Showing posts with label சிறுகதை/கவிதை. Show all posts
Showing posts with label சிறுகதை/கவிதை. Show all posts

Saturday, December 14, 2013

weed ஏகுதல்



weed ஏகுதல் 

கடற்கரை மணலில் 
கால்கள் புதைகையில் 
வாயிலிருந்த weed என்னை 
வானுக்கு அனுப்புகிறது 

பிடித்த தோழியை 
பிடிக்காத சக அலுவலன் 
திருமணம் செய்வதின் 
சோகம் கரைகிறது 

அருகிலும் தொலைவிலும் 
ஒரே சமயத்தில் 
கன்னங் குழைய சிரிக்கிறாள்

பைக் ஒட்டுகையில் நிலம் 
படுக்கத் தெரியாமல் 
பேலன்ஸ் தவறி 
சிதறுகிறது 

ஸ்லோ மோஷனில் 
சக்கர ஆரங்கள் 
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கின்றன 

எனக்கு வலிக்கிறதா 
என்னும் குரல்  
செவ்வாயிலிருந்து கேட்கிறது  

ஹோட்டல் கலிபோர்னியாவின் 
4.19 லிருந்து நானே கிடாரானேன் 

கவுரவக் கண்றாவிக்காகக் 
குழந்தையைக் கொன்றவர்களுக்குத் 
தண்டனை அவசியம் 

விவிலியமும் குரானும் 
தீர்ப்பில் ஓதிய நீதிபதியை
நான் கைது செய்கிறேன் 

தூரத்து நீர்ப்பரப்பில் 
தத்தளிக்கின்றன 
நெமோ அளவு கூட 
கடலறியா கப்பல்கள் 

இமைகளை மூட 
அஞ்சுவதால் 
கண்திறந்தே தூங்குகிறேன்  

இந்தப் பொன்னான 
பதினைந்து நிமிடங்கள் 
இப்படியே இருக்கின்றன 
பன்னிரண்டு மணிநேரங்களாக  

இதுவே இப்படியென்றால் 
அரவத்தின் முத்தம் 
எப்படி இருக்கும்

ஊர் திரும்பியதும் 
காம்ப்ளான் கமழக்
கட்டிப் பிடித்தவன் 
சொர்கத்தையும் 
நரகத்தையும் 
ஒரு சேரக் காண்பித்தான் 

Sunday, July 8, 2012

அனுமானங்கள்









அனுமானங்கள் 

ஜன சந்தடி மிகுந்த
தெரு முனையில்
பேசிக்கொண்டிருந்தனர்
புதுக் காதலர்களா?
குறுகுறுப்பைக் காணவில்லை
மணமானவர்களா?
சலிப்பும் தென்படவில்லை
அல்லது...
இல்லை ஒரு வேளை...
பிரிந்து செல்லத் துவங்கி
தயங்கி அவன் பார்த்தபோது
திரும்பவில்லை
அவள்
திரும்பியபோது
பார்க்கவில்லை அவன்
ஹ்ம்ம்.
‘அல்லது’க்கு ஒரு கதையும்
‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும்
தானாகவே சேர்கிறது இப்போது

[நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

Monday, April 9, 2012

மோட்சப் பிரசாதம்




மோட்சப் பிரசாதம்

காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.  
ஒரு குழந்தை பிறந்ததினால் 
மதியம் கரைந்த சாக்லேட்கள் 
மேசைக்கடியில் குவிந்திருந்த 
இனிப்புத் துகள்கள்  
மாலையில் வசீகரமான 
மஞ்சள் உருண்டைகளுடன் 
வளையம் வந்த ஊழியனிடம் 
எனக்கு இரண்டு கேட்டேன் 
ஒன்றும் பேசாமல் 
மேசைக்கடியில் உருண்டைகளைப்  
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில் 
புதிதாக இறந்திருந்த 
கரப்பானின் மென் மீசை 
என் நாசியை உரசியபடி அலைந்தது    

[அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

Friday, July 22, 2011

மகத்தான

சின்ன மகள்

மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்
அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன

[நவீன விருட்சம் இதழில் பிரசுரம் ஆகியது]

Friday, October 8, 2010

கடற்கரையில் ஓர் காலை - மீள் பதிவு!


பழுப்பு நிறத்தில்
கறுப்புத் தீற்றல்களுடன்
வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;
பூமியைச் சுற்றும் நிலாபோல
அவள் நகர்ந்தாலும்
சுற்றியபடியே தொடர்ந்தது;
அதிகாலையின் ஆரஞ்சும்
அலைகள் தெறித்த நீரும்
இந்த குட்டி சொர்க்கமும்
இரம்மியமாயின அவளுக்கு;
வாரியணைத்து எடுத்துச் செல்ல
அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

எழுத, படிக்க ஒன்றும் தோன்றாமல், பிடிக்காமல், வெறுமையின் உச்சகட்டமாக என் பழைய கவிதைகளையே படிக்கும் உன்மத்த நிலை ஏற்பட்டது. இதற்கு முந்தைய இடுகையை விட இது எவ்வளவோ தேவலாம் என்றும் தோன்றுகிறது :(.



முதன் முறை இடுகையாகப் போட்ட போது பின்னூட்டம் இட்டவர்கள் பட்டியலை இப்போது பார்க்கிறேன். வேலன்-மாதவ்-நர்சிம்-சந்தனமுல்லை-கார்க்கி என்று நல்ல நட்புகள். ஹ்ம்ம். காலம் எல்லாவற்றையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது! போலவே மீண்டும் மாற்றிப் போடுமா?  - இந்த மீள் பதிவைப் போல்!


எனக்கே சிரிப்பு வந்தாலும் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்..நீ ரொம்ப்ப்ப நல்லவன்டா...

மற்றபடி இப்போதைக்கு எழுதுவேன் என்று தோன்றவில்லை. காரணம் - எழுதும் ஆர்வம் வடிந்து விட்டதும், வாசிப்பு முற்றிலும் நின்று விட்டதும் தான். ஆதலினால் ...என்ஜாய் மாடி.
 

Tuesday, October 20, 2009

நம்பிக்கைத் துரோகம்



கற்பனை வறட்சி, சுய சிந்தனையின்மை போன்ற உபாதைகளில் அடிக்கடி நான் அவதிப்படுவதால், அவ்வப்போது ஆங்கிலத்தில் படித்தவற்றில் சிலவற்றை மொழியாக்கம் செய்யும் உத்தேசம் இப்போது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதை, கவிதை, கட்டுரை என்று. எப்படி இருந்தாலும் ரொம்ப பாவம்தான் நீங்கள்!

இந்த முறை ஒரு Topical கவிதை
நம்பிக்கைத் துரோகம்

எவ்வாறு நான் ஒருவரை நம்ப முடியும்
அவ்வொருவர் என் நம்பிக்கையைத் தகர்த்தபின்
என் இதயம் வெறுமையாக
பனிக்கட்டி போல் உறைந்து
உடையும் தறுவாயில்
நீர் கசிகிறது
அந்நீர் சொட்டி, வழிந்தோடுகிறது
அந்த நம்பிக்கை
அந்தத் தருணம்
அதற்குள் இருந்த எல்லாவற்றையும்
நீ உடைத்தெறிந்து விட்டாய்
உன்னையோ உன் நண்பர்களையோ
நம்புவதற்கில்லை
ஆனால் நாம் நண்பர்களில்லை என்றில்லை
வெறும் நட்பு - நம்பிக்கையற்ற நட்பு மட்டுமே
என் நம்பிக்கையை மீள்பெற நீ முயன்றிட வேண்டும்
உன்னை மீண்டும் எப்போதேனும் நம்புவதற்கான
காரணங்களை எனக்குப் புரியச் செய்
உடைந்த நம்பிக்கைகளை
சீரமைக்க வேண்டும்
நீ கடினமாக முயல வேண்டும்
அதற்காக நீ என்னை
வெறுக்கவேண்டும் என்றில்லை
உன்னை மீண்டும் நம்பலாமென
எனக்குக் காண்பியேன்

(Jennifer Rondeau என்னும் கவிதாயினியின் ஆங்கிலக் கவிதையிலிருந்து (முடிந்தவரை) மொழியாக்கம். )

என் பிரிய ஜ்யோவுக்காக :((

Tuesday, April 7, 2009

அரி முகங்கள்


போதையில் வீசியெறியப்பட்டு

மேசையில் சிதறியிருந்த 

பல்வேறு அறிமுகங்கள்

நாலைந்து வரிகளின் பின்

அடுக்கப்பட்ட பொய்கள்

ஒவ்வொரு அட்டைக்கும்

சொல்ல ஒரு கதை 

சுய அட்டைகளும்

பலப்பல மேசைகளில்

வீசியெறியப்பட்டு

காறி உமிழப்படலாமென்று

நினைவில் நிறுத்தியது

முகத்திலடித்த குளுநீர்

காலை புறப்படுமுன்

சட்டைப்பையில்

மூன்று அட்டைகள்

இன்றைய வேடங்கள்

அநேகமாய்

நண்பன், விசுவாசி

மற்றும் கனவான்

என்று இருக்கலாம்

('கீற்று' இதழில் பிரசுரம் ஆகியது)

Wednesday, March 25, 2009

ரொட்டியும் மீன்களும்



கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.
வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்
அவர்கள் என்னை
பார்க்கவில்லை. அல்லது
பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்

(நவீன விருட்சம் இதழில் வெளியானது)

Wednesday, March 18, 2009

நிழலதிகாரம்



மலைச்சரிவின் இருமருங்கும்
உருளத் தயாராகி
நின்றுவிட்ட பாறைகள் தம்
நிழல்களைத் தொலைத்திருந்தன;
அருகாமை மரங்களிலிருந்தும்
நழுவியிருந்த நிழல்கள்;
மெல்லிய சலனத்துடன்
உரையாடிய மரங்களும்
காற்று பிடுங்கப்பட்டு
பாறைகளாகக்கூடும்;
மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா ;
மேற்பர்வையிட்ட
பலரின் இடையில்
சொருகப்பட்ட உறைவாள்கள் ;
ஒவ்வொரு உறைவாளுக்கும்
பலப்பல நிழல்கள்.


அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் பிரசுரம் ஆகியது. அவர்களுக்கு என் நன்றி.


இந்தக் கவிதையைக் ஆகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள வளர்மதி அவர்களின் இந்தப் பதிவு உதவக்கூடும். சுற்றும் தலை, மேலும் கிறுகிறுத்தால் பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது :) கவிதை அந்தத் தொடர் பதிவுகளின் சாராம்சம் அல்ல. அவற்றைப் படித்தபின் தோன்றிய உணர்வில் எழுதியது - இந்தக் கவிதை நிமித்தம் வளரை யாரும் திட்ட வேண்டாம் :)


Thursday, March 12, 2009

இடம் பிடித்தல்



விலகியிருந்த விருட்சங்களாலும்
தீண்டாத கொம்புகளாலும்
தரையிலேயே படர்ந்திருந்தன
பலகாலமாய்க் கொடிகள்;
செயற்கைப் பற்றுதலில்
கூரை ஏறிய கொடிகளில்
பளபளக்கத் துவங்கின
பரங்கியும் பூசணியும்;
மனங்குமைந்த மரஞ்செடிகள்
முறையிட்டன மேலிடத்தில்;
பின்வந்த வைபவத்தில்
மரத்தில் காய்த்த மாவும்
செடியில் பூத்த ரோஜாவும்
இலை தலை என்று இடம் பிடிக்க
கோலத்தைக் காவல்செய்த
பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்;
காய்த்திருந்த பூசணிகட்கும்
வாய்த்ததென்னவோ வாசல்தான் -
கழிந்த திருஷ்டிக்கு
சிதறடிக்கப்பட்டு வீழ்ந்தவொன்று;
பின்வரப்போகும் திருஷ்டிக்கு
விகாரமாய்த் தொங்கிய மற்றொன்று.
மனம் நொந்த கொடிகளிடம்
அண்டை வீட்டு பழக்கொடி
திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது

('புதுவிசை' இதழில் பிரசுரமானது)

Wednesday, February 25, 2009

காக்கைக் கூட்டம்



உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;
சூட்டிகைகள் சில
தேர்ந்த அலகுகளால்
பெருந்துண்டுகளை
வானில் கவ்வி மறைந்தன,
மதிப்பெண்களின் சூட்சுமம்
அறிந்த முன்னிருக்கை
மாணாக்கர் போல்;
நொறுங்கிய துகள்களை
மணலுடன் உண்ட மற்றவை
தொங்கிய தலையுடன்
மண்சோறு உண்ட
அக்காளை நினைவுறுத்தின.
கசக்கி வீசப்பட்ட
அலுமினியத் தாளை
தேடிப்பிடித்து உண்டன
இதுவரை இரை கிட்டாத
இரண்டு காகங்கள்;
வீசப்பட்ட தாளின் நிறம்
பத்தாவப்புடன் நிறுத்திக்கொண்ட
இஸ்திரி வண்டி பழனியின்
சட்டைப்பையில் இருந்த
லாட்டரிச் சீட்டின் நீலந்தான்
நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்



(உயிரோசை 22.12.08 மின்னிதழில் பிரசுரமானது)

Tuesday, January 27, 2009

மண் மகள்


சேற்றுப் பிரதேசத்தில்
வாலறுந்த
குதிகாலணியை
வீசி எறிந்தாள்
என்னிடம் மீதிச்
சில்லறை வாங்காமல்
சென்றவளின் வாயிலிருந்து
தேசத்தின் சுகாதாரம்
தூற்றப்பட்டது.
அவள் வசிக்கும் தூரதேசம்
போற்றப்பட்டது
பிறிதொரு நாளில்
கீரைக்குப் பேரம் பேசுகையில்
உதட்டின்மேல் இரு விரலிட்டு
சேற்றில் சங்கமித்த
உமிழ்நீரைப் பீய்ச்சியவள்
வெளிநாட்டில் வேலையிழந்த
அவளாகத்தான் இருக்க வேண்டும்
(கீற்று இதழில் பிரசுரமானது)

Friday, January 9, 2009

பூவாகி, காயாகி


பூக்கவேயில்லை என்றும்
காய்க்க வாய்ப்புமில்லை என்றும்
பெருமர நிழலில்
காற்று வாங்கியபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்
பார்த்து முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்.

Friday, December 26, 2008

ரகசியங்கள்


ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே;
எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்
அவள் மேலுள்ள அக்கறையாகவும்
நீங்கள் கொள்ளலாம்,
அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும்


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

Friday, December 19, 2008

அழைப்பு மணி


அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது

Friday, December 12, 2008

(ஆ!) சுவாசம்


ஆருயிர் நண்பனை
ஆசுபத்திரியில் கண்டேன்
படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்த மாதம் கெடு
எக்ஸ்-ரேயில் தெரிந்தது
நுரையீரல் துகள்கள்;
பதைபதைத்த மனம்;
வெளியே வந்தபின்னும்
படபடத்த உடல்;
பெட்டிக் கடையில்
ஒரு சிகரட்டுக்குப்பின்
எல்லாம் அடங்கியது.
என் நுரையீரலின்
'நு' வெளியே மிதந்தது


(ஜ்யோவின் "ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்" கவிதை இப்போது படித்தவுடன், முன்பே எழுதி வைத்த ஒரு கவிதையை தூசி தட்டி பதிவு செய்து விட்டேன்)

Friday, December 5, 2008

பிசுபிசுப்பு


மழைக்கு முன்பான காற்றில்
படபடத்த நோட்டுப்புத்தகத்தின்
ஏழாம் தாள் நிரம்பவே சலனித்து
கவனமீர்த்தது.
உரையாடவும் தொடங்கிற்று.
எவ்வளவு காற்று! மழையும் பெய்யுமிப்போ
என்னைக் கிழித்து மடி
ராக்கெட் செய்து பறக்கவிடு
கத்திக்கப்பல் செய்து மிதக்கவிடு
எப்படியாவது என்னை
விடுவித்துவிடு என்றது
மரங்களைப் பற்றியெல்லாம்
கவலைப்படுமென்னிடம்
முற்பிறப்பில் மரமாயிருந்தாலும்
இலையாய்ப் பறக்கத்தான்
ஆசையுற்றேன் - விடுவி என்றது
அரைமனதுடன் கிழித்த தாளை
எண்ணையில் தோய்த்து
விளக்கடியில் தூக்கிலிட்ட
என் மனைவி சொன்னது
'ஈசல் தொல்லை தாங்கவில்லை'
பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.


(உயிரோசை 01.12.08 மின்னிதழில் பிரசுரமானது)

Thursday, November 20, 2008

துயிலும் பெண்

எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா. அவரது இணையதளமும் எனக்குப் பிடித்த இணையங்களுள் ஒன்று.

அண்மையில் எஸ்ரா சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதை பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.

"சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன். இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்."

கதை எனக்கு வசீகரமாகவும், பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது. இதனை மொழியாக்கம் செய்து பார்த்தால் என்ன என்று முயன்றேன். (சொந்தக் கற்பனை வறட்சி நிலவரம் என் கவிதைகள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்).

கதை படிக்க ஆசைப்படுவோர் இங்கு செல்லவும்: துயிலும் பெண்

பெரும் ஊக்கமளித்து இணையத்தில் என் பெயரையும் குறிப்பிட்ட, நான் மிக மதிக்கும் எஸ்ராவுக்கு நன்றிகள் பல.

இது பெரும் நாவலாக அல்லாது, இரண்டு பக்க சிறுகதை மட்டுமே என்பதாலும், மொழியாக்கத்தின் மொழியாக்கம் (அரேபிய-ஆங்கில-தமிழ்) என்பதாலும் "வருமொழி, நிலைமொழி, மொழியாக்கத்தில் வன்முறை" என்றெல்லாம் பெரிய விடயங்கள் பற்றி வெளிச்சம் காட்டிய வளர்மதியின் நினைவுகளைக் கிடப்பில் போட்டுவிட்டேன். பிழைகளை அன்னார் மன்னிப்பாராக.

Wednesday, November 12, 2008

சாயும் பொழுதும், சாயம் போதலும்


சிகப்புக் கழுத்துப் பட்டையில்
சிந்திய காப்பித் துளிகள்;
மாலையில் மனைவி
சுருட்டியபடியே
கறை போகாதென்றாள்,
காப்பி கறையை பார்த்தபடியும்
லிப்ஸ்டிக் சாயத்தை
ஸ்பரிசித்தபடியும்.
சுருட்டப்பட்டது
பேராண்மையும் கூட;
காலை சுவைத்தது
இரவில் கசந்தது.

Monday, November 10, 2008

குறக்கடவுள்


ருசிக்குச் சாப்பிடாது
பசிக்கு மட்டும் உண்ணும்
நரிக்குறவனை உன்
ஞான குருவாக்கிக்கொள்
சாதியம் களையும்
சாத்தியங்கள் அறிந்தவன்
அய்யர் வீட்டு அவியல்
அய்யங்காரின் தயிர்வடை
செட்டி நாட்டு அப்பம்
முதலியாரின் முறுகல் தோசை
பிள்ளைமார் வீட்டு பணியாரம்
ஏதுமில்லை என்றால்
காடை கவுதாரி
எல்லாமே ஒன்றுதான்
உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.
அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த
அவனன்றோ கடவுள்
(கீற்று.காமில் பிரசுரமானது)