Thursday, December 31, 2009

Paa, வேட்டைக்காரன் அனுபவங்கள் – எதைப் பற்றியும் பற்றாமலும்

இந்த முறை கிறிஸ்துமஸ் தினங்களில் உண்மையிலேயே கர்த்தரால் இரட்சிக்கப் பட்டவன் போல் உணர்ந்தேன். நம்ம அதிர்ஷ்டம் கிறிஸ்துமஸ் பெரும்பாலும் சனி, ஞாயிறுகளில் வருவதாகவே ஞாபகம். இல்லாவிட்டாலும், புதன் கிழமை என்று வாரத்தின் நடுவில் வரும். இந்த முறை வெள்ளி, அதைத் தொடர்ந்த சனி,ஞாயிறு என்று முன்பே தயாராக இருந்த உற்சாகம், மகாராஷ்டிரா அரசு திங்கட் கிழமையையும் விடுமுறை (மொஹரம்) என்று அறிவித்ததில் திடீர்னு ஐம்பது ஃபாலோவர்ஸ், நூறு பின்னூட்டம் வந்த பதிவர் போல சந்தோஷ அதிர்ச்சியில் மூழ்கித் திளைத்தேன்.



இந்தத் தினங்களில் வூட்டுக்கார அம்மாவின் சைடிலிருந்து உறவினர்கள் வரப்போவது முன்பே தெரியும் (நான் அவர்கள் வீட்டில் ஒரு வாரம் டேரா அடித்தது வேறு விஷயம்). அதனால் முறுக்கிக் கொண்டு, 'இதோ பாரு, நீ எங்க வேணும்னாலும் அவங்களக் கூட்டிக் கொண்டு போ. என்ன ஆள விடு' என்று முன்பே மனைவியிடம் டீலா நோ டீலா விளையாடினேன். சில சமயம் பூனைக்கும் காலம் வரும் தானே! சோ, வந்த விருந்தினர்களுடன் டிபன் சாப்பிட்டு, மனைவியுடன் அவர்களை முதல் வேலையாக மும்பையின் தூரப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தேன். ஏற்கெனவே என் தம்பி தற்காலிக பிரம்மச்சாரி என்ற சொர்க்கத்தில் திளைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் என்ன! உடனே ஒரு போன் போட்டு, xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx (அடுத்த நான்கு வரிகள் தணிக்கை செய்யப்பட்டு விட்டன; எனக்கும் நற்'குடி' பட்டம் வாங்குவதில் நாட்டமில்லையா என்ன!).


மாலை சுமார் ஐந்து மணிக்கு (வானமும் அப்போது உண்மையிலேயே மப்பும் மந்தாரமுமாக இருந்தது பாஸ்) மனைவி தொலைபேசியில் "இன்று இரவு 'Paa' படம் புக் செய்கிறேன். நேரா அந்த தியேட்டருக்கு வந்துடுங்க..." நான் வழக்கம் போல் பேசுவதற்கு முன் 'ஹுக்கும்' என்பதை வழக்கம் போலவே 'சரி மேடம்' என்று புரிந்து கொண்டவள் உபரித் தகவலாக 'நாளை உங்களுக்குப் பிடித்த (தோடா..) 'வேட்டைக்காரன்' படமும் புக் செய்து விட்டேன்' என்றாள்.


ஆஹா, ஒரு ஆர்ட் ஃபிலிம்; மறுநாள் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் (புவி ஈர்ப்பு விசையை மீறி ஐம்பது அடி பறந்து உதைப்பது, நூறு அடி நீர்வீழ்ச்சியில் ஒரு சிறு சிராய்ப்புடன் விழுந்து எழுவது எல்லாம் அந்த வகை தானே?) என்று மகிழ்சியானேன். இரண்டு பட விமர்சனமும் எழுதலாம் என்று தமிழ் வலையுலகின் சிறந்த முற்போக்குத் தளங்களை, தேர்வு தொடங்க ஐந்து நிமிடம் முன்பு புத்தகத்தைப் புரட்டும் மாணவன் போல் அவசரமாக, ஒரு எழவும் புரியாமல் படித்துக் கொண்டேன்.


முதலில் Paa. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 'ரொம்ப நல்லா இருக்கு'. Progeria என்னும் இளமையில் துரித முதுமை என்னும் நோயால் பீடிக்கப்படும் ஆரோ (அமிதாப்) என்னும் பன்னிரண்டு வயது சிறுவ ....தாத்தா. அவன் அம்மா (வித்யா பாலன்) ஒரு டாக்டர். அப்பா.. (அபிஷேக்) அந்த அம்மாவைக் காதலித்து, இந்தக் குழந்தை உருவானது தெரிந்ததும், தனது அரசியல் வாழ்வுக்கு இடைஞ்சல் என்று கருக்கலைப்பு செய்யச் சொன்னதால், உறவில் முறிவு ஏற்பட்டு பிரிந்து சென்றவர். முதலில் ஒரு chance மீட்டிங். அப்பாவும் மகனும். தாம் யாரென்று அறியாமலே. பிறகு hate-love என்று அவர்கள் உறவு மலர்ந்து, வளர்ந்து...அதற்குள் ஆரோவின் உடல்நிலை மோசமாகி ... இறுதியில் தன் அம்மாவையும், அப்பாவையும் சேர்த்து வைக்கிறான். அமிதாப் இரண்டாவது இன்னிங்க்ஸில் தூள் கிளப்புகிறார். நம்ம ஊர் தாத்தாக்கள் கவனிப்பார்களா? அபிஷேக் மிக மிக நன்றாக, வழமையான அலட்டல் இல்லாத நடிப்பில் கவர்கிறார். வித்யா பாலன் திரையில் வரும்போதெல்லாம் நான் கைக்குட்டையால் உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டே 'வாவ்' என்றேன். என் மனைவி முறைத்த போது 'வாவ், எவ்வளவு அழகான புடவை! இந்த மாதிரி நீயும் வாங்கிக்கோ' என்று சமாளித்தேன். இவர் அந்தக் கால காஞ்சனா என்னும் நடிகைக்கு ஏதாவது உறவா? (வேலன், ஜ்யோவ் போன்ற சென்ற தலைமுறை ஆட்களிடம் கேட்க வேண்டும்).


திரைக்கதை மிக மிக மெதுவாக, அதேசமயம் அதீத சோகமில்லாமல் நகர்கிறது. இயக்குனர் பால்கி சீனி கம் படத்தில் செய்த அல்லது செய்யத் தவறிய தவறுகள்/விஷயங்களை மீண்டும் செய்கிறார். இந்தக் காலத்துக்கு கொஞ்சமாவது திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ட்விஸ்ட். ம்ஹும். முடியாதுய்யா என்கிறார். சரி. அவர் படம். இசை ராஜா. அவருடைய பழைய பாட்டுக்களை புது வாத்தியங்களுடன், A R ரெஹமானுக்குத் தெரியாமல் அவருடைய ரெகார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவு செய்த பாடல்கள் போல் துல்லியம். இசைக்கு யாராவது சிரிக்கிறார்களா என்று பார்த்தேன். நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் கும் சும் கும் பாட்டின் போது நிறைய மலர்ந்த முகங்கள், தலை, கால் ஆட்டிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.


அடுத்த நாள் வேட்டைக்காரன். விஜய் படம் பார்க்க வந்தவர்களை அவ்வளவு பெரிய மாலிலும் சுலபத்தில் அடையாளம் காணலாம். நூறு சதவீதம் தமிழர்கள். அதற்கான நடை, உடை, பாவனை. நிச்சயமாக இளைஞர்கள்/ஞிகள். நிறைய உற்சாகப் பந்துகளாகச் சிறுவர்கள். எனக்குப் பக்கத்து சீட்டில் ஒரு அதி உற்சாக விஜய் ரசிகனான சிறுவன். பின்புற வரிசை முழுதும் 20-25 வயது விஜய் ரசிகர்கள். மும்பை மல்டிப்ளக்ஸ்களில் விசில் சத்தம் வெகு அபூர்வம். எனக்கும், என் தம்பிக்கும் ஆனந்தமாக இருந்தது. படம் எனக்கு கில்லி அளவு revetting stuff என்று இல்லா விட்டாலும், ஒரு சராசரி விஜய் படம். எல்லாம் இருக்கிறது. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீங்கள் போக்கிரி ரசித்தீர்களா? திருப்பாச்சி ரசித்தீர்களா? அயன்? ஆதவன்? பில்லா? சாமி? தூள்? சண்டைக் கோழி? அப்புறம் என்னய்யா இதுல மட்டும் நொட்டை சொல்லிக்கிட்டு? நான் ஒரு அறிவு ஜீவி. கலைப்படங்கள் மட்டும் தான் பார்ப்பேன்; ரசிப்பேன் என்பவர்கள் பொதுவாக மசாலா படங்களை விமர்சிப்பார்களே தவிர, விஜய் படங்களுக்கு மட்டும் முதல் ஷோ பார்த்து விட்டு 'ச்சே, என்ன மட்டமான படம்' என்று விமர்சனம் எழுதுவதில்லை. லாஜிக் பார்க்காமல், அடிப்படை விஞ்ஞான விதிகள் பொருந்துமா என்று யோசிக்காமல் ஒரு இரண்டரை மணி நேரம் அக்கடா என்று உங்கள் கனவை இன்னொருவர் மூலம் outsource செய்ய வேண்டுமென்றால் இந்தப் படங்கள் எல்லாமே ஒன்று தான். அதில் விஜய் படங்களை மட்டும் ரவுண்டு கட்டி விமர்சிப்பது ஏன்? அவருடைய பன்ச் டயலாக் செய்யும் உபத்திரவங்களா?


ஆர்னால்டு தன் வலது புஜத்தில் மட்டும் ஒரு போபோர்ஸ் சைஸ் பீரங்கியுடன் ஓடி ஓடி சுடுவதை வாய் பிளந்து பார்க்கிறோம். அதே விஜய் செய்தால் நக்கல். போலவே ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் வகையறாக்கள். என்ன, அவர்கள் முதலிலேயே 'இதோ பாருப்பா, எங்க ஹீரோ இந்த மாதிரி கோடியில் ஒன்றாக விசித்திர பலத்துடன் விளங்குவார். கண்டுக்காதீங்க' என்ற ரீதியில் ஒரு அறிமுகம் செய்து விடுவார்கள். அப்போது சுற்றிய பூக்கூடையை, பார்ட் ஒன்று முதல் பார்ட் மூன்று வரை கேள்வி கேட்காமல் பார்த்து விட்டு கை தட்டுவோம். கொஞ்சம் கேபிள் போல விஷயம் தெரிந்தவர்கள் 'மேகிங்' (இன்னொரு ஜல்லி) நல்லா இருக்கு என்பார்கள். அது பற்றி ஒன்றும் பிரக்ஞை இல்லாத பெரும்பாலோருக்கு அவர்கள் எதிர்பார்த்து வரும், ஏதோ ஒன்று விஜய், விஷால் படங்களிலேயே கிடைக்கிறது. விமர்சனம் என்ற பெயரில் இவ்வளவு முக்கியத்துவம் எதற்கு என்று புரியவில்லை.


ஆனால், ஒரு விஷயம். தொலைக்காட்சிகளிலும் TRP ஏற வேண்டுமென்றால் அது திரைப்படம் தொடர்பானதாக இருக்க வேண்டும். நம் பதிவுலகிலும் அப்படியே. ஹிட்ஸ், தொடர்பவர்கள் இத்யாதிகள் வேண்டுமென்றால் திரைப்படம் பற்றி எழுதுவது மிக மிக அவசியம். இதை நான் ஏதோ ஒரு உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு 'ச்சே, என்ன ஜனங்கள். இப்படி சினிமா வெறி பிடித்து அலைகிறார்கள்' என்று அங்கலாய்க்கவில்லை. சினிமா என்னும் ஊடகத்தின் கவர்ச்சி சக்தியைப் புரிந்ததால் சொல்கிறேன். உதாரணத்திற்கு இந்த இடுகைக்கு, இதற்கு முந்தைய குஷ்வந்த் சிங்க் இடுகையை விட குறைந்தது இரு மடங்கு ஹிட்ஸ் வரும். அதில் ஒன்றும் தவறோ, ஆச்சரியமோ இல்லை. It is a natural process, which we need to understand. இப்போது யோசித்தால், இந்த இடுகைக்கு 'நான் ஏன் பிரபலம் இல்லை' என்றும் தலைப்பு வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


இந்தச் சிற்றுரையை முடிக்கு முன் ஒரு முக்கிய தகவல். நான் இன்னொரு படமும் பார்த்தேன். அதைப் பற்றியும் எழுதாமல் இருக்க வேண்டுமென்றால் .....நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய சோம்பல் ஒன்றே போதும்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்... ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். Have a great, rocking year...all of you.

Tuesday, December 29, 2009

எல்லா ஆசிரியர்களையும் .........ருங்கள்


பத்திரிகை ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் மிக உயர்ந்த இடம் பெற்றிருந்த நிலை மாறிவிட்டதைப் பற்றி குஷ்வந்த் சிங்க் எழுதிய கட்டுரையின் எனது தமிழாக்கம். அம்ருதா இதழில் வந்தது.




இந்தியப் பத்திரிகைத் துறையின் அறையும் உண்மை: "முதலாளிகள் மட்டுமே பொருட்டானவர்கள்; ஆசிரியர்கள் இல்லை"


ஒரு காலத்தில் - வெகு நாட்களுக்கு முன்பல்ல - பத்திரிகை ஆசிரியரின் சமூக நிலை, பெயர் இவையெல்லாம் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெருமை சேர்த்திருந்த நிலைமை இருந்தது.

பிரிட்டானிய ராஜ்ஜியத்தில், பிரிட்டானிய முதலாளிகளைக் கொண்ட 'டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மேன்' போன்ற தேசிய நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, இந்தியர்கள் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பேற்றபோது, அவர்களுக்கு சமுதாயத்தின் ஆகச் சிறந்த கெளரவம் கிடைத்திருந்தது. பிரான்க் மொரேஸ், சலபதி ராவ், கஸ்துரி ரங்க ஐயங்கார், போதென் ஜோசப் மற்றும் பிரேம் பாட்டியா போன்ற பெயர்கள் எல்லா வாசகர்களுக்கும் தெரிந்திருந்தது. எண்பதுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியரான திலிப் பட்கோங்கர், பிரதம மந்திரிக்கு அடுத்ததாக நாட்டின் முக்கிய பதவி தன்னுடையது தான் என்று அறுதியிட்டத்தில் பிழை ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியின் மீதான நேர்மறையான விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளிடமிருந்து இல்லாமல், முழு பத்திரிகை சுதந்திரத்துடன் இருந்த சிறந்த, பொறுப்புள்ள ஆசிரியர்களிடமிருந்து வந்தன.

இந்த நிலை தொலைக்காட்சியின் வளர்ச்சியில் மாற்றமடைந்தது. தங்கள் கண் முன்னால் நிகழும் நிகழ்வுகளை பார்த்த மக்கள் மறுநாள் காலையில் அவைகளைப் பற்றி படித்திட தினசரியைப் பார்க்க எத்தனிக்க மாட்டார்கள். ஆகக் குறைவான சிலரே தலையங்கங்களைப் படிக்கிறார்கள். மின்னணு ஊடகங்களின் சவால்களைச் சமாளிப்பதில் முனைப்பு காட்டும் தினசரிகளின் முதலாளிகளும் அவர்தம் வணிக மேலாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களைத் தூக்கி எறியலாமென்பதைப் புரிந்து கொண்டனர். தேவையாயிருந்தது எல்லாம் குறைவான உடையணிந்த நட்சத்திரங்கள் அல்லது விளம்பர அழகிகளின் படங்கள், புதிது புதிதான உணவுகளின் செய்முறைகள், புராதன மதுவகைகள் மற்றும் கிசு கிசுக்கள் போன்றவற்றை வைத்து தங்கள் பக்கங்களை நிரப்புதல். இந்தச் சூத்திரத்தை நான்கு வார்த்தைகளில் அடக்கி விடலாம்: திரைப்படங்கள், சமகால நாகரீகம், உணவு மற்றும் ஆசிரியர்களை வன்புணர்தல். இந்த வன்புணர்ச்சிக்கு இரையான பெருமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலர் : பிரான்க் மொரேஸ், கிரிலால் ஜெயின், B.G.வெர்கீஸ் (மாக்செசே பரிசு வென்றவர்), அருண் ஷோரி (மற்றொரு மாக்செசே வென்றவர்), வினோத் மேத்தா, இந்தர் மல்ஹோத்ரா, பிரேம் ஷங்கர் ஜா. இன்று டைம்ஸ் ஆப இண்டியா, தி டெலிகிராப், தி ஸ்டேட்ஸ்மேன் இவற்றின் ஆசிரியர் யார் என்று கேட்டால் பத்தில் ஒன்பது பேருக்குத் தெரிந்திருக்காது. திலிப் பட்கோங்கரைப் பற்றிக் கேட்டால் 'திலிப் ....யாரது?' என்ற பதில் வரும்.


இந்தியப் பத்திரிகைத் துறையின் கடினமான உண்மை என்னவென்றால் - முதலாளிகள் முக்கியம்; ஆசிரியர்கள் அல்லர். பணம் முக்கியம்; திறமை அல்ல; ஏசியன் ஏஜ் பத்திரிகையின் நிறுவன-ஆசிரியரான M.J.அக்பர் முகாந்திரங்களின்றி தூக்கி எறியப்பட்டது, பணபலம் ஆளுமையும், அனுபவத்தையும் குப்பைக்கூளத்தில் போட்டதற்குச் சமீபத்திய சான்று. அவர், நிலவும் இன்றைய ஆளுமைகளில் ஆகச் சிறந்தவர். அவர் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த பஜார் குழுமத்தின் சார்பில் சண்டே வாராந்தரி மற்றும் தி டெலிகிராப் தினசரி ஆகியவற்றைத் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். பல பதிப்புகள் கண்ட ஐந்தாறு புத்தகங்கள் எழுதியவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் சில நண்பர்களுடன் ஏசியன் ஏஜ் பத்திரிகையைத் துவக்கினார். நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் லண்டன் மாநகரிலிருந்து வெளியான ஏசியன் ஏஜ் ஒரு துணிச்சலான முயற்சியாகும். மிகக் குறைவான விளம்பரங்களே இருந்ததெனினும், வேறெந்த இந்தியப் பத்திரிகையைக் காட்டிலும் படிக்க சுவாரஸ்யமான பல விடயங்களை ஆங்கில மற்றும் அமெரிக்க பத்திரிகைகளிலிருந்து உள்ளடிக்கியிருந்தது. ஒரு முழுமையான தினசரிக்கான அடையாளங்கள் அனைத்தும் அதனிடம் இருந்தன. இத்தகைய பிரத்யேக குணாதிசியங்களுடன், அது அரசையும், ஆளும் கட்சியையும் விமர்சிப்பவர்களின் கட்டுரைகளையும் பிரசுரித்தது. பத்திரிகையின் இந்த ஒரு அம்சம் ஒரு வேளை அக்பருடைய புதிய பங்கீட்டாளரை எரிச்சல் அடையச் செய்திருக்க வேண்டும். அவர் தனக்கான அரசியல் அபிலாக்ஷைகளுடனும், அரசின் சாதகமான பக்கத்தில் நிற்கும் விருப்பத்துடனும் இருந்தார். இதன் விளைவாக, ஒரு வித முன்னெச்சரிக்கையுமின்றி, மார்ச் 1 அன்று காலை அலுவலகத்துக்குச் செல்லுகையில் ஏசியன் ஏஜ் பத்திரிகையின் பெயர்ப் பலகைகளில் தலைமைப் பத்திரிகையாசிரியர் பொறுப்பில் தனது பெயர் இனி இல்லை என்று அக்பர் அறிய வந்தார். அது நல்ல வளர்ப்பு முறையில்லாத, பணம் படைத்த ஒருவரால் இழைக்கப்பட்ட ஒரு மன்னிக்க முடியாத அவமரியாதையாகத் திகழ்ந்தது.


தனக்கும் பத்திரிகைத் துறைக்கும் தவறிழைத்தவர்களை அக்பர் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்யக் கூடும் என்பதைக் கணிப்பது கடினம். இந்நிகழ்ச்சி அவரை உறுத்திக்கொண்டிருக்கும். அவருக்கு 57 வயதுதான் ஆகிறது. மேலும் அவர் மறப்பவரோ, மன்னிப்பவரோ அல்லர்.


இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இண்டியா பத்திரிகையின் பிரதிகள் துர்லபமான 60,000 எண்ணிக்கையிலிருந்து 4,00,000 இலக்கை அடைய எனக்கு உதவிய சிறிய ஆசிரியக் குழுமத்துள் அக்பரும் ஒருவர். அக்பர் இந்த வருடம் தூக்கி எறியப்பட்டது போலவே நானும் 1978 இல் கழற்றி விடப்பட்டது ஒரு முரண்நகை. இந்தப் பத்திரிகையும், பென்னெட் கோல்மன் பதிப்பித்த எல்லா வெளியீடுகளைப் போல (டைம்ஸ் ஆப் இந்தியாவையும் சேர்த்து), அரசு, ஜெயின் குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்தது. அவர்கள் பொறுப்பேற்ற உடனேயே என்னுடைய விடயத்தில் தலையிடத் துவங்கிவிட்டனர். என்னுடைய வேலை ஒப்பந்தம் முறிக்கப்பட்டு, எனக்குப் பின் பொறுப்பு ஏற்பவர் அமர்த்தப்பட்டார். எனக்கு ஒரு வாரம் இருந்தது. இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்கு ஒரு செழுமையான வருங்காலம் வரவேண்டுமென்று ஒரு கண்ணீர் மல்கிய பிரிவுரை எழுதினேன். அது பிரசுரிக்கப்படாமலே போனது. என்னுடைய மேசையை சரி செய்ய காலை அலுவலகத்திற்கு வந்த போது, உடனே விலகுமாறு கோரிய கடிதம் என்னிடம் கொடுக்கப்பட்டது. என்னுடைய குடையை எடுத்துக் கொண்டு, நடந்து வீடு திரும்பினேன்.


அது தகாத (உரித்தானதல்லாத), வேண்டுமென்றே இழைத்த ஒரு இழிவு. இன்னமும்கூட அது என்னை வருத்துகிறது. ஜெயின் பழிவாங்கல் இன்று வரை தொடர்கிறது. என்னை கவுரவிக்கும் - அமிதாப் பச்சன், மகாராணி காயத்ரி தேவி, பிரதம மந்திரி மன்மோகன் சிங் போன்றோர் தலைமையில் நடக்கும் - விழாக்களைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதுகையிலும் கூட எனது புகைப்படங்கள் வருவதே இல்லை. பானை நிறைய பணமும் ஏராளமான அதிகாரமும் அடையப் பெற்றவர்கள் இப்படித்தான் சிறு-புத்தியுடன் இருக்கிறார்கள்.

Tuesday, December 22, 2009

இதயத்தில்





என்னுடைய நிறம்

கருப்புமில்லாத
வெளுப்புமில்லாத
சாம்பல் நிறம்
என் இதயப் பகுதியில்
பச்சை நிறத்தில்
ஒரு முதலை இருக்கிறது
வெகுநாட்களாக நானும்
இந்த முதலையும்
காத்துக் கிடந்தோம்
இருபத்தைந்து வயது யுவதி
என்னை ஸ்பரிசித்தாள்;
இப்போது அவள் வீட்டில் நான்;
வயது முதிர்ந்த அவரை
என்னுடன் அனுப்புகிறாள்
வெளியே செல்லும் எங்களுக்கு
கையசைத்து விடையளிக்கிறாள்
விரைந்த வாகனத்தின்
தகரத்தில் மாட்டிய என் கை
இரத்த வெள்ளத்தில்
நினைவிழந்த பெரியவருக்குக்
குழாய் மூலம் சொட்டும் இரத்தம்
எல்லோரும் பார்த்துக்
கொண்டே இருக்கிறோம்
தொங்கியபடி நானும்
நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்
வந்தவனுடன் அவளும்



(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

Thursday, December 17, 2009

தெலுங்கானா குழப்பம் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்



இப்போதெல்லாம் தனிக் குடித்தனம் என்பது சாதாரண, ஒப்புக்கொள்ளப் பட்ட விதயமாகிவிட்டது. இதற்கு முந்தைய தலைமுறை இந்த சித்தாந்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டது. Pangs of separation எனப்படும் பிரிவின் வலி எல்லா நிரந்தர பிரிவுகளிலும் இருக்கிறது. புது இந்தியா பிறக்கும் போதே பிரிவுடனே பிறந்தது. பாகிஸ்தான் தனியே பிரிந்து போன வலியை இந்தியாவால் இன்னமும் மறக்க முடியவில்லை. கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து வங்காள தேசம் ஆன போது பாகிஸ்தானும் பிரிவின் வலி பற்றிப் புரிந்து கொண்டது.



தெலுங்கானா விவகாரம் இப்படி திடீரென்று பெரிதாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. தனியே பிரிந்து செல்லும் நாடும், மாநிலமும் வெவ்வேறு நிலைகள் என்றாலும், பிரிவு என்பது 'உன்னுடன் இருப்பதில் பிரியமில்லை. ஆதலால் பிரிகிறேன்' என்பதைப் பொறுத்த வரையில் ஒரே நிலைப்பாடுதான். வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்த போது இந்தியர்களுக்கு 'நல்லா வேணும்; எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்' என்ற உணர்வே பரவலாக இருந்திருக்கும். ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த போது இருந்த சென்னைவாசிகள் மனநிலை இப்போது அப்படித்தான் இருக்குமோ. நாம் ‘திருப்பதி நமது’ என்று கேட்டபோது 'மெட்ராஸ் மனதே' என்று அவர்கள் கோஷம் போட்டு, கடைசியில் திருத்தணியை தக்க வைப்பதே பெரும் பாடாக போயிற்று என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுவதைக் கேட்டதுண்டு.


ஆனால், பிரிவினை மனப்பான்மை எதனால் வருகிறது? சுதந்திர உணர்ச்சி மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட உணர்வுகளுக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பாகவே அது பெரும்பாலும் திகழ்கிறது.


இப்போது தெலுங்கானாவை எடுத்துக் கொண்டால், அது பழைய ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம். மிக மேடான, வறண்ட, பின் தங்கிய நிலப்பரப்பு. சுதந்திரத்திற்குப் பின், தாமதமாக இந்தியாவுடன் இணைந்த பகுதி. இந்த அறுபது ஆண்டுகளில் ஆட்சியாளர்களின் தொடர் அவமதிப்பிலும், அசிரத்தையிலும் தொடர்ந்து பின்தங்கியிருக்கும் பிரதேசம். கர்நாடகா மாநிலத்தின் வட மாவட்டங்களான பிதர், குல்பர்கா, ராய்ச்சூர் இவைகளும் கூட இந்த பட்டியலில் சேர்க்கலாம். இந்தப் பிராந்தியத்தை அந்தப் பகுதிகளில் 'ஹைதராபாத்-கர்நாடகா' என்றே சொல்லும் வழக்கமும் உண்டு. (நான் அங்கு சித்தாபூர் என்னும் ஊரில் ஒரு இரண்டு மாதம் பயிற்சி அடிப்படையில் வேலை செய்திருக்கிறேன்). கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என்று எல்லா துறைகளிலும் ஒதுக்கப்பட்ட பகுதி. ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்த வரை தெலுங்கானா மிகவும் பின்தங்கிய பிரதேசம். கடப்பா, கர்னூல், அனத்தப்பூர், சித்தூர் (நம் தமிழக எல்லைக்கு அருகில் உள்ளவை) போன்ற மாவட்டங்கள் அடங்கிய ராயலசீமா ஓரளவு பின்தங்கிய பகுதி. கிருஷ்ணா, கோதாவிரி போன்ற ஜீவ நதிகள் பாயும் டெல்டா பிரதேசமான ஆந்திரா (ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி) செழிப்பான, வளம் கொழிக்கும் பூமி. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை வசதிகள் என்று எல்லா விதங்களிலும் முன்னேற்றம் கண்டதுடன் துறைமுக நகரான விசாகப்பட்டினம், வணிக நகரான விஜயவாடா போன்ற இடங்களைக் கொண்ட நிலப்பரப்பு. ஹைதராபாத் மாநகரம் தெலுங்கானா பிரதேசத்தில் இருந்தாலும், மாநில தலைநகர் என்பதாலும், நிஜாம் கால பாரம்பரியம் என்பதாலும் வெகுவாக முன்னேறிய, வளர்ச்சியில் கொழிக்கும் நகரம்.


இப்படி தலைநகர் தம் பிரதேசத்தில் இருந்தும், அடிப்படை வசதிகளில் கூட மிகவும் பின்தங்கிய பகுதியாக எத்தனை நாட்கள் தாம் இருப்பது? இதற்கு ஒரே தீர்வு தனியே செல்வதுதான். கூழோ கஞ்சியோ, அதை நாங்களே குடித்துக் கொள்கிறோம். இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்னும் விரக்தி மனோபாவம் அணையாத் தணல் போல அம்மக்களிடம் எரிந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த உணர்வை ஊதி, பெரிதாக்கி, தனி மாநிலக் கோரிக்கையை வைக்கும் வரை, அதற்காக தனிக் கட்சி துவங்கும் வரை சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இது போன்ற பிரச்சனைகளுக்கு இது சரி, இது தவறு என்று கருப்பு-வெள்ளை தீர்வுகள் கிடையாது. இவ்வளவு நாட்கள் கிடப்பில் இருந்த அல்லது தழல் போல் அணையாதிருந்த பிரச்சனை திடீரென்று எவ்வாறு இவ்வளவு பெரிதாயிற்று என்று வேண்டுமானால் அலசலாம்.


தெலுங்கானா பகுதி, நக்சலைட்டுகள் அதிகம் புழங்கும் பகுதியும் கூட. பக்கத்திலிருக்கும் சட்டிஸ்கர் மற்றும் விதர்பா (மகாராஷ்டிரா) அடர்ந்த வனங்கள் நிரம்பிய பகுதிகள். நிரம்ப ஏழ்மையும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கமும் - நீட்சியாக ஏழை-பணக்கார இடைவெளி மிக அதிகம் - நிறைந்த பகுதி. ஆட்சியாளர்களை பணத்தாசை பிடித்து ஆட்டுவதால், ஏழை மக்களுக்கு ஒரு இயற்கையான பிடிப்பு இந்த நக்சலைட்டுகளிடம் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. உண்மையில், இந்த ஏழை மக்களே நக்சலைட்டுகளாக உருவாகுகிறார்கள்.


இந்தியாவில் நக்சலைட்டுகள் எனப்படும் போராளிகள் (இவர்களை நான் புனிதப் படுத்தா விட்டாலும், புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் - இவர்கள் தரப்பு நியாயங்களும் நிறைய இருக்கிறது என்ற அடிப்படையில்) பொதுவாக பின்தங்கிய பிரதேசங்களில், வனப்புறங்களில் பெருமளவில் போராடி வருகிறார்கள். இவர்களை விட்டால் அங்கிருக்கும் அப்பாவி மக்களுக்கு வேறு யாரும் குரல் கொடுப்பதில்லை. நிச்சயம் இந்தப் போராட்டங்களிலும் நிறைய அணுகுமுறைத் தவறுகள், அத்துமீறல்கள் நடப்பதில் சந்தேகமே இல்லை. அன்றாடங் காய்ச்சிகளான மக்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத போது இந்தப் போராட்டக்காரர்களுடன் சேர்வதோ அல்லது அவர்களுக்கு எதிராகவாவது செயல் படாது இருப்பதோ தான் நடைமுறை யதார்த்தம்.


சமீப காலங்களில் பீகார், சத்தீஸ்கர், விதர்பா பகுதிகளில் நக்சலைட்டுகள் குறிப்பிடத்தக்க சிறு வெற்றிகள் அடையத் துவங்கி, நாடு தழுவிய கவனிப்பைப் பெற ஆரம்பித்திருக்கிறார்கள். தீவிர வாதிகள் போல், இவர்கள் விதயத்தில் அரசு அடக்குமுறைக்கு ஏகோபித்த ஆதரவு இருக்காது. இதை வேறு மாதிரி அணுக வேண்டியதின் அவசியத்தை தாமதமாகவாவது அரசு புரிந்து கொண்டிருக்க வேண்டும். தெலுங்கானா பிரதேசம் மெல்ல மெல்ல நக்சலைட்டுகள் கையில் முழுதும் சிக்கிவிடும் சாத்தியங்கள் உள்ளன. இதைத் தவிர்க்க வேண்டுமெனில், அப்பகுதி மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அறுபது ஆண்டு ஒடுக்கப்பட்ட உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் YSR ரெட்டி தன்னுடைய இரும்புக் கரங்களால் சில்லறை இலவசங்கள் தந்து இந்தப் பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டதால், சந்திர சேகர் ராவ் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. YSR இன் திடீர் மறைவு கொடுத்த வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்தியதில் ராவின் சாதூரியம் வெளிப்படுகிறது. இருக்கவே இருக்கிறது நம் நாட்டில் பெரிதும் செல்லுபடியாகும் உண்ணாவிரதம் என்னும் ப்ளாக்மெயில். காந்தி துவக்கி வைத்தது. அதனால் யாரும் கேள்வி கேட்கவோ, கேலி செய்யவோ முடியாதது. ஒரு பேச்சுக்கு ரோசைய்யா (ஆந்திர முதல்வர்) நாளை முதல் பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உடல் நிலை சீரழிந்து, அபாய கட்டத்தைத் தொட்டால், அப்போது அவர் 'ஆந்திரத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவு மாற்றப் படவேண்டும்' என்றால் மத்திய அரசு சரி சொல்லிவிடுமா? சோனியாவுக்குக் கூட இதற்கு உடனே பதில் சொல்ல இயலாது.


இந்த பின்புலத்தில் காங்கிரஸ் மேலிடம் ஒரு உடனடி நிவாரணி என்று எண்ணி இந்த முடிவை தடாலடியாக அறிவித்தது. இதன் மூலம் அது ராவ் உயிரைக் காப்பாற்றி (இல்லாவிட்டால் சிக்கல் ஏற்பட்டிருக்கும்), தெலுங்கானாவின் பின்தங்கிய நிலைக்கு ஒரு அரசியல் ரீதியான தீர்வை ஏற்படுத்தி விட்டதாக நினைக்கிறது. இல்லாவிட்டால், நக்சலைட்டுகள் போராட்டத்தில் நிறைய மாணவர்கள் உட்பட பலர் சேர்ந்திருக்கும் சாத்தியங்கள் இருந்தன. யாரும் எதிர்பாராத அளவில் இதற்கு இவ்வளவு எதிர்ப்பு வந்தது இப்போது மத்திய அரசுக்கு புது திருகுவலி.


தெலுங்கானா தவிர்த்த பிற ஆந்திர மக்கள் கொந்தளித்து, எதிப்பைக் காட்டி வருவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. பிரிவில் ஒரு நிராகரிப்பு இருப்பதும், அது தரும் வலியும் அனைவரும் அறிவோம். நிற்க. இதைத் தொடர்ந்து, புற்றீசல்கலாக மேற்கு வங்கத்தில் கோர்காலேன்ட் , மகாராஷ்டிராவில் விதர்பா, உ.பி.யில் மட்டும் மூன்று பகுதிகள், கர்நாடகாவில் கொடகு நாடு என்று தனி மாநிலம் என்பது கிட்டத் தட்ட இலவச டிவி போல் ஆகிவிட்டது ஒரு கேலிக் கூத்து.


தமிழ் நாட்டிலும் ராமதாஸ் போன்றவர்கள் வட, தென் தமிழகம் என்று இரண்டாகப் பிரிப்பது பற்றி ஆசைப்படுவது இப்போதைக்கு நமக்கு மட்டுமே தெரியும். இதை முளையிலேயே கிள்ளுவது நல்லது. கிள்ளுவது என்பது ராமதாசை அடக்குவது என்று பொருளல்ல. தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். கலைஞரால் அது நிச்சயம் முடியும். எனக்கிருக்கும் ஒரே அச்சம், சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ என்பதே.

Monday, December 14, 2009

நர்சிம்மின் 'அய்யனார் கம்மா' - நூல் விமர்சனம்


நூல் விமர்சனம் எல்லாம் செய்யுமளவுக்கு பெரிய ஆளாக வரணும்னு ஆசை இன்னமும் இருக்கு. ஆனால், எதையுமே விமர்சனம்னு செய்ய அரை மனசு தான் வருது. புகழ்வது சுலபம். ஆக்கபூர்வமாக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் செய்வது என்னால் இதுவரை இயலவில்லை. என்னுடைய பின்னூட்டங்கள் கூட பெரும்பாலும் மெல்லிய புகழ்ச்சி அல்லது நெருங்கியவர்கள் என்றால் கலாய்ப்பு என்ற தொனியிலேயே இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். நாங்கள் சிறுவயதில் கிரிக்கெட் ஆடுகையில் முதல் இரண்டு பந்துகள் 'டிரையல்' போட்டுவிட்டு பிறகே 'ஆல் ரியல்ஸ்' என்று துவங்குவோம். அது போல, என்னுடைய முதல் புத்தக விமர்சனம் (ஆக்கபூர்வ எதிர்மறை விமர்சனங்களுடன்) துவங்க எழுத்தாள நண்பன் நர்சிம்மை விடவோ, பதிப்பிக்கும் நண்பன் வாசுவை விடவோ 'டிரையல்' இடம் கிடைக்காது. பீடிகை போதும். Here we go.


'அய்யனார் கம்மா' - அருமையான பெயர். புத்தகத்தின் தலைப்புக்கு முதலில் ஒரு சபாஷ்.


முகப்பு புகைப்படம். அட்டகாசம். மிக அழகாக இருக்கிறது. பின் அட்டை புகைப்பட அழகு பற்றி எழுத்தாளரின் துணைவியாரிடம் கருத்து கேட்பது உசிதம். உண்மையான விமர்சனம் வெளிவரக்கூடும்.


இதில் உள்ள பெரும்பாலான கதைகளை வாசித்து இருக்கிறேன். அதனால், புத்தகத்தை சற்று அசுவாரஸ்யமாகவே பிரித்தேன். அய்யனார் கம்மா கதையும் படித்த கதை. ஆனால், நம்புவது உங்கள் இஷ்டம். புத்தக வடிவில், அச்சு வடிவில், இந்தக் கதை வேறு மாதிரி இருந்தது. சுண்டி உள்ளே இழுத்துக் கொண்டே சென்றது கதை. இலாடம் அடிப்பது பற்றி, இந்த 'ஹசிலி பிசிலி' யுகத்தில் இவ்வளவு துல்லிய விவரணைகளுடன் சொல்வது, சொல்வதை இத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு நிறைய திறமை வேண்டும். மாட்டைப் படுக்க வைப்பது; முகத்தைப் பார்க்கவே கூடாது என்னும் எச்சரிக்கை செய்வது; துள்ளி எழுந்து நின்றாலும், நடக்கத் தயங்கும் என்னும் அவதானிப்பு; சரியான தகவல்கள் இருந்தாலே பாதி கதை தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்று புரிய வைக்கிறார்.


கதையின் முடிவு எதிர்பார்க்கவே முடியாததாக இல்லை என்றாலும் கச்சிதம். வர்ணனைகள் இவரின் மிகப்பெரிய பலம். தெற்குப் பகுதியின் வட்டார மொழியும் இவருக்கு இலகுவில் வருவதால் மாறுபட்ட களங்களில் இவரால் எழுத முடிகிறது; முடியும்.


அடுத்து தந்தையுமானவன். உலுக்கி விடும் கதை. நிறைய உணர்வுகளை உந்தும் வாய்ப்பு கிடைத்தும், அடக்கி வாசித்து முடிவில் நம்மை கனமாக அனுப்பும் உத்தியை கையாண்டிருக்கிறார்.


திகட்டத் திகட்டக் காதல் - எனக்குப் பிடித்தது. சரளமான, அதே சமயம் மிகத் துள்ளலுடன் செல்லாத கதை. நெடுஞ்சாலையில் ஸ்டெடியாக நூறு கி.மீ. வேகத்தில் செல்கையில் ஒரு cool confidence வருமே. அந்த உணர்வு இதில் வருகிறது. இந்தக் கதையிலும் மதுரை வட்டார, பதிண்ம பருவத்தினரின் கேலி, கிண்டல், ரவுசு எல்லாம் ரவுண்டு கட்டி வருகிறது.


இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'செம்பட்டைக் கிழவி'. பிரமாதமான வர்ணனைகள். கிராம மக்களின் எளிய வாழ்க்கை பற்றி 'இருபது இருபத்தைந்து கிலோமீட்டர் சுற்றளவில் பெரு வாழ்க்கை வாழ்ந்து விடும் கிராம மக்கள்' என்கிறார். கிணற்றுக் குளியலின் சூட்சுமங்களை விவரிக்கிறார். வளர்ப்பு மாட்டுடன் பேசும் கருத்தபாண்டி நமக்கும் நெருக்கமாகிறான். மந்தை பற்றிய வர்ணனை, இளந்தாரிக் கல் (முதல் மரியாதை ஞாபகம் வருகிறதா?) பற்றிய விவரம் என்று அதகளம். இந்தக் கதை பிடித்திருப்பதற்கு காரணம், நேரிடையாக பெரிதாகச் சொல்லாமல், நாம் சொல்ல முடியாத உணர்வுகளைத் தூண்டி விடுவதே. ஒரு பாட்டிக்கும், பேரனுக்கும் இருக்கும் உறவை, நட்பை இதற்கு முன் நாஞ்சில் நாடனின் 'என்பிலதனை வெய்யில் காயும்' புத்தகத்தில் படித்த நினைவு.


'ஞாபகமாய் ஒரு உதவி' - 'நச்' போட்டிக்குச் செல்ல வேண்டிய கதை. வெகுஜனக் கதையின் எல்லா சாமுத்ரீகா இலட்சணங்களுடன் பகீர் முடிவுடனான கதை.


மரணம் - மெல்லச் சாகும் ஒருவனின், அவன் நண்பனின் சூழலை மெல்லிய வலியுடன் சொல்லும் கதை. எதிர் பாராத திருப்பங்கள் என்று எதுவும் முயலாமல் யதார்த்தம் காட்டிய நல்ல கதை. ஒரு குறுநாவலுக்குண்டான விஷயம் சிறுகதைக்குள் அடைக்கையில் உள்ள சிக்கல் இதிலும் இருக்கிறது.


சந்தர்ப்ப வதம் கதையை 'நச்' ரகத்தில் மட்டும் தள்ளி விட முடியாது. Hypocracy மட்டுமில்லாது ஆணாதிக்கம் பற்றி மெல்லச் சொல்கிறது. ஆயினும் கச்சித வெகுஜனக் கதை.


தலைவர்கள் கதை பதிவில் படித்து மறந்து விட்டதால், இது அரசியல் நிலையைச் சாடும் ஒரு கதை என்று எண்ணி படித்தேன். பள்ளிப் பருவத்தில் நடந்த நகைச் சுவையை அங்கதமாகச் சொல்லியிருக்கும் கதை. இது கதையா என்று கேட்கலாம். அல்லது நகைச்சுவைப் பிரியர்கள் என்றால் கேள்வி கேட்காமல் ரசித்து விட்டும் போகலாம்.


மனக்குரங்கு, தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப் பெட்டி போன்ற பல கதைகளை சலிக்கும் வரை ஆ.வி., குமுதம், கல்கியில் படித்து முடித்தாயிற்று. அத்துடன், சிறுகதை என்பது இலக்கியத்திற்கு நல்ல வடிவம். கூடிய வரை வார்த்தை விளையாட்டுகளைத் தவிர்ப்பது (நான் செய்வேனா என்று கேட்கக் கூடாது) நலம். குறிப்பாகத் தலைப்புகளில். ம'ரணம்', சந்தர்ப்ப 'வதம்', மா'நரகம்' என்றெல்லாம் தலைப்பு வைத்து வாசகர்களின் புரிதலைக் குறைத்து அளவிட வேண்டாம். மாநகரம் என்று வைத்திருந்தால் நீங்கள் சொல்ல வந்த கோபம் இன்னும் காட்டமாக இருந்திருக்கும்.


'அன்பின்' ஒரு ஆச்சரியம். எழுதும் முன் ஆசிரியர் வண்ண நிலவன் படித்திருப்பார் என்று ஐயப்படும் நடை. தவிர்த்து பிரமாதமாக இல்லை.


மொத்தத்தில் கடைசி ஆறு-ஏழு கதைகள், முதல் ஆறு கதைகளின் தளத்தில் இல்லை என்பது தெளிவு. போலவே, வர்ணனைகள் ஆசிரியரின் ஆகப்பெரும் பலம் என்றாலும், கதையின் போக்கிற்கு அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இல்லாவிடில் ஆசிரியர் தன மேதமையைக் காட்டிக்கொள்ள முயலும் தோற்றம் கிடைக்கும்.


சிறுகதை என்பது குறைந்தது ஐந்து/ஆறு பக்கங்களாவது இருந்தால் தான் தேவைப்பட்ட ஆழத்தைத் தொட முடியும். சிறு ஓடைகளில் கப்பல்கள் மிதப்பதோ, பேருந்து நிறுத்தங்களில் விமானங்களோ வந்திறங்க முடியாதல்லவா.


ஆயினும், முதல் தொகுப்பு என்னும் கோணத்தில் சிறந்த துவக்கம் என்றே சொல்ல வேண்டும். நிறைய பேரைச் சென்றடையாத எழுத்து, அது நல்ல இலக்கியமாகவே இருந்தாலும், அதிக பயனில்லை. அதே சமயம், வெகுஜனம் என்ற போர்வையில் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது பெரிய குற்றம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடம் எல்லோருக்கும் இலகுவில் வராது. அதைப் பிடிக்க முயலுங்கள் நர்சிம். அதுதான் உங்கள் இடம். ஆனால் அது அத்தனை எளிதல்ல. கருப்பொருள், கதை சொல்லும் திறன், நடை இவற்றுடன் வடிவத்தில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். செய்வீர்களா?


பதிவுலகிலிருந்து வெளியுலகிற்கு செல்லும் உங்களைக் கறாராக விமர்சிப்பது உங்கள் நன்மைக்கு தான்.

நூல் :அய்யனார் கம்மா (சிறுகதைகள்)


ஆசிரியர் : நர்சிம்

பக்கங்கள் : 72


விலை : ரூ.40


வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010

Thursday, December 10, 2009

சென்னை - சில தினங்கள் சில குறிப்புகள் – Part 2


இரண்டு நாட்கள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சென்னை. இந்த முறை மின்சார ரயிலில் பழவந்தாங்கல் ஸ்டேஷனில் ஏறினேன். பல வருடங்களுக்குப் பின் மின்சார ரயில் பயணம். அப்போது மீட்டர் கேஜ். தற்போது பிராட் கேஜ் ஆகியிருக்கிறது. ஆனால் இருவர் அமரும்படியான இருக்கைகள் தான். (மும்பையில் மூவர் அமரலாம்). சில காலேஜ் இளைஞர்கள் / யுவதிகள் செல் போனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான முதியவருக்கு (நான் இல்லை), உட்கார தன் இடத்தை ஒருவர் (இதுவும் நான் இல்லை) கொடுத்தார். ஆலந்தூர் மதி தியேட்டர் கட்டிடம் இன்னமும் இருக்கிறது. படங்கள் திரையிடுவதில்லை என்று நினைக்கிறேன். ஆதம்பாக்கம் ஜனோபகார சாஸ்வத நிதி உயர்நிலைப் பள்ளி அவசரத்தில் ஓடி மறைந்தது. நீலக்கலர் ரிப்பனுடன் பள்ளி செல்லும் அக்காவின் தோழிகளும் நினைவில் வந்து சென்றார்கள்.



கிண்டி வந்தபோது குதிரை பந்தயத்தில் மூழ்கிக் களித்து, சிறிது வென்று, பெரிதாகத் தோற்று, மொத்த வாழ்வையும் அதில் செலவிட்ட சிலர் நினைவுக்கு வந்தார்கள். அடையாற்றில் மழைத் தண்ணீர் வடிந்து, பழையபடி சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. சைதாப்பேட்டை கோவில் கோபுரம் தற்போது உயரம், அகலம் எல்லாமே குறைந்து குறுகிவிட்டது போல் தோன்றியது. மற்றபடி பெரிய மாற்றமில்லாத கடைகள். ஏகப்பட்ட சப்-வேக்கள். எல்லா சுவர்களிலும் முன்பு பிரதானமாக இருந்த 'படை, சொறி, சிரங்குக்கு ...ஜாலிம் லோஷன் ஜாலிம் லோஷன்' என்று வாக்கியங்களைக் காணோம். போத்திஸ் மற்றும் ஜெயச்சந்திரன்கள் எல்லாச் சுவற்றையும் ஆக்கிரமித்து இருந்ததில் இந்தியா (ஓரளவாவது) மிளிர்கிறது என்று புரிந்தது.


முன்பெல்லாம் பெரிதாகத் தெரிந்த மேம்பாலங்கள் சிறிதாகி விட்டன. பூங்காவில் இறங்கினேன். பூங்கா என்றதும் பிக்னிக் ஸ்பாட் என்று எண்ண வேண்டாம். பூங்கா ரயில் நிலையம். எதேற்சையாகக் கண்ணில் வி.எல்.ஆர். கான்டீன் தென்பட்டது. நிச்சயமாக ஹைஜீனிக் இல்லை என்று தெரிந்தாலும், யாருக்குத் தான் பழைய நினைவுகளுக்குள் செல்ல ஆசை இருக்காது? ஒரு கிச்சடி, ஒரு தோசை என்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் போட்டு கொடுத்தார்கள். முன்பு அலுமினியத் தட்டின் மீது மந்தார இலையில் வரும். இன்னமும் மாறாத அலுமினிய டோக்கன். காலேஜ் தினங்களில் பழைய பேப்பர் போட்டு, காய்கறி/மளிகை சாமான்கள் வாங்கி, என்று சகல விதங்களிலும் கமிஷன் அடித்த பணம் இந்த அலுமினிய டோக்கன் தரும் கிச்சடி, போண்டா, பஜ்ஜி வகையறாக்களில் செலவழிந்த அற்புத நாட்கள் ஞாபகம் வந்தன.


திரும்பி வருகையில், இரவு பத்து மணிக்கு மேல் நண்பனுடன் மோட்டார் பைக்கில் சவாரி. எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை என்று மெல்லிய காற்றில் வளைய வந்த சவாரியில், நண்பனுக்கு பதில் நண்பி இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்னும் துர் எண்ணமும் வந்தது.

சகோதரி வீட்டருகில் புது கட்டிடம் ஒன்று கட்டப்படுகிறது. அங்கு ஒரு சைக்கிள். வாடகை சைக்கிள். 'மாலதி மிதிவண்டி நிலையம்' என்று செயின் பாக்ஸ் மேல் எழுதியிருந்தது. பின்புறம் மூன்று என்று நம்பர் பெரிதாகத் தெரிந்தது. யாரோ ஒரு உப மேஸ்திரியின் வண்டியாக இருக்க வேண்டும். இப்போதைய ரேஸ் பாசாங்குகள் இல்லாமல் சமர்த்தாக, ஒரு அமைதியான குதிரை போல நின்று கொண்டிருந்தது. முன், பின் பக்க சக்கரங்களில் பல வண்ண குஞ்சலங்கள். மணியில் விரல் அழுத்தும் இடத்திற்கு பிளாஸ்டிக் உறை. கேட்டிருந்தால் ஒரு ரவுண்டு சவாரி அனுமதித்திருப்பார்கள். என்னவோ ஒன்று தயக்கம் காட்டி, ஸ்டாண்ட் போட்ட வாகிலேயே பெடலைச் சுற்றினேன். அதிலேயே தெரிந்தது ஐம்பது கி.மீ. ஓட்டலாம் - பள்ளித் தேர்வின் நிச்சய ஃபெயிலை ஜஸ்டு பாசாகவாவது மாற்றும் சக்தி வாய்ந்த திருவேற்காடு அம்மனை அப்படி எத்தனை முறை தரிசனம் செஞ்சிருக்கேன்.




அடுத்த மால் நாளை ச்சே இப்பவே குழறுகிறது இல்ல. அடுத்த நாள் மாலை அசோக் நகர் செல்ல வேண்டியிருந்தது. இந்த 'ஏன்? எதற்கு?' எல்லாம் சுஜாதாவிடம் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். 'எப்படி?' என்று வேண்டுமானால் கேட்கலாம். இந்த முறை, பேருந்தில் பயணம். அது என்னவோ தெரியவில்லை. இந்த முறை சென்னையில் என் மூளை விபரீதக் கோட்பாடுகளில் இயங்கிக் கொண்டிருந்தது. முதலில் நங்கநல்லூர் மார்க்கெட் சென்று பேருந்தில் ஏறினேன். நிற்க இடம் கிடைத்தது. ஒரு நெருக்கமான திருப்பத்தில் திடீரென்று வந்த ஸ்கூட்டி பேருந்தின் பின் சக்கரத்தில் உராய்ந்து விழுந்தாலும், அந்தப் பெண் இலாவகமாக குதித்து விட்டாள். பேருந்து ஓட்டுனரின் சடன் ப்ரேக் பெரிதும் காப்பாற்றியது. ஒருவர் சீட்டை காலி செய்தால், மூவர் பாய்ந்து வந்து இடம் பிடிக்கும் வழக்கம் இன்னும் மாறவில்லை என்பது திருப்தி அளித்தது. ஆஷர்கானா (என்ன பெயர் இது? தலப் புராணம் யாருக்குத் தெரியும்?) நிறுத்தத்தில் (கூகிளில் டைப் செய்யும்போது எத்தனை ththth டைப் செய்ய வேண்டியிருக்கிறது!) இறங்கி அசோக் நகர் நோக்கி செல்லும் பேருந்துக்குக் காத்திருந்தேன்.


கொஞ்சம் குழப்பமாக இருந்ததால், பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன். அவர் 'நான் ஏறும் பஸ்ஸில் ஏறுங்க. கவலை வேண்டாம்' என்றார். கூட்டமாக வந்த பேருந்தில் முண்டியடித்து ஏறினோம். முன்பக்கம் ஏறி விட்டதால், நடத்துனர் தூரத்தில் பின்பக்கம் இருப்பது இலேசாகக் கூட தெரியவில்லை. அவர் வருவார். டிக்கெட் வாங்கலாம் என்று நானும் சும்மா இருந்தேன். கொஞ்ச நேரம் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு, பக்கத்தில் இருந்தவர், 'சார், கண்டக்டர் இங்க வரமாட்டாரு. பணத்த கொடுத்து விடுங்க. டிக்கெட் வந்து சேரும்' என்று அறிவுரை தர, நான் பக்கத்து பையன் கிட்ட கொடுத்து, அது ஆளாளுக்கு கை மாறிச் சென்று, மீண்டும் மூன்று நிமிடங்களில் பயணப்பட்டு என் கைகளில் டிக்கட்டாக மாறியிருந்தது. நல்ல சிஸ்டம். மீண்டும் அந்தக் காலத்தில் பெண்கள் மூலம் டிக்கெட் வாங்கியது, வாங்கிக் கட்டிக் கொண்டது, பிறகு கட்டிக்கொண்டு வாங்கியது என்று சகலமும் flash back ஆகியது.


ஒரு வழியாக அசோக் பில்லரில் இறங்கி, நண்பருடன் செலவழித்த மூன்று மணி நேரங்கள் அருமை. அவர் ஒரு எழுத்தாளர். ஏறக்குறைய என்னளவு பர்சனாலிடி கூட. அவர் புது புத்தகம் ஒன்று வெளி வருவதாகச் சொன்னார். மகிழ்ச்சி. ரொம்ப நாட்களாக நாலு தட்டு தட்ட வேண்டும் என்று குறி வைத்திருந்த பட்சியைக் கூப்பிட்டேன். அது 'சாரி சகா' என்று இலாவகமாக பறந்து விட்டது. திரும்ப வருகையில் ராயல் சவாரி. ஏ.சி. குளுமையில், ஜேசுதாஸ் குரலில், ஹோண்டா சிட்டி முன் இருக்கையில் சுகமான பிரயாணம். அந்த நேரத்தில் யாராவது கம்ப இராமாயணம் பற்றிப் பேசினால் கொட்டாவி வந்தால் தப்பா பாஸ்?


****************************************************************************

டெயில் பீஸ்:


நர்சிம்முடன் பேசிக் கொண்டிருக்கையில் ஆட்டோ விஷயத்தில் இரண்டு சுவாரஸ்யமான நிகிழ்வுகளைப் பற்றி கூறினார்.


நர்சிம் சென்ட்ரல் ரயில் நிலையம் வாயிலில்: 'ஆட்டோ, எக்மோர் போகணும்'


ஆட்டோ ஓட்டுனர் : 'ஆங், போவலாம்; அறுவது ரூவா ஆகும்'


நர்சிம்: 'அறுவதா? ரொம்ப அதிகமா இருக்கே. மீட்டர் போடுவியா?'


ஆ.ஓ: 'மீட்டரா? சரி போடுறேன்'


எக்மோர் வருகிறது. மீட்டர் இருபது என்கிறது. நர்சிம் இருபது ரூபாயை நீட்டுகிறார்.


ஆ.ஓ: 'இன்னாதிது?'


நர்சிம் : 'ஆட்டோ சார்ஜ் பா'


ஆ.ஓ: 'ஹலோ,நீ மீட்டர் போட சொன்ன. நீ பாத்ததில்லங்காட்டியும்னு நா போட்டேன்ல. நா அறுவது சொன்னேன். அப்ப நீயும் அதக் கேளு. மருவாதையா..அறுவது எடு'


இன்னொரு தருணம்.


நர்சிம் : 'ஆட்டோ, உத்தமர் காந்தி ரோடு போகணும்'


ஆ.ஓ. : 'காந்தி உத்தமர்னு உனிக்கி எப்பிடி தெர்யும்? சவாரி வராதுபா.'


அடுத்த ஆட்டோ.


நர்சிம் : 'ஹலோ, காந்தி ரோடு போகணும்'


ஆ.ஓ. : 'ஏன்யா, படிச்சா ஆளுதான. வெறும காந்தினா? உத்தமர் காந்தி ரோடா, மகாத்மா காந்தி ரோடானு கிலியரா சொல்தேவல?'


****************************************************************************

மகிழ்ச்சியான செய்தி: இதுக்கு மேல 'சென்னை தினங்கள்' பற்றி ஒன்றும் இல்லை. ரிலாக்ஸ்.

Tuesday, December 8, 2009

சென்னை - சில தினங்கள் சில குறிப்புகள் – Part I

இரு வாரங்களுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். (வந்திருந்தேன்னு எழுதணுமா?). ஆபிஸ் மெயில் ஓபன் செய்தால் அரை டஜன் மின்னஞ்சல்கள் திட்டி வந்திருந்ததால் அவசரமாக மூடிவிட்டு 'மொழி விளையாட்டு' விளையாடச் சென்றால், 'இன்று சென்னையில் பதிவர் சந்திப்பு' என்றது. கிட்டத்தட்ட ஒதெல்லோ ரேஞ்சுக்கு யோசித்தேன் - 'செல்லுவதா; செல்லாமலே தப்பிவிடுவதா;' விதி (ஐ மீன், மற்ற பதிவர்களின் விதி) யாரை விட்டது? நர்சிமுக்குத் தொலைபேசினேன். கொஞ்சம் பிகு செய்து கொள்ள முயற்சிக்கையில் 'ஆமா, முடிஞ்சா வாங்க' என்ற தொனியில் அவர் பேச, நான் கலவரப்பட்டு 'இல்ல இல்ல நான் வரேன். ஆனா, என் கவிதைகளைப் பற்றி ..' என்றவுடன் 'தல, வா.மணிகண்டன், நரன் மற்றும் ஜ்யோவ் போன்ற உண்மையான கவிஞர்கள் வராங்க. போலிகளை யாரும் பொருட்படுத்துவதில்லை. வாங்க, நானு, நீங்க, ஆதி எல்லாரும் ஜோதியில் கலந்து விடுவோம்' னு சொன்னார். 'ச்சே கஷ்டப்பட்டு இலக்கியவாதி இமேஜுக்கு எவ்வளவு பில்ட் அப் கொடுத்திருக்கோம்; இரக்கமே இல்லாம நொறுக்குரானே மனுஷன்' னு வருத்தமா இருந்தாலும் போயிட்டு வந்தேன்.





பதிவர் சந்திப்பு விவாதங்களின் சாராம்சம் பற்றி நர்சிம் மற்றும் ஆதி, மோகன் குமார் அனைவரும் சுறுசுறுப்பாக எழுதி விட்டார்கள். அதனால் நான் ஒன்றும் எழுதப்போவதில்லை. (ம்ம், பெருமூச்சு சப்தம் கேட்கிறது). மணிகண்டன் மிக இளமையாக இருக்கிறார். நரன் ரொம்ப சீரியசாக இருந்தார். கவிதை என்றாலே எப்போதும் தவழும் நமட்டுச் சிரிப்பு லக்கியிடம். மற்ற எல்லோரிடமும், குடியரசு தின மிட்டாய்க்காக காத்திருக்கும் குழந்தைகளின் களைப்பு தெரிந்தது. புருனோ சிரித்துப் பேசிவிட்டு சீக்கிரம் கிளம்பினார். லேட்டா வந்த அப்துல்லா அதைச் சரிக்கட்டுவதற்காக உடனே எஸ்கேப் ஆகிவிட்டார். முதன் முறையாகப் பார்த்த நபர்கள் காவேரி கணேஷ், அதியமான், கணேஷ் (நம்ம சிஷ்யப்புள்ள), ஜெட்லி இரட்டையர், மோகன் குமார், கனகு, அசோக் மற்றும் ஒரு வாசகர். தாமதமாக வந்த கேபிள் மீசை மழித்ததில் வயது 15 முதல் 45 வரை சொல்லக் கூடிய தோற்றம். முரளி கண்ணன் 'தமிழ் சினிமாவில் இது வரை இடம் பெற்ற ஜப்பானிய ஹை கூக்கள் ' மேட்டருக்கு மணிகண்டன்/நரன் சொல்வதிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். லேகா சற்று தாமதமாக வந்தவர் எனக்கு அருகாமையில் அமர்ந்தார். இந்தப் பக்கம் வா.ம.; அந்தப் பக்கம் லேகா. என்னடா இது இலக்கிய இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று பயந்திருந்தேன். நல்ல வேளை, நர்சிம் சொன்ன மாதிரியே யாரும் பொருட்படுத்தவில்லை. ஜ்யோவ் மற்றும் பைத்தியக்காரன் எங்கே நான் உரையாடல் கவிதைப் போட்டி பற்றி பேசி விடுவேனோ என்ற பயத்தில் என்னைத் தவிர்த்து விட்டனர்.




அடுத்த நாள் கிண்டி செல்வதற்கு ஒரு ஆட்டோ (ரொம்பத் தான் தைரியம்) பிடித்தேன். மீட்டரெல்லாம் கிடையாது. நூறு ரூபாயில் துவங்கிய பேரம் எண்பதில் படிந்தது. ஆதம்பாக்கத்தில் உள்ள அத்தனை குறுக்கு சந்துகள் வழியே மடுவாங்கரை அடைந்தது ஆட்டோ. பிறகு, அங்கு ஆட்டோவின் முன்-சக்கரம் மட்டும் செல்லும் அளவில் ஒற்றையடிப் பாதை. முதலில் சற்று சினேக பூர்வமாகச் சிரித்ததில் துணிவு பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வசனங்களில் சில:

மேடு பள்ளங்களில் குலுங்கியபோது - "இதேன் காட்டி மெயின் ரோட்ல போன இப்பிடி குலுங்குமா? பாரு, எத்தினி மனுசங்க!

மய வரும்னாங்க. ஒன்னியும் காணோம். மய நல்லா பென்ஜாதான் தன்னி கஸ்டம் போவும். அதுவும் ஒரு அம்பது சனங்க செத்தாதான் சரி வரும்.

நான் 'மழைல செத்துப் போவது ஏழை-பாழைங்க தானே. ரொம்ப பாவமில்லையா' என்றேன்.

'அதுக்கு என்னா பண்ருது. மீதி அஞ்சு லட்சம் பேரு சந்தோசமா இருப்பாங்கல்ல?'

'கலீஞரு போன வாரந்தான் தற்காலிகமா வீடு சான்சன் பண்ணியிருக்காரு. இன்னும் ஆறு மாசத்துல நல்லா தலம் போட்ட வீடு கொடுப்பாரு. ஏன் சொல்லு ஆறு மாசம்? '

நான் 'தெர்லபா' என்றேன்.

'இன்னாபா, அப்பத்தான் ஏலேஷன் வரும். சனங்க மனசிலியும் நிக்கும்'

இடையில், ஒரு சிகப்பு சுழல் விளக்கு சுழன்று கொண்டிருந்த காரில் மந்திரியோ, எம்.எல்.ஏ. வோ எதிர் சாரி போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு நின்றது. நம்ம ஆட்டோ காரர், அவர் கார் கதவைத் தட்டி, அந்த டிரைவர் கிட்ட 'ஏம்பா, இது என்ன மெயின் ரோடா? இங்க எல்லாரும் ஒண்ணுதான். நீ வெளக்கு போட்டுகினே வந்தா காட்டியும், எல்லாரும் வயி விடுவாங்களா? எங்கப்பா எடம் இருக்குது' என்று கெக்கலித்தார்.

கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் இறக்கி விட்டார். நூறு ரூபாய் கொடுத்தேன். இருபதை கொஞ்சம் தயக்கத்துடன் திருப்பிக் கொடுத்தார். ஓஹோ, இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறார் என்று தோன்ற, 'என்னப்பா, சரிதானே, இல்ல இன்னும் வேணுமா?' என்றேன். உடனே அவசரமாக, ' சார், எப்பவும் எலுவது தான் வாங்குவேன். இதுவே ஜாஸ்தி சார்' என்று திகைக்க வைத்தார். இந்த அடிப்படை நேர்மை மும்பை பிலினயர்களுக்கு இருந்தால் இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டு தோறும் பல கோடிகள் ஏழை மக்களைச் சென்றடையும்.

ஒரு எச்சரிக்கை: இதன் அடுத்த பகுதி ஒரு வேளை சீக்கிரத்தில் வெளிவரலாம். இல்லை வராமலே போகலாம். என்ன? வானிலை அறிக்கை மாதிரி இருக்கிறதா?

**********************************************************************

Thursday, December 3, 2009

ஜிப்சி



பல நாடுகள் சுற்றிய
எந்த நாட்டுக்கும்
சொந்தமில்லாதவன்
பின்னிரவில் வந்து சேர்ந்தான்
பார்வை பறிபோன
கலங்கரை விளக்கத்தின்
காந்தப் படிகள்
அவனைச் சுழற்றி இழுத்தன
அவனின் தேர்ந்த கால்கள்
இலாவகமாக நகர்ந்தாலும்
ஒரு காளையின் உக்கிரத்துடன்
கலங்கரை விளக்கம்
அவன் உணர்வுகளைக்
கிளறி அலைக்கழித்தது
தன் நேரம் வந்ததை
இறுதியில் உணர்ந்தவன்
கீழ் நோக்கிப் பாய்கையில்
அலைகள் கொந்தளித்து
'ஓலே ஓலே' என்றன
வன்மம் தீர்த்த கலங்கரைக்கும்
மரணத்தின் சோகத்தால்
அமைதியான அலைகளுக்கும்
அவன் இப்போது
பருந்தாக மாறி
வானில் வட்டமடிப்பது தெரியாது

(உயிரோசை 31st August 2009 மின்னிதழில் பிரசுரம் ஆனது)