ரகசியங்கள் கட்டவிழ்க்கும் தருணங்கள் வந்துவிட்டதென்றாள் விகாரமாயிருப்பினும் பின்னாட்களின் நிம்மதி நிமித்தம் அவள் இறக்கிவிட்ட பாரங்கள் பெரும் பொருட்டல்லவெனினும் தைரியத்தின் உச்சகட்டமாக அவள் பார்த்தவைகள் என்னளவில் சுயநலங்களும் சாகசங்களில் விருப்பமின்மையும் மட்டுமே; எனது 'அதீத' நடவடிக்கைகள் பகிரப்படாது, என்மேல் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும் கொலைவாளென சுழல்வதை என்னுடைய தொடர் சாகசமாகவும் அவள் மேலுள்ள அக்கறையாகவும் நீங்கள் கொள்ளலாம், அவளுக்கு அது சூன்ய உணர்வைத் தந்தாலும்
அழைப்பு மணி ஓசை பால் வந்து விட்டது பேப்பர் போடப்படுகிறது பணிப்பெண் வந்தாயிற்று அடுத்தத் தெரு கலா கியாஸ் சிலிண்டர் அலுவலகத்திலிருந்து கணவன் என்றெல்லாம் துல்லியமாகக் கண்டுபிடித்து விடுவாள். அழுத்தும் விதம், அழுத்தப்பட்ட நேரம் உள்வாங்கிய மனக்கணக்கில்; மற்றவர்க்கெல்லாம் மாயக்கண்ணாடியில் பார்த்தல்; சிலருக்குச் சங்கிலியைக் கோர்த்தல் போன்ற சடங்குகளும்; அவனும் கலா போலவே மணி அழுத்துவான் என்று கசிந்த உதிரத்தினூடே நினைவு பிரிகையில் அவளுக்குப் புரிந்தது
ஆருயிர் நண்பனை ஆசுபத்திரியில் கண்டேன் படுக்கையிலிருந்த எலும்புக்கூடுக்கு அடுத்த மாதம் கெடு எக்ஸ்-ரேயில் தெரிந்தது நுரையீரல் துகள்கள்; பதைபதைத்த மனம்; வெளியே வந்தபின்னும் படபடத்த உடல்; பெட்டிக் கடையில் ஒரு சிகரட்டுக்குப்பின் எல்லாம் அடங்கியது. என் நுரையீரலின் 'நு' வெளியே மிதந்தது
(ஜ்யோவின் "ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்" கவிதை இப்போது படித்தவுடன், முன்பே எழுதி வைத்த ஒரு கவிதையை தூசி தட்டி பதிவு செய்து விட்டேன்)