Friday, December 26, 2008

ரகசியங்கள்


ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே;
எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்
அவள் மேலுள்ள அக்கறையாகவும்
நீங்கள் கொள்ளலாம்,
அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும்


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

Friday, December 19, 2008

அழைப்பு மணி


அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது

Friday, December 12, 2008

(ஆ!) சுவாசம்


ஆருயிர் நண்பனை
ஆசுபத்திரியில் கண்டேன்
படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்த மாதம் கெடு
எக்ஸ்-ரேயில் தெரிந்தது
நுரையீரல் துகள்கள்;
பதைபதைத்த மனம்;
வெளியே வந்தபின்னும்
படபடத்த உடல்;
பெட்டிக் கடையில்
ஒரு சிகரட்டுக்குப்பின்
எல்லாம் அடங்கியது.
என் நுரையீரலின்
'நு' வெளியே மிதந்தது


(ஜ்யோவின் "ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்" கவிதை இப்போது படித்தவுடன், முன்பே எழுதி வைத்த ஒரு கவிதையை தூசி தட்டி பதிவு செய்து விட்டேன்)

Friday, December 5, 2008

பிசுபிசுப்பு


மழைக்கு முன்பான காற்றில்
படபடத்த நோட்டுப்புத்தகத்தின்
ஏழாம் தாள் நிரம்பவே சலனித்து
கவனமீர்த்தது.
உரையாடவும் தொடங்கிற்று.
எவ்வளவு காற்று! மழையும் பெய்யுமிப்போ
என்னைக் கிழித்து மடி
ராக்கெட் செய்து பறக்கவிடு
கத்திக்கப்பல் செய்து மிதக்கவிடு
எப்படியாவது என்னை
விடுவித்துவிடு என்றது
மரங்களைப் பற்றியெல்லாம்
கவலைப்படுமென்னிடம்
முற்பிறப்பில் மரமாயிருந்தாலும்
இலையாய்ப் பறக்கத்தான்
ஆசையுற்றேன் - விடுவி என்றது
அரைமனதுடன் கிழித்த தாளை
எண்ணையில் தோய்த்து
விளக்கடியில் தூக்கிலிட்ட
என் மனைவி சொன்னது
'ஈசல் தொல்லை தாங்கவில்லை'
பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.


(உயிரோசை 01.12.08 மின்னிதழில் பிரசுரமானது)

Sunday, November 30, 2008

மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்



சூசன் ஜார்ஜ்


அவள் வருகிறாள் என்று ஒரு வாரம் முன்பே தெரியும். டோரோண்டோவிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் பிரத்யேகமாக மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ஆனாலும், சனி, ஞாயிறின் கொண்டாட்டங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, மறந்து, திங்கள் காலையைப் படைத்த ஆசாமியை கெட்ட வார்த்தைகளில் சபித்து, ஏழு மணிமுதல் வீட்டில் கலவரம் செய்து, ஒருவழியாக ஆபிஸ் சேர்ந்தாயிற்று.. அப்பாடா, இன்றைய சம்பளம் நியாயமானதுதான் என்று காபி குடிக்கையில் லவினா தொலைபேசியில், '9.30 ஆகிவிட்டது. கான்பரன்ஸ் ரூம் செல்லவும். சூசன் வந்தாயிற்று. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள். ஓஹ், இன்று இந்தக் கிராதகி வந்தாயிற்றா? இந்த வாரம் குருபெயர்ச்சியில் ராசிபலன் பார்க்க வேண்டும்.

'ஹாய் சூசன் - ஹலோ கைஸ்'

'ஹாய் ராகவ், சோ நைஸ். நண்பர்களே, ராகவ் என்னும் தலையில் கொம்பு முளைத்த அரிய பிராணியைச் சந்தியுங்கள். நமது ஒரு வார நிகழ்ச்சி நிரலில் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிக்கு வர இசைந்த ராகவுக்கு, இந்த சிறிய வரவேற்பு' என்று மஹாபலேஷ்வர் தோட்டத்து ரோஜாப் பூங்கொத்துக்களை என்னிடம் அளித்து கை தட்ட, கூட்டமும் தட்டியது.

மரியாதை நிமித்த முதுகு சொறிதல்களுக்குப் பின், நான் சில உண்மைகள் சொல்ல, அவள் இன்னும் பல, பெரிய உண்மைகள் பேச, கலவரம் நிகழும் முன், எச்சரிக்கையுடன் சிரித்து முடித்துக்கொண்டோம். இப்போதைக்கு அவ்வளவுதான். இனி நாளை இரவுதான் அவளுடன் விருந்து என்ற நிம்மதியில் அலுவலக வேலைக்கிடையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல கவிதை முயற்சியில் இறங்கித் தோற்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் சூசனை விவரிப்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கிறது. முழுப் பெயர் சூசன் ஜார்ஜ். சிகப்பி. உயரி. அழகி. வயது முப்பத்தி இரண்டு என்று ஞாபகம். அவர்கள் 25-38 வரை கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் வயதை துல்லியமாகக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. டொரோண்டோ அருகில் உள்ள ஹாமில்டன் என்னும் சிறு நகரம் அவள் பிறந்து வளர்ந்து, அழகான இடம். கால்கரியில் பட்டம் முடித்து, டோரோண்டோவில் மேற்படிப்பு... இல்லை “யேல் எம்.பி.ஏ” என்றாளே. என்னவோ போங்க சார், இந்தப் கல்வி பற்றிய தகவல்கள் மட்டும் மூளைக்குள் நுழைய மாட்டேங்குது. எங்கப் படிச்சா நமக்கென்ன.

செவ்வாய் மதியம் கூப்பிட்டு, ‘நமது இரவு விருந்தை நாளை இரவுக்கு மாற்றட்டுமா’ என்றாள். 'நோ இஷ்யுஸ்' என்று சொல்லிவிட்டு மகிழ்ந்தேன். புதன் மாலை. 'பெரிய ஹோட்டல் சாப்பாடு அலுக்கிறது. நல்ல உணவகம் இருந்தால் சொல்லு. அங்கே போகலாம்' என்றாள். வொர்லியில் (வீட்டுக்குச் செல்லும் வழி. நேரம் மிச்சம்) 'ஜ்வெல் ஆப் இந்தியா' என்னும் உணவகம் சென்று இடம் பிடித்து அடுத்த மூன்று மணிநேர அறுவைக்குத் தயாரானேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத வெளிர் நீல சூடிதார் உடையில் வந்தாள். ஆபீஸில் மெதுவாகக் கைகுலுக்கும் சூசன் இப்போது ஆரத் தழுவினாள். சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும். அப்போதெல்லாம் ஒரு படபடப்பு, உத்வேகம், இத்யாதிகள் வருவதில்லை. ஒரு கசின் சிஸ்டரைப் பார்க்கும் உணர்வே மிஞ்சும். எனக்கு அப்படித்தான் இப்போது இருந்தது.

யோக்கியனாக நடிக்க முயன்ற என்னை சட்டை செய்யாமல் எனக்கு பியரும் அவளுக்கு 'ஜின்' என்னும் பெண்கள் அருந்தும் மதுவும் ஆர்டர் செய்தாள். 'இன்னைக்கு நமக்கு சரியான பூசைதான் விட்டுல' என்று அப்போதே வெளிறத் துவங்கினேன். முகத்தைச் சரியாகப் படித்தவள் போல, 'அனு கிட்ட நான் பேசிக்கறேன். பயப்படாமல் ஒரு கிளாஸ் பியர் குடி. அதற்கு மேல் நீ கேட்டாலும் கிடையாது' என்றதில் சிறிது ஆசுவாசம் ஆனேன்.

'இதோ பார் ராகவ், ஆபிஸ் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது. நீயும் நானும், கொஞ்சம் சிடுமூஞ்சிகள் ஆனாலும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சோ..'

'ஆகச் சரி குரங்கே'

என் மேல் தெறித்த கால் டம்ப்ளர் ஜின்னில் என் சட்டை ஈரமானதுடன், எங்கள் இறுக்கமும் காணாமல் போனது.

முதலில் தன்னை பற்றி நிறைய சொன்னாள். உயர் மத்யம குடும்பம். கல்வி. விளையாட்டு (ஐஸ் ஹாக்கி ரொம்ப பிடிக்கும்). கல்லூரி காதல் இரண்டு ஆண்டுகள். பிறகு மேற்படிப்பு. வேலை. பதவி உயர்வு. மேலும் அதிக வேலை. இடையில் ஹார்மிசன் என்னும் அழகான வாலிபனின் பிரவேசம். வாழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்கடியது. இன்னும் ஏறக்குறைய அவ்வாறே செல்லும் வாழ்க்கை என்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.

'நானே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்லு இப்போ'

'பெருசா ஒண்ணும் இல்ல'

'ஆபிஸ் சொற்பொழிவு போல் போலியாக இருக்காதே. ஓபன் அவுட் யு டாக்'

நானும் நிறைய பேசினேன். எல்லோரோடும் போட்டி போட்டு, அரைகுறை வெற்றி பெற்று, கிடைத்த வேலையை வாங்கிக்கொண்டு, வேண்டிய வேலையை அதன் மாயக் கவர்ச்சி போனபின் பெற்று, எல்லா சராரசி ஆண்கள் போல் நான்கு பெண்களைப் பார்த்து, மூவரைக் குறிவைத்து, இருவரைத் தேர்வு செய்து, ஏமாந்த ஒருத்தியைக் காதலித்து, ஆச்சரியமாக அவளையே திருமணமும் செய்ததுவரை எல்லாம் சொன்னேன்.

"உன் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. ஜிக் ஜாக் என்று மேலும் கீழும், மாயமும், சிறு சிறு ஏமாற்றங்களும். நீ விவரித்த விதம் இன்னும் சுவாரஸ்யம். இந்தியாவைப் பற்றி பேசேன். எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் நாட்டை"

"உங்கள் நாட்டுக்கு 300-400 வயது. பொருளாதார முறையில் செதுக்கப்பட்ட, ஓரளவு தட்டையான கலாசாரம். நான் சொல்வதை தவறாக எண்ணாதே. இந்தியா மிகப் பழமையானது. தொன்மை வாய்ந்தது"

"எனக்கும் தெரியும். மூவாயிரம் ஆண்டுகள் முந்தைய கலாசாரம். ரைட்? "

"வெளியில் சொல்லாதே. ஒரு பொதுக்கூட்டமே உன்னை அடிக்க ஓடி வரும். காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை யாரைக் கேட்டாலும், இந்தியாவுக்கு சராசரி வயது ஒரு பத்தாயிரமாவது இருக்கும்"

"சும்மா விளையாடாதே"

"நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க"

"இதுல எவ்வளோ கட்டுக்கதை? எவ்வளோ வரலாற்று உண்மைகள்?"

"யாரு சொல்றாங்க என்பதைப் பொறுத்தே கதையா அல்லது வரலாறா என்று முடிவு செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை - உங்கள் மேற்கத்திய வரலாற்று உண்மைகள் உட்பட"

எல்லாம் பேசி முடித்த போது மணி ஒன்பது. மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.

"ஒரு உர்ரான்குட்டானுக்குள்ள இவ்வளவு மென்மையான ஆசாமி ஒளிந்திருப்பானு நினைக்கல. நல்லது. நாளை காலை பார்ப்போம். போரைத் தொடர்வோம்" என்று சொல்லி டாக்சியில் ஏறி ஹோட்டலைச் சென்றடைந்தாள்.

நான் இளம் ஏப்பத்துடன், இளையராஜாவைக் கேட்டுக்கொண்டு, வீடு சேர்ந்தபோது பத்து. வழக்கம் போல வடிவேலு பார்க்காமல் தூக்கம் வராது என்பதால், அனுவுடன் அமர்ந்தேன். விளம்பர இடைவேளையில், சேனல் தாவுகையில், டைம்ஸ் நவ்வில் "தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நுழைவு" என்ற Breaking News.

முதலில் உரைக்கவில்லை. கடவுளே, சூசன் தங்கியிருப்பது ஓபராய் அல்லவா!

சுசனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். மொபைல், மற்றும் ப்ளாக்பெர்ரி இரண்டுமே உயிர் போயிருந்தது. ஹோட்டல் நம்பர் சிலமுறை 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை'; பலமுறை சுடுகாட்டு மௌனம். ச்சே, என்ன உவமை.

அனு, 'வண்டி எடுங்கள், போய் பார்த்துவிடலாம்' என்றாள்.

Pant போடும்போதே, நிகழ்ச்சிகளின் தீவிரம் புரியத் தொடங்கியது. நாங்கள், அந்தேரி தாண்டுகையில், இடையில் மறித்த கும்பல் ஒன்று "பார்லாவில் குண்டு போட்டு, ஒரு டாக்சி சுக்குநூறு, மேலே போகாதீர்கள்" என்றது. ஆயினும் குருட்டு தைரியத்திலும், சூசன் பற்றிய பயங்களிலும் காரை மேலும் ஓட்டினேன். ஒரு கூட்டம் வழியில் நின்றதால், வேறு வழியின்றி காரை நிறுத்தி ..'ஒ என்ன கோரம்! ஒரு தலை மட்டும் ரோட்டின் ஓரத்தில், கழுத்தில் ரத்தக்கூழுடன்'. அதற்கு மேல் முடியவில்லை இருவருக்கும். பேசாமல் திரும்பிவிட்டோம்.

முடிந்த வரை விழித்திருந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தோம். NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. மூன்று மணியளவில் அசதியில் கண்ணயர்ந்துவிட்டோம். காலை ஆறு மணிக்கே புறப்பட்டேன். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.

சாலை முழுதும் வெறிச்சோடி இருந்தது. மரின் டிரைவ் மும்பையின் கிரிடங்களில் ஒன்று. பெடெர் சாலையிலிருந்து மரின் டிரைவ் திரும்பியதுமே, தூரத்தில் எழும்பிய ஓபராய் ஹோட்டல். அதனுள் பதினாறாம் அடுக்கில் … சூசன்?

'இல்லை. அவள் அங்கு இல்லை. அந்தக் கிறுக்கு, பெரிய வாக்கிங் சென்று, ஹோட்டலுக்குள் நுழைய முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியானால் போன் பண்ணுவாளே. ஐயோ, மூளையே, கொஞ்சம் நேரம் தர்க்கரீதியாக சிந்திக்காமல் இரேன்'.

மரின் பிளாசா என்ற ஹோட்டல் அருகிலேயே காரை நிறுத்திவிட்டார்கள். ஏகப்பட்ட கெடுபிடி. என்னைபோன்ற பலர் உறவினர், நண்பர்களை ஒபராயில் தொலைத்துவிட்டு, கையறு நிலையில் முழித்துக்கொண்டு இருந்தோம். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆபிஸ் P.R.O. வும் வந்துவிட்டு இருந்தார். எனக்கு 'இதெல்லாம் சகஜமப்பா' பாணியில் காக்கியில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மகாராஷ்டிர போலீஸ் மீது நம்பிக்கை சிறிதும் இல்லை. சிறிது நேரத்தில் என்.எஸ்.ஜி. வந்தது.

யாருக்கும் ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சேனல்கள் தங்கள் அனுமானங்களை, வழக்கம் போல், செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தன.

அப்புறம், ஒரு D.G.P. பரிந்துரையில், ஹோட்டல் அருகில் செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு மிக சூடாகவும், புகையினால் தொண்டை எரிச்சலும் இருந்தது. ஓபராயின் பெண் ஒருத்தி, ஒரு ராணுவ வீரருடன் அமர்ந்து விருந்தினர் பட்டியலைக் கலந்தாலோசித்து, உறவினர்/நண்பர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல, மெல்ல, அச்சத்துடன் அவளை அணுகி 'சூசன் ஜார்ஜ்; ரூம் நம்பர் 1617 ' என்றேன். என் வாழ்வின் மிக மிக அதிகமான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு, உதட்டைப் பிதுக்கி, சற்று சோகத்துடன் 'அவள் மேலே இருக்கிறாள்' என்றாள்.

'இஸ் ஷி அலைவ்?'

'டொன்னோ. நிறைய பேரை கொன்று விட்டார்கள். பல பேர் பணயக்கைதிகளாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறோம்'

'எப்படி மீட்கப் போகிறீர்கள்?'

'என்.எஸ்.ஜி.யை நம்புங்கள். நிச்சயம் நாங்கள் செய்வோம்' என்றார் இராணுவம்.

இதற்குள் சில உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள். சிலருக்கு உயிரும் இருந்தது. ஒரு அம்புலன்சின் மூடும் கதவில், கடைசியாக சூசனின் வெளிர் நீலச் சூடிதார் தெரிய, விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். ஜெ.ஜெ.ஹாஸ்பெடல் சென்றடைந்து, அவர்களை பிடிக்கையில், சூசன் எங்கோ உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்தாள். விசாரித்ததில், 'நிலைமை மிக மோசம் என்றும், பிழைக்க வாய்ப்பு இருபது விழுக்காடு' என்றும் சொன்னார்கள். ஆயினும், அந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ஆற்றிய பணியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இது அல்லவா சேவை. பிறகு வாழ்வில் அரிய கணங்களில் ஒன்றாக பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினேன்.

சூசனின் தந்தைக்கும், அவளின் ஆதர்ச கணவனுக்கும் (ஹர்மிசன்) தொலைபேசியில் "ஒன்றும் கவலைப்பட வேண்டாம்" என்று சொன்னதற்கு, மற்றவர்கள் திட்டினார்கள். இப்படியே கழிந்த அடுத்த பதினெட்டு மணி நேரங்களுக்குப் பின் ஜெ.ஜெ.வின் ஐ.சி.யு. வழியே ஒரு நல்ல செய்தி 'அவள் பிழைத்துவிட்டாள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.'

அவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது. 'நிறைய இரத்த இழப்புடன் சேர்க்கப்பட்ட அவள் பிழைத்தது ஒரு மருத்துவ விந்தை மற்றும் அவளுடைய வாழ்வின் மீதான பிடிப்பு' என்று அவர்கள் கூறினார்கள்.

இன்று காலை சென்றபோது அவளுக்கு சுய நினைவு திரும்பியிருந்தது. மிகச் சோர்வுடன் என் கைகளைப் பிடித்தவள் கைகளில் என் முகத்தை புதைத்து .....வேண்டாம், ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒரு வினோத நியதி.

இப்போது பார்க்கிறேன் குருபெயர்ச்சி பலன்கள்: "மகர ராசிக் காரர்களுக்கு மேற்கில் இருந்து வரும் விருந்தாளிகளால் மிகுந்த மனக் கிலேசமும், அலைச்சலும் அமையும். உங்கள் உதவும் மனப்பான்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாலும், கடவுள் பக்தி மிகுந்த (!) உங்களுக்கு தன்வந்திரி யோகம் இருப்பதால் இந்தக் கவலையிலிருந்து சீக்கிரமே மீள்வீர்கள். புதிதான உறவுகள் பிறக்கும்'.

எப்போதும் ஜோசியத்தில் ஆர்வமுடைய அனு, 'ஐயோ, மிகச் சரியாகத்தான் போட்டிருக்கிறார்கள்.' என்றாள்.

Tuesday, November 25, 2008

படிக்காதவன்


முதலில் 'வாசிப்பு' பற்றி என்னையும் மதித்து எழுத அழைத்த லேகாவுக்கு மிக்க நன்றி. பெரிய ‘தலை’ங்க பட்டியலில் நானும் சேர்க்கப்பட்டேன். சரி விஷயத்துக்கு வருவோம்.

வீட்டில் ஆங்கிலத்துக்கு மிக முக்கியத்துவம் தருவார்கள். ஆதலால் ஹிந்து நாளிதழ், சூடான பில்டர் காபியுடன் பிரதி தினம் துவங்கும். அப்பா விளையாட்டுப் பிரியர். கடைசிப் பக்கத்திற்கு முந்தைய (அப்போதெல்லாம்) பக்கம் அவருக்குத்தான் போகும். அக்கா பெரிய மனுஷி போல் முதல் பக்கம் தலைப்புச் செய்திகள் படிப்பாள். எனக்கு மீதமாவது, 'Murugan run over by lorry' போன்ற பரபரப்புச் செய்திகளும், வெள்ளிக்கிழமைகளில் வரும் 'Grand Gala opening at Satyam/Alankar/Abirami' போன்ற சினிமா செய்திப்பக்கங்களும்தான். ஆங்கிலப் புலமையைக் காட்டுவதற்காகவும், உச்சரிப்பு நளினங்களுக்காகவும், மாடிப்படிகளில் அமர்ந்து சற்று உரக்கவே படிப்பேன். அப்பா ஒரு வசீகரமான பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, புன்னகையுடன் நகர்ந்த நாட்களவை. ஆயினும், வீட்டில் தமிழுக்கும் சமமான இடம் உண்டு. என் தந்தை தனது கல்லூரி தினங்களில், சுலப மதிப்பெண்கள் பெற வாய்ப்புடைய பிரெஞ்சு மற்றும் ஸமஸ்க்ரிதம் தவிர்த்து 'செந்தமிழ்' படித்துத் தேறியவர்.

நான் தமிழில் படித்த முதல் நாவலே தமிழின் மிகப்பெரிய சரித்திர நாவலாகிய 'பொன்னியின் செல்வன்' தான். என் அக்காவும் அப்பாவும் 'பழுவேட்டரையர், மதுராந்தகன், அருள்மொழி' என்று மணிக்கணக்கில் சுவாரஸ்யம் குறையாமல் விவாதம் செய்வது பொறுக்காமல் 'இதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்' என்ற வீம்பில் படிக்கத் துவங்கி, என்னை மறந்தேன். அப்போது சென்னையில் மீதமாயிருந்த வெகு சில ஏரிகளில் வேளச்சேரி ஏரியும் ஒன்று. என் நண்பன் வீட்டுக்கு சைக்கிளில் ஏரிக்கரை மேட்டில் இலாகவமாகப் போகையில், அதை வீரநாராயண ஏரியாகவும், சைக்கிளை குதிரையாகவும், என்னை வந்தியத்தேவனாகவும் பாவித்து சென்ற அற்புத நாட்கள். அந்தத் தாக்கத்தில் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு கதைகளையும் படித்து முடித்தாலும், பொ.செ. ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை. அலைஓசை பின்பு படித்தாலும் ஒ.கே. என்ற நினைவு மட்டுமே.

இதற்குள் என் அக்காவின் provocation என்னை சுஜாதாவை நோக்கித் திரும்ப வைத்தது. முதலில் படித்தது 'நிர்வாண நகரம்'. அடுத்தடுத்து, 'நைலான் கயிறு, கொலையுதிர்காலம், பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நடுப்பகல் மரணம், ஏறக்குறைய சொர்க்கம், சொர்கத்தீவு, காகிதச் சங்கிலிகள்' என்று கட்டம் கட்டி, துரத்தி துரத்திப் படித்தேன். அவருடைய அறிவியல் புனைவுகள் என்னை முற்றிலும் வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. பிறகு கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவ்வப்போது கணையாழியிலேயே படிக்கத் தொடங்கினேன். இன்றளவும் என்னை பெரும் ஆளுமை செய்வது அவரது எழுத்துக்கள்தான். ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு அவர் தந்தது நம்ப முடியாத தன்னம்பிக்கை. ஏதோ ஒரு சிறுகதையில் வரும் 'சில்லறை அமெரிக்கத் தனங்கள்' என்று passing lines எழுதியது, IIT / Pilani படித்து அமெரிக்கா சென்ற என் பெரியம்மா பையன்களின் சேட்டைகளை எளிதில் ஒதுக்க உதவியது. அவரது crisp நடை தமிழுக்கு அவர் அளித்த மிகப்பெரும் கொடை. அவரது துரித கதி நடையில், இலக்கியம் படைப்பது சிரமம்தான். அதனால் அவருக்கு கிடைக்கவேண்டிய இலக்கிய அந்தஸ்து சர்ச்சைக்குரியதாகவே இன்றும் உள்ளது ஒரு துரதிர்ஷ்டம். சிவாஜி கணேசனை ஒதுக்கித் தள்ளி M.G.R. போன்ற நடிகர்களுக்கு 'சிறந்த நடிகர்' கொடுத்த தேசம் அல்லவா நமது தேசம். ஆயினும் சுஜாதாவின் மிகப் பெரும் ஆற்றல் அவரது சிறுகதைகளே. அவரே ஒப்புக்கொண்டபடி, நாவல்கள் எழுத முக்கிய காரணிகளான கள அனுபவமோ, வலியோ, அதற்கான திட்டமிடலோ, நேரமோ அவரிடம் ஏதுமில்லை. எஞ்சியவை தொடர்கதைகளே. ஆனால், தமிழைப் படிப்பது ஒன்றும் கௌரவரக் குறைச்சல் இல்லை என்ற சித்தாந்தத்தை இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு அவர் அடிக்கோடிட்டு உணர்த்தியதை மறுக்க முடியாது.

அட போறும்பா சுஜாதா புராணம்; மேலே செல்லவும் என்றால்... நம்புங்கள் ஒன்றுமே இல்லை. அவர் மரணம் அடைந்த பின், என்னதான் நடக்கிறது என்று பார்க்கவே, கண்ணைக் கட்டிக்கொண்டு இந்தப் பதிவுலகில் நுழைந்தேன். அப்படி என்றால் வேறு எதுவுமே படிக்கவில்லையா என்றால், எப்போதோ ஜானகி ராமன் (மரப்பசு, மோகமுள்) படித்தேன். லா.ச.ரா, கி.ரா., ஜெயகாந்தன், வண்ணதாசன், பிரபஞ்சன் இவர்களின் சிறுகதைகளை அவ்வப்போது வெகு ஜனப் பதிரிகைகைகளில் படித்து அவர்களின் வீச்சைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதில் பிரபஞ்சன் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். எஸ்ராவின் தொடர்களை ஆனந்த விகடனில் படித்து அவருக்குப் பெரிய விசிறியானேன். ஒரு அடிப்படை நேர்மை, உண்மை அவர் எழுத்தக்களில் தென்படுவதாக உணருகிறேன்.

கடந்த ஆறு மாதங்களில் தமிழ் இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நாட்கள் அறியாத பல விடயங்கள் தெரிய வந்தன. தமிழின் மிகச் சிறந்த நாவல் 'புயலிலே ஒரு தோணி' என்றும், ஏறக்குறைய இரண்டாம் இடம் 'நாளை மற்றொரு நாளே' என்றும் தெரியவந்தது. இது தவிர, அய்யனார், ஜ்யோவ்ராம், லேகா, எஸ்ரா எழுத்துக்களிலிருந்து வண்ணநிலவனின் 'கடல் புரத்தில்', 'எஸ்தர்' 'ரைநீஸ் ஐயர் தெரு', நகுலனின் கதைகள்/கவிதைகள்/டயரி, தி.ஜா.ராவின் 'அம்மா வந்தாள்', பாமாவின் 'கருக்கு', கோபிகிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', சம்பத்தின் 'இடைவெளி', ஜெமோவின் 'ரப்பர்', 'விஷ்ணுபுரம்', ஏழாம் உலகம்', 'காடு', எஸ்ராவின் 'நெடுங்குருதி, யாமம், உறுபசி, உபபாண்டவம்' சாருவின் 'சீரோ டிகிரி', கி.ராவின் 'கோபல்ல கிராமம்', ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', நாஞ்சில் நாடனின் 'எட்டுத் திக்கும் மத யானை' என்று பெரும் பட்டியல் என் முன்னே விழுந்தது.

முன்பே எஸ்ராவின் உறுபசி, விழித்திருப்பவனின் இரவுகள் படித்தாயிற்று. அண்மையில் தீபாவளி நிமித்தம் சென்னை வந்தபோது, ஜ்யோவை பாடாய்ப்படுத்தி, தி.நகரில் உள்ள New Lands Bookshop சென்று நிறைய புத்தகங்கள் வாங்கினேன். அவர் பொறுமைக்கும், புத்தகங்கள் பரிந்துரை செய்ததற்கும் நன்றி சொல்ல இந்தத் தருணம் உதவுகிறது. மேல் கூறிய புத்தகங்களில் சில ; கூறாத சில கிடைத்தன. ஒரு பெரிய பார்சலுடன் ஊர் வந்து சேர்ந்து, புதுப் புத்தகங்களை, பள்ளிச் சிறுவனின் ஆர்வத்துடன் தடவிப் பார்த்துக்கொண்டு, படிக்காமல் இருக்கிறேன். இது வரை படித்தது: கடல் புரத்தில், என்பிலதனை வெய்யில் காயும் (நாஞ்சில் நாடன்). படித்துக் கொண்டிருப்பது யாமம். அண்மையில் படித்ததில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை ஜெமோவின் 'ஊமைச் செந்நாய்'.

இதற்கு முன்பே எஸ்ராவின் பரிந்துரையில் தேவதச்சன் படிக்க ஆரம்பித்தேன். 'கடைசி டினோசர்', மற்றும் 'யாருமற்ற நிழல்'. மிக மிக வசீகரமாகவும், மாயமாகவும், அடர்கானகத்து யுகலிப்டஸ் கமழும் காற்றை சுவாசிப்பது போன்றும் இவர் கவிதைகள் எனக்கு போதை தருவது உண்மை. அலுவலகம் அடைய பத்து நிமிடங்கள் முன்பு மற்றவர் Economic Times மனப்பாடம் செய்கையில், ஏதோ ஒரு பக்கம் பிரித்து ஒரே ஒரு கவிதையைப் படித்தால், மற்றவரின் நெற்றிச் சுருக்கங்களுக்கு நடுவே, நமது பெரிய புன்னகை மிகப் பிரகாசமாக இருக்கும் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

இன்று படித்தது:

நாற்பது வினாடிகள்

நாற்பது வினாடிகள் நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் பின்னால் நின்றோ
முன்னால் நின்றபடியோ அல்ல
இடது பக்கத்திலிருந்து.
நடுமதியத்தில்
அவள் ஒரு இரண்டு சக்கர வாகனத்தை
அனாயாசமாய் ஓட்டியபடி மறைந்தாள்.
அந்த நாற்பது வினாடிகள் நாற்பது வினாடிகளுக்கும்
அதிகமாக இருந்தன.
ஏழு வயதுச் சிறுவன் அப்பாவின் சட்டையைப்
போட்டுக்கொண்டிருப்பது போல்
அந்த நாற்பது விநாடிகளை அணிந்தபடி
நின்றிருந்தேன்
என் கால் விரல்கள்
அப்போது எனக்குத் தெரியவில்லை
இப்போதும் எனக்குத் தெரியவில்லை


இப்படியாக வாழ்வும், வாசிப்பும் செல்கிறது. நீண்ட பதிவை தயவு செய்து பொறுத்தருளுங்கள். பதிவர்களின் எழுத்துக்கள் பற்றியும் படித்த ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றியும் பிறிதொரு தருணத்தில் எழுதும் யோசனையும் (எச்சரிக்கை!) உள்ளது.

மீண்டும் நன்றிகள் லேகா மற்றும் நரசிம், பரிசல், தாமிரா இவர்களுக்கு (இவர்களின் தொடர்பதிவுகள் மட்டுமே படித்தேன்). அடுத்தது யார் என்கிறீர்களா? பிரமிக்கவைக்கும் வாசிப்பு உள்ள வேலன் அண்ணாச்சிதான். அவருடன் ஒரு மாலை, இரவைக் கழிக்கும் அரிய வாய்ப்பு நேற்று கிடைத்தது. சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. அவர் மட்டுமே பேச வேண்டும்; நான் கேட்பதுடன் நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது என்று.

ஓவர் டு வேலன்.

Thursday, November 20, 2008

துயிலும் பெண்

எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா. அவரது இணையதளமும் எனக்குப் பிடித்த இணையங்களுள் ஒன்று.

அண்மையில் எஸ்ரா சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதை பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.

"சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன். இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்."

கதை எனக்கு வசீகரமாகவும், பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது. இதனை மொழியாக்கம் செய்து பார்த்தால் என்ன என்று முயன்றேன். (சொந்தக் கற்பனை வறட்சி நிலவரம் என் கவிதைகள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்).

கதை படிக்க ஆசைப்படுவோர் இங்கு செல்லவும்: துயிலும் பெண்

பெரும் ஊக்கமளித்து இணையத்தில் என் பெயரையும் குறிப்பிட்ட, நான் மிக மதிக்கும் எஸ்ராவுக்கு நன்றிகள் பல.

இது பெரும் நாவலாக அல்லாது, இரண்டு பக்க சிறுகதை மட்டுமே என்பதாலும், மொழியாக்கத்தின் மொழியாக்கம் (அரேபிய-ஆங்கில-தமிழ்) என்பதாலும் "வருமொழி, நிலைமொழி, மொழியாக்கத்தில் வன்முறை" என்றெல்லாம் பெரிய விடயங்கள் பற்றி வெளிச்சம் காட்டிய வளர்மதியின் நினைவுகளைக் கிடப்பில் போட்டுவிட்டேன். பிழைகளை அன்னார் மன்னிப்பாராக.

Wednesday, November 12, 2008

சாயும் பொழுதும், சாயம் போதலும்


சிகப்புக் கழுத்துப் பட்டையில்
சிந்திய காப்பித் துளிகள்;
மாலையில் மனைவி
சுருட்டியபடியே
கறை போகாதென்றாள்,
காப்பி கறையை பார்த்தபடியும்
லிப்ஸ்டிக் சாயத்தை
ஸ்பரிசித்தபடியும்.
சுருட்டப்பட்டது
பேராண்மையும் கூட;
காலை சுவைத்தது
இரவில் கசந்தது.

Monday, November 10, 2008

குறக்கடவுள்


ருசிக்குச் சாப்பிடாது
பசிக்கு மட்டும் உண்ணும்
நரிக்குறவனை உன்
ஞான குருவாக்கிக்கொள்
சாதியம் களையும்
சாத்தியங்கள் அறிந்தவன்
அய்யர் வீட்டு அவியல்
அய்யங்காரின் தயிர்வடை
செட்டி நாட்டு அப்பம்
முதலியாரின் முறுகல் தோசை
பிள்ளைமார் வீட்டு பணியாரம்
ஏதுமில்லை என்றால்
காடை கவுதாரி
எல்லாமே ஒன்றுதான்
உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.
அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த
அவனன்றோ கடவுள்
(கீற்று.காமில் பிரசுரமானது)

Friday, October 24, 2008

தினசரி 2 காட்சிகள்


வழமை நேர்த்தியில்
ஜெட் ஏர்வேஸ் பெண்கள்
சிரிப்பில் மென்சோகம்
வேலை இழக்கும் அச்சமோ!

அவர்களுக்குப் பின்
நிதமும் சதி தீட்டும்
பணக்காரக் குடும்பம்

வித்யாவுக்கும் கரீனாவுக்கும்
இடையில் நின்ற
அதிர்ஷ்டசாலி குடும்பஸ்தன்

அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும் ராஜ்

பங்குகளை விட வங்கிகளே தேவலாம்
பத்துக்குமேல் கிடைக்கிறதே

இந்தப் பக்கம் ஒரு வாரமாக
நின்றுகொண்டிருக்கும் பெண்ணின்
DLJ இன்னமும் நழுவவில்லை

மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி

Wednesday, October 22, 2008

இயற்கை வைத்தியம்


பிரதான சாலையில்
உறைந்திருந்த போக்குவரத்தில்
வல ஓர இடம் பிடித்து
ஊர்ந்து வந்தேன் இக்காலை;
பெய்திருந்த சிறுமழையில்
நடுச்சாலை எங்கும்
புதுப் பச்சையில்
மிளிர்ந்த செடிகள்;
முத்துக்கள் உமிழ்ந்து
காற்றுடன் பேசிய புற்கள்;
தலை சாய்த்து
நலம் விசாரித்த
சிகப்பு ரோஜாக்கள்;
இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது

Thursday, October 9, 2008

உயிரோசையில் பிரசுரமான 2வது கவிதை


நிழலின் நிஜங்கள்

அந்தத் திருமணப் புகைப்படத்தில்
கண்ணை மூடிவிட்டதாகவும்
ஓரந்தள்ளி விடப்பட்டதாகவும்
கொம்பு முளைத்திருப்பது பற்றியும்
சலித்துக் கொண்டனர் நண்பர்கள்
குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்
அவனைவிட உயர்ந்திருப்பேன்
என்று எண்ணியபடி
அவள் கண்களில்
ஈரத்தைத்
தேடினேன்
(உயிரோசை 22.09.08 மின்னிதழில் பிரசுரமானது)

Thursday, September 25, 2008

'ஈத் முபாரக்'


ஒரே பிறையைத்தான்
இருவரும் பார்க்கிறோம்
களங்கம் அதிலில்லை தோழா
காணும் நம் கண்களில்;

செடிகளின் பசுமை
உனக்குப் பிடிக்கிறது;
நான் உடுத்திக்கொண்டால்
தீண்டா நிறம் உனக்கு

வெடி வெடித்தவன்
தலையில் குல்லாவும்
தாடையில் தாடியும் இருந்தால்
நாங்கள் அனைவரும்
மொட்டை போட்டு
முகத்தில் முழுச்சவரம்
செய்ய வேண்டுமா?

பிடித்த நடிகன் முதல்
விளையாட்டு வீரன் வரை
'கான்' களின் காலெண்டர்
உன் வரவேற்பறையில்;
என்னை வரவேற்க மட்டும்
என் கடவுளோ உன் கடவுளோ
குறுக்கே நிற்கிறார்

எதிர் வீட்டில் என்னாரை (NRI)
அண்டை வீட்டில் அமெரிக்கன்
என்று பெருமைப் படுகிறாய்
அருகில் என்னை மட்டும்
அண்டவிடாமல் செய்கிறாய்

எங்கள் இல்லங்களில்
வெடிகுண்டு தயாரிப்பது
குடிசைத் தொழிலென்று
எண்ணுகின்றாய் போலும்
குண்டுகளுக்கு மதமில்லை
அவைகள் எல்லா
உடல்களையும் சிதறடிக்கும்
என்றுனக்குத் தெரியாதா?

நீயொன்றும் மதவெறியனன்று;
நீ ‘ஹாப்பி கிறிஸ்மஸ்’
பாடுவதைப் பார்த்திருக்கிறேன்
நானும் தான் நண்பா
'கணபதி பப்பா மோரியா' என்றேன்
நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும்
'ஈத் முபாரக்' என்று.


கீற்று.காம் மின்னிதழில் பிரசுரம் ஆன கவிதை.
பின்னணி தெரிய வேண்டுமென்றால் புதிய மாதவியின் கட்டுரைக்குச் செல்லவும். அதைப் படித்து, அது உண்மைதான் என்று உறுத்தியதால் 'கீற்று'க்கு ஒரு பின்னூட்டமாக எழுதிப்போட்டேன். அவருக்கும், கீற்று.காம் இதழுக்கும் நன்றி.

Tuesday, September 23, 2008

உயிரோசையில் பிரசுரமான கவிதை



உயிர்மை.காம் (உயிரோசை இதழ்) மின்னிதழில் பிரசுரமான எனது முதல் கவிதை.


அலைவரிசை


அலைவரிசை மாற்றங்களில்
நிராகரிக்கப்பட்ட பாடலொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த வரிகள்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்
அலைவரிசை மாற்றங்களின்
சாத்தியக்கூறுகளில்


(நன்றி - உயிர்மை.காம்)


Thursday, September 18, 2008

இன்னும் சில ஹைக்கூக்கள்


**********************************
எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்
**********************************
புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்
**********************************
ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது
**********************************

முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 21 '

**********************************

Tuesday, September 9, 2008

ஆராய்ச்சி மணி


பட்டுபுடவை தந்த மெழுகை
கதர் வாங்கி விளக்கேற்ற
தத்தம் கழுத்தில் தொங்கிய
பல வண்ண சுருக்குக் கயிறுகளுடன்
மேல்தட்டு அதிராமல் கைதட்டியது;
கோடீஸ்வரர்கள் இன்னும்
சில கோடிகள் ஈட்ட
அரசின் புதிய திட்டம்
இனிதே துவங்க
மூன்றுமுறை மணியடித்த ஓசை!
முதல் மணி அடித்தபோது
யாரோ ஒரு உழவன்
சுருக்கை சரிபார்த்தான்
இரண்டாம் மணி அடிக்கையில்
நகரின் துப்புரவுத் தொழிலாளி
நாறும் பாதாளத்தில் பிரவேசித்தான்
மூன்றாம் மணி ஒலிக்கையில்
கல்லுடைப்பவளின்
மூன்று வயது பிஞ்சு
மூடப்படாத ஆழ்கிணறில் வீழ்ந்தது
உயர் தேநீர் பருகுகையில்
நுனிநாக்கில் மொழிவிளையாட
அடிவயிற்று பிரளயங்களுடன்
எதிர்கொண்டது ஆராய்ச்சி மணிக்கும்
வழியில்லாத பாவியினம்

'கீற்று' இல் பிரசுரமான கவிதை. (நன்றி - keetru.com)

Thursday, August 28, 2008

அய்யனாருக்குப் பகிரங்கப் பின்னூட்டம்

முதலிலேயே டிஸ்கி
நண்பர்களே, இந்தப் பதிவு சற்று தீவிர ஆனால் சுவாரஸ்யமான இலக்கியத்தைப் பற்றி பேசும். எனக்கு லக்கி மற்றும் பரிசலின் சுண்டியிழுக்கும் ஆற்றல் இல்லாததால் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன் 'இது உங்களுக்கு அலுப்பைத் தரலாம்'. ஆதலினால் நீங்கள் இப்போதேயோ, ஐந்தாறு வரிகளுக்குப் பின்னாலோ தாராளமாக விலகலாம். இத்தகைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்து முழுதும் படித்து, நிருபணமாக பின்னூட்டமும் அளிப்பவர்களுக்கு சமீபத்தில் (கி.பி.2015) வெளிவர இருக்கும் எனது கவிதைப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

இனி உங்கள் விதி.

சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...

பார்க்க:http://ayyanaarv.blogspot.com/2008/08/blog-post_21.html

Magical Realism

முதலில் படித்து விட்டு தலை சுற்றியது. பேசாமல் 'சிறப்பு அல்லது நன்று' சொல்லிவிட்டு நகர்ந்தோடி பரிசல்/லக்கி பதிவுகளில் கும்மி அடிக்கலாமென்று நினைத்தேன். ஒண்ணுமே புரியல அய்ஸ். வசந்த் மொழியில் சொல்லவேண்டுமென்றால் 'I sway boss!'.

உள்ளுக்குள் ஒரு குரல் (பின் தொடரும்) 'இன்னிக்குத் தப்பிக்கலாம்; இன்னும் போகப்போக என்ன செய்வதாக உத்தேசம்?; இல்ல ஆ.வி./ஜு.வி. என்று செட்டில் ஆகிவிட எண்ணமா?' என்று வினவியது. தன்மானம் என்ற ஒன்று வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்தது. சரி பின்னூட்டத்திலாவது ஏதாவது clue கிடைக்குமென்று பார்த்தால் ஆளாளுக்கு என்னென்னவோ எழுதி இரவில் தூக்கம் போயே போச்சு. அண்ணாச்சி எழுதியது மட்டும் புரிந்தது/பிடித்தது.
(“வாசித்துக் கிழித்தேன் டவுசரை; மெதுவாய், மிக மெதுவாய், மிக மிக மெதுவாய்,, கிழிந்த டவுசரைத் தைக்க முடியாமல் உறைந்து போனேன்”).

ஒரு வழியாக, தேர்வை எதிர்கொள்ளும் மாணவனின் தீவிரத்துடன், வலையில் மேய்ந்தேன். மாஜிக்கல் ரியலிசம் என்பதற்கு 'மாய யதார்த்தம்' என்று பெயர் சூட்டினேன் (இதுவும் எங்கோ இலக்கியப்பக்கங்களிலிருந்து சுட்டது தான்). யதார்த்தத்தையும் மாயத்தையும் ஒரு புள்ளியில் சேர்ப்பது; மனித வாழ்வின் புற காரணிகளுடன் அக ஆழங்களைக் கலப்பது; அறிவியல் சார்ந்த இயல்பிய உண்மைகளுடன் உளவியல் சார்ந்த மானுட உண்மைகளின் சேர்க்கை; இவ்வகை இலக்கியங்களில் வாசகியின் பங்கு மகத்தானது. படிக்கும் வாசகியானவள் (உங்கள் கதைசொல்லி போல் ஆணாதிக்கவாதி இல்லை நான்) தான் அதுவரையறிந்த யதார்த்தத்திலிருந்து, கதைசொல்லியின் யதார்த்த நிலையைத் தழுவி நிற்பது; அஃது அவளுக்கு கதையை, அதன் நுட்பத்தைக் கட்டவிழ்க்க உதவும். இது வாசகியின் 'பரிணாமக் கடமை' எனக் கொள்ளலாம். (லேகா/கிருத்திகா : மனதில் கொள்க)

மா.ய. படைப்புகளின் இன்னபிற குணாதிசயங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்:

1) மாற்றுக் கருத்து ('other' perspective)
2) ஒரு குறிப்பிட்ட நாகரிக/வரலாற்று/பூகோளப் பின்னணியில் கதை
இருத்தல்
3) கனவுகளும் கற்பனைகளும் கதையினூடே இருத்தல்
4) சுதந்திர, பின் நவீனத்துவ (ஆஹா, கிளம்பிட்டாங்கையா!) பாணி எழுத்து
5) விளக்கவியலாத நிகழ்வுகள் மிகச் சாதாரண சூழலில் நடப்பதும் மற்றும் கதைமாந்தர்கள் அத்தகைய தர்க்கத்தை மீறும் நிகழ்வுகளை சட்டை செய்யாதிருப்பது

மேலும் உயர்கற்பனைகள் கதையின் பின்புல தளத்தையே கேள்விக்குறி ஆக்குதல்; வினையும், விளைவும் தலைகீழாதல் (சோக நிகழ்விற்கு முன்பே கதை மாந்தர் விசனப்படுதல்); காலத்தை உருமாற்றல் அல்லது சுருக்குதல் என்று அனைத்து தகிடு தத்தங்களும் செய்யலாம், மிக வசிகரமாக. முடிவாக அழகிய நீதி (poetic justice) வெளிப்படும்.

இந்த அனைத்தையும் ஓரளவு உள்வாங்கிக்கொண்டு மீண்டும் இருமுறை படித்தேன் அய்யனார். Simply awesome. மேற்கூறிய அம்சங்களில், உங்கள் படைப்பில் பெரும்பான்மையான அம்சங்கள் இருந்தது உள்ளங்கை நெல்லிக்கனி. இப்போது சொல்கிறேன் சட்டைக் காலரை நிமிர்த்தியபடி 'நன்று / சிறப்பு'.

பின் குத்து 1 : வளர்/ஜமாலன் போன்றோர் உங்கள் 'சாரா மற்றும் ஜோ'வை பிரித்து மேய்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். உங்கள் நலத்திற்குதான்; வானத்திலிருந்து தரையிறங்கலாம்.

பின் குத்து 2 : நட்பின் உரிமையில் பரிசல் மற்றும் லக்கி பற்றி எழுதியுள்ளேன். அவர்கள் கொடுக்கும் வாசிப்பின்பம் என்னளவில் மிக மிக அதிகமே.

Wednesday, August 27, 2008

பாராமுகம்


அவ்வப்போது
பார்த்திருந்த அவளை
இருமுறை பார்த்தேன்
சென்ற திங்களில்
வெண்மையும் பச்சையும்
இழைந்த ஆடையில்;
இலேசாக சலனம் கொண்டேன்
என்னைப்பார்க்கவில்லை என்றாலும்;
செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலம்தான் என்று
ஆறுதல் கொண்டேன்
பிறகு எப்போதும்
அவளைக் காணாவிடினும்

Thursday, August 21, 2008

கவிதையல்லாத பதிவு...(Blogging Friends Forever Award)


வலையுலகில் நெருங்கிய நண்பர் வட்டம் இல்லாதவன் நான். பின்னூட்டங்களில் பங்கேற்பதும், பின்னூட்டங்களுக்கு நன்றி நவில்வது தவிர்த்து வேறு ஒன்றும் அறியாதவன். பிடித்த கவிதை மற்றும் கட்டுரை தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் அளித்தவர்களில் அருணாவும் ஒருவர். அவர் அறிமுகமானது நான் எழுதிய மழைக் கவிதைக்கு அவர் அளித்த பின்னூட்டம் மூலம்.

ஆனால் திடீரென்று இன்ப அதிர்ச்சி என்ற பெயரில் அன்புடன் அருணா "Blogging Friends Forever Award".... என்ற ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்..மிக்க நன்றி அருணா... நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு. நன்றி மழைக்கும்.
அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா.. (copy paste பண்ணியாச்சி)
1) நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..(சத்தியமா இந்த விளையாட்ட நான் தொடங்கல..)
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..(என் தளத்திற்கு எல்லாருமே புதுசுதான்.. ஆரம்பிக்குது விதியின் விளையாட்டு. தொடர்ந்து படிப்பது நான் மற்றும் நான் மட்டுமே. நாலு பேரா? ரூம் போட்டு தான் யோசிக்கணும். தப்பாக நினைக்க வேண்டாம் தோழர்/ழிகளே! பின்னூட்டம் போட வந்தா 'நண்பன்' என்று சொந்தம் கொண்டாடும் இவனை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உங்களுக்கு கோவம் வரும். இருந்தாலும் விதியின் விளையாட்டு ஹ்ம்ம். மன்னிக்கவும் விளையாட்டின் விதிகள் அப்படி)
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்..(அருணா தானே! அது கொடுத்திரலாம்..)
இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்.. இவர்களை நண்பர்கள் என்பதில் எனக்கு மிக்க சந்தோஷமே..
ஸ்பெயின் நாட்டில் இருந்துகொண்டு எனக்கு இட்லி மஞ்சுரியன் செய்முறை பற்றி விளக்கும் நண்பன், எவ்வளவு கேவலமாய் எழுதினாலும் உடன் வந்து 'சூப்பர்' சொல்லும்
முகுந்த். இவன் பையன் கேஷவும் எனக்கு நெருங்கிய நண்பன். இந்த பதிவை எழுதுவற்குள் இந்தியா வந்துவிட்ட முகுந்த் கொஞ்ச நாட்கள் ஓரளவு free என்பதால் பதிவு போட முடியும் என்று நினைக்கிறேன்.

மிக ஆழமான கருத்துக்களை தெளிவாக விளக்கும் பல கட்டுரைகளை எழுதும் விக்கி எனும் விக்னேஷ்வரன் தான் எனது இன்னொரு நண்பன். பதிவு எழுதும் பெரும்பாலானவர்களை சிரமம் பாராது ஊக்குவிப்பதில் சிறந்தவன். மலேசியாவில் வசிக்கும் நண்பன்.

bee.morgan எனும் பாலமுருகன் தான் எனது அடுத்த நண்பன். சிறியவயதில் நுட்பமான கருத்துக்கள் செறிந்த கவிதைகள் மற்றும் கதை எழுதுபவன். தகுந்த guidance (தமிழில் சரியான வார்த்தை என்ன?) கிட்டினால் பெரிய எழுத்தாளன் ஆகும் சாத்தியங்கள் நிறைய உண்டு.

எனது ஹைகூக்களை விரும்பிப் படிக்கும் இனியவள் புனிதா எனது அடுத்த தோழி. இவரது வலைத்தளம் அழகானது. அழகிய பாடல்கள் இசையுடன் தேர்வு செய்து பதிவு செய்யும் நேர்த்தி சொல்லிவிடும், இது நிச்சயம் ஒரு பெண்ணின் வலைத்தளம் என்று.

விதிகளின் படி, புதிதாய் என் பதிவுக்கு வருகை தந்த என் மதிற்பிற்குரிய சகோதரி திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் தான் ஐந்தாவது தோழி. (சகோதரி தோழியாகவும் இருக்கலாம்). இவரது பதிவுலக அனுபவம் பெரிது. பல தளங்களிலும் (புகைப்படம் மற்றும் கவிதைகள் இவரது சிறப்பு) செயலாற்றுபவர். என் போன்ற புதியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாராட்டும் மனப்பாங்கு கொண்டவர்.

அப்புறம் கடைசியாக என்னை நண்பனாகத் தேர்ந்தெடுத்த அருணாவுக்கு நன்றிகள் பல. Really appreciate your gesture.
பின்குறிப்பு: எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சென்ஷீ, வளர்மதி, பெருந்தேவி போன்றோருடன் நெருங்கிய நட்பு மலரவேண்டும் என்ற ஆசை உண்டு. அவர்கள் எல்லாம் வலையுலகின் ரஜினி,கமல்,விஜய்,அஜித், த்ரிஷா போன்றவர்கள். தூரத்திலிருந்து ரசிக்கலாம்.

Saturday, August 16, 2008

சுதந்திர நாள்


இன்று முக்கியமான நாள்
இதற்காகக் காத்திருத்தலுடன்
நிறைய திட்டமிடலும்
அவசியமாயிருந்தது;
விடுமுறை என்பதால்
நண்பர்களுக்கு அழைப்பு
பிடித்த திரவங்கள்
பட்டியலிட்டு முன்தினமே
வாங்கிவைத்த முன்யோசனை
ஐந்து சானல்களில் பத்து
'திரைக்கு வந்து
சில வாரங்களே ஆன'
திரைப்படங்கள்.
அத்தனையும் இருந்த
இரண்டே தொ.கா.பெட்டிகளில்
பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்
மாலையில் சீட்டுகட்டுடன்
பிடித்த நடிகையின்
அறிவார்ந்த நேர்காணல்
இனிதே கழிந்த இத்திருநாளை
காலைக்கடன்களுடன்
கொடியேற்றி, தேசியகீதம் பாடி
மிட்டாய் விநியோகித்துக்
கொண்டாடிவிட்டோம்
அறுபத்திரண்டாம் முறையாக

Tuesday, August 12, 2008

சிக்னல் சிந்தனைகள்



அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி

**************************************

நிறப்பிரிகை

அவன் அழகாயிருந்தான்
கவர்ச்சியாகவும் தான்;
என்னையும் அவன்
அப்படித்தான்
பார்த்திருக்க வேண்டும்.
ஒருமாதிரி கண்டதும் கா...
பச்சை விழுந்ததால்
விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்

Monday, August 4, 2008

இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து

**********************************
பொறியில் சிக்கிய எலி
புறக்கணிக்கப்பட்ட வடை

**********************************
பின்னிரவுகளில் தேர்வுக்காக
விழித்திருந்ததில் கற்றது
நாய்களின் இரவு மொழி

**********************************
சோப்பு விற்பவன் சொன்னான்
'எல்லாக் கறையும் நீங்கும்'
கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்
கரை வேட்டிகள் அதிகம் புரளுமே

**********************************
விற்கப்பட்ட இருபதில்
சொள்ளமாடனுக்கு மூணு,
பக்ரீதுக்கு மூணு என்று
ஆறு ஆடுகள் மட்டும்
புண்ணியம் செய்திருந்தன

**********************************

Wednesday, July 30, 2008

வானிலை அறிக்கை மற்றும் வாழ்வு கலை கொண்டாட்டம் (அ-கவிதை)

இணைப்பு தளர்ந்த
எல்சீடி திரையென
பொதுவாய் கறுத்தும்
அவ்வப்போது
ஒளிக் கீற்றுடனும்
உபாதையில் வானம்;
வெளிவந்ததைக் கொட்டியபின்
துடைத்த மேகங்களையும்
துரத்தியபின்
எல்லாம் சரியான வானத்தில்
புதிதாய் தரவிறக்கம் செய்யப்பட்ட
(பின்னால் வைரஸ் தாக்கக்கூடும்)
ஒளிரும் கர்சராய் சூரியன்;
தகிக்கிறது சாலை ;
நவீன ஓவியம் முறைக்க
உள்ளே நுழைந்தோம்;
பொழுது கழியும் ஆனந்தமாக;
ரசிப்போம் மூடிய கண்களுடன்
ஏசியின் உறுமலுடன்
தவழ்ந்து வரும் மெல்லிசையை;
இளமஞ்சள் திரவத்தைப் பருகுவோம்
வெளியுலுள்ளவர்களைக் கவனியாமல்;
செயற்கை ஒளி லேசாகக் கவிந்த
இந்த ஞாயிறு நன்றாக நினைவிருக்கும் -
உன்னை வெகு நாட்களுக்குப்பின் சந்திப்பதால்.

பின்குறிப்பு:

ஒரே நாளில் 'வளரின்' மொழிபெயர்ப்பு, சுந்தர் கவிதை மற்றும் அய்யனார் படித்த ஜெ.கே.யின் 'reverse' உத்தி எல்லாம் படித்து ‘வானிலை மாற்றம்’ எழுத முற்பட்டதால் வந்த விளைவு. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களாக.

Friday, July 25, 2008

இன்னும் சில ஹைகூக்கள்


சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்

வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்

விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்

Saturday, July 19, 2008

பாமரோமேனியன்

உன்னதமாய் வாழ்ந்து
அகாலமாய் வீழ்ந்தவன் நான்
துரோகத்தின் வலி இன்னமும் மீதமுள்ளது
எனக்குப்பின் பிறந்தவன் தேவனாகி விட்டான்
முன்பைவிட வேகமான கால்களும்
நீண்ட நாவும் வலுவான பற்களும்
கூர்மையான நாசியும் என்னிடம் இப்போது
முதுகைப் பற்றி ....பிறகு சொல்கிறேன்
இப்போதெல்லாம்
சில வருடங்களிலேயே இறந்து விடுகிறேன்
உடனே பக்கத்துத் தெருவிலோ ஊரிலோ
பிறந்தும் விடுகிறேன்
கொலைகாரர்களையும் கத்தியையும்
கண்டால் உன்மத்தம் ஏறுகிறது
அவர்களை எளிதில்
என்னால் அடைய முடியும்
ஆயினும் சிலர் முதுகில் தடவும்போது
பயமாகத்தான் உள்ளது
என் வரலாறு அப்படி;
பெயர் சொல்லவே
அஞ்சுவர் முன்பெல்லாம்;
இப்போது கூப்பிடுவது என் புது எஜமானன்
நான் தாவியோடிச் சென்றடைய
பூரிப்புடன் சொல்கிறான்
'சீசர் ரொம்ப சூட்டிகை'
வாலை மெல்ல ஆட்டத் துவங்கினேன்

Monday, July 14, 2008

நாமொழிகள்

நாமொழி-1
இருபுறமும் இரைச்சலுடன்
விரையும் வாகனங்கள்
இன்று ஏனோ அறவே இல்லை;
எந்தத் தலைவர் மறைவோ ?
சாலை மறியல் போராட்டமோ ?
என்ன ஜாதி மதக் கலவரமோ ?
கிட்டிய அரிய வாய்ப்பில்
பேசிக்கொண்டே இருந்தன
நாள்முழுதும் ஆயிரம் நாவுகளில்
எதிரெதிரே இருந்த
இருபத்தியிரண்டும்
அறுபத்திநாலும்

நாமொழி-2
நெடுஞ்சாலையில்
விரைந்த நான்;
சரசரவென்று முந்தி
சாலை தாண்டிய நாகம்;
சற்று தூரம் விரைந்து
வெறித்து நோக்கியது;
படமெடுக்க மறந்த
உறைந்த கணங்கள்;
துருத்திய அதன் நாவிலிருந்து
தற்காலிகமாகப் பெற்ற
பார்செல் நாவிலறிந்தது
எம் பாதை குறுக்கிடுவது
இது முதலுமன்று
கடையுமன்று

Thursday, July 10, 2008

மேலும் சில ஹைகூக்கள்

கருவாட்டுச் சந்தையிலே
உயிருள்ள இரு மீன்கள் !
அசைவம் பழகியது
அன்று முதல்தான்.


தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்


கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.


காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி

Friday, July 4, 2008

முன் அமைதி




ஆறாம் தளத்து வீட்டில்
முப்புறமும் ஜன்னல்கள்
வேறு கோணங்களில்
ஒரே காட்சியுடன்;
அலைகளற்ற கடலும்
மேகமற்ற வானும்.
கண்கள் விரிந்த என்னிடம்
கடலிலிருந்து
கைப்பற்றிய நிலமென்றான்.
கனிமநீர் தித்தித்தாலும்
உணவு சற்றே கரித்தது
என் ரத்தக் கொதிப்புடன்
அமிலங்களின் சங்கமத்தை
வயிற்றில் எதோ எரிச்சல்
என்று எண்ணியிருக்கக் கூடும்.
இறங்கி வருகையில் அவன் மகள்
சுனாமியில் முதலெழுத்து
ஓசையற்றது என்றாள்

Monday, June 30, 2008

ஹைகூக்கள்

காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட

தன்னை மறந்து சல்யூட் அடித்தார்
போக்குவரத்து காவலர்
ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு

உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்

Wednesday, June 25, 2008

மழைக் கவிதை - 1

நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !

இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து

Wednesday, June 18, 2008

கேள்விப் பசி

தட்டிலே சோற்றுடன்
உண்ண அமர்ந்தாள்.
பருக்கையைப் பார்த்து
பேசத் துவங்கினாள்.
இதற்கு முன்
நெல்லாக எங்கு இருந்தாய்
எந்த வயலில் விளைந்தாய்
எந்த எலியின் வாயிலிருந்து
எப்படித் தப்பினாய்
அந்த எலியை
முழுங்கிய அரவம்
இப்போது என்ன செய்யும்
பதில் கிடைக்குமுன்
அம்மா சாதத்தைப்
பிசைந்து விட்டாள்

Monday, June 16, 2008

எண்கள் யுகம்

எண்களும் பொத்தான்களும்
எங்கும் துரத்துகின்றன
கைபேசியில் பேச; தொலைக்காட்சி காண;
கால்குலேட்டரில் கழிக்க; கணினியை இயக்க;
வங்கியில் பணமெடுக்க;
குளிரைக் கூட்ட - உணவை சூடூட்ட
காற்றை வேகமாக்க - இசையில் லயிக்க
எண்களும் பொத்தான்களும் !
கட்டை விரலிலும் ஆள்காட்டியிலும்
ரேகைகள் அழிந்து எண்களின் பிசுபிசுப்பு !
இப்படி எண்ணியபடி லிப்டில் நுழைந்தேன்
மாறுதலுக்கு நடுவிரலால் ஐந்தை அழுத்த
மூன்று தாண்டுகையில் இருட்டாகி நின்றது
நடுவிரலுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.
கைபேசியை எடுத்தபடி.

Thursday, June 12, 2008

சில ஹைகூக்கள்

எண்ணைக் குழாய்கள்
மண்ணைப் புணர்ந்ததில்
கிழிந்ததென்னவோ
ஓசோன் திரைதான்


பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
'மரங்களைக் கொல்லாதீர்'
என்று துவங்கியது கவிதை

Tuesday, June 10, 2008

இரவின் இறைவன்

மாலை வெய்யிலில்
மஞ்சள் பரிதி

கொஞ்சங் கொஞ்சமாய்
செந்நிறமானான்.

கருநிற இருட்டு துரத்திவிட
மறைந்தே போனான்

எங்கே சூரியன் என
மகளிடம் கேட்டேன்
பகல் சூரியன்
பக்கத்து தேசத்தில்;
இரவு சூரியன்தான்
இப்போதிருப்பது என்றாள்.
காண்பி என்றேன்;
பகலவன் போல
பகட்டுகாரனில்லை
இந்த இரவு சூரியன்;
இருக்குமிடம் தெரியாமல்
இருள் வழங்குவான் என்றாள்.

Monday, June 9, 2008

வலியின் எண்ணிக்கை

கவனமின்றி
நகம் வெட்டியதில்
வலியுடன் அறிந்தது
வலக்கை சுண்டுவிரலை
எதற்கெல்லாம்
எத்தனைமுறை
உபயோகித்தேன் என்று.
கொஞ்சம் யோசித்ததில்
பள்ளிப்பருவம் என்றால்
இன்னுமிருமுறை
கூடி இருக்குமென்று தெரிந்தது.
கடைக்குட்டிகளுக்கான
சலுகைகளும் புரிந்தது
கட்டை விரல் தப்பித்ததில்
ஆறுதலும் வந்தது
பக்கத்து விரல்கள்
விலகியே இருக்க
மற்ற ஐந்து விரல்கள்
வருடிக் கொடுத்தன
அனிச்சையாக அவ்வப்போது

Friday, June 6, 2008

ஆரம்பப் பாடம்


உடற்பயிற்சி மையம்.
உயர்ந்த கட்டணத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
எவ்வளவு ஓடினாலும்
புறப்பட்ட இடத்திலேயே
இருப்பதற்கு

Thursday, June 5, 2008

ஆசையின் விளைவுகள்

கண்ணாடி அலமாரிகளில்
அடுக்கி வைத்த புதுப்புடவைகள்
ஆவலுடன் காத்திருந்தன
பெண்களின் இடுப்பை சுற்றிக்கொள்ள
பின்னால் துவைக்கப்படப்போவது
பற்றி துளியும் அறியாமல்

Tuesday, June 3, 2008

அக்கரை சிகப்பு

இருள் கவியும் நேரம்
அலங்காரத்துடன் நான்
காருக்குள் ஏறுகையில்
பிச்சைக்காரியின் புன்னகை.
செங்கல் சுமப்பவளுக்கு
இடுப்பு பாரம் குறைவுதான்
குறைந்த எடை குழந்தையால்.
குளிர்சாதன இயந்திரத்தைப்
பழுது பார்த்த தொழிலாளி
சட்டை முழுதும் வியர்வை

Thursday, May 29, 2008

சுழற்சி

நின்று கொண்டே
சுற்றிய ரங்கராட்டினம்
சுற்றி இருந்த பெரியோருக்கு
சிறிது நேரத்தில் நின்றது
சுழன்ற சிறார்களுக்கு
சுற்ற ஆரம்பித்தது அப்போதுதான்