(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27th March 09)
பெண்கள் - கண்ணாடிப் பதுமைகள்
மும்பை எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் மெகா நகரம். Maximum City. நிறைய வியக்கவைக்கும் விஷயங்களும், சில நல்ல விஷயங்களும், பல கெடுதல்களும் ஒரு சேர நடந்தேறும் மிகப் பெரிய ஆடு களம் இந்த நகரம். மிகச் சமீபத்தில் வந்த செய்திகளில் நகரம் ஆடிப் போயிருப்பது உண்மை.
செய்தி ஒன்று : சொந்த மகளை சூறையாடிய தகப்பன்; துணை நின்ற 'துணை'. தந்திரத்தில் வீழ்த்திய மந்திரவாதி என்ற கொடுங்கனவு போலத் தோன்றும் நிஜம்.
செய்தி இரண்டு: ஒரு மாணவி; Very chirpy - Bubbly etc. - படிப்பில் கொஞ்சம் சுமார் ரகம் போல. தேர்வு துவங்கும் முன் காப்பி அடிக்கும் உபகரணங்கள் இருந்ததால் பிடிபட்டு, அவமானத்தில், மாடியில் இருந்து குதித்து, கீழே விழுந்து கூழாகி, தன்னை மாய்த்துக் கொண்டவள்.
செய்தி மூன்று: ஒரு அழகான விமானப் பணிப்பெண். இப்போதெல்லாம் சகஜமாகிவிட்ட 'விமானியுடன் காதல்-உறவு' இன்னபிற. வீட்டில் தெரிந்து, திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கும் வேளை. வேலை பளு, அதன் தொடர் பதட்டம் இவைகளால் முன் அனுமதியின்றி விடுப்பு. அதனால் தொடர்ந்த பதட்டம்; குடிக்கிறாள் - தோழனுடன். அவன் நண்பர்கள் முன்னிலையில். புகைப் பிடிக்க ஆரம்பிக்கிறாள் - தோழன் கண்டிக்கிறான். திட்டுகிறான். - நேராக மாடியில் இருந்து வெளியே குதித்து .....
செய்தி நான்கு : ஒரு அம்மா; ஒன்பது வயது குழந்தையின் அம்மா - அந்தக் குழந்தை சரியாகப் படிப்பதில்லை. அதனால் என்ன செய்கிறாள்? நம்புங்கள் - தற்கொலை செய்து கொள்ளுகிறாள்.
கடந்த பதினைந்து நாட்களுக்குள் நடந்தேறிய கோரங்கள் இவை. மத்திய வர்க்க வரவேற்பறைகளில் சூடாக, சோகமாக, பதட்டமாக, இன்னபிறவாக இந்த நிகழ்வுகள் விவாதிக்கப் படுகின்றன. இவைகள் ஏற்படுத்தும் பரபரப்புக்கு முன் தேர்தல் தமாஷ்கள், IPL சிக்கல், நியூசீலாந்தில் அபூர்வ வெற்றி போன்ற விஷயங்களும் ஐந்திலிருந்து இருபத்தி நான்காம் பக்கம் வரை பின்தள்ளப் படுகின்றன.
'இன்று என்ன ஆயிற்று?', 'ஜோசிய/மந்திரவாதி வசியம் செய்தது இன்னும் எத்துணை பேரை?', 'அந்தப் பெண்கள் ஏன் இவ்வளவு நாட்கள் மௌனம் காத்தனர்? இப்போது ஏன் வெளியே வந்து புகார் சொல்கின்றனர்?' போல பல கேள்விகளைக் கேட்டு, பதிலாக தமது ஊகங்களை அள்ளி வீசும் ஊடகங்கள்.
என்ன குமட்டுகிறதா? தினமும் காப்பி குடிக்கையில், முதல் பக்கத்தில் துல்லியமான விவரங்களுடன் நம்மை ஈர்க்கும் தலைப்புகளுடன் அழைக்கும் தினசரிகளைப் படிக்க நேரும் எனக்கு அப்படித் தான் இருக்கு.
என்னதான் நடக்கிறது. ஏன் நாகரீக, நகரப் பெண்கள் இப்படி ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடிப் பதுமைகளாக இருக்கிறார்கள்? Jeans-TShirt-Hi Heels-Goggles-Lipstic என்ற மாயக்கோட்டைக்குள் முற்றிலும் உருகிவிடத் தயாராக உள்ள மெழுகு பொம்மைகள் இவர்கள் என்பது பெரிய ஆச்சரியம் மற்றும் ஏமாற்றம். இது ஒரு சுலபமான பொதுப் படுத்தல் என்றாலும், இவை சொல்லும் செய்திகளை மதிக்காமல் விடக்கூடாது.
சென்னையிலும் அண்மையில், பிறந்த தன் குழந்தையைக் கிணற்றில் போட்ட அரக்கன் பற்றிப் படித்தேன். அப்போதுதானே மனைவி வேலைக்குப் போய், பணம் ஈட்டி, பைக்கிலிருந்து கார் வாங்கி, இரண்டு படுக்கை அறை (கழிவறை ஒட்டிக்கொண்டது) வீட்டில் புகுந்து, வாரக் கடைசியில் மால்களில் சோர்ந்து..அடப் போங்கையா.
நமது கல்வி முறையில் ஏதோ பெருங்கோளாறு நடக்கிறது. மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்கும், பணம் மட்டும் கண்ணுக்குத் தெரியும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகிவிட்டனவா நமது கல்வி நிறுவனங்கள்? வாழ்வின் மீதான தன்னம்பிக்கையும், அற உணர்வும் சிறிதளவும் போதிக்கப் படுவதில்லை என்று தோன்றுகிறது. இதுக்கு மேல் உங்கள் மூடை கெடுக்க விரும்பவில்லை. மேலும் ‘கருத்து கந்தசாமி’ பட்டம் கிடைத்துவிடும் அபாயமும் உண்டு. அதனால்... நூற்றுக்கு நாற்பது மார்க் வாங்கி பயத்துடன் progress report நீட்டும் உங்க மகளுக்கு ஒரு ரோலர் ஸ்கேட் வாங்கிக் கொடுத்து நீங்களும் கூட ஓடுங்கள். எல்லாமே ஜாலியா தெரியும்.
****************************************************************************************************
சமீபத்தில் படித்ததில் சில பிடித்தங்கள்:
பிடித்த ஜோக் : பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியத் தேர்தலை இங்கிலாந்தில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப் படும் என்று மத்திய அரசு குறிப்பு சொல்கிறது. (சஞ்சய், இது சும்மா ஜோக் தான்)
பிடித்த பாடல் : இன்னமும் 'மசக்கலி' தான். (தமிழ் கவிஞரின் ஹிந்தி வெறி ஒலிக!)
பிடித்த கவிதை: சரவணகுமாரின் இந்த சமீபத்திய கவிதை மிகப்பிடித்தது.
'பூனையாகுதல்'
அவன் போய்விட்டபின்பு
சுற்றும் முற்றும்
யாரும் இல்லையென்பதையும் உறுதிபடுத்திவிட்டு
அவன் எழுதிய கவிதைக்குள்
எட்டிப்பார்த்தேன்..
அது ஒரு காதல் கவிதை..
வழக்கமான
சில மரங்களும்
அவற்றின் பூக்களும்
பறவைகளும்
பச்சைப் புல்வெளிகளும்
தூரத்தில் ஒரு பெரிய கடலும் கொண்டிருந்த
அக்கவிதையில்
கூடவே சில "அன்பே", "அழகே"
வார்த்தைகளுக்கு மத்தியில்
அவன் காதலி தனியாய் அமர்ந்திருந்தாள்..
நான்
அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..
காதல் தோல்வி கவிதைகளை எழுதுவதால் நாங்கள் (நானும் கார்க்கியும்) மிகவும் கலாய்த்த சரவணன், தனது ஆதர்ச அய்யனார் திசையில் பயணிப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. Sara, Way to go. Dont ever look back.
கவிஞர்கள்/இலக்கியவாதிகள் பற்றி இன்னொரு இரகசியம். காதக் கொடுங்க: 'பூனைகள்' பற்றி எழுதாவிட்டால், ஒரு ஈ, காக்கா கூட உங்களை கவிஞர் என்று ஒப்புக் கொள்ளாது. சந்தேகம் இருந்தா நாகார்ஜுன், மோகன்தாஸ், அய்ஸ், ஜ்யோவ், நவீன விருட்சம் கவிதைகள் என்று சகல வலைத்தளங்களிலும் பாருங்க. பூனைகள் பற்றி இருக்க, இருந்தே தீர, வேண்டும். இப்ப சரவணனும் இந்த பட்டியலில் அடக்கம் :)
'அப்போ நீ' என்று சிறுபுள்ளத்தனமாக் கேக்கக் கூடாது. நான் அந்த பூனை பற்றிய 'பிம்பக் கட்டுடைப்பில்' ஈடுபட்டு இருக்கிறேன். ஆதலால் பூனைகள் பாக்கியம் செய்யவில்லை என் கவிதையுள் நுழைய.