சின்ன மகள்
மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன[நவீன விருட்சம் இதழில் பிரசுரம் ஆகியது]