Monday, November 30, 2009

காக்கிச் சட்டை - எதைப் பற்றியும் பற்றாமலும்

என் பதின்ம வயதுகளில், "மருத்துவத்துறை, காவல்துறை' இந்த இரண்டில் மட்டும் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னுடைய அறிவு கூர்மைக்கும், நோஞ்சான் உடல் அமைப்புக்கும் இது இரண்டுமே வாய்த்திருக்காது என்றாலும், என்னுடைய குதர்க்கமான மூளை "இருபத்து நான்கு மணி நேரமும் அசாதாரண மக்களுடன், அதாவது நோயாளிகள், குற்றவாளிகள் இவர்களுடன் வேலை பார்ப்பது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது' என்னும் வாதத்தை வைத்தது.



என்னதான் புனிதமான தொழில் என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அவசரம் என்றால் ஓடி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மாபெரும் அநீதி என்று தோன்றியது. பெண்களைத் தெய்வம், அகிலாண்டேஸ்வரி என்றெல்லாம் ஐஸ் வைத்து நாமெல்லாம் exploit செய்வது போலவே உலகம் இந்த பள்ளி வாத்தியார்கள் மற்றும் மருத்துவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்து, இரத்தத்தை உறிஞ்சுகிறது என்று எண்ணுவேன். பல பள்ளி ஆசிரியர்கள் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை போட்டு இப்போதெல்லாம் ஓரளவு சுதாரித்துக் கொண்டுவிட்டார்கள் என்றாலும், மருத்துவ சேவையில் உள்ளவர்களிடம் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் எப்போதுமே மிக அதிகம்தான்.


அது போலவே தான் காவல் துறையும். தினமும், இரவு பகல் என்றில்லாமல் குற்றவாளிகளைத் தேடுவது, பிடிப்பது, தண்டிப்பது, சந்தேகிப்பது என்று இது என்ன மாதிரியான வேலை என்று அவர்களிடம் எனக்குப் பரிதாபம் தான். ஒரு காலகட்டத்திற்குப் பின் உணர்வுகள் மரத்துப் போய் கிட்டத்தட்ட சாடிஸ்டுகள் ஆகி விடுவார்களோ என்னும் கவலையும் தோன்றும். உழவர்கள் தற்கொலைகளுக்கு அடுத்து எனக்குத் தெரிந்து நிறைய காவல்காரர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். என்ன, அதற்கு முன் தம்முடைய சகாக்கள் சிலரையும், முக்கியமாக தன் உயர் அதிகாரியையும் தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள். அந்த அளவு அவர்களுக்கு மன உளைச்சல் பணி இடத்தில் இருக்கிறது. மற்றவர்களுடன் பார்க்கையில் விமான நிலையத்துள் பணி புரியும் காவலர்கள் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள் என்று எண்ணுவேன். குளுகுளு ஹால்களில், விமானத்தில் பறக்கும் பெரும்பாலான கொம்பர்களை சிறு மேடையில் நிற்க வைத்து, சிவப்பு விளக்கில் ரீங்கார மூச்சு விடும், உலோகத்தை உணர்ந்தால் ஓலமிடும் வஸ்துக்களால் 'உம், கையைத் தூக்கு, கீழே போடு' என்று ட்ரில் மாஸ்டர் போல தோள் முதல் தொடை வரை சோதனையிடும் ரொம்ப தொந்தரவில்லா வேலை என்று நினைத்திருந்தேன்.


இன்னும் சில துணை அதிகாரிகள் சொகுசாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கணினியில் ஒண்ணாங்கிளாஸ் பையன் தீற்றிய வாட்டர் கலர் ஓவியம் போலத் தெரியும் பயணிகளின் பெட்டி, படுக்கை இத்யாதிகளில் அபாய சின்னங்களைத் துளாவுவதைப் பார்த்திருக்கிறேன். என் கண்ணெதிரே உயரதிகாரியிடம் செம்ம டோஸ் வாங்கிய ஒரு காவலர் கண்களில் நீர் தளும்பியது. வாட்டர் கலரைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவருக்கும் ஹிந்தியில் வசை பொழிந்தது. நேற்று விமானம் தாமதமானதால் அருகிலிருந்த அந்த காவலர்களிடம் கொஞ்சம் பேச முடிந்தது. முதலாமவர் இரண்டு மாதங்களாக நான்கு தினங்கள் விடுப்பு கேட்டு, ஒவ்வொரு முறையும் மறுக்கப் படுவதுடன் திட்டும் கிடைக்கிறது. இதில் போன மாதம் அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. இவர் ஒரிசாவைச் சேர்ந்தவர். இரண்டாமவர் ஒரு முறை ஹான்ட்-பாக்கேஜில் நகவெட்டி இருப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்ததால் உயர் அதிகாரிக்கு பசி எடுக்கும் போதெல்லாம் இவருக்கு வசை மழை பொழியுமாம்.


‘நிச்சயமாக அவனுக்கு என் கைகளில் தான் சாவு’ என்று பற்களைக் கடித்த முதலாமவர் மீது எனக்கு கவலையாக இருக்கிறது. ஓரளவு நிதானமான அவரது சகா, தங்களைத் திட்டும் உயர் அதிகாரியை விசாரித்தால் அவர் கதையிலும் சோகம் இருக்கும் என்று ஒப்புக் கொள்கிறார். சொற்ப சம்பளம், பொதுமக்கள் பாதுகாப்பு என்பதால் கடமையில் சிறிதும் கவனப் பிசகு ஏற்படக்கூடாது என்னும் பதட்டம், இரவு-பகல் பேதமின்றி எந்நேரமும் வேலை செய்ய வேண்டிய சூழல், போதிய அளவு ஆட்களை நியமிக்காத அரசு என்று நிறைய இடங்களைப் போல இவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள். அடுத்த முறை சோதனைக்கு உட்படுகையில் இவர்களுக்கு ஒரு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்ற என்னால் செயல்படுத்தக்கூடிய முடிவு மட்டும் எடுத்தேன்.




மும்பையில் போன வருடம் நிகழ்ந்த பயங்கரவாதத்திற்குப் பின் 'இந்தியாவின் நுழை வாயில்' எனப்படும் வரலாற்றுச் சின்னமான கேட்வே வளாகத்தில் (தாஜ் ஹோட்டலுக்கு எதிரில்) ஆணி அடித்து, நைலான் கொடியை மாட்டி, லுங்கி,உள்ளாடைகள் என சகலத்தையும் தொங்க விட்டு, குடும்பம் நடத்தும் மகாராஷ்டிரப் போலீஸ்காரர்கள் பற்றி படித்தது வேதனையான விஷயம். இயற்கை உபாதைகளுக்கு அருகிலிருக்கும் முட்டுச் சந்தைத் தேட வேண்டும். தாஜ் ஹோட்டல் தயவில் மதிய, இரவு உணவு கிடைக்கிறது (போலிஸ் உயர் அதிகாரிகள் இதை மறுத்தாலும் இதுதான் உண்மை). சமீபத்தில் கனடா நாட்டுப் பிரதமர் கேட்வே பார்க்க வருவதாக இருந்த போது, சேரி வாழ் ஜனங்களை வெளியேற்றுவது போல், இவர்களை போலிஸ் நிர்வாகம் வெளியேறக் கோரியபோது மறுத்து விட்டார்களாம். நல்ல வேளையாக அந்த வி.ஐ.பி. நிகழ்ச்சியை ரத்து செய்ததால் விஷயம் பெரிதாகவில்லை. ஆனாலும், தண்டனையாக பதினாறு கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு விட்டு வரச் சொன்னார்களாம். இந்த இடம் ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. இதை விட மோசமான இடங்களில் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு நல்ல சம்பளம் வருகிறதே என்று சொல்லும் இருபது ஆண்டு சர்வீஸ் போட்ட இவர்களின் மாதச் சம்பளம் பதினைந்து ஆயிரத்திலிருந்து இருபது ஆயிரம் வரைக்கும். ஒரு இருபது வயது பி.பி.ஒ. நிறுவன ஊழியனின் சம்பளம்.


அடுத்த முறை திரைப்படங்களில் போலீஸ்காரர்கள் பற்றிய நகைச்சுவைக் காட்சி வரும்போது இதையும் நினைவில் வைத்திருங்கள். போலவே நம்ம பைத்தியக்காரன் போன்றோர் 'அதிகாரம்', 'ஃபூக்கோ' என்று முழங்கும் போது அது இந்த சாமானியர்களைக் குறிக்கவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

மனதை இலேசாக்க ஒரு தேவதச்சன் கவிதை :



பழைய புத்தகக் கடையில்


பழைய புத்தகக் கடையில்
என்
கவிதைப் புத்தகம்
ஓரங்கள் கிழிந்து
அங்கங்கே அரித்து -
எவ்வளவு அழகு.
புதைவிலிருந்தபடியே
வெளியே தெரியும்
கடல்செடி போல -
எவ்வளவு நிசப்தம்.
இப் புத்தகம்
உபயோகமில்லை என்று
எப்போது தெரிந்துகொண்டான்,
அவ் வாசகன்.
உதிர்ந்த இலைகளை
புலி ஒன்று
பார்த்துக் கொண்டிருப்பது போல்
என் புத்தகத்தை
இப்போது
யார்
வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Thursday, November 26, 2009

26/11 - மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்

சென்ற வருட நவம்பர் 26 மற்றும் 27 எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தினங்கள்.  ஒரு  பொதுத்துயரத்தில் நம் தனிப்பட்ட அனுபவமும் சேரும்போது, வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களில் அது ஒட்டிக்கொள்கிறது. இனி தொடர்ந்து படியுங்கள்:




சூசன் ஜார்ஜ்


அவள் வருகிறாள் என்று ஒரு வாரம் முன்பே தெரியும். டோரோண்டோவிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் பிரத்யேகமாக மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ஆனாலும், சனி, ஞாயிறின் கொண்டாட்டங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, மறந்து, திங்கள் காலையைப் படைத்த ஆசாமியை கெட்ட வார்த்தைகளில் சபித்து, ஏழு மணிமுதல் வீட்டில் கலவரம் செய்து, ஒருவழியாக ஆபிஸ் சேர்ந்தாயிற்று.. அப்பாடா, இன்றைய சம்பளம் நியாயமானதுதான் என்று காபி குடிக்கையில் லவினா தொலைபேசியில், '9.30 ஆகிவிட்டது. கான்பரன்ஸ் ரூம் செல்லவும். சூசன் வந்தாயிற்று. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள். ஓஹ், இன்று இந்தக் கிராதகி வந்தாயிற்றா? இந்த வாரம் குருபெயர்ச்சியில் ராசிபலன் பார்க்க வேண்டும்.

'ஹாய் சூசன் - ஹலோ கைஸ்'




'ஹாய் ராகவ், சோ நைஸ். நண்பர்களே, ராகவ் என்னும் தலையில் கொம்பு முளைத்த அரிய பிராணியைச் சந்தியுங்கள். நமது ஒரு வார நிகழ்ச்சி நிரலில் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிக்கு வர இசைந்த ராகவுக்கு, இந்த சிறிய வரவேற்பு' என்று மஹாபலேஷ்வர் தோட்டத்து ரோஜாப் பூங்கொத்துக்களை என்னிடம் அளித்து கை தட்ட, கூட்டமும் தட்டியது.



மரியாதை நிமித்த முதுகு சொறிதல்களுக்குப் பின், நான் சில உண்மைகள் சொல்ல, அவள் இன்னும் பல, பெரிய உண்மைகள் பேச, கலவரம் நிகழும் முன், எச்சரிக்கையுடன் சிரித்து முடித்துக்கொண்டோம். இப்போதைக்கு அவ்வளவுதான். இனி நாளை இரவுதான் அவளுடன் விருந்து என்ற நிம்மதியில் அலுவலக வேலைக்கிடையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல கவிதை முயற்சியில் இறங்கித் தோற்றேன்.



இந்த சந்தர்ப்பத்தில் சூசனை விவரிப்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கிறது. முழுப் பெயர் சூசன் ஜார்ஜ். சிகப்பி. உயரி. அழகி. வயது முப்பத்தி இரண்டு என்று ஞாபகம். அவர்கள் 25-38 வரை கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் வயதை துல்லியமாகக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. டொரோண்டோ அருகில் உள்ள ஹாமில்டன் என்னும் சிறு நகரம் அவள் பிறந்து வளர்ந்து, அழகான இடம். கால்கரியில் பட்டம் முடித்து, டோரோண்டோவில் மேற்படிப்பு... இல்லை “யேல் எம்.பி.ஏ” என்றாளே. என்னவோ போங்க சார், இந்தப் கல்வி பற்றிய தகவல்கள் மட்டும் மூளைக்குள் நுழைய மாட்டேங்குது. எங்கப் படிச்சா நமக்கென்ன.



செவ்வாய் மதியம் கூப்பிட்டு, ‘நமது இரவு விருந்தை நாளை இரவுக்கு மாற்றட்டுமா’ என்றாள். 'நோ இஷ்யுஸ்' என்று சொல்லிவிட்டு மகிழ்ந்தேன். புதன் மாலை. 'பெரிய ஹோட்டல் சாப்பாடு அலுக்கிறது. நல்ல உணவகம் இருந்தால் சொல்லு. அங்கே போகலாம்' என்றாள். வொர்லியில் (வீட்டுக்குச் செல்லும் வழி. நேரம் மிச்சம்) 'ஜ்வெல் ஆப் இந்தியா' என்னும் உணவகம் சென்று இடம் பிடித்து அடுத்த மூன்று மணிநேர அறுவைக்குத் தயாரானேன்.



சட்டென்று அடையாளம் தெரியாத வெளிர் நீல சூடிதார் உடையில் வந்தாள். ஆபீஸில் மெதுவாகக் கைகுலுக்கும் சூசன் இப்போது ஆரத் தழுவினாள். சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும். அப்போதெல்லாம் ஒரு படபடப்பு, உத்வேகம், இத்யாதிகள் வருவதில்லை. ஒரு கசின் சிஸ்டரைப் பார்க்கும் உணர்வே மிஞ்சும். எனக்கு அப்படித்தான் இப்போது இருந்தது.



யோக்கியனாக நடிக்க முயன்ற என்னை சட்டை செய்யாமல் எனக்கு பியரும் அவளுக்கு 'ஜின்' என்னும் பெண்கள் அருந்தும் மதுவும் ஆர்டர் செய்தாள். 'இன்னைக்கு நமக்கு சரியான பூசைதான் விட்டுல' என்று அப்போதே வெளிறத் துவங்கினேன். முகத்தைச் சரியாகப் படித்தவள் போல, 'அனு கிட்ட நான் பேசிக்கறேன். பயப்படாமல் ஒரு கிளாஸ் பியர் குடி. அதற்கு மேல் நீ கேட்டாலும் கிடையாது' என்றதில் சிறிது ஆசுவாசம் ஆனேன்.



'இதோ பார் ராகவ், ஆபிஸ் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது. நீயும் நானும், கொஞ்சம் சிடுமூஞ்சிகள் ஆனாலும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சோ..'

'ஆகச் சரி குரங்கே'



என் மேல் தெறித்த கால் டம்ப்ளர் ஜின்னில் என் சட்டை ஈரமானதுடன், எங்கள் இறுக்கமும் காணாமல் போனது.

முதலில் தன்னை பற்றி நிறைய சொன்னாள். உயர் மத்யம குடும்பம். கல்வி. விளையாட்டு (ஐஸ் ஹாக்கி ரொம்ப பிடிக்கும்). கல்லூரி காதல் இரண்டு ஆண்டுகள். பிறகு மேற்படிப்பு. வேலை. பதவி உயர்வு. மேலும் அதிக வேலை. இடையில் ஹார்மிசன் என்னும் அழகான வாலிபனின் பிரவேசம். வாழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்கடியது. இன்னும் ஏறக்குறைய அவ்வாறே செல்லும் வாழ்க்கை என்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.



'நானே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்லு இப்போ'



'பெருசா ஒண்ணும் இல்ல'

'ஆபிஸ் சொற்பொழிவு போல் போலியாக இருக்காதே. ஓபன் அவுட் யு டாக்'



நானும் நிறைய பேசினேன். எல்லோரோடும் போட்டி போட்டு, அரைகுறை வெற்றி பெற்று, கிடைத்த வேலையை வாங்கிக்கொண்டு, வேண்டிய வேலையை அதன் மாயக் கவர்ச்சி போனபின் பெற்று, எல்லா சராரசி ஆண்கள் போல் நான்கு பெண்களைப் பார்த்து, மூவரைக் குறிவைத்து, இருவரைத் தேர்வு செய்து, ஏமாந்த ஒருத்தியைக் காதலித்து, ஆச்சரியமாக அவளையே திருமணமும் செய்ததுவரை எல்லாம் சொன்னேன்.



"உன் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. ஜிக் ஜாக் என்று மேலும் கீழும், மாயமும், சிறு சிறு ஏமாற்றங்களும். நீ விவரித்த விதம் இன்னும் சுவாரஸ்யம். இந்தியாவைப் பற்றி பேசேன். எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் நாட்டை"



"உங்கள் நாட்டுக்கு 300-400 வயது. பொருளாதார முறையில் செதுக்கப்பட்ட, ஓரளவு தட்டையான கலாசாரம். நான் சொல்வதை தவறாக எண்ணாதே. இந்தியா மிகப் பழமையானது. தொன்மை வாய்ந்தது"

"எனக்கும் தெரியும். மூவாயிரம் ஆண்டுகள் முந்தைய கலாசாரம். ரைட்? "



"வெளியில் சொல்லாதே. ஒரு பொதுக்கூட்டமே உன்னை அடிக்க ஓடி வரும். காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை யாரைக் கேட்டாலும், இந்தியாவுக்கு சராசரி வயது ஒரு பத்தாயிரமாவது இருக்கும்"



"சும்மா விளையாடாதே"



"நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க"



"இதுல எவ்வளோ கட்டுக்கதை? எவ்வளோ வரலாற்று உண்மைகள்?"



"யாரு சொல்றாங்க என்பதைப் பொறுத்தே கதையா அல்லது வரலாறா என்று முடிவு செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை - உங்கள் மேற்கத்திய வரலாற்று உண்மைகள் உட்பட"



எல்லாம் பேசி முடித்த போது மணி ஒன்பது. மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.



"ஒரு உர்ரான்குட்டானுக்குள்ள இவ்வளவு மென்மையான ஆசாமி ஒளிந்திருப்பானு நினைக்கல. நல்லது. நாளை காலை பார்ப்போம். போரைத் தொடர்வோம்" என்று சொல்லி டாக்சியில் ஏறி ஹோட்டலைச் சென்றடைந்தாள்.



நான் இளம் ஏப்பத்துடன், இளையராஜாவைக் கேட்டுக்கொண்டு, வீடு சேர்ந்தபோது பத்து. வழக்கம் போல வடிவேலு பார்க்காமல் தூக்கம் வராது என்பதால், அனுவுடன் அமர்ந்தேன். விளம்பர இடைவேளையில், சேனல் தாவுகையில், டைம்ஸ் நவ்வில் "தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நுழைவு" என்ற Breaking News.



முதலில் உரைக்கவில்லை. கடவுளே, சூசன் தங்கியிருப்பது ஓபராய் அல்லவா!



சுசனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். மொபைல், மற்றும் ப்ளாக்பெர்ரி இரண்டுமே உயிர் போயிருந்தது. ஹோட்டல் நம்பர் சிலமுறை 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை'; பலமுறை சுடுகாட்டு மௌனம். ச்சே, என்ன உவமை.



அனு, 'வண்டி எடுங்கள், போய் பார்த்துவிடலாம்' என்றாள்.



Pant போடும்போதே, நிகழ்ச்சிகளின் தீவிரம் புரியத் தொடங்கியது. நாங்கள், அந்தேரி தாண்டுகையில், இடையில் மறித்த கும்பல் ஒன்று "பார்லாவில் குண்டு போட்டு, ஒரு டாக்சி சுக்குநூறு, மேலே போகாதீர்கள்" என்றது. ஆயினும் குருட்டு தைரியத்திலும், சூசன் பற்றிய பயங்களிலும் காரை மேலும் ஓட்டினேன். ஒரு கூட்டம் வழியில் நின்றதால், வேறு வழியின்றி காரை நிறுத்தி ..'ஒ என்ன கோரம்! ஒரு தலை மட்டும் ரோட்டின் ஓரத்தில், கழுத்தில் ரத்தக்கூழுடன்'. அதற்கு மேல் முடியவில்லை இருவருக்கும். பேசாமல் திரும்பிவிட்டோம்.



முடிந்த வரை விழித்திருந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தோம். NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. மூன்று மணியளவில் அசதியில் கண்ணயர்ந்துவிட்டோம். காலை ஆறு மணிக்கே புறப்பட்டேன். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.



சாலை முழுதும் வெறிச்சோடி இருந்தது. மரின் டிரைவ் மும்பையின் கிரிடங்களில் ஒன்று. பெடெர் சாலையிலிருந்து மரின் டிரைவ் திரும்பியதுமே, தூரத்தில் எழும்பிய ஓபராய் ஹோட்டல். அதனுள் பதினாறாம் அடுக்கில் … சூசன்?



'இல்லை. அவள் அங்கு இல்லை. அந்தக் கிறுக்கு, பெரிய வாக்கிங் சென்று, ஹோட்டலுக்குள் நுழைய முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியானால் போன் பண்ணுவாளே. ஐயோ, மூளையே, கொஞ்சம் நேரம் தர்க்கரீதியாக சிந்திக்காமல் இரேன்'.



மரின் பிளாசா என்ற ஹோட்டல் அருகிலேயே காரை நிறுத்திவிட்டார்கள். ஏகப்பட்ட கெடுபிடி. என்னைபோன்ற பலர் உறவினர், நண்பர்களை ஒபராயில் தொலைத்துவிட்டு, கையறு நிலையில் முழித்துக்கொண்டு இருந்தோம். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆபிஸ் P.R.O. வும் வந்துவிட்டு இருந்தார். எனக்கு 'இதெல்லாம் சகஜமப்பா' பாணியில் காக்கியில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மகாராஷ்டிர போலீஸ் மீது நம்பிக்கை சிறிதும் இல்லை. சிறிது நேரத்தில் என்.எஸ்.ஜி. வந்தது.

யாருக்கும் ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சேனல்கள் தங்கள் அனுமானங்களை, வழக்கம் போல், செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தன.



அப்புறம், ஒரு D.G.P. பரிந்துரையில், ஹோட்டல் அருகில் செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு மிக சூடாகவும், புகையினால் தொண்டை எரிச்சலும் இருந்தது. ஓபராயின் பெண் ஒருத்தி, ஒரு ராணுவ வீரருடன் அமர்ந்து விருந்தினர் பட்டியலைக் கலந்தாலோசித்து, உறவினர்/நண்பர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல, மெல்ல, அச்சத்துடன் அவளை அணுகி 'சூசன் ஜார்ஜ்; ரூம் நம்பர் 1617 ' என்றேன். என் வாழ்வின் மிக மிக அதிகமான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு, உதட்டைப் பிதுக்கி, சற்று சோகத்துடன் 'அவள் மேலே இருக்கிறாள்' என்றாள்.

'இஸ் ஷி அலைவ்?'



'டொன்னோ. நிறைய பேரை கொன்று விட்டார்கள். பல பேர் பணயக்கைதிகளாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறோம்'



'எப்படி மீட்கப் போகிறீர்கள்?'



'என்.எஸ்.ஜி.யை நம்புங்கள். நிச்சயம் நாங்கள் செய்வோம்' என்றார் இராணுவம்.



இதற்குள் சில உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள். சிலருக்கு உயிரும் இருந்தது. ஒரு அம்புலன்சின் மூடும் கதவில், கடைசியாக சூசனின் வெளிர் நீலச் சூடிதார் தெரிய, விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். ஜெ.ஜெ.ஹாஸ்பெடல் சென்றடைந்து, அவர்களை பிடிக்கையில், சூசன் எங்கோ உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்தாள். விசாரித்ததில், 'நிலைமை மிக மோசம் என்றும், பிழைக்க வாய்ப்பு இருபது விழுக்காடு' என்றும் சொன்னார்கள். ஆயினும், அந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ஆற்றிய பணியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இது அல்லவா சேவை. பிறகு வாழ்வில் அரிய கணங்களில் ஒன்றாக பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினேன்.



சூசனின் தந்தைக்கும், அவளின் ஆதர்ச கணவனுக்கும் (ஹர்மிசன்) தொலைபேசியில் "ஒன்றும் கவலைப்பட வேண்டாம்" என்று சொன்னதற்கு, மற்றவர்கள் திட்டினார்கள். இப்படியே கழிந்த அடுத்த பதினெட்டு மணி நேரங்களுக்குப் பின் ஜெ.ஜெ.வின் ஐ.சி.யு. வழியே ஒரு நல்ல செய்தி 'அவள் பிழைத்துவிட்டாள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.'



அவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது. 'நிறைய இரத்த இழப்புடன் சேர்க்கப்பட்ட அவள் பிழைத்தது ஒரு மருத்துவ விந்தை மற்றும் அவளுடைய வாழ்வின் மீதான பிடிப்பு' என்று அவர்கள் கூறினார்கள்.



இன்று காலை சென்றபோது அவளுக்கு சுய நினைவு திரும்பியிருந்தது. மிகச் சோர்வுடன் என் கைகளைப் பிடித்தவள் கைகளில் என் முகத்தை புதைத்து .....வேண்டாம், ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒரு வினோத நியதி.



இப்போது பார்க்கிறேன் குருபெயர்ச்சி பலன்கள்: "மகர ராசிக் காரர்களுக்கு மேற்கில் இருந்து வரும் விருந்தாளிகளால் மிகுந்த மனக் கிலேசமும், அலைச்சலும் அமையும். உங்கள் உதவும் மனப்பான்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாலும், கடவுள் பக்தி மிகுந்த (!) உங்களுக்கு தன்வந்திரி யோகம் இருப்பதால் இந்தக் கவலையிலிருந்து சீக்கிரமே மீள்வீர்கள். புதிதான உறவுகள் பிறக்கும்'.



எப்போதும் ஜோசியத்தில் ஆர்வமுடைய அனு, 'ஐயோ, மிகச் சரியாகத்தான் போட்டிருக்கிறார்கள்.' என்றாள்.
*****************************************************************************************

இது ஒரு மீள்பதிவு. எதற்கு  என்ற கேட்பவர்களுக்கு: 

பதிவில் எழுத புதிதாக விஷயம் ஒன்றுமில்லை; 
இப்போது பயணத்தில் இருப்பதால் இணைய இணைப்புக்குக் கொஞ்சம் சிரமம்; 
பிரபலங்கள் மீள்பதிவு போடுவதைப் பார்த்து, இந்தப் பூனையும்.....

முன்பே படித்தவர்கள் கோபிக்காதீர்கள். மற்றவர்களும் படிக்கலாமே என்று தான்..

Wednesday, November 18, 2009

ஒரு கவிதையின் கதை

பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பும்போது பிரசுரம் ஆனால் போதும் என்ற மனநிலையே ஆரம்ப நிலை படைப்பாளிகளுக்கு இருக்கும். பத்திரிகை ஆசிரியர்களுக்குப் படைப்பின் தரத்துடன் நேர்த்தி, வடிவமைப்பு, வாசகர்களின் ரசனை அளவு போன்ற அளவுகோல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், படைப்பில் சில மாற்றங்கள் செய்வது அவர்கள் உரிமை மற்றும் தேவையும் கூட என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



பொதுவாகக் கவிஞர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். மென்மையானவர்கள். உத்வேகம் மிகுந்தவர்கள். தம் படைப்பில் ஆழ்ந்த பெருமை உடையவர்கள் என்பது என் எண்ணம். நிச்சயமாக உரைநடை அளவு கவிதை எழுதுவது எளிதில்லை. எனக்குப் பிடித்த கவிதாயினி பெருந்தேவி சொல்வது போல கவிதை என்பது 'மொழியின் கொதிநிலை'.


எதற்கு இத்தனை பீடிகை என்றால்...நான் ஒரு கவிதை 'உன்னதம்' என்னும் சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தேன். அந்தக் கவிதை பிரசுரம் ஆனது எனக்கு நண்பர் பொன்.வாசுதேவன் (அகநாழிகை) சொல்லித்தான் தெரிய வந்தது. பிறகு பத்திரிக்கை கையில் வந்ததும் பெருமையுடன் பிரித்துப் பார்த்தால் கவிதை உருமாற்றம் அடைந்திருந்தது. உண்மையில் அது 'கவிதை' ஆகியிருந்தது. பிரசுரமான கவிதை, நான் அனுப்பிய கவிதை முயற்சி இரண்டையும் கீழே தருகிறேன். அப்போது உங்களுக்குப் புரியும் - பத்திரிகை ஆசிரியர்களின் அன்றாடச் சிரமங்கள் எவ்வளவு என்று.


சில நாட்கள் முன் 'உன்னதம்' ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் அவர்களுடன் பேசும்போது அவரே 'சில மாற்றங்கள் செய்தேன். பரவாயில்லை தானே' என்று பரிவாகக் கேட்டார். நமக்கு நம்ம பேர் அச்சில் வரணும். அதுவும் நிசமாலுமே ஒரு கவிதையின் எதிரில் என்றால் கசக்குமா? 'தாராளமாகச் செய்யுங்கள்' என்றேன். பிறகு யோசித்தேன். மற்ற கவிஞர்கள்/படைப்பாளிகள் எப்படி உணருவார்கள் என்று. உதாரணத்திற்கு, நண்பன் சேரல் நான் அவதானித்த அளவில் தன் படைப்புகளில் நியாயமான பெருமை உடையவர். சமயங்களில் சில பின்னூட்டங்கள் 'இந்த வரி இப்படி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் சொற்சிக்கனம் தேவை' என்ற தொனியில் வந்தால், 'இருக்கலாம். ஆனால் இது என் கவிதை; என் குழந்தை; இப்படியே இருக்கட்டும்; அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொல்வதைக் கவனித்து இருக்கிறேன். அதை மமதை, கர்வம் என்று கொள்ளாமல் நியாயமான, இயல்பான தன்னம்பிக்கை என்றே பொருள்கொள்ள வேண்டும்.


அதே சமயம், நண்பன் முத்துவேல் ஒரு முறை ஹரன் பிரசன்னாவின் இரு வரிக் கவிதையைப் பார்த்து, நான் பலவரிகளில் சொல்லியதை இவ்வளவு அழகாக, சிக்கனமாகச் சொல்ல முடியுமா என்று வியந்த அடக்கத்தையும் குறிப்பிட வேண்டும்.


‘உன்னதம்’ உருமாற்றிய கவிதையில் சொல்லப்படுவதற்கும், நான் சொல்ல வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்ததால் இதை எழுதுகிறேன். நான் சராசரி மனிதனின் அல்ப ஆசைகளை சற்று அங்கதமாக சொல்ல முயன்றேன். பிரசுரம் ஆகிய கவிதை இன்னும் சற்று ஆழமாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கிறது. இவ்வளவு பீடிகை போதும். இனி கவிதைகள்:

முதலில் நான் அனுப்பிய கவிதை



மனக்கணக்கு


குளிரைப் போக்கிட


விசிறியை நிறுத்தினேன்


வட்டப் படலமாய்த்


தொங்கிச் சுழன்ற


மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து


ஒன்றை ஒன்று


துரத்தத் துவங்கியதில்


சாயம் போயிருந்த


ஒரு இறக்கை


என்னைக் கடப்பதை


எண்ணத் தொடங்கினேன்


ஒவ்வொரு சுற்றிலும்


என் மீத வருடங்கள்


ஏறிக் கொண்டிருந்தன


ப ன் னி ரெ ண் டி ல்


பதட்டமாகி


மீண்டும் தட்டிவிட்டேன்,


அடுத்த முறை


ஊதிய உயர்வோ, காதலிகளோ


மட்டுமே எண்ணவேண்டும்


என்ற முடிவோடு






இப்போது பிரசுரம் ஆகிய கவிதை






வெக்கை


வெந்து புழுங்கியத்தில்


விசிறியை ஓடவிட்டேன்






வட்டப் படலமாய்த்


தொங்கிச் சுழன்ற


மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து


ஒன்றை ஒன்று


துரத்தத் துவங்கியதில்


சாயம் போயிருந்த


அந்த இறக்கைகள்


என்னைக் கடப்பதை


எண்ணத் தொடங்கியது காலம்






என்னைச் சூழ அடர்ந்த காற்று


காதோரங்களில் நரை ஏற்றியதில்


பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்






வெந்து புழுங்கியது வெளி




Sunday, November 15, 2009

நம்ம ஊரு சிங்காரம் சிங்கப்பூரு போனானாம்





சென்ற வாரம் திடீரென்று ஆபீஸில் சிங்கப்பூர் சென்று (ஒழுங்காக வேலையை முடித்தால் மட்டும் திரும்பி) வா என்றார்கள். முன்பே சில முறை சென்றிருக்கிறேன் என்றாலும் எனக்கு அயல் நாட்டுப் பயணம் என்றாலே அடிவயிறு ஆட்டம் காணும். அதுவும் தனியாகப் போகணும்னா...ஆள விடுங்க பாஸ் என்று கெஞ்சுவேன். நம்ம இஷ்டப் படியா எல்லாம் நடக்கும். அதுவும் ஆபீஸில்? கிங் ஃபிஷர் விமானத்தில் இரவுப் பயணம். சீட் பெல்ட் எல்லாம் இறுகக் கட்டிக்கொண்டு, ரன்வேயில் ஓஓஓடி விமானம் வானம் ஏறி 'சீட் பெல்ட் சைன் ஃஆப்' வரும்வரை வயிற்றில் இருந்த பயப்பந்து மதபேதம் பாராமல் எல்லாக் கடவுள்களையும் உதட்டில் வரவழைத்தது. பெரியார் பேரைக்கூட சொன்னேன் என்றால் பாருங்களேன். என்னது? இல்லை இல்லை நித்யானந்தரைக் கூப்பிடவில்லை.





உடனே திரையில் விஜய் மல்யா தோன்றி 'உணவு என் ஆசை; குடி என் தொழில்; என்ஜாய் மாடி' என்று மந்தகாசப் புன்னகையுடன் சொன்னார். சிவப்பு ஆடையில் மிதந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகள் வெல்கம் ட்ரின்க் என்று ஒரு ட்ராலியில் மிக அழகான சீசாக்களில் பல்வேறு வண்ணங்களில், அடர்த்தியில் திரவங்களைக் கொண்டு வந்தார்கள். நான் வெறும் ஆரஞ்சுப் பழச்சாறு மட்டுமே கேட்டு வாங்கிப் பருகினேன் என்று எழுதுவதற்கு மூன்று காரணங்கள்:



1.விமானம் இறங்கி இரண்டு மணிநேரத்தில் ஒரு பவர் பாயிண்ட் சமாசாரம் செய்ய வேண்டிய கட்டாயம்.


2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள்


3. சில நேரங்களில் நான் அப்பட்டமான உண்மையும் பேசுவேன். (கொஞ்சம் யோசித்தால் நீங்கள் 'உண்மையும்' என்பதற்குப் பதிலாக 'பொய்யும்' என்றும் மாற்றிக்கொள்ளலாம்.)



உணவு உண்டபடி திரையில் டில்லி 6 பார்த்தேன். எனக்கு அபிஷேக் பச்சன் பிடிக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ளாத பேர்வழி. இரண்டு ஐகான்களை சமாளிக்கும் மனுஷன். அனில் கபூரின் பெண் சோனல் கபூர் (இப்போது புரிகிறது சுரேஷ் கண்ணன்) டிவைன். படம் ஓகே. மசக்கலி பாட்டை மட்டும் மூன்று-நான்கு முறை ஓட விட்டேன். அப்புறம் தூங்கி விட்டேன்.




இம்மிக்ரேஷனில் சாக்லேட் கொடுத்தாலும் அழகான சீனக் கண்களில் நிறைய சந்தேகம் இருக்கிறது. நாம என்னதான் அஜித் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டாலும் தானாகவே இயல்பு நிலையில் வையாபுரி போல மாறிவிடுகிறது. ஏர்போர்ட் லாபி அவ்வளவு நேர்த்தி. சுத்தம். வெளியே டாக்ஸி (ஆஹா, இங்க ஹோண்டா அக்கார்ட் எல்லாம் டாக்சியா !) ஏறி போகவேண்டிய ஹோட்டல் (Ascott) பெயர் சொன்னேன். அப்படி ஒரு இடமே இல்லை என்றார். பிறகு முன்பதிவு பேப்பரை காண்பித்தேன். "ஓ, இதுவா!" என்று சொல்லி ஒரு சிறிய பாடலைப் பாடினார். பிறகு புரிந்தது - அவர் ஹோட்டல் பெயரைச் சொன்னார் என்று. டிராபிக் இன்று அதிகம் என்று காலியாக இருந்த சாலையைப் பார்த்து அலுத்துக் கொண்டார். இதே எட்டரை மணிக்கு இவரை இப்படியே தூக்கிக்கொண்டு போய் மும்பை அந்தேரி-சாண்டாக்ருஸ் ஹைவேயில் இறக்கி விட்டால் என்ன செய்வார் என்று யோசித்தேன்.



ஹோட்டல் இருக்கும் இடம் Central Business District என்று சொல்லப்படும் வணிக வளாகங்கள் இருக்கும் பகுதி என்று நினைக்கிறேன். Raffles Place. கேள்வி கேட்காமல் ஐம்பது-அறுபது மாடி கட்டிவிடுகிறார்கள். நான் தங்கிய ஹோட்டல் பாவம் குடிசை. வெறும் பத்து மாடி என்று நினைக்கிறேன். அந்தக் காலத்து ஹோட்டல். உள்ளே எல்லாம் சௌகரியமாக இருக்கிறது. தூக்கம் தூக்கமாக வந்தது. நிசமாலுமே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் மணி பத்து. பத்தரைக்கு பவர் பாயிண்ட். இப்போது அவ்வை ஷண்முகி கமலை கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு வரவும். அத்தனை வேகத்தில், சரியாக இருபத்தைந்து நிமிடங்களில் ஹோட்டல் லாபியில் வந்து என் ஆபிஸ் இருக்குமிடத்தைச் சொல்லி, எப்படிப் போகவேண்டுமென்று கேட்டால், சற்று குனிந்து, கண்ணாடி வழியே எதிர்ப்பக்கம் காண்பித்தாள்.



அட, இதுதானா என்று பார்த்தால், கழுத்து வலித்தது. உள்ளே செல்ல ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகள். லிப்ட் ஒரு டீக்கடை அளவு இருக்கிறது. நிறைய சீன, கொஞ்சம் ஆங்கில ஆசாமிகளுடன் நானும் சென்றேன். ஆபீஸில் முதல் நாள் என்பதால், சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு மட்டும் இட்டுவிட்டு மாலை போடுவது எல்லாம் நாளை என்றார்கள். நாளை மறுநாள் அறுவா வரும் என்று புரிந்தது. எல்லோரும் படு ரிலக்ஸ்டா இருக்கிறார்கள். மறக்காமல் பன்னிரண்டரை மணிக்குப் பசியுடன் கீழே பாய்கிறார்கள். சிங்கப்பூர் வானம் மதியம் பசி எடுக்கும் போது மூச்சா போகிறது. மழைப் பருவம் என்றெல்லாம் கிடையாதாம். தினமும் மழை பெய்யக்கூடும் சாத்தியக்கூறுகள் (ஏதோ கவிதையின் முதல் வரி மாதிரி இல்ல?) 365 நாட்களும் உண்டு என்று பெருமையுடன் சலித்துக் கொள்கிறார்கள். நிறைய கட்டடங்கள் எழுகின்றன. துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்குவது கண்ணாடி வழியே தெரிந்தது. ஒரு மூன்று கோபுர கட்டிடத்தின் கீழ் தளத்தில் பெரிய காசினோ வருவதாகச் சொன்னார்கள். சிங்கை பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைவது தெரிகிறது.



ஆறு மணிக்கு ஆபிஸ் அமானுஷ்யம். என் வரவை முன்னிட்டு ஒரு ஏழெட்டு பேர் சாலை ஓர pub இல் பியர் அருந்தினார்கள்/அருந்தினோம். அட விடுங்கப்பா. பியர் அருந்தப்பட்டது. வெகு சிலரைத் தவிர, நிறைய பேர் MRT என்னும் மெட்ரோ ரயிலில் பெரிய வீடோ சின்ன வீடோ போய்ச் சேருகிறார்கள். காலையில் ஒன்றும் சாப்பிடாமல், மதியம் சாண்ட்விச் சாப்பிட்டு ஒப்பேத்தி விட்டாலும், வயிறு 'செல்லாது. செல்லாது. இட்லி, தோசை அல்லது ஒரு ரவுண்டு கட்டி சாப்பாடு தேவை' என்றது. நல்ல வேளையாக மும்பையிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆபிஸ் நண்பர் அருகில் தான் சாராவானா பாவான் (அப்படித்தான் சொன்னார்) இருக்கிறது என்று வழி காண்பித்து எஸ்கேப் ஆனார். மடிக்கணினியை ஹோட்டல் பெட்டில் தூர வீசி, டி-ஷர்ட் போட்டு யூத்தாகி, சா.பா. நோக்கிப் படையெடுத்தேன்.



சரவண பவனைக் கண்டுபிடிக்கச் சிரமப்படவில்லை. எல்லாம் இருந்தது. வட இந்திய உணவும். நம்ம ஊர் ஃபுல் மீல்ஸ் ஒரு பிடி பிடித்ததும் தான் மீண்டும் தமிழனான உணர்வு வந்தது. மென்பொருள் ஆண்களும், அவர்களை ஆட்டுவிக்கும் பெண்களுமாய் களையாக இருந்தது. வெளியே வந்தவுடன் மழை. கொஞ்ச நேரம் ஜாலியாக நனைந்தேன். இதற்கு முன் வேண்டுமென்றே மழையில் எப்போது நனைந்தேன் என்று யோசித்தேன். பழைய காதலிகளும் சென்னை, பெங்களூர்த் தெருக்களும் நினைவில் வந்தார்கள். மழை எல்லா ஊரையும் அழகாக மாற்றி விடுகிறது. சிங்கையும், பெங்களூரும் (தொண்ணூறுகளில்) அது இல்லாமலும் அழகு என்றாலும். பசித்துப் புசித்தபின், மெல்லிய மழையில் மொபைல் போனில் 'ஹசிலி ஃபிஸிலி ரசமணி' கேட்டுக்கொண்டே நனைந்தது புத்துணர்வூட்டிய அனுபவம்.



சிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பழச்சாறுகள் என்று சகட்டு மேனிக்கு வாங்கித் தள்ளுகிறார்கள். துரியன் ரொம்ப ஃபேமஸ் என்றாலும் யாரும் வாங்கவில்லை. கொரியா நாட்டுப் பழ வகைகள் வித்தியாசமாக, வசீகரமாக இருந்தாலும் வாங்கும் தைரியம் வரவில்லை. டிராகன் பழம் என்று ஒன்று சிகப்புக் கலரில் மிரட்டியது. பப்பாளிப் பழம் ஒரு ப்ளேட் (வெட்டி வைக்கப்பட்டது) சிங்கை டாலர் மூன்று என்றார்கள். நம்ம சிக்கன புத்தி வேகமாக இந்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் என்று கணக்குப்போட்டு, கடையை விட்டு ஓட்டம் விட்டேன்.



மூன்றாம் நாள் அரைநாளில் "பரவாயில்லை. இந்த முறை தப்பித்து விட்டாய். என்ஜாய்" என்று அனுப்பி விட்டார்கள். சிங்கையில் வேலை பார்க்கும் என்னுடைய கசின், எதேச்சையாக பிசினஸ் நிமித்தம் சிங்கை வந்த என் சகோதரி கணவர் என்று ஒன்று கூடி கசின் வீட்டுக்குச் சென்றோம். அருகில் இருந்த மாலில் மாலையைச் செலவழித்தேன். சிங்கையின் சுத்தம், நேர்த்தி, சிரித்த முக மக்கள் எல்லாம் நம்பமுடியாமல், ஏறக்குறைய அலுக்கும் அளவு இருக்கிறது. ‘மணமான அன்று இரவே ஹோட்டல் உயரத்தில் இருந்து குதித்து மாண்ட கணவன்’, பக்கத்துக்கு இந்தோனேஷியாவில் நடந்த ‘கணவனைக் கொன்ற கள்ளக்காதலனுக்கு எதிராக சாட்சி சொன்ன மனைவி/காதலி’ என்ற தலைப்புச் செய்திகள் மட்டும் இந்தியாவை நினைவுறுத்தின.



அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) திரும்ப கிங் ஃபிஷர் பிடித்து மும்பை.



கிளம்பியதில் இருந்து திரும்ப வரும்வரை உறுத்திய விஷயங்கள்:



கோவி கண்ணன், மஹேஷ், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, குழலி, அகரம் அமுதா, இராம்/Raam போன்ற நண்பர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டும், சற்றும் ஒத்து வராத பயண/அலுவல் சூழ்நிலை.



வார இறுதியாக இருந்தால் இவர்களுடன் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்தித்து இருக்கலாம். செந்தில்நாதனை இவர்களுடன் சென்று பார்க்கவேண்டும் என்று கூட கூடுதல் ஆசை இருந்தது. (எனக்குத் தெரிந்த பதிவர்கள் பெயர்கள் இவை. இன்னும் பலர் இருக்கலாம்.)



மாதங்கி என்னும் கவிதாயினி (என் ஆரம்ப கவிதைகளைப் படித்து ஊக்கமூட்டியவர்) கூட சிங்கை என்றுதான் நினைக்கிறேன். அட் லீஸ்ட் தொலைபேசியில் பேசியிருக்கலாம்.



நண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், வெளியில் என்னை மன்னித்து விடுங்கள்.



Tuesday, November 3, 2009

எப்போதும்



அந்தரத்தில் மிதந்த


தேனுண்ட மலர்களுக்கு

ரெக்கைகளில் ஆயிரம்

நிறங்களும்

எட்டுத் திக்கும்

கண்காணிக்கும்

கண்களும்

வேக வாகனங்களில்

மோதிச் சரிந்தாலும்

மோட்சம் மறுத்து

அலையும் ஆன்மாக்கள்

பலரின் நெஞ்சுக்குள்

காதல் வேளைகளிலும்

சிலரின் வயிற்றுக்குள்

தேர்வுக் காலங்களிலும்

வண்ணத்துப் பூச்சிகளாகவே

வாழ்கின்றன எப்போதும்



(உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது)