
அப்போ நான் எட்டாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். கோ-எஜுகேஷன் பள்ளி. பெண்கள் ஸ்கர்ட்டிலிருந்து ஒவ்வொருவராகத் தாவணிக்கு தத்தம் திடீர் தினங்களில் மாறிக்கொண்டிருக்க பசங்க தொடை தெரியும் அரை நிஜாரிலிருந்து பேண்ட்டுக்கு மாற பெற்றோர்களிடம் விண்ணப்பம் போட்டிருந்த பருவம். லைலா, நசீமா, உஷா, ஆஷா, ரோசலின்ட் என்ற மாடர்ன் பெயர்களுடன், எங்களை வசீகரிக்கவும் தவறாத அழகுப் பெண்கள். ராஜேஸ்வரி, வேதரத்தினம், புஷ்பலதா, தனகாந்திமதி போன்ற கொஞ்சம் புராதனப் பெயர்களுடன் எல்லா விதத்திலும் சுமாராக விளங்கும் நல்ல பெண்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் இல்லாத, எங்களுக்கு இலேசாக பயம் தந்த tomboy பெண்கள் சிலர். அவர்களில் ஒரு உற்சாகப் பந்துதான் வாசுகி.
நீங்கள் புராணங்களில் தேர்ந்தவர் என்றால், பாற்கடல் கடைவதற்கு மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பு கயிறாகவும் பயன்பட்டது என்று நினைவுக்கு வரும். தமிழ் ஆர்வலர்களுக்கு வாசுகி என்றவுடன் அய்யனின் துணைவியார் என்பது ஞாபகம் வரும். எனக்கு, வாசுகி என்றால் என் பள்ளித் தோழி வாசுகிதான். மொதோ பெஞ்சில்தான் அமர்வாள். இல்ல இல்ல, அப்படி ஒண்ணும் படிப்பில் ஓஹோ எல்லாம் இல்லை. ஒரு மாதிரி 'ஜஸ்டு பாசு' கேசு. ஆனால், அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவே மாட்டாள். நம்ம கபில் தேவ் மாதிரி பல் சற்று தூக்கல். அதனால் எப்போதுமே சிரிக்கத் தயாரானது போல தோற்றம் அவளுக்கு. இலகுவில் புன்னகைத்தும் விடுவாள்.
விளையாட்டு வகுப்புகளில் பையன்கள் சற்று தூரத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கும், பெண்கள் பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் சிறு மைதானத்திற்கும் சென்று விடுவோம். இது தவிர, பள்ளி கிருத்துவப் பள்ளி என்பதால் MI / RI என்று சுருக்கமாகச் சொல்லப்பட்ட நீதிபோதனை / மத போதனை என்னும் வகையில் வகுப்பு பிரிக்கப்படும். முதலில் நீதிபோதனை வகுப்பில் சென்று உறங்கும் வழக்கம் இருந்த என்னை, 'அங்க கதை எல்லாம் சொல்றாங்க. கிளாஸ் முடியும் போது பிஸ்கட்/கேக்/டீ எல்லாந் தராங்க; நீயும் வாயேன்' என்று சொல்லி RI வகுப்புக்குக் கூட்டிச் சென்றவள் வாசுகி தான்.
விவிலியத்தின் நிறைய பக்கங்கள் வாசுகிக்கு அத்துப்படி. மத்தியானம் நாங்க எல்லாம் கலர் கலர் டிபன் பாக்ஸ்ல இட்லி,தோசை, தக்காளி சாதம்னு சாப்பிடும் போது, வாசுகியும், அவள் அண்ணன் சம்பந்தமும் ஆளுக்கொரு தட்டுடன் மிட்-டே மீல்ஸ் சாப்புடுவாங்க. சில சமயம் அங்க வர சூடான சாம்பார் வாசனை தூக்கலா இருக்கும்.
இது ஏதாவது ஏழ்மையின் அவலம் அல்லது வாசுகிக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று பயத்துடன் விலக நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தைரியமா மேலே படியுங்கள்.
நான் அப்பவே எங்க பள்ளியின் கிரிக்கெட் அணியில் இருந்தேன். எப்பவாவது பதினொன்றுக்குள் எடுப்பார்கள். ஆனால், ஜூனியர் அணியின் உப தலைவன் நான். அதனால எங்க வகுப்புக்குள் கொஞ்சம் மிதப்பா தான் இருப்பேன். அப்பா டெஸ்ட் மேட்ச் கனவுகளுடன் வாங்கித் தந்த கான்வாஸ் ஷூ போட்டுக்கொண்டு மைதானத்தை வலம் வந்து நண்பர்கள் முன் பிலிம் காட்டுவது என் வாடிக்கை.
ஒரு நாள் அப்படி தனியே ஓடிக்கொண்டிருந்தேன். மாலை சுமார் 5.30 மணி. திடீர்னு என்னைத் தாண்டி ஒரு உருவம் ஓடியது. யார்ரா அதுன்னு கொஞ்சம் வேகம் எடுத்துப் பார்த்தால் ...வாசுகி. நான் அவளைப் பிடிக்கப் போக (அட, டச்சிங் எல்லாம் கிடையாது), அவள் இன்னும் கொஞ்சம் வேகம் எடுத்தாள்.
இது எனக்குள் எதையோ உசுப்பி விட்டது. அவளைக் கூப்பிட்டு நிறுத்தினேன்.
"ஏய், இங்க வா"
"நீ தான் இங்க வாயேன்"
அப்போதே பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது. அவள் அருகில் சென்றேன்.
"எதுக்கு கூப்பிட்ட" என்றாள்.
"நீ எதுக்கு ஓடுற? அதுவும் பாய்ஸ் கிரவுண்டுல உனக்கு என்ன வேல"
"அடுத்த வாரம் ஸ்போர்ட்ஸ் டே இருக்குல்ல?"
"ஆமாம், அதுக்கென்ன - உனக்கு என்ன அதுல?"
"நான் அத்லெட் - நூறு, இருநூறு மீட்டர் ரேசுல ஓடுகிறேன்"
"என்னது? நீயா? சரி சரி 'ஓடுறேன்'ன்னு வேணா சொல்லு. 'அத்லெட்' எல்லாம் பெரிய வார்த்தை" என்றேன் நக்கலாக.
"என்கூட ரேஸ் வரியா" என்றாள்.
"அடச் சீ! போயும் போயும் உன்கூடவா?"
"தோத்துடுவோம்னு பயமாடா?"
"வாடி பாத்துடுவோம்"
மைதானத்தில் அப்போதே நூறு, இருநூறு மற்றும் நானூறு மீட்டர்களுக்கான அடையாளங்கள் இருந்தன.
"சொல்லுடா, நூறா, இருநூறா?"
மீண்டும் என் தன்மானம் தூண்டப்பட்டது.
"இருநூறு மீட்டர்"
என் தோள் அளவு உயரமே இருந்தவளை கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று நன்றாக மூச்சு இழுத்து விட்டுக்கொண்டேன். அவள் எப்போதும் நாற்பது மதிப்பெண் வாங்கப்போகும் கணிதத் தேர்வில் வைத்துக் கொள்ளும் அதே முகபாவத்துடன் அமைதியாக இருந்தாள்.
அவளே தான் சொன்னாள் - ஒன், டூ, த்ரீ.
சடுதியில் ஓடினேன். சுமார் ஐம்பது மீட்டர்களில் முன்னணியில் இருந்தேன். நூறிலும் நான்தான். நூறு தாண்டியதும் வளைவு வந்தது. அனாயாசமாக என்னை முந்தினாள். நான் வேகம் எடுத்தேன். அவளும். ஏய், என்ன இது. பதறி ஓட ஆரம்பித்தேன். அவள் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. இன்னும் இன்னும் வேகமெடுத்தாள். அவள் இருநூறைத் தொட்டபோது நான் சுமார் 180 மீட்டர்கள்தான் முடித்திருந்தேன்.
கடைசி இருபது மீட்டர்கள் ஓடப் பிடிக்காமல் நடந்து வந்தேன். அந்த முன்பற்களுடன் அவள் சிரித்து 'பரவாயில்ல, நா நினைச்சத விட வேகமாத்தான் ஓடுற" என்றாள்.
"என்ன, நக்கலா? இப்ப வரியா?"
"நா ரெடி" என்றவளிடம் இந்த முறை நூறு மீட்டர் என்றேன் எச்சரிக்கையாக.
இந்த முறை நான் 'ஒன் டூ த்ரீ' சொன்னேன் (லக்கு மாறுதானு பார்க்கலாம்)
அடிப்பாவி.. ஐம்பது மீட்டருக்குள் அவள் எனக்கு ஐந்து-ஆறு மீட்டர்கள் முன்னால பறந்து கொண்டிருந்தாள். அவளைக் கடந்ததைக் கவனித்தேன். அவள் எப்போ கீழே மடங்கி உட்கார்ந்தாள் என்று கவனிக்கவில்லை. சம்பிராதயமாக நூறு மீட்டர் கல்லை வெற்றிப் பெருமிதத்துடன் தொட்டு விட்டுப் பார்த்தால், அவள் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். இருட்டி விட்டிருந்தது. கையை நீட்டினேன். பிடித்து மெல்ல எழுந்து கொண்டாள்.
அவள் வீடு அருகில்தான். மெல்ல நடந்து போய்விடுவாள் என்பதால், நான் சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வேதரத்தினம் அவளுக்கு காச்சல் என்றாள்.
ஒரு வாரம் கழத்து வாசுகி, தாவணி உடையில் அடக்கமாக வந்து உட்கார்ந்தாள். அடக்கம் எல்லாம் ஒரு வாரந்தான். அப்புறம் அதே சவுடால். அதே சிரிப்பு. நான் அவளிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்றதை யாரிடமும் சொல்லாமலிருக்க அவளுக்கு அவ்வப்போது லஞ்சம் அழுதேன். பென்சில், காம்பஸ் பெட்டி, கடல உருண்டை என்று.
பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து, பெங்களூரில் வேலை கிடைத்து, வார இறுதிகளில் வெறியாகக் கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்தது. HMT கிரவுண்டில் மேட்ச். நான் ஒன் டவுன் செல்வேன். முதல் விக்கெட் விழுந்ததும் படு ஸ்டைலாக சென்று, இரண்டு ஓவர் விளையாடினேன். ஒரு ஷார்ப் சிங்கிள் எடுக்கையில், படுபாவி பீல்டர் டைரக்ட் ஹிட் அடிக்க, ஆட்டமிழந்தேன்.
அடுத்த ஆட்டக்காரர்கள் மட்டைப் பயிற்சி எடுத்துக்கொண்டு மெல்லத் தட்டிக் கொண்டிருந்தார்கள். அருகில் சிறிது தண்ணீர் தேங்கி இருந்தது. ஒருவன் சற்று வேகமாக அடித்துவிட, 'போச்சு, பந்து தண்ணீரில் நனையப் போகிறது' என்று நொந்து போகையில், ஒரு சூடிதார் பெண், கடைசி நிமிடத்தில் குனிந்து அந்தப் பந்தைத் தடுத்து, அனாயசமாகப் பந்தை எங்களிடம் வீசி எறிந்தாள். சரி நன்றி சொல்லலாம்னு அருகில் சென்றால், தெரிந்த முகம்.
"நீ வாசுகி தானே"
"ஞாபகம் இருக்கா? மறந்துட்டியோன்னு நினெச்சேன்"
"நீ எங்க இங்க?"
பக்கத்திலிருந்த இளைஞனைக் கூப்பிட்டு "ஜான், இவன் என்கூடப் படிச்சவன்; இது என் ஹஸ்பண்டு ஜான்; இந்த கிரவுண்டு மெயின்டெயின் பண்ணுறது இவர்தான்" என்று அறிமுகப்படுத்தினாள்.
"என்ன முன்னாடியே பாத்திட்டியா?"
“ம்ம், பார்த்தேன்.”
“எப்போ?”
“நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், அதே வசீகரமான முன்பல் சிரிப்புடன்.