முதலிலேயே டிஸ்கி
நண்பர்களே, இந்தப் பதிவு சற்று தீவிர ஆனால் சுவாரஸ்யமான இலக்கியத்தைப் பற்றி பேசும். எனக்கு லக்கி மற்றும் பரிசலின் சுண்டியிழுக்கும் ஆற்றல் இல்லாததால் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன் 'இது உங்களுக்கு அலுப்பைத் தரலாம்'. ஆதலினால் நீங்கள் இப்போதேயோ, ஐந்தாறு வரிகளுக்குப் பின்னாலோ தாராளமாக விலகலாம். இத்தகைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்து முழுதும் படித்து, நிருபணமாக பின்னூட்டமும் அளிப்பவர்களுக்கு சமீபத்தில் (கி.பி.2015) வெளிவர இருக்கும் எனது கவிதைப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இனி உங்கள் விதி.
சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...
பார்க்க:http://ayyanaarv.blogspot.com/2008/08/blog-post_21.html
Magical Realism
முதலில் படித்து விட்டு தலை சுற்றியது. பேசாமல் 'சிறப்பு அல்லது நன்று' சொல்லிவிட்டு நகர்ந்தோடி பரிசல்/லக்கி பதிவுகளில் கும்மி அடிக்கலாமென்று நினைத்தேன். ஒண்ணுமே புரியல அய்ஸ். வசந்த் மொழியில் சொல்லவேண்டுமென்றால் 'I sway boss!'.
உள்ளுக்குள் ஒரு குரல் (பின் தொடரும்) 'இன்னிக்குத் தப்பிக்கலாம்; இன்னும் போகப்போக என்ன செய்வதாக உத்தேசம்?; இல்ல ஆ.வி./ஜு.வி. என்று செட்டில் ஆகிவிட எண்ணமா?' என்று வினவியது. தன்மானம் என்ற ஒன்று வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்தது. சரி பின்னூட்டத்திலாவது ஏதாவது clue கிடைக்குமென்று பார்த்தால் ஆளாளுக்கு என்னென்னவோ எழுதி இரவில் தூக்கம் போயே போச்சு. அண்ணாச்சி எழுதியது மட்டும் புரிந்தது/பிடித்தது. (“வாசித்துக் கிழித்தேன் டவுசரை; மெதுவாய், மிக மெதுவாய், மிக மிக மெதுவாய்,, கிழிந்த டவுசரைத் தைக்க முடியாமல் உறைந்து போனேன்”).
ஒரு வழியாக, தேர்வை எதிர்கொள்ளும் மாணவனின் தீவிரத்துடன், வலையில் மேய்ந்தேன். மாஜிக்கல் ரியலிசம் என்பதற்கு 'மாய யதார்த்தம்' என்று பெயர் சூட்டினேன் (இதுவும் எங்கோ இலக்கியப்பக்கங்களிலிருந்து சுட்டது தான்). யதார்த்தத்தையும் மாயத்தையும் ஒரு புள்ளியில் சேர்ப்பது; மனித வாழ்வின் புற காரணிகளுடன் அக ஆழங்களைக் கலப்பது; அறிவியல் சார்ந்த இயல்பிய உண்மைகளுடன் உளவியல் சார்ந்த மானுட உண்மைகளின் சேர்க்கை; இவ்வகை இலக்கியங்களில் வாசகியின் பங்கு மகத்தானது. படிக்கும் வாசகியானவள் (உங்கள் கதைசொல்லி போல் ஆணாதிக்கவாதி இல்லை நான்) தான் அதுவரையறிந்த யதார்த்தத்திலிருந்து, கதைசொல்லியின் யதார்த்த நிலையைத் தழுவி நிற்பது; அஃது அவளுக்கு கதையை, அதன் நுட்பத்தைக் கட்டவிழ்க்க உதவும். இது வாசகியின் 'பரிணாமக் கடமை' எனக் கொள்ளலாம். (லேகா/கிருத்திகா : மனதில் கொள்க)
மா.ய. படைப்புகளின் இன்னபிற குணாதிசயங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்:
1) மாற்றுக் கருத்து ('other' perspective)
2) ஒரு குறிப்பிட்ட நாகரிக/வரலாற்று/பூகோளப் பின்னணியில் கதை இருத்தல்
3) கனவுகளும் கற்பனைகளும் கதையினூடே இருத்தல்
4) சுதந்திர, பின் நவீனத்துவ (ஆஹா, கிளம்பிட்டாங்கையா!) பாணி எழுத்து
5) விளக்கவியலாத நிகழ்வுகள் மிகச் சாதாரண சூழலில் நடப்பதும் மற்றும் கதைமாந்தர்கள் அத்தகைய தர்க்கத்தை மீறும் நிகழ்வுகளை சட்டை செய்யாதிருப்பது
மேலும் உயர்கற்பனைகள் கதையின் பின்புல தளத்தையே கேள்விக்குறி ஆக்குதல்; வினையும், விளைவும் தலைகீழாதல் (சோக நிகழ்விற்கு முன்பே கதை மாந்தர் விசனப்படுதல்); காலத்தை உருமாற்றல் அல்லது சுருக்குதல் என்று அனைத்து தகிடு தத்தங்களும் செய்யலாம், மிக வசிகரமாக. முடிவாக அழகிய நீதி (poetic justice) வெளிப்படும்.
இந்த அனைத்தையும் ஓரளவு உள்வாங்கிக்கொண்டு மீண்டும் இருமுறை படித்தேன் அய்யனார். Simply awesome. மேற்கூறிய அம்சங்களில், உங்கள் படைப்பில் பெரும்பான்மையான அம்சங்கள் இருந்தது உள்ளங்கை நெல்லிக்கனி. இப்போது சொல்கிறேன் சட்டைக் காலரை நிமிர்த்தியபடி 'நன்று / சிறப்பு'.
பின் குத்து 1 : வளர்/ஜமாலன் போன்றோர் உங்கள் 'சாரா மற்றும் ஜோ'வை பிரித்து மேய்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். உங்கள் நலத்திற்குதான்; வானத்திலிருந்து தரையிறங்கலாம்.
பின் குத்து 2 : நட்பின் உரிமையில் பரிசல் மற்றும் லக்கி பற்றி எழுதியுள்ளேன். அவர்கள் கொடுக்கும் வாசிப்பின்பம் என்னளவில் மிக மிக அதிகமே.