Sunday, November 30, 2008

மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்சூசன் ஜார்ஜ்


அவள் வருகிறாள் என்று ஒரு வாரம் முன்பே தெரியும். டோரோண்டோவிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் பிரத்யேகமாக மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ஆனாலும், சனி, ஞாயிறின் கொண்டாட்டங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, மறந்து, திங்கள் காலையைப் படைத்த ஆசாமியை கெட்ட வார்த்தைகளில் சபித்து, ஏழு மணிமுதல் வீட்டில் கலவரம் செய்து, ஒருவழியாக ஆபிஸ் சேர்ந்தாயிற்று.. அப்பாடா, இன்றைய சம்பளம் நியாயமானதுதான் என்று காபி குடிக்கையில் லவினா தொலைபேசியில், '9.30 ஆகிவிட்டது. கான்பரன்ஸ் ரூம் செல்லவும். சூசன் வந்தாயிற்று. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள். ஓஹ், இன்று இந்தக் கிராதகி வந்தாயிற்றா? இந்த வாரம் குருபெயர்ச்சியில் ராசிபலன் பார்க்க வேண்டும்.

'ஹாய் சூசன் - ஹலோ கைஸ்'

'ஹாய் ராகவ், சோ நைஸ். நண்பர்களே, ராகவ் என்னும் தலையில் கொம்பு முளைத்த அரிய பிராணியைச் சந்தியுங்கள். நமது ஒரு வார நிகழ்ச்சி நிரலில் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிக்கு வர இசைந்த ராகவுக்கு, இந்த சிறிய வரவேற்பு' என்று மஹாபலேஷ்வர் தோட்டத்து ரோஜாப் பூங்கொத்துக்களை என்னிடம் அளித்து கை தட்ட, கூட்டமும் தட்டியது.

மரியாதை நிமித்த முதுகு சொறிதல்களுக்குப் பின், நான் சில உண்மைகள் சொல்ல, அவள் இன்னும் பல, பெரிய உண்மைகள் பேச, கலவரம் நிகழும் முன், எச்சரிக்கையுடன் சிரித்து முடித்துக்கொண்டோம். இப்போதைக்கு அவ்வளவுதான். இனி நாளை இரவுதான் அவளுடன் விருந்து என்ற நிம்மதியில் அலுவலக வேலைக்கிடையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல கவிதை முயற்சியில் இறங்கித் தோற்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் சூசனை விவரிப்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கிறது. முழுப் பெயர் சூசன் ஜார்ஜ். சிகப்பி. உயரி. அழகி. வயது முப்பத்தி இரண்டு என்று ஞாபகம். அவர்கள் 25-38 வரை கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் வயதை துல்லியமாகக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. டொரோண்டோ அருகில் உள்ள ஹாமில்டன் என்னும் சிறு நகரம் அவள் பிறந்து வளர்ந்து, அழகான இடம். கால்கரியில் பட்டம் முடித்து, டோரோண்டோவில் மேற்படிப்பு... இல்லை “யேல் எம்.பி.ஏ” என்றாளே. என்னவோ போங்க சார், இந்தப் கல்வி பற்றிய தகவல்கள் மட்டும் மூளைக்குள் நுழைய மாட்டேங்குது. எங்கப் படிச்சா நமக்கென்ன.

செவ்வாய் மதியம் கூப்பிட்டு, ‘நமது இரவு விருந்தை நாளை இரவுக்கு மாற்றட்டுமா’ என்றாள். 'நோ இஷ்யுஸ்' என்று சொல்லிவிட்டு மகிழ்ந்தேன். புதன் மாலை. 'பெரிய ஹோட்டல் சாப்பாடு அலுக்கிறது. நல்ல உணவகம் இருந்தால் சொல்லு. அங்கே போகலாம்' என்றாள். வொர்லியில் (வீட்டுக்குச் செல்லும் வழி. நேரம் மிச்சம்) 'ஜ்வெல் ஆப் இந்தியா' என்னும் உணவகம் சென்று இடம் பிடித்து அடுத்த மூன்று மணிநேர அறுவைக்குத் தயாரானேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத வெளிர் நீல சூடிதார் உடையில் வந்தாள். ஆபீஸில் மெதுவாகக் கைகுலுக்கும் சூசன் இப்போது ஆரத் தழுவினாள். சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும். அப்போதெல்லாம் ஒரு படபடப்பு, உத்வேகம், இத்யாதிகள் வருவதில்லை. ஒரு கசின் சிஸ்டரைப் பார்க்கும் உணர்வே மிஞ்சும். எனக்கு அப்படித்தான் இப்போது இருந்தது.

யோக்கியனாக நடிக்க முயன்ற என்னை சட்டை செய்யாமல் எனக்கு பியரும் அவளுக்கு 'ஜின்' என்னும் பெண்கள் அருந்தும் மதுவும் ஆர்டர் செய்தாள். 'இன்னைக்கு நமக்கு சரியான பூசைதான் விட்டுல' என்று அப்போதே வெளிறத் துவங்கினேன். முகத்தைச் சரியாகப் படித்தவள் போல, 'அனு கிட்ட நான் பேசிக்கறேன். பயப்படாமல் ஒரு கிளாஸ் பியர் குடி. அதற்கு மேல் நீ கேட்டாலும் கிடையாது' என்றதில் சிறிது ஆசுவாசம் ஆனேன்.

'இதோ பார் ராகவ், ஆபிஸ் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது. நீயும் நானும், கொஞ்சம் சிடுமூஞ்சிகள் ஆனாலும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சோ..'

'ஆகச் சரி குரங்கே'

என் மேல் தெறித்த கால் டம்ப்ளர் ஜின்னில் என் சட்டை ஈரமானதுடன், எங்கள் இறுக்கமும் காணாமல் போனது.

முதலில் தன்னை பற்றி நிறைய சொன்னாள். உயர் மத்யம குடும்பம். கல்வி. விளையாட்டு (ஐஸ் ஹாக்கி ரொம்ப பிடிக்கும்). கல்லூரி காதல் இரண்டு ஆண்டுகள். பிறகு மேற்படிப்பு. வேலை. பதவி உயர்வு. மேலும் அதிக வேலை. இடையில் ஹார்மிசன் என்னும் அழகான வாலிபனின் பிரவேசம். வாழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்கடியது. இன்னும் ஏறக்குறைய அவ்வாறே செல்லும் வாழ்க்கை என்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.

'நானே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்லு இப்போ'

'பெருசா ஒண்ணும் இல்ல'

'ஆபிஸ் சொற்பொழிவு போல் போலியாக இருக்காதே. ஓபன் அவுட் யு டாக்'

நானும் நிறைய பேசினேன். எல்லோரோடும் போட்டி போட்டு, அரைகுறை வெற்றி பெற்று, கிடைத்த வேலையை வாங்கிக்கொண்டு, வேண்டிய வேலையை அதன் மாயக் கவர்ச்சி போனபின் பெற்று, எல்லா சராரசி ஆண்கள் போல் நான்கு பெண்களைப் பார்த்து, மூவரைக் குறிவைத்து, இருவரைத் தேர்வு செய்து, ஏமாந்த ஒருத்தியைக் காதலித்து, ஆச்சரியமாக அவளையே திருமணமும் செய்ததுவரை எல்லாம் சொன்னேன்.

"உன் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. ஜிக் ஜாக் என்று மேலும் கீழும், மாயமும், சிறு சிறு ஏமாற்றங்களும். நீ விவரித்த விதம் இன்னும் சுவாரஸ்யம். இந்தியாவைப் பற்றி பேசேன். எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் நாட்டை"

"உங்கள் நாட்டுக்கு 300-400 வயது. பொருளாதார முறையில் செதுக்கப்பட்ட, ஓரளவு தட்டையான கலாசாரம். நான் சொல்வதை தவறாக எண்ணாதே. இந்தியா மிகப் பழமையானது. தொன்மை வாய்ந்தது"

"எனக்கும் தெரியும். மூவாயிரம் ஆண்டுகள் முந்தைய கலாசாரம். ரைட்? "

"வெளியில் சொல்லாதே. ஒரு பொதுக்கூட்டமே உன்னை அடிக்க ஓடி வரும். காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை யாரைக் கேட்டாலும், இந்தியாவுக்கு சராசரி வயது ஒரு பத்தாயிரமாவது இருக்கும்"

"சும்மா விளையாடாதே"

"நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க"

"இதுல எவ்வளோ கட்டுக்கதை? எவ்வளோ வரலாற்று உண்மைகள்?"

"யாரு சொல்றாங்க என்பதைப் பொறுத்தே கதையா அல்லது வரலாறா என்று முடிவு செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை - உங்கள் மேற்கத்திய வரலாற்று உண்மைகள் உட்பட"

எல்லாம் பேசி முடித்த போது மணி ஒன்பது. மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.

"ஒரு உர்ரான்குட்டானுக்குள்ள இவ்வளவு மென்மையான ஆசாமி ஒளிந்திருப்பானு நினைக்கல. நல்லது. நாளை காலை பார்ப்போம். போரைத் தொடர்வோம்" என்று சொல்லி டாக்சியில் ஏறி ஹோட்டலைச் சென்றடைந்தாள்.

நான் இளம் ஏப்பத்துடன், இளையராஜாவைக் கேட்டுக்கொண்டு, வீடு சேர்ந்தபோது பத்து. வழக்கம் போல வடிவேலு பார்க்காமல் தூக்கம் வராது என்பதால், அனுவுடன் அமர்ந்தேன். விளம்பர இடைவேளையில், சேனல் தாவுகையில், டைம்ஸ் நவ்வில் "தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நுழைவு" என்ற Breaking News.

முதலில் உரைக்கவில்லை. கடவுளே, சூசன் தங்கியிருப்பது ஓபராய் அல்லவா!

சுசனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். மொபைல், மற்றும் ப்ளாக்பெர்ரி இரண்டுமே உயிர் போயிருந்தது. ஹோட்டல் நம்பர் சிலமுறை 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை'; பலமுறை சுடுகாட்டு மௌனம். ச்சே, என்ன உவமை.

அனு, 'வண்டி எடுங்கள், போய் பார்த்துவிடலாம்' என்றாள்.

Pant போடும்போதே, நிகழ்ச்சிகளின் தீவிரம் புரியத் தொடங்கியது. நாங்கள், அந்தேரி தாண்டுகையில், இடையில் மறித்த கும்பல் ஒன்று "பார்லாவில் குண்டு போட்டு, ஒரு டாக்சி சுக்குநூறு, மேலே போகாதீர்கள்" என்றது. ஆயினும் குருட்டு தைரியத்திலும், சூசன் பற்றிய பயங்களிலும் காரை மேலும் ஓட்டினேன். ஒரு கூட்டம் வழியில் நின்றதால், வேறு வழியின்றி காரை நிறுத்தி ..'ஒ என்ன கோரம்! ஒரு தலை மட்டும் ரோட்டின் ஓரத்தில், கழுத்தில் ரத்தக்கூழுடன்'. அதற்கு மேல் முடியவில்லை இருவருக்கும். பேசாமல் திரும்பிவிட்டோம்.

முடிந்த வரை விழித்திருந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தோம். NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. மூன்று மணியளவில் அசதியில் கண்ணயர்ந்துவிட்டோம். காலை ஆறு மணிக்கே புறப்பட்டேன். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.

சாலை முழுதும் வெறிச்சோடி இருந்தது. மரின் டிரைவ் மும்பையின் கிரிடங்களில் ஒன்று. பெடெர் சாலையிலிருந்து மரின் டிரைவ் திரும்பியதுமே, தூரத்தில் எழும்பிய ஓபராய் ஹோட்டல். அதனுள் பதினாறாம் அடுக்கில் … சூசன்?

'இல்லை. அவள் அங்கு இல்லை. அந்தக் கிறுக்கு, பெரிய வாக்கிங் சென்று, ஹோட்டலுக்குள் நுழைய முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியானால் போன் பண்ணுவாளே. ஐயோ, மூளையே, கொஞ்சம் நேரம் தர்க்கரீதியாக சிந்திக்காமல் இரேன்'.

மரின் பிளாசா என்ற ஹோட்டல் அருகிலேயே காரை நிறுத்திவிட்டார்கள். ஏகப்பட்ட கெடுபிடி. என்னைபோன்ற பலர் உறவினர், நண்பர்களை ஒபராயில் தொலைத்துவிட்டு, கையறு நிலையில் முழித்துக்கொண்டு இருந்தோம். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆபிஸ் P.R.O. வும் வந்துவிட்டு இருந்தார். எனக்கு 'இதெல்லாம் சகஜமப்பா' பாணியில் காக்கியில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மகாராஷ்டிர போலீஸ் மீது நம்பிக்கை சிறிதும் இல்லை. சிறிது நேரத்தில் என்.எஸ்.ஜி. வந்தது.

யாருக்கும் ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சேனல்கள் தங்கள் அனுமானங்களை, வழக்கம் போல், செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தன.

அப்புறம், ஒரு D.G.P. பரிந்துரையில், ஹோட்டல் அருகில் செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு மிக சூடாகவும், புகையினால் தொண்டை எரிச்சலும் இருந்தது. ஓபராயின் பெண் ஒருத்தி, ஒரு ராணுவ வீரருடன் அமர்ந்து விருந்தினர் பட்டியலைக் கலந்தாலோசித்து, உறவினர்/நண்பர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல, மெல்ல, அச்சத்துடன் அவளை அணுகி 'சூசன் ஜார்ஜ்; ரூம் நம்பர் 1617 ' என்றேன். என் வாழ்வின் மிக மிக அதிகமான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு, உதட்டைப் பிதுக்கி, சற்று சோகத்துடன் 'அவள் மேலே இருக்கிறாள்' என்றாள்.

'இஸ் ஷி அலைவ்?'

'டொன்னோ. நிறைய பேரை கொன்று விட்டார்கள். பல பேர் பணயக்கைதிகளாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறோம்'

'எப்படி மீட்கப் போகிறீர்கள்?'

'என்.எஸ்.ஜி.யை நம்புங்கள். நிச்சயம் நாங்கள் செய்வோம்' என்றார் இராணுவம்.

இதற்குள் சில உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள். சிலருக்கு உயிரும் இருந்தது. ஒரு அம்புலன்சின் மூடும் கதவில், கடைசியாக சூசனின் வெளிர் நீலச் சூடிதார் தெரிய, விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். ஜெ.ஜெ.ஹாஸ்பெடல் சென்றடைந்து, அவர்களை பிடிக்கையில், சூசன் எங்கோ உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்தாள். விசாரித்ததில், 'நிலைமை மிக மோசம் என்றும், பிழைக்க வாய்ப்பு இருபது விழுக்காடு' என்றும் சொன்னார்கள். ஆயினும், அந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ஆற்றிய பணியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இது அல்லவா சேவை. பிறகு வாழ்வில் அரிய கணங்களில் ஒன்றாக பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினேன்.

சூசனின் தந்தைக்கும், அவளின் ஆதர்ச கணவனுக்கும் (ஹர்மிசன்) தொலைபேசியில் "ஒன்றும் கவலைப்பட வேண்டாம்" என்று சொன்னதற்கு, மற்றவர்கள் திட்டினார்கள். இப்படியே கழிந்த அடுத்த பதினெட்டு மணி நேரங்களுக்குப் பின் ஜெ.ஜெ.வின் ஐ.சி.யு. வழியே ஒரு நல்ல செய்தி 'அவள் பிழைத்துவிட்டாள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.'

அவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது. 'நிறைய இரத்த இழப்புடன் சேர்க்கப்பட்ட அவள் பிழைத்தது ஒரு மருத்துவ விந்தை மற்றும் அவளுடைய வாழ்வின் மீதான பிடிப்பு' என்று அவர்கள் கூறினார்கள்.

இன்று காலை சென்றபோது அவளுக்கு சுய நினைவு திரும்பியிருந்தது. மிகச் சோர்வுடன் என் கைகளைப் பிடித்தவள் கைகளில் என் முகத்தை புதைத்து .....வேண்டாம், ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒரு வினோத நியதி.

இப்போது பார்க்கிறேன் குருபெயர்ச்சி பலன்கள்: "மகர ராசிக் காரர்களுக்கு மேற்கில் இருந்து வரும் விருந்தாளிகளால் மிகுந்த மனக் கிலேசமும், அலைச்சலும் அமையும். உங்கள் உதவும் மனப்பான்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாலும், கடவுள் பக்தி மிகுந்த (!) உங்களுக்கு தன்வந்திரி யோகம் இருப்பதால் இந்தக் கவலையிலிருந்து சீக்கிரமே மீள்வீர்கள். புதிதான உறவுகள் பிறக்கும்'.

எப்போதும் ஜோசியத்தில் ஆர்வமுடைய அனு, 'ஐயோ, மிகச் சரியாகத்தான் போட்டிருக்கிறார்கள்.' என்றாள்.

Tuesday, November 25, 2008

படிக்காதவன்


முதலில் 'வாசிப்பு' பற்றி என்னையும் மதித்து எழுத அழைத்த லேகாவுக்கு மிக்க நன்றி. பெரிய ‘தலை’ங்க பட்டியலில் நானும் சேர்க்கப்பட்டேன். சரி விஷயத்துக்கு வருவோம்.

வீட்டில் ஆங்கிலத்துக்கு மிக முக்கியத்துவம் தருவார்கள். ஆதலால் ஹிந்து நாளிதழ், சூடான பில்டர் காபியுடன் பிரதி தினம் துவங்கும். அப்பா விளையாட்டுப் பிரியர். கடைசிப் பக்கத்திற்கு முந்தைய (அப்போதெல்லாம்) பக்கம் அவருக்குத்தான் போகும். அக்கா பெரிய மனுஷி போல் முதல் பக்கம் தலைப்புச் செய்திகள் படிப்பாள். எனக்கு மீதமாவது, 'Murugan run over by lorry' போன்ற பரபரப்புச் செய்திகளும், வெள்ளிக்கிழமைகளில் வரும் 'Grand Gala opening at Satyam/Alankar/Abirami' போன்ற சினிமா செய்திப்பக்கங்களும்தான். ஆங்கிலப் புலமையைக் காட்டுவதற்காகவும், உச்சரிப்பு நளினங்களுக்காகவும், மாடிப்படிகளில் அமர்ந்து சற்று உரக்கவே படிப்பேன். அப்பா ஒரு வசீகரமான பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, புன்னகையுடன் நகர்ந்த நாட்களவை. ஆயினும், வீட்டில் தமிழுக்கும் சமமான இடம் உண்டு. என் தந்தை தனது கல்லூரி தினங்களில், சுலப மதிப்பெண்கள் பெற வாய்ப்புடைய பிரெஞ்சு மற்றும் ஸமஸ்க்ரிதம் தவிர்த்து 'செந்தமிழ்' படித்துத் தேறியவர்.

நான் தமிழில் படித்த முதல் நாவலே தமிழின் மிகப்பெரிய சரித்திர நாவலாகிய 'பொன்னியின் செல்வன்' தான். என் அக்காவும் அப்பாவும் 'பழுவேட்டரையர், மதுராந்தகன், அருள்மொழி' என்று மணிக்கணக்கில் சுவாரஸ்யம் குறையாமல் விவாதம் செய்வது பொறுக்காமல் 'இதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்' என்ற வீம்பில் படிக்கத் துவங்கி, என்னை மறந்தேன். அப்போது சென்னையில் மீதமாயிருந்த வெகு சில ஏரிகளில் வேளச்சேரி ஏரியும் ஒன்று. என் நண்பன் வீட்டுக்கு சைக்கிளில் ஏரிக்கரை மேட்டில் இலாகவமாகப் போகையில், அதை வீரநாராயண ஏரியாகவும், சைக்கிளை குதிரையாகவும், என்னை வந்தியத்தேவனாகவும் பாவித்து சென்ற அற்புத நாட்கள். அந்தத் தாக்கத்தில் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு கதைகளையும் படித்து முடித்தாலும், பொ.செ. ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை. அலைஓசை பின்பு படித்தாலும் ஒ.கே. என்ற நினைவு மட்டுமே.

இதற்குள் என் அக்காவின் provocation என்னை சுஜாதாவை நோக்கித் திரும்ப வைத்தது. முதலில் படித்தது 'நிர்வாண நகரம்'. அடுத்தடுத்து, 'நைலான் கயிறு, கொலையுதிர்காலம், பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நடுப்பகல் மரணம், ஏறக்குறைய சொர்க்கம், சொர்கத்தீவு, காகிதச் சங்கிலிகள்' என்று கட்டம் கட்டி, துரத்தி துரத்திப் படித்தேன். அவருடைய அறிவியல் புனைவுகள் என்னை முற்றிலும் வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. பிறகு கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவ்வப்போது கணையாழியிலேயே படிக்கத் தொடங்கினேன். இன்றளவும் என்னை பெரும் ஆளுமை செய்வது அவரது எழுத்துக்கள்தான். ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு அவர் தந்தது நம்ப முடியாத தன்னம்பிக்கை. ஏதோ ஒரு சிறுகதையில் வரும் 'சில்லறை அமெரிக்கத் தனங்கள்' என்று passing lines எழுதியது, IIT / Pilani படித்து அமெரிக்கா சென்ற என் பெரியம்மா பையன்களின் சேட்டைகளை எளிதில் ஒதுக்க உதவியது. அவரது crisp நடை தமிழுக்கு அவர் அளித்த மிகப்பெரும் கொடை. அவரது துரித கதி நடையில், இலக்கியம் படைப்பது சிரமம்தான். அதனால் அவருக்கு கிடைக்கவேண்டிய இலக்கிய அந்தஸ்து சர்ச்சைக்குரியதாகவே இன்றும் உள்ளது ஒரு துரதிர்ஷ்டம். சிவாஜி கணேசனை ஒதுக்கித் தள்ளி M.G.R. போன்ற நடிகர்களுக்கு 'சிறந்த நடிகர்' கொடுத்த தேசம் அல்லவா நமது தேசம். ஆயினும் சுஜாதாவின் மிகப் பெரும் ஆற்றல் அவரது சிறுகதைகளே. அவரே ஒப்புக்கொண்டபடி, நாவல்கள் எழுத முக்கிய காரணிகளான கள அனுபவமோ, வலியோ, அதற்கான திட்டமிடலோ, நேரமோ அவரிடம் ஏதுமில்லை. எஞ்சியவை தொடர்கதைகளே. ஆனால், தமிழைப் படிப்பது ஒன்றும் கௌரவரக் குறைச்சல் இல்லை என்ற சித்தாந்தத்தை இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு அவர் அடிக்கோடிட்டு உணர்த்தியதை மறுக்க முடியாது.

அட போறும்பா சுஜாதா புராணம்; மேலே செல்லவும் என்றால்... நம்புங்கள் ஒன்றுமே இல்லை. அவர் மரணம் அடைந்த பின், என்னதான் நடக்கிறது என்று பார்க்கவே, கண்ணைக் கட்டிக்கொண்டு இந்தப் பதிவுலகில் நுழைந்தேன். அப்படி என்றால் வேறு எதுவுமே படிக்கவில்லையா என்றால், எப்போதோ ஜானகி ராமன் (மரப்பசு, மோகமுள்) படித்தேன். லா.ச.ரா, கி.ரா., ஜெயகாந்தன், வண்ணதாசன், பிரபஞ்சன் இவர்களின் சிறுகதைகளை அவ்வப்போது வெகு ஜனப் பதிரிகைகைகளில் படித்து அவர்களின் வீச்சைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதில் பிரபஞ்சன் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். எஸ்ராவின் தொடர்களை ஆனந்த விகடனில் படித்து அவருக்குப் பெரிய விசிறியானேன். ஒரு அடிப்படை நேர்மை, உண்மை அவர் எழுத்தக்களில் தென்படுவதாக உணருகிறேன்.

கடந்த ஆறு மாதங்களில் தமிழ் இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நாட்கள் அறியாத பல விடயங்கள் தெரிய வந்தன. தமிழின் மிகச் சிறந்த நாவல் 'புயலிலே ஒரு தோணி' என்றும், ஏறக்குறைய இரண்டாம் இடம் 'நாளை மற்றொரு நாளே' என்றும் தெரியவந்தது. இது தவிர, அய்யனார், ஜ்யோவ்ராம், லேகா, எஸ்ரா எழுத்துக்களிலிருந்து வண்ணநிலவனின் 'கடல் புரத்தில்', 'எஸ்தர்' 'ரைநீஸ் ஐயர் தெரு', நகுலனின் கதைகள்/கவிதைகள்/டயரி, தி.ஜா.ராவின் 'அம்மா வந்தாள்', பாமாவின் 'கருக்கு', கோபிகிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', சம்பத்தின் 'இடைவெளி', ஜெமோவின் 'ரப்பர்', 'விஷ்ணுபுரம்', ஏழாம் உலகம்', 'காடு', எஸ்ராவின் 'நெடுங்குருதி, யாமம், உறுபசி, உபபாண்டவம்' சாருவின் 'சீரோ டிகிரி', கி.ராவின் 'கோபல்ல கிராமம்', ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', நாஞ்சில் நாடனின் 'எட்டுத் திக்கும் மத யானை' என்று பெரும் பட்டியல் என் முன்னே விழுந்தது.

முன்பே எஸ்ராவின் உறுபசி, விழித்திருப்பவனின் இரவுகள் படித்தாயிற்று. அண்மையில் தீபாவளி நிமித்தம் சென்னை வந்தபோது, ஜ்யோவை பாடாய்ப்படுத்தி, தி.நகரில் உள்ள New Lands Bookshop சென்று நிறைய புத்தகங்கள் வாங்கினேன். அவர் பொறுமைக்கும், புத்தகங்கள் பரிந்துரை செய்ததற்கும் நன்றி சொல்ல இந்தத் தருணம் உதவுகிறது. மேல் கூறிய புத்தகங்களில் சில ; கூறாத சில கிடைத்தன. ஒரு பெரிய பார்சலுடன் ஊர் வந்து சேர்ந்து, புதுப் புத்தகங்களை, பள்ளிச் சிறுவனின் ஆர்வத்துடன் தடவிப் பார்த்துக்கொண்டு, படிக்காமல் இருக்கிறேன். இது வரை படித்தது: கடல் புரத்தில், என்பிலதனை வெய்யில் காயும் (நாஞ்சில் நாடன்). படித்துக் கொண்டிருப்பது யாமம். அண்மையில் படித்ததில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை ஜெமோவின் 'ஊமைச் செந்நாய்'.

இதற்கு முன்பே எஸ்ராவின் பரிந்துரையில் தேவதச்சன் படிக்க ஆரம்பித்தேன். 'கடைசி டினோசர்', மற்றும் 'யாருமற்ற நிழல்'. மிக மிக வசீகரமாகவும், மாயமாகவும், அடர்கானகத்து யுகலிப்டஸ் கமழும் காற்றை சுவாசிப்பது போன்றும் இவர் கவிதைகள் எனக்கு போதை தருவது உண்மை. அலுவலகம் அடைய பத்து நிமிடங்கள் முன்பு மற்றவர் Economic Times மனப்பாடம் செய்கையில், ஏதோ ஒரு பக்கம் பிரித்து ஒரே ஒரு கவிதையைப் படித்தால், மற்றவரின் நெற்றிச் சுருக்கங்களுக்கு நடுவே, நமது பெரிய புன்னகை மிகப் பிரகாசமாக இருக்கும் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

இன்று படித்தது:

நாற்பது வினாடிகள்

நாற்பது வினாடிகள் நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் பின்னால் நின்றோ
முன்னால் நின்றபடியோ அல்ல
இடது பக்கத்திலிருந்து.
நடுமதியத்தில்
அவள் ஒரு இரண்டு சக்கர வாகனத்தை
அனாயாசமாய் ஓட்டியபடி மறைந்தாள்.
அந்த நாற்பது வினாடிகள் நாற்பது வினாடிகளுக்கும்
அதிகமாக இருந்தன.
ஏழு வயதுச் சிறுவன் அப்பாவின் சட்டையைப்
போட்டுக்கொண்டிருப்பது போல்
அந்த நாற்பது விநாடிகளை அணிந்தபடி
நின்றிருந்தேன்
என் கால் விரல்கள்
அப்போது எனக்குத் தெரியவில்லை
இப்போதும் எனக்குத் தெரியவில்லை


இப்படியாக வாழ்வும், வாசிப்பும் செல்கிறது. நீண்ட பதிவை தயவு செய்து பொறுத்தருளுங்கள். பதிவர்களின் எழுத்துக்கள் பற்றியும் படித்த ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றியும் பிறிதொரு தருணத்தில் எழுதும் யோசனையும் (எச்சரிக்கை!) உள்ளது.

மீண்டும் நன்றிகள் லேகா மற்றும் நரசிம், பரிசல், தாமிரா இவர்களுக்கு (இவர்களின் தொடர்பதிவுகள் மட்டுமே படித்தேன்). அடுத்தது யார் என்கிறீர்களா? பிரமிக்கவைக்கும் வாசிப்பு உள்ள வேலன் அண்ணாச்சிதான். அவருடன் ஒரு மாலை, இரவைக் கழிக்கும் அரிய வாய்ப்பு நேற்று கிடைத்தது. சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. அவர் மட்டுமே பேச வேண்டும்; நான் கேட்பதுடன் நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது என்று.

ஓவர் டு வேலன்.

Thursday, November 20, 2008

துயிலும் பெண்

எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா. அவரது இணையதளமும் எனக்குப் பிடித்த இணையங்களுள் ஒன்று.

அண்மையில் எஸ்ரா சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதை பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.

"சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன். இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்."

கதை எனக்கு வசீகரமாகவும், பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது. இதனை மொழியாக்கம் செய்து பார்த்தால் என்ன என்று முயன்றேன். (சொந்தக் கற்பனை வறட்சி நிலவரம் என் கவிதைகள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்).

கதை படிக்க ஆசைப்படுவோர் இங்கு செல்லவும்: துயிலும் பெண்

பெரும் ஊக்கமளித்து இணையத்தில் என் பெயரையும் குறிப்பிட்ட, நான் மிக மதிக்கும் எஸ்ராவுக்கு நன்றிகள் பல.

இது பெரும் நாவலாக அல்லாது, இரண்டு பக்க சிறுகதை மட்டுமே என்பதாலும், மொழியாக்கத்தின் மொழியாக்கம் (அரேபிய-ஆங்கில-தமிழ்) என்பதாலும் "வருமொழி, நிலைமொழி, மொழியாக்கத்தில் வன்முறை" என்றெல்லாம் பெரிய விடயங்கள் பற்றி வெளிச்சம் காட்டிய வளர்மதியின் நினைவுகளைக் கிடப்பில் போட்டுவிட்டேன். பிழைகளை அன்னார் மன்னிப்பாராக.

Wednesday, November 12, 2008

சாயும் பொழுதும், சாயம் போதலும்


சிகப்புக் கழுத்துப் பட்டையில்
சிந்திய காப்பித் துளிகள்;
மாலையில் மனைவி
சுருட்டியபடியே
கறை போகாதென்றாள்,
காப்பி கறையை பார்த்தபடியும்
லிப்ஸ்டிக் சாயத்தை
ஸ்பரிசித்தபடியும்.
சுருட்டப்பட்டது
பேராண்மையும் கூட;
காலை சுவைத்தது
இரவில் கசந்தது.

Monday, November 10, 2008

குறக்கடவுள்


ருசிக்குச் சாப்பிடாது
பசிக்கு மட்டும் உண்ணும்
நரிக்குறவனை உன்
ஞான குருவாக்கிக்கொள்
சாதியம் களையும்
சாத்தியங்கள் அறிந்தவன்
அய்யர் வீட்டு அவியல்
அய்யங்காரின் தயிர்வடை
செட்டி நாட்டு அப்பம்
முதலியாரின் முறுகல் தோசை
பிள்ளைமார் வீட்டு பணியாரம்
ஏதுமில்லை என்றால்
காடை கவுதாரி
எல்லாமே ஒன்றுதான்
உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.
அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த
அவனன்றோ கடவுள்
(கீற்று.காமில் பிரசுரமானது)