Thursday, May 28, 2009

பிரபாகரன் - நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?(நீண்ட பதிவு. மன்னித்து விடுங்கள்)

கடந்த இரு வாரங்களாக மன உளைச்சல். புலிகளின் பின்னடைவு கடந்த ஒரு வருடமாக புரிந்தாலும், பிரபாகரன் பற்றிய செய்தி மனதை விசனமாக்கியது உண்மை. அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்று விவாதம் செய்தால், முடிவில்லாமல் போகும் அளவுக்கு சாதக பாதக அம்சங்கள் உண்டு அவரிடத்தில். யார், எங்கிருந்து பேசுகிறோம் என்பதில் இருக்கிறது அவர் நல்லவரா இல்லையா என்று.

என்னை ஒரு வருடம் முன்பு கேட்டிருந்தால், சராசரி இந்தியன் போல 'என்ன சந்தேகம். புலிகள் சரியில்லை. பயங்கரவாதிகள். மேலும், என்ன ஒரு ஆணவத் துணிச்சல் - நம்ம முன்னாள் பிரதமரைக் கொலை செய்வதற்கு?' என்ற 'பொதுப் புத்தி' என்று சிந்தனையாளர்கள் சாடும் குணம் என்னிடம் இருந்தது.

இப்ப
ஒரு வருடத்தில் என்ன நடந்து விட்டது? அவர்கள் - குறிப்பாக பிரபாகரன் - ஏன் இப்போது வேறு மாதிரி தெரியணும்? ஒரு இயக்கம் தேய்ந்து, அழிகிறது; ஒருவர் மரித்திருக்கக் கூடும் என்பதால் வரும் பச்சாதாபமா? என்றால், இல்லை என்றே சொல்வேன்.

நான் அறிந்த தமிழ் ஆர்வலர்கள், அரசியல், சமூக சிந்தனையாளர்கள் என்று பல்வேறு பிரமுகர்களின் வலைத் தளங்களைப் படிக்கும் வாய்ப்பும், முனைப்பும் கடந்த ஒரு வருடம் எனக்குக் கிடைத்தது. இதற்கு முன் என் தமிழார்வம் சராசரி தான். தமிழன் என்பதில் பெருமை. தொன்மையான மொழி மற்றும் கலாசாரம். ஆயினும், 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் கதாநாயகன் நேர்முகத் தேர்வில் சொல்லிக்கொள்ளும் 'தமிழ் பேசும் இந்தியன்' என்று சொல்லிக் கொள்ளவே விருப்பம் - இப்போதும், எப்போதும்;

நான் மதிக்கும் பலரும் இலங்கைத் தமிழர் விடயத்தில் புலிகளை ஒன்றுமே விமர்சனம் செய்யாத போது ஏன் இப்படி என்ற ஆர்வத்தில் படிக்கத் துவங்கியதில் ஈழ மக்களின் துயர நிலை, நியாயத்திற்கு அம்மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அமைதி வழிவிட்டு ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் என்று இயக்கத்தின் பின்புலம் பற்றி ஒரு சிறிய புரிதல் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை 'அவர்கள்' ஆக இருந்தவர்களின் நியாயங்கள், தர்க்கங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கின.


எங்கே மூளைச் சலவை செய்யப் படுகிறோமோ என்ற பதட்டத்தில் சரிசமன் நிலையை நீடிக்கச் செய்ய, துக்ளக் முதல் டைம்ஸ் ஆப் இண்டியா, NDTV என்று வெகுஜன இந்திய ஊடகங்களின் கருத்துகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இவைகளின் குரலின் பின் தென்படும் வெறுமை, மேம்போக்குத் தனம் மற்றும் சில சமயங்களில் போலித்தன்மை இவற்றை இலகுவில் உணர முடிகிறது. உதாரணம்: பிரபாகரன் பற்றி செய்தி சொல்கையில் (ஹெட்லைன்ஸ் டுடே என்று நினைக்கிறேன்) 'இங்கயிருந்து போயிருக்கும் தமிழர்கள், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து தான் நடக்க வேண்டும். மாறாக, குடியுரிமை, தனி ஈழம் என்பதெல்லாம் சிறிலங்கா எப்படி ஒப்புக் கொள்ளும்?' என்ற ரீதியில் அபத்தக் களஞ்சியமாக இருந்தது. இதைத்தானே தமிழரல்லாத இந்தியர்கள் உண்மை என எண்ணுவார்கள்? இப்படித்தானே கருத்தியல் அமைக்கப் படுகிறது. CNN-IBN ஏதோ தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போல "முல்லைத் தீவில் துன்புறும் மக்களின் நிறைய உறவினர்கள் தமிழ் நாடெங்கும் மிக வருத்தத்தில் உள்ளனர்' என்று இலங்கைத் தமிழர்களுக்கு NRI சான்றிதழ் கொடுத்தது.

உலகெங்கும் ஆங்காங்கே விடுதலை வேண்டி பல இனங்கள் போராட்டத்தில் இருந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியன், திபெத், காஷ்மீர், குர்டிஷ், செசென்யா, பாலஸ்தீனம், கொலம்பியாவின் பழங்குடிகள், I.R.A., போஸ்னியா, செர்பியா என்று அண்மைக்கால இரத்த வரலாறுகள் எங்கும் பரவி இருக்கிறது. ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

பேரினத்தைச் சார்ந்த அரசாங்கம், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, இனவாத அரசியலைக் கையிலெடுக்கும் போது துவங்குகிறது இத்தகைய சிற்றின ஒழிப்பு. பிரசார உத்திகளால், பேரினத்தின் மிருக உணர்வுகள் தூண்டப்பட்டு, அவற்றுக்குத் தீனி போடப் படுகிறது.

இந்த இடத்தில் மிக முக்கியமான அம்சம் பொது பிரக்ஞை/மனச்சாட்சி போன்றவை. Collective conscience of the majority. மற்ற போராட்டங்களை உன்னிப்பாக கவனிக்கா விட்டாலும், ஹம்மாஸ் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டங்களைப் பற்றி கருத்து கூறும் அளவில் நிகழ்வுகளை கவனித்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுவது, யூதர்களும் சரி, சிங்களவர்களும் சரி - இந்த விடயத்தில் மனிதாபிமானம், மனசாட்சி இவைகளை முற்றிலும் துறந்து, அரசாங்கத்தின் அராஜக இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மௌன பச்சைக்கொடி காட்டி உதவி இருக்கிறார்கள்.

எப்போது ஒரு அரசே (அதிகாரம் என்று கொள்ளலாம்) தன் குடிகளின் ஒரு சாராரை விரோத மனப்பான்மையில் பார்க்கிறதோ, பேச்சு வார்த்தைகள் இந்தக் கால கட்டத்தில் பயனளிக்கும் என்று எதிர்பார்ப்பது நிராசைதான். யாருக்குமே கத்தியின்றி, இரத்தமின்றி நியாயம் கிடைக்குமெனில், ஏன் அவைகளைக் கையில் எடுக்கப் போகிறார்கள். அதனால், ஈழப் போராட்டம் அமைதி மார்க்கத்திலிருந்து, ஆயுதப் போராட்டமாக வெடித்ததற்கு புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) போன்ற இயக்கங்களும் ஆயுத போராட்டத்தில் தான் குதித்தன. இந்த இயக்கங்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. இவைகளுக்குள் பெரிய வித்தியாசம் இருந்திருக்க சாத்தியக்கூறுகளுமில்லை. புலிகள் கை தாழ்ந்து, ஒரு பேச்சுக்கு TELO கை ஓங்கி இருந்தால், இன்று புலிகளைச் சாடும் நாம், TELO வைத் திட்டிக் கொண்டிருப்போம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால் புலிகள் பக்கம் தவறு இல்லை என்று சொல்ல வரவில்லை. நான் பார்த்த வரையில் அவர்கள் செய்த தவறுகள்:

1. மிதவாதிகள் (அமிர்தலிங்கம் போன்றோர்) அனைவரையும் கொன்றது.

2. மற்ற போராட்ட இயக்கங்களை இராஜ தந்திர முயற்சிகளால் ஒருங்கிணைக்காமல், தீர்த்துக் கட்டியது.

3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.

4. பொதுவாகவே, அவ்வப்போது கிடைத்த அமைதி வாய்ப்புகளை பயன்படுத்தாமல், ஆயுதக் குவிப்புக்கு அந்தத் தருணங்களை உபயோகித்துக் கொண்டது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை என்ற கோணத்தில் புலிகளின் நம்பகத் தன்மை முற்றிலும் இல்லாமல் போனது.

5. அவ்வப்போது கிடைத்த ராணுவ வெற்றிகளால், தன் பலத்தை மிகையாக எண்ணத் துவங்கியது.

6.சிங்களப் பொதுமக்களை தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் அன்னியப் படுத்திக்கொண்டது. இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது.

இதெல்லாம் சரி. இவ்வளவு தவறு செய்த இயக்கத்திற்கு எதற்கு கண்ணீர் சிந்த வேண்டும் என்றால் - புலிகளைப் போல, இப்போது இந்தியா மற்றும் அதற்குள் தமிழ் நாடு செய்த தவறுகளை அலசினால்:

1. முதலில் இந்திரா காந்தி ஆட்சியில், அவர் இலங்கையில் இன்னொரு வங்காள தேசத்தை உருவாக்க முயன்றார். இலங்கை இரண்டாப் பிரிந்து, ஈழம் மலர்வது இந்தியாவுக்கு நல்லது. இந்தியா இன்னும் பெரிய நாடாகும் என்ற கோணத்தில். அதனால், தார்மிக, ஆயுதங்கள், பயிற்சி என்று உதவிகள் எல்லா விதங்களிலும் தரப்பட்டது. தமிழகமும் உற்சாகமாகப் பங்கேற்றது.

2. அப்போதே SAARC மாநாடுகளிலும், தொடர்ந்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியாவின் மீது சிறிலங்கா அரசு இந்த விடயத்தில் குற்றம் சாட்டத் துவங்கி, காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் இவற்றுடன் சேர்ந்து இந்தியாவை விமர்சிக்கத் துவங்கியது.

3. ராஜீவ் காந்தி ஒரு நம்பிக்கை அடிப்படையில் (எனக்குத் தெரிந்த வரை அவருடைய நோக்கங்கள் நல்லவையாகவே இருந்தன) இரு சாராரையும் அமைதிப் பேச்சுக்குக் கொண்டு வரவைத்து, நிரந்தரத் தீர்வுக்கு முயன்றார். ஆனால், IPKF செய்த குளறுபடிகளாலும், அத்துமீறல்களாலும் அமைதி முற்றிலும் போய், ஈழ மக்கள் மனதில் ஆறாத வடுக்களையும், வஞ்சிக்கப்பட்ட உணர்வையும் தந்தது.

4. அவர் மறைவுக்குப் பின் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்த இந்திய அரசு இப்போது திடீரென்று புலிகளை முற்றிலும் ஒழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு, எனக்குப் புரிந்த வரையில் இந்த காரணங்கள் இருக்கலாம்.

a) இந்தியப் பெருங்கடல் இராணுவ கோணத்தில் இப்போது மிக மிக முக்கிய இடமாகி விட்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் எல்லாமே இதில் அதிகாரக் கோலோச்ச முயல்கின்றன. இப்போது தமிழர்களைக் கைவிட்டு, சிங்கள அரசுக்கு உதவினால், அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் முற்றிலும் சாய்வதைத் தவிர்க்கலாம்.

b) இந்தியாவுக்கும், காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பிரிவினைவாதங்களை ராணுவ பலத்துடன் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம். அதற்கான தார்மிக பலம், பிரிவினை கோரும் ஈழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுதல்.

இதில் தமிழகம் செய்த தவறு இது தான்:

இந்திய அரசு உண்மையில் ஒன்றும் ஈழ மக்கள் பால் அக்கறை கொண்டிருக்க வில்லை. தமிழகம் எப்போதும் தந்த அழுத்தமான எதிர்ப்பால், இந்திய அரசு சிங்களப் பேரின வாதத்தைக் கண்டித்தும், ஈழத்தை ஆதரித்தும் வந்தது. இந்திய அமைதிப் படை வீரர்கள் சென்னை திரும்பிய போது அவர்களை கௌரவிக்க மறுத்த கலைஞரின் முடிவால் இலங்கையில் நடப்பது பற்றிய கண்ணோட்டங்களில் ஒரு பெரிய திருப்பமே ஏற்பட்டது. அந்த அளவு பொறுப்புணர்வுடனும், ராஜதந்திரத்துடனும் கலைஞர் தலைமையில் தமிழகம் ஈழப் பிரச்சனையைக் கையாண்டு வந்தது.

இப்போது என்ன காரணத்தினாலோ அந்த போர்க்குணத்தைக் காண இயலவில்லை. Mute spectator எனப்படும் ஊமைப் பார்வையாளராக மட்டுமே தமிழக அரசு செயல் படுகிறது. மாநில, மத்திய ஆட்சி, பதவி அளிக்கும் சுகங்கள், வசதிகள் என்றுதான் என்னுடைய 'பொதுப் புத்தி' சொல்கிறது.

தமிழக மக்களுக்கும் புலிகளின் பால் இருந்த உணர்வு பூர்வ உறவு, ராஜீவ் கொலையினால் பெருமளவு குறைந்தது. இது தற்போதைய தமிழ் தலைவர்களுக்கு மிக ஏதுவாகப் போய், வெறும் தேர்தல் சமய ஊறுகாய் விடயமாகிப் போனது ஒரு துன்பியல் நிகழ்வு.

ஆக, இன்றைய தமிழக ஆளுமைகள் தங்கள் சுகத்திற்காக கொள்கைகளைத் தளர்த்தியதாலும், இந்தத் தருணத்தை இந்திய மத்திய அரசு சரியாக தனது strategic காரணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாலும், ஈழ மக்களுக்கு ஒரு மாபெரும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. சிறிலங்க அரசு இந்தத் தருணங்களின் மதிப்பை மிகத் துல்லியமாக எடை போட்டுப் பயன் அடைத்திருப்பது கண்கூடு.


ஒரு இந்தியனாக மிகவும் தார்மீக உயர்வில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, எனது புரிதலின் அடிப்படையில் இந்திய, தமிழக அரசுகளின் துரோகம் தரும் வலி அதிகம். மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு விசாரணையும் தேவை இல்லை என்று அவசரமாக அறிக்கை தந்து more loyal than the king என்று இந்தியா நிருபித்துக் கொள்ள முயல்வது பார்த்து வரும் வலி.எதிரிகளை மன்னிக்கலாம். மன்னிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளலாம். துரோகிகளை....ம்ம், அவர்களையும் புரிந்து கொள்ளலாம் - காலம் கடந்தாவது.

என்னைப் பொறுத்த வரையில் பெருங்குற்றவாளிகள் பாக் ஜலசந்திக்கு மேற்கிலும், வடக்கிலும் தான் இருக்கிறார்கள். பதிவின் துவக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தாலே, ஈழத்தை உண்ண வரும் தமிழகம் போலத் தான் தோன்றுகிறது. உங்களுக்கு?

பிரபாகரனைப் பொறுத்த வரையில், ஒரு வீரனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பெரிய போராட்டம் செய்தவராகவே தென்படுகிறார். All is fair in Love & War எனும் அடிப்படையில், தவறு என்றாலும், புலிகளின் பயங்கரவாதத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று பி.பி.சி. தளத்தில், இலங்கையில் இருந்து வெளிவரும் Island செய்தித் தாள், பிரபாகரன் பெரிய வீரன் என்றால், ஏன் ஓட ஒளிய வேண்டும்? சயனைட் குப்பி என்ன ஆயிற்று? என்று எள்ளலாகக் கேட்டதைப் படிக்க நேர்ந்தது.

அந்த அறிவிலிகளுக்குச் சொல்லிக் கொள்வது - அவர் கோழை என்றால், எப்போதோ இலங்கையை விட்டு வெளியில் இருந்து போராட்டம் செய்திருப்பார். இத்தகைய செயல், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கும். ஏனென்றால், ஒரு போராட்டம் தொடர, தலைமை மறைவிடத்திலிருந்து செயல் படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும், குடும்பத்துடன், வாழ்நாள் முழுதும் வனங்களில் செலவழித்து, குண்டடி பட்டு (அதுவும் தலையில் தான், புற முதுகில் அல்ல) இறந்தாக எண்ணப்படும் ஒரு வீரனை, இவ்வளவு கேவலப் படுத்துவதில் இருந்து அவர்களின் மன வக்கிரங்கள் புரிகிறது. ஈழ மக்களின் போராட்டத்துக்கான அடிப்படை சிங்கள பேரின வாதத்தின் முகமும் தெரிகிறது.

இதை நான் எழுதியது, என்னைப் போன்ற மிகக் குறைந்த அளவில் இந்த விடயம் பற்றி புரிதல் உள்ள இந்தியர்களுக்காக. இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமலே, புலிகளைப் புரிந்து கொள்ளவும், ஈழ மக்களுக்காக கவலைப்படவும் முடியும் என்று புரிய வைப்பதற்காக மட்டுமே.

இதில் தகவல், கருத்துப் பிழைகள் இருந்தால் - ஒரு குழந்தையின் முதல் தவறை மன்னிப்பது போல விட்டு விடுங்கள்.

Monday, May 18, 2009

விடு - முறைகளை


தேர்தலுக்கு ஒரு நாள்
உழைப்பாளருக்கு ஒரு நாள்
சனி, ஞாயிறு இரு நாள்
உப்பிய தொப்பையைத் தடவிய
உழைக்காத கைகள்
மை கறை படியா இடக்கை நடுவிரல்
வெளியேறிய வாகனங்களில்
குடிமகன்களின் ஒரே கவலை
நீர்வீழ்ச்சிகளிலும்
அடர்கானகத்திலும்
ஐ.பி.எல். காண முடியாதென்பது தான்
மறுநாள் எண்ணைத் தைலத்துடன்
சிரித்துக் கொண்டார்கள்
நகரில் நூற்றுக்கு நாற்பத்திரெண்டு
முட்டாள்கள் இருப்பதாக

(கீற்று மின்னிதழில் வெளியானது)

Tuesday, May 12, 2009

செல்வா கொடுத்த அல்வா ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (12th May '09)


சென்ற மாதம் வேலன் மும்பை வந்திருந்தார். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு பொட்டலம் கொடுத்து 'இதை கொஞ்சம் இளஞ்சூடாக்கும்மா' என்று என் மனைவியிடம் கொடுத்தார். அப்படி இளஞ்சூட்டில் வந்த அமிர்தத்தின் பெயர் 'திருநெல்வேலி அல்வா'. - செல்வா கொடுத்த அல்வா (தலைப்பு சரிதானே). ஆம், செல்வேந்திரன், அண்ணாச்சி மும்பை செல்கிறார் என்று கேள்விப்பட்டு, விமான நிலையத்துக்கு வந்து ஆசையுடன் கொடுத்தாராம். உடனே செல்வாவுக்கு போன் போட்டு நன்றி சொன்னேன். 'புத்தகம் அனுப்பிய போது கண்டுக்கவேயில்ல - சரியான சாப்பாட்டு ராமன் போல' என்று நினைத்திருப்பார்.

இனிப்பெல்லாம் அவ்வளவுதான். வேலன் வந்தா எவ்வளவு டென்ஷன் தெரியுமா? வந்து செட்டில் ஆனவுடன் கேட்கும் முதல் கேள்வி 'இப்ப என்ன படிக்கிறீங்க'. நானும் நகுலன், (ஒரு முறை மறதியில் சகாதேவேன் என்றும் சொல்லிவிட்டேன்) லா.ச.ரா., தி.ஜானகிராமன் என்றெல்லாம் சமாளித்துப் பார்த்தேன். பாமாவின் கருக்கு, கண்மணி குலசேகரன், ஆதவன் தீட்சண்யா என்று out of syllabus பெயர்கள் சொல்லி என்னைத் தவிக்க விடுகிறார். என் மனைவியோ படித்துக் கொண்டிருந்த அவள் விகடன், குமுதம் எல்லாவற்றையும் ஒளித்து வைத்து விட்டு, தீராநதி, உயிர்மை, காலச்சுவடு (ஒரு முறை புத்தகம் தலைகீழாக இருந்ததை வேலன்தான் கவனித்தார்) என்று படித்தாள். 'இந்த வாரம் அய்யப்ப மாதவன் கவிதை' என்று வேலன் பேசத் துவங்க, 'இருங்க அடுப்பில் எதோ தீயுற வாசனை' என்று அவள் எஸ்கேப்.

இது ஒரு புறம் இருக்கையில், எப்படி தான் நம்ம வலையுலகு வாத்ஸ்யாயனருக்கு மூக்கில் வியர்க்குமோ! போன் வரும். எதிரில் வேலன். ஆபிஸ் வேலை பிசி என்று அளக்கவும் முடியாது. முதல் கேள்வி 'ஏம்பா, எப்படி இருக்க' அதெல்லாம் தானே நண்பர்கள் கேட்பார்கள். ம்ஹும், 'என்ன புத்தகம் படிக்கறீங்க இப்ப? நகுலன் முடிச்சவுடனே, கோபி கிருஷ்ணன் படிக்கலாம். சீரோ டிகிரி எப்படி இருந்தது? பிரமிள் கவிதைகள் கூட நீங்க அவசியம் படிக்கணும்' என்ற ரீதியில் போகும்.

என் வாழ்க்கையில் படிக்காமல் இருந்ததற்கு என் பள்ளித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் அவர்களிடம் கூட இவ்வளவு பயந்ததில்லை.

************************************************************

மும்பையில் வாக்குப் பதிவு தேசிய சராசரிக்கு மிகவும் கீழ். 42%. படிப்புக்கும், பொறுப்பு உணர்வுக்கும் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை. நான்கு நாட்கள் தொடர் விடுமறை வாய்ப்பும் ஒரு பெரும் காரணி. நிறைய பேர் புதன் இரவே 'விடு ஜூட்'. மும்பையிலேயே இருந்தும் வாக்களிக்காத தெற்கு மும்பை வாசிகள் (நகரின் பெரும் பணக்காரர்கள்) வாக்களிக்காமல் இருந்ததற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் சில:

வாக்குச் சாவடிகளில் குளிர் சாதன வசதி இல்லை
வரிசையில் நிற்க வேண்டுமாம்.
என் வேலைக்காரர் எனக்கு முன்னால் வரிசையில் நிற்பதா?
என் சல்சா (ஜல்சா இல்லை நண்பர்களே) நடன வகுப்பு தடைப்படுமே
Stilt-Parking எங்கள் வாகனங்களுக்கு கிடைக்கவில்லை
வெய்யில் கொளுத்துகிறது
என்னது! Door delivery/Net Voting கிடையாதா?

எப்படி இருக்கு?

தனவந்தர்களை விட்டுத் தள்ளுங்கள். மத்யம, கீழ்-மத்யமர்கள் கூட வாக்களிப்பில் அவ்வளவு நாட்டமில்லாமல் இருந்ததில் சிவா சேனா, பா.ஜ.க. கூட்டணி சற்று கவலைப் படுகிறது. அதாவது ஆளும் கட்சியின் மீது ஒன்றும் பெரிய அதிருப்தி இல்லை என்று இது உணர்த்துகிறதாம். இது ஒரு புறமிருக்க, முஸ்லிம் சமுதாய மக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மிகவும் பயந்து போயிருக்கிறது.

எனக்கு என்னவோ தென் மாநிலங்களை விட, மற்ற இடங்களில் தேர்தல் வெற்றி தோல்விகளை 'இதெல்லாம் சகஜமப்பா' என்று பெரிய அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் பொது இடங்களில் காண நேர்ந்தால் சிரிக்கிறார்கள்; கை குலுக்கவோ, ஆரத் தழுவவோ செய்கிறார்கள்.
************************************************************


நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நிர்வாகத் திறமைக்கு நிச்சயம் லலித் மோடியைப் பாராட்டத்தான் வேண்டும். தென் ஆப்ரிக்காவில் இத்தனை ஜனங்கள் போட்டியைக் காண வருவது ஒரு ஆச்சரியம்.

நிற்க. என்னுடைய ஆதர்ச அணி - சிரிக்காதீர்கள் - ராயல் சேலஞ்ஜர்ஸ் - எனக்குப் பிடித்த டிராவிட், கும்ப்ளே, கால்லிஸ் போன்றவர்கள் இருப்பதால். என் தம்பிக்கு தாதா இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பக்கத்துக்கு வீட்டுப் பெண் பஞ்சாபி. ஆனால் அவளுக்கு கிங்க்ஸ் XI பஞ்சாப் பிடிக்காது. ஷாருக் கான் அணி என்பதால் அவளுக்குப் பிடித்தம் கொல்கத்தா தான். அவள் கணவன் சொந்த ஊர் பாட்னா. ஆனால் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ். (வேறென்ன, தோனி அவங்க ஊராம்). என் ஆபிஸ் நண்பன் டில்லியைச் சேர்ந்தவன். அதலால் டில்லி டேர் டெவில்ஸ் அவனுக்குப் பிடித்தம். சச்சினை எல்லோருக்கும் பிடித்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிறைய பேர் சப்போர்ட் செய்வதில்லை. Truly cosmopolitan city.

என் தம்பியிடம் சொன்னேன் - நம்ம சென்னையில் எல்லோரும் ஒரே அணியைத் தான் சப்போர்ட் செய்வாங்க - சென்னை சூப்பர் கிங்க்ஸ் - என்றேன். அவன் 'நம்ம மக்கள் ராங்கா இருந்தாலும் ஸ்ட்ராங்காத் தான் இருப்பாங்க' என்றான் பொடி வைத்து, இந்தத் தேர்தல் சமயத்தில்.

************************************************************


இப்போது மிகவும் பிரசித்தமாக இருக்கும் வோடோ போன் விளம்பரங்கள் ஏதோ கிராபிக்ஸ் என்று எண்ணியிருந்தேன். உண்மையான மனிதர்கள் நடித்து, பின்பு கம்ப்யூட்டர் தகிடு தத்தங்களில் இவ்வாறு வெளிவருகிறதாம். Amazing. தேர்தலில் பிசியாகி உள்ள யுவ கிருஷ்ணா, இந்த விளம்பரங்கள் எடுக்கப்பட்ட விதம், செலவுகள், பயன்கள் பற்றி ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சமீபத்திய

அளவிலா மகிழ்ச்சி : நர்சிம் கதை ஆனந்த விகடனில் வந்தது; ராமலக்ஷ்மியின் முதல் சிறுகதை 'கலைமகள்' பத்திரிகையில்

அளவான மகிழ்ச்சி : அதிஷா கதை அதே ஆ.வி.யில் வந்தது (ஒரு பக்கத்துக்கு அவ்வளவு தான்)

பெருமிதம் : சென்னை பதிவர்களின் புது முயற்சி (Dr.ருத்ரன்-Dr.ஷாலினி)

தலைகுனிவு : இளங்கோவனின் பெரியார் பற்றிய கொச்சை பேச்சு

நேர்காணல் : அய்யனாரின் நேர்காணல் - 'நாம்' இதழுக்காக வந்தது

பிடித்த கவிஞர்கள் : ஒரு ஐவர் கூட்டணி - யாத்ரா/ நந்தா /மண்குதிரை / சேரல்/ப்ராவின்ஸ்கா (ரொம்ப நல்லா எழுதுகிறார்கள்-தனித்தனியே தான்)

பெரிய நிம்மதி : உங்களுக்குத் தான். இந்த முறை நோ கவிதை.

பிறந்தநாள் வாழ்த்துகள் : இன்று (May 12) என் தம்பி கிட்ட சொல்லலாம்;
நாளை (May 13) வலையுலகின் ஆகப்பெரும் வலை வீசுபவருக்குச் சொல்லலாம்; இவர் பிறந்த நாளுக்காக அரசு விடுமுறை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய ஆளுன்னு. சற்றுமுன் வந்த தகவல் - இவர் படைப்பும் இந்த வார ஆ.வி.இல் வருகிறதாம்.

Thursday, May 7, 2009

சில கவிதைகள் (குறும்பாக்கள் என்றும் சொல்லலாம்)
**************************************************

வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்**************************************************

வெகுநாள் மீனவன்
தொடர்ந்த ஆமைவேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்

**************************************************

உனக்கான என் அன்பு
உணரப்படாமல்
மறைந்திருக்கிறது
பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல்

**************************************************

உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்

**************************************************
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரமானது)