Tuesday, April 13, 2010

மறக்காமல் மறப்பது - (எதைப்) பற்றியும் பற்றாமலும்

அலுவலக நிமித்தம் வெளியில் செல்லும் போது நிச்சயமாக நான் ஏதாவது முக்கியமான விஷயத்தை மறந்து விடுவேன். மொபைல், பேனா, கைக்குட்டை, பர்ஸ் போன்ற மறதிக்கு என்றே உருவாக்கப்பட்ட வஸ்துக்கள். இவற்றையெல்லாம் விட பிரதானமாக விசிடிங் கார்ட். பார்த்த மனிதர்களையே மீண்டும் பார்க்கப் போகிறோம் என்றால் பரவாயில்லை. எப்போதும் குறைந்தது ஒரு புது முகமாவது 'யுவர் கார்டு ப்ளீஸ்' என்னும் போது நம்மிடம் கார்டு இல்லையென்றால் ....ஏற்கெனவே அசடு வழியும் முகத்தில் கூடுதலாக வழியும். நம்ம தலைமையில், சகாக்களோடு இந்த மாதிரி நேர்ந்தால் 'சாரி பாஸ்; இப்பத்தான் மூணு மீட்டிங் முடிச்சுட்டு நேர வரோம். கார்டு தீர்ந்திடுச்சு' என்று பந்தா பண்ணி தப்பித்து விடலாம். பாசோட போகும்போது இந்த மாதிரி அலம்பல் எல்லாம் பண்ண முடியாது.

போன வாரம் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கையில் (மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன் - ஆமா, ஆபிசில் தான்) பாஸ் திடீரென்று ஃபோனில் "உடனே கிளம்பி ஓபராய் ஹோட்டல் லாபி வந்துவிடு. கனடா நாட்டு மந்திரி மற்றும் கனடா ஹை கமிஷனர் இருவரையும் பார்க்கப் போகிறோம். அவங்களுக்கு இந்தியன் எகானமி பத்தி கொஞ்சம் பேசணுமாம்' என்றார். சரின்னு பத்து நிமிஷத்தில் அங்கே போய், அந்த இரு வெள்ளைக்காரர்களைப் பார்த்து மையமாகச் சிரித்தேன். அவர்கள் கைகுலுக்கி ஆளுக்கொரு கார்டு கொடுத்தார்கள். நான், பாக்கெட்டில் துழாவ...அடாடா, கார்டு மறந்து விட்டேன். நல்ல வேளையா பாசு போன்ல இருந்ததால் கவனிக்கவில்லை. ஆனால், இந்த இரு ஆட்களும், 'இதோ கார்டு வெளிய வரப்போகிறது' என்று ஆர்வமாக என் சட்டைப் பையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் ஏற்கெனவே அவர்களுக்கு தலா ஐந்து கார்டு கொடுத்த தோரணையில் ஓரமாக சென்று அமர்ந்து விட்டேன். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. என்னாலும்தான். அவர்கள் ஜி.டி.பி. க்ரோத் சதவீதம் பற்றிக் கேட்க நான் காட்ரீனா கைஃப் உயரத்தை மனதில் கொண்டு உத்தேசமாக 5.9 என்றேன். ஒரு வழியாக மீட்டிங் முடிந்து கை கொடுக்கும் தருவாயில், அந்த மினிஸ்டர் 'உங்கள் கார்டை நான் வாங்க மறந்து விட்டேன்; தர முடியுமா' என்று கேட்க, 'நானும் என் கார்டை மறந்து விட்டேன். அதனால் தர ....முடியாது' என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன். அந்த மந்திரி இந்தியாவைப் பற்றி என்ன மாதிரி ரிப்போர்ட் எழுதுவாரோ!

***************************

ஐ.பி.எல். கன ஜோராகப் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் பந்துகளுக்கு இடையிலும் வரும் விளம்பரங்கள் நிறைய எரிச்சலைத் தந்தாலும், தமிழ் வலையுலகின் எரிச்சலூட்டும் பதிவுகள் போலவே, இதுவும் பழகி விட்டது. என்னுடைய ஆதர்ச ராயல் சேலஞ்சர்ஸ் இது வரைக்கும் மூச்சைப் பிடித்துக்கொண்டு போட்டியில் இன்னமும் இருக்கிறார்கள். பார்க்கலாம். அடுத்த பிடித்த அணிகள் முறையே கே.கே.ஆர்., மும்பை மற்றும் டெல்லி. சென்னை? எனக்கு தோனி இருப்பதால் ...அறவே பிடிக்கவில்லை. சென்னையில் வசிக்காததின் பல சௌகர்யங்களில் இதுவும் ஒன்று. சென்னை அணியின் 'விசில் பாட்டு' இங்கு நிறைய பேருக்கு ஒரு மந்தகாசப் புன்னகையைத் தருகிறது.

***************************

கொஞ்சம் அரசியல் பேசலாமா? ஸ்டாலின் துணை முதல்வர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இப்ப திடீர்னு அழகிரி 'அதெல்லாம் கிடையாது; நானும் கோதாவில் இறங்குவேன்'னு சொல்றது தப்பாட்டம். இன்றைய தமிழக சூழலில் ஸ்டாலினை விட தகுதியான ஒருவர் தி.மு.க. மட்டுமில்லை; எந்தக் கட்சியிலும் இல்லை என்பது என் எண்ணம். (ஆமா, மதுரையிலிருந்து மும்பைக்கு ஆட்டோ வர எவ்வளவு நாட்கள் ஆகும்?).

நம்ம பதிவர் சஞ்சய் காந்தி எழுதும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி பற்றிய இடுகைகளை இங்கு படிக்கவும். எனக்கு ராஹுலிடம் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. (பின்னாளில் நிச்சயம் வருத்தப் படுவேன் என்று பட்சி சொன்னாலும்).

***************************

இப்போதெல்லாம் வாசிப்பது முற்றிலும் நின்று விட்டது. ஆபிசில் வேலை அதிகம் (அட நிஜமாகவே). எனக்குத் தெரிந்து பிரமாதமான இடுகைகள் எதுவும் படிக்கவில்லை. (தினமும் நான் படிப்பது கார்க்கி, ஆதி, பரிசல் மற்றும் அனுஜன்யா). ஏதாவது மிஸ் பண்ணி இருந்தால் சொல்லுங்கள். அண்மையில் ராகவனின் தளத்தில் இருந்த கவிதைகள் படித்தேன். ரொம்ப நல்லா இருக்கு. இதோ அவர் வலைத்தளத்தின் சுட்டி.

மாதிரிக்கு ஒரு கவிதை

நரைத்த இரவுகள்

சுவர்களின் பக்கவாட்டைப்

பிடித்துக் கொண்டும்
இரண்டு படிகளை கடக்கிறேன்
வாசலில் கிடந்த
பால் பாக்கெட்டை
நடுங்கும் விரல்களில் எடுக்கிறேன்
பாக்கெட்டின் குளிர்ச்சியை
உணர முடியவில்லை
ரத்தம் சுண்டி ஸ்மரனை இன்றி
ஒரு இடுக்கியைப் போல
எடுக்கிறது விரல்கள்
அயர்ந்து உறங்குபவளின்
மூப்பு அறையெங்கும்
எடுக்காத நூலாம்படையாய்
கயிறு கட்டிய மூக்கு கண்ணாடி
மருந்து புட்டிகள், மஃப்ளர்
இடது பக்கம் அவளுக்கானது
வலது பக்கம் எனக்கானது
சுவரெங்கும் பிடித்து நகரும்
கைகளின் உராய்வில்
உதிர்ந்து தொங்கும் காரை
கண்ணாடி, பீங்கான் தவிர்த்து
வருஷங்கள் ஆகி விட்டது
பாலில் நிறைய தண்ணீர் விட்டு
செய்த தேனீரும்
இதமான சூட்டில் வெண்ணீரும் செய்து
அவளை எழுப்பினேன்
எழுந்தவள் முட்டி வலிக்குதுப்பா
என்றாள் ஹாட்பேக் குடுங்களேன்
என்றவளிடம்
அலையடிக்கும் தேனீர் குவளையை
நீட்டினேன், சப்திக்க வாங்கியவளின்
தேனீரின் மிச்சம்
கண்ணத்தில் பச்சை படர்த்தி
குளிர் நிழலை விரித்தது


குழந்தைகள் பெருகி வளர்கிறது

மரநிழலில்

வா.மணிகண்டன் சொல்வது போல் தமிழ் நாட்டில் கவிதை வாசிப்பவர்களை விட, கவிதை எழுதுபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். ராகவன் கவிதை நிறைய வாசித்து, நல்ல கவிதை எழுதுபவர்களின் தளங்களில் பின்னூட்டம் மூலமாக விமர்சிக்கிறார். இது வரை என் வலை பக்கம் வரவேயில்லை. வெரி ஸ்மார்ட் ஃபெல்லோ!
 
***************************

Saturday, April 3, 2010

அகநாழிகை - ஒரு பார்வை


முதன் முறையாக அகநாழிகை இதழ் படித்தேன். இது மூன்றாவது நாழிகை (இதழ்) என்று நினைக்கிறேன். அட்டைப்படம் சுழன்று நடனமாடும் ஒரு நங்கையின் படத்துடன் நன்றாக இருக்கிறது.


தலையங்கம் ‘விழைவின் பெருங்கனவு’ என்ற தலைப்பில் இலக்கியப் பின்புலத்தில் நிகழும் அரசியல் பற்றி வாசு எழுதியிருக்கிறார். “கவனமற்ற சொல்லாடல்கள், சிதைந்த உரையாடல்கள் நம் மூளைக்குள் தேங்கித் ததும்பி கணங்கள் தோறும் எப்படி எதைச் செய்வது என யோசித்தபடியே வழிந்து கொண்டிருக்கின்றன. இயல் நிகழ்வுகளைத் தவிர்த்து அனிச்சையான செயல் என்பதே அற்றுப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உள்மன விகாரத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுவே பலருக்கு உவகையான வாழ்க்கையாகவும் ஆகிவிட்டிருக்கிறது.” என்று எழுதுகிறார். இதில் நிறைய கசப்பு இருந்தாலும் உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை.

மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொடர்ச்சி இந்த இதழில் இருக்கிறது. வாசுவின் தளத்தில் இது பதிவேற்றம் செய்யப்பட்டும் இருக்கிறது. ஒரு இலக்கியவாதி ஆளுமையாக வளரும் போது தவிர்க்க முடியாத அரசியல் சூழலை இந்த நேர்காணல் உணர்த்துகிறது. இலக்கிய உலகின் அரசியலைப் பற்றிய பரிச்சயமும் ஆர்வமும் குறைவாக இருப்பதால் அதைப் பற்றிப் பேச அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால் மனுஷ்ய புத்திரன் நவீன தமிழ்க் கவிதை பற்றிச் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.

“நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றன. உரையாடலின் சாத்தியங்ளை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டு வருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன். மேலும் பிரத்யேகமான அனுபவங்களை கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டு வருகிறேன்.” என்கிறார். உண்மை தான். இத்தகைய கவிதைகளே பெரும்பான்மை வாசகர்களைக் கவரவும் செய்கின்றன. ஆயினும் எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்.

எனக்குப் பிரியமான கவிஞர் ரெளத்ரன் இந்த இதழில் ‘ரெஜியின் பூனை’ என்ற சிறுகதை எழுதி இருக்கிறார். இது போன்ற கதைகளை ஏற்கெனவே படித்த உணர்வு எப்படியோ வந்தது. ஒரு வேளை நிறைய படைப்பாளிகள் அலுக்கும் அளவுக்கு பூனைகள் மீது கவனம் செலுத்துவதால் வந்த ஆயாசம் என்று கொள்ளலாம். ஆனால் கதையின் நடையும், பூடகத் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்தது. பூனைகளைப் பற்றிய அவதானிப்பும் சுவாரஸ்யம். – “ நாய்களைப் போல் பூனைகளை சில ரொட்டித் துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது. பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை” – “பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல. அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன. பூனைகளின் மொழி கவிதையால் ஆனது’ என்றெல்லாம் சொல்கிறார்.

சத்யஜித்ரேயின் பெங்காலிக் கதையை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கவிதாயினி நதியலை. ‘சஷ்மலின் வினோத இரவு’ என்னும் கதை சுவாரஸ்யம். அழகாக மொழியாக்கம் செய்திருக்கும் நதியலையைப் பாராட்ட வேண்டும்.

மற்றொரு சிறுகதை சாந்தன் எழுதிய ‘கோழை’. கதையில் இறுதியில் வரும் ‘அடி வயிற்று விம்மல்’ நாம் அனைவரும் ஒரு தினம் அனுபவித்தது அல்லது அனுபவிக்கப் போவது என்பது நடைமுறை யதார்த்தம்.

கமலாதாஸ் எழுதிய சிறுகதையை ‘பிண ஆய்வாளன்’ என்னும் தலைப்பில் தி.சு.சதாசிவம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொழியாக்கத்தில் எதிர்ப்படும் சிக்கல்கள் இந்தக் கதையிலும் இடர்ப்படுவதை உணர்ந்தேன். எதனாலோ இந்தக் கதை மனதைக் கவரவேயில்லை.

இந்த விதத்தில் நான் எஸ்.ஷங்கர நாராயணன் மொழியாக்கம் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு மொழிபெயர்ப்புக் கதை படிக்கும் உணர்வே வருவதில்லை. அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் கதையின் தலைப்பு ‘முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வேளை’ என்று வந்து விட்டதென்று நினைக்கிறேன்.

நம்ம அய்யனாரின் கட்டுரை ‘மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் : துபாய் திரைப்பட விழா’ நான் ஏற்கெனவே அவர் தளத்தில் படித்து விட்டேன். அவசியம் படிக்க வேண்டிய இடுகை.

போலவே வா.மணிகண்டன் ‘கவிஞன் ஏன் காணாமல் போகிறான்’ என்னும் கட்டுரை எழுதியிருக்கிறார். கவிதையில் நாட்டமிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

லாவண்யாவின் அகத்திணை கட்டுரையும் நல்ல வாசிப்பனுபவம்.

நூல் மதிப்புரை பகுதியில் கே.ஸ்டாலின் எழுதியிருக்கும் ‘பாழ் மண்டபமொன்றின் வரைபடம்’ என்னும் கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம் ‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள்.

வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது
என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு

என்ற கவிதை கவர்ந்தது.

இதழ் முழுவதும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் பதிவுலகுக் கவிஞர்கள் எழுதியது. நல்லா இருக்கு.

அச்சு மற்றும் தாளின் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும். நிதி நிலைமை தெரியாமல் விமர்சிப்பது சுலபம். மேலும் இலக்கியத்திற்கு இவை அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது.

மொத்தத்தில் நல்ல வாசிப்பனுபவம். ‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.