"அதெல்லாம் இல்லடா. எல்லாம் நம்ம மனோபாவம். பாரு நான் ப்ளாக் எல்லாம் எழுதுறேன். நல்லா பொழுது போகும். நிறைய பேரு எழுதுறாங்க. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்" னு அடுக்கிக் கொண்டே போனேன். முதல்ல என்னோட ப்ளாக் காமிச்சேன். 'புனரபி' படிச்சான். 'ப்ச்' என்ற சப்தம் வந்தது.
"நீ இப்பிடியெல்லாம் எழுதுவியா"
"எனக்கே தெரியாது; தானா வருது"
கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்து, "உன்னப் புகழ்ந்தேன்னு நெனச்சிட்டியா" என்றான்.
எங்கோ ஒரு எச்சரிக்கை மணி அடித்த சத்தம் கேட்டது. அவனாவே எதையோ க்ளிக் செய்தான். இந்த தருணத்தில் ஒரு முக்கிய செய்தி சொல்லியாக வேண்டும். அவன் விஜயம் செய்தது 'விடுமுறை தினத்தை முன்னிட்டு' என்று கலைஞர் டிவி ‘சிறப்பு நிகழ்ச்சிகளை’ இருபத்தியாறு ஸ்பான்சர்கள் தயவில் ஒளிபரப்பிய 'விநாயகர் சதுர்த்தி' தினம்.
அவன் க்ளிக் செய்து, தற்போது பார்த்த திரை "சிதைவுகள் ..." என்று மேல் வரியிலும், "சிதைந்து கொண்டு இருப்பவனின் துண்டுகள் ..." என்று அதற்குக் கீழேயும் இருந்தது. அதற்குக் கீழே நாமெல்லாம் இடுகை என்று அறியும் ஒரு வஸ்து "பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?" என்ற கேள்வியுடன் துவங்கியது. எனக்குள் ஒரு பல்பு எரிந்தது இப்போது.
இப்போது இன்னொரு முக்கிய தகவல். இந்த கசின் இருக்கானே, அவன் ஒரு தீவிர பிள்ளையார் பக்தன். எவ்வளவுன்னா, எப்பவும் அவன் டவுசர் பாக்கெட்டில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் இருக்கும். மன்த்லி டெஸ்ட் முதல், இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு, கிரிக்கெட் விளையாடும் போது, டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் போது, ஸ்டெபி கிராப் விம்பிள்டன் விளையாடுகையில், ரஜினி வில்லன் அடியாட்களுடன் தீ வளையத்துக்குள் இருக்கும்போது என்று சர்வரோக நிவாரணி அவனுக்கு அந்த பிள்ளையார் விக்கிரகம்தான். எனக்கு பயமா இருந்தது. இதப் படிச்சு 'மெர்ஸில்' ஆகி (நன்றி: கார்க்கி) கணினி திரைக் கிழிக்கப் படுமோ என்று பதட்டமா இருந்தது. அவன் படு உற்சாகத்துடன் படிக்கத் துவங்கினான். நான், லேட்டஸ்ட் ஹாரிஸ் பாட்டு கேக்குறியா என்று கார்க்கி தளத்துக்கு தாவ முயன்றேன்.
அவன் "டேய், பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு இந்த மாதிரி தல புராணம் மாதிரி யாரோ புண்ணியவான் எழுதியிருக்காரு. இப்ப என்ன சினிமா பாட்டு" என்று கடிந்துகொண்டு படிக்கத் துவங்கினான். முதலில் மெய்மறந்து இருந்தவன், போகப்போக முகம் சிவந்தான். நரம்புகள் புடைக்கத் துவங்கின.
"டேய், என்னடா இது? பிள்ளையார்னா யாருன்னு நினைச்சாரு இவரு? ஏதோ யுவான் சுவாங், வாஸ்கோட காமா ரேஞ்சுக்கு நம்ம சாமிய இறக்கிட்டாரு! ப்ளாக் இருந்தா என்ன வேணா எழுதலாமா"
"அப்படியில்ல. வரலாறு.... "
"புடலங்கா. இந்த வரலாற்ற எப்படி வேணாலும் மாத்தலாம். அப்பப்போ யாருக்கு பலம் அதிகமோ அவங்க இஷ்டப்படி அத மாத்திடலாம்"
கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்.
"என்ன சொல்ல வராரு இவரு? அது என்னடா தமிழ்க் கடவுள்? பிள்ளையார் என்ன மாநில ஆளுநரா? ஆந்திராவில் இருந்தாரு. அப்புறம் தமிழ்நாட்டுக்கு போஸ்டிங் ஆச்சு அப்பிடீன்னு. அவர் எல்லாம் கடவுள். எப்பவும், எங்கயும் இருப்பார். ஏண்டா இப்படி எல்லாம் எழுதுறாங்க. இதை எல்லாம் கேள்வியே கேக்க மாட்டாங்களா?"
"என்ன அப்படி சொல்லிட்ட! இங்க க்ளிக் பண்ணு" என்று சொல்லி பின்னூட்டம் என்று இன்னொரு சுனாமியைத் திறந்து விட்டேன்.
எதிர் பார்த்த மாதிரியே, ஸ்ரீதர், நர்சிம் என்று பெயர்களை வாஞ்சையாகச் சொல்லிக்கொண்டான். பற்களை நற நறவென்று கடித்ததால் 'ஜ்யோவ்' என்று சொல்ல சிரமப்பட்டான்.
"ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற? இது சிலபேரோட கருத்து. அதுக்கு எதிர் கருத்தும் வருது. அதையும் ஆரோக்கியமா விவாதிக்கிறாங்க. உன்னோட வாதம் கொஞ்சம் பிற்போக்கு" என்றவுடன் கிட்டத் தட்ட சுரேஷ் கண்ணன் ரேஞ்சுக்கு முற்போக்குவாதிகளைத் திட்ட ஆரம்பித்தான்.
சரி இது சரிப்படாதுன்னு அவனுக்கு பாவ்லா காட்டி, வல்லிசிம்ஹன் அம்மா, துளசி டீச்சர் என்று அவசரமாக தமிழ்மணத்தில் தேடினேன். நல்ல வேளை! இரண்டு பெரும் பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டிருந்தார்கள். கோவில் தர்மகர்த்தா பக்தர்களிடம் கேட்பது போல அவனிடம் "பாத்தியா? இப்ப திருப்தியா?" என்று கேட்டேன். சந்தம் வந்திருந்தவன் கொஞ்சம் சாந்தம் ஆகி இருந்தான்.
படிச்சு முடிச்சுட்டு வெளிய வந்தா மீண்டும் தமிழ்மணம். அவன் கண்களுக்கு என்று 'பிள்ளையாரை உடைப்பது பிரசாரமேயாகும்" என்று தமிழ் ஓவியா இடுகை தென்பட்டது. எனக்கு பேஸ்மென்ட் நடுங்கத் துவங்கியது. நல்ல வேளையா அதே சமயம் இசையருவியில் "அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே" என்று அவனுக்குப் பிடித்த ரஜினி பாடத் துவங்கினார். முதல் வேளையா கணினியை ஆப் செய்தேன். இன்டெர் நெட் இணைப்பையும் தற்காலிகமாக எடுத்து விட்டேன்.
கொழுக்கட்டையைச் சாப்பிடும் போது யதேற்சையாகப் பார்த்தால் பிள்ளையார் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.