Wednesday, June 29, 2011

எகிப்து - இரு நாட்கள்




சமீபத்தில் அலுவலக நிமித்தம் கெய்ரோ இரண்டரை நாட்கள் செல்ல நேரிட்டது. முதலில் செல்ல அச்சமாக இருந்தாலும் அதைத் தாண்டி, மடம், நாணம், பயிர்ப்பு என்று எல்லாவற்றையும் ஒரேயடியாகத் தாண்டி வந்து விட்டேன். 


கெய்ரோ - இது ஒரு வட இந்திய மாநகரமில்லை என்பதை நம்புவது சற்று கடினம். கிட்டத்தட்ட டில்லி மாதிரி உள்ளது.  எண்பதுகளின்  டில்லி  எனலாம். நிறைய இடங்கள் இன்றைய மும்பை போலவும் இருக்கிறது.   நகரின் பிரதான இடங்களில்  நைல் நதி அமைதியாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. அல்லது நதிக் கரையைச் சுற்றி நகரம் அமைந்திருக்கிறது.  வைரமுத்துவின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:



நாம் மிகவும்
பொல்லாதவர்கள்;
மல்லிகைப் பூவில் கூட
ஜாதி பிரித்து விடுகிறோம்
நதிக்கரையில் பிறந்ததாம்
நாகரீகம்
நதிக்கரையில் பிறந்துமா
இத்துணை அழுக்கு!


உண்மைதான் இல்ல! இங்கும் மாலை வேளையில் மல்லிகைப்பூ மாலையாகத் தொடுக்கப்பட்டு விற்கிறார்கள். விற்பது ஆண்கள். அநியாயத்திற்கு அரபிக் பேசுகிறார்கள். முதல் நாள் இரவு ரொம்ப நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட பிடிபடவில்லை. 'சுக்ர' என்று காதில் விழுந்த வார்த்தையை நன்றி சொல்ல உபயோகப்படுத்துகிறார்கள். இது கிட்டத்தட்ட நம்ம  இந்தியின் (புதசெவி மன்னிக்க!) 'சுக்ரியா' (உருது மூலம்?) அருகில் உள்ளது.  போலவே 'கல்லாஸ்' என்னும் வார்த்தையும். தமிழில் 'மேட்டர் க்ளோஸ்' என்று சொல்வோமே. அத்தகைய தருணங்களுக்கு  'கல்லாஸ்' சொல்கிறார்கள் என்று சுயபுரிந்து கொண்டிருக்கிறேன்.



எல்லா வித சேனல்களிலும் பார்த்தேன். ஒரே அரபிக் வெள்ளம். அந்தக்கால தூர்தர்ஷனின் ஆரம்பகால அசட்டுத்தனங்கள்  அரபிக் சானலில் மிகுந்து இருப்பதில் ஒரு தெனாவட்டான திருப்தி கிடைத்தது. தொலைக்காட்சிப் பெண்கள் பெரும்பாலும் நல்ல நிறத்தில், உடல் வடிவம் பற்றியச் சற்றும் கவலையின்றி அனாயாசமாக நடிக்கிறார்கள். ஆண்கள் நம் பஞ்சாபிகளை விட ஆஜானுபாகுவாக, அவர்களை விட முகத்தில் ஒரு களையின்றி சிநேகமாகச் சிரிக்கிறார்கள். நான் இதுவரை பார்த்ததில் கெய்ரோவில் தான் அதிகமாகப் பெண்கள் கார்  ஓட்டுகிறார்கள்.  ஒரு மாறுதலுக்கு ஆண்களைவிட நன்றாகவே ஓட்டுகிறார்கள்.






மல்லிகைப் புரட்சியின் வாசம் நன்றாகவே வீசுகிறது. ஏழை-பணக்காரர் இடைவெளியில் தோன்றிய பலநாள் கோபம் புரட்சியாக பரிணாமம் எடுத்ததை உணர முடிகிறது. கெய்ரோவில் பலருக்கு 'முஸ்லிம் சகோதரத்துவம்' என்னும் அமைப்பின் தீவிர மத நிலை அச்சமூட்டுகிறது. கிராமப்புற, கல்வியறிவு கிடைக்காத ஏழைகளிடம் இவர்களுக்குச் செல்வாக்கு மிகவும் அதிகமாம். எகிபத்தில் 15%-20% வரை கிருத்துவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத் தகவல். 




புரட்சி வெடித்த நகரின் பிரதான நாற்சந்தி வழியே சென்றேன். சம்பிரதாயமாக புகைப்படங்கள் (ஓடும் காருக்குள்ளிருந்து, பாதுகாப்பாக) எடுத்தேன். 





எகிப்தைப் பொறுத்தவரை எனக்கு இந்தப் புரட்சிக்காரர்களிடம் ஒரு நம்பிக்கை ஏற்படவில்லை. அதிகாரம் (ஸ்ஸப்பாஆ) ஒரு கும்பலிடமிருந்து புதுக் கூட்டத்திற்குச் செல்லப் போகிறது. மக்களுக்கும் - வெகுநாள் பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில் புதிய கொள்ளையர்கள் முகங்கள் கொஞ்ச நாட்களாவது ஆர்வமூட்ட வேண்டும். அஷ்டே. (உயிரைப் பணயம் வைத்து புரட்சி செய்பவர்களை எவ்வளவு எளிதில் புறங்கையால் ஒதுக்க முடிகிறது என்னால்! - "தலைவா! அரசியலுக்கு வா" என்று ஏன் ஒருவரும் என்னைப் பார்த்து சொல்லவில்லை!)







ஆபிஸ் தோழி மாலையில் தானே காரோட்டி உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள். எனக்காக வெஜ் உணவகம் வேண்டாம். எங்க வேணாலும் போகலாம் என்றேன்.  ஈஸ்தர் முடிந்த பின்னும் சைவம் உண்ணா நோன்பில் இருப்பதால் சைவ உணவு கிடைக்குமிடத்திற்குக்  கூட்டிச்  செல்வதாக  அறிவித்தாள் அந்தக் கிருத்துவத்தோழி. நம்ம ஊரு போவன்டோவில் கொஞ்சம் புளியைக் கரைத்த மாதிரி  செம்ம  கூல்  ட்ரின்க்.  அப்புறம் ரொட்டி, தொட்டுக் கொள்ள சட்னி மற்றும் துவையல். கூல் ட்ரின்க் பெயர் எவ்வ்ளாவ்  கஷ்டப்பட்டாலும்   வாயில் நுழையவில்லை.  மற்றவை பெயர்கள்  முறையே பலாஜி (ஏடு கொண்டல வாடா!), அழ்ழ்ஜிமா, ஹாரம்மஸ். "தமய்ய்யா" சாப்பிடுகிறாயா என்றபோது  நம்ம  தமன்னாவை  நினைவு  படுத்தியதால்  சரி என்றேன். நம்ம ஊர் மசால்  வடையில்  மசாலா  குறைத்து கொஞ்சம் கட்லெட்டையும்  சேர்த்தால்  எப்படி இருக்கும்.  அப்படி இருந்தது. தலைவியை  நினைத்துக்  கொண்டே சாப்பிட்டால் ஒப்பேத்தி விடலாம். வயிறு  நிரம்பிய  உற்சாகத்தில்  அரபிக்  பேசியே ஆக வேண்டும் என்ற வெறி  ஏற்பட்டு 'அல்ஹழ்ழும்ம்மஸ் கரோஹஸ்'  என்றேன்.   பதறியவளிடம் மறந்து போய்  இந்தியாவின் மணிப்பூரி  மொழி  பேசிவிட்டேன் என்றேன்."நீ கவிதை எழுதுவது இந்த மொழியில் தானே"  என்றாள்.  இதுவரை இல்லை. இனிமேல் நடக்கலாம் என்றேன். மேலே ஒன்றும் பேசாமல் பில்லுக்குப் பணம் கொடுத்தாள்.  அது!



சமீபத்தில் இந்தியாவில் கிரகணத்தில் சிக்கிக்கொண்ட சந்திரன் கெய்ரோ ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலின் மேல்  திடீரென (ஆமாம்  பாஸ், ஒரு ஹேய்னேகென் கேன் முடிப்பதற்குள்) தொங்கியது. எனக்கான  பிரத்யேக   செய்தி  ஆல்டபரானிலிருந்து வந்ததைச் சொல்லியது. ஞாயிறு இங்கு வாரத்தின்  முதல் நாள். வெள்ளி,  சனி  விடுமுறைகள்.  ஞாயிறு அலுவலகம் வெகு மந்தம். நாலு நாள்  வேலை,  மூன்று நாள் சாகவாசம் என்னும்  டீலிங்  எனக்கு ரொம்பவே பிடிக்கிறது. இரண்டு நாட்களும் நைல் நதிக்கரையோர டிஸ்கோக்களில் இருந்து "திம் தும் பம்" என்று ரகுமான்தனமான  தாளங்கள்.  ரகுமான் இசை போலவே அந்தச்  சமயத்திற்கு  கால்களை ஆட்டிவிட்டு மனதில் தங்காத இசை. (இந்த வரிகள்  பஸ்ஸில் எனக்குப் பிடித்த இரண்டு 
'னோ' க்களுக்காக).



நகரின் பிரதான மனிதர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. புரட்சியின் விளைவுகள், எதிர்காலம் பற்றி நிறைய கவலைகள், எதிர்ப்பார்ப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால்,  முத்தாய்பாக அவர் சொன்னது. "எகிப்திற்கு எப்போதுமே  எதிர்காலம்   பிரகாசம். பைபிள், குரான் இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ள  பெருமைக்குரிய நாடு  எமது".  

இன்ஷால்லா & ஆமென். ஆபிரகாமிய மதங்களின் தாயாக எப்போதும் எகிப்து விளங்கட்டும். 


மேலும் சில புகைப்படங்கள் 



Wednesday, June 22, 2011

காலப்பிழை



கால இயந்திரத்தின்
தவறான பொத்தான்களை
அழுத்தி விட்டேன்
முன்னாலும் இல்லாமல்
பின்னாலும் செல்லாமல்
பக்கவாட்டில் நகர்வதால்  
எங்கும் அசைவில்லை
அவளின் மூடிய
இமைகள் திறக்கவேயில்லை
இவனின் திறந்த
வாய் மூடவேயில்லை
இந்த ஊர் சூரியன்
45 பாகையிலேயே நிற்கிறான்
தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் மழைநீரென
பிரம்மாண்ட வினாடியொன்றுள்
சிக்கிக்கொண்டேன்
தாழம்பூ மணம் கமழ
முளைக்கத் துவங்கிய
நான்காம் சிரத்திலிருந்து
ஆணைகள் பிறப்பிக்கப்பட
கையிலிருந்த களிமண்ணால்
படைக்கத் தொடங்கினேன்
முன் செய்த பிழைகளையும்
விடுபட்ட இன்னபிறவையும்
இம்முறையாவது ஈடுகட்டி
இருவரும் மனிதராக

(வெகு நாள்கள் முன் அகநாழிகையில் பிரசுரமானது)