Showing posts with label உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு'. Show all posts
Showing posts with label உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு'. Show all posts

Wednesday, September 16, 2009

நர்சிம் ஜ்யோவ்ராம் சுந்தரைக் கேட்கும் கேள்விகள்


என்னுடைய கதை, ஜ்யோவின் விமர்சனம், அதற்குப் பின்னூட்டம் என்று எல்லாம் வந்திருக்கிறது. இப்போது நர்சிம் ஜ்யோவுக்கு பதில் சொல்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார். ஜீப்பில் ஏறிவிட்ட இன்னொரு 'ரவுடி'யின் நீண்ட பின்னூட்டத்தை புகைப்படத்துடன் இன்னொரு இடுகையாகப் போடுவது தானே நியாயம்? Here we go:
*******
சரி..விசயத்திற்கு வருவோம்..அல்லது இதைத் தனிப்பதிவாக பேஸ்ட் பண்ணி போடுங்க அனுஜன்யா...

*******

திரு சுந்தர்ஜிக்கு.

குரு வந்தனங்கள்.

ஒரு படத்தையோ அல்லது கதையையோ விமர்சனம் செய்வது என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.அதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

ஆனால்...

உங்கள் கருத்து என்று ஒன்றை முதலிலேயே முடிவு செய்து கொண்டு,படைப்பை பார்க்கும் பொழுது அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது..அல்லது ஆரம்பப் புள்ளி அதுதான்.

விமர்சகர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் விமர்சனம் செய்வார்கள் அல்லது செய்ய வேண்டும் எனபது என் கருத்து.

அடிப்படையான இரு விசயங்கள் அல்லது விடயங்கள்(இந்த விடயம்,வழமை போன்ற வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குமெனக்கு)

1.நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளி

2.வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் கடவுளைக் கூட ஒத்துக்கொள்வீர்கள்.ஆனால் சுஜாதாவை ஒத்துக்கொள்ளாத ஆசாமி.

இந்த இரண்டு பாயிண்ட்டுகளும் மிக முக்கியமானவை..இந்த விமர்சனத்தைப் பொறுத்தவரை.

ஏனெனில் உங்கள் விமர்சனத்தின் மொத்த குத்தும் இந்த இரண்டில் தான் என்பது தெளிவாக இருக்கிறது.

நீங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதனாலேயே சரிபாதி ஈஸ்வரன் மேட்டரை பெண்களுக்கு கொடுத்தால் முழுதும் பிடுங்கிவிடுவார்கள் கபர்தார் என்ற தளத்திற்கு மாற்றிவிட்டீர்கள்.தவறாகப் படுகிறது.

அகோரி இந்து மத அல்லது நான் கடவுள் படம் பார்த்தபின் ஒரு இந்து தெரிந்து கொண்ட விசயம்.அதை தன்னளவில் இங்கே மொழிப் படுத்தி இருக்கிறார் படைப்பாளி.

அதுபோலவே சுஜாதா. அவரைப் பிடிக்காமல் போக உங்களுக்கு எப்படி ஆயிரம் காரணம் இருக்கிறதோ அதைவிட பல்லாயிரம் காரணம் படைப்பாளிக்கு அவரைப் பிடிப்பதற்கும் இருக்கலாம்.

ஆதாரத் தவறு என்று முடிவு செய்து கொண்டு நீங்கள் விமர்சித்தது தெளிவாகத் தெரிகிறது.

நுண்ணியப்பார்வை எல்லாம் ஓக்கே.ஆனால் உங்களின் அடிப்படைக் கருத்துகளுக்கு அது ஒத்துப்போகவில்லை என்பதனால் “ஆபத்தானது”போன்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.

நல்ல கதை என்பதை விட சொன்ன விதமும் கையாளப்பட்ட நடையும் நிச்சயமாய் புதிதுதான்(சுஜாதாவைப் பிடிக்காததால் லேசான எரிச்சலின் ஊடே நீங்கள் படித்துக் கொண்டே வந்ததின் விளைவாகவே உங்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்).

கடவுளர் சார்ந்த கதைகளும் சுஜாதாவின் சுட்டு விரலை லேசாகப் பிடித்துக்கொண்டு நடந்ததும் மட்டுமே தவறாக தோன்றுகிறது உங்களுக்கு.

ஏனெனில்,நீங்கள் கொண்டாடும் கட்டுடைப்பு கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதையை நீங்கள் விமர்சித்த முகாந்திரம் நான் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.

அது உங்கள் கருத்து எனும் பட்சத்தில்,உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை அல்லது கரு பிடிக்கவில்லை என்ற அளவே அன்றி ஒதுக்கப்படவேண்டியது எல்லாம் கொஞ்சம் ஓவர் ஸார்.

Saturday, September 12, 2009

ஜ்யோவ்ராம் சுந்தரின் சீற்றம்: 'அனுஜன்யாவின் கதை ஒதுக்கப்படவேண்டியது'




உரையாடல் போட்டி நடந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். அதற்குப் பிறகு இப்போது பதிவர்கள் 'சிறுகதைக் பட்டறை' யில் பட்டை தீட்டப் படுகிறார்கள். நான் உரையாடல் போட்டிக்கு அனுப்பிய கதை (அரி அ.ரி அ...ரி) உங்களில் சில பேருக்கு நினைவு இருக்கலாம். படித்த பலர் பாராட்டியதும் உண்மை. ஏற்கெனவே பரிசு கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் எனக்கு நேற்று, நான் மிக மதிக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர், இந்தக் கதை பற்றிய காட்டமான விமர்சனத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். எங்கள் இருவருக்குமே இந்த விமர்சனம் பொது வெளியில் வைக்கப்படவேண்டுமேன்பதே அவா. நட்பு வேறு; அது தாண்டிய உள்ளார்ந்த விமர்சனம் வேறு என்று எல்லோரும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும், நம் பதிவுலகில் நடைமுறையில் எப்போதாவது தான் சாத்தியமாகிறது.

கதை படித்தவர்கள் நேராக இதன் கீழ் இருக்கும் விமர்சனத்திற்குச் செல்லலாம். படிக்காதவர்கள், மேலே கொடுத்த சுட்டியின் ஊடே கதைக்குச் சென்று, கோபமோ, மகழ்ச்சியோ எய்தி, விமர்சனத்திற்கு வரலாம்.

ஆரோக்கியமான கருத்துக்கள் எப்போதும் போலவே நல்வரவு. தனிநபர் தாக்குதல்கள் தவிர்த்து விடலாம். முதலில் சுந்தரை அவர் வலைப்பூவில் போடுமாறு கேட்டுக்கொண்டேன் (வேற என்ன, இன்னும் நிறைய பேர் படிப்பார்களே). அவர், 'ஜ்யோவுக்கும், அனுஜன்யாவுக்கும் பலத்த (கொடுக்கல்-வாங்கல்) சண்டை' என்று தவறாகப் புரிந்துக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இருப்பதால், உங்க வலைப்பூவில் பதிவேற்றம் செய்து விடுவது நலம் என்றார். பலி கடாவைக் குளிப்பாட்டி, சாந்து, சந்தனப் பொட்டுகள் வைத்து, மாலை போட்டதோடு விடாமல், அதனிடமே "ம், கழுத்த வெட்டிக்கோ' என்கிற மாதிரி இருக்கு. ஏதோ மக்கா, பார்த்து செய்யுங்க. ஏன்னா, நான் இன்னமும் 'ரொம்ப நல்லவன்ன்ன்னு' ஊரே நம்புது :)

இனி சுந்தர்:

அனுஜன்யாவின் சிறுகதை (http://anujanya.blogspot.com/2009/06/blog-post_12.html) ஹரி, அ.ரி அ....ரி கதையை வாசித்ததும் முதலில் அதிர்ச்சியாகவே இருந்தது.

என்ன சிக்கல் கதையில்? முதலில் கதையைத் தொகுத்துக் கொள்வோம்.

கணவன் மனைவி விமானத்தில் சர்வ ஜாக்கிரதையாக சைவ உணவு கேட்டு வாங்கிச் சாப்பிடுபவர்கள். விமானம் இமயமலையில் விபத்துக்குள்ளாகிறது. இவர்களும் இன்னும் இருவரும் உயிர் பிழைக்கிறார்கள். அடுத்த நாள் ஓடி வரும் பனிப்பாறை இவர்கள் நால்வரையும் தாக்குகிறது. மற்ற இருவர் என்னவானார்கள் எனத் தெரியாத நிலையில் ஹரியால் உமாவைக் கண்டுபிடிக்க முடிகிறது. உமா இறந்திருக்கிறாள். இறந்த அவள் உதடுகளில் முத்தம் கொடுக்கிறான். பிறகு, அவளைப் புதைக்கிறான். சில மாதங்கள் கழித்து தொலைக்காட்சி சேனலில் விலாவரியாகத் தான் தப்பித்த கதையைச் சொல்கிறான். இவனது வலது கையில் இரு விரல்கள் இல்லாதிருப்பது குறித்து பிரஸ்தாபிக்கப்படுகிறது. இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் நடப்பதாகக் கதையில் வரும் வரிகள் :

இன்று என்ன?""முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்

எனச் சென்று தேவதச்சனின் கவிதையொன்றோடு கதை முடிகிறது. உரையாடல் சிறுகதைப் போட்டிக்கான கதை என்ற குறிப்பும் இருக்கிறது.

தான் புத்திசாலி என்பதை எழுத்தாளன் காட்டிக் கொண்டேயிருக்கும் கதைகள் எனக்கு உவப்பாயிருப்பதில்லை. கதையின் முதலில் வரும் சைவ உணவுப் பழக்கம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. முட்டைகூடச் சாப்பிடாதவன் பிறகு உடலையே தின்கிறான் என்பதற்காக உருவாக்கிய காண்டிராஸ்டாம்!

கதையின் தலைப்பாக ஹரி அரி அரி என வைத்திருப்பதன்மூலம் அவன் சிவனாகிவிடுவதாகக் கதையை வாசிக்கமுடியும். அரியை அகோரியாகவும் பார்க்கலாம் (நான் கடவுள்?). இந்தக் கதையில் தேவையில்லாமல் உயிர் தப்பும் இரண்டு வெளிநாட்டவர்கள் (பெயர்கள் இங்கு முக்கியமாகிறது. நம்மவர்களுக்குக் கடவுளர்களான உமா ஹரி எனப் பெயர் இருக்க அவர்களுக்கு டானி, ஜிங்!) பிறகு தேவையில்லாமலேயே காணாமல் போகிறார்கள் (மரணம்?). இந்த இடத்தில் கதையின் வருபவன் சிவனா அல்லது கதை எழுதுபவரே சிவனா எனச் சந்தேகம் வருகிறது. கடவுளாக மாறிவிட்டவனின் கையில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதில் யார் உயிருடன் இருப்பது, யார் மரணமடைய வேண்டுமென்பது முக்கியமானது இல்லையா.

சிவன் தன் இடப்பக்கத்தை உமாவுக்குக் (பார்வதி) கொடுத்திருப்பதாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. சிவனோடு தொடர்புடைய இடம் கைலாயம். இக்கதையை சிவனோடு தொடர்புடைய கைலாயத்தில் உமையைப் புசித்து உயிர் பிழைத்த ஹரி பிறகு அரியாகிறான் என்றும் வாசிக்க இயலும்.

முதலில், இறந்தவளின் உடலோடு காதலாக முத்தம் கொடுத்தவன் (அதை உடலுறவு கொண்டதாகவும் வாசிக்கலாம்), பிறகு பசிக்காக மட்டுமே அவளைப் புசித்திருக்க முடியுமே தவிர பிணங்களைத் தொடர்ந்து உண்டு வாழும் அகோரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. தனிப்பட்ட முறையில் உணவுக்காக இறந்த உடலின் பிரேதத்தைப் புசிப்பதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் அதை புராணீகக் கதைகளோடும் இந்து மதக் குறியீடாக மாற்றுவதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்.

உமாவை அவன் உண்டதால் பிழைத்திருக்கிறான். பிறகு அர்த்தநாரியாகி அவளுக்குத் தன் இடப்பாகத்தைத் தருகிறான். ஆனாலும் பாருங்கள் அவனது வலது கை விரல்களை அவள் சாப்பிடுவிடுகிறாள் (ஆறு மாதங்களில் இரண்டே இரண்டு விரல்கள்தான்!). ரொம்ப slow eater போலிருக்கிறது!

இந்தக் கதையின் முக்கியக் குறியீடாகச் சிலவற்றைக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவை : விபத்து, அகோரி, சிவன், அர்த்தநாரி, இடப்பாகம், உமையள், மெதுவான மரணம்.

இது உரையாடல் போட்டிக்கான கதை. சிவனுக்கும் பார்வதிக்குமான போட்டியில் என்ன நடந்தது என்பது புராணக் கதைகளின் மூலமாக நமக்கு ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பார்வதி எரிந்து சாம்பலாக்கப்பட சிவன் வென்றாக வேண்டும்!

பெண்களுக்கு இடமளிக்காதே என்ற ஒரு சொலவடை உண்டு. அப்படிக் கொடுத்தால், அவர்கள் உன்னையே காலி செய்துவிடுவார்கள் கபர்தார்! என்று கட்டுப்பெட்டித்தனமான ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டுவரும் குப்பையையே இவர் நவீன எழுத்து என்ற பெயரில் முன்வைத்திருக்கிறார். அந்த வகையிலேயே இந்தக் கதை ஆபத்தானதாக மாறுகிறது. அதற்காகவே இந்தக் கதையை நான் நிராகரிக்கிறேன்.

மற்றபடி, கதை என்று பார்த்தாலும் பல ஓட்டைகள் இருக்கின்றன. முக்கியமாக,
சுஜாதா பாணி கதை விவரணையும் (பிளாஸ்டிக் புன்னகை, உயரன் போன்ற வார்த்தைகள் இந்த எழுத்தாளரின் சுஜாதா மோகத்தைப் பறைசாற்றுகின்றன) மற்றும் கையாண்டிருக்கும் மொழிநடையும் கதையின் ஆதாரமான மிஸ்டிக் தன்மைக்கு கொஞ்சம்கூடச் சரியாக ஒத்துவரவில்லை என்பதை இந்தக் கதையை வாசிக்கும் பலர் உணர்ந்திருக்கக்கூடும்!

என்னளவில் இது தோல்விக் கதையே.

(இதை நான் தனிப்பட்ட முறையில் - அதாவது உரையாடல் போட்டிக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் எனத் தெரியுமுன்பு எழுதினேன் - போட்டி என்பதால், முடிவு தெரிந்த பின்பு வெளியிடலாம் என நினைத்திருந்தேன் - இந்த விமர்சனம் பற்றி நண்பர் அனுஜன்யாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.

வலைப்பதிவில் பின்னூட்டங்கள் என்பவை முக்கியமானவை. ஆனால் பல சமயங்களில் அவை வெற்று பாராட்டுகளாகவும் முன் தீர்மானிக்கப்பட்ட template வாசகங்களாகவும் இருக்கின்றன. அதை மாற்ற, கதை கவிதைகளைப் பற்றிய இம்மாதிரியான விரிவான விமர்சனங்கள் தேவை என நினைத்தேன். அனுஜன்யாவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பவர் என்பதால், இப்பதிவு).

Friday, June 12, 2009

ஹரி அ . ரி அ. . . . ரி

டிராலியில் தள்ளியவாறே தாய்லாந்து அழகி 'உங்கள் உணவு. மகிழ்வுடன் சாப்பிடுங்கள்' என்றாள்.

"ஹாய், இது அசைவம் போலத் தெரிகிறது - நாங்க வெஜிடேரியன்ஸ்' - ஹரி.

"ஓ, வெரி சாரி. வெஜிடேரியன் தருகிறேன்" என்றவள் திரும்ப அதே பிளாஸ்டிக் புன்னைகையுடன் இரண்டு தட்டுகளை நீட்டினாள்.

இப்போது உமா 'மேம், இதுவும் அசைவம்தான். ஆயிஸ்டர், நண்டு மற்ற கடல் உணவுகள் எல்லாம் எங்களுக்கு வெஜிடேரியன் இல்லை' என்று பதட்டமானாள்.

அப்புறம் அந்த அழகி உம்மென்று வைத்த காபேஜ் இலைகளையும், பெயர் தெரியாத தழைகளையும் மென்று, அதை மறக்க ப்ளாக் காபி குடித்து கண்ணயர்ந்தனர்.

தூங்கும் அவர்களைப் பற்றி:
ஹரி - உயரன். மாநிறன். பொறியியல் படிப்பு. நீங்கள் இப்போது யூகிக்கக் கூடிய கணினி மென்பொருள் துறைதான். இந்தியாவின் ஏழாவது பெரிய நிறுவனத்தின் பல சாமர்த்திய இளைஞர்களுள் ஒருவனாக, நிறைய சம்பளம், நிறைய பயணம், நிறைய எல்லாவுடன் இருந்தவன்…ப்பவன்... க்கப் போகிறவன்?

உமா : அழகி. படிப்பில், செல்வத்தில் ஹரியைவிட கொஞ்சம் அதிகம். பொறியியலுக்குப்பின், மேலாண்மை படித்து, ஐரோப்பிய நிறுவனமொன்றின் இந்திய கிளையில் முக்கிய வேலை.

இவனுள் ஒளிந்திருந்த வடக்கும், அவளில் மறைந்திருந்த தெற்கும் ஈர்க்கப்பட்டு, பிரிக்க முடியாத காந்தமாகி, காதலாகி, கசிந்து...சரி கல்யாணமும் ஆகி விட்டது - அறுபது நாட்களுக்கு முன். சம்பிரதாய தேன்நிலவு, குலதெய்வ சமாசாரங்களை முடித்துக் கொண்டு ஒரு வழியாக ஆபிஸ் போவதே நிம்மதி என்று தோன்றத் துவங்கியது. அமெரிக்கா, யு.கே. என்று ஜொலித்துக் கொண்டிருந்தவனை ரிசஷன் புயல் கிழக்கு ஆசியாவுக்குத் தள்ளி, பள்ளி புவியியல் பாடங்களில் கூட படித்த ஞாபகம் இல்லாத தேசங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். பத்து நாட்கள் மணிலா, ஒரு வாரம் ஜாகர்த்தா, இரண்டு வாரம் பூசன் (கொரியா), ஒரு வாரம் பாங்காக் என்று தென்கிழக்கு ஆசியாவில் மையம் கொண்டான். மாத இறுதிகளில் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொரு வார இறுதியையும் கொண்டாடினார்கள் - ஒன்றாக.

இவர்கள் உரையாடல், சுமார் பன்னிரெண்டாயிரம் அடி உயரத்தில், பாங்காக்கிலிருந்து காத்மாண்டு செல்லும் விமானத்துள் நடந்தது. ஒரு வாரம் காத்மாண்டு மற்றும் டெல்லி பார்ப்பதாகத் திட்டம். விமானம் டேக்-ஆப் ஆகி ஐம்பது நிமிடங்கள் ஆகி இருந்தது. பிசினஸ் கிளாஸ். போன வாரம் வரை உறுத்திய வள்ளியூரின் குப்பைத் தெருக்கள், மும்பையின் தாராவிச் சிறுமிகள், தேர்தல் அரசியல், பிரபாகரன் எல்லாவற்றையும் மறந்து, உயரே, உயரே...வேறு ஒரு பதப்படுத்தப்பட்ட உலகுள்.. அவனுக்குள் உமா மற்றும் உமா மட்டுமே.

திடீரென்று விமானத்தில் ஏதோ இடித்த சத்தம் மற்றும் அதிர்வு. சில நொடிகளில் விமானம் வலது பக்கமாகவும், பின்நோக்கியும் பாய்ந்து விழத் துவங்கியது. பயணிகளின் பயக்கூச்சலில் விமான ஓட்டி அறிவித்த குழப்ப ஆங்கிலம் யாருக்கும் கேட்கவில்லை. உமா, ஹரியின் கழுத்து, கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். ஹரியும் பீதியில் கண்ணை மூடி மூடித் திறந்தான். எத்தனை வினாடிகள்? நிமிடங்கள்? மணிகளா? பல கொடூர யுகங்களுக்குப் பின் விமானம் பெரும் பாறையில் மோதி மூன்றாக உடைந்து சிதறியது. நிசப்தம் நிசப்தம்.

மீண்டும் பல யுகங்களுக்குப்பின் உமா கண் திறந்தாள். இருட்டாக இருந்தது. ஒரு குழாய் போல, அதன் முடிவில் வெளிச்சம் கசிந்தது. முழங்காலும், வலது தோளும் நகர்த்த முடியாமல் வலித்தது. கருவெளிச்சம் பழகிய பின் பார்வையால் துழாய்ந்தாள். தான் விமானத்தின் உடைந்து சிதிலமாகிவிட்ட நடுப்பகுதிக்குள் இருப்பதைக் கண்டாள். சில அடிகள் தள்ளி ஒரு கையும், மடங்கிய உடலும் தெரிந்தது. மெல்ல ஊர்ந்து அருகில் சென்று பார்த்தால்...ஹரி. கண் மூடி இருந்தது.

மூழ்கிக்கொண்டே அவளும் நினைவிழந்தாள். யாரோ உலுக்கிவிட்டபோது மெல்லக் கண் திறந்தாள். ஹரியும், இன்னும் இருவரும் அவளைத் தூக்கிக்கொண்டு, வெளிச்சம் நோக்கி நகர்ந்ததை அவளால் முற்றிலும் உணர முடியவில்லை.

'உயிரோடு இருக்கிறேனா - இல்லை இறந்து விட்டேனா? என் இவ்வளவு அமைதி? ஆனால் வலி இருக்கே? - இல்லை இது ஏதோ கொடுங்கனவு. எப்போ தூங்கினேன். விமானம் லேண்ட் ஆகிவிட்டதா' என்று கால் வினாடியில் நூறு கேள்வி-பதில்கள் தோன்றி மறைந்தன.

அவர்கள் விமானம் நொறுங்கியிருந்தது இமாலய பனிச்சிகரங்களில் ஒன்றில். நொறுங்கியது அதிகாலைப் பொழுது. இப்போது எங்கும் கண்ணைக்கூசும் ஒளி, மெல்லப் பரவாமல், திடீரென்று அடித்தது. இந்த நால்வரும் மிக அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பிழைத்திருந்ததை உணர்ந்தார்கள். அதீதக் குளிராக இருந்தது. விமானத்தின் நடுப்பாகம் இன்னும் முற்றிலும் உடையாமல், ஒரு பெரிய குழாய் வடிவில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது.

அந்த மங்கோலியர்கள் பெயர் டானி மற்றும் ஜிங் என்று ஓரளவு புரிந்து கொண்டார்கள். இப்போது பெயரா முக்கியம். டானிக்கு கணுக்காலில் உதிரம் சிந்தியது. ஜிங் முகம், மற்றும் இடுப்புப் பகுதியில் ஒரே இரத்தம். ஹரியின் தாடை, பின்னங்கால்கள், கழுத்து என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் இரத்தம் மற்றும் வலி. டானியும் ஜிங்கும் இயல்பு நிலைக்கு வந்து, விமானத்துக்குள் இருந்தவற்றைத் துழாவ ஆரம்பித்தார்கள். உமாவால் தானாக நகர முடியவே இல்லை. அவளைத் தன் மடியில் கிடத்திய போதுதான் ஹரி அவள் பின்தலையில் இரத்தம் கசிந்து பிசுபிசுப்பதைக் கவனித்தான். சிதில பாகத்துக்குள் நசுங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள், போர்வைகள் இருந்தன. சீட்டுகளைக் கிழித்து அரைகுறையாகப் பனிச்சப்பாத்து (ஷூஸ்) செய்தார்கள். தாகம் இருந்ததால் பனிக்கட்டியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் வரத் துவங்கியது.

ஜிங்கின் கைக்கடிகாரம் மட்டும் அதிசயமாக ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலை 10 மணி என்றது. அதிர்ச்சி போய், 'அடுத்து என்ன' என்ற கேள்வி உமா தவிர மற்ற மூவருக்கும் தோன்ற ஆரம்பித்திருந்தது. உமா இலேசாக முனகியபடி இருந்தாள். ஹரி அவள் பின்மண்டையில் கைவைத்து, இன்னமும் இரத்தம் கசிவதில் திகில் ஆனான். டானி ரோந்து பார்க்கும் விமானம் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்து, கூட்டிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மதியம் அடித்த வெயிலில் பாட்டில்களில் போட்டிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஓரளவு அவர்கள் தண்ணீர் குடித்தார்கள். சாப்பிட வேறு எதுவும் இல்லை. இப்போது உமா முற்றிலும் சுயநினைவில்லாமல், மயங்கி, ஹரியின் மடியில் படுத்திருந்தாள்.

இரவு வந்தது. விமான சிதிலத்துக்குள், போர்வைக்குள் தஞ்சமானார்கள். டானியும், ஜிங்கும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹரி.

"ஒரே பசி. நாளை என்ன செய்வது"

"நீராகாரம்தான்"

"எத்தனை நாள்"

"சாகும்வரை"

"........."

ஹரி அயர்ச்சியில் தூங்கி விட்டான்.

மறுநாள் மதியம், சுற்றுப்புற வானம், மற்றும் பனிச்சிகரங்களில் என்னமோ சொல்லமுடியாத மாற்றம் சடுதியில் ஏற்பட்டு, இவர்களை நோக்கி ஒரு பெரிய பனிமலை அலைபோல பாய்ந்து வந்து கொண்டிருந்தது. இவர்கள் சுதாரிக்கும் முன்பே நால்வரையும் அடித்துச் சென்று எங்கெங்கோ தூக்கிப் போட்டது. அவ்வளவு சருக்கலிலும் தன் மடியிலிருந்த உமாவை வெகுநேரம் உடும்புப் பிடியாக ஹரி பிடித்திருந்தாலும், கடைசியில் இருவரும் பிரிந்து விழுந்து கிடந்தார்கள். டானி, ஜிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

வானம், மலை எல்லாம் இருட்டி விட்டிருந்தது. பின்னிரவில் ஹரி முழித்துக்கொண்டான். விலா எலும்புகள் ஒடிந்திருக்க வேண்டும். உமாவை நினைத்தான். அழுகை வந்தாலும், கண்ணீர் வரவில்லை. மிகுந்த தேக, மன வலியுடன் உறங்கி விட்டான். காலை மீண்டும் பனிமலைகள் நேற்றைய கோரத்திற்கு தாங்கள் பொறுப்பில்லை என்பதுபோல் மெளனமாக இருந்தன. எப்படி விழித்தான், எழுந்து நின்றான், நடக்கத் துவங்கினான் என்று தெரியாது. கிட்டத்தட்ட மாலைவரை மெல்ல மெல்ல நடந்து அவ்வப்போது பனிக்குள் துழாவி, மனைவியைத் தேடினான். விடாமுயற்சி வினையாக்கியது. அவளுடைய பச்சை நிற ஸ்வெட்டர் காற்றில் அசைந்ததில் கண்டுபிடித்தான். ஒரு கால் மடங்கி, மற்றொரு கால் வினோத கோணத்தில் படுத்திருந்தாள். தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று அமர்ந்தான். முகத்தின் பொலிவு அவனை பயமுறுத்தியது

மிகுந்த சிரமத்துடன் வெகு நேரம் அவள் நாசியில் கையையும், இதயத்தில் தன் வலது காதையும் வைத்து அவள் உயிரைக் கூப்பிட்டான். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவளின் வலியற்ற, சோபையான வதனம் அவள் அவனை விட்டுப் போய் விட்டதைச் சொன்னதைப் புரிந்துகொண்டான். ஏனோ அழவில்லை. திடீரென்று மிகவும் பசியும், தாகமுமாக உணர்ந்தான்..

இப்போது அவளைப் பக்கத்தில் கிடத்தி தன் உலர்ந்த உதடுகளால் அவளின் காய்ந்த அதரங்களை முத்தமிட்டான். பின்பு பக்கத்தில் படுத்துக்கொண்டான். சிறு உறக்கத்துக்குப் பிறகு மெல்ல பனித்துகள்களை அப்புறப்படுத்தி பள்ளம் தோண்டினான். உமாவுக்கு நோகாமல் மெல்ல, மிக மெல்ல, ரத்தம் உறைந்திருந்த அவள் பின்தலை படாதவாறு இலேசாக அவளைப் பள்ளத்தில் கிடத்தினான். பள்ளத்தை மூடி, நடக்கலானான். சில நூறு அடிகளில் பெரும் பாதாளம் தெரிந்தது. மற்றொரு பக்கம் செங்குத்தாக, ஒரு பெருஞ்சுவர் போல மலை எழும்பி இருந்தது. உடல், மனது எல்லாம் குறுகி, சுருங்கி, ஒரு புள்ளியாகி, மீண்டும் உமா இருந்த இடத்திற்கு வந்து, மயங்கி விழுந்தான்.

**********

ஆறு மாதம் கழித்து வீட்டுக் கதவைத் தட்டிய நேஷனல் ஜியாகிரபி ஆட்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து அவர்கள் அவன் தப்பித்து வந்த சாகசக் கதையை அவனே சொல்வதைப் படம் பிடித்தார்கள். அவர்களின் வழக்கமான, 'ஏன், எதற்கு, எப்படி' எல்லாவற்றுக்கும் ஞாபகத்திலிருந்து பதில் கொடுத்தான். காமெரா அவனை எண்களாக்கியது.

"உங்கள் வலது கையின் சுண்டு விரலும், மோதிர விரலும் ....."

"ஹ்ம்ம்.. வேண்டாம் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை"

தொகுப்பாளினி "பனிக்கடியில் இரு விரல்கள் இழந்த கை” என்றபோது, காமெரா zoom ஆனது.

இரண்டு வாரம் கழித்து ஒரு சனி இரவில் மூடிய அவன் அறையில் இந்த உரையாடல்:

"இன்று என்ன?"

"முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"

சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....

மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்.

கைலாசத்தில் புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)