ஏதாவது செய்யணும் பாஸ். இந்தக் கட்டுரையின் தலைப்பை முதலில் நர்சிம் பதிவில் பார்த்தபோது 'இளைஞரின் ஆர்வக் கோளாறு' என்று 'அனுபவ பெருசு' போல (என்னதான் நான் யூத் என்றாலும்!) எண்ணிக் கொண்டேன். பதிவு படிச்சு முடிச்சதும் அவர் மேல் மரியாதை வந்தது ம் சாரி .. மிகுந்தது.
பிறகு பரிசல், லக்கி, கோவி என்று பிரபலங்கள் போட்டதும் "சரிதான், இவர்கள் பிரபலத்தின் இரகசியம் இதுதான் போலும். எல்லாவற்றிலும் சொல்வதற்கு, பங்கிடுவதற்கு இவர்களுக்கு விஷயம் இருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் எப்பவும் 'வரும் ஆனா வராது' என்ற 'என்னாத்த கன்னையா' நெலம" என்று யோசித்து, சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் படிக்கச் சென்று விட்டேன்.
அதெல்லாம் மறந்திருந்து, சகஜ நிலை அடைந்து வருகையில் சத்யம், முத்துக்குமார், நாகேஷ் என்று நிறைய உலுக்கும் நிகழ்வுகள். இதெல்லாம் 'சூறாவளி, சுனாமி' சமாசாரம். ஏதாவது சொல்லப் போயி எக்குத்தப்பா ஆகிடப் போகுது. பேசாம பின்னூட்டங்களே கதின்னு நரசிம்ம ராவ் (நம்ம நர்சிம் இல்லீங்கோவ்) வேகத்துல முடிவு எடுத்து, என் கடமையை மிகுந்த ஆற்றலுடன் செயல் படுத்தி வருகிறேன். அங்கேயும் சில நாட்களாக இலேசான உராய்வுகள்; சிராய்ப்புகள்; ஒத்தரு நம்மள 'முட்டாளாயா நீ?' என்கிறார். இன்னொருத்தர் 'உனக்கேன் இந்த அக்கறை - நீ என்ன கலாசார காவலனா?' என்கிறார். அதுக்குள்ளே சில நண்பர்கள் 'கோவிச்சுக்காதீங்க' என்ற போதுதான் 'சரி இதுக்குக் கொவிச்சக்கணும் போல இருக்கு' என்று புரிந்துகொண்டு பாவ்லாவும் காட்டி விட்டேன். ரௌத்ரம் அவ்வப்போதாவது பழகாவிட்டால் ஒரு ஈ காக்கா கூட மதிக்காது என்று புரியவைக்கப் பட்டது.
எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன் இல்ல? என்னோட இந்த non-linear எழுத்தின் இரகசியம் சாரு ஆன்லைன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
ஆதள கீர்த்தனாம்பரத்தில.. மீண்டும் 'எதாச்சும் செய்யணும் பாசு'. இன்னிக்கு மீண்டும் நர்சிம் பதிவு. இது என்னடா 'விடாது கருப்பா' தொடருதேன்னு கார்க்கி காக்டெயில் அடிப்போம்னு போனா அங்கேயும் இதே பேயி 'ஜிங்கு ஜிங்குனு' ஆடுது. அங்க ஜோசப் வேற வழக்கம் போல அசத்தல் பின்னூட்டம். அவரே இந்த 'ஏதாவது' மேளாவில் ஐக்கியமாகி, ஒரு சூப்பர் பதிவு (சஞ்சய் கூட ஜாயின் பண்ணி என்று ஞாபகம்) போட்டிருந்தார். 'டேய் என்னாங்கடா - அடங்க மாட்டீங்களா' என்று வெறுத்துப் போய், "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே" என்று பாடிக்கொண்டே திரு.அனுஜன்யா (இவரு ரொம்ப நாளா பெண் பதிவர் என்று நினைத்திருந்தேன்!) அவர்களின் கவிதைச் சோலைக்குள் சென்று புகுந்துகொண்டு, நெருப்புக் கோழியாகப் புதைந்து விட்டேன்.
ஒழுங்கா வரிகளை மடக்கி எழுதி, 'கவிதை' செய்துகொண்டு நார்மலா இருந்த மனுஷன்.. என்ன கொடும சார் இது.. அவரும் 'ஏதாவது செய்யணும் பாசு' என்கிறார். என்னத்த சொல்ல. மேல அவரு என்ன சொல்றாருன்னு நீங்களே படிங்க.
பல்பு எண் ஒன்று:
எஸ்ரா அவர்களின் இணைய தளத்தில் படித்தது. நகரத்துக்கு வருபவர்களுக்கு குளிக்கும், குளித்து உடை மாற்றிக் கொள்ளும் பிரச்சனை மிகப் பெரியது. நிறைய சிறு, பெருநகரங்களுக்கு நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு நாள் வேலை நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும். பெரும்பாலான புண்ணியத் தலங்களும் அவ்வகையே. விடிகாலையில் அந்த ஊருக்கு வந்து சேருவோம். குளித்து, உடை மாற்றிக் கொண்டதும், நேராக ஒரு அலுவலகமோ, கருத்தரங்கோ, மலைமேல் சாமியோ பார்த்து விட்டு, ஹோட்டல் ஒன்றில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்ட் சென்று, நம்ம ஊருக்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதுதான் வேலை.
இதுல லாட்ஜ் ஒன்றைப் பிடித்து, ரூம் இருக்கான்னு பாக்கணும். அப்பப் பார்த்து 'சார், ஒரே ஒரு ரூம்பு தான் இருக்குது; நான்-ஏசி இல்ல. ஏசி தான் சார். எண்ணூறு ரூவா வாடகை. ரெண்டு நாள் அட்வான்ஸ் கொடுக்கணும். செக் அவுட் போது அட்ஜஸ்ட் செய்துக்கலாம்' னு ஒரு குண்டு போடுவார்.
"சார், ஜஸ்ட் குளிச்சுட்டு, டிரஸ் மாத்தணும் சார். இப்போ வெளியே போனா, அப்பிடியே ஊரப் பாக்கப் போயிடுவேன். இதுக்கு எதுக்கு சார் ஒரு நாள் ரூம்பு வாடகை. கொஞ்சம் நூறு-நூத்தம்பதுல... " என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவர் நம் மேல் சுவாரஸ்யம் குறைந்து, நம் எதிரிலேயே தந்தி பத்திரிகைக்குள் முழுகிவிடுவார்.
எவ்வளவு பேரால் இந்தத் தண்ட செலவு செய்ய முடியும். எவ்வளவு ஊர்களில் நம்மைக் கண்டு மிரளாத நண்பர்கள் தங்கள் வீட்டு குளியல் அறைகளைத் திறந்து விடுவார்கள். (ஏனென்றால், குளித்த பின் மெதுவாக 'ஜஸ்ட் நாலு இட்லி, கெட்டி சட்னி இருந்தால் போதும்' என்று விருந்தாளியாகும் கலை நம் அனைவருக்கும் இலகுவான சங்கதி அல்லவா!)
இதற்கு ஒவ்வொரு சிறு நகரத்திலும் மற்றும் புண்ணியத் தலங்களிலும் குளிக்கவும், உடை மாற்றவும் வசதி பொருந்திய 'குளியல் நிலையங்கள்' கட்டப்பட வேண்டும். தற்போது பெருநகரங்களில் இருக்கும் 'கட்டணக் கழிப்பறை' போல் அல்லாது, இன்னும் சற்று சுத்தத்துடன், ஒரு ஹோட்டலுக்கு உரிய இலட்சணங்களுடன் (ஒரு சுற்றுச் சுவர், கேட், ஒரு கட்டடம் இத்யாதி) மத்திய தர மக்கள் வரத் தயங்காத அளவில் அவை இருப்பது அவசியம்.
கட்டணம் ஐம்பது (ஒரு நபர்) முதல் நூற்றைம்பது (ஒரு நான்கு-ஐந்து பேர் கொண்ட குடும்பம்) வரை வசூலிக்கல்லாம். நகராட்சி அல்லது ஊராட்சி என்றில்லாமல் தனியார் கூட இவ்வாறு வசதிகள் செய்ய முயலலாம்.
நீங்க இன்ன சொல்றீங்க! (கார்க்கி, நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உனக்குக் குளிப்பதற்கு காசு கொடுத்தாலே ... இதுல நீ எங்க கட்டணம் செலுத்தி ..)
இதுக்கு ஒழுங்காகப் பின்னூட்டங்கள் வந்தால், அடுத்த பல்பு எரியும். ஆட்டோ வந்தால்.. பழையபடி கவுஜதான். அப்புறம் என்னைக் குறை சொல்லவேண்டாம்.
Showing posts with label உருப்படி. Show all posts
Showing posts with label உருப்படி. Show all posts
Wednesday, February 4, 2009
ஏதாவது செய்யணும் பாசு
Subscribe to:
Posts (Atom)