Friday, January 15, 2010

மும்பை மாணவர்களின் தற்கொலைகள் - த்ரீ இடியட்ஸ் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்


அவன் பெயர் சுஷாந்த் பாடில். மும்பையின் ஷ்ரதாஷ்ரம் பள்ளியில் (சச்சின், காம்ப்ளி முதலியோர் படித்த பள்ளி என்று நினைக்கிறேன்) ஏழாம் வகுப்பு படிக்கும் பன்னிரண்டு வயது மாணவன். காலை வகுப்புக்கு வருகிறான். பையை வைக்கிறான். நண்பனிடம், 'குளியலறை வரை சென்று வருகிறேன். முகம் கழுவ வேண்டும்' என்று சொல்லிச் செல்கிறான். ஒரு ஸ்டூல் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு நேரே குளியலறைக்குள் செல்கிறான். கதவை உட்பக்கம் தாழ் போடுகிறான். மேலே ஷவர் இருக்கும் இரும்புக் கம்பியைப் பார்க்கிறான். ஸ்டூல் மீது ஏறிக்கொள்கிறான். தன் கால் சட்டைப்பைக்குள் துழாவி, ஆரஞ்சு நிற நைலான் கயிறைக் கையில் எடுக்கிறான். அதனை மேலே குறிப்பிட்ட இரும்புக் கம்பியில் தொங்க விட்டு, இறுகக் கட்டுகிறான். இன்னொரு முனையில் சுருக்குப் போட்டு, தன் தலையை நுழைத்துக் கொள்கிறான். மெல்ல கயிற்றைச் சுருக்குகிறான். கழுத்தை நன்றாக இறுக்கும் முன் கடைசியாக ஒரு முறை மூச்சை இழுத்து விடுகிறான். பிறகு அரை வினாடி யோசித்து தான் நின்று கொண்டிருக்கும் ஸ்டூலைத் தட்டி விட்டு, மிதக்கிறான்.ஒரு மொட்டு மலர்வதில் விருப்பமின்றி உதிர்கிறது. கடவுள் தீட்டத் துவங்கிய ஓவியமொன்று துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது. அல்லது ஒரு வாழ்வு அநியாயமாக, தனிமையில் முடிகிறது என்றும் சொல்லலாம். என்ன ஆயிற்று பாடிலுக்கு? ஏன் எப்படிச் செய்தான்? அவனுக்கு வாழ்வின் பிரம்மாண்டம் பற்றி என்ன தெரியும்? வாழ்வென்னும் நதியில் எத்தனை திருப்பங்கள் - வளைவுகள் - சுழிகள் வரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருந்ததா? அவன் நான்கு பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறி இருந்தான். கூடுதல் தகவல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தை இருமுறை பார்த்திருந்தான். இதற்கு இவ்வளவு பெரிய முடிவா? தான் எடுத்த முடிவின் கன, ஆழ பரிமாணங்களை அந்தப் பிஞ்சு அறிய முடியுமா? பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி என்பது சம்பிரதாய வாக்கியம் என்றாலும் இப்போது மொழியா முக்கியம்?


இது ஒரு அபூர்வ நிகழ்வு அல்ல. மேலே செல்வோமா? அவள் பெயர் நேஹா சாவந்த். ஆறாம் வகுப்பு மாணவி. நன்றாகப் படிப்பவள். நடனமும் ஆடுபவள். டோம்பிவில்லியில் வசிப்பவள்...வசித்தவள். பெற்றோர் வீட்டில் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட வேளையில் உத்தரத்தில் இருந்து தொங்கிய மின்விசிறியிலிருந்து இவளும் தொங்கினாள். காரணம்? இவளது பெற்றோர்கள் இவளை நடன வகுப்பிலிருந்து சமீபத்தில் நிறுத்தி இருந்தனர்.


அடுத்து வருவது பஜன் ப்ரீத்கௌர் புல்லார் என்னும் பதினெட்டு வயது,  பிசியோதெரப்பி (இதற்கு தமிழில் என்ன பெயர்?) பயிலும்.. ச்சே பயின்று வந்த மாணவன். அதே உத்தரம்; அதே மின்விசிறி; அதே தொங்கல்; காரணம் - மூன்று பாடங்களில் ஃபெயில்.


இன்னும் சில வித்தியாசமான தற்கொலைகளுக்குச் செல்வோமா? பெயர் வினீத். வயது பதினெட்டு. பன்னிரெண்டாம் வகுப்பு. நன்றாகப் படிக்கும், 80% மதிப்பெண்கள் வாங்கும் மாணவன்; அன்று இவன் பெற்றோர்களின் திருமண தினம். அதனைக் கொண்டாட அவர்களுடன், தன் சகோதரியையும் கூட அனுப்பி அவர்கள் திரும்புவதற்குள் ..மின்விசிறி மீண்டும். ஒரு துண்டுச் சீட்டில் அவன் சொல்லிச் சென்றது : "என் வாழ்வில் எதுவும் அசாதாரணமாக இல்லை. என் குழந்தைப் பருவம் மிகவும் தனிமையானது; சமூகத்தில் உலவுவது பற்றிய வினோத உணர்வுகள் எனக்கு வருகின்றன; அடுத்த பிறவிகளில் உங்களைப் போன்ற அருமையான பெற்றோர்களைக் காண்பேன் என்று நம்புகிறேன் ...';


இன்னொருத்தி மேரி நாடார் (ஆம், தமிழ்ப்பெண்). 16 வயது. செம்பூரில் வீடு. தந்தை இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அதிலிருந்து மீளாத, புலம்பும் தாயைப் பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளானவள் (என்று பின்னால் தெரிய வருகிறது). தன் தந்தையைக் காணும் ஆசையில் ... இப்போதெல்லாம் எனக்கு பயங்கர ஆயுதமாகக் காட்சியளிக்கும் மின்விசிறி மீண்டும்.


கோபமோ, ஆயாசமாகவோ இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் தினமும் செய்தித்தாளை வாசிக்கையில் இருக்கிறது. இப்போதெல்லாம் பயமாகவும். நான் சூர்யாவுடன் விளையாடும் போது 'டேய், Fan எங்க இருக்கு?' என்று கேட்கையில் அவன் அண்ணாந்து பார்த்து மேலே கையைக் காட்டும் தருணத்தில் அவன் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவது வழக்கம். இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது.


கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பதினான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பெரும்பான்மை மும்பையில். என்னதான் நடக்கிறது? பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா? ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா? பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா? நகரம் முழித்துக் கொண்டு இருக்கிறது - விடை தெரியாமல். தேர்வுகள், மதிப்பெண்கள் தரும் மன உளர்ச்சி பற்றி நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும், இந்த இளம் வயதினரை இந்த அளவு வாட்டும் என்று இப்போது புரிகிறது.


இதன் பின்புலத்தில் த்ரீ இடியட்ஸ் படம் மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது. போன முறை நான் குறிப்பிட்ட அந்த மூன்றாவது திரைப்படம் இது தான். படத்தைப் பற்றி விலாவாரியாக, நேர்த்தியாக கேபிள், பரிசல், வித்யா என்று பிரபல பதிவர்கள் அழகாக எழுதி விட்டதால் நீங்கள் அதிலிருந்து தப்பிக்கிறீர்கள். மற்றவர்களுக்காகப் படிக்காமல் உங்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு, அதை படியுங்கள். மதிப்பெண்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பக்க விளைவு என்றும் சொல்லலாம். பெற்ற அறிவு என்பதே சாஸ்வதம். நிரந்தரம். முக்கியம் என்றெல்லாம் சொல்கிறது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும். மாதவன், தான் இன்ஜினியரிங் வேலையில் சேராமல், வனத்தில் புகைப்படம் எடுப்பதில் இருக்கும் நாட்டம் பற்றிச் சொன்னதும் இடிந்து போய், உடைந்து நொறுங்கும் தந்தையிடம் மாதவன் சொல்லும் வசனம்: 'அப்பா, என்ன! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெரிய கார் மற்றும் பெரிய வீடு என்னால் வாங்க முடியாமல் போகலாம்; ஆனாலும் சிறிய காரும், சிறிய வீடும் முக்கியமாக எப்போதும் உங்களை கண்போல் பார்த்துக்கொள்வதும் என்று நான் இருப்பேன்'. அந்தத் தருணத்தில் அவர் தந்தை மனம் மாறுவார். இப்படி நல்ல விஷயங்கள் இருக்க, அந்தப் படத்தை இரு முறை பார்த்ததில், நான் துவக்கத்தில் குறிப்பிட்ட பாடில் தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்டான் என்று வரும் செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதைப் போலவே சில கல்லூரிகளில் ராகிங் நடந்ததற்கும் இந்தப் படத்தைக் குறை சொல்கிறார்கள்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை என்னுடைய ஒரே குறை மூலக் கதை எழுதிய சேத்தன் பகத் பெயரைக் கொஞ்சம் தாராள மனதுடன், பெரிய எழுத்துகளில், படம் பெயர் போடும்போதே போட்டிருக்கலாம். "எத்தனைப் பெரிய மனிதருக்கு...எத்தனை சிறிய மனமிருக்கு" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது...


இந்த இடுகை பொங்கல் அன்றே போட்டிருக்க வேண்டும். நல்ல நாளும் அதுவும் எதுக்கு தற்கொலை அது இதுன்னு சோகப் பதிவு போடுகிறீர்கள் என்ற அன்பான எச்சரிக்கை வந்ததால் ... இன்று வருகிறது. இங்கு தமிழர் திருநாளுக்கு ஒரு நாள் விடுமுறை கூட இல்லை. உழைக்கும் வர்க்கமான நான் மும்பையில் உழல்கையில், உட்கார்ந்து பொங்கலைச் சாப்பிட்டுக் கொண்டே நன்றாகக் கொண்டாடி இருப்பீர்கள் என்று தெரியும்.

27 comments:

மாதவராஜ் said...

வருத்தமளிக்கிறது அனுஜன்யா. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு வாழ்வோடு மல்லுக்கட்டும் வேகம் இல்லாமல் இருக்கிறது. இதற்கு புறச்சூழல்களும், இன்னும் பல காரணங்களும் இருப்பதாக நினைக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு விரிவான பதிவு எழுதவேண்டும் எனத் தோன்றுகிறது. முக்கியமான பகிர்வு.

Ashok D said...

பெற்றோர்கள் கொடுக்கும் அகநெருக்கடியே. இவர்களுக்கு குழந்தைகளை கொண்டாடத் தெரியவில்லை. அவர்களின் பய உணர்ச்சியை குழந்தைகள் மீது தினிககறது.. அவர்கள் பளூ தாங்காமல் உடைந்துபோகிறார்கள். பெற்றோர்கள் முக்கியமாய் மீடில்கிளாஸ் பெற்றோர் மாறியாகவேண்டும்.

அப்புறம் நீங்க பிஸின்னு தெரியுமே அதான் கொஞ்ச நாளா பதிவ காணோமே. நாங்களும் பிஸிதான்.. எவ்வளவு படிக்கறது.. எவ்வளவு பின்னூட்டமிடறது

thamizhparavai said...

வலிக்கிறது...
இந்தியக் கல்வித்திட்டத்தால் பழிவாங்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன் தான்...
3 இடியட்ஸ் பார்க்க வேண்டும். பார்க்கவில்லை என்று சொன்னால் அலுவலகத்தில் ஒரு வினோத ஜந்து போல் பார்க்கிறார்கள்...குழந்தைகளுக்குப் படிப்பை விட வாழ்வைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்...ஆனால் வருடமேற,ஏற நிலைமை இன்னும் மோசம்தான்... :-(

goma said...

சினிமா எப்படியெல்லாம் மாணவர்களை செதுக்குகிறது பாருங்கள்.

தர்ஷன் said...

நிச்சயம் யோசிக்க வேண்டிய விடயம்
ஆனால் பாரம்பரியமாக தொடரும் மரபுகளில் ஊறியவர்களை மாற்றுவது கஷ்டமில்லையா? வளமான எதிர்காலம் ஒன்றை தான் விரும்பும் துறையிலேயே ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளில் நிச்சயமற்ற நிலையில் எப்படி தன பிள்ளையின் எதிர்காலம் பற்றி நினைக்கும் பெற்றோரால் அவனது முடிவுக்கு வழி விடமுடியும்.

கார்க்கிபவா said...

சின்ன ஏமாற்றத்தையும் தாங்க முடியாமல், பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளப் போகும் தலைமுறையை காணப் போகிறோம். அமெரிக்காவில் இது சாதாரனம். சைக்கோ கொலைகாரர்களும், இன்னும் ஏனைய ”முக்கிய”காரர்களையும் எதிர்ப்பார்க்கலாம்.

இந்தியா ஒளிரத் தொடங்குகிறது, சுடுகாட்டு ஜோதியில்

PPattian said...

ஆறாம் வகுப்பு.. ஏழாம் வகுப்பு.. ???!!!!!! மிகுந்த வருத்தமளிக்கும் தகவல்கள்.. ஆனாலும் நிதர்சனம் என்கிறபோது, குறைந்தபட்சம் நம் வீடுகளிலாவது இது போன்றவற்றை தவிர்க்க முடிந்தவற்றை செய்ய வேண்டும் எனும் யோசனையை தூண்டுகிறது..

//இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது.//

பெற்ற மனம்..

Anonymous said...

WOW. தன்னம்பிக்கை இல்லாமல் இன்றைய இளைஞர்கள் வளர்க்கப்படுகிறார்களோ

தீபா said...

ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையாவது மாணவர்களுக்கு mentor உடனான one to one counselling session இருக்கவேண்டும்.(weekly once or twice)mentors should be well trained in psychology.

மாணவர்களுக்கு எந்த பிரச்சனை (வீட்டில்/பள்ளியில்) என்றாலும், பகிர்ந்து கொள்ள/ ஆலோசனை பெற இந்த session உபயோகப்படும்.

பெற்றோர் கொடுக்கும் மன அழுத்தம்,
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது, பெற்றோர் குழந்தைகளுடன் quality time செலவிடாமல் இருப்பது, தோல்விகளை எதிர் கொள்ளும் மன வலிமையை வளர்க்காமல் (in fact,few/most parents themselves lack in it) இருப்பது, குழந்தைகளிடம் பாசத்தை வெளிக்காட்டாமல் இருப்பது, அளவுக்கு மீறிய கண்டிப்பு,சில பக்குவமில்லாத ஆசிரியர்களால் பள்ளியில் ஏற்படும் அவமானம், இன்னும் நிறைய தற்கொலைக்கான காரணங்கள்


Most of us become parents long before we have stopped being children.

பா.ராஜாராம் said...

மனசெல்லாம் கனமாயிருச்சு அனு.தேவையான பகிர்வு.

shortfilmindia.com said...

நிச்சயம் இதற்கு காரணம் குழந்தைகள் மீது திணிக்கப்படும், வெற்றி மட்டுமே என்கிற மனப்பான்மைதான். பாஸ் ஆகிற பையனாக இருந்தால் பர்ஸ்ட் ராங்க் எடுக்கவில்லை என்கிற அழுத்தம், டான்ஸ் ஆடுகிறவள் என்றால் டிவி நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளவில்லையே என்று திணிப்பு, வெற்றி, வெற்றி என்று அவரக்ளுடய குழந்தைதனத்தை அவர்களுடய பெற்றோர்களே தொலைய வைக்கப்படுவதால் தான் இந்த மன உளைச்சலகளூம், தற்கொலைகளும்.

கேபிள் சங்கர்..( ஆஹா.. ரொம்ப டென்ஷனாயிட்டேனோ..)

தராசு said...

தல,

இந்த மேட்டர நானும் எழுதணும்னு நினைச்சேன். டிராஃப்ட் கூட ரெடி. உங்களைப் போலவே நானும் பொங்கலுக்கு அப்பால் பதிவு செய்ய நினைத்தேன்.

இந்த தற்கொலைக்கான காரணங்களாக தீபா சொன்னவற்றில் உடன்படுகிறேன்.
பெற்றோர்கள் கூட இந்த அவுட் சோர்சிங் வியாதியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தந்து குழந்தைக்கு நல்ல பாடம் போதிக்கும் பள்ளியை அவர்கள் தெடுவதில்லை, மாறாக அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோர் என்ற வீதத்தில் மதிப்பு தரும் பள்ளி எதோ அதில் பல ஆயிரங்கள் செலவானாலும் சரி, சேர்த்து விடுகிறார்கள்.

பள்ளியிலேயே பேரம் பேசுவதும் தொடர்கிறது, இன்னும் ஆயிரம் ரூபாய் வேணா வாங்கிக்குங்க ஆனா இவந்தான் முதல் மார்க் வாங்கணும், போன்ற நிர்பந்தங்கள். செல்போன், சினிமா, பார்ட்டிகள், மற்றும் 12 மணி நேர வேலை எல்லாமாக பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது.

Kumky said...

வருத்தும் உண்மைகள்...

சினிமா மட்டுமே ஒரு காரணியல்ல..

கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறையை புறந்தள்ளி சம்மந்தமேயில்லாத மேல் நாட்டு வாழ்க்கை முறைகளுக்கு அவசரமாக மாற்றிக்கொண்டிருக்கும், மாறிக்கொண்டிருக்கும், எல்லாமே சுயநலம் சார்ந்த, எங்கு தம்மை புறந்தள்ளிவிட்டு இவ்வுலகம் வேகமாக முன்னால் சென்று விடுமோவென்ற பயம் மிகுந்த, தன்னலவில் நிறைவேற்றவியலா பெருங்கனவுகளை வாரிசுகளின் மூலம் அடையத்துடிக்கும் உத்வேகம், மற்றும்,

இதெல்லாவற்றையும் விட
குழந்தைகளின் நம்பிக்கைகளை நான்கு சுவர்களுக்குள் உருவாக்குவதை விடவும், ஆரம்பம் முதலே இயல்பு சார்ந்து வெளி வட்டாரங்களிலிருந்து மனோதைரியத்தை அவர்கள் தாமாக அடைந்திருப்பின் இத்தகைய பிரச்னைகள் எழாமலிருந்திருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

//பிசியோதெரப்பி (இதற்கு தமிழில் என்ன பெயர்?) //

இயல்முறை மருத்துவம்.

Venkatesh Kumaravel said...

பதிவெல்லாம் சரி அனு சார். அந்த சன்ரைஸ் சன்ஷைன் தவிர படம் செம ‘கடி’. A much celebrated normalcy. :)

பரிசல்காரன் said...

//நான் சூர்யாவுடன் விளையாடும் போது 'டேய், Fan எங்க இருக்கு?' என்று கேட்கையில் அவன் அண்ணாந்து பார்த்து மேலே கையைக் காட்டும் தருணத்தில் அவன் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவது வழக்கம். இப்போது அந்த விளையாட்டு விளையாடுவது கூட மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது. //

என்னமோ ஆகிறது இந்த வரிகளைப் படிக்கும்போது..

அன்புடன் அருணா said...

/பள்ளி வாழ்க்கை அவ்வளவு வலிகள் நிரம்பியதாக இருக்கிறதா?/
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் கடமை எனக்கிருக்கிறது அனுஜன்யா.. இப்போது குழந்தைகளை நெறிப்படுத்தும் அத்தனை வழிகளையும் பெற்றோர்கள் அடைத்து விட்டார்கள்..பள்ளி எந்தவிதமான மன அழுத்தத்தையும் தருவதில்லை.ஏனென்றால் இப்போது பள்ளிகளின் கைகள் கட்டி போடப் பட்டிருக்கின்றன. அது தவிர ஆசிரியர்களுக்கு மீட்டிங்கில் சொல்லப் படும் முதல் அறிவுரை குழந்தைகளை அடிக்கக் கூடாது,வித்தியாசமான வார்த்தைகளால் கடிந்து பேசக் கூடாது.என்பதுதான்.
பெற்றோர்கள்,பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் உறவுக் குழந்தைகளுடன் ஒப்பீடு,திறமைக்கு மீறிய எதிர்பார்ப்புகள் இன்னும் எத்தனையோ மன அழுத்தங்களைக் கொடுக்கிறார்கள்.
/ஆசிரியர்கள் வன்முறையாளர்களாக ஆகி விட்டார்களா?/
ஆசிரியர்கள் சாதாரண நெறிமுறையாளர்களாகக் கூட இருக்க முடியாத சூழல்.நாம் வளரும் போதெல்லாம் பிரம்படி சாதாரணம்...தண்டனைகள் ரொம்பவும் சகஜம்...அப்போதெல்லாம் பெற்றோர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்ததில்லை.இப்போ கடிந்து பேசினால் கூட என் குழந்தையை
இப்படியெல்லாம் கண்டிக்க வேண்டாம் என வந்துவிடும் பெற்றோர்கள்....

/பெற்றோர்கள் மதிப்பெண்களை மட்டும் மதிக்கும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி விட்டனரா? /
பெற்றொர்கள் கண்ணில் இப்போது மதிப்பெண்கள் தவிர எதுவும் தெரிவதில்லை..98 வாங்குபவனையும் கூட அந்த இரண்டு மார்க்கை எங்கே விட்டாய் என்னும் பெற்றோர்களை எங்கள் பள்ளி தினமும் சந்திக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஆனால் தேவையான பகிர்வு.

அருணா மேடத்தின் பின்னூட்டம் //பெற்றோர்கள்,பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் உறவுக் குழந்தைகளுடன் ஒப்பீடு,திறமைக்கு மீறிய எதிர்பார்ப்புகள் இன்னும் எத்தனையோ மன அழுத்தங்களைக் கொடுக்கிறார்கள். //


இனி வளரவேண்டியது குழந்தைகள் இல்லை, நாம் தான் போல :(

Unknown said...

ரொம்ப வருத்தமளிக்கிறது அண்ணா. :(( நானெல்லாம் படின்னு சொன்னாலே புக்க மூடிவெச்சிட்டு போற வர்க்கம்... வெறும் பாட புத்தகமும், மதிப்பெண்ணுமா ஒருத்தருடைய எதிர்க்காலத்த தீர்மானிக்குது? இங்க பொறுத்தவரைக்கும் 'ஆம்'. அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். முதல்ல பெற்றோர்கள் இத புரிஞ்சிக்கனும்.... :((

creativemani said...

எனக்கும் கேபிள் அவர்கள் சொன்னது தான் முக்கிய காரணங்களுள் முதன்மையான காரணம் என்று படுகிறது.. குழந்தைகளைக் கையாள்வது என்பது மிகக் கடினமான விஷயம் என்பது போய் அபாயமானதும் கூட என்பதாய் மாறி வருகிறது..
வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை..

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை. பதிந்த அன்றே வாசிக்க நேர்ந்தாலும் விரிவாகப் பகிர்ந்திட சில விஷயங்கள் இருந்தபடியாலும், ஊருக்கு செல்லும் அவசரத்திலும் பின்னூட்ட இயலவில்லை.

//ஒரு மொட்டு மலர்வதில் விருப்பமின்றி உதிர்கிறது. கடவுள் தீட்டத் துவங்கிய ஓவியமொன்று துவக்க நிலையிலேயே நின்று விடுகிறது.//

இது போன்ற செய்திகளை உச் கொட்டியபடி கடந்து கொண்டேதான் இருக்கிறோம் தீர்வுக்கு வழி தேடாமல்.

என் ‘பொட்டலம்’ கதையின் நீட்சியாகவே இது குறித்து நானும் பதிவிட நினைத்து தள்ளிப் போனபடி..

அருணா இங்கே சொல்லியிருக்கும் ஒரு விஷயத்தையே நானும் விரிவாகப் பேச நினைத்திருந்தேன்.

//நாம் வளரும் போதெல்லாம் பிரம்படி சாதாரணம்...தண்டனைகள் ரொம்பவும் சகஜம்...அப்போதெல்லாம் பெற்றோர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்ததில்லை.//

நூறு சதவிகிதம் உண்மை. அதனாலேயே நாம் கற்றுக் கொண்ட வேல்யூஸ் அதிகம் என்றும் நம்புகிறேன்.

//ஆசிரியர்கள் சாதாரண நெறிமுறையாளர்களாகக் கூட இருக்க முடியாத சூழல்.//

ஒரு தலைமை ஆசிரியராக அருணாவின் ஆதங்கம் இங்கே சரியே ஆயினும், சில இடங்களில் நேர்மாறான நிகழ்வுகளும் நடந்தபடியேதான்.

இதுகுறித்து விரைவில் நானும் பதிய முயற்சிக்கிறேன்.

தினேஷ் ராம் said...

வெள்ளைக்காரி.

manjoorraja said...

குழந்தைகளுக்கு பல சிறு விசயங்கள் கூட மலையளவு தெரியும். அதை சந்திக்க முன் அனுபவமோ, தைரியமோ, திறமையோ இல்லாமல் பயந்து உலகமே இருண்டுவிட்டதாக நினைத்து இனி நம்மால் எதுவுமே செய்யமுடியாது என்ற இயலாமை மனதை அழுத்த இந்த முடிவுக்கு வருகின்றனர்.

ந.ஆனந்த் - மருதவளி said...

நல்ல பதிவு. ஒருவித சோகம் இழையோடியது.

anujanya said...

@ மாதவராஜ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவ். அவசியம் எழுதுங்கள்.

@ அசோக்

ரொம்ப சரி அசோக். எழுதுவதும், சொல்வதும் ஈசியாக இருந்தாலும் நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிக்கல்.

யோவ், நெசமாலுமே ஆபிசில் ரொம்ப வேலை பளு. நீ வேற...

@ தமிழ்ப்பறவை

அப்ப நீங்களும் நம்ம கட்சியா? இந்த எஜுகேஷன் இருக்கிறதே...ஸ்ஸப்பாஆ ..

நன்றி பரணி

@ goma

ஆமாமில்ல. அதே சமயம் அவர்கள் வாழ்வைத்தான் படம் பிடிக்கிறோம்னு சொல்வார்கள் :(

நன்றி

@ தர்ஷன்

நீங்க சொல்றதுதான் பிரச்சனையின் ஆணிவேர். தீர்வு??? நன்றி தர்ஷன்.

@ கார்க்கி

நீ சொல்றதும் சரிதான் சகா. 'முக்கிய' - புரியல...:)))

@ புபட்டியன்

கருத்துக்கு நன்றி பாஸ்.

@ சின்ன அம்மிணி

அப்படித்தான் தோணுது சகோ. ஆசியில் எப்படி நிலவரம்?

நன்றி CA.

@ தீபா

வாவ், எல்லாமே சிறந்த கருத்துகள் தீபா. கடைசி வரி முத்தாய்ப்பை ரசித்தேன். நன்றி :)

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ கேபிள் சங்கர்

டெண்ஷனாவது நியாயம் தான் தல. நீங்க சொல்றது கரக்டு தான். நன்றி பாஸ்.

@ தராசு

ஒ, நீங்க சொல்லும் தகவல்கள் எனக்குப் புதுசு. அவசியம் நீங்களும் எழுதுங்க பாசு. நன்றி.

@ கும்க்கி

உங்களோட இரண்டாவது பத்தி எனக்குப் பிடிச்சுது பாஸ். நன்றி.

@ அப்துல்

அப்படியா? தேங்க்ஸ் 'அண்ணே'.

@ வெங்கிராஜா

ஊர்ல நாலு பேருக்குப் பிடிச்சா உன்ன மாதிரி அறிவு.....பிடிக்காதே... :))

நன்றி வெங்கி

@ பரிசல்காரன்

எனக்கும் எழுதும் போதே தோன்றிய உணர்வுதான் கே.கே.

@ அருணா

நீங்கள் இங்கு வந்து விளக்கம் அளித்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா ப்ரின்சி? ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு.

@ அமித்து.அம்மா

சரியா சொன்னீங்க. (கவிதைனா மட்டும் காலை வாரிடறீங்க). நன்றி AA.

@ ஸ்ரீமதி

ஹலோ, பெரிய மனுஷி! நீங்களும் கூடிய சீக்கிரம் 'பெற்றோர்' ஆகக் கடவது :)))

நன்றி ஸ்ரீ.

@ அன்புடன் மணி

யோவ், எல்லாத்துக்கும் கேபிள் சொல்வதையே ஜால்ரா தட்டினால்....:))

நன்றி மணி.

@ ராமலக்ஷ்மி

நீங்களும் இதுல தீவிர ஆர்வம் காட்டுபவர் என்று தெரியும் சகோ. எழுதுங்கள். நன்றி.

@ சாம்ராஜ்ய பிரியன்

யோவ்... சரி சரி, வந்து பார்க்குறேன்.

@ மஞ்சூர் ராசா

வாங்க தல. சரியா சொன்னீங்க. நன்றி ராசா.

@ ஆனந்த்

நன்றி பாஸ்.

அனுஜன்யா

anujanya said...

தமிலிஷில் வாக்களித்த பதினெட்டு பேருக்கும் மிக்க நன்றிகள். Really appreciate it.

அனுஜன்யா

Perundevi said...

அனுஜன்யா, நல்ல பதிவு. மாற்றுப்பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வீட்டில் எந்த அளவு யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு ஒருவகையில் சுயபாடம்.
உங்கள் மின்முகவரியை sperundevi@gmail.com அனுப்புங்கள். எதிர்பார்க்கிறேன். பிறகு ஒரு கடிதம் எழுதுகிறேன்.