Friday, October 8, 2010

கடற்கரையில் ஓர் காலை - மீள் பதிவு!


பழுப்பு நிறத்தில்
கறுப்புத் தீற்றல்களுடன்
வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;
பூமியைச் சுற்றும் நிலாபோல
அவள் நகர்ந்தாலும்
சுற்றியபடியே தொடர்ந்தது;
அதிகாலையின் ஆரஞ்சும்
அலைகள் தெறித்த நீரும்
இந்த குட்டி சொர்க்கமும்
இரம்மியமாயின அவளுக்கு;
வாரியணைத்து எடுத்துச் செல்ல
அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

எழுத, படிக்க ஒன்றும் தோன்றாமல், பிடிக்காமல், வெறுமையின் உச்சகட்டமாக என் பழைய கவிதைகளையே படிக்கும் உன்மத்த நிலை ஏற்பட்டது. இதற்கு முந்தைய இடுகையை விட இது எவ்வளவோ தேவலாம் என்றும் தோன்றுகிறது :(.



முதன் முறை இடுகையாகப் போட்ட போது பின்னூட்டம் இட்டவர்கள் பட்டியலை இப்போது பார்க்கிறேன். வேலன்-மாதவ்-நர்சிம்-சந்தனமுல்லை-கார்க்கி என்று நல்ல நட்புகள். ஹ்ம்ம். காலம் எல்லாவற்றையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது! போலவே மீண்டும் மாற்றிப் போடுமா?  - இந்த மீள் பதிவைப் போல்!


எனக்கே சிரிப்பு வந்தாலும் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்..நீ ரொம்ப்ப்ப நல்லவன்டா...

மற்றபடி இப்போதைக்கு எழுதுவேன் என்று தோன்றவில்லை. காரணம் - எழுதும் ஆர்வம் வடிந்து விட்டதும், வாசிப்பு முற்றிலும் நின்று விட்டதும் தான். ஆதலினால் ...என்ஜாய் மாடி.
 

Tuesday, June 22, 2010

(நர்சிம்மைப்) பற்றியும் பற்றாமலும்

எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் ஒரு முடிவுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாதது தானே! அதனால்... நான் மீண்டும் எழுத வந்துவிட்டேன்.



முதலில் கனடா நாட்டுக்கு அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். பிறகு விடுமுறைக்கு உத்தர்கான்ட் மாநிலத்தில் சில இடங்களுக்குச் சென்றிருந்தேன். அதனால் பல நாட்கள் தமிழ் இணையம் அருகிலேயே வர முடியாத இனிமையான சூழல். சாவகாசமான ஒரு சனி (என்ன ஒரு குறியீடு!) மாலையில் தமிழ்மணத்தைத் திறந்தால் ... மன்னிக்கவும் நெடி தாங்க முடியவில்லை. Pulp Fiction படம் பார்ப்பது போல் எந்தப் பதிவை முதலில் படிப்பது, எது அதற்கான எதிர்வினை என்று புரிந்து கொள்ள முடியாத சிக்கல். முதலில் ஆர்வமாக, பிறகு அதிர்ச்சியாக, மேலும் ஆபாசமாக முடிவில் ஆயாசமாக எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.


விரிவாகச் சொல்ல நிறைய இருந்தாலும், ஒன்றும் சொல்லாமல் இருப்பதே குறைந்த பாதிப்பு தருவதாக அமையும் என்று தோன்றுவதால் ஒன்றும் சொல்லப்போவதில்லை. கிடைக்கும் கெட்ட பெயர்களில் 'கள்ள மௌனம்' ஓரளவு பரவாயில்லை என்பதும் ஒரு காரணம். ஆயினும் ஒரு சில எண்ணங்களைச் சொல்ல வேண்டுமென்றும் தோன்றுவதால்:


நர்சிம் எழுதிய புனைவை மிக சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். மிகத் தரக் குறைவாக எழுதப்பட்டது. நிச்சயம் கண்டிக்கப் பட வேண்டிய எழுத்து. நான் அவருடைய 'நண்பர்கள்' பட்டியலில் இடம் பெறுபவன். ஆம், இன்றும் கூட. அதனால் அதற்கு உரிய அதிக பொறுப்பும் வெட்கமும் எனக்கும் இருக்கிறது. அவரிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். எனது வருத்தத்தையும், வலுவான கண்டனங்களையும் தெரிவித்தேன். நான் பேசியபோது இருந்த நர்சிம் பெரிதாக சறுக்கியவர். ஆனால் அந்த வருத்தத்துடன் ஒரு நைந்து போன உள்ளத்தையும் உணர முடிந்தது.


வக்கிர எண்ணங்களே என்னிடம் இல்லை என்று சத்தியம் செய்யும் கனவான்களையும், நாரிமணிகளையும் நமஸ்கரித்து விட்டு விடுவோம். மீதமுள்ள பெரும்பாலோரான நமக்குள் ஆழ் மன வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும் - பல சமயம் நமக்கே தெரியாமல். அவற்றை பிறரிடம் பேசும்போதே தவிர்த்து விடுதல் உசிதம். அதையும் மீறி பேசிவிட்டாலும், எழுதுவது என்பது ஒரு வழிப் பாதை. திரும்பப் பெற முடியாதது. அப்போது அதீத கவனம் தேவை. இவ்வாறு பேசுதல், பிறகு எழுதுதல் முதலிய காரியங்களுக்கு முன் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சல்லடையில் போட்டு சலித்த பின்பே - குறிப்பாக கோபத்தின் வசத்தில் இருக்கையில் - வெளிக்கொணர்தல் கற்றோருக்கும், நாகரீகம் அறிந்தோருக்கும் அழகு. இந்த விஷயத்தில் நர்சிம் நம்ப முடியாத அளவுக்கு சறுக்கி இருக்கிறார். அதற்கான பலனாக வட்டியும் முதலுமாகப் பெற்றும் இருக்கிறார்.


மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... ஆத்மநாமின் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்த செருப்பைப்போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி


இத்துடனாவது விட்டதற்கு


சரிந்து விழுந்த பிரபலங்கள், நட்புக்குப் புது இலக்கணம் வகுத்தவர்கள் மற்றும் வெற்றி கொண்ட புரச்சி வீரர்கள் நடுவே நான் வியந்தது மணிகண்டனின் அபாரமான, பாரபட்சமற்ற பின்னூட்டங்கள், கல்வெட்டு அவர்களின் 'நச்' கருத்துகள் மற்றும் 'அதுசரி' என்னும் பதிவரின் நேர்மையான கண்டனங்களும், அதற்குப் பின்பான வாதங்களும்.


இப்போதெல்லாம் தமிழ் வலைகளைப் படித்தாலே என் முகம் பீதியில் வெளிறுவதைக் கண்ட என் சகோதரனிடம் பேசிக்கொண்டே என் மனைவி கொடுத்த காபி கோப்பையை வழக்கம் போல அலட்சியமாக இடது கையில் வாங்கப் போனவன், கண நேரத்தில் சுதாரித்துக்கொண்டு பணிவுடன் இருகைகளிலும் கோப்பையைப் பெற்றுக்கொண்டேன். 'இன்னாபா மேட்டரு; அளவுக்கதிகமா அண்ணிய கும்புடற?' என்ற சகோதரனிடம் ஆணாதிக்கவாதிகளின் அபாயகரமான நிலையைச் சொல்லி அங்கலாய்த்தேன். அவன் 'என்னது? காப்பி நீ போடுவதில்லையா? உங்க தமிழ்மணத்தில் போட்டுக் கொடுக்கட்டுமா உண்மைகளை' என்று பயமுறுத்துகிறான். ஆமாம், புடவைகளைத் துவைக்க சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா பாஸ்?

Friday, May 21, 2010

சா(ல்)மன் மீன்கள்

நகருக்குப் புறம் காட்டி
அன்பு செலுத்தும் காதலர்கள்
மற்றும்
காதல் செய்யும் அன்பர்கள்
வழிந்தோடும் காதலை
உள்வாங்கும் அலைகள்
காதலின் உத்வேகத்தில்
நிறம் மாறும் வானம்
முற்றிய காதல்
முழுதாய் வற்றியபின்
கடல் துறந்து
நகருள் நுழைந்து
நிரந்தரமாய் தொலையும்
சா(ல்)மன் மீன்கள்
புதிய காதலரின் அன்புக்கும்
அன்பர்களின் காதலுக்கும்
சில காதல் தோல்விகளுக்கும்
எப்போதும் தயாராக அலைகள்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் வானம்

(அகநாழிகை இதழில் பிரசுரம் ஆகியது)

Saturday, May 15, 2010

ஹாங்காங் பயணம்



கடந்த மார்ச் மாதம் சில நாட்கள் ஹாங்காங் சென்றிருந்தேன். முன்பே சென்றிருந்தாலும், தனியே அதுவும் வெளிநாட்டுப் பயணம் என்பதில் வரும் வழக்கமான அஜீரண உபாதைகள் ஒரு வாரம் முன்பே வரத் துவங்கியது. கனடாவில் இருந்து வரும் இரண்டு பெருசுகளுக்கு, வேறென்ன, மீண்டும் மீண்டும் பவர் பாயிண்ட் வித்தைதான். என்றைக்கு இதற்காகவே வெளியே துரத்தப் போகிறார்களோ !



பாஸ், பிசினஸ் கிளாஸ்.... என்றதும், 'என்னது? உன்னோட பவர் பாயிண்ட்ல உன்னோட சாதனைகள நீயே பார்க்கலையா? ஏதோ கள்ளத் தோணியில அனுப்பாம விமானத்தில் போவதே உனக்கெல்லாம் அதிகம்'னு துவங்கி அடுத்த பதினைந்து நிமிடங்கள் அன்பாக அர்ச்சனை செய்தார். 'சரி போறும், பி கேர்ஃபுல்' என்று என்னை நோக்கி ஆள்காட்டி விரல் காண்பித்து அவரை அடக்கி, ஐந்து மணிநேரப் பயணத்திற்கு தயார் ஆனேன்.




ஜெட் ஏர்வேஸ். வழமை நேர்த்தியில் ஜெட் ஏர்வேஸ் பெண்கள் (இந்த மாதிரி துவங்கும் ஒரு அருமையான கவிதை இருக்கிறது..விளம்பரங்கள் வேண்டாமென்று..மேலே சொல்லவில்லை). ஒரு சிக்கலும் இல்லாமல் ஹாங்காங் விமான நிலையம் சென்றடைந்தேன். சென்ற முறை பரிச்சயம் இல்லாததால் டாக்சியில் சென்று, எக்கச்சக்க செலவு செய்திருந்தேன். இம்முறை மெட்ரோவில் ஹாங்காங் ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து நான் தங்கும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்று விட்டேன். ஹாங்காங் மெட்ரோ பன்னிரண்டு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. நம்பவே முடியாத திறன். சுத்தம்.




என்ன, எல்லா பெயர்களும் 'ஹிங் வாங் யூங்' என்பது போலவே இருக்கிறது. என்னுடைய தென்னிந்திய உச்சரிப்பில், அவர்கள் ஆங்கில அறிவில் - அவர்களுடன் பேசுவதைவிட - ஞாயிற்றுக் கிழமை மதியம் தூர்தர்ஷனில் வருவது போல் சைகை மொழியில் பேசுவது சுலபம் என்ற முடிவுக்கு இரு சாராரும் வந்திருந்தோம். அவர்கள் சொல்லித்தான் தெரிந்தது -'இந்தியர்கள் சரி என்பதற்கும், முடியாது என்பதற்கும் பக்கவாட்டிலேயே தலையை அசைக்கிறார்கள்' என்று. அவர்கள் எல்லோரும் 'ஓகே, எஸ்' போன்ற நேர்மறைகளுக்கு மேலும் கீழும் என்றும், 'முடியாது, இல்லை' போன்ற எதிர்மறைகளுக்குப் பக்கவாட்டிலும் தலையாட்டுகிறார்கள். அவங்களுக்குள்ளும் ஏதோ ஒண்ணு இருக்கு பாரேன்.




நகரெங்கும் கேள்வி கேட்காமல் நாற்பது அல்லது அறுபது மாடி கட்டிடங்களை நட்டு விடுகிறார்கள். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், இது இன்னும் பெரிய நகரம் என்று தோன்றுகிறது. சிங்கை நிச்சயம் இன்னும் சுத்தமாக இருக்கிறது. மற்றபடி இந்த இரு நகர்-நாடுகளுக்கிடையில் நிறைய ஒற்றுமைகள். தாலாட்டுப் பாடும் தொனியில் கேட்டுக் கொண்டேயிருக்கும் மாண்டரின் மொழி. சில சமயம் கேண்டனீஸ். எங்கு பார்த்தாலும் கடல் உணவு மையங்கள். தண்ணீரில் எது மிதந்தாலும், நீந்தினாலும், கிடந்தாலும் பிடித்து வந்து பச்சையாகவோ, வறுத்தோ, மற்ற சித்திரவத்தைகள் செய்தோ நாவில் நீரொழுகச் சப்புக் கொட்டிக்கொண்டே இரண்டு குச்சிகளால் சாப்பிட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால், உபசரிப்பில், எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்பில் சீனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்லியதும், சமையல் கலைஞரிடம் சொல்லி கிட்டத்தட்ட நம்ம ஊர் கொழுக்கட்டை போல் (உள்ளே காய்கறிகள், பருப்பு என்று நினைக்கிறேன்) நிறைய செய்து 'என்ஜாய் மாடி' என்று மாண்டரினில் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று ஒழுங்காக தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.




சைனாவுடன் இணைந்தாலும், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற பல விஷயங்களில் பழைய தனித்தன்மையுடனே ஹாங்காங் இன்னமும் இருக்கிறது. நாமெல்லாம் தனி சுதந்திர நாடுகள் என்று நம்பும் தைவான், திபெத் போன்ற இடங்களைப் பற்றி துளியும் உணர்ச்சி வசப்படாமல், வீட்டிலுள்ள குறும்புக்கார சிறுவனைப் பற்றி பேசுவது போல் பேசுகிறார்கள். ரொம்ப பழம்பெருமை பேசுவதில்லை. ஒருவேளை மெயின் லேன்ட் சீனாவில் பேசுவார்களோ என்னவோ! ஹாங்காங் வாசிகளே தயக்கமின்றி ஒப்புக்கொள்ளும் விஷயம் - அடுத்த நூற்றாண்டின் நகரம் ஷாங்காய் என்று. அப்படி இருக்கிறதாம்.

நிறைய பேருக்கு ஆண்டனி சாங், அலெக்ஸ் சாய், ஜான் சாங் என்றெல்லாம் பெயர் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. ஆங்கில, ஐரோப்பியர்கள் நிமித்தம் குழந்தை பிறந்த உடனேயே தன் ஊர்ப் பெயருடன் ஒரு கிருத்துவப் பெயரையும் முன்னால் போட்டுக் கொள்வதாக அறிந்தேன். ஆனால் நிறைய பேர் தேவாலயங்களுக்குச் செல்வதையும் கண்டேன். மற்றும் சிலர் Tao என்னும் மதம் தமது மதம் என்றார்கள். இந்தியாவில் ஏன் இத்தனை விடுமுறைகள் என்று எக்கச்சக்க வயிற்றெரிச்சலுடன் கேட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டாலும், எல்லா மதப் பண்டிகைகளுக்கும் எல்லோரும் விடுமுறை கேட்போம் என்றேன்.


 இரண்டு கனடா கனவான்களும் 'சரி ஏதோ சொல்ல வருகிறான். விட்டுப் பிடிப்போம்' என்று புரியாத ஆங்கிலத்தில் சொல்லி கை குலுக்கினார்கள். இந்த முறையும் தப்பிச்சிட்ட - எப்படிரா மாதவா என்று சொல்லியவாறே ஊரைப் பார்க்க மெட்ரோவைப் பிடித்தேன். திரும்பி வருகையில்தான் நிதானமாக ஹாங்காங் ஏர்போர்ட் வளாகத்தை நோட்டம் விட்டேன். பெரிய, நேர்த்தியான விமான நிலையம். குறிப்பிடும்படியான நிகழ்சிகள் ஏதுமின்றி ஊர் வந்து சேர்ந்தேன்.




மும்பை விமான நிலையம். அதற்கு அருகாமையில் ஒரு ஜோபட்பட்டி (நம்ம ஊரு சேரி). எங்கும் புழுதி, சாக்கடை, வாகனப் புகை, நெரிசல். ஆனாலும் நம் நாடு. slumdog என்றாலும் millionaire தான். மன்னிக்கவும். சேரிநாய் என்றாலும் கோடீஸ்வரன். சரியா ரானின் ?

Monday, May 10, 2010

அபயனுக்காக ஒரு கவிதை

கண்ணாமூச்சி

அவனுக்கும் அவளுக்கும்

கண்ணாமூச்சியில் அதிகப் பிரியம்
அங்காடியில் காணாமல் போனவளை
வைர மாலைக்குள் கண்டெடுக்கிறான்
வீட்டுக்குள்ளிருந்தே மாயமானவனை
அறுபத்தாறாம் பக்கத்திலிருந்தோ
நீள்சதுர கண்ணாடியின்
இருபது மூன்றாம் தடத்திலிருந்தோ
மீள் கொணர்வாள்.
ஒருமுறை அவள் ஒரு பாடலுக்குள்;
ஒருமுறை அவன் ஒரு ஆடலுக்குள்;
சில முறை அவள் ஒப்பனைக்குள்
பல முறை அவன் குறுந்தகடுக்குள்
நேற்று பார்த்தபோது
எதிரெதிரே நின்றாலும்
எதையோ தேடினார்கள்
கண்ணாமூச்சியைத்
தொலைத்து விட்டதாகத்
தெரிந்து கொள்ள முடிகிறது
இவனோ இவளோ
எதிர்பாராத இடத்தில்
கண்டுபிடிக்கப் பட்டார்களோ
என்ற பதட்டம் மெல்லப்
பரவுகிறது இப்போது

(அபயன் நன்றாக, வேகமாகச் சாப்பிடுவதற்காக எழுதியது. அபயன் யாரென்பது, அவன் தந்தை பின்னூட்டம் போடும் போது தெரிய வரலாம்)

Tuesday, April 13, 2010

மறக்காமல் மறப்பது - (எதைப்) பற்றியும் பற்றாமலும்

அலுவலக நிமித்தம் வெளியில் செல்லும் போது நிச்சயமாக நான் ஏதாவது முக்கியமான விஷயத்தை மறந்து விடுவேன். மொபைல், பேனா, கைக்குட்டை, பர்ஸ் போன்ற மறதிக்கு என்றே உருவாக்கப்பட்ட வஸ்துக்கள். இவற்றையெல்லாம் விட பிரதானமாக விசிடிங் கார்ட். பார்த்த மனிதர்களையே மீண்டும் பார்க்கப் போகிறோம் என்றால் பரவாயில்லை. எப்போதும் குறைந்தது ஒரு புது முகமாவது 'யுவர் கார்டு ப்ளீஸ்' என்னும் போது நம்மிடம் கார்டு இல்லையென்றால் ....ஏற்கெனவே அசடு வழியும் முகத்தில் கூடுதலாக வழியும். நம்ம தலைமையில், சகாக்களோடு இந்த மாதிரி நேர்ந்தால் 'சாரி பாஸ்; இப்பத்தான் மூணு மீட்டிங் முடிச்சுட்டு நேர வரோம். கார்டு தீர்ந்திடுச்சு' என்று பந்தா பண்ணி தப்பித்து விடலாம். பாசோட போகும்போது இந்த மாதிரி அலம்பல் எல்லாம் பண்ண முடியாது.

போன வாரம் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கையில் (மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன் - ஆமா, ஆபிசில் தான்) பாஸ் திடீரென்று ஃபோனில் "உடனே கிளம்பி ஓபராய் ஹோட்டல் லாபி வந்துவிடு. கனடா நாட்டு மந்திரி மற்றும் கனடா ஹை கமிஷனர் இருவரையும் பார்க்கப் போகிறோம். அவங்களுக்கு இந்தியன் எகானமி பத்தி கொஞ்சம் பேசணுமாம்' என்றார். சரின்னு பத்து நிமிஷத்தில் அங்கே போய், அந்த இரு வெள்ளைக்காரர்களைப் பார்த்து மையமாகச் சிரித்தேன். அவர்கள் கைகுலுக்கி ஆளுக்கொரு கார்டு கொடுத்தார்கள். நான், பாக்கெட்டில் துழாவ...அடாடா, கார்டு மறந்து விட்டேன். நல்ல வேளையா பாசு போன்ல இருந்ததால் கவனிக்கவில்லை. ஆனால், இந்த இரு ஆட்களும், 'இதோ கார்டு வெளிய வரப்போகிறது' என்று ஆர்வமாக என் சட்டைப் பையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் ஏற்கெனவே அவர்களுக்கு தலா ஐந்து கார்டு கொடுத்த தோரணையில் ஓரமாக சென்று அமர்ந்து விட்டேன். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. என்னாலும்தான். அவர்கள் ஜி.டி.பி. க்ரோத் சதவீதம் பற்றிக் கேட்க நான் காட்ரீனா கைஃப் உயரத்தை மனதில் கொண்டு உத்தேசமாக 5.9 என்றேன். ஒரு வழியாக மீட்டிங் முடிந்து கை கொடுக்கும் தருவாயில், அந்த மினிஸ்டர் 'உங்கள் கார்டை நான் வாங்க மறந்து விட்டேன்; தர முடியுமா' என்று கேட்க, 'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன். அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்போர்ட் எழுதுவாரோ!

***************************

ஐ.பி.எல். கன ஜோராகப் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் பந்துகளுக்கு இடையிலும் வரும் விளம்பரங்கள் நிறைய எரிச்சலைத் தந்தாலும், தமிழ் வலையுலகின் எரிச்சலூட்டும் பதிவுகள் போலவே, இதுவும் பழகி விட்டது. என்னுடைய ஆதர்ச ராயல் சேலஞ்சர்ஸ் இது வரைக்கும் மூச்சைப் பிடித்துக்கொண்டு போட்டியில் இன்னமும் இருக்கிறார்கள். பார்க்கலாம். அடுத்த பிடித்த அணிகள் முறையே கே.கே.ஆர்., மும்பை மற்றும் டெல்லி. சென்னை? எனக்கு தோனி இருப்பதால் ...அறவே பிடிக்கவில்லை. சென்னையில் வசிக்காததின் பல சௌகர்யங்களில் இதுவும் ஒன்று. சென்னை அணியின் 'விசில் பாட்டு' இங்கு நிறைய பேருக்கு ஒரு மந்தகாசப் புன்னகையைத் தருகிறது.

***************************

கொஞ்சம் அரசியல் பேசலாமா? ஸ்டாலின் துணை முதல்வர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இப்ப திடீர்னு அழகிரி 'அதெல்லாம் கிடையாது; நானும் கோதாவில் இறங்குவேன்'னு சொல்றது தப்பாட்டம். இன்றைய தமிழக சூழலில் ஸ்டாலினை விட தகுதியான ஒருவர் தி.மு.க. மட்டுமில்லை; எந்தக் கட்சியிலும் இல்லை என்பது என் எண்ணம். (ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்?).

நம்ம பதிவர் சஞ்சய் காந்தி எழுதும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி பற்றிய இடுகைகளை இங்கு படிக்கவும். எனக்கு ராஹுலிடம் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. (பின்னாளில் நிச்சயம் வருத்தப் படுவேன் என்று பட்சி சொன்னாலும்).

***************************

இப்போதெல்லாம் வாசிப்பது முற்றிலும் நின்று விட்டது. ஆபிசில் வேலை அதிகம் (அட நிஜமாகவே). எனக்குத் தெரிந்து பிரமாதமான இடுகைகள் எதுவும் படிக்கவில்லை. (தினமும் நான் படிப்பது கார்க்கி, ஆதி, பரிசல் மற்றும் அனுஜன்யா). ஏதாவது மிஸ் பண்ணி இருந்தால் சொல்லுங்கள். அண்மையில் ராகவனின் தளத்தில் இருந்த கவிதைகள் படித்தேன். ரொம்ப நல்லா இருக்கு. இதோ அவர் வலைத்தளத்தின் சுட்டி.

மாதிரிக்கு ஒரு கவிதை

நரைத்த இரவுகள்

சுவர்களின் பக்கவாட்டைப்

பிடித்துக் கொண்டும்
இரண்டு படிகளை கடக்கிறேன்
வாசலில் கிடந்த
பால் பாக்கெட்டை
நடுங்கும் விரல்களில் எடுக்கிறேன்
பாக்கெட்டின் குளிர்ச்சியை
உணர முடியவில்லை
ரத்தம் சுண்டி ஸ்மரனை இன்றி
ஒரு இடுக்கியைப் போல
எடுக்கிறது விரல்கள்
அயர்ந்து உறங்குபவளின்
மூப்பு அறையெங்கும்
எடுக்காத நூலாம்படையாய்
கயிறு கட்டிய மூக்கு கண்ணாடி
மருந்து புட்டிகள், மஃப்ளர்
இடது பக்கம் அவளுக்கானது
வலது பக்கம் எனக்கானது
சுவரெங்கும் பிடித்து நகரும்
கைகளின் உராய்வில்
உதிர்ந்து தொங்கும் காரை
கண்ணாடி, பீங்கான் தவிர்த்து
வருஷங்கள் ஆகி விட்டது
பாலில் நிறைய தண்ணீர் விட்டு
செய்த தேனீரும்
இதமான சூட்டில் வெண்ணீரும் செய்து
அவளை எழுப்பினேன்
எழுந்தவள் முட்டி வலிக்குதுப்பா
என்றாள் ஹாட்பேக் குடுங்களேன்
என்றவளிடம்
அலையடிக்கும் தேனீர் குவளையை
நீட்டினேன், சப்திக்க வாங்கியவளின்
தேனீரின் மிச்சம்
கண்ணத்தில் பச்சை படர்த்தி
குளிர் நிழலை விரித்தது


குழந்தைகள் பெருகி வளர்கிறது

மரநிழலில்

வா.மணிகண்டன் சொல்வது போல் தமிழ் நாட்டில் கவிதை வாசிப்பவர்களை விட, கவிதை எழுதுபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். ராகவன் கவிதை நிறைய வாசித்து, நல்ல கவிதை எழுதுபவர்களின் தளங்களில் பின்னூட்டம் மூலமாக விமர்சிக்கிறார். இது வரை என் வலை பக்கம் வரவேயில்லை. வெரி ஸ்மார்ட் ஃபெல்லோ!
 
***************************

Saturday, April 3, 2010

அகநாழிகை - ஒரு பார்வை


முதன் முறையாக அகநாழிகை இதழ் படித்தேன். இது மூன்றாவது நாழிகை (இதழ்) என்று நினைக்கிறேன். அட்டைப்படம் சுழன்று நடனமாடும் ஒரு நங்கையின் படத்துடன் நன்றாக இருக்கிறது.


தலையங்கம் ‘விழைவின் பெருங்கனவு’ என்ற தலைப்பில் இலக்கியப் பின்புலத்தில் நிகழும் அரசியல் பற்றி வாசு எழுதியிருக்கிறார். “கவனமற்ற சொல்லாடல்கள், சிதைந்த உரையாடல்கள் நம் மூளைக்குள் தேங்கித் ததும்பி கணங்கள் தோறும் எப்படி எதைச் செய்வது என யோசித்தபடியே வழிந்து கொண்டிருக்கின்றன. இயல் நிகழ்வுகளைத் தவிர்த்து அனிச்சையான செயல் என்பதே அற்றுப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உள்மன விகாரத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுவே பலருக்கு உவகையான வாழ்க்கையாகவும் ஆகிவிட்டிருக்கிறது.” என்று எழுதுகிறார். இதில் நிறைய கசப்பு இருந்தாலும் உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை.

மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொடர்ச்சி இந்த இதழில் இருக்கிறது. வாசுவின் தளத்தில் இது பதிவேற்றம் செய்யப்பட்டும் இருக்கிறது. ஒரு இலக்கியவாதி ஆளுமையாக வளரும் போது தவிர்க்க முடியாத அரசியல் சூழலை இந்த நேர்காணல் உணர்த்துகிறது. இலக்கிய உலகின் அரசியலைப் பற்றிய பரிச்சயமும் ஆர்வமும் குறைவாக இருப்பதால் அதைப் பற்றிப் பேச அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால் மனுஷ்ய புத்திரன் நவீன தமிழ்க் கவிதை பற்றிச் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.

“நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றன. உரையாடலின் சாத்தியங்ளை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டு வருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன். மேலும் பிரத்யேகமான அனுபவங்களை கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டு வருகிறேன்.” என்கிறார். உண்மை தான். இத்தகைய கவிதைகளே பெரும்பான்மை வாசகர்களைக் கவரவும் செய்கின்றன. ஆயினும் எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்.

எனக்குப் பிரியமான கவிஞர் ரெளத்ரன் இந்த இதழில் ‘ரெஜியின் பூனை’ என்ற சிறுகதை எழுதி இருக்கிறார். இது போன்ற கதைகளை ஏற்கெனவே படித்த உணர்வு எப்படியோ வந்தது. ஒரு வேளை நிறைய படைப்பாளிகள் அலுக்கும் அளவுக்கு பூனைகள் மீது கவனம் செலுத்துவதால் வந்த ஆயாசம் என்று கொள்ளலாம். ஆனால் கதையின் நடையும், பூடகத் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்தது. பூனைகளைப் பற்றிய அவதானிப்பும் சுவாரஸ்யம். – “ நாய்களைப் போல் பூனைகளை சில ரொட்டித் துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது. பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை” – “பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல. அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன. பூனைகளின் மொழி கவிதையால் ஆனது’ என்றெல்லாம் சொல்கிறார்.

சத்யஜித்ரேயின் பெங்காலிக் கதையை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கவிதாயினி நதியலை. ‘சஷ்மலின் வினோத இரவு’ என்னும் கதை சுவாரஸ்யம். அழகாக மொழியாக்கம் செய்திருக்கும் நதியலையைப் பாராட்ட வேண்டும்.

மற்றொரு சிறுகதை சாந்தன் எழுதிய ‘கோழை’. கதையில் இறுதியில் வரும் ‘அடி வயிற்று விம்மல்’ நாம் அனைவரும் ஒரு தினம் அனுபவித்தது அல்லது அனுபவிக்கப் போவது என்பது நடைமுறை யதார்த்தம்.

கமலாதாஸ் எழுதிய சிறுகதையை ‘பிண ஆய்வாளன்’ என்னும் தலைப்பில் தி.சு.சதாசிவம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொழியாக்கத்தில் எதிர்ப்படும் சிக்கல்கள் இந்தக் கதையிலும் இடர்ப்படுவதை உணர்ந்தேன். எதனாலோ இந்தக் கதை மனதைக் கவரவேயில்லை.

இந்த விதத்தில் நான் எஸ்.ஷங்கர நாராயணன் மொழியாக்கம் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு மொழிபெயர்ப்புக் கதை படிக்கும் உணர்வே வருவதில்லை. அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் கதையின் தலைப்பு ‘முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வேளை’ என்று வந்து விட்டதென்று நினைக்கிறேன்.

நம்ம அய்யனாரின் கட்டுரை ‘மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் : துபாய் திரைப்பட விழா’ நான் ஏற்கெனவே அவர் தளத்தில் படித்து விட்டேன். அவசியம் படிக்க வேண்டிய இடுகை.

போலவே வா.மணிகண்டன் ‘கவிஞன் ஏன் காணாமல் போகிறான்’ என்னும் கட்டுரை எழுதியிருக்கிறார். கவிதையில் நாட்டமிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

லாவண்யாவின் அகத்திணை கட்டுரையும் நல்ல வாசிப்பனுபவம்.

நூல் மதிப்புரை பகுதியில் கே.ஸ்டாலின் எழுதியிருக்கும் ‘பாழ் மண்டபமொன்றின் வரைபடம்’ என்னும் கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம் ‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள்.

வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது
என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு

என்ற கவிதை கவர்ந்தது.

இதழ் முழுவதும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் பதிவுலகுக் கவிஞர்கள் எழுதியது. நல்லா இருக்கு.

அச்சு மற்றும் தாளின் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும். நிதி நிலைமை தெரியாமல் விமர்சிப்பது சுலபம். மேலும் இலக்கியத்திற்கு இவை அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது.

மொத்தத்தில் நல்ல வாசிப்பனுபவம். ‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

Wednesday, March 31, 2010

விரிசல்


ஒரு சாயங்கால வேளையில்

கண்ணாடியோ பீங்கானோ
விழுந்து நொறுங்கும் சப்தம்
பொதுச்சுவருக்கு அப்பால்
பக்கத்து வீட்டில்
மையங் கொண்டிருந்தது
கதவருகில் சென்றபோது
கசிந்து கொண்டிருந்தன
கடுமையான வார்த்தைகள்
ஒவ்வொரு துண்டும்
பொறுக்கப் படும் ஓசை
ஒன்றில் அவன் முத்தம்
ஒன்றில் அவள் வெட்கம்
சிலவற்றில் அவர்கள் சத்தியம்
ஒரு மிகப்பெரிய துண்டில்
இப்போது அழுது கொண்டிருக்கும்
குழந்தையின் சிரிப்பு
பதட்டமாக நானும் நானும்
பேசித் தீர்க்கிறோம்
மறுநாள் காலையில்
கலங்காத கண்களுடனும்
வழக்கமான புன்சிரிப்புடனும்
அவளைக் கண்ட எனக்கு
நிம்மதியுடன் கொஞ்சம் ஏமாற்றமும்
வார இறுதியில்
கைகோர்த்துச் சென்றவர்களின்
சிரிப்பின் விரிசல்
மாயப்பசையில் இணைந்திருந்தது
கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும்
எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது

(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

Saturday, March 20, 2010

அந்தமான் தீவுகளில் ஒரு off-site


இந்த வருடத்தின் off-site எனப்படும் அலுவலகத்தில் இல்லாத அலுவல் எங்கு வைப்பது என்று பலபேரைக் கலந்தாலோசித்து முடிவில் அந்தமான் தீவுகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏற்கெனவே நான் மட்டும் முன்னார் சென்ற கடுப்பில் இருந்த வீட்டு பாஸ் 'ஹும், அந்தமான் எல்லாம் கிரிமினல்ஸ் தான் போவாங்க' என்று கடுப்பேற்றினாள். நான் 'சுதந்திரப் போராட்ட வீரர்கள் சென்ற இடம் அது - எனக்குப் பொருத்தமா தான் இருக்கு' என்றதும் கப் சிப்.

மும்பையிலிருந்து அகால வேளையில் (காலை நான்கு மணி) கிளம்பி, சென்னை அடைந்து, பிறகு அங்கிருந்து இன்னொரு விமானத்தில் போர்ட் ப்ளைர் சென்றடைந்தோம். போர்ட் ப்ளைர் ஒரு மினி கோவா போல் இருக்கிறது. மேடு, பள்ளங்கள், ஆங்காங்கே நீலக்கடல், தென்னை மரங்கள், வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் என்று. அவசரமாகச் சாப்பிட்டு, உடனே Havelock என்னும் தீவை நோக்கிப் பயணம் செய்தோம் - ஒரு குட்டிக் கப்பலில் - சரி சரி ஒரு பெரிய படகில்.



கொஞ்ச நேரம் வெளியில் வெய்யிலில் நின்று நீலக்கடல், தூரத்து தீவுகள், அருகாமை நங்கைகள் என்று சம்பிரதாயமாகப் பார்த்து விட்டு, இதற்கு மேல் நின்றால் நம் சிவந்த மேனியின் எழிலுக்குப் பாதகம் வந்துவிடும் என்று குளிர் சாதன அறைக்குள் தஞ்சம் புகுந்தோம். கிட்டத் தட்ட மூன்று மணி நேரப் பிரயாணம். ஹேவ்லாக் தீவைச் சென்றடைகையில் மாலை நாலரை மணி. எல்லா ரவுடிகளும் ஜீப்பில் ஏறி, நாங்கள் தங்க வேண்டிய விடுதிக்குச் செல்ல இன்னும் ஒரு அரைமணி நேரம் ஆகியது. கடற்கரைக்கு மிக அருகில், அடர் வனத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் விடுதி. 'நித்யானந்தரும் சாரு நிவேதிதாவும்' என்று சொல்லி முடிப்பதற்குள் இருட்டி விட்டது. மாலை மயங்கி இருளில் விழும் நேரம், கடற்கரையும், அருகாமை அடர் வனமும் மிக ரம்மியமாக இருந்தது. இது வரை நான் கடற்கரைக்கு இவ்வளவு அருகில் அடர்ந்த வனம் பார்த்ததில்லை.


Barefoot என்னும் நிறுவனம் நடத்தும் விடுதி அது. இரண்டு பேருக்கு ஒரு குடில். நிறைய மூங்கில். மேலே கூரை. இரவு சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று நினைத்தால் சீட்டாடக் கூப்பிட்டார்கள். சரி என்று நண்பர்களின் குடிலுக்குச் சென்றால், அவர்கள் செம்ம டென்ஷனில் இருந்தனர். வராண்டாவில் ஏதோ பழுப்பு நிறக் குச்சி என்று எடுக்கப் போனால், அது ஒரு பாம்பு. நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்து, பிறகு சிறிய சலுகையாக இரண்டு மூங்கில் கொம்புகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டு வாலை மட்டும் ஆட்டியது. (என்பதாக அதை அருகில் சென்று பார்க்கும் துணிவு இருந்தவர்கள் சொன்னார்கள்). என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் விளையாட்டாக எடுத்துக் கொண்டது இன்னும் பீதியைக் கிளப்பியது. நண்பர் ஒருவர் 'யோவ், பயப்படாத. அது தண்ணிப் பாம்பு. விஷம் கிடையாது' என்றார். தண்ணிப் பாம்புக்கு தரையில் என்ன வேலை என்ற கேள்வி கேட்ட லாஜிக்கை அந்தப் பாம்பு உட்பட யாரும் செவி மடுக்கவில்லை.



இரண்டு நண்பர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டே, பாம்பை நினைத்தபடி சீட்டாடி விட்டு குடிலுக்கு வந்து சேர்ந்தோம். உறக்கம் கொஞ்சம் தாமதமாக வந்தது. வனத்திற்கு நடுவில் இருப்பதால் அதன் இரவு மௌனம் ஒரே ரகளையாக இருக்கிறது. பகல் நேர ஆசாமிகள் வெளியேறி நைட் டுட்டி பார்க்கும் ஆசாமிகள் தொழிற்சாலையில் ஒரு விதமான ஆர்ப்பாட்டத்துடன் நடப்பார்களே - 'எவன்டா என்னைக் கேள்வி கேட்பது' என்னும் தொனியில். அந்த மாதிரி இருந்தது இரவு வனம். வேறுவித பட்சிகளின் ஒலி. பூச்சிகளின் சிறு சிணுங்கல்கள். இரவு மிருகங்களின் சருகுகள் மீதான நடையின் வித்தியாசமான சப்தம்.



இரவுக் கனவில் நான் அருகில் சென்று பார்க்க அஞ்சிய தண்ணிப் பாம்பு, ஐந்து தலைகளுடன் பூதாகாரமாக கடலில் படுத்துக் கொண்டு 'வாருங்கள் விஷ்ணு தேவரே' என்று அழைத்தது. மகாவிஷ்ணுவாக ஆசை இருந்தாலும், காலைப் பிடித்துவிடும் மகாலட்சுமி மும்பையில் இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.



விடுதியில் நல்ல சாப்பாடு, டிபன், இத்யாதிகள் கிடைக்கிறது. off-site என்றால் கொஞ்சமாவது அலுவலக விஷயங்கள் பேசியே ஆக வேண்டும் என்று சில அசடுகள் ஒற்றைக் காலில் நின்றதால், ஒரு இருபது நிமிடங்கள் வனத்துக்குள் மேலும் நடந்து, ஒரு அருமையான மரங்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் அலுவலக சமாசாரங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். விடுதிக்காரர்கள் ஏற்பாட்டில் நாற்காலிகள், ஒரு white board என்று நிசமாலுமே ஒரு இரண்டு மணிநேரம் பேசினோம். அதாவது மற்றவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். நல்ல ஹெவி டிபனுக்குப் பிறகு, கடற்கரை அருகாமை; வெய்யில் தெரியாத உயர் மரங்களின் தென்றல். என்னைப் போன்ற பிறவிக் கவிஞனுக்கு மனம் எப்படி அதில் இலயிக்கும்?


நிறைய உயர் மரங்களின் உச்சாணிக் கொம்புகளிலிருந்து ஏராளமான இலைகள் சுழன்று, நேராக, குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு, மிதந்து கொண்டு, பறந்து கொண்டு என்று பல்வேறு விதங்களில் பூமியை நோக்கி வந்து கொண்டே இருந்தது என்னால் மறக்க முடியாத காட்சி. மற்றவர்கள் அதைச் சற்றும் சட்டை செய்யாமல் அடுத்த வருடம் இன்னும் எவ்வளவு இலாபம் என்று கடன் வாங்கிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது பெருந்தேவியின் மகத்தான கவிதை ஞாபகம் வந்தது. இதோ அது உங்களுக்காக:

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றை மரத்தின் ஒரே இலை விழுகிறது
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை

விழுந்து கொண்டிருக்கிறது

யாத்ரா சொல்வது போல், இந்தக் கவிதையின் கனம் தாங்க இயலாததாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் படித்தால் இதன் தாக்கம் உங்களுக்குப் பிடிபடும்.

ஒரு முறை வளர்மதி 'leaf, treeless' என்று துவங்கும் கவிதையை 'ஒரு இலை, மரமற்று' என்று தட்டையாக மொழி பெயர்க்காமல் - 'காற்றில் அலையும் இலையொன்று' என்று மொழி பெயர்த்ததை ஜ்யோவ் சிலாகித்ததும் நினைவுக்கு வந்தது.



கவிதை பிறக்கும் கணங்கள் சிலிர்ப்பானவை. உன்னதமானவை. எனக்குத் தோன்றியவற்றை எழுத முயன்று கீழ்க் காணும் வரிகளில் எழுதி வைத்தேன். அதை மகத்தான கவிதையாக செதுக்கும் உத்தேசத்தைக் கைவிட்டு விட்டேன். சில புகைப்படங்கள் தொழில் நுட்பத்தில் சொதப்பினாலும், பொன் தருணங்களைப் பூட்டி வைத்திருக்குமே - அது போல.

அடர் வனத்தின்
உயர் மரங்களின்
உச்சியிலிருந்து
தாமாகப் பிரிந்த இலைகள்
பறக்கத் துவங்கின
கைவிடப்பட்ட இலைகள்
மிதந்து கொண்டிருந்தன
விலகக் கோரப்பட்டவை
வேகமாக வீழ்ந்தன
பட்ட மரமொன்றில்
துளிர்த்திருந்த ஒற்றை இலை
முதியோருக்குப் பிறந்த
தாமதக் குழந்தையை
நினைவு படுத்த
அனிச்சையாகப் பிடுங்கிவிட்ட
வேறொரு செடியின் இலையை
கொலை செய்துவிட்டதாகப்
பக்கவாட்டுப் பார்வையில்
குற்றம் சொன்னது
முற்பிறவியில் முன்னோராக
இருந்திருக்கக் கூடிய காகம்
மேலும் சில கற்பிதங்களுடன்
கானகமும் காகமும்
மௌனமாகக் காத்திருக்க
கண்ணாடியும் இரும்பும்
நிறைந்திருக்கும் காட்டுக்கு
விரைந்து திரும்பினேன்


பெருமரங்களுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடியதும், அதிகாலை கடற்கரை நடையும், நீல மற்றும் பச்சை வண்ண கடலும், துகள்கள் என்றும் சொல்ல முடியாத பொடிப்பொடியான மணலும், அபூர்வமாகத் தென்பட்ட பழங்குடிகளும் (அவர்கள் இனம் 55,000 வருடங்கள் முன் தோன்றியது என்று சொல்கிறார்கள். நாம் மூன்றாயிரம் வருடங்களுக்கே இவ்வளவு பெருமைப் படுகிறோம்) என்று கலவையான நினைவுகள் இன்னும் பலநாட்கள் என்னுடன் இருக்கும்.


நிச்சயம் அனைவரும் போய்ப் பார்க்கவேண்டிய இடங்களில் அந்தமான் தீவுகளும் ஒன்று.


இவ்வளவு அழகான (!) இடுகைக்கு முடிவில் ஒரு திருஷ்டிப் பொட்டு போல் ஒரு புகைப்படம். இனிமேல் இதுதான் profile படம்.

Thursday, March 4, 2010

நித்யானந்த நினைவுகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்



நித்யானந்தர் விவகாரம் புதன் காலையில் அலுவலக நண்பர் ஒருவர் சொல்லித் தெரிய வந்தது. முந்தைய நாள் இரவு தமிழகத்தின் குட்டி சூப்பர் சிங்கர் தேடலுக்கும், ஜப்பானிய சிறார்கள் உலாவும் ஹங்காமா சானலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதில், நலிவுற்றவர் கட்சியான எனக்கு செய்திகளைப் பார்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை. குழும அஞ்சல்களில் 'கதவைத் திற - காண்டம் (நெடில்) வரட்டும்' என்ற தலைப்பில் நண்பர்கள் அதகளம். நித்தியுடன் சேர்ந்து அவரைக் கடவுளாகக் கொண்டாடிய ஆகப் பெரும் எழுத்தாளரையும் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். So much pent up energy! சாரு இவர்களை இவ்வளவு தூரம் (பல்வேறு காரணங்களுக்காக) வெறுப்பேற்றி இருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஆச்சரியமாக இருந்தது.


சாருவுக்கு அவரது தனிப்பட்ட அனுபவங்கள் நித்யானந்தர் மேல் நம்பிக்கை தரும்படி இருந்திருக்கலாம். அதனால் அவரைக் கொண்டாடி இருக்கலாம். தவறு இல்லை. ஆனால், scandal வெளியான பின்பு 'ஆமாம்பா, ஏமாந்துட்டேன். என் பேச்சைக் கேட்டு ஏமாந்த இன்னும் சிலருக்கும் என் வருத்தங்கள்' என்று சுருக்கமாக சொல்லி இருக்கலாம். இந்த மாதிரிதான் இதற்கு முன்பு ஏமாந்த இஸ்லாமிய சாமியார் பற்றி சொல்லிக் கொண்டார். ஆனால், இப்போது என்னவோ சால்ஜாப்புகள். இப்போதுதான் சாரு மேல் மரியாதை குறைந்து, பரிதாபம் அதிகமாகிறது. ஒரு பக்கம் பொதுப்புத்திகள் சாடத் தயங்கும் மொழியில் நித்யானந்தரைத் திட்டிக் கொண்டே, இவர் ஆட்டு மந்தைகள் என்று எள்ளி நகையாடும் ஆசிரமப் பெண்கள் ரேஞ்சுக்கு 'புற்று நோயைக் குணப்படுத்தினார்' என்று இன்னும் கூட புருடாக்களை நம்புவதை என்ன சொல்ல! கல்வெட்டு அவர்கள் சொல்வது போல் இவர்கள் எல்லோரும் 'வெறும் கதை எழுதிகள்' மட்டுமே போலும்!

தமிழர்களின் ஐந்தாண்டுத் திட்டங்களில் ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு ஏமாறிக் குமுறுவதும், சாமியார்கள் பின்னே ஓடி, பிறகு முட்டாள்கள் போல உணருவதும் பிரதானமாக இருக்கும் அவலம் எப்போது மாறும் என்று தெரியவில்லை.

சன் டிவி நீலப் பட ரேஞ்சுக்கு இருந்த காட்சிகளை தொடர்ந்து மீள் ஒளிபரப்பு செய்ததை சொரணையுள்ள தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். அவர்கள் மேல் உயர்ந்த அபிப்பிராயம் எப்போதுமே இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் புதுப் புதுப் பாதாளங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். Creatures without any journalistic ethics!

கொஞ்சம் தாமதமாகத்தான் என்னுடைய பொதுப் புத்தி கழன்று, முற்போக்கு எண்ணம் தலை தூக்கியது. இது என்ன நடிகைகள் ஏன் இப்படி உழல்கிறார்கள்? ஒரு முறை இந்த சினிமாத் துறையில் நுழைந்து விட்டால், இயல்பு வாழ்க்கை வாழவே முடியாதா? சமூகம் ஏன் இவர்களை இப்படித் துரத்துகிறது என்ற சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. நடிகைகள் 'நேற்று ஒரு மாண்பு மிகு. அதற்கு முன் தினம் பிரபல தொழிலதிபர்; இன்று மனிதக் கடவுள்; நாளை ஒரு உயர் அதிகாரி' என்று பணம், அதிகாரம் இருக்குமிடத்திலேயே ஐக்கியமாகி விடுகிறார்கள். இது ஒரு தொழில் என்றான பின்பு இந்த விஷயத்தில் நடிகையை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்ததை தொலைக் காட்சியில் தொடர்ந்து காட்டி, அவரைக் கேவலப் படுத்தியதற்கு அவர் தொலைகாட்சி மேல் வழக்குப் போட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன்.

சன் நியூசில் கல்கி என்னும் மற்றொரு சாமியாரின் ஆசிரமத்தைக் காட்டினார்கள். எவ்வளவு பெரிய மாளிகை - ஆசிரமம் என்ற பெயரில்! நித்யானந்தா கூட இவ்வளவு இடங்களில் பெரிய 'ஆசிரமங்கள்' கட்டி இருப்பது - நம் மக்களின் மேல் அவ்வளவு கோபமும், எரிச்சலும் வருகிறது. இவர்களுக்கெல்லாம் தெருவில் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால், கோவில் வாயிலில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோக ஜீவன்களைக் கண்டால், சாலைப் பணியாளர்களிடம், துப்புரவுப் பணியாளர்களிடம், காலணி தைப்பவரிடம், மாலைத் தொடுப்பவரிடம் என்று விளிம்பில் இருப்பவர்களைக் காணும் பொழுது மனதை ஒன்றுமே செய்யாதா? ஆசிரமத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொட்டுவதற்குப் பதில் இவர்களுக்கு எல்லாம் உதவலாம். இதற்காகவாவது பதிவுகளைப் படித்தால் நிச்சயம் எரிச்சல் வரும் கலகக்காரர்கள் ஆசைப்படும் புரட்சி வந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. புரச்சி வீரர்களின் இந்த சீசனின் கோடை வாசஸ்தலம் இஸ்லாம் என்று தெரிகிறது. அல்லாஹ் பிழைகளை மன்னித்து அனைவரையும் காப்பாற்றட்டும்.

Wednesday, February 17, 2010

எல்லைகள்

தொட்டிக்குள் தங்க மீன்கள்

அலைந்து கொண்டிருக்கின்றன
இங்குமங்கும் மற்றும்
மேலும் கீழும்
நீரின் ஆழங்களையும்
கண்ணாடி எல்லைகளையும்
அவ்வப்போது சோதனை செய்தபடி
சிறை பிடித்த பெருமிதத்தில்
நான் பார்த்துக்கொண்டிருப்பதை
அவைகள் கவனிக்கத்
துவங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை
அவைகளின் வால்கள்
இன்னும் அதிகமாக
இன்னும் நளினமாக
சுழல்கின்றன இப்போது
தங்களின் ஒரு பக்கக் கண்களில்
என் முகத்தைக் கவர்ந்து
செல்கின்றன
கடலிலும், ஆற்றிலும்
குளத்திலும் இந்தத் தொட்டியிலும்
அலைகளை உருவாக்கும் மீன்கள்
என்னைக் கேட்கின்றன
எல்லைகள் யாருக்கென்று
கண்ணாடியைத் தாண்டத் தெரியாத
நீரில் குதித்து அறியாத
சிற்றலைகளை அங்கிகரிக்கும்
பேரலைகளுக்கு அஞ்சும்
என்னிடம் பதிலில்லை
பதில் இருந்தாலும்.


உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது

Thursday, February 4, 2010

J.D.Salinger - சில நினைவுகள் - பற்றியும் பற்றாமலும்


சென்ற வாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜே.டி.சாலிஞ்சர் இயற்கை எய்தினார் என்ற செய்தி படித்து சொல்ல முடியாத உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. சுஜாதா இறந்த போது நம்மில் பல பேருக்கு வந்த உணர்வுகள் மாதிரி என்று சொல்லலாம். என்னுடைய பதின்ம பருவம் முடிந்த தருவாயில் The Catcher in the Rye படித்தேன். ஒரு புத்தகம் நம்மை சுழற்றி அடித்துச் செல்லும் என்ற நிதர்சனம் என்னைத் தாக்கியது அப்போதுதான். இன்று வரையில் அதன் தாக்கம் என்னுள் இருக்கிறது என்று சொல்வேன். என் தம்பியிடம் நேற்று இது பற்றி பேசிய போது, சமீபத்தில் இதை மீண்டும் படித்தபோதும் பழைய வசீகரம் மாறாமல் இருப்பதைப் பற்றி நினைவு கூர்ந்தான். எங்கள் இருவருக்கும் இது ஒரு cult புத்தகம். அப்படியென்ன ஸ்பெஷல் என்று இதைப் படிக்காதவர்கள் கேட்கலாம். இப்போது முதன்முறையாகப் படிப்பவர்களுக்கு ஏமாற்றமும் தரலாம். எதையுமே முதன் முதல் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது முக்கியம் இல்லையா. இசை, காதல், காமம், காட்சி போலவே வாசிப்பும். எத்தகைய மனநிலை என்பது முக்கியம். இந்த ஐ.ஐ.டி./ஐ.ஐ.எம். நுழையத் தெரிந்த (அ)பாக்கியவான்களை சில நிமிடங்கள் ஒதுக்கி வைத்துவிடலாம். காற்றில் வீசப்பட்ட உணவுத் துண்டுகளை இலாகவமாகக் கவ்விப் பிடிக்கும் சூட்சுமக் காக்கைகள் போலவே மதிப்பெண்களை கவ்வத் தெரிந்த முன்னிருக்கை மாணவர்கள் அவர்கள். பாவம்.. அவர்களை விட்டு விடுவோம்.


மற்றவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நமது பதின்ம பருவங்களில் தொடர்ந்து பீடிக்கப் படுகிறோம். அது பள்ளிக்கூட பாடமாக இருக்கலாம். பிகு செய்து கொள்ளும் அழகான சக மாணவியாக இருக்கலாம். மெனோபாசில் அல்லலுறும் கணக்கு டீச்சராக இருக்கலாம். கடன் தொல்லையில் மாட்டிக்கொண்ட லேப் அசிஸ்டன்டாக இருக்கலாம். மூல பவுத்ரவ இன்னல்களில் சிக்கியிருக்கும் என்.சி.சி. மாஸ்டராக இருக்கலாம். வயலின் வகுப்பைத் தொடர்ந்து கட் செய்ததை வீட்டில் போட்டுக் கொடுக்கும் அக்காவாக இருக்கலாம். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் என்னும் மாதாந்திர திருகுவலி, கொத்து பரோட்டா, செட் தோசைக்கு அப்பா சட்டைக்குள் துழாவும் அவலம், கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து சொதப்புவது, அசந்தர்ப்பமாக முளைக்கும் ரோமங்கள், உடலில் திடீரென ஏற்படும் மாற்றங்கள், முகப்பரு, குச்சிக் கை கால்கள், தொள தொளா சட்டை என்று பல்வேறு தளங்களில் நமக்கு தினசரிப் பிரச்சனைகள் இருந்த பருவம் அது.


அந்தப் பருவம் மிக மிக முக்கியமான பருவம். நாம் யாராக, எப்படியாக உருவாகிறோம் என்பதை நிச்சயிக்கும் பருவம் அது. Rebellion என்பதை எளிதாக எதிர்ப்பு என்று இந்த இடத்தில் சொல்வது எனக்கு தட்டையான மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது. எப்போதும் ஒரு எதிர்மறை உணர்வு சூழ்ந்து, ஆக்கிரமிக்கும் தினங்கள் அவை. பெரியவர் அறிவுரை, வெளி உலகம் நம்மிடம் அணுகும் முறை, மற்றவர்களின் குணாதிசயங்கள் என்று சகட்டு மேனிக்கு நமக்கு மூக்கு நுனியில் கோபம் கொப்பளிக்கும் தருணங்கள் ஏராளம். ஒரு கட்டத்தில் அவைகள் எல்லாவற்றையும் ஏளனமாகப் பார்க்கத் துவங்குவோம். நிறைய பரிகாச உணர்வும் வரும். இப்படியாகப் பட்டவர்களின் வேதாகமம் The Catcher in the Rye.


1951ல் வெளிவந்த இந்தப் புத்தகம் இன்று வரை ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டரை இலட்சம் பிரதிகள் விற்பது, இதுவரை சுமார் ஆறரை கோடி பிரதிகள் மொத்தமாக விற்பனை ஆகியிருப்பது இந்தப் புத்தகத்தின் உலகளாவிய தாக்கத்தைப் பற்றி ஓரளவு புரிய வைக்கும். கதையின் வில்லத்தனமாக நாயகன் ஹோல்டன் கால்ஃபீல்ட் பதின்ம பருவத்து எதிர்ப்புணர்வுகளுக்கு ஒரு குறியீடாகத் திகழும் அளவுக்கு பிரபலம்.


பென்சி என்னும் கற்பனைப் பள்ளியிலிருந்து சரியாகப் படிக்காத காரணத்தால் நள்ளிரவில் வெளியேற்றப் படுவதிலிருந்து துவங்குகிறது கதை. நியூ யார்க் நகருக்கு ரயிலில் வந்திறங்கி, தன் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு பாழடைந்த ஹோட்டலுக்குச் செல்கிறான். சுற்றுலா வந்த மூன்று பெண்களுடன் நடனமாடி ஒரு மாலையைக் கழித்து, இரவில் ஒரு 'அந்தப்' பெண்ணைச் சந்தித்து, 'சும்மா பேசவே கூப்பிட்டேன்' என்று அவளை கடுப்பாக்கி, அவள் பேசிய தொகைக்கு மேல் கேட்டதால் சண்டை போட்டு, அவள் 'மாமா'விடம் அடி வாங்கி என்று.....


ஹோல்டன் அந்த நகரில் மூன்று தினங்கள் தங்குகிறான் - பெரும்பாலும் குடிபோதையிலும், தனிமையிலும். ஒரு தருணத்தில் ஒரு மியூசியத்தில் எஸ்கிமோக்கள் சிலைகளுடன் தன் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்து அதன் முரணை யோசிக்கிறான். அவனுக்கு நினைவு தெரிந்த வரையில் அந்தச் சிற்பங்கள் மாறாமலே இருக்கின்றன. இந்த எண்ணங்கள் ஒருவேளை அவனுக்கு இறந்து போன தன் அண்ணன் நினைவால் வந்திருக்கலாம்.


அவனை ஓரளவு புரிந்து கொண்டவள் அவன் தங்கை ஃபோபே. ஹோல்டனுக்கு எப்போதும் தோன்றும் ஒரு கற்பனைக் காட்சியை அவளிடம் பகிர்கிறான். ஒரு மலை உச்சியருகில் உள்ள பெரிய ‘ரை’ (தானியம்) வயலில் நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவன் வேலை அந்தக் குழந்தைகள் மலையுச்சி அருகில் செல்லும் போது அவர்கள் பாதாளத்தில் விழுந்து விடாமல் 'பிடித்துக் கொள்வது' (catcher). அவனைப் பொறுத்த அளவில் அவன் ஒரு கடவுளைப் போல - அந்தப் பைத்தியக்கார மலையுச்சியிலிருந்து பெரியவர்கள் உலகமான பாதாளத்தில் அந்தக் குழந்தைகள் விழுந்து விடாமல் காப்பாற்றுபவன். அவன் திடீரென்று தன் ஆங்கில வாத்தியார் வீட்டுக்குச் செல்கிறான். அவர் இவன் மாயையைக் கலைக்க முற்படுகிறார். அவர் வருடல்களை இவன் வேறு மாதிரியாகப் புரிந்து கொள்கிறான். மறுநாள் நகரில் அலைகையில் அவரைப் பற்றிய தன் கணிப்பு சரியா என்றும் யோசிக்கிறான்.


பலவாறு அலைந்து திரிந்து புத்தகத்தின் இறுதிப் பகுதியில் நோய்வாய்ப் படுவதையும், மனநல மருத்துவ மனையில் வசிப்பது பற்றியும் குறிப்பிடுவதுடன் சில மாதங்களில் வேறு ஒரு பள்ளிக்குச் செல்ல இருப்பதையும், தன் பழைய பள்ளி நண்பர்கள் இருவரை மிஸ் பண்ணுவதையும் சொல்வதுடன் முடியும்.


இந்தப் புத்தகம் தன்னிலை வடிவத்தில், ஹோல்டன் கண்ணோட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் நிறைய விவாதங்களை உண்டு பண்ணியதாகவும் தெரிகிறது. அவன் கடைசி வரை முதிர்ச்சி பெறாமல் இருப்பதாகவும், பிறழ்வு நிலையில் உள்ளதாகவும் சிலர் சொல்ல, மற்றவர்கள் 'பதின்ம பருவத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாகவும், தனிமை என்பது ஒரு 'கடந்து போகும்' ஒரு காலம் என்பதைச் சொல்வதாகவும்' கருதுகிறார்கள்.


கதையின் மொழி நிறைய கெட்ட வார்த்தைகளில் இருக்கும். ஆனாலும், கதை துவங்கிய சில பக்கங்களில் உங்களுக்கு அது பழகி விடுவதுடன், அவனைப் பிடிக்கவும் செய்து விடும்.


இவருடைய மற்ற புத்தகங்களில் நான் வாசித்தது Franny and Zooey என்னும் குறுங்கதை. Catcher அளவுக்கு இல்லாமல் சுமார் ரகம். பிரபலத்தின் வெளிச்சத்தை தவிர்த்த சாலிஞ்சர் பெரும்பாலும் தனிமையில் வாழ்ந்தார். ஒரு புத்தகம் எழுதினாலும் இந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதும் வாய்ப்பு சிலருக்கே அமையும். என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய Mr.Salinger ! Good Bye.

கோகுல் எழுதிய இந்த இடுகையும் சாலிஞ்சர் பற்றித் தான்.

Monday, February 1, 2010

பெயர் மாற்றம்

எப்போதும் போல படித்தேன்

இன்றைய 'கற்பழிப்பை'
பலியானவள் பானு
அண்ணாநகரில் வசிப்பவள்
அண்ணாநகர் பானுவை
எனக்குத் தெரியாது
ஆனாலும் சஞ்சலமாக இருக்கிறது
பெயர் மாற்றப்பட்டதாகக்
கடைசியில் போட்டிருக்கிறார்கள்
இப்போது
தெரிந்த பெண்களின்
உண்மைப்பெயர்களை
மாற்றிப் பார்க்கும்
யோசனை பிறக்கிறது
பானு மட்டும் வராதவாறு
கவனமாக இருக்கிறேன்

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - சிந்தனைகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்



ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மும்பையில் இவ்வளவு விரைவில் ரிலீஸ் ஆனது ஒரு ஆச்சரியம். மிக விரைவில் திரையரங்குகளை விட்டு ஓடப் போவதில் அவ்வளவு ஆச்சரியம் எதுவுமில்லை. நேற்று இரவுக் காட்சி (இங்கு 7.50 மணிக்கே) சென்றேன். என் மனைவியையும் சேர்த்து, மொத்தம் பத்து பேர் மட்டுமே திரையரங்குக்குள் இருந்தோம். முதல் பாதி நன்றாக, ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட எந்தத் திரைப்படம் போலவும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாம் பாதி மொத்தப் படத்தை முற்றிலும் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. சோழர்கள் என்றாலே பொன்னியின் செல்வன் தாக்கத்திலும், தசாவதார முதல் காட்சிகளின் தாக்கத்திலும் உருவாக்கப்பட்ட பிம்பம் மிக யதார்த்தமாக தவிடு பொடியாகிறது. பாண்டியர்களிடமிருந்தும், மற்ற பகைவர்களிடமிருந்தும் நூற்றாண்டுகளாகப் பதுங்கி வாழும் ஒரு கூட்டம் எப்படி இருக்குமோ, அப்படியே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. காலத்துக்குள் உறைந்து போன மாந்தர்கள் போல் நிகழ் காலத்துக்குள் முற்றிலும் பொருத்தமற்றவர்களாக உலாவுகிறார்கள். ஒரு திரைப்படம் நிறைய சிந்தனைகளைத் தூண்டி விட்டால் அது என்னைப் பொறுத்த வரையில் நல்ல படம். அந்த விதத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு முக்கியமான, நல்ல, திரைப்படம் - தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

எனக்கு இந்தப் படம் சொல்லிய செய்திகள் இவை என்று கொள்ளலாம்:

சிறு வயதில் ஐய்ஸ் பாய் (அதனை Ice Boy என்றே புரிந்து கொண்டிருந்தேன் அப்போது) விளையாடும் போது, யாரும் சுலபத்தில் கண்டு பிடிக்க முடியாத மாய ஒளிவிடத்தில் மறைந்திருந்து, ஒரு இரண்டு மணிநேரம் கழித்து பசி வயிற்றைப் பிடுங்கியதால் வெளியே வந்து பார்த்தால், நண்பர்கள் எல்லோரும் விளையாடி முடித்து, வேறு விளையாட்டுக்குத் தாவி இருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கும் வரை ஆட்டம் அப்படியே இருக்கும் என்றெல்லாம் நினைத்த எனக்கு அவர்களோ, காலமோ என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றது முதலில் வருத்தமாக இருந்தாலும், அது வாழ்வின் முக்கியமான பாடமாக அமைந்தது. Time and Tide wait for none. சோழர்கள் இப்படித் தனிமையில், வெளியுலகுடன் தொடர்பில்லாமல் இருந்ததில் அவர்களுக்கு மட்டுமே நட்டம். இதனை இப்போதைய உலகமயமாக்கல் என்னும் சித்தாந்தத்திலும் பொருத்திப் பார்க்கலாம். குக்கிராமத்திலிருந்து கிராமங்களுக்கும், கிராமங்களிலிருந்து சிறு நகரங்களுக்கும், ‘சிறு’விலிருந்து பெருநகரங்களுக்கும் மக்கள் வருவது காலங்காலமாக அனைவரும் பெருமளவில் எதிர்க்காத, ஓரளவு ஒப்புக்கொண்ட நடைமுறை யதார்த்தம். உலகமயமாக்கல் என்னும் போது மட்டும் மொழி, இன இன்னபிற உணர்வுகள் உந்தப்பட்டு பெருமளவு எதிர்ப்பு வருவதையும் பார்க்கிறோம்.

இரண்டாவது செய்தி இவ்வளவு நூற்றாண்டுகளாக ஒரு ராஜ வம்சம்தில் வந்தவர்கள் வன்மத்தைத் தொடர்ந்து கடை பிடிக்க முடியுமென்பது. அவ்வளவாக நம்பகத் தன்மை இல்லை என்றாலும், நிறைய குடும்பங்களில் நூற்றாண்டுப் பகை நிலவுவதைப் பார்க்கையில் இது மாதிரி நடக்கவே முடியாது என்று சொல்ல முடியவில்லை. ஒருவர் மத்திய அரசு அமைச்சர். ஒருவர் ராணுவ உயர் அதிகாரி. இந்தப் பெண்ணும் நன்றாகப் படித்த, நாகரிக நாரிமணி. இத்தனை இருந்தும், அப்பன் பாட்டன் வழிவழியாகச் சொன்னார்கள் என்று இவ்வளவு கொலைவெறியுடன் துரத்துவார்கள் என்பது ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொண்டால்...இத்தனை நூற்றாண்டின் நாகரீகத்திற்கும், கல்விக்கும் என்ன பயன்? வரலாறு, அது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், இத்தனை வன்மத்தைக் கக்கும் என்பது கசப்பான உண்மை. இத்தகைய வரலாறுகள் தேவையற்றவை என்பது என் எண்ணம். நாட்டில் நடைபெறும் பெரும்பாலான சர்ச்சைகளும் இத்தகைய முழு உண்மை / அரை உண்மை / அப்பட்டமான பொய் வரலாறுகளால் தோன்றியவை. வராலாறு, தவறன பாடங்களைத் திருத்திக் கொள்ளவும், நல்லவற்றை தொடர்ந்து எடுத்துச் செல்லவும் மட்டும் அவசியமானவை. தொடர்ந்து அது வன்மம், காழ்ப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளைத் தூண்டி, மக்களைத் தொடர் அவலத்தில் ஆழ்த்துமெனில், எவ்வளவு உண்மையாக இருந்தாலும் அந்த வரலாறு அவசியமற்றது.

இன்னொரு செய்தி - அது பத்தாம் நூற்றாண்டில் உறைந்து விட்ட சோழர்களானாலும், நவீன யுகத்து பாண்டியர்களானாலும் ஆளும் வர்க்கம் எப்போதும் தன் நலனில் கவனமாகவே இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் சாதாரணர்கள் படும் துன்பங்களும், அவர்களின் அவல வாழ்வும் தொடர்கதைகள்.

இந்தப் படத்திற்கு கேபிள், கார்க்கி ஆகியோர் சற்று தீவிரமாக விமர்சனம் செய்தது எனக்கு முதலில் ஆச்சரியம். என் அனுமானத்தில், கேபிள் சினிமாவை முதலில் வியாபாரமாகப் பார்க்கிறார். அந்தச் சட்டகத்துள் முடிந்த வரை கலை இருக்க வேண்டும். மக்களைக் கவர வேண்டும். முதன்மையாக இந்தத் தொழில் நசியாமல் இருக்க வேண்டுமெனில் பெரிய நஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்னும் தாரக மந்திரம் அவருள் எப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன். கார்க்கியும் கிட்டத் தட்ட அதே அலை வரிசை. இல்லாவிடில், மூன்று வருட தாமதம், முப்பத்தி ஆறு கோடி முதலீடு பற்றி கவலைப் படவேண்டியது பணம் போட்டவர்களின் கவலை மட்டுமே. எல்லாத் துறைகளைப் போலவே, சினிமாவும் இப்போது பல்வேறு தளங்களில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு உதாரணத்திற்கு என்னுடைய Treasury Dealing Room இல் தினமும் இலாபமாகக் கொட்டினால் அந்த அதிகாரிக்கு மகிழ்ச்சி. அவரை மேற்பார்வையிடும் அதிகாரிக்கு அவர் இன்னும் எவ்வளவு செய்திருக்க முடியும் என்ற கணக்கு. இதை real-time கண்காணிக்கும் Risk Department லாபம் எல்லாம் சரி. அதை ஈட்ட எவ்வளவு ரிஸ்க் எடுத்தார்கள். அது அவசியம்தானா என்றெல்லாம் வெறுப்பேற்றும். இதற்கு நடுவில் ஆடிட்டர் 'யோவ், இங்கெல்லாம் உங்க கையெழுத்தே இல்ல' என்று கடுப்பேற்றுவார். இன்னொரு ரகசிய இலாகா, அந்த அதிகாரி தொடர்ந்து இலாபம் மட்டும் ஈட்டுகிறாரா அல்லது அவ்வப்போது நஷ்டமும் வருகிறதா என்று சரி பார்க்கும். தொடர்ந்து இலாபம் மட்டும் என்றால் அடிப்படையில் எதோ பெரிய கோளாறு என்று அர்த்தம். அவர் விடுமுறைகள் எல்லாம் ஒழுங்காக எடுக்கிறாரா என்றெல்லாம் கண்காணிக்கும்.

இந்த உதாரணம் போலவே, சினிமாவை பல்வேறு கோணங்களில் அணுக வேண்டியதும் அவசியமாகிறது. ஒரு end user என்ற அளவில் மட்டும் விமர்சனம் செய்வதற்கும், துறை பற்றிய பல்வேறு புரிதல்கள் இருப்பவர்கள் இதனை அணுகுவதற்கும் உள்ள இடைவெளியே நாம் இவர்கள் விமர்சனத்தில் பார்த்தவைகள்.

என்னுடைய சினிமா புரிதல்கள் சராசரிக்கும் மிக மிக கீழே. அந்த வகையில் இந்தப் படத்தை விமர்சனம் செய்தால் படு கேவலமாக இருக்கும். இருந்தாலும் உங்கள் விதி... கார்த்தி lovable பாட்டாளி. கலக்குகிறார். ஒருமாதிரி ஒரே வார்ப்புருவில் சிக்காமல் இருக்க வேண்டும். ரீமா நல்ல நடிகை என்று எனக்கு முன்பே பட்சி சொல்லியிருக்கிறது. அது நிரூபணம் ஆகிறது. ஆனாலும் 'ஆகச் சிறந்த' பட்டம் கொடுக்கும் அளவில் இல்லை. ஆண்ட்ரியா....என்ன சொல்ல என்ன சொல்ல...

பிரம்மாண்டத்தைப் பொறுத்த வரை இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல். (மயில் கல் அல்ல). ஆமாம், கடலில் ஏதோ ஒரு ஆரஞ்சு நிற வெளிச்ச வஸ்து இவர்களைத் துரத்திப் பிடித்து சின்னாபின்னம் செய்கிறதே! அது ஆக்டபஸா? (மன்னிக்கவும், வழக்கம் போலவே பாப்கார்னில் கவனம் செலுத்தினேன்). இவ்வளவு காட்டுக்குப் பின் உடனே இவ்வளவு பாலை நிலமா? ஓகே ஓகே நோ லாஜிக். எனக்கு அந்த நடராஜர் சிலை நிழலில் அவர்கள் போக வேண்டிய பாதை தெரிவது மிகப் பிடித்தது. அதன் அரசியல்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை. என்னைப் பொறுத்த வரை அது சோழர்களின் வான சாஸ்திர புலமைப் பற்றி சொல்வது போல் தோன்றியது. நிறைய மாய யதார்த்தக் காட்சிகள் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது. ஆனாலும், இடைவேளைக்குப் பின் அவ்வப்போது தோன்றியதை எடுத்து விட்டார்களோ அல்லது எடுத்த பலவற்றை வெட்டி விட்டார்களோ என்று படுகிறது. கோர்வையாகச் சொல்லாதது ஒரு குறை.

படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி. ஒன்று ஆயிரத்தில் ஒருவன். இன்னொன்று கோடி ... ம்ஹும் ... பல்லாயிரம் கோடியில் ஒருவன்.

இன்னொரு முக்கிய குறிப்பு: இந்தப் படம் பற்றிய விமர்சனங்களில் எனக்கு சரவணகுமாரின் பதிவு பிடித்தது. சுகுணாவின் விமர்சனம் மிக மிகப் பிடித்தது (அவர் அரசியல் நிலைகளுடன் ஒத்துப் போவது எனக்கு மிகுந்த சிரமம் தந்தாலும்).

Friday, January 15, 2010

மும்பை மாணவர்களின் தற்கொலைகள் - த்ரீ இடியட்ஸ் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்


அவன் பெயர் சுஷாந்த் பாடில். மும்பையின் ஷ்ரதாஷ்ரம் பள்ளியில் (சச்சின், காம்ப்ளி முதலியோர் படித்த பள்ளி என்று நினைக்கிறேன்) ஏழாம் வகுப்பு படிக்கும் பன்னிரண்டு வயது மாணவன். காலை வகுப்புக்கு வருகிறான். பையை வைக்கிறான். நண்பனிடம், 'குளியலறை வரை சென்று வருகிறேன். முகம் கழுவ வேண்டும்' என்று சொல்லிச் செல்கிறான். ஒரு ஸ்டூல் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு நேரே குளியலறைக்குள் செல்கிறான். கதவை உட்பக்கம் தாழ் போடுகிறான். மேலே ஷவர் இருக்கும் இரும்புக் கம்பியைப் பார்க்கிறான். ஸ்டூல் மீது ஏறிக்கொள்கிறான். தன் கால் சட்டைப்பைக்குள் துழாவி, ஆரஞ்சு நிற நைலான் கயிறைக் கையில் எடுக்கிறான். அதனை மேலே குறிப்பிட்ட இரும்புக் கம்பியில் தொங்க விட்டு, இறுகக் கட்டுகிறான். இன்னொரு முனையில் சுருக்குப் போட்டு, தன் தலையை நுழைத்துக் கொள்கிறான். மெல்ல கயிற்றைச் சுருக்குகிறான். கழுத்தை நன்றாக இறுக்கும் முன் கடைசியாக ஒரு முறை மூச்சை இழுத்து விடுகிறான். பிறகு அரை வினாடி யோசித்து தான் நின்று கொண்டிருக்கும் ஸ்டூலைத் தட்டி விட்டு, மிதக்கிறான்.



ஒரு மொட்டு மலர்வதில் விருப்பமின்றி உதிர்கிறது. கடவுள் தீட்டத் துவங்கிய ஓவியமொன்று துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது. அல்லது ஒரு வாழ்வு அநியாயமாக, தனிமையில் முடிகிறது என்றும் சொல்லலாம். என்ன ஆயிற்று பாடிலுக்கு? ஏன் எப்படிச் செய்தான்? அவனுக்கு வாழ்வின் பிரம்மாண்டம் பற்றி என்ன தெரியும்? வாழ்வென்னும் நதியில் எத்தனை திருப்பங்கள் - வளைவுகள் - சுழிகள் வரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருந்ததா? அவன் நான்கு பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறி இருந்தான். கூடுதல் தகவல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தை இருமுறை பார்த்திருந்தான். இதற்கு இவ்வளவு பெரிய முடிவா? தான் எடுத்த முடிவின் கன, ஆழ பரிமாணங்களை அந்தப் பிஞ்சு அறிய முடியுமா? பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி என்பது சம்பிரதாய வாக்கியம் என்றாலும் இப்போது மொழியா முக்கியம்?


இது ஒரு அபூர்வ நிகழ்வு அல்ல. மேலே செல்வோமா? அவள் பெயர் நேஹா சாவந்த். ஆறாம் வகுப்பு மாணவி. நன்றாகப் படிப்பவள். நடனமும் ஆடுபவள். டோம்பிவில்லியில் வசிப்பவள்...வசித்தவள். பெற்றோர் வீட்டில் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட வேளையில் உத்தரத்தில் இருந்து தொங்கிய மின்விசிறியிலிருந்து இவளும் தொங்கினாள். காரணம்? இவளது பெற்றோர்கள் இவளை நடன வகுப்பிலிருந்து சமீபத்தில் நிறுத்தி இருந்தனர்.


அடுத்து வருவது பஜன் ப்ரீத்கௌர் புல்லார் என்னும் பதினெட்டு வயது,  பிசியோதெரப்பி (இதற்கு தமிழில் என்ன பெயர்?) பயிலும்.. ச்சே பயின்று வந்த மாணவன். அதே உத்தரம்; அதே மின்விசிறி; அதே தொங்கல்; காரணம் - மூன்று பாடங்களில் ஃபெயில்.


இன்னும் சில வித்தியாசமான தற்கொலைகளுக்குச் செல்வோமா? பெயர் வினீத். வயது பதினெட்டு. பன்னிரெண்டாம் வகுப்பு. நன்றாகப் படிக்கும், 80% மதிப்பெண்கள் வாங்கும் மாணவன்; அன்று இவன் பெற்றோர்களின் திருமண தினம். அதனைக் கொண்டாட அவர்களுடன், தன் சகோதரியையும் கூட அனுப்பி அவர்கள் திரும்புவதற்குள் ..மின்விசிறி மீண்டும். ஒரு துண்டுச் சீட்டில் அவன் சொல்லிச் சென்றது : "என் வாழ்வில் எதுவும் அசாதாரணமாக இல்லை. என் குழந்தைப் பருவம் மிகவும் தனிமையானது; சமூகத்தில் உலவுவது பற்றிய வினோத உணர்வுகள் எனக்கு வருகின்றன; அடுத்த பிறவிகளில் உங்களைப் போன்ற அருமையான பெற்றோர்களைக் காண்பேன் என்று நம்புகிறேன் ...';


இன்னொருத்தி மேரி நாடார் (ஆம், தமிழ்ப்பெண்). 16 வயது. செம்பூரில் வீடு. தந்தை இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அதிலிருந்து மீளாத, புலம்பும் தாயைப் பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளானவள் (என்று பின்னால் தெரிய வருகிறது). தன் தந்தையைக் காணும் ஆசையில் ... இப்போதெல்லாம் எனக்கு பயங்கர ஆயுதமாகக் காட்சியளிக்கும் மின்விசிறி மீண்டும்.


கோபமோ, ஆயாசமாகவோ இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் தினமும் செய்தித்தாளை வாசிக்கையில் இருக்கிறது. இப்போதெல்லாம் பயமாகவும். நான் சூர்யாவுடன் விளையாடும் போது 'டேய், Fan எங்க இருக்கு?' என்று கேட்கையில் அவன் அண்ணாந்து பார்த்து மேலே கையைக் காட்டும் தருணத்தில் அவன் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவது வழக்கம். இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது.


கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பதினான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பெரும்பான்மை மும்பையில். என்னதான் நடக்கிறது? பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா? ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா? பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா? நகரம் முழித்துக் கொண்டு இருக்கிறது - விடை தெரியாமல். தேர்வுகள், மதிப்பெண்கள் தரும் மன உளர்ச்சி பற்றி நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும், இந்த இளம் வயதினரை இந்த அளவு வாட்டும் என்று இப்போது புரிகிறது.


இதன் பின்புலத்தில் த்ரீ இடியட்ஸ் படம் மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது. போன முறை நான் குறிப்பிட்ட அந்த மூன்றாவது திரைப்படம் இது தான். படத்தைப் பற்றி விலாவாரியாக, நேர்த்தியாக கேபிள், பரிசல், வித்யா என்று பிரபல பதிவர்கள் அழகாக எழுதி விட்டதால் நீங்கள் அதிலிருந்து தப்பிக்கிறீர்கள். மற்றவர்களுக்காகப் படிக்காமல் உங்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு, அதை படியுங்கள். மதிப்பெண்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பக்க விளைவு என்றும் சொல்லலாம். பெற்ற அறிவு என்பதே சாஸ்வதம். நிரந்தரம். முக்கியம் என்றெல்லாம் சொல்கிறது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும். மாதவன், தான் இன்ஜினியரிங் வேலையில் சேராமல், வனத்தில் புகைப்படம் எடுப்பதில் இருக்கும் நாட்டம் பற்றிச் சொன்னதும் இடிந்து போய், உடைந்து நொறுங்கும் தந்தையிடம் மாதவன் சொல்லும் வசனம்: 'அப்பா, என்ன! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெரிய கார் மற்றும் பெரிய வீடு என்னால் வாங்க முடியாமல் போகலாம்; ஆனாலும் சிறிய காரும், சிறிய வீடும் முக்கியமாக எப்போதும் உங்களை கண்போல் பார்த்துக்கொள்வதும் என்று நான் இருப்பேன்'. அந்தத் தருணத்தில் அவர் தந்தை மனம் மாறுவார். இப்படி நல்ல விஷயங்கள் இருக்க, அந்தப் படத்தை இரு முறை பார்த்ததில், நான் துவக்கத்தில் குறிப்பிட்ட பாடில் தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்டான் என்று வரும் செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதைப் போலவே சில கல்லூரிகளில் ராகிங் நடந்ததற்கும் இந்தப் படத்தைக் குறை சொல்கிறார்கள்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை என்னுடைய ஒரே குறை மூலக் கதை எழுதிய சேத்தன் பகத் பெயரைக் கொஞ்சம் தாராள மனதுடன், பெரிய எழுத்துகளில், படம் பெயர் போடும்போதே போட்டிருக்கலாம். "எத்தனைப் பெரிய மனிதருக்கு...எத்தனை சிறிய மனமிருக்கு" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது...


இந்த இடுகை பொங்கல் அன்றே போட்டிருக்க வேண்டும். நல்ல நாளும் அதுவும் எதுக்கு தற்கொலை அது இதுன்னு சோகப் பதிவு போடுகிறீர்கள் என்ற அன்பான எச்சரிக்கை வந்ததால் ... இன்று வருகிறது. இங்கு தமிழர் திருநாளுக்கு ஒரு நாள் விடுமுறை கூட இல்லை. உழைக்கும் வர்க்கமான நான் மும்பையில் உழல்கையில், உட்கார்ந்து பொங்கலைச் சாப்பிட்டுக் கொண்டே நன்றாகக் கொண்டாடி இருப்பீர்கள் என்று தெரியும்.

Wednesday, January 6, 2010

வெவ்வேறு செடிகள்




பசுமைத் தண்டுகள் தாங்கிய 

வெள்ளைப் பூங்கொத்துகள் இரண்டை
வெம்மையான பின்னிரவில்
வாங்கிக் கொள்ளச் சொல்கிறாள்
கண்ணாடி இறக்கி
தரிசனம் தருபவன்
நீண்ட பேரத்திற்குப் பின்
ஒன்று போதுமென்கிறான்
மனைவியை மகிழ்விக்கப்போகும்
பூக்களுடன் சில்லென்ற
உலகுக்குள் மறைகிறான்
இரண்டையும் விற்கக் கூடிய
சாமர்த்தியமற்றவள்
சாலையோரத்தில் காத்திருக்கும்
கணவன் முன் தயங்குகிறாள்
அவன் கைவீச்சில் தெறிக்கும்
அவள் உதட்டு இரத்தம்
வெள்ளைப் பூங்கொத்தில்
செஞ்சாயம் பூசுகிறது
மனைவிகளை மகிழ்வூட்டவும்
இரத்தம் சிந்தவும் தூண்டும்
பூக்கள் வெவ்வேறு செடிகளில்
பூத்திருக்க வேண்டும்

(கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆனது)