
தமிழ் நாட்டில் தேர்தல் அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது என்று நினைக்கிறேன். இங்கு மும்பையில் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. இங்கு நாளை தேர்தல் (April 30) தினம். நீண்ட வார-இறுதி தரும் களிப்பில் மும்பைகர்கள் பயணத் திட்டங்கள் எப்பவோ தீட்டி விட்டார்கள். நானும் தான். ஆயினும் வாக்களித்து விட்டு செல்வதாகவே உத்தேசம். தேர்தல் நேரத்திலாவது இட்லி வடை/லக்கி லுக் போன்ற எப்போதும் அரசியல் சார்புள்ளவர்கள் பதிவு படிப்பது சில விஷயங்களைத் தரும்: பொதுவாக நல்ல பொழுதுபோக்கு; அவரவர் சார்பு நிலைகேற்ற சாமர்த்திய வாதங்கள்; உங்களுக்கு ஒவ்வாத நிலையென்றால் நிச்சயம் இரத்தக் கொதிப்பு போன்றவை. சில சமயம் செம்ம காமெடியாகவும் இருக்கும். எனக்குத் தெரிந்து இருவருமே தமிழகத்தின் நாற்பதில் (புதுச்சேரி சேர்த்து) முப்பது-பத்து என்று சொல்லிக்கொள்கிறார்கள். One of us is crying; One of us is lying என்னும் ABBA பாடல் நினைவுக்கு வருகிறது.
இந்த வாரத்தின் மிகப் பெரிய ஆச்சரியங்கள் சில:
அம்மாவின் 'ஈழம்' பேச்சு
ரோசா வசந்தின் 'தி.மு.க./காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை' என்ற பதிவு
முதலில் ஜெ. இவர் தடாலடியாக 'எதையும்' செய்யக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீரப்பன், காஞ்சி மடம் என்று பல்லாண்டு, நூற்றாண்டு பிம்பங்களைப் பொடியாக்கும் நெஞ்சுறுதி அல்லது ஆணவம் பிடித்தவர். அதனால் வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று மட்டும் இவரை அலட்சியம் செய்ய முடியாது. எனக்கு ஒரே பயம் தாலிபான்கள் போல இவரையும் அணு குண்டுப் பொத்தான்கள் அருகில் விடவே கூடாது. Why not என்று சோதிக்கும் குணாதிசயம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. வைகோ இன்னமும் பிறழ்வு நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தால் அது பெரிய விதயம்.
ஆனாலும் அதிர்ச்சி கொடுத்து, தேர்தல் களத்தை - issueless election என்றிருந்த நிலையை - சூடாக்கிய பெருமை இவருக்குப் போய் சேரவேண்டும். இதனை எதிர்க்க அந்த பெரியவர் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது ஒரு black humour. ஆனால், இந்தத் தருணத்திலாவது அவர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்தியிருக்கலாம். ஏன் என்கிறீர்களா? அவர்தானே First among equals? மேலும் பின்னாட்களில் ஒரு குழாயடிச் சண்டை உருவாவதைத் தவிர்க்கலாம். இவை தவிர, எனக்கு ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். No jokes. தமிழ் நாட்டில் விவேகம், பொறுமை, எதிராளியிடமும் கண்ணியம், வெறும் அனல் பேச்சு-வாய் சவுடால்கள் விடாமல் இருப்பது என்பது பெரிய தலைவர்களில் அவரிடம் மட்டுமே இருப்பதாக என் எண்ணம். எனக்கு அரசியல் பற்றி அருகில் சென்று அவதானித்த அனுபவம் சிறிதும் இல்லை. தூரத்து, தொலைகாட்சி/பத்திரிகைப் பார்வைகள் அவ்வளவே. ஆதலால் நான் சொல்வது முற்றிலும் என் அளவில் மட்டுமே. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது எனக்கும் ஏதாவது உளர நிச்சயம் உரிமை இருக்கு. அதனால நானும் சொல்லுவேன்.
அடுத்த மெல்லிய ஆச்சரியம் ரோசா வசந்தின் பதிவு. அவர் ஜெ.கூட்டணியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவர் முன்வைத்த வாதம் இது:
"தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும்.
ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும்! அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்!”
என்று போகிறது இவர் பதிவு. நடை பெறப்போவது நாடளுமன்றத் தேர்தல். ஈழம் மட்டுந்தான் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையா? இல்லை தமிழனாக மட்டுமே (இந்தியன் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) சிந்திப்பேன்; மற்றதைப் பற்றி (இதில் தமிழனைப் அன்றாடம் பாதிக்கும் மற்ற விஷயங்களும் அடக்கம்) அக்கறை இல்லை என்ற நிலை சரியா என்று எனக்குத் தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. வருவது கடினம். மூன்றாவது அணி என்னும் உருவம் சரியாகப் புலப்படாத வஸ்து வரலாம். தினசரி ஆட்சியே பெரிய விடயமாகிவிடும் சூழலில், பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம், அயல் நாட்டுக் கொள்கை இவற்றுக்கான குறைந்தபட்ச கொள்கைகள் மற்றும் அவற்றை அமலுக்குக் கொண்டுவருவது போன்றவை நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஈழம் பற்றி அத்தகைய புது அரசு ஏதாவது முடிவு எடுக்கும் என்றோ, அப்படியே எடுத்தாலும் சிறி லங்கா அரசு அத்தகைய மைனாரிட்டி அரசுக்கு மரியாதை தரும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இதை எல்லாம் யோசித்தால் ... மண்ட காயுது பாஸ்.
தமிழரல்லாத மற்றவர்களுக்கு மூன்றாம் அணி பற்றிய பயம் மட்டுமே உள்ளதால், ஒழிந்து போகிறது என்று காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ.க.வுக்கோ வாக்களிக்கலாம். தமிழர்கள் பாடு உண்மையில் choice between Devil and Deep Sea; Frying Pan and Fire; Rock and a Hard place etc. Or DMK and ADMK.
தமிழ் நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை கட்சி சார்பு நிலை உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு தர்ம சங்கடமும் இல்லை. அது இல்லாதவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.
இங்கு பங்கு சந்தை பற்றி மட்டும் (கூடவே தங்கள் வங்கி கணக்கில் வளர்ச்சி) எப்போதும் கவலைப்படும் கூட்டம் 'இந்த மூன்றாவது அணியிடம் கெஞ்சுவதை விட, காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தலுக்குப் பின் கூட்டு சேர்வது சாலச் சிறந்தது என்று கருதுகிறது. அவரவர் கவலை அவரவருக்கு.
எனக்கும் பகற்கனவு காண்பது மிகப் பிடிக்கும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, திமுகவும் அதிமுகவும் ஒரே அணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாற்பதும் கிடைத்திருக்கும். எந்த ஆட்சி அமைந்தாலும், 'இதோ பார், முதலில் ஈழம் பற்றி ஒரு உடனடி முடிவெடு. அப்புறம் தான் ஆதரவு' என்று சொல்லியிருக்கலாம். இரு கழகங்களும் வாழ்வில் ஒரு முறையாவது தமிழருக்காக செயல் பட்டதற்கு மனசாட்சியுடன் இருக்கலாம். ஒரு இனத்தைக் காப்பாற்றிய செயலாகவும் இருந்திருக்கும். If only wishes were horses ........ பதிவு ரொம்ப சீரியசாக தோன்றுவதால் கொஞ்சம் மனதை இலேசாக்க:
கனவு சீன் 1:
ஸ்டாலின் நேர போயஸ் தோட்டத்துக்குப் பூங்கொத்துகளுடன் போகிறார். அவரை வாசலில் வந்து அம்மா வரவேற்கிறார். தோட்டத்தில் மாம்பழம் பறித்துக் கொண்டிருக்கும் அய்யாவும், வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த வைக்கோவும், கூர் மழுங்கிப் போன அரிவாளை சாணை தீட்டிக்கொண்டிருக்கும் தா.பாண்டியனும் அம்மா பக்கத்தில் வந்து நின்று கொண்டு தளபதியைப் பார்த்து புன்முறுவல்/கண்ணடித்தல் போன்ற காரியங்கள் செய்தல். ஸ்டாலினுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் திருமா ஒரு ஒற்றை ரோஜாவை அம்மாவிடம் கொடுக்க, அவர் அதில் ஆளுக்கு ஒரு இதழை மற்றவருக்குப் பிய்த்துக் கொடுத்தல்.
கனவு சீன் 2
அங்கிருந்து எல்லோரும் ஒரே வேனில் அறிவாலயம் நோக்கிச் செல்ல வேண்டும். வாசலில் பேராசிரியர்/துரைமுருகன் வந்து வரவேற்று, கூட்டம் நடக்க வேண்டிய பெரிய ஹாலுக்குச் செல்லுதல். அங்கு நடுநாயகமாக கலைஞர் அமர்ந்திருப்பார். செல்வி தன் கோஷ்டியுடன் முன்னேறி அருகில் சென்றதும், அவர் கைகளைப் பற்றி, உச்சி முகர்தல். எல்லோருக்கும் கண்கள் கட்டாயம் பனிக்கும். இதயமும் இனிக்கும்.
பேச்சு வார்த்தை முடிவில், அறிவிப்பு பின் வருமாறு:
மொத்த நாற்பது இடங்களில் திமுக கூட்டணி (காங்கிரஸ் இல்லை) இருபது இடங்களிலும், மீதி இருபது இடங்களில் அம்மாவின் கூட்டணியும் போட்டியிடும். எதிர் கூட்டணி போட்டியிடும் இடங்களில், தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வார்கள். நாற்பது இடங்களிலும், இரு தரப்பும், ஈழத்தை முன்வைத்து வாக்கு கேட்கும். இது ஈழம் மலர்வதற்கான ஒரு அரிய ஒற்றுமை. மற்றபடி கொள்கை(?) வேறுபாடுகள் தொடரும். இரு கட்சிகளை இணைப்பது போன்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தல் முடிவுகள் சாதகமாகி, நாற்பது இடங்களையும் இந்த பெரும் 'தமிழர் கூட்டணி' வென்றால், டில்லியில் யார் ஆட்சி அமைந்தாலும், இந்த நாற்பது இடங்களின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். ஒரே குழுவாகவே இது செயல்படும். ஆதரவு தருவதற்கு முன் நிபந்தனையாக இந்த விதயங்கள் கோரப்படும்:
1. முதலில் போர் முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும்
2. அயல்நாட்டுத் துறை, பாதுகாப்புத் துறை, முடிந்தால் உள்துறை இவை
எல்லாவற்றையும் கேட்டுப் பெறுவது.
3. தமிழ் ஈழம் மலர, மத்திய அரசு எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும்.
4. அது சிக்கலாகும் பட்சத்தில், குறைந்த பட்சம் தனி ஆட்சி உரிமையாவது தமிழருக்குப் பெற்று தர வேண்டும்.
கனவு சீன் 3
ராஜ பக்ஷே (எல்லோரும் மனம் மாறி திருந்தும் போது, அவரையும் மாத்திடுவோம்) வேற வழியில்லாமல், முழு சுந்தந்திரம் பத்து வருடங்களில். அது வரை ஈழத்திற்கு சுயாட்சி என்று ஒரு திட்டத்திற்கு ஒப்புக்கொள்வார். அதற்குள் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டு, அந்த இயக்கமும் வேறு பெயரில் ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் இயங்கும்.
கனவின் கடைசிக் காட்சி
நார்வே, மன்னிக்கவும், இலங்கை என்றாலே நார்வே ஞாபகம் விருகிறது. ஸ்வீடன் நாடு நோபெல் அமைப்பு, உலக சமாதானப் பரிசை கலைஞர், அம்மா மற்றும் ராஜ பக்ஷே மூவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிப்பு வருகிறது.
தமிழகத்தின் தவிர்க்க முடியா இந்த இரு ஆளுமைகள் நினைத்தால்......
ஏதோ கூச்சல் கேட்கிறதே! என்னது?
மைனாரிட்டி திமுக அரசு ஒரு மக்கள் விரோத அரசு. உடனே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்
அம்மையாரின் போலி ஈழ கோஷங்களை நம்பாதீர். உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர்
அடப் போங்கையா... போயி புள்ள குட்டிங்களப் படிக்க வெய்யுங்க. ஈழ மக்களே! தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.