Wednesday, March 31, 2010

விரிசல்


ஒரு சாயங்கால வேளையில்

கண்ணாடியோ பீங்கானோ
விழுந்து நொறுங்கும் சப்தம்
பொதுச்சுவருக்கு அப்பால்
பக்கத்து வீட்டில்
மையங் கொண்டிருந்தது
கதவருகில் சென்றபோது
கசிந்து கொண்டிருந்தன
கடுமையான வார்த்தைகள்
ஒவ்வொரு துண்டும்
பொறுக்கப் படும் ஓசை
ஒன்றில் அவன் முத்தம்
ஒன்றில் அவள் வெட்கம்
சிலவற்றில் அவர்கள் சத்தியம்
ஒரு மிகப்பெரிய துண்டில்
இப்போது அழுது கொண்டிருக்கும்
குழந்தையின் சிரிப்பு
பதட்டமாக நானும் நானும்
பேசித் தீர்க்கிறோம்
மறுநாள் காலையில்
கலங்காத கண்களுடனும்
வழக்கமான புன்சிரிப்புடனும்
அவளைக் கண்ட எனக்கு
நிம்மதியுடன் கொஞ்சம் ஏமாற்றமும்
வார இறுதியில்
கைகோர்த்துச் சென்றவர்களின்
சிரிப்பின் விரிசல்
மாயப்பசையில் இணைந்திருந்தது
கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும்
எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது

(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

Saturday, March 20, 2010

அந்தமான் தீவுகளில் ஒரு off-site


இந்த வருடத்தின் off-site எனப்படும் அலுவலகத்தில் இல்லாத அலுவல் எங்கு வைப்பது என்று பலபேரைக் கலந்தாலோசித்து முடிவில் அந்தமான் தீவுகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏற்கெனவே நான் மட்டும் முன்னார் சென்ற கடுப்பில் இருந்த வீட்டு பாஸ் 'ஹும், அந்தமான் எல்லாம் கிரிமினல்ஸ் தான் போவாங்க' என்று கடுப்பேற்றினாள். நான் 'சுதந்திரப் போராட்ட வீரர்கள் சென்ற இடம் அது - எனக்குப் பொருத்தமா தான் இருக்கு' என்றதும் கப் சிப்.

மும்பையிலிருந்து அகால வேளையில் (காலை நான்கு மணி) கிளம்பி, சென்னை அடைந்து, பிறகு அங்கிருந்து இன்னொரு விமானத்தில் போர்ட் ப்ளைர் சென்றடைந்தோம். போர்ட் ப்ளைர் ஒரு மினி கோவா போல் இருக்கிறது. மேடு, பள்ளங்கள், ஆங்காங்கே நீலக்கடல், தென்னை மரங்கள், வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் என்று. அவசரமாகச் சாப்பிட்டு, உடனே Havelock என்னும் தீவை நோக்கிப் பயணம் செய்தோம் - ஒரு குட்டிக் கப்பலில் - சரி சரி ஒரு பெரிய படகில்.



கொஞ்ச நேரம் வெளியில் வெய்யிலில் நின்று நீலக்கடல், தூரத்து தீவுகள், அருகாமை நங்கைகள் என்று சம்பிரதாயமாகப் பார்த்து விட்டு, இதற்கு மேல் நின்றால் நம் சிவந்த மேனியின் எழிலுக்குப் பாதகம் வந்துவிடும் என்று குளிர் சாதன அறைக்குள் தஞ்சம் புகுந்தோம். கிட்டத் தட்ட மூன்று மணி நேரப் பிரயாணம். ஹேவ்லாக் தீவைச் சென்றடைகையில் மாலை நாலரை மணி. எல்லா ரவுடிகளும் ஜீப்பில் ஏறி, நாங்கள் தங்க வேண்டிய விடுதிக்குச் செல்ல இன்னும் ஒரு அரைமணி நேரம் ஆகியது. கடற்கரைக்கு மிக அருகில், அடர் வனத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் விடுதி. 'நித்யானந்தரும் சாரு நிவேதிதாவும்' என்று சொல்லி முடிப்பதற்குள் இருட்டி விட்டது. மாலை மயங்கி இருளில் விழும் நேரம், கடற்கரையும், அருகாமை அடர் வனமும் மிக ரம்மியமாக இருந்தது. இது வரை நான் கடற்கரைக்கு இவ்வளவு அருகில் அடர்ந்த வனம் பார்த்ததில்லை.


Barefoot என்னும் நிறுவனம் நடத்தும் விடுதி அது. இரண்டு பேருக்கு ஒரு குடில். நிறைய மூங்கில். மேலே கூரை. இரவு சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று நினைத்தால் சீட்டாடக் கூப்பிட்டார்கள். சரி என்று நண்பர்களின் குடிலுக்குச் சென்றால், அவர்கள் செம்ம டென்ஷனில் இருந்தனர். வராண்டாவில் ஏதோ பழுப்பு நிறக் குச்சி என்று எடுக்கப் போனால், அது ஒரு பாம்பு. நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்து, பிறகு சிறிய சலுகையாக இரண்டு மூங்கில் கொம்புகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டு வாலை மட்டும் ஆட்டியது. (என்பதாக அதை அருகில் சென்று பார்க்கும் துணிவு இருந்தவர்கள் சொன்னார்கள்). என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் விளையாட்டாக எடுத்துக் கொண்டது இன்னும் பீதியைக் கிளப்பியது. நண்பர் ஒருவர் 'யோவ், பயப்படாத. அது தண்ணிப் பாம்பு. விஷம் கிடையாது' என்றார். தண்ணிப் பாம்புக்கு தரையில் என்ன வேலை என்ற கேள்வி கேட்ட லாஜிக்கை அந்தப் பாம்பு உட்பட யாரும் செவி மடுக்கவில்லை.



இரண்டு நண்பர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டே, பாம்பை நினைத்தபடி சீட்டாடி விட்டு குடிலுக்கு வந்து சேர்ந்தோம். உறக்கம் கொஞ்சம் தாமதமாக வந்தது. வனத்திற்கு நடுவில் இருப்பதால் அதன் இரவு மௌனம் ஒரே ரகளையாக இருக்கிறது. பகல் நேர ஆசாமிகள் வெளியேறி நைட் டுட்டி பார்க்கும் ஆசாமிகள் தொழிற்சாலையில் ஒரு விதமான ஆர்ப்பாட்டத்துடன் நடப்பார்களே - 'எவன்டா என்னைக் கேள்வி கேட்பது' என்னும் தொனியில். அந்த மாதிரி இருந்தது இரவு வனம். வேறுவித பட்சிகளின் ஒலி. பூச்சிகளின் சிறு சிணுங்கல்கள். இரவு மிருகங்களின் சருகுகள் மீதான நடையின் வித்தியாசமான சப்தம்.



இரவுக் கனவில் நான் அருகில் சென்று பார்க்க அஞ்சிய தண்ணிப் பாம்பு, ஐந்து தலைகளுடன் பூதாகாரமாக கடலில் படுத்துக் கொண்டு 'வாருங்கள் விஷ்ணு தேவரே' என்று அழைத்தது. மகாவிஷ்ணுவாக ஆசை இருந்தாலும், காலைப் பிடித்துவிடும் மகாலட்சுமி மும்பையில் இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.



விடுதியில் நல்ல சாப்பாடு, டிபன், இத்யாதிகள் கிடைக்கிறது. off-site என்றால் கொஞ்சமாவது அலுவலக விஷயங்கள் பேசியே ஆக வேண்டும் என்று சில அசடுகள் ஒற்றைக் காலில் நின்றதால், ஒரு இருபது நிமிடங்கள் வனத்துக்குள் மேலும் நடந்து, ஒரு அருமையான மரங்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் அலுவலக சமாசாரங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். விடுதிக்காரர்கள் ஏற்பாட்டில் நாற்காலிகள், ஒரு white board என்று நிசமாலுமே ஒரு இரண்டு மணிநேரம் பேசினோம். அதாவது மற்றவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். நல்ல ஹெவி டிபனுக்குப் பிறகு, கடற்கரை அருகாமை; வெய்யில் தெரியாத உயர் மரங்களின் தென்றல். என்னைப் போன்ற பிறவிக் கவிஞனுக்கு மனம் எப்படி அதில் இலயிக்கும்?


நிறைய உயர் மரங்களின் உச்சாணிக் கொம்புகளிலிருந்து ஏராளமான இலைகள் சுழன்று, நேராக, குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு, மிதந்து கொண்டு, பறந்து கொண்டு என்று பல்வேறு விதங்களில் பூமியை நோக்கி வந்து கொண்டே இருந்தது என்னால் மறக்க முடியாத காட்சி. மற்றவர்கள் அதைச் சற்றும் சட்டை செய்யாமல் அடுத்த வருடம் இன்னும் எவ்வளவு இலாபம் என்று கடன் வாங்கிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது பெருந்தேவியின் மகத்தான கவிதை ஞாபகம் வந்தது. இதோ அது உங்களுக்காக:

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றை மரத்தின் ஒரே இலை விழுகிறது
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை

விழுந்து கொண்டிருக்கிறது

யாத்ரா சொல்வது போல், இந்தக் கவிதையின் கனம் தாங்க இயலாததாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் படித்தால் இதன் தாக்கம் உங்களுக்குப் பிடிபடும்.

ஒரு முறை வளர்மதி 'leaf, treeless' என்று துவங்கும் கவிதையை 'ஒரு இலை, மரமற்று' என்று தட்டையாக மொழி பெயர்க்காமல் - 'காற்றில் அலையும் இலையொன்று' என்று மொழி பெயர்த்ததை ஜ்யோவ் சிலாகித்ததும் நினைவுக்கு வந்தது.



கவிதை பிறக்கும் கணங்கள் சிலிர்ப்பானவை. உன்னதமானவை. எனக்குத் தோன்றியவற்றை எழுத முயன்று கீழ்க் காணும் வரிகளில் எழுதி வைத்தேன். அதை மகத்தான கவிதையாக செதுக்கும் உத்தேசத்தைக் கைவிட்டு விட்டேன். சில புகைப்படங்கள் தொழில் நுட்பத்தில் சொதப்பினாலும், பொன் தருணங்களைப் பூட்டி வைத்திருக்குமே - அது போல.

அடர் வனத்தின்
உயர் மரங்களின்
உச்சியிலிருந்து
தாமாகப் பிரிந்த இலைகள்
பறக்கத் துவங்கின
கைவிடப்பட்ட இலைகள்
மிதந்து கொண்டிருந்தன
விலகக் கோரப்பட்டவை
வேகமாக வீழ்ந்தன
பட்ட மரமொன்றில்
துளிர்த்திருந்த ஒற்றை இலை
முதியோருக்குப் பிறந்த
தாமதக் குழந்தையை
நினைவு படுத்த
அனிச்சையாகப் பிடுங்கிவிட்ட
வேறொரு செடியின் இலையை
கொலை செய்துவிட்டதாகப்
பக்கவாட்டுப் பார்வையில்
குற்றம் சொன்னது
முற்பிறவியில் முன்னோராக
இருந்திருக்கக் கூடிய காகம்
மேலும் சில கற்பிதங்களுடன்
கானகமும் காகமும்
மௌனமாகக் காத்திருக்க
கண்ணாடியும் இரும்பும்
நிறைந்திருக்கும் காட்டுக்கு
விரைந்து திரும்பினேன்


பெருமரங்களுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடியதும், அதிகாலை கடற்கரை நடையும், நீல மற்றும் பச்சை வண்ண கடலும், துகள்கள் என்றும் சொல்ல முடியாத பொடிப்பொடியான மணலும், அபூர்வமாகத் தென்பட்ட பழங்குடிகளும் (அவர்கள் இனம் 55,000 வருடங்கள் முன் தோன்றியது என்று சொல்கிறார்கள். நாம் மூன்றாயிரம் வருடங்களுக்கே இவ்வளவு பெருமைப் படுகிறோம்) என்று கலவையான நினைவுகள் இன்னும் பலநாட்கள் என்னுடன் இருக்கும்.


நிச்சயம் அனைவரும் போய்ப் பார்க்கவேண்டிய இடங்களில் அந்தமான் தீவுகளும் ஒன்று.


இவ்வளவு அழகான (!) இடுகைக்கு முடிவில் ஒரு திருஷ்டிப் பொட்டு போல் ஒரு புகைப்படம். இனிமேல் இதுதான் profile படம்.

Thursday, March 4, 2010

நித்யானந்த நினைவுகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்



நித்யானந்தர் விவகாரம் புதன் காலையில் அலுவலக நண்பர் ஒருவர் சொல்லித் தெரிய வந்தது. முந்தைய நாள் இரவு தமிழகத்தின் குட்டி சூப்பர் சிங்கர் தேடலுக்கும், ஜப்பானிய சிறார்கள் உலாவும் ஹங்காமா சானலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதில், நலிவுற்றவர் கட்சியான எனக்கு செய்திகளைப் பார்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை. குழும அஞ்சல்களில் 'கதவைத் திற - காண்டம் (நெடில்) வரட்டும்' என்ற தலைப்பில் நண்பர்கள் அதகளம். நித்தியுடன் சேர்ந்து அவரைக் கடவுளாகக் கொண்டாடிய ஆகப் பெரும் எழுத்தாளரையும் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். So much pent up energy! சாரு இவர்களை இவ்வளவு தூரம் (பல்வேறு காரணங்களுக்காக) வெறுப்பேற்றி இருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஆச்சரியமாக இருந்தது.


சாருவுக்கு அவரது தனிப்பட்ட அனுபவங்கள் நித்யானந்தர் மேல் நம்பிக்கை தரும்படி இருந்திருக்கலாம். அதனால் அவரைக் கொண்டாடி இருக்கலாம். தவறு இல்லை. ஆனால், scandal வெளியான பின்பு 'ஆமாம்பா, ஏமாந்துட்டேன். என் பேச்சைக் கேட்டு ஏமாந்த இன்னும் சிலருக்கும் என் வருத்தங்கள்' என்று சுருக்கமாக சொல்லி இருக்கலாம். இந்த மாதிரிதான் இதற்கு முன்பு ஏமாந்த இஸ்லாமிய சாமியார் பற்றி சொல்லிக் கொண்டார். ஆனால், இப்போது என்னவோ சால்ஜாப்புகள். இப்போதுதான் சாரு மேல் மரியாதை குறைந்து, பரிதாபம் அதிகமாகிறது. ஒரு பக்கம் பொதுப்புத்திகள் சாடத் தயங்கும் மொழியில் நித்யானந்தரைத் திட்டிக் கொண்டே, இவர் ஆட்டு மந்தைகள் என்று எள்ளி நகையாடும் ஆசிரமப் பெண்கள் ரேஞ்சுக்கு 'புற்று நோயைக் குணப்படுத்தினார்' என்று இன்னும் கூட புருடாக்களை நம்புவதை என்ன சொல்ல! கல்வெட்டு அவர்கள் சொல்வது போல் இவர்கள் எல்லோரும் 'வெறும் கதை எழுதிகள்' மட்டுமே போலும்!

தமிழர்களின் ஐந்தாண்டுத் திட்டங்களில் ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு ஏமாறிக் குமுறுவதும், சாமியார்கள் பின்னே ஓடி, பிறகு முட்டாள்கள் போல உணருவதும் பிரதானமாக இருக்கும் அவலம் எப்போது மாறும் என்று தெரியவில்லை.

சன் டிவி நீலப் பட ரேஞ்சுக்கு இருந்த காட்சிகளை தொடர்ந்து மீள் ஒளிபரப்பு செய்ததை சொரணையுள்ள தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். அவர்கள் மேல் உயர்ந்த அபிப்பிராயம் எப்போதுமே இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் புதுப் புதுப் பாதாளங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். Creatures without any journalistic ethics!

கொஞ்சம் தாமதமாகத்தான் என்னுடைய பொதுப் புத்தி கழன்று, முற்போக்கு எண்ணம் தலை தூக்கியது. இது என்ன நடிகைகள் ஏன் இப்படி உழல்கிறார்கள்? ஒரு முறை இந்த சினிமாத் துறையில் நுழைந்து விட்டால், இயல்பு வாழ்க்கை வாழவே முடியாதா? சமூகம் ஏன் இவர்களை இப்படித் துரத்துகிறது என்ற சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. நடிகைகள் 'நேற்று ஒரு மாண்பு மிகு. அதற்கு முன் தினம் பிரபல தொழிலதிபர்; இன்று மனிதக் கடவுள்; நாளை ஒரு உயர் அதிகாரி' என்று பணம், அதிகாரம் இருக்குமிடத்திலேயே ஐக்கியமாகி விடுகிறார்கள். இது ஒரு தொழில் என்றான பின்பு இந்த விஷயத்தில் நடிகையை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்ததை தொலைக் காட்சியில் தொடர்ந்து காட்டி, அவரைக் கேவலப் படுத்தியதற்கு அவர் தொலைகாட்சி மேல் வழக்குப் போட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன்.

சன் நியூசில் கல்கி என்னும் மற்றொரு சாமியாரின் ஆசிரமத்தைக் காட்டினார்கள். எவ்வளவு பெரிய மாளிகை - ஆசிரமம் என்ற பெயரில்! நித்யானந்தா கூட இவ்வளவு இடங்களில் பெரிய 'ஆசிரமங்கள்' கட்டி இருப்பது - நம் மக்களின் மேல் அவ்வளவு கோபமும், எரிச்சலும் வருகிறது. இவர்களுக்கெல்லாம் தெருவில் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால், கோவில் வாயிலில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோக ஜீவன்களைக் கண்டால், சாலைப் பணியாளர்களிடம், துப்புரவுப் பணியாளர்களிடம், காலணி தைப்பவரிடம், மாலைத் தொடுப்பவரிடம் என்று விளிம்பில் இருப்பவர்களைக் காணும் பொழுது மனதை ஒன்றுமே செய்யாதா? ஆசிரமத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொட்டுவதற்குப் பதில் இவர்களுக்கு எல்லாம் உதவலாம். இதற்காகவாவது பதிவுகளைப் படித்தால் நிச்சயம் எரிச்சல் வரும் கலகக்காரர்கள் ஆசைப்படும் புரட்சி வந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. புரச்சி வீரர்களின் இந்த சீசனின் கோடை வாசஸ்தலம் இஸ்லாம் என்று தெரிகிறது. அல்லாஹ் பிழைகளை மன்னித்து அனைவரையும் காப்பாற்றட்டும்.