கும் ஒரு ஊடல் (இதப் பாருடா!) நடந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் எல்லாரும் சென்று வந்த பின்னும், எனக்கு அங்கிருந்து வெளியே வர மனம் வரவில்லை. அந்தக் கோயிலுக்குள் ஏதோ இருக்கணும். ஜ்யோவ் ஸ்டைலில் சொல்லனும்னா 'இதைப் பற்றி பிறகு விரிவாக எழுதணும்'. முழு வாழ்வு வாழ்ந்த ஒரு வெற்றிடம் என் மனதை ஆக்கிரமித்தது. இரவு உணவு சாப்பிட நண்பர்கள், ஆசிரியர்கள் அழைத்த போதும் கோயிலை விட்டு நான் வரவில்லை. கடைசியில் வசந்தி என்னருகில் வந்து அமர்ந்து 'எனக்கு வளையல் வாங்கித் தருவியா' என்று கேட்டபோது மோனத்தவம் கலைந்து முனிபுங்குவர் மேனகையைப் பார்த்த மாதிரி வசந்தியின் கையைப் பிடித்து வளையல் கடைப் பக்கம் சென்று கையில் இருந்த பாக்கெட் மனியில் என் இரு சகோதரிகள் மற்றும் வசந்திக்கு என்று வளையல்கள் வாங்கினேன். பிளாஸ்டிக், ரப்பர் வளைகள். கரும்பச்சை நிறத்தில், ஒளியின் ஒரு கோணத்தில் மின்னும் வளையல்கள்.  அவள் அவற்றை உடனே அணிந்து கொள்ளவில்லை. 

ஞாயிறு முடிந்து திங்கள் காலையில் வசந்தியுடன் பானுமதியைப் பார்த்தேன். கண்கள் சிரிக்க, பானுமதி என் கையைப் பிடித்து 'இந்த வளையல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு' என்றாள். அவள் கைகளில் அந்தக் கரும்பச்சை வளையல்கள் அசந்தர்ப்பமாக மின்னின. அருகில் வசந்தி காவிய மௌனத்தில் விவரிக்க முடியா உணர்ச்சியுடன் இருந்தாள். என்ன சொல்லிவிட்டு விலகினேன் என்று நினைவில்லை. என்ன சொன்னேன்? விலகினேன் என்றேன் இல்ல. ஆமாம். அதற்குப் பின் அவர்கள் இருவரையும் விட்டு விலகி விட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை வசந்தி என்னை விட வேகமாக உயர ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். 

அடுத்த வருடம் பானுமதி பள்ளி இறுதியில் இருந்தாள். பொதுத் தேர்வு முடிந்ததும் அவளுடைய புத்தகத்தில் 'கோல்டன் ஷிப், சில்வர் ஷிப், ஃபிரெண்ட் ஷிப் என்று அப்போதே கவிதை பாணியில் கிறுக்கி விட்டு எங்கே அவள் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் ஓடி விட்டேன். 

வெகு வருடங்கள் பிறகு பானுமதியை ஒரு அங்காடியில் பார்த்தேன். அவளுக்கு என் மீசை முகத்தில் என்னை அடையாளம் தெரிந்திருக்க நியாயமில்லை. மிக வசீகரமாக இருந்தாள். பக்கத்தில் ஒரு ஆடவனும் இருந்தான். மணமாகி இருந்தது. அவர்கள் கார் ஏறுகையில் இன்னொரு தடிமனான பெண் சேர்ந்து கொண்டாள். கூர்ந்து பார்த்ததில் வசந்தி. அவளுக்கும் திருமணம் ஆகி இருந்தது. நிறைய்ய்யய்ய எடை கூடியிருந்தாள்.  கொஞ்சம் சோகமாகவும் நிறைய நிம்மதியாகவும் உணர்ந்தேன். 

இப்படியாக கல்யாணம் என்பது பலருக்குப் பரிசாக விளங்குகிறது. அதாவது சிலரைக் கல்யாணம் செய்து கொள்வதில் வெகு சிலருக்குப் பரிசு. பலரைக் கல்யாணம் செய்து கொள்ளாததில் மிகப் பலருக்குப் பரிசு என்று கொள்க.