Saturday, December 14, 2013

weed ஏகுதல்



weed ஏகுதல் 

கடற்கரை மணலில் 
கால்கள் புதைகையில் 
வாயிலிருந்த weed என்னை 
வானுக்கு அனுப்புகிறது 

பிடித்த தோழியை 
பிடிக்காத சக அலுவலன் 
திருமணம் செய்வதின் 
சோகம் கரைகிறது 

அருகிலும் தொலைவிலும் 
ஒரே சமயத்தில் 
கன்னங் குழைய சிரிக்கிறாள்

பைக் ஒட்டுகையில் நிலம் 
படுக்கத் தெரியாமல் 
பேலன்ஸ் தவறி 
சிதறுகிறது 

ஸ்லோ மோஷனில் 
சக்கர ஆரங்கள் 
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கின்றன 

எனக்கு வலிக்கிறதா 
என்னும் குரல்  
செவ்வாயிலிருந்து கேட்கிறது  

ஹோட்டல் கலிபோர்னியாவின் 
4.19 லிருந்து நானே கிடாரானேன் 

கவுரவக் கண்றாவிக்காகக் 
குழந்தையைக் கொன்றவர்களுக்குத் 
தண்டனை அவசியம் 

விவிலியமும் குரானும் 
தீர்ப்பில் ஓதிய நீதிபதியை
நான் கைது செய்கிறேன் 

தூரத்து நீர்ப்பரப்பில் 
தத்தளிக்கின்றன 
நெமோ அளவு கூட 
கடலறியா கப்பல்கள் 

இமைகளை மூட 
அஞ்சுவதால் 
கண்திறந்தே தூங்குகிறேன்  

இந்தப் பொன்னான 
பதினைந்து நிமிடங்கள் 
இப்படியே இருக்கின்றன 
பன்னிரண்டு மணிநேரங்களாக  

இதுவே இப்படியென்றால் 
அரவத்தின் முத்தம் 
எப்படி இருக்கும்

ஊர் திரும்பியதும் 
காம்ப்ளான் கமழக்
கட்டிப் பிடித்தவன் 
சொர்கத்தையும் 
நரகத்தையும் 
ஒரு சேரக் காண்பித்தான் 

Tuesday, March 26, 2013

ஜெமோவின் சமீப சிறுகதைகள் - பற்றியும் பற்றாமலும்


எழுதி ரொம்ப நாட்களாகி விட்டது. எதையாவது எழுதித் துவங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பல நாள்கள் கடந்து விட்டன. சமீப காலங்களில் வாசிப்பு என்று பார்த்தால் மிகவும் குறைந்து விட்டது. அலுவலகத்தில் நிறைய தளங்களுக்குத் தடை. ஐ.டி. ஆசாமி ஜெமோ ரசிகராக இருக்க வேண்டும். அவர் தளம் மட்டும் எப்போதும் தங்கு தடையில்லாமல் வருகிறது. அதுவும் சில நாள்கள் நின்று விடவே கூகிள் ரீடர்ஸ் மூலம் அவர் தளத்து எழுத்துகளை வாசித்தேன். 

ஜெமோ சிறுகதைகளாக எழுதித் தள்ளி வருகிறார். வாசகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இதுவரை ஐந்து கதைகள் படித்து விட்டேன். கைதிகள், அம்மையப்பம், நிலம், கிடா மற்றும் தீபம். இவற்றில் 
கிடா, தீபம் என்னைப் பொருத்தவரை முதல் மூன்று கதைகளின் வீச்சில் இல்லை. மூன்று பவுண்டரிகளுக்குப் பின் எடுக்கும் இரண்டு சிங்கிள்ஸ் போல. 


நக்சல்களைக் கண்காணிக்கும் காவல் துறை பல்சக்கரத்தின் மிகச் சிறிய மூன்று பற்களின் பார்வையில், ஒரு காவல்காரரே கதை சொல்லியாகக் கதை செல்கிறது. கதையின் தலைப்பும் முதல் சில வரிகளும் இவர்களும் கைதிகள் போலும்; சக கைதி நண்பன் ஒருவன் பிடிபட்டதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைத்தேன். அப்படி இல்லையென்றாலும் கதையின் இறுதியில் திட்டவட்டமாக அதுதான் தோன்றுகிறது. 

வேலையின் கடுமையால் எதிர் மறை உணர்வகளுடன் திரியும் பெருமாள்; ஓரளவு நியாயம் பார்க்கும் நாராயணன்; கதை சொல்லி என்பதால் அனைத்தும் அறிந்த முருகேசன் [ஜெமோவின் நிறைய கதைகள் தன்மையில் வருவதால் கதைசொல்லி மிகச் சாதாரணனாக இருந்தாலும் உணர்வுகளும் விவரணைகளும் நுட்பமாக இருப்பது பொருத்தமாக இல்லையே என்று சிலசமயம் தோன்றுகிறது) என்ற மூன்று காவல்காரர்கள் தருமபுரி காடுகளில் அடிப்படை வசதிகளற்ற சூழலில் நக்சல் இயக்க ஆட்களைக் கண்காணிக்கும் வேலையில் சலிப்புடன் இருக்கும் ஒரு இரவு.  அப்பு என்ற நக்சல் இளைஞன் பிடிபடுவதில் துவங்கி அரசு அதிகார அமைப்பு (இதை இப்படித்தான் எழுதணும் பாஸ்) எப்படி நக்சல் இயக்கத்தினரைக் கையாள்கிறது; அரசாங்கப் பல் சக்கரத்தின் சின்னஞ்சிறிய பற்களான இந்த மூன்று காவல்காரர்கள் எப்படி மேலதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்கும் இயந்திரமாக இயங்க வேண்டியிருக்கிறது என்று விவரிக்கிறது கதை. இந்த மூவரும் சமூகத்தின் அடித்தட்டு நிலைகளிலிருந்து வந்தவர்கள். ஒருவன் விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன்; மற்றொருவன் நாவிதர்கள் குடும்பம்; மூன்றாமவன் கிணறு தோண்டுபவரின் மகன். இப்படிப்பட்ட எளிய பின்புலத்துடன் அரசு வேலைக்கு வந்த இவர்களுக்கு மேலதிரிகாரிகள் செய்யும் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்க இயலாத நிலை; 

பிடிபட்டவனை என்ன செய்வார்கள் என்று முருகேசனுக்குத் தெரிந்தாலும் மனம் அல்லாடுகிறது அவனுக்கு. 

"கொல்லுறது தப்பாக்கும்" என்னும் முருகேசனிடம் "தப்பும் சரியும் பாக்கறவன் என்ன மயுத்துக்கு தொப்பிபோடவந்தே? வக்காளி, உனக்கெல்லாம் சர்க்காரு மாசாமாசம் குடுக்குத சம்பளம் தெண்டம்" என்கிறான் நாராயணன். இதையே உப-மேலதிகாரி கருப்பையா "நாம அடிச்சாத்தான் நமக்கு அடிவிளாது; தொப்பிபோட்டவன் மறுத்துபேசமுடியுமாடே?" என்கிறார். 

காட்டில் ஓடும் முயலைப் பிடித்துக் கொன்று குடலை வீசியெறிவது; உடலைத் தின்பது; குடலை ஒரு பாம்பு விழுங்குவது என்று காட்டு ராஜ்ஜியம் நடப்பதை ஒரு குறியீடாகப் பார்க்கலாம். ஒரு சிறு பறவை சப்தமிட்டுக்கொண்டே இவர்களைத் தொடர்ந்து வந்து அப்புவைக் கொன்று குழியில் தள்ளும் போதெல்லாம் தொடர்ந்து  இவர்களிடம் சப்தமிடுவது எனக்கு மானுடத்தின் மனசாட்சி தான் இது என்று தோன்றியது. எல்லாம் முடிந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் அமைதியான பறவை மீண்டும் மானுடத்தின் 'அல்லலுக்குப் பின் அமைதி இறைஞ்சும்' மனவுணர்வையே நினைவுறுத்தின. 

இறக்கும் தருணத்திலும் சரடை மேலும் இழுத்து சிரமம் தராமல் வெட்டுபவனிடம் புன்னகைத்து 'தேங்க்ஸ்' என்பவன்; தேனீர் கொடுக்கும் காவலாளியிடம் "இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்?" கேட்பவன் - இப்படி மிக மெல்லிய மனதுடன் இருப்பவனை மிகப்பெரிய அபாயமாகப் பார்க்கும் அரசு இயந்திரத்தின் தர்க்கம் புரிந்தாலும் நியாயம் புரியவில்லை. புரிந்தாலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கதை கேட்கும் நாமும் கைதிகளாகவே நிற்கிறோம். 


ஆவி பறக்க வெளிவரும் இட்டிலிகளை கன்றுக்குட்டி பிரசவத்தில் வெளிவரும் காட்சியுடனும் முட்டை ஓட்டை உடைத்து வெள்ளைக் கோழிக் குஞ்சுகள் வெளிவரும் காட்சியுடனும் காணும் சிறுவன். கதைசொல்லியின் எளிய பாத்திரம் நுண்ணுணர்வுகளுடன் சிந்திப்பது பொருந்தவில்லை என்றே மீண்டும் தோன்றுகிறது. ஜெமோ இதற்கு ஏதேனும் விளக்கம் வைத்திருப்பார்.

' முன்பு கடுக்கன் போட்டிருந்த காதுத் துளைகளில் இரு அரளிமலர்களை செருகி வைத்திருந்த' கிறுக்கனாச்சாரி. அதே சமயம் ஞானச்செருக்கும் இருக்கும் கலைஞன். இன்னொரு ஆச்சாரியைப் பற்றி "அவன் ஆரு? ஆசாரிண்ணா தொளிலறியணும்…அவன் மரங்கொத்தியாக்குமே" என்னும் எக்காளம். 

" மனுஷனுக்குள்ள ஏளு பிசாசுண்டுண்ணுல்லா கதை?" என்று வியாக்கியானம் செய்து, அதில் ஒன்று பசி என்று சொல்லும் இடம் யதார்த்தமும் ஞானமும் ஒன்று சேருமிடம். அதே சமயம் இலவசமாக உணவு பெறுவதை மறுக்கும் 'ஆச்சரிய தர்ம' மனம். வெநதிருப்பதை உறுதி செய்ய ஒரு இட்டிலியில்  விரலால் குத்திப் பார்ப்பதால் முழி விழுந்த இட்டிலிக்கு அம்மையப்பம் என்ற பெயர். அதை அந்த காட்டில் பூத்த மலர் போன்ற யாருமறிந்திராத கலைஞன் "அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா? அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு" என்கிறான். 

சிறு பிள்ளைக்கு அம்மையப்பம் பிடிக்குமென்றால் கடவுளின் இந்தப் பிள்ளைக்கு 'அம்மையப்பன்' பிடித்திருக்கிறது. முந்தைய கதையில் வரும் காவலர்கள் கூட அவசரத்திற்கு உருவாக்கும் ஏணியை இந்த ஆச்சாரியால் கடைசி வரை செய்யவே முடிவதில்லை. மூங்கில் முழுதும் தேன்கூடு போல் ஓட்டைகள் மட்டுமே மிஞ்சுகின்றன. ஆனால் சந்தன மரப்பலகையில் ஆச்சாரி உருவாக்கும் சித்திரங்கள் மனம் பிறழ்ந்தாலும் கலை விலகுவதில்லை என்பதை சொல்கின்றன. ஜெமோ அந்தக் கலைஞனின் கலையை இப்படி விவரிக்கிறார் - 
"அந்த உளியின் நுனியில் இருந்து சிறிய நுணுக்கமான உருவங்கள் எழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முந்தைய கணம் இல்லாமலிருந்தவை. காற்றுக்கு அப்பால் ஒளிக்கு அப்பால் உள்ள ஏதோ ஓர் இடத்தில் இருந்து அவை வந்தன. காற்றை விலக்கி ஒளியை விலக்கி. மெல்லிய கொடிகள் மலர்கள் . அவற்றினூடாகத் துள்ளிய மான்களின் சரடு. துதிக்கை பிணைத்த யானைகளாலான மணிமாலை." கலை உருவாவதை ரசிக்கவும் ஒரு கலை மனது வேண்டும்தானே! 

செதுக்கிய சிவனின் நெஞ்சுக்குழியும், பிரிந்த மனைவி நெஞ்சில் ஏற்றிய ஏக்கக் குழியும், அம்மையின் விரலால் தோன்றிய அப்பக் குழியும் 'அம்மையின் அனுக்கிரகம்' என்று காணும் உன்னதக் கலைஞனின் உன்மத்த மனது ஏணியின் துளைகளைப் போடமுடியாதது ஒரு கவிதையான அநீதி. நுட்பமான கதை. 


மற்ற கதைகள் பற்றியும் எழுத ஆசை. முடியுமா என்று தெரியவில்லை. 

ஒரு கவிதை படிக்கலாமா?

லௌகீகம் 

கடலும் சுருங்கும் 
நெருப்பும் தடுமாறும் 
காற்றின் விரல்களும் 
வெறும் வெளி வீணையில் 
பேசாமல் மடங்கும்;

வானத்தில் 
பரிதியே நின்று 
கிணற்றுள் தன்  பிம்பத்தை 
பட்டம் விட்டாலும் 

குடிதண்ணீர் 
வாளி வீச்சில் 
நடுங்காது நிற்குமா?
அலைக்காமல்தான் 
அள்ள முடியுமா?

****

நல்லா இருக்குல்ல? எழுதியவர் யார் என்று சொல்லுங்களேன்.