மோட்சப் பிரசாதம்
காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.
ஒரு குழந்தை பிறந்ததினால்
மதியம் கரைந்த சாக்லேட்கள்
மேசைக்கடியில் குவிந்திருந்த
இனிப்புத் துகள்கள்
மாலையில் வசீகரமான
மஞ்சள் உருண்டைகளுடன்
வளையம் வந்த ஊழியனிடம்
எனக்கு இரண்டு கேட்டேன்
ஒன்றும் பேசாமல்
மேசைக்கடியில் உருண்டைகளைப்
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில்
புதிதாக இறந்திருந்த
கரப்பானின் மென் மீசை
என்
நாசியை உரசியபடி அலைந்தது
[அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]